Skip to content
Home » அக்பர் #27 – உலரா உதிரம்

அக்பர் #27 – உலரா உதிரம்

அக்பர் நினைத்திருந்தால் எப்போதோ அலகாபாத்துக்குக் கிளம்பிச் சென்று சலீமையும், அவரது படையையும் வாரிச்சுருட்டியிருக்க முடியும். ஆனால் பிள்ளைப் பாசம் அவரைத் தடுத்தது. அடுத்த சில மாதங்கள் தந்தைக்கும் மகனுக்கும் இடையே கடிதப் போக்குவரத்து நடந்தது.

அக்பர் தன்னை நடத்திய விதத்தையும், அதனால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலையும் குறிப்பிட்டுப் பக்கம் பக்கமாக விவரித்து அவருக்குக் கடிதங்கள் எழுதினார் சலீம். அதற்குப் பதிலளிக்கும் விதமாக சலீமின் பொறுப்பற்ற நடத்தைகளையும், ஒரு தந்தையாகத் தன் எதிர்பார்ப்புகள் பொய்த்துப்போனதையும் விளக்கி இவரும் கடிதங்கள் எழுதினார்.

அப்படித்தான் 1602ஆம் வருடம் மார்ச்சில் அக்பரைப் பார்க்க விரும்பிக் கடிதம் எழுதினார் சலீம். ஆனால் சலீமின் கோரிக்கையை நிராகரித்தார் அக்பர். இருந்தாலும் தந்தையைப் பார்க்க விரும்பி அலகாபாத்திலிருந்து ஆக்ராவுக்குக் கிளம்பினார் சலீம். தந்தையைப் பார்க்கும் ஆசையில் அவரது ஒப்புதல் இல்லாமல் கிளம்பியதுகூடப் பரவாயில்லை. தன்னுடன் 30,000 குதிரைகள், 1000 யானைகள் என ஒரு பெரும் படையை வேறு அழைத்துச் சென்றார்.

தன் பேச்சை மீறி, அதுவும் இப்படி ஒரு பெரும் படையுடன் சலீம் வந்துகொண்டிருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டதும் கொதித்துப்போனார் அக்பர். ‘உன் அமைதியும் செழிப்பும் நீ அலகாபாத்துக்குத் திரும்புவதில்தான் இருக்கிறது’ எனக் காட்டமாக அவருக்கு ஒரு கடிதத்தை அனுப்பினார் அக்பர். கடிதம் கைக்குக் கிடைத்ததும் மூச்சு காட்டாமல் அலகாபாத்துக்குத் திரும்பினார் சலீம்.

0

அலகாபாத்துக்குத் திரும்பியிருந்தாலும், தந்தையைப் பார்க்க அவரிடம் இருந்து ஒப்புதல் வாங்கும் முயற்சியை மட்டும் சலீம் கைவிடவில்லை. ஆனால் அக்பருக்குச் சலீம் மீது சுத்தமாக நம்பிக்கை இல்லை. எனவே அலகாபாத்துக்குச் சென்று சலீமுடன் மத்தியஸ்தம் பேசத் தனக்கு மட்டும் விசுவாசமாக இருக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுத்தார் அக்பர். அவர்தான் அபுல் ஃபாசல்.

அப்போது தக்காணத்தில் முகாமிட்டிருந்த அபுல் ஃபாசலை ஆக்ராவுக்கு வர உத்தரவிட்டார் அக்பர். இதனால் தன் மகன் அஃப்சல் கானைத் தக்காணத்தில் இருக்கச் சொல்லிவிட்டு ஒரு சிறிய வீரர்கள் குழுவுடன் ஆக்ராவுக்குக் கிளம்பினார் ஃபாசல்.

தக்காணத்திலிருந்து ஆக்ராவைச் சென்றடைய மால்வாவைக் கடக்க வேண்டும். அது ஆள் அரவமற்ற அத்துவானக் காட்டுப்பகுதி. மால்வா தலைநகர் மாண்டுவைக் கடந்து, உஜ்ஜைனிக்குத் தெற்கில் இருந்த நர்வாரை நெருங்கிக் கொண்டிருந்தார் ஃபாசல். அப்போது திடீரென நூற்றுக்கணக்கான குதிரைப்படை வீரர்களுடன் அவரைச் சுற்றி வளைத்தார் வீர் சிங் தேவ்.

தன் பாதுகாப்புக்குச் சில வீரர்களே இருந்தாலும், தப்பிச் செல்லாமல் தீரத்துடன் சண்டை போட்டார் அபுல் ஃபாசல். அவரது வீரர்கள் அவரைப் பாதுகாக்கக் கடுமையாக முயற்சி செய்தனர். ஆனால் குதிரை மீது அமர்ந்த நிலையில் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது நெஞ்சில் குத்து வாங்கிக் கீழே விழுந்தார் ஃபாசல்.

குருதியை அளவுக்கதிகமாக இழந்து கொண்டிருந்த ஃபாசலின் தலையைத் தூக்கித் தன் மடியில் வைத்துக்கொண்டார் வீர் சிங். அவரது காதுக்கு அருகே சென்று, ‘என்னைச் சலீம் அனுப்பினார்’ என்றார். இதற்கு எதிர்வினை காட்ட முடியாத நிலையில் இருந்த ஃபாசல் அடுத்த சில நிமிடங்களில் மரணமடைந்தார்.

தன்னைப் பற்றிய விமர்சனங்களை அக்பரிடம் முன்வைத்து, இருவரையும் சேரவிடாமல் தடுப்பதே அபுல் ஃபாசல்தான் என்ற எண்ணம் நீண்ட காலமாக சலீமுக்கு இருந்தது. அலகாபாத்தில் வைத்து, இதற்குமேல் அக்பருக்கு அருகே ஃபாசல் இருந்தால் இனி எப்போதும் அவரைத் தன்னால் சந்திக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார் சலீம். எனவே வீர் சிங்கை வைத்து நிரந்தரமாக அக்பரிடம் இருந்து அபுல் ஃபாசலைப் பிரித்தார்.

0

முகலாய அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மரணமடைந்துவிட்டால் அதை வெளிப்படையாக அக்பரிடம் தெரிவிக்கமாட்டார்கள். யாராவது நீல நிறத்திலான கைப்பட்டையைக் கட்டிக் கொண்டு அவருக்கு முன் சென்று மண்டியிடுவார்கள். அதைப் பார்த்ததும் மரணமடைந்த நபர் குறித்து அக்பரே விசாரித்துத் தெரிந்துகொள்வார்.

அபுல் ஃபாசல் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும், அவரது மரணச் செய்தியை நேரடியாக அக்பரிடம் சொல்லும் துணிவு அங்கே யாருக்கும் இல்லை. எனவே சமயோசிதமாக யோசித்த முகலாய அதிகாரி ஷேக் ஃபரீத் பக்‌ஷி, தன் கையில் நீல நிறப் பட்டையைக் கட்டிக்கொண்டு சென்று அக்பர் முன்பு மண்டியிட்டார்.

அப்போது வானத்தில் புறாக்கள் பறப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் அக்பர். ஷேக் ஃபரீத் மண்டியிட்டதும் அவரது கையில் கட்டப்பட்டிருந்த நீல நிறப் பட்டையை அவர் கவனித்தார். அதைப் பார்த்ததும் அவரது மூளையில் ஏதோ உரைக்க, அதீத விம்மலை வெளிப்படுத்தியவாறு மயங்கிக் கீழே சரிந்தார் அக்பர்.

உடனே அக்பரைத் தூக்கி அமர வைத்து முகத்தில் தண்ணீர் தெளித்து அவர் இயல்பு நிலைக்குத் திரும்பியதும், அபுல் ஃபாசலின் மரணச் செய்தி தெரிவிக்கப்பட்டது. கூடவே ஃபாசலின் மரணத்துக்கான காரணம் சலீம் என்பதும் அக்பரிடம் கூறப்பட்டது. அதைக் கேட்டு அவர் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

அபுல் ஃபாசலின் மரணம் அக்பரைத் துயரத்தின் விளிம்புக்கு இழுத்துச் சென்றது. அடுத்த சில நாட்கள் முகச் சவரம்கூடச் செய்துகொள்ளாமல் அழுதுக்கொண்டே இருந்தார். ‘சலீமுக்குப் பாதுஷாவாக விருப்பம் இருந்தால் அவன் என்னைக் கொன்று, அபுல் ஃபாசலை உயிரோடு விட்டிருக்கலாமே’ எனப் புலம்பித் தீர்த்தார் அக்பர்.

அபுல் ஃபாசல் மட்டுமல்லாமல், அவரது குடும்பத்தினரும் அக்பருக்காக உழைத்துள்ளனர். முன்பு அக்பரை இஸ்லாமின் பாதுஷாவாக அறிவித்த முக்கிய உலேமாக்களில் ஒருவரான ஷேக் முபாரக், அபுல் ஃபாசலின் தந்தையாவார். அந்த அறிவிப்பைத் தொடர்ந்து பிற உலேமாக்களான அப்துல்லா சுல்தான்பூரியும், அப்த் உன்-நபியும் அக்பரை எதிர்த்தனர். ஆனால் இறுதி வரை தன் முடிவில் உறுதியாக நின்று அக்பருக்கு விசுவாசமாக நடந்துகொண்டார் ஷேக் முபாரக்.

அபுல் ஃபாசலின் அண்ணன் ஃபைசி, அக்பரின் மகன்கள் மூவருக்கும் ஆசிரியராக இருந்தவர். மேலும் அரசவைக் கவிஞராகவும், அரசுத் தூதராகவும் திறம்படச் செயல்பட்டுள்ளார். முகலாய அரசில் ஓரு சாதாரண அதிகாரியாகப் பணியைத் தொடங்கிய அபுல் ஃபாசல், தன் திறமையால் படிப்படியாக உயர்ந்து அப்போது பிரதம அமைச்சராக இருந்தார்.

தன் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்த அக்பர் எண்ணியபோது, அவரது முதல் தேர்வு அபுல் ஃபாசலாகவே இருந்தது. அக்பர் நினைத்ததைவிட அந்தப் பணியை வெகு சிறப்பாக மேற்கொண்டார் ஃபாசல். ஆனால் அதை முழுவதுமாக முடிக்கும் முன்பு அவர் மரணமடைந்ததால், மீதமிருந்த பணியைச் சிரத்தையோடு செய்து முடித்தார் இனாயதுல்லா.

அபுல் ஃபாசலின் மரணத்தால் கலங்கிப் போயிருந்த அக்பர், அவரது கடைசி மகன் தானியல் அளவுக்கதிகமான குடிப்பழக்கத்துக்கு ஆளாகியிருந்த செய்தியைக் கேட்டு வருத்தப்பட்டார். குடிப்பழக்கத்தைக் கைவிடுமாறு அறிவுரைக் கடிதம் எழுதி அதை தானியலின் மாமனார் அப்துல் ரஹீமிடமே கொடுத்தனுப்பினார் அக்பர்.

அபுல் ஃபாசலின் கோர மரணம் அரசக் குடும்பத்துப் பெண்களையும் பாதித்தது. சலீமின் இந்தக் கோழைத்தனமான நடவடிக்கை எவ்வளவு தூரம் அக்பரைப் பாதித்தது என்று அவர்கள் உணர்ந்திருந்தார்கள். ஆனால் இந்தப் பிரச்னையைத் தீர்க்காமல் விட்டுவிட்டால் இவர்கள் இருவருக்கும் இடையே நிரந்தரமாகப் பிரிவு ஏற்பட்டுவிடுமோ என்று அவர்கள் பயந்தார்கள்.

நிலைமையைச் சீராக்க ஹமீதா பானுவும், குல்பதன் பேகமும் அக்பருக்கு முன் சென்று சலீமை மன்னித்து ஏற்றுக்கொள்ளுமாறு முறையிட்டார்கள். அரசக் குடும்பத்தின் இந்த இரு மூத்த பெண்கள் மீதும் அளவு கடந்த மரியாதை வைத்திருந்த அக்பரால் அவர்களின் வார்த்தையைத் தட்ட முடியவில்லை. எனவே சலீமை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தார் அக்பர்.

சலீமை ஆக்ராவுக்கு அழைத்து வர அக்பரின் மனைவிகளில் ஒருவரான சலீமா சுல்தான் பேகம் அலகாபாத்துக்குக் கிளம்பிச் சென்றார். மேலும் சலீமை அழைத்து வர அக்பர் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்பதை நிரூபிக்க அக்பரின் யானைகளில் ஒன்றான ஃபத் லஸ்கரில் சென்றார் சலீமா பேகம்.

இந்த சலீமா சுல்தான் பேகம் அக்பரின் அத்தை மகளாவார். அதாவது ஹூமாயூனின் சகோதரி குல்ருக் பேகத்தின் மகள். அக்பரின் ராணிகளில் ஹர்க்கா பாய்க்கு நிகராக அதிகாரம் பெற்றிருந்த மற்றொருவர் சலீமா பேகம் மட்டுமே. அக்பருக்கும் சலீமுக்கும் இடையே நடந்துகொண்டிருந்த பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர இவர் அதிகம் மெனக்கெட்டார்.

இதற்கிடையே 82 வயதான அக்பரின் அத்தை குல்பதன் பேகம் கடும் காய்ச்சலுக்கு ஆளானார். சில நாட்கள் கழித்து பிப்ரவரி 7, 1603ஆம் வருடத்தில் ஹமீதா பானுவின் மடியில் உயிரைவிட்டார் குல்பதன் பேகம்.

சலீமை மன்னித்து ஏற்றுக்கொள்ள அக்பரைச் சம்மதிக்க வைத்தது மூலம் முகலாய மரபைக் கட்டிக் காக்கத் தான் ஏற்றுக் கொண்ட கடமையைத் தனக்கு இறுதி மூச்சு உள்ள வரை காப்பாற்றினார் குல்பதன் பேகம். தன் பாசத்துக்குரிய அத்தையைக் காபூலில் இருந்த அவரது தந்தை பாபரின் கல்லறைத் தோட்டத்தில் புதைக்கச் செய்தார் அக்பர்.

சலீமா பேகத்துடன் ஆக்ரா திரும்பி வந்த சலீம், அக்பரைச் சந்திக்கும் முன் ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.

(தொடரும்)

_____
படம்: அக்பருடன் அபுல் ஃபாசல்

பகிர:
ராம் அப்பண்ணசாமி

ராம் அப்பண்ணசாமி

இளங்கலை இயந்திரவியல் பொறியியல் பட்டமும் வளர்ச்சி ஆராய்ச்சியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தனியார்த் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவமுடையவர். வரலாறு வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு உண்டு. மேலும், வரலாறு சார்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்குப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார். தொடர்புக்கு apsamy.ram@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *