Skip to content
Home » அமெரிக்க உள்நாட்டுப் போர் #2 – அமெரிக்காவின் முன்கதை

அமெரிக்க உள்நாட்டுப் போர் #2 – அமெரிக்காவின் முன்கதை

பிளைமவுத் என்ற இடத்தில் முதல் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினார்கள்

‘கீழ்கண்ட உண்மைகளை நாங்கள் வெள்ளிடை மலை என்று கொள்கிறோம். மனிதர்கள் அனைவரும் சரிசமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை உருவாக்கியவர் அவர்கள் அனைவருக்கும் சில மறுக்க முடியாத உரிமைகளைக் கொடுத்திருக்கிறார். வாழ்வதும் சுதந்தரமாக இருப்பதும் மகிழ்ச்சியை நாடுவதும் அந்த உரிமைகளுள் அடங்கும்.’
– அமெரிக்கச் சுதந்தரப் பிரகடனத்திலிருந்து.

அமெரிக்க உள்நாட்டுப் போரின் வரலாறு, அமெரிக்க வரலாற்றிலிருந்து தொடங்குகிறது. அந்த நாட்டின் தோற்றமும் அதன் சுதந்தரப் போராட்டமும், அதற்காக மேற்கொண்ட சமரசங்களும்தான் பின்னாள்களில் உள்நாட்டுப் போருக்கான முதல் விதையை விதைத்தன. எனவே, அமெரிக்காவின் வரலாற்றைச் சுருக்கமாகத் தெரிந்துகொள்வது இந்தக் கதையின் முதல் படி.

16ஆம் நூற்றாண்டில் முதல் ஐரோப்பியர்கள் அமெரிக்கக் கண்டத்தை வந்தடைந்தார்கள். அமெரிக்காவின் வளங்களைக் கொண்டுசெல்லவும், நிலங்களை அபகரிக்கவும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவியது. ஸ்பெயின், போர்ச்சுகல், இங்கிலாந்து, பிரான்ஸ் முதலிய நாடுகள் இந்த ஆக்கிரமிக்கப் போட்டியில் முன்னணியில் இருந்தன.

குறிப்பாக, ஸ்பெயின். பெரும்பாலான தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கா, வட அமெரிக்காவின் மேற்கு பகுதிகள் முதலியவை அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. வட அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளை இங்கிலாந்து கைப்பற்றி இருந்தது.

1607இல் இங்கிலாந்தின் முதல் குடியேற்றம் இன்றைய விர்ஜினியா மாநிலத்தின் ஜேம்ஸ்டவுன் என்ற இடத்தில் நிகழ்ந்தது. தங்கத்தைத் தேடி வந்த பிரிட்டிஷார் அங்கே அதைவிடவும் மதிப்புமிக்க புகையிலையைக் கண்டறிந்தனர். புகையிலை இங்கிலாந்தின் முதல் காலனியை உயிர்ப்புடன் மட்டுமல்லாது, மிகுந்த செல்வத்துடனும் வைத்திருந்தது.

1620இல் வட கிழக்கில் பிளைமவுத் என்ற இடத்தில் முதல் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினார்கள். அங்கு அவர்கள் அமைத்த காலனியும் வேகமாக வளரவே, அதுவும் இங்கிலாந்து அரசரின் கட்டுப்பாட்டிற்குள் சீக்கிரமே வந்தது.

வடகிழக்கில் ரோட் ஐலண்ட், நியூ யார்க், நியூ ஜெர்சி, டெலவர் போன்ற மாநிலங்கள் விரைவாக ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்ற ஆரம்பித்தன. ஆனால் இங்கு எல்லாம் முக்கியமாக மீன் பிடித் தொழிலும் அடர்ந்த காடுகள் இருந்ததால் மர வியாபாரம், கப்பல் கட்டுதல் போன்ற பெரும் தொழில்களும் வேகமாக வளர்ந்தன. இரும்பு இங்கே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, அது தொடர்பான பெரிய தொழிற்சாலைகள் வருவதற்குக் காரணமாக இருந்தது.

இதற்கிடையே ஐரோப்பாவில் மதத்தின் பெயரால் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருந்த குவேக்கர் (Quaker) மத மக்கள், தங்களுக்கு என அரசரிடம் தனியாக ஒரு பிரதேசத்தைப் பெற்று, இன்றைய பென்சில்வேனியா மாநிலத்தைத் தோற்றுவித்தனர். இங்கு அவர்களது பழமைவாத மதப் பழக்கங்களைப் பிரச்னையின்றிக் கடைபிடித்து வந்தனர்.

விர்ஜினியாவிற்குத் தெற்கில் பணப்பயிர்கள் வளர்ப்பதற்குத் தேவையான அனைத்து வளங்களும் இருந்ததால் அங்கே ஐரோப்பியர்கள் வேகமாக வந்திறங்கினர். சரியான வானிலை, நீர் வளம், நல்ல மண் வளம் முதலியவை இந்தப் பகுதிகளில் புகையிலைத் தோட்டங்கள் பரவலாக வரக் காரணமாக இருந்தது.

1763இல் ஐரோப்பாவில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவில் இங்கிலாந்தின் நிலப்பரப்பு வெகுவாக மேற்கு நோக்கி அதிகரித்தது. தெற்கில் இன்னமும் பல மாநிலங்கள் புதிதாகத் தோன்றின. புதிய பணப்பயிர்கள், முக்கியமாகப் பருத்தி இங்கே விளைவிக்கப்பட்டது.

தனித்தனியே தோன்றிய மாநிலங்களை எளிதாக நிர்வகிக்கும்படி அவற்றை ஒன்றாக இணைக்க இங்கிலாந்து அரசு மிகவும் முயற்சி செய்தது. ஆனால் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியே சுதந்தரமாக இருக்கவே விரும்பின.

யாருமில்லாத நிலத்தை ஐரோப்பியர்கள் ஆக்கிரமித்து அங்கு முன்னேற்றங்களை ஏற்படுத்தியது போன்ற ஒரு தோற்றம் இதையெல்லாம் பார்க்கும்போது நமக்கு ஏற்படலாம். ஆனால் அது உண்மையல்ல. அது யாருமற்ற நிலமல்ல. அந்த நிலத்தின், அமெரிக்கக் கண்டத்தின் சொந்தக்காரர்கள் அங்கேதான் இருந்தார்கள். ஐரோப்பியர்கள் வருவதற்கு 10,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அமெரிக்கக் கண்டத்தில் மனிதர்கள் வசித்து வந்தார்கள்.

ஐரோப்பியர்கள் வந்தபோது, மயன், அஸ்டெக், பல செவ்விந்திய இனக்குழுக்கள் என அமெரிக்கக் கண்டம் மனிதக்கூட்டங்களால் நிரம்பித்தான் இருந்தது. இந்த மக்களோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்டும் அது சரிவராதபோது போரிட்டும்தான் ஐரோப்பியர்கள் அமெரிக்காவை ஆக்கிரமித்திருந்தனர்.

இங்கிலாந்தின் அமெரிக்க மாநிலங்கள் ஒன்றாகச் சேர்வதற்கு 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் இரண்டு காரணங்கள் தோன்றின. ஐரோப்பாவில் நிகழ்ந்த போர்கள், கடல் தாண்டி அமெரிக்காவிலும் எதிரொலித்தது. பிரான்ஸ் அல்லது ஸ்பெயினுடன் இங்கிலாந்து நடத்திய போர்கள் அதன் காலனி நாடுகளுக்கும் பரவியது. இந்தப் போர்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, அமெரிக்கப் பிரித்தானிய காலனிகள் ஒன்றிணைய முடிவெடுத்தன.

இதையும் தாண்டி இன்னமும் ஒரு முக்கியக் காரணம் இருந்தது. பிரித்தானிய காலனிகளில், இங்கிலாந்து அரசின் நிர்வாகம் மீதான அதிருப்தி அதிகமாகிக்கொண்டிருந்தது. தங்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி வசூலிக்க மட்டுமே இங்கிலாந்து முயல்வதாக அவர்கள் கருதினர். அதிருப்தி கோபமாக மாறிக்கொண்டிருந்தது.

பெஞ்சமின் பிராங்ளினின் கேலிப்படம்

(மாநிலங்கள் ஒன்றிணைய வேண்டும் அல்லது அழிந்து போகவேண்டும் என்ற பெஞ்சமின் பிராங்ளினின் கேலிப்படம்.)

அன்றைய அமெரிக்காவில் ஐரோப்பியர்களையும் செவ்விந்தியர்களையும் தவிர கறுப்பினத்தவர்களும் இருந்தனர். தென் மாநிலங்களில் இருந்த புகையிலை மற்றும் பருத்தி தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளாகக் கொண்டு வரப்பட்ட கறுப்பின மக்கள் கடுமையாகச் சுரண்டப்பட்டனர். அடிமை வணிகம் பற்றியும் கறுப்பர்களின் நிலை பற்றியும் பின்னர் விரிவாகப் பார்ப்போம் என்றாலும் இப்போதைக்கு அவர்கள் இருப்பை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

1776ஆம் ஆண்டு அமெரிக்கக் காலனிகளில் பிரித்தானிய ஆட்சியை எதிர்த்து ஒரு புரட்சி வெடித்தது. அப்போதிருந்த 13காலனிகள், (இனி மாநிலங்கள்) ஒன்றாக இணைந்து பிரித்தானிய அரசை எதிர்க்க ஆரம்பித்தன. இந்த மாநிலங்களின் பிரதிநிதிகள் ஒன்றாகக்கூடி, பிரித்தானிய ஆட்சியை அகற்றிய பின்னர் கொண்டு வரவேண்டிய அரசைப் பற்றிய ஆலோசனையைத் தொடங்கினார்கள்.

தாமஸ் ஜெபர்சன் விர்ஜினியாவைச் சேர்ந்த பெரும் தோட்டத்திற்குச் சொந்தக்காரர், வக்கீல், பல மொழி வித்தகர், செல்வந்தர். இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அமெரிக்கச் சுதந்தரப் பிரகடனத்தை எழுதியவர்களுள் முதன்மையானவர். அனைத்து மனிதர்களும் சரிசமமாகவே தோன்றுகிறார்கள் என்று பிரெஞ்சு புரட்சியின் மகத்தான மனிதகுல சிந்தனையை, முன்பே அமெரிக்கச் சுதந்தரப் பிரகடனத்தில் எழுதியவர். அவரது தோட்டத்தில் வேலை பார்த்த 600 அடிமைகளுக்கும் சொந்தக்காரரும்கூட.

இந்தக் காலத்தில் இருந்தே அமெரிக்கப் புரட்சியின் நம்பிக்கைகளுக்கும் இலக்குகளுக்கும் அந்நாட்டில் நிலவிவந்த அடிமை முறைக்கும் இடையிலான முரண்கள் வெளி வர ஆரம்பித்துவிட்டன.

அமெரிக்கப் புரட்சியை முன்னின்று நிகழ்த்திய தலைவர்களில் பெரும்பாலானோர் விர்ஜினியாவைச் சேர்ந்தவர்கள். வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களைத் தவிர அனைவரும் அடிமைகளை வைத்திருந்தார்கள். இதை அனைவரும் உணர்ந்தே இருந்தார்கள். ஆனாலும் தென் மாநிலங்களை யாரும் பகைத்துக்கொள்ளவும் தயாராக இல்லை. எனவே அடிமை முறை என்பது யாரும் பேச விரும்பாத விஷயமாகவே இருந்து வந்தது.

அமெரிக்காவின் தேசத் தந்தை என்றழைக்கப்படும் ஜார்ஜ் வாஷிங்டன், விர்ஜினியாவைச் சேர்ந்தவர். அவரது தோட்டத்திலும் அடிமைகள் வேலை செய்து வந்தார்கள். அவர் பின்னர் குடியரசுத் தலைவராக இருந்தபோதும் அவர்களை விடுவிக்கவில்லை. அது குறித்து அவர் சிறிது சங்கடப்பட்டதாகத் தெரிந்தாலும், அடிமை முறை குறித்து அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.

இதனாலேயே இவர்கள் அனைவரும் இன/நிற வெறி கொண்டவர்கள் என்றும் முடிவு செய்துவிட முடியாது. உதாரணமாக, மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த கலப்பினத்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஹாமில்டன், அமெரிக்கப் புரட்சியின்போது வாஷிங்டனின் உதவியாளராக மட்டுமல்லாமல், வாஷிங்டன் குடியரசுத் தலைவரானபோது, அமெரிக்காவின் முதல் நிதி அமைச்சராகவும் இருந்தார். அவர்தான் அமெரிக்காவின் மத்திய வங்கியை உருவாக்கியவர். அமெரிக்கக் குடியரசுத் தலைவராகத் தகுதியுள்ளவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு தனிப்பட்ட பிரச்னையில் ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார்.

ஜெபர்சனும் அடிமை முறை என்பது அமெரிக்காவின் பெரும் தீமைகளில் ஒன்று என்று கூறியிருக்கிறார். விடுதலைப் பிரகடனத்தில் இங்கிலாந்து அமெரிக்காவிற்குச் செய்த தீமைகளில் மிகப் பெரியது அடிமை முறையைக் கொண்டுவந்ததுதான் என்று சொல்லியிருக்கிறார். தென் மாநிலப் பிரதிநிதிகள் அதை பிரகடனத்தில் இருந்து அகற்ற வைத்துவிட்டார்கள். அவரது தனிப்பட்ட நம்பிக்கைகளையும் 600 அடிமைகளை வைத்திருந்ததையும் எப்படிப் புரிந்து கொள்வது? அடுத்து வரும் அத்தியாயங்களில் நாம் இன்னமும் சற்று ஆழமாக இவற்றை எல்லாம் பார்ப்போம்.

வாஷிங்டன் முதல் குடியரசுத் தலைவராக இருந்தவரை அவர் மீதிருந்த மரியாதையினாலோ, புரட்சியின் நினைவுகள் பசுமையாக இருந்ததனாலோ எந்த வேறுபாடும் இன்றி நிர்வாகம் நடத்தப்பட்டது. ஆனால் அவர் இரண்டாம் முறையாகக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதே, 1792இல் அவரது நிர்வாகத்தினுள் வேறுபாடுகளும் இரண்டு கட்சிகளாகப் பிரிவும் ஏற்பட்டுவிட்டது. அவர் பதவியில் இருந்து விலகிய பின்னர், இவை முதல் கட்சிகளாகத் தோற்றமெடுத்தன.

ஒன்றிய அரசை வலுப்படுத்தி, அதிகாரத்தை மையப்படுத்த வேண்டும் என்ற கொள்கையுடன் ‘கூட்டாட்சி’ கட்சியினர் இருந்தனர். அலெக்சாண்டர் ஹாமில்டன் அவர்களுக்குத் தலைவராக இருந்தார். இன்னொரு புறம், ‘ஜனநாயக-குடியரசு’ கட்சி மாநில உரிமைகளை வலியுறுத்தியும், அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும் என்ற கொள்கையோடும் இருந்தது. தாமஸ் ஜெபர்சன் அவர்களுக்குத் தலைவராக இருந்தார்.

அமெரிக்க ஒன்றியத்தை எப்படி வழிநடத்துவது என்ற அடிப்படை கேள்வியே கட்சிகளின் கொள்கையாக இருந்ததால், இவை மாநிலங்கள் மற்றும் ஒன்றிய அரசின் இடையேயான ஒற்றுமை அல்லது வேற்றுமைகளைக் கொண்டே வழிநடத்தப்பட்டது. இந்த அடிப்படை வேறுபாடே, பல்வேறு காரணங்களால் பெரிதாக வெடித்துப் போர் மூண்டதற்குக் காரணமானது எனலாம். இன்றும் அமெரிக்கக் கட்சிகளின் முக்கியமான பேசுபொருளாக மாநிலங்களின் உரிமையே இருந்து வருகிறது என்பதையும் இதைக் கொண்டே புரிந்துகொள்ள வேண்டும்.

அமெரிக்க அரசியல் அன்றிலிருந்து இன்று வரை மிகவும் குழப்பமான, உணர்ச்சிகள் மிகுந்த, மனிதனின் அடிப்படை குணங்களைத் தூண்டிவிடும் மனிதர்களைக் கொண்ட களம். அதன் மனிதர்கள் வெளியில் கோட், சூட் போட்டுக் கொண்டு மிகவும் நாகரிகமானவர்களாகக் காட்டிக் கொண்டாலும், தேர்தல்களிலும் மற்ற நேரங்களிலும் அவர்கள் எந்த விதத்திலும், எந்த நாட்டு அரசியல்வாதிகளுக்கும் குறைந்தவர்கள் அல்லர். அமெரிக்க அரசியல் வரலாறு கொள்ளை, கொலை, அடிதடி எனப் பலவாறாக அனைவரையும் திருப்திப்படுத்தும் விதமாக இருக்கும் பல வண்ணங்கள் நிறைந்த ஓவியம். எல்லா நாடுகளைப் போலவே இங்கும் இவற்றை எல்லாம் தாண்டி நிற்கும் பெரும் தலைவர்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். இதுவே அமெரிக்க ஜனநாயகம் இன்றும் குழப்பங்களுக்கிடையே நிலைத்து நிற்பதற்குக் காரணம்.

1800ம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலை எடுத்துக்கொள்வோம். ‘ஜனநாயக-குடியரசு’ கட்சியின் சார்பாக ஜெபர்சன், ஆரோன் பர் ஆகிய இருவரும், ‘கூட்டாட்சி’ கட்சியின் சார்பாக ஜான் ஆடம்ஸ், பிங்க்னி இருவரும் நிற்கிறார்கள். ஜெபர்சன், ஆரோன் பர் இருவரும் ஒரே அளவிலான ஓட்டுகளைப் பெறுகிறார்கள். அப்போதிருந்த16 மாநிலங்களில், 9 மாநிலங்களில் வெற்றி பெற வேண்டும். இருவரும் தலா 8இல் வெற்றி பெறுகிறார்கள். மறு ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது, 36 முறை. 36வது முறையில் ஜெபர்சன் 10 மாநிலங்களை வென்று வெற்றி பெறுகிறார்.

ஆரோன் பர் துணை குடியரசுத் தலைவராகிறார். ஆனாலும் தன்னுடைய தோல்விக்கு ஹாமில்டன்தான் காரணம் என்று அவருடன் துப்பாக்கிச் சண்டைக்குச் சென்று, ஹாமில்டனைக் கொன்று விடுகிறார். நாட்டின் துணை குடியரசு தலைவர், தன்னுடைய சக அரசியல்வாதியை கொலை செய்துவிட்டு, கொலைகாரராக தலைமறைவாகி விடுகிறார்.

இதைச் சொல்வதற்குக் காரணம், இப்படியான ஒரு தேர்தலில் தேர்வாகி வந்த ஜெபர்சன், குடியரசுத் தலைவராக மிளிர்ந்தார். ஜெபர்சன் ஒரு தேர்ந்த அரசியல்வாதி மட்டுமல்ல ஒரு பெரும் படிப்பாளியும்கூட. அறிவியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். விவசாயி. மிகவும் மனிதத்தன்மை கொண்டவர். அவர் குடியரசுத் தலைவராகச் செய்த மற்றொரு காரியம் அமெரிக்க உள்நாட்டுப் போரைத் தவிர்க்கவியலாததாக ஆக்கியது. ஆனால் அப்போது யாராலும் அதை எதிர்பார்த்திருக்க முடியாது.

முன்பே கூறியது போல, அமெரிக்கக் கண்டத்தில் பிரான்ஸ் நாட்டின் காலனி மிகவும் பெரியதாக இருந்தது. அன்றைய அமெரிக்க எல்லையை ஒட்டிய பகுதியில், மாபெரும் மிஸ்ஸிஸிப்பி நதியின் நதி மூலத்தில் இருந்து, அது கடலில் சேரும் பகுதி வரை விரிந்திருந்தது. ஆனால் இது பெரிதும் காடுகளாகவும், அதிகமாகச் செவ்விந்தியர்கள் வசிக்கும் பகுதியாகவும் இருந்ததால், பிரான்ஸ் நதியின் கழிமுகத்தில் இருந்த பெரிய துறைமுகமான நியூ ஆர்லியன்ஸ் நகரின் மூலம் நடக்கும் வர்த்தகத்திற்காகவே இந்த நிலப்பகுதியை நிர்வகித்து வந்தது.

1799இல் பிரான்ஸில் புரட்சி முடிந்து, நெப்போலியன் சர்வாதிகாரியாக மாறிக்கொண்டிருந்தார். அடுத்த 3 ஆண்டுகளில் பல நாடுகளைக் கைப்பற்றியதோடு, பிரித்தானிய அரசுடன் தற்காலிக அமைதி ஒப்பந்தம் செய்திருந்தார். 1803ம் ஆண்டு, தன்னுடைய ராணுவத்தை நவீனப்படுத்தவும், தூரதேசத்தில் இருந்த பிரதேசத்தை நிர்வகிப்பதில் இருந்த சவால்களாலும், அவரது அமெரிக்கக் காலனியை கொடுத்துவிட யோசித்துக்கொண்டிருந்தார்.

ஜெபர்சன், லூசியானா என்று அழைக்கப்பட்ட இந்தப் பிரதேசத்தை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று முடிவு செய்தார். மூன்று பேர் கொண்ட குழு பிரான்ஸ் சென்றது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர், 15 மில்லியன் டாலருக்கு இந்தப் பிரதேசம் அமெரிக்காவால் 1803ம் வருடம் வாங்கப்பட்டது. இது அமெரிக்க நாட்டின் நிலப்பரப்பை இரண்டு மடங்காக்கியது.

இந்த நிலம் நாட்டை என்ன பாதையில் அழைத்து செல்லப் போகிறது என்பதை அப்போது ஜெபர்சன் மட்டுமல்ல, யாரும் கணிக்கவில்லை.

(தொடரும்)

அமெரிக்கா மேற்கு நோக்கி விரிகிறது.

அமெரிக்கா மேற்கு நோக்கி விரிகிறது.

——————–
உசாத்துணை:
1. 1776 – David McCullough.
2. Alexander Hamilton – Ron Chernow.
3. Washington: A Life – Ron Chernow.

 

பகிர:
nv-author-image

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

1 thought on “அமெரிக்க உள்நாட்டுப் போர் #2 – அமெரிக்காவின் முன்கதை”

  1. நந்தகோபால் தெய்வசிகாமணி

    நிஜமாகவே நன்றாக இருக்கிறது.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *