ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பினை மூலமாகக் கொண்டு எழுதப்பட்ட பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’ நாவலின் முதல் அத்தியாயம் இப்படியாக முடியும்:
துரை தமது திருமாளிகை அண்டைக்கு வந்தார். சற்றுத் தூரத்தில் இருந்த வேதபுரீஸ்வரர் கோயிலில் இருந்துவந்த கண்டாமணியின் நாதம் அவர் கவனத்தைக் கவர்ந்தது. திரும்பி,
‘ரங்கப்பா!’ என்றழைத்தார்.
‘பிரபு.’
‘அது வேதபுரீஸ்வரர் கோயில்தானே?’
‘ஆம். துரை அவர்களே.’
‘அது இன்னுமா இருக்கிறது?’
துரை தம் மாளிகைக்குள் நுழைந்தார்.
ஆனந்தரங்கர் மனம் சஞ்சலம் உற்றது.
கிறிஸ்துவர்களின் சம்பாக் கோவில், தமிழர்களின் வேதபுரீஸ்வரர் கோயில். அருகருகே இருந்தாலும் இரண்டு வழிபாட்டுத்தலங்களுக்கும் அப்படியொரு நெருக்கம் இல்லை. ஈசுவரன் கோவில் வளாகத்தில் இரண்டு முறை நரகல் வீசப்பட்டது, பதிலுக்குக் கிறிஸ்துவர்களின் டோலி மீதும் நரகல் வீசப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது குறித்தெல்லாம் கடந்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்த்தோம்.
பிரெஞ்சு அரசாங்கத்தின் செல்வாக்குப் படைத்த சம்பாக் கோவில் நிர்வாகம், ஈசுவரன் கோவிலை அகற்றுவதில் குறியாக இருந்தது. இதுபற்றி, கவனத்தில் கொண்ட பிரெஞ்சு ராசாவும், ஈசுவரன் கோவிலை அகற்றப் பச்சைக்கொடி காட்டிவிட்டார். ஆனால் புதுச்சேரியில் ஆட்சிசெய்தவர்கள் இவ்விஷயத்தில் தயக்கம் காட்டி வந்தனர். காரணம், ‘இது தமிழர் ராச்சியம். அவர்கள் கோவிலை இடித்தால் நமக்கு அபகீர்த்தி வந்துவிடும்’ என்பதுதான். ஆனால், ஆளுநர் துய்ப்ளேக்ஸ் ஆட்சிக்காலத்தில் அந்தத் தயக்கம் தகர்க்கப்பட்டது. தயக்கம் மட்டுமல்ல, ஈசுவரன் கோவிலும்தான்!
பிரிட்டிஷ் படைகள் புதுச்சேரியை முற்றுகையிட்டிருந்த அந்தச் சமயத்தில்தான் வேதபுரீஸ்வரர் கோயிலை இடிப்பது எனும் முடிவுக்கு வந்தது பிரெஞ்சு அரசு.
அதிகாலை நூறு இருநூறு பேர் ஈசுவரன் கோயில் அருகே கூடினர். தென்னண்டை மதில், மடப்பள்ளி ஆகியவற்றை இடிக்கத் தொடங்கினர். இதனால் ஈசுவரனை வழிபடுவோரிடையே பதற்றம் தொற்றிக் கொண்டது. உடனடியாக அவர்கள் ஆனந்தரங்கரிடம் ஓடிவந்தனர், ஆளுநரைச் சந்தித்து முறையிட வேண்டும் என்றனர். ‘கோவிலை இடிப்பதில் அவர்கள் அளவுகடந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். இந்நேரத்தில் நீங்கள் தடுத்து நிறுத்துவது சாத்தியமில்லை’ என்றார் ஆனந்தரங்கர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.
ஒரு கட்டத்தில் கோபமடைந்த ஆனந்தரங்கர், ‘எங்களுக்குத் துபாசி உத்தியோகம் கொடுத்தால் ஈசுவரன் கோயிலை இடிக்க உடன்படுகிறோம் என்று சொன்னவர்கள், உளவாளிகள் உங்களிடையே இருக்கிறார்கள்’ என்று சுட்டிக் (குத்திக்) காட்டுகிறார். ஆனாலும் அவர்கள் விடுவதாக இல்லை. கோயில் இடிப்பதைத் தடுக்க வேண்டும் என்கின்றனர்.
அப்போதும் ஆனந்தரங்கர் சொல்கிறார். ‘தடுக்க நினைப்பது இயலாத காரியம். வேண்டுமானால், கோயிலில் இருக்கும் விக்ரகம் போன்றவற்றைப் பத்திரமாகக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்’ என்று அறிவுறுத்துகிறார். ஆனாலும், விடாப்பிடியாக ஆளுநரைச் சந்திக்கச் சென்ற மகாநாட்டார் விரட்டி அடிக்கப்படுகின்றனர்.
இதற்கிடையே வேதபுரீஸ்வரர் கோயில் முழுவதுமாக இடிக்கப்படுகிறது. ‘அப்பால் இற்றைநாள் கோவிலை இடித்துச் சரிகட்டிப் போட்டார்களென்று கபுறு சொல்லி வந்து சகல ஜனங்களும் தாபந்தப்பட்டார்கள். இந்தபடிக்கு ஐம்பது வருஷமில்லாத காரியம் இன்றைய தினம் நடந்தேறிப்போனது’ என்றும் அங்கலாய்க்கிறார் ஆனந்தரங்கர்.
வர்லாம் எனும் பிரெஞ்சு அதிகாரி மகா லிங்கத்தினை தனது செருப்புக் காலால் எட்டி உதைத்து அதன்மீது எச்சிலை உமிழ்கிறான். இதையறிந்த ஆனந்தரங்கர் மனம் பதைபதைக்கிறது. ‘இப்படியெல்லாம் நடப்பித்தவர்கள் என்ன பலனை அனுபவிப்பார்களோ நான் அறியேன்’ என வேதனையுடன் எழுதுகிறார்.
இந்தக் காரியத்தில் முக்கியப் பங்காற்றியவர்களாக இருவரைக் குறிப்பிடுகிறார் ஆனந்தரங்கர். ஒருவர், ஆளுநர் துய்ப்ளேக்சின் மனைவி மதாம். இன்னொருவர் பிரெஞ்சு அதிகாரி பரதி. ‘இந்தக் கோவில் காலம் வந்து இடிக்கப்பட்டாலும் இடிப்பித்தப் பெரிய மனுஷருக்கு யாதொரு துக்கம் காண்பியாமல் விருதாவாய் ஒருக்காலும் போகத்தக்கதில்லை’ என்பது ஆனந்தரங்கரின் உள்ளக்கிடக்கையாக இருந்தது. இது நிறைவேறவும் செய்தது. அடுத்த மூன்றாவது நாள் பிரிட்டிஷாரின் துப்பாக்கிக் குண்டுப் பாய்ந்ததில் பரதிக்கு தலையில் சாவுக்காயம் ஏற்பட்டது.
ஈசுவரன் கோயில் இடிக்கப்பட்ட அதேநேரம் அந்தப் பகுதியில் இருந்த மசூதியையும் இடிக்கச் சொல்லி உத்தரவுப் போடப்பட்டது. இதையறிந்த அப்துலயிமான் ஆளுநரைச் சந்திக்கிறார். ‘அதை இடித்தால் ஒரு சிப்பாய் இருக்கப் போவதில்லை. இடிக்கிற மட்டுக்கும் இடிக்கிறவர்கள் பேரிலே விழுந்து சாவார்கள்’ என எச்சரிக்கிறார். இதனைத் தொடர்ந்து மசூதியை இடிக்கும் உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது. அப்போது ஆனந்தரங்கரிடம் வரும் அப்துலயிமான், ‘தமிழர் கோவிலை இடித்து இப்படி பட்டணம் நடுங்கப் பண்ணுகிறது துரைக்கு அழகா?’ எனக் கேட்டுவிட்டுப் போகிறார்.
‘வானம் வசப்படும்’ நாவலின் சில இறுதி அத்தியாயங்களுக்கு முன் ஈசுவரன் கோயில் இடிப்பு நிகழ்வு இடம்பெறுகிறது. அப்போது ஆனந்தரங்கருக்கும் அவரிடம் முறையிட வந்த ஆண்டிகள், சில பிராமணர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. அப்போது வந்தவர்கள் சொல்லுகிறார்கள்:
‘சும்மா நிறுத்தும் ஐயா. தமிழர் தலைவர் என்று விருதை வைத்துக்கொண்டு, இப்படி எங்களை மோசம் பண்ணுகிறீரே? நீர், பெரிய வியாபாரியாகவும், தரகராகவும் இருந்துகொண்டு குவர்னருக்கு அடுத்த ஸ்தானத்தை அநுபவித்துக் கொண்டிருக்கிறீர். அந்த ஸ்தானம் பறிபோகக் கூடாது என்று விரும்புகிறீர். அதைத் தக்க வைத்துக்கொள்ள விரும்புகிறீர். அதைத் தொட்டுத்தான், கோவில் இடிப்பு பற்றி அலட்சியம் பண்ணுகிறீர்.’
இறுதியில் ‘பிள்ளை தலை கவிழ்ந்து நின்றார். அப்துல்ரகுமான் தலை நிமிர்ந்து திரும்பினான்.’
என அந்த அத்தியாயத்தை முடித்திருப்பார் பிரபஞ்சன்.
மசூதி இடிக்கப்படும்போது அப்துலயிமான் ஆவேசப்பட்டுத் தடுத்து நிறுத்தியதும், ஈசுவரன்கோயில் இடிப்பு விவகாரத்தில் ஆனந்தரங்கர் அமைதி காத்ததும் விவாதத்துக்கு உரியதாகி இருக்கிறது. ஆனாலும், அன்று நடந்தவற்றை அப்படியே பதிவு செய்யும் நேர்மை ஆனந்தரங்கரிடம் இருந்தது. அவரால் செய்ய முடிந்ததும் இந்த நீண்டப் பதிவு மட்டுமே தான்!
1748 செப்டம்பர் 7 ஆவணி 26 சனிவாரம்
வேதபுரி ஈஸ்வரன் கோயிலை சம்பாக்கோயில் பாதிரிகள் அன்பது வருஷமாய் பிடிக்க வேணுமென்று பிரயத்தினம் பண்ணினதற்கு முன்னிருந்த கொவர்னதோர்கள் இது தமிழ் ராச்சியம் இந்தக் கோயிலுக்கு இன்னம் வந்தால் அபகீர்த்தி. வர்த்தகர்கள் வந்து சேராமல் போவார்கள். பட்டணமும் மாமூலாகாதென்று செம்மன முடிப்போமென்று யோசனைப் பண்ணி, இடித்துப் போடச்சொல்லி பிரஞ்சு இராசா உடைய கையெழுத்துப் போட்டு வந்த ஒடுதிகூட தள்ளிப்போட்டு கீர்த்திபெற்ற சூரியப்ரகாசம் போலே யிருந்ததை பெண்சாதிப் பேச்சைக் கேட்டுக்கொண்டு வேதபுரி ஈஸ்வரன் கோவிலை இடித்துப் போடச்சொல்லி உத்தாரம் கொடுத்தார். இந்தக் காரியங்கள் தானே யிப்படியானால் மற்றக் காரியங்கள் யெப்படியோ பார்த்துக் கொள்ளுங்கள். எத்தனையென்று எழுதப் போரேன். இப்படிப்பட்ட வேளையாயிருக்கிறது இந்த அனியாயத்துக்குத் தக்கதாக பட்டணத்துக்கும் இக்கட்டு வந்திருக்கிறது. ஸ்வாமி யென்னமாய் ரக்ஷிக்கிறாரோ நான் அரியேன்.
1748 செப்டம்பர் 8 ஆவணி 27 ஆதிவாரம்
இற்றைநாள் காலத்தாலே நடந்த விபரீதமென்னவென்றால் முசியே ழெர்போல்டு இஞ்சினீர், பாதிரி முதலானவர்கள் இரனூறு பேர் காமாட்டிகள் கொலுத்துக்காரரும் கூலிக்காரர் இரனூறு பேரும் மண்வெட்டி குன்தாலி மற்றும் செவுர்கள் இடிக்கிறதற்கும் நிறவிப் போடுகிறதற்கும் சாமான்களும் கொண்டு வந்து ஏற்கனவே சம்பாவுலு கோயிலிலே இரநூறு சொல்தாதுகளையும் குவாகுதி குதிரைக்காரர் அருபத்தெழுபது குதிரைக்காரரும் சிப்பாய்களிலே இரனூறு சிப்பாய்களும் ஏற்கனவே யிருந்த யெத்தனத்தை மனதிலே வைத்துக்கொண்டு சம்பாவுலு கோயிலிலே நேற்று காலத்தானே கொண்டு போய் வைத்த சேதி நேற்று தினசரியிலே எழுதினேன்.
அந்தப்படிக்கு அவர்களை முஸ்தீது பண்ணி வைத்துப்போட்டு மேலெழுதப்பட்ட கொலுத்துக்காரர் முதலான கூலிக்காரரை வைத்துக்கொண்டு வேதபுரி ஈஸ்வரன் கோயில் தென்னன்டை மதிலையும் மடப்பள்ளியையும் இடிக்கத் துவக்கினார்கள். அவர்களிப்படி இடிக்கத் துவக்கின உடனே கோவில் ஸ்தானிகர் சில, பிராமணர்களும் ஆண்டிகளும் வந்து சொன்னார்கள். நேற்று இராத்திரி சேதி கேட்டபடிக்கு யெழுதியிருக்கிறேன்.
ஆனபடியினாலே முசியே துய்ப்ளேக்ஸ் துரைத்தனத்திற்கு வருவதற்கு முன்னே இவ்விடத்திலே கோன்சேவியர் இருக்கும் போதுதானே இவர் துரைத்தனத்திற்கு வந்தால் ஈஸ்வரன் கோவிலை இடித்துப் போடுவார் என்று சமஸ்தான வெள்ளைக்காரர் சிறிதுபேர்கள் தமிழர்கள்கூட சொல்லிக் கொண்டிருந்த படிக்கு சரிபட்டுவிட்டது. இதல்லாமல் ஜனங்கள் சொன்னபடிக்கு முசியே துய்ப்ளேக்சு துரை ஸ்தானத்துக்கு வந்தநாள் முதற்கொண்டு இந்த எத்தனத்தின் பேரிலேயிருந்தார்.
சமயம் வாய்க்காமல் ருத்ரோத்காரி சித்திர வைகாசி ஒருதரம் ஆரம்பம் செய்து முத்தியப்பிள்ளையைக் கொண்டு இடிக்க வேணுமென்று பிரயத்தனம் பட்டபோது அவரதற்கு சம்மதியாமல் போனாப்போலே அவரைத் தூக்குப் போடுகிறோமென்று காதறுத்து பிரசித்தமாய் கட்டிவைத்து அடிப்பேன் என்று இப்படி யெல்லாம் இருக்கிறதின்பேரிலே, இப்படியல்லடா இவனை ஏக்கிறதென்று வேறே ஒருவிதமெடுத்து அது பிடிக்கத்தக்க நியாயம் சொல்லத்தக்க ஒரு பிராமண பெரியவர் திருப்பாதிரிப்புலியூரிலே வந்து இருக்கிறார். அவரை அந்த ஊர் திருநாளன படியினாலே திருநாளுக்குப் போகிறாப் போலே அவரை அழைத்துக் கொண்டு இந்த மகாநாட்டாருக்கு சொல்ல வைத்து அப்புறத்திலே அந்த லிங்கத்தைப் பேர்த்துக் கட்டிக்கொள்ளத்தக்கதாய் பண்ணி விடுகிறேனென்று மோசம் பண்ணி சொல்லிப் போட்டு நாமேனிந்தப் பழியை ஏற்றுக்கொள்ளவேணும் சாசுதமாயிருக்க வேணுமென்று என் தகப்பனார் இந்த கோவில் நிமித்தியம் போராடி சேர்த்து கீர்த்தி சம்பாதித்ததை நாம் போக்கடிப்போமா வென்று யோசனைப் பண்ணி இந்த நிமித்தியம் என்ன இக்கட்டு வந்தாலும் வரட்டும் சரீரமே அனித்தியமா யிருக்கும் போது மற்றது யென்ன நித்தியமாயிருக்கப் போகிறது. நித்தியமாயிருப்பது கீர்த்தியான படியினாலே கரைவழி போனால் துலுக்கர் மனுஷர் தொந்தரவு பண்ணுவார்களென்று துரையை உத்தராங் கேட்டுக்கொண்டு பாக்கு சலங்கு வாங்கிக் கொண்டு தம்முடைய தட்டுமுட்டு சமஸ்தமும் சலங்குப் பேரிலே அனுப்பிவிட்டுத் தன் சலங்கின் பேரிலே கூடலூரிலிலே யிறங்கி அப்பால் வெங்கடம்மாள் பேட்டையைப் போய் சதாசிவம் பிள்ளை ஆஜரிலே சேர்ந்தார்.
அப்போ அவர் மோசம் பண்ணி போட்டபடியினாலே அந்த வேளைக்குத் தப்பிப் போனது. இப்போ இங்கிலீஷ்காரர் கலாபத்தினாலே பட்டணத்தில் உண்டான ஜனங்கள் சமஸ்தான பேரும் வெளியே போயிருக்கிறது மல்லாமல் இங்கிலீஷ்காரன் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறான். ஊரிலே கொஞ்சனஞ்சம் போயிருக்கிறவர்களும் வெளியே போவதற்கு யிடமில்லாமலிருக்கிற வேளை. அப்பாலும் கலாபத்தினாலே மருந்து குண்டுகள் பீரங்கிகள் துப்பாக்கிகள் முதலானதெல்லாம் எங்கும் நிரம்பிப் பார்க்கிறவனுக்கு பயங்கரமாயிருக்க அல்லது ஒரு வேளையிலே யிப்படியெல்லாம் இருந்தாலும் துணிந்து பத்து இருபது பேரையாகிலும் சாகக்கொடுக்கிறதுக்கும் பின்வாங்காமல் சாகிறவர்களென்றும் பார்ப்பார் வேகு சொல்லுகிறவர்களென்று யிருந்த பிராமண ரெல்லாம் வெளியே போனாலும் போகட்டுமென்று தாராள யுத்தரவு கொடுத்தும் போன பிராமணரை மாத்திரம் உள்ளே விட வேண்டாம் மற்ற எந்த ஜாதி வந்தாலும் விடச்சொல்லி கலகத்தைச் சாட்டி சொன்ன உத்தரவுகளும் இந்தபடிக்கு சமயம் பார்த்து கலகவேளையென்று சமஸ்தான பேர்களும் ஆண் பெண்கூட வெளியே போயிருக்கிறது மல்லாமல் அல்லவென்று நூறு ஐம்பது பேர் பேச வந்தால் பயங்கரமாயிருக்கிறதாக அவ்விடத்திலே சொல்தாது முதலான பேரையும் வைத்துக் கொண்டு கோட்டை கெவுனி நாலு வாசலும் தான் கலகத்தினாலே சாற்றியிருக்குது.
இடித்து அவன் தள்ளச்சே நாம் செய்ய வேண்டியதென்ன யிப்போ பத்துபேர் மகாநாட்டார் கூடிப்பேசறதுக்கும் மனுஷரில்லை. இதல்லாமல் கலகவேளை இந்த சமயங்கள் பார்த்து அவர் நாளது வரைக்கும் நினத்துக் கொண்டிருக்கிற காரியம் முடிகிறதற்கு இது சமயமென்றும் அவர் கோவிலை இடித்துத் தள்ளும்போது இப்போ வேறே அடையாளமில்லை. இருக்கிற விக்ரகங்கள் மற்று முண்டானதை யெல்லாம் யெடுத்துக்கொண்டு போய் காளத்தீஸ்வரன் கோவிலில் கொண்டு போய் சேருங்கள் என்று சொன்னேன். பேசுகிறதற்கு கூடாதாவென்று கேட்டார்கள். மேல் எழுதியிருக்கப்பட்ட அடமானமெல்லாம் சொல்லி சீக்கிறமத்துக்கு உச்ச விக்ரகம் முதலானதெல்லாம் விக்ரகங்களும் சாமான்களும் வாகனங்களும் கொண்டு போய் சேர்த்துக் கொள்ளுங்களென்று சொன்னதற்கு நல்லது மகாநாட்டாருடனே சொல்லுகிறோ மென்று சொல்லி ஸ்தானிகர் போனார்கள்.
நான் பழயது சாப்பிட்டு ஏழுமணி வேளைக்கு துரையவர்கள் வீட்டண்டை யிலிருக்கும் பாக்குக் கிடங்குக்கு வந்தவுடனே தில்லையப்ப முதலி, பவழக்கார வுத்திர பெத்துசெட்டி அம்மையப்பன், பிச்சாண்டி, லச்சிகான் குட்டியாப்பிள்ளை, சின்னமுதலி கைக்கில அனந்தநாய முதலி பின்னையும் இரண்டு பேர் கைக்கிலவர்களிலே இரண்டொருத்தர்களும் வெள்ளாழரிலே அரியபுத்திர முதலி மகன் குமரப்ப முதலியும், அகம்மடி முதலிகளிலே சடையப்ப முதலி (சகலபாடி) பேர்விளங்காது பின்னையும் நாலத்து இரண்டு பேர் குடியானவர்களும் கோவில் சாத்தானியர்களும் வந்து கோவிலிடிக்கிறார்கள். இது சமயமென்று நடத்துகிறார்கள். நாங்கள் துரைகளை ஒரு வார்த்தைக் கேட்டு, இடிக்கிறதானால் நாங்கள் நாலுபேரிரண்டு பேர்கூட சாவுகிறோமென்று இனி இந்தவூர் ஆசை என்னயிருக்கிறதென்றும் நீங்கள் வந்து சொன்னால் நல்லது. நீங்கள் சொல்லாவிட்டால் ஒருவார்த்தைக் கேட்டுப் போட்டு ஊரைவிட்டு அப்பாலே யெல்லாரும் போயிருக்கிறாப் போலே ஆனதே. இனிமேல் ஊரிலேயிருந்து போக நூறு நூத்தம்பது பேர் தானிருக்கிறார்களா? கேட்டுப்போட்டு போகவோமென்றே ஞாயமென்ன போகிறதானால் முன்னே தானே கலகமென்று ஆண் பெண் அடங்கலும் போயிருக்கிறா போலேதானே ஆனதே. நீங்கள் பத்து பேர் போனாலென்ன யிருந்தாலென்ன போகிறது தானே கேட்டதற்கு நாளை மற்றாம் நாள் நீங்கள் கும்பல் கூட வேண்டாம் வெளியே போக வேண்டாம்.
ஏதாகிலும் உண்டானால் எங்களுடனே வந்து சொல்லிக் கொள்ளுங்கள். நாங்கள் நடப்பித்துக் கொடாவிட்டால் நீங்களும் கும்பல் கூடுங்கள். வூரைவிட்டுப் போங்கோ. உங்களுக்கு சம்மதியானபடிக்கு நடத்திக் கொள்ளுங்கள் என்று துரைகளும் உத்தாரம் கொடுத்திருந்தபடியினாலே இப்போ எங்களுக்கு ஜீவனுக்கு ஜீவனாயிருக்கிற கோவிலை இடித்துப் போடுகிறபடியினாலே எங்கள் கும்பல் கூடுகிறதற்கும் ஏதாகிலும் ஒரு காரியம் கவை நடப்பிக்கிறதற்கும் இப்போ கலக வேலையாய் பட்டணத்துக் கயிக்கியப்பட்டு வந்த சகல ஜனங்களும் வெளிப்பட்டு போயிருக்கிற வேளைபடியினாலே ஒருவார்த்தை துரையவர்களைக் கேட்கிறது. நிறுத்தினால் நல்லது. நிறுத்தாமல் போனால் மெற்ற நல்லதென்று சொல்லிப்போட்டு போவோமென்று சொன்னார்கள்.
அதற்கு நான் சொன்ன உத்திரம். வூரிலே யாராகிலும் பலவந்தாயிருக்கப்பட்டவர்கள் சோளபாரியாய் நடத்தினாலதுக்கு மகாநாட்டார் உள்ளபடியினாலே தங்களை அறியாமல் ஒருத்தர் ஒருவேளை தங்களுடனே வந்து சொல்லிக்கொள்ளச் சொல்லியும் தங்களுடனே சொன்னால் தாங்களவர்களுக்கு தாக்கீது பண்ணுகிறோமென்று சொன்னார்களே யல்லாமல் தாங்களே சோருவாரியாய் நடத்துகிற நடத்துகிறதற்கு சொன்னதல்லவே. இப்போ துரைகளாய் நடத்துகிற படியினாலே நீங்களவர்களைப் போய் கேழ்க்கிறதிலே ஸ்வார்சியமில்லை. கோவிலுடைய சாமான்கள் உச்ச விக்ரகங்கள் முதலானதுகளை யெல்லாம் எடுப்பித்துக் கொண்டு போய் காளத்தீஸ்வரன் கோவிலிலே கொண்டுபோய் சேருங்கள் என்று சொன்னால் அவர்கள் கேழ்க்க மாட்டோனென்று நாங்கள் போரோமென்று கேழ்க்கிறார்கள்.
உன்னிடத்திலே இந்த மட்டுக்கு கட்டுண்டானால் உன்னுடனே அழைத்துச் சொல்லுகிறதற்கு சாடைகூட யில்லாமல் கோவிலை இடிக்கச்சே வீண்பேச்சு பேசிக்கொண்டிருக்கிறதிலே காரியமென்ன? சாமான்களைக்கூட கொண்டு போகப் போகிறார்கள். அப்பால் கோவில் போனாலும் போகுது சாமான்களை கொடுங்கோளென்று கேழ்க்க வேண்டியிருக்கும். கச்சொற்கள் சாமான்களை கேழ்க்க வந்தார்களா கோவிலைப் பிடித்தால் நூறு பேர் அன்பது பேர் சாவார்கள் யெல்லாரும் வூரைவிட்டுப் போவார்கயென்கிற பயமொன்று நாளது வரைக்கும் இருந்ததுதான். போகாமல் மற்றுப்போய் கொளுத்தும் போது இப்படி செய்கிறோமே யென்னமோ வென்கிற அனுமானத்தினாலே சொல்தாதையும் சிப்பாய்களையும் குதிரைக்காரரையும் யேர்க்கனவே கொண்டு போய் வைத்துக் கொண்டு நடத்தினான். அந்த பயத்தையும் நீங்கள் போய் கேட்டுத் தீர்த்து போடுகிறாப்போலே யிருக்குது. வேண்டாம். சீக்கிறமத்துக்கு கோவிலே போய் சாமான்களை சேருங்கள் யென்று சொன்னால், அத்தனை எளப்பமாகவாப் பார்த்தீர்கள் எங்கள் சுருக்கு நீர் அரியீர் என்று சொல்ல வந்தார்கள்.
அதற்கு உங்களுடனேகூட வந்திருக்கிற ஆள்களுக்குள் ஆறுமுகத்தா முதலியுங் கொலுத்துக்கார வெங்கடாசலம் தம்பி லச்சிகானும் இரண்டொரு பேரும் அன்னபூறணய்யருக்கு சாவடி துபாசித்தனங் கொடுத்தால் வேதபுரீஸ்வரன் கோவிலை யிடித்து அப்பாலே கட்டுகிறதற்கு நாங்கள் வூராருக்கு சம்மதி போடுகிறோ மென்று வந்து சொன்னவர்கள் உங்களுடனே கூட இருக்கிறார்கள்.
இப்போ இரண்டு மாசமாய் துரை பெண்சாதியண்டைக்குப் போய் பெரிய துபாசித்தனம் தம்பிச்சா முதலி மகன் மலையப்ப முதலிக்கும் தனக்கும் சாவடி துபாஷித்தனமும் கொடுத்தால் வேதபுரீஸ்வரன் கோயிலை இடித்துப்போடுகிறோமென்று பேசவில்லையா? இதுமல்லாமல் சம்பாவு கோவிலு பாதிரிகளண்டைக்கு அன்னபூரணய்யன் போய் ஊராரையெல்லாம் சம்மதி பண்ணினேன். நீங்கள் தனக்கும் மலையப்ப முதலிக்கும் உத்தியோகம் கொடுத்தால் வேதபுரீஸ்வரன் கோயிலை இடித்துக் கட்டிக்கொள்ள பண்ணிப்போடுகிறோமென்று பேசவில்லையா?
0
வேதபுரீஸ்வரர் கோயிலை இடிப்பது எனும் முடிவுக்கு வந்தது பிரெஞ்சு அரசு.
இதனால் ஈசுவரனை வழிபடுவோரிடையே பதற்றம் தொற்றிக் கொண்டது. உடனடியாக அவர்கள் ஆனந்தரங்கரிடம் ஓடிவந்தனர், ஆளுநரைச் சந்தித்து முறையிட வேண்டும் என்றனர்.
‘கோவிலை இடிப்பதில் அவர்கள் அளவுகடந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். இந்நேரத்தில் நீங்கள் தடுத்து நிறுத்துவது சாத்தியமில்லை’ என்றார் ஆனந்தரங்கர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.
ஒரு கட்டத்தில் கோபமடைந்த ஆனந்தரங்கர், ‘எங்களுக்குத் துபாசி உத்தியோகம் கொடுத்தால் ஈசுவரன் கோயிலை இடிக்க உடன்படுகிறோம் என்று சொன்னவர்கள், உளவாளிகள் உங்களிடையே இருக்கிறார்கள்’ என்று சுட்டிக் (குத்திக்) காட்டுகிறார். ஆனாலும் அவர்கள் விடுவதாக இல்லை. கோயில் இடிப்பதைத் தடுக்க வேண்டும் என்கின்றனர்.
அது பற்றிச் சொல்கிறார் ஆனந்தரங்கர்.
‘முன்னே துரையவர்களழைப்பித்து அந்த கோவில் எங்கள் கோயில்கிட்ட இருக்கிற படியினாலேயும் உங்களுக்கும் எங்களுக்கும் எந்நேரமும் போராட்டமாயிருக்கிறது. அதை அப்பால் கட்டிக்கொள்ளுங்கள். செல்லுமான சிலவு கொடுத்து நல்ல ஸ்தலமும் காண்பிக்கிறோ மென்று சொன்னதுமல்லாமல் இனிமேலுங்களுடைய மதத்தினுடைய காரியம் நாங்கள் சற்வாத்துமானாகப் பேசுகிறதில்லை. உங்களுக்குச் சம்மதியானபடிக்கு நடப்பித்துக் கொள்ளுகிறோமென்று எழுதிக்கொடுக்கிறோமென்று ஐம்பது வருஷமே வருகிறதுகளுகளெல்லாம் பிரயத்தினம் பண்ணி வருந்தி வருந்தி கேழ்க்க, சுயம்பு லிங்கம் பேத்துக்கட்டப் போகாதென்று நீங்கள் சொல்லிக்கொண்டு வந்த உங்களுக்குள்ளே அப்பாலே கட்டிக்கொள்ளுகிறதற்கு சம்மதியென்று எப்போ பேச்சு நடந்ததோ அந்த க்ஷணமே அவர்களை யோசனை பண்ணி இவர்களுக்குள்ளே அப்பால் கட்டிக்கொள்ளுகிறோமென்று சொன்ன மட்டுக்கும் இவர்களை அழைத்துக் கேட்டால் இவர்கள் அது வேணும் இது வேணும் என்று சொல்லுவார்கள்.
உங்களுக்குள்ளே ஒருத்தருக்கொருத்தர் உளவாயிருக்கிற படியினாலே எப்படி அடித்தாலும் பேசுவாரில்லையென்று துரை பெண்சாதி நன்றாய் போதித்து இருக்கும்போது தானல்லவோ உங்களை அழைத்துக்கூடச் சொல்லுகிறதற்கு இல்லாமல் நடத்திப் போடுகிறான். இவ்வளவு தெரியாதா அல்லவென்று உங்களுக்குள்ளே தைரியமாய் நிர்வாகமாய் பேசுவதற்கு இப்போ பேசவந்த பத்துபேர் மனதும் ஒரு மனதாயிருக்கிறதா? ஆறுமுகத்தா முதலியும் லச்சிகானும் தான் அப்பிறத்திலே கட்டிக்கொள்ளத்தக்கதாக சமஸ்தான பேருக்கும் தாங்கள் சம்மதி பண்ணுகிற்றோமென்று சொன்னவர்கள். இனிமேல் கெட்டியாய் பேசப்போகாதே அப்பால் நீங்களிருக்கிறதற்குள்ளே பெத்துசெட்டி கெலித்தவுடனே பாதிக்கு நிற்கிறவர் அல்லவென்றால் காத வழியிலே ஒரு பனைமரம் விழுந்தால் இங்கே எனக்கொரு தத்து என்று சொல்லுகிற சாடை அப்படியிருக்க நீங்களென்ன பேசினீர்கள். பேசாமலிருந்தாலும் இன்னும் பயமிருக்கும் பேசி வெளுத்துப் போகிறதிலே காரியமில்லை.
அவர்களிந்நேரம் தென்னண்டை மதிலும் மடப்பள்ளியும் இடித்து ஆகி அப்பால் அற்த மண்டபம், மகாமண்டபம் இடிக்கிறார்களென்று சேதிவந்தது. இனிமேல் தாமசமாயிருக்கிறீர்கள். இப்போயிருக்கிற மாமூலாவுக்கு சம்பாவுலு கோவிலிலே யிருக்கிற பாதிரிமார்களும் புறப்பட்டு அங்கே இரங்கியிருக்கிற வெள்ளைக்கார சொல்தாதுகளை காப்பிரிகளை சட்டைக்காரர் குலம் புகுந்த பறையர்களைக்கூட எடுத்துவிட்டு அவர்கள் கூடி தாங்கள் கூடுமாயிருக்கிற சாமான்களைக்கூட எடுத்துப் போயும் உடைத்துப் போட்டும் இப்படி நாலாவிதமாய் ஆபாசம் பண்ணுவார்கள். அப்போ நீங்கள் யாராகிலும் கேழ்க்கப் போனால் அடிகூட நடப்பிப்பார்கள். அப்போ கோவில் போனதுமல்லாமல் சாமான்கள்கூட உற்சவ விக்கிரகங்கள் பிள்ளையார் முதலானதுகூட போக்கடித்துக் கொள்ளுவீர்கள்.
இப்போ பட்டணத்திலே யாரென்ன செய்து போட்டாலும் ஏனென்றுக் கேட்பாரில்லை. அதிலேயும் நம்முடைய மதத்து கோவில் போச்சென்றால் சொல்லவே தேவையில்லை. ஐம்பது வருஷம் சற்வ பிரயத்தினம் பண்ணி ஆகாத காரியம் முசியே துய்ப்ளேக்ஸ் துரைத்தனத்திலே அவர் பெண்சாதி போதனையின் பேரிலே இந்தக் கோவிலை காலாகாலங்களிலேயும் இடிக்கப் போகாதென்று இருந்த காரியம். அனாயசமாய் இடிக்கிற வேளை வந்தால் சம்பாவுக் கோவில் பாதிரிகளுக்கும் கிருஸ்துவனெனப்பட்ட தமிழர் பறையர் முதலானபேருக்கும் மதாம் துய்ப்ளேக்சுக்கும் முசியே துய்ப்ளேக்சுக்கும் இருக்கிற உற்சாகமும் சந்தோஷமும் இத்தனை அத்தனை யென்று சொல்லமிதத்திலே யிருக்கிறதா? அப்படிப்பட்ட உற்சாகம் வந்திருக்கும்போது இந்த வேளையிலே கோயிலிலே புகுந்து அவர்கள் மனதுபடியே உடைத்து மெரித்து ஆபாசம் பண்ணாமல் போகார்கள்.
நீங்கள் சீக்கிரமத்துக்குப் போய் சாமான்களைக் கொண்டு போய்ச் சேருங்கள் என்று என்ன சொன்னாலும் அனந்தநாயகமும் தில்லையப்ப முதலி, குட்டியாப்பிள்ளை, சின்னமுதலியும் பின்னையும் நாலத்து ரெண்டு பேருக்கும் துரையைப் போய்க் கேழ்ப்போம். துரையைக் கேட்டால் அப்படியிருக்க உத்தாரம் கொடார் என்கிற நினைப்பும் பேரிலே அப்படிப் போனாப் போலே போனார்கள். நானப்போ ஆறுமுகத்தா முதலியும் லச்சுகான் பேச்சும் அவர்களுக்குள்ளே படியினாலே நடத்தின பேச்சைச் சொன்ன மாத்திரத்தில் ஆறுமுகத்தாமுதலி இப்படி செய்வார்களென்று அறுவாயிடமுங் காட்டி சரிபோனபடிக்குக் கட்டிக்கொள்ளச் சொல்லி வராகனும் கொடுப்பார்களென்று இருந்தோம். வழவழவென்று பேசிப்போட்டு முகம் செத்தாப் போலே அப்பாலே போனான். லச்சிகான் மாத்திரம் பேசுகிறதிலே காரியமில்லை யென்றாப்போலே மெய்தானய்யா வென்று சொல்லுவான். முன்னேயும் நடப்பான். அப்பால் உளவாயிருந்தப் பேச்சு பேசினாப்போலே அவனும் முகம் செத்தாப்போலே அவர்களுடனே கூட நின்றான்.
இப்படி இருக்கும்போது சம்பாவுலு கோவில் பெரிய பாதிரி கேற்து என்கிறவர் வந்து சுவாமி இருக்கிற கோவிலை உதைத்துக் காப்பிரிகளை விட்டு கதவைப் பேர்க்கச் சொல்லி, கிருஸ்துவப் பசங்களைவிட்டு வாகனங்களை உடைக்கிறதுமா யிருக்கிற தென்று கபுறு வந்து சொன்னார்கள். ஏங்கானும் நான் இந்நேரம் சொன்னப் பேச்சு அனுபவமாச்சுதா? இனியாகிலும் சீக்கிரமாகப் போங்களென்று சொல்லிவிட்டு துரை வீட்டுக்குப் போனேன்.
துரை என்னுடன் பேசினால் அதை இதை சொல்லப் போகிறானென்று பேசாமல் சம்பாவுலு கோவிலுக்குப் போகிறதற்கு பயணம் புறப்பட்டு பெண்சாதி ஏறுகிற கூண்டின் பேரிலே ஏறிக்கொண்டு நடந்துவிட்டார். நமக்கென்ன அவர் பேசாமல் போகிறதும் இந்தப் பிரசங்கமே நம்முடனே எட்டாமல் போகிறது மெத்த உத்தமமாச்சுதென்று நான் பாக்குக் கிடங்குக்குப் போவோமென்று துரை பிறகுதானே புறப்பட்டேன்.
இதிலே ஆறுமுகத்தாமுதலி, பெத்துசெட்டி, தில்லையப்பமுதலி முதலான மகாநாட்டார் பத்துபேரும் துரைவீட்டுக்கு மேலண்டையிலே மாட்டுக் கொட்டகை யண்டையிலே போகும்போது போய் சலாம் பண்ணிக்கொண்டார்கள். எங்கே வந்தார்களென்று கேட்டார். வர்லாமிருந்து கொண்டு கோவிலை இடிக்கிறார்களே அந்த சாமான்களை எடுத்துப் போகிறோமென்று கேழ்க்கிறார்கள் என்று மாறுபாடாய் சொன்னானப்போ, அங்கும் பிரிதியாயிருக்கிற சாடையான படியினாலே உங்கள் தட்டுமுட்டை நீங்களெடுத்துப் போங்களென்று அப்பாலே சேவகரைப் பார்த்து இந்தக் கும்பலை அடித்துத் துரத்தென்று சொன்னாரிதிலே…
அப்துலாயிமான் சமேதரர் ஓடி கப்சு கோயிலுக்கு எதிரே மேல் பார்சத்திலே முசியே கொடுதி வீட்டின் பிறகாலே துலுக்கருக்கு வெகுநாளாய் இருக்கிற மசூதியைக்கூட தாட்டியுந்த துரையும் இடிக்கச் சொன்னதின் பேரிலே ஈஸ்வரன் கோயிலை இடிக்க ஆள்விட்டபோது அந்த மசூதியும் இடிக்கிறதற்கு ஆள்விட்டார்கள். அவர்கள் சுற்றிலும் கொஞ்சமிடித்த மாத்திரத்திலே சோனகர்கள்போய் அப்துலாயிமானுடனே சொல்லிக்கொண்ட படியினாலே அப்துலாயிமான் அங்கே துரையண்டையிலே வந்து சலாம் பண்ணி எங்கள் மசீதை இடிக்கச் சொல்லி உத்தாரம் கொடுத்தீராம். அமை இடித்தால் ஒரு சிப்பாய் இருக்கப்போகிறதில்லை. இடிக்கிற மட்டுக்கும் இடிக்கிறவர்கள் பேரிலே போய் விழுந்து சாவார்கள் என்று சொன்னதும் அந்த வேளையிலே அவர்களைத் தொட்டு காரியமிருக்கிற படியினாலே மசூதியை இடிக்க வேண்டாமென்று சொல்லி அனுப்பிப் போட்டு சம்பாவுலு கோவிலுக்குப் போனார்கள்.
அப்படிச் செய்யாவிட்டாலும் பேசுகிறதற்காயினும் தைரியமானவர்கள் தமிழருக்குள்ளே உண்டாயிருந்தால் அந்தக் கோவிலை தீண்டினாலும் தீண்டினானே. அப்பால் அப்துலயிமான் தங்கள் மசீதை இடிக்க வேண்டாமென்று உத்திரவு வாங்கி அனுப்பிப் போட்டு நம்முடைய பாக்குக் கிடங்குக்கு வந்து … ‘அம்மாள் சேவகரென்று ஊரை கொள்ளையிடுகிறதுனாலேயும் போதும் போதாதற்கு தமிழர் கோவிலை இடித்து இப்படி பட்டணம் நடுங்கப் பண்ணுகிறது துரைக்கு அழகா? ஆனால் என்ன காலமோ தெரியாது என்றும் பின்னையும் துரையவர்கள் பெண்சாதி பண்ணப்பட்ட அநியாயங்களினாலே இந்தப் பட்டணத்திற்கு சுவாமி இக்கட்டைக் கொண்டுவந்து கொடுத்தாரென்று எப்போ பெண்சாதி புருஷனை கையாலாகாதவனாக்கித் தான் அதிகாரம் பண்ணத் தலைப்பட்டாளோ அப்போ அந்தப் பட்டணத்திற்கு அழிவல்லவா? என்றும் இதை ஒரு கோன்சேல்கார ராகிலும் கும்பினீர் காரியமோ உன் காரியமோ உன் பெண்சாதி பண்ணுகிற அநியாயமிப்படி யென்று சொல்லத்தக்கதா யில்லாமல் வாயை அடைத்துப்போட்டது. என்னவோ ஒரு விபரீதம் நடக்கிறதற்கு ஏஷயமல்லவா?’ … தாராளமாய் பேசியிருந்து அனுப்பிவித்துக் கொண்டு வீட்டுக்குப் போனான்.
அப்பால் சம்பாவுலு கோவில் பாதிரிகள் மகாநாட்டார் மனுஷர்களை அழைத்துக் கொண்டுபோய் சாமான்களை எடுக்கப் போனால் காபிரிகளையும் சொல்தாதுகளையும் பறையரையும் விட்டு அடிக்கச் சொல்லி அந்தக் கோவில் வழி வரவொட்டாமல் வாகனங்கள் தண்டு மரங்கள், கோவில் பத்திரங்கள் சமஸ்தமும் எடுத்துப் போகும் போது இவர்களொவ்வருத்தன் இருபதடியும் பத்தடியும் பட்டுக்கொண்டு உச்சவ விக்ரகத்தையும், பிள்ளையாரையும் மாத்திரம் இப்புரம் கொண்டு வரத்தக்கதாக பிரம்ம பிரயித்தனமாய் போனது.
இதிலே பெரிய அலவாங்கு யெடுத்துக்கொண்டு வந்து காரைக்கால் பாதிரி கேர்து என்கிறவன் மகாலிங்கத்தை காலாலே உதைத்து, கையிலேயிருந்த அலவாங்கினாலே உடைத்து பின்னம் பண்ணினதின் பேரிலே பின்னையும் காப்பிரிகளையும் வெள்ளைக்காரரையும் விட்டு இருந்த விஷ்ணு விக்ரகங்கள் முதலானதெல்லாம் உடைத்து தடுத்துப் போடச்சொல்லினார்.
அப்போ அம்மாளும் பாதியாரும் பார்த்துயிருக்க வரலாம் மகாலிங்கத்தை செருப்புக் காலாலே பத்துதர மெட்டுதரம் உதைத்தது. உமிஞ்சி (எச்சில் உமிழ்ந்து) திருப்தி பண்ணிக்கொண்டு அம்மாளும் பாதிரியாரும் இவனும் ஒரு மகாத்மா வென்று சந்தோஷப்பட வேணுமென்று செய்துபோட்டு தாட்டியின் பிறகே போனான்.
பின்னையுமந்த கோவிலிலே நடத்தின ஆபாசத்தை காகிதத்திலே எழுதி முடியாது. வாயினாலேயும் சொல்ல முடியாது. இப்படியெல்லாம் நடப்பித்தவர்கள் என்ன பலனை அனுபவிப்பார்களோ நான் அறியேன். ஆனால் இன்றைய தினம் தமிழரெனப்பட்டவர்களுக்குயெல்லாம் லோகாஷத்தனமாய் போறாப்போலே இருந்தது. பாதிரிகளுக்கும் தமிழ் கிறிஸ்துவர்களுக்கும் துரைக்கும் துரை பெண்சாதியவர்கள் ஆயிசுலே காணாத சந்தோஷத்தை இன்றைய தினம் அடைந்தாப் போலே மகிழ்ச்சியாயிருந்தார்கள். இனிமேல் அனுபவிக்கப் போகிற துக்கத்தனை யோசனை பண்ணாமலிருந்தார்கள்.
இப்போ எழுதினதெல்லாம் அவரவர் சொன்னதும் அதற்கு உத்தாரமெழுதினதும். ஆனால் எனக்குத் தோற்றுகிற ஞாயமென்ன வென்றால் துரையவர்கள் மனதிலே ஐம்பது வருஷமாய் பண்ணப்பட்ட துரைத்தனக்காரர் நாளையிலே ஆகாத காரியம் பிரான்சு இராசாவைப் போலொத்தவர் புதுச்சேரி குவர்னதோராயிருந்த முசியே லெனுவாருக்கு எழுதி அதற்குக் கூட இந்த கோவிலை இடித்துப்போட இது தமிழர் ராச்சியமான படியினாலே அவர்களொருத்தர் இருக்கத்தக்கதில்லை யென்று மூன்று தரம் எழுதியனுப்பிவிட்ட காரியத்தைத் தனது துரைத்தனத்திலே தானிடிப்பித்து அதனாலே ஒரு பளுமில்லாமற்படிக்கு பண்ணிப்போட்டே னென்றால் சீர்மையிலே இராசாவினிடத்திலே தன்னைப் போலொத்த சமஸ்தரும் திறாணி பரணுமில்லை யென்று பேருண்டாகவேணு மென்றும், இதை சம்பாவுலு கோவில் பாதிரிகள் லீவுறு பண்ணி இராச்சியமெல்லாம் பேருண்டாக்குவார்கள் என்று யோசனை பண்ணி இந்த சமயம் பார்த்து இடித்தாலும் செய்ய வேண்டியதெப்படி என்றால், மகாநாட்டார் கலகத்திலே போனவர்கள் போகயிருக்கிற பத்து பேரையும் அழைப்பித்து எங்களுக்கும், இங்கிலீஷ்காரருக்கும் சண்டை மூண்ட அவர்கள் வந்து ஊரைச்சுற்றிக் கொண்டிருக்கிற வேளையிலே இப்போ கோயிலென்றும் கோட்டை யென்றும் பார்த்துத் தீராது.
எந்தெந்த வேளைக்கு எதையெதை இடிக்க வேணுமோ அப்படிச் செய்ய வேண்டிய வேளை வந்திருக்கிறபடியினாலே உங்கள் கோவிலை எங்களுக்கு வைக்கக்கூடாது. அவ்விடத்தில் சம்பாவுலு கோவில் இருக்கிறது. ஒன்று சரியாய் கட்டி அதன் பேரிலே பீரங்கி ஏத்த வேண்டியிருக்கிறது. ஏதாகிலும் அதற்குத்தக்கதாய் ஒருபோக்கு சொல்லி உங்கள் கோவில் சாமான்களை யெல்லாம் எடுத்துப்போங்கள். அப்புறம் கலகம் தீர்ந்தாப்போலே இடம் விடுகிறோம். உங்கள் கோவில் கட்டுகிறபடிக்குக் கட்டுங்கள் என்றொரு வார்த்தை எச்சரித்து அவ்விடத்திலே அக்கோவில் சாமான்களை கோவில்காரரெடுத்துக் கொண்டு போகச்சொல்லி அப்பால் இடித்துப் போடுகிறது நியாயம். அப்படி ஒருதரம் சொல்லி கோவில் சாமான்களை எடுக்காமல் போனால் அப்பால் நாங்கள் ஒருதரம் சொல்லிப் போட்டோம், நீங்கயெடுத்தாலும் சரி, எடா விட்டாலும் சரியென்று இடிக்கிறது துரைத்தனம் பண்ணுகிறதற்கு அழகு. பட்டணத்திலே துரைத்தனம் பண்ணுகிறவன் சுவாமி எப்படி பாரபக்ஷமில்லாமல் லோகத்தில் சகல ஜனங்களையும் ஜீவத்துகளையும் ரக்ஷிக்கிறாரோ அப்படி பட்டணத்திற்கு துரையா யிருக்கிறவனும் அந்தப் பட்டண ஜனங்களுக்கு சுவாமி ஸ்தானமான படியினாலே மேலெழுதப்பட்ட படிக்கு நடப்பிக்கிறது ராஜரீகத்திற்கு அழகு. அது இல்லாமல் உள்ளே பாரபக்ஷமா யிருந்தாலும் வெளிக்கு, மேலே எழுதப்பட்ட படிக்கு நடப்பிக்க வேண்டியது. சுவாமி மேரை தப்பு நடந்தால் ஒருத்தராலே இருக்குதா? உத்தாரம் சொல்லுகிறதற்கு அப்படிப் போலே இந்தப் பட்டணத்திற்கு அவர் நியாயத்துடன் நடத்த வேண்டியது. அவர் நியாயம் தப்பி நடத்தினால் இதற்கு உத்தாரம் சொல்ல வேண்டியதும் செய்ய வேண்டியதும் முண்டாயென்று எனக்குத் தோணுது.
அப்பால் இற்றைநாள் கோவிலை இடித்துச் சரிகட்டி போட்டார்களென்று கபுறு சொல்லி வந்து சகல ஜனங்களும் தாபந்தப்பட்டார்கள். இந்தப்படிக்கு ஐம்பது வருஷமில்லாத காரியம் இன்றைய தினம் நடந்தேறிப்போனது. ஞானி மார்க்கத்திங்குப் பார்த்தால் நளபோகஞ் சிலா போகமென்கிற ஞாயம் எத்தனை நாள் நடக்க வேணுமோ அத்தனை நாள் நடந்து எப்படி போகவேணுமோ அப்படி போச்சென்று எனக்குத் தோன்றியபடிக்கு எழுதினேன்…
ஆனாலிந்தக் கோவிலை இடிக்கிறதற்கு முசியே துப்ளேக்சு பெண்சாதியும் முசியே துப்ளேக்சும் துரைத்தனத்திற்கு வந்தநாள் முதற்கொண்டு யெத்தினமாய் இருந்து அதற்குத்தக்கதாக நடத்திக்கொண்டு வந்தாலும் இடித்தாலத்தைத் தொட்டு வூர்கலையும், அப்பால் கும்பினீயார் ஏனப்படி வேலை செய்தானென்று நேரஸ்தனமாக்குவார்கள். எவன் தலையிலேயாகிலும் போட்டு செய்வோமென்று உள்ள கனசமாயிருந்ததை முசியே துப்ளேக்ஸ் குவர்னதோருடைய அச்சமற்றவர் களிரண்டு பேர் ஆரென்றால் முசியே துய்ளேக்சுனுடைய பெண்சாதி கால் பங்கும், முசியே பரதி முக்கால் பங்குமாயிருந்து பெரியவருடைய அச்சம் தீர்த்து கோவிலை நிர்தாக்ஷண்மாய் இரண்டாம் பேரரியாமல் இடித்துப்போட்டது.
முசியே பரதி மகா துணிச்சல்காரனான படியினாலே என்ன. இந்த கோவிலை இடித்தாப்போல அதைத் தொட்டு இந்த தமிழர் சிறிது காரியம் நடத்துவார்களென்று யோசனை பண்ணினாய். தஞ்சாவூர் ராசரீகத்தின் கீழே முழுதமிழர் ராச்சியமாயிருக்கிற விடத்திலே நான் நடத்திப் போடவில்லையா? அதினாலே வரப்பட்ட காரியத்திற்கு நான் பேசிக்கொள்கிறேன். அல்லாமல் இரண்டாம் பேருக்கறிக்கை இல்லாமல் சீக்கிரமத்துக்குப் படிப்படியாய் செய்துப் போட்டால் அவர்களும் நாலு காரியத்தையும் யோசனை பண்ணி சும்மாயிருந்து விடுவார்கள் என்று எப்படி தைரியம் சொல்ல வேணுமோ அப்படி தைரியம் சொல்லி இடிப்பித்தான். முசியே பரதி, மதாம், துப்ளேக்சும் அப்படித்தானென்றும் நடக்கத்தக்க தில்லையென்று அவன் எப்போதும் தூண்டுகோலாயிருந்து தூண்டிக் கொண்டிருந்தாலும் அதற்கு சேனே வயணங்கள் முன் அன்னபூரணய்யன் முதலான பேர் சொன்ன சம்மதியும் நாகப்பட்டிணத்திலே ஒலாந்துக்காரர் நடுவார் கோவிலை இடித்ததும் காரைக்காலிலே கோவிலிலே யிருந்த விக்ரகத்தைக்கூட இடித்து அகற்றிப் போட்டு கோட்டையாய் கட்டிக்கொண்டு சம்மதி சொன்னாலும் பெண்சாதியானதே யென்று சேர்த்து வைத்துப் பார்ப்பார். அப்படி வைத்துப் பார்த்தபடிக்கு தாராளமாய் இடிக்கத்தக்கதாக தைரியம் கொடுத்து நடத்தியவன் முசியே பரதி. எனக்கு நன்றாய் தெரிந்திருக்கிறது. பிரபுவினுடைய தைரியம் எனக்கு நன்றாய் தெரிந்திருக்கிற படியினாலே எழுதினேன்.
ஆனால் இந்த கோவில் காலம் வந்து இடிக்கப்பட்டாலும் இடிப்பித்த பெரிய மனுஷருக்கு யாதொரு துக்கம் காண்பியாமல் விருதாவாய் ஒருக்காலும் போகத்தக்கதில்லை.
1748 செப்டம்பர் 11 ஆவணி 30 புதவாரம்
… இந்த பவுன்சு பறச்சேரி பார்த்தாப்போலே போகிறபோது ஓடையிலே பதுங்கியிருந்த அந்த இங்கிலீஷ்காரர் பவுன்சு ஆயிரம் துப்பாக்கிகளையும் ஏகவேளையிலே பளாளவென்று நெரித்தார்கள். ஏகவேளையிலே நெரிப்பதற்குள் இவர்கள் பவுன்சிலே காயம்பட்டதும், செத்ததும் சற்றேறக்குறைய நூறுபேருக்கு உண்டு… காயப்பட்டு ஊரே எடுத்துக்கொண்டு வந்தவர்கள் முசியே பராதிக்கு தலையிலே சாவு காயம்.
(தொடரும்)