Skip to content
Home » ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #9 – பெத்ரோ கனகராய முதலியார் – ஆனந்தரங்கரின் சத்ரு!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #9 – பெத்ரோ கனகராய முதலியார் – ஆனந்தரங்கரின் சத்ரு!

பெத்ரோ கனகராய முதலியார்

புதுச்சேரி பிரெஞ்சு ஆளுநர்களிடம் தலைமை துபாசியாக, இருபத்தொரு வருஷமும் ஐந்து மாதமும் சில்லறை நாளும் பதவியில் இருந்தவர் பெத்ரோ கனகராய முதலியார். அதிகாரமிக்கவராக வலம் வந்தவர். மிகுந்த செல்வந்தர். கிறிஸ்துவராக மதம் மாறியவர்.

இவரது ஒரே மகன் வெல்வேந்திர முதலி தனது 21ஆம் வயதிலேயே 22.10.1739இல் காலமானார். அப்போது அவரது முழு ஜாதகம் குறித்தும் ஆராய்ந்து எழுதினார் ஆனந்தரங்கர். தனது மகனின் நினைவாக புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் கிறிஸ்துவ ஆலயம் ஒன்றை எழுப்பினார் கனகராயர். (தற்போது புனித அந்திரேயா ஆலயம் என்று அழைக்கப்படுகிறது). இதற்கான விழா ஊரைக் கூட்டி விருந்து உபசாரங்களுடன் 30.11.1745இல் தடபுடலாக நடந்தது. இதுபற்றி விரிவாக விவரிக்கும் ஆனந்தரங்கர் இதிலே தனக்குத் தென்படும் குறைகளையும் பதிவு செய்திருக்கிறார்.

கனகராய முதலியாருக்குக் கீழ்தான் ஆனந்தரங்கர் உதவி துபாஷியாக வேலை பார்த்தார். ஆனால் இவர்களிருவருக்கும் அப்படியொரு ஏழாம் பொருத்தம். தனக்கும் அவருக்குமான துவேஷத்தை நாட்குறிப்பின் பல இடங்களில் குறிப்பிடும் ஆனந்தரங்கர், அரசாங்கத்தில் தனக்கு ஆதரவாக இருந்த அதிகாரிகள் சொந்த நாட்டிற்குப் புறப்பட்டபோது, மெத்தவும் விசாரமடைந்தார்! பிரெஞ்சு அதிகாரிகளும் கூட இவரது நிலை கண்டு வருந்தி இருக்கின்றனர்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த கனகராய முதலியார் இறந்துவிடுவாரென்றும் அந்த இடத்திற்கு ஆனந்தரங்கர் வந்துவிடுவார் என்பதும் ஒருகட்டத்தில் அனைவரது நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அதற்குப் பிறகும் 10 ஆண்டுகாலம் உயிரோடு இருந்தார் கனகராய முதலியார்.

கனகராயர் தனக்குப் பிரான்சு அரசாங்கம் கொடுத்தப் பதக்கத்தை அணிந்துகொண்டு தந்தப் பல்லக்கில் மிடுக்குடன் உலா வந்ததைச் சொல்லும் ஆனந்தரங்கர், முன்னதாகவே இந்தப் பட்டம் தனக்கு வழங்கப்படவில்லை என்று சிலமாதங்களுக்கு முன்பு அவர் முறுக்கிக் கொண்டுச் சென்றதையும் மறக்காமல் குறிப்பிடுகிறார்.

1746 பிப்ரவரி 13 மாசி 5 ஆதிவாரம், கனகராய முதலியார் மறைந்தார். அவரது இறுதி ஊர்வலம் குறித்தும் விவரிக்கும் ஆனந்தரங்கர், ‘ஒரு மண்டலாதிபதி சவாரி புறப்பட்டால் எப்படி அலங்கரிப்புப் பண்ணி புறப்படுகிறார்களோ அந்தப்படிக்கெல்லாம் அலங்கரிப்புப் பண்ணி’ இருந்ததாகப் பதிவு செய்கிறார்.

பெத்ரோ கனகராய முதலியார் மறைந்தாலும் அவர் மீதான துவேஷம் ஆனந்தரங்கருக்குள் எப்போதும் இருந்துகொண்டுதான் இருந்தது. ‘நமக்குச் சத்துருவாயிருந்த கனகராய முதலியார் விழுந்து போனார்’ என்று அவர் எழுதுவது எப்போது தெரியுமா? கனகராய முதலியார் மறைந்து மிகச்சரியாக 12 ஆண்டுகள் கழித்து!

பெத்ரோ கனகராயர் குறித்த ஆனந்தரங்கரின் நினைவுக் குறிப்புகள்:

வெள்ளிக்கிழமை 22-ந்தேதி மாசி முதல் தேதி மார்ச்சு 1737

மறுநாள் காலை முசே சீஞோர் வீட்டுக்குப் போன விதத்திலே முசே சீஞோர் சொன்ன சேதி … ஒருமாதமாய் கனகராய முதலியார் நீரிழிவு கண்டு வமட்டையாய் வீட்டிலே படுத்துக்கொண்டு இருக்கிறானே. அவன் இனிமேல் கடைத்தேற மாட்டான், என்றும் அந்த இடம் வரும் அதுக்குச் சந்தேகமில்லை. ஆனால் நாலுநாள் முன்னது பின்னது என்று சொல்லி.. அதின் பிற்பாடு துலோராம் என்னை அழைத்து ரங்கப்பன் பேத்துருக்கு எப்படி யிருக்கிறது அந்த நீர் வியாதி யென்று கேட்டான். அந்த வியாதி லக்ஷணம் சுவஸ்தப்படுகிறதில்லை. நாலுநாள் சவுகரியம்போல் யிருக்கு. மறுபடியும் காணும் அப்படித்தான் இப்போ யிருக்கிற சாடையென்று சொன்னேன். அந்த இடம் உனக்கு வரும் அதுக்குச் சந்தேகமில்லை. நாமும் துரையும் அப்படித்தான் என்று யோசனை பண்ணியிருக்கிறோம் என்றும் சுவாமியும் அப்படித்தானே தயவு பண்ணியிருக்கிறார். கெட்டியாய் அந்தப்படி நடக்கும் என்று சொன்னார். அதுக்கு நான் உபசாரஞ் சொல்லி அனுப்பிவிச்சுக் கொண்டு வந்தனன்.

1737 புரட்டாசி மாசம் 21 ஒக்தோபர் மாசம் 4ந்தேதி வெள்ளிக்கிழமை

காலமே ஒன்பது மணிக்கு பொழுது விடிந்த சாமத்துக்கு சீமையாகிய பிராஞ்சுக்குப் போகிற பிலோரி என்கிற கப்பலின் பேரில் கப்பித்தான் முசே தொடுதோலேன், இந்தக் கப்பலின் பேரிலே சின்ன துரைத்தனம் பண்ணின முசே தொலோர்ழவும், முசே லெனுவார் துமெலியேரும் இவ்விடத்திலே சக்கிரத்தேராயிருந்த முசே பெபுரியேரும் அவர் பெண்சாதியும் சிலங்கின் பேரிலேறி பெரிய கப்பலின் போய்ச்சேர்ந்தார்கள்.

…ஆனால் அவருக்கும் முசே திமிலியேருக்கும் ரங்கப்பன் வீடு எப்படி போகிறது என்றும் நமக்குப் பிற்பாடு ரங்கப்பனுக்கு ஆதரவு இல்லையே கனகராய முதலிக்கும் ரங்கப்பனுக்கும் துவேஷமாச்சுதே என்றும் துரைத்தனம் பண்ணுகிறவன் விவேகமில்லாமல் கனகராய முதலி வழியிலே நிற்கிறவனாச்சுதே ரங்கப்பனுக்கு எப்படி என்கிற விசாரத்தைத் தொட்டு முசே எலியாசுடனே யெங்களுக்கு போகிறத்துக்கு மிகுந்த ஆசை யிருந்தாலும் ரங்கப்பனை விட்டுப் போகிறதற்கு மனம் வரவில்லை. ஆனாலும் உம்மால் ஆனமாத்திரம் சகாயம் அவனுக்குச் செய்ய வேணுமென்று வார்த்தைப்பாடு வாங்கிக் கொண்டு போனார்கள்.

1738 ஏப்ரல் 20 சித்திரை 11 ஞாயிற்றுக்கிழமை

முசியே சீஞோர் என்னை அழைச்சு ரங்கப்பா நான் சீனத்துக்குப் போகிறேன் … மென்று சொன்னபோது நாராசம் ஏத்தினாபோலே இருந்தது. அது எனக்கு மெத்தவும் விசாரம். இத்தனை விசாரம் தமது நிமித்தியமேனென்றால், முசே லெனுவார் போன பிற்பாடு எனக்கும் கனகராய முதலியாருக்கும் இருக்கும் துவேஷத்தினாலே அவர் என் பேரில் எப்போதும் தயவாய் நான் சொல்லுகிற காரியத்தை அங்கீகரிச்சுக் கேட்கிறதும் அது நடக்க வேண்டிய காரியமிப்படி என்று ஆலோசனை சொல்லுகிறது மல்லாமல் என் விசேஷம் துரையினிடத்திலே ஆலோசனைக்காரரிடத்திலே பிரஸ்தாபமானால் என்னை மேம்பாடாய் சொல்லுகிறது. …

1738 செப்தம்பர் 28 புரட்டாசி 16 ஆதிவாரம்

கனகராய முதலி தனக்கு வந்த பிராஞ்சு பதக்கம் சட்டமாயிருக்கிற பொன்னாலே பண்ணியிருக்கிற மொதாலியு வென்கிற முத்திரை கொடுப்பார்களென்று மிகுந்த சந்தோஷத்துடனே கோட்டையைப் போனார். இத்தனை நாள் கொடாதபடியினாலே முகத்தை சுளுக்கிக் கொண்டு வீட்டுக்குப் போனார்.

1738 அக்தோபர் 17 அற்பிசி 4 வெள்ளிக்கிழமை

கோட்டை நடந்ததில் காலமே சாமத்துக்கு கனகராய முதலியாருக்கு கும்பனியார் அனுப்பியிருந்த மெதாலியே என்கிறதை கொடுத்தார்கள். கோன்சேல் வீட்டிலே எல்லாரும் கூடிக்கொடுக்கச்சே பதினோரு பீரங்கிபோட்டு தங்கப் பல்லக்கும் கொடுத்தார்கள். அந்த முத்திரையிலே முன்பக்கத்திலே சீமையிலிருந்து வருகிற பத்தாக்கு எல்லாம் போட்டிருக்கிற சுரூபத்தின்படி எழுத்தும் போட்டிருக்கிறது. அது கொடுக்கச்சே துரை சொன்னது கொம்பனீயார் நீ பட்ட பிரயாசைக்காகக் கொடுக்கப்பட்டது என்று சொல்லிக் கொடுத்தார். அந்தப்படி நடந்த பிற்பாடு தந்தப் பல்லக்கின் பேரிலே ஏறிக்கொண்டு மேளதாள சம்பிரமத்துடனே பிள்ளைவீட்டு தெருவாலே வந்து குளத்து பக்கமாய் திரும்பி வீட்டுக்குப் போனான்… ஆனால் இந்த முத்திரையிலே மெத்த சிரத்தையில்லாவிட்டாலும் சீமையிலிருந்து வந்ததான படியினாலே கனகராய முதலியாருக்கும் அவருடைய பந்துக்களும் சொல்லி மிகுதியான சந்தோஷமாயிருக்கும் வெளியேயிருக்கிற சனங்களுக்கும் இந்த முத்திரையினுடைய சேதி தெரியாதபடியினாலே அப்படித்தானே மெத்த மேன்பாடான தென்று தானே எண்ணுவார்கள்.

1738 நவம்பர் 6 அற்பிசி 24 வியாழக்கிழமை

முசே துலாரன் இருந்துகொண்டு உனக்கு கனகராய முதலிக்கு இத்தினத்திலே பவழம் வருவானென்று கேட்க அதற்கு நானிருந்து கொண்டு அவருக்கு நாங்கள் எத்தனை மனதுவர நடந்தாலும் அவர்முன் முசே எபேர் நாளையிலே எங்கள் பேரிலே அனியாயமாய் மாச்சரியம் அடைந்துவச்சு அநேகம் காரியங்கள் நடப்பிச்சாரே அதை நீங்களும் அறிந்து இருப்பீர்களே. அந்த வயிரம் இப்போதும் பாராட்டி வருகிறாரென்று சொன்னேன். அதற்கு அவரும் மெய்தானென்று சொன்னார். (இந்த இடத்தில் பவழம், வயிரம் எனக்குறிப்பிடப்படுவது, பகை எனும் பொருளில் எடுத்துக் கொள்ளலாம் -ஆர்.)

1739 அக்டோபர் 22 ஐப்பசி 9 வியாழக்கிழமை

இந்நாள் புதுச்சேரி பெரிய துபாஷி கனகராய முதலி குமாரன் வெல்வேந்திர முதலி என்கிறவன் நாளது இராத்திரி பதினஞ்சு நாழிகைக்குமேல் பதினாறு நாழிகைக்குள்ளாக மரணத்தை அடைஞ்சான். இவனுடைய ஜன்ம தினம் விளம்பி ஆவணி 31 திங்கட் கிழமை இராத்திரி 23 நாழிகைக்கு மேல்தாமச வேளையில் கடக லக்கினத்தில் செனனமான படியினாலே, மரணமான நாள் மட்டுக்கும் அவன் லோகத்துக்குள்ளே இருந்த வயசு எத்தனை யென்றால் வருஷம் 21 மாசம் 1 நாள் 9. இவன் பிறக்கச்சே சனன காலத்திலே கேது திசையான படியினாலே இவன் சனனமானவுடனே தகப்பனுக்கு உத்தியோகம் போனதும்மான ஆனி வந்ததும் ஊரைவிட்டு அப்புறம் குடிபோனதும் பின்னை கிலேசத்துக்கு என்ன காரியம் நடக்க வேணுமோ அந்தப்படி யெல்லாம் கிலேசம் நடந்தது. அந்தக் கேது திசை போய் சுக்கிர திசை வருங்காலம் இவனுக்கு நடக்க வேண்டிய சுக்கிர திசையினுடைய நன்மையான அதிசயங்கள் எல்லாம் இவன் சிறுபிள்ளையான படியினாலே இந்த பலன் எல்லாம் இவன் தகப்பன் கனகராய முதலிக்கு நடந்தது. அந்தச் சுக்கிரன் லக்ன கேந்திரத்திலே ஒருத்தனாக சுபக்கிரகங்கள் பார்க்கப்பட்டிருந்த படியினாலே இவனுக்கு இந்த யோகம் வருகிறதற்கு முன்னமேதானே பனவூர் நாராயண சோசியர் சொல்லி இருந்தபடிக்கு சுக்கிரன் சுபீக்ஷத்துடனே லக்ன கேந்திரத்திலே இருக்கிற படியினாலே சத்துருக்களெல்லாம் நாசப்பட்டுப்போய் இந்தப் பட்டணத்துக்கு அமுலுக்களெல்லாம் இவன் கைக்குள்ளே அடங்கி மகா திரவியவந்தனாய் மகாயோகத்தை அனுபவிப்பான் என்றும் இந்தச் சுக்கிரதிசை போய் சூரிய திசை வருங்காலம் சரீரத்துக்கு நாசம் வந்து திரவியத்துக்கும் சேதம் வந்து ரொம்பவும் கஷ்டப்படுவார் என்று சொன்னார். அவர் அப்போது சொல்லியிருந்தபடிக்குத் தானே சுக்கிரதிசை எல்லாம் ஆய் சூரியதிசை வருவதென்னச்சே சாதகனும் மரணத்தை அடைஞ்சான். .இனிமேல் அவர்களுக்குக் கஷ்டமான காலம் வருகிறதற்கு எதுக்காரணம் என்னவென்றால் மறுநாள் வெள்ளிக்கிழமை 21க்கு அற்பிசி 10க்கு மூணாஞ்சாமத்துக்கு மேல் இவனைக் கொண்டுபோய் கல்லறையில் அடக்கம்பண்ணச்சே இவன் போட்டிருந்த சரிகைப் பூப் போட்ட அங்கி இரண்டு கிசம் சகலாத்தும் காதிலே ஒரு முத்துக்கடுக்கன் கையிலே ஒருமோதிரம் இதுகளுடனே ஒரு பெட்டியிலே வச்சு அடக்கம் பண்ணிப்போட்டார்கள். அதின் பிற்பாடு வீட்டுக்கு வந்த பிற்பாடு கனகராய முதலி பெண்சாதி முநதாணி வெந்து போனதினாலேயும் பின்னையும் இரண்டு நாழிகை பொறுத்து அவர்கள் வீட்டுக்கு மேலண்டை வீடு பத்திக்கொண்டு அதிலே நூறு வராகன் மட்டுக்கும் சேதப்பட்டுப்போன படியினாலேயும் இப்படியெல்லாம் நடந்தது.

அவனைக் கொண்டு போகையில் கல்லறையிலே அடக்கிப்போட்டு வந்த மாத்திரத்திலே இப்படியாக சமீபமாக வந்தபடியினாலே கனகராய முதலிக்கு இனிமேல் கஷ்டகாலத்திற்கு ஆரம்பமென்று பட்டணத்திலுள்ள சனங்களெல்லோரும் சொல்லிக்கொள்ளுகிறார்கள்.

ஆனால், இவன் தகப்பனிடத்துக்குள்ளே குருசீஷ மரியாதையாய் நடந்துகொண்ட படியினாலேயும் வேறே பிள்ளையில்லாமல் ஒரு பிள்ளை ஆனபடியினாலேயும் கைக்கு ஒத்திகையான பிள்ளையாயிருந்து விழுந்து போனபடியினாலும் அவரவர் தாபந்தப்பட்டார்கள்.

1745 நவம்பர் 30 கார்த்திகை 19 செவ்வாய்க்கிழமை

இந்தப் பட்டணத்திலே நடந்த அதிசயமென்னவென்றால், ஒழுகரைக்குக் கீழண்டையிலே ரெட்டியார் பாளையத்திலே கனகராயர் முதலியார் ஒரு பாதிரி கோவில் கட்டிவைத்து அந்தக் கோவிலிலே சிலைகள் ஸ்தாபிதம் பண்ணினார்கள். இது நிமித்தியம் பட்டணத்திலே உண்டாகிய பல பட்டடை பிராமணர், வெள்ளாழர், கோமுட்டிகள், செட்டி வர்த்தகர், கம்மாளர், நாயக்கர், கோளர், வாணியர் பின்னும் பல சாதிகளாயிருக்கப்பட்ட சகலமான பேருக்கெல்லாம் விருந்துகள் சொல்லிச் சகலமான பேருக்கும் ஒழுகரையிலே விருந்து பண்ணி வைத்தார்கள்.

விருந்து பண்ணின சம்பிரமமெப்படி யென்றால், சத்திரங்களிலே பிராமணரை விட்டுச் சமையல் பண்ணுவித்தும், தோட்டங்களிலே பின்னையும் இருக்கப்பட்ட வெள்ளாழர் அகம்படையர் வீடுகளிலேயும் சாப்பாடு பண்ணுவித்து, அவரவர்க்குத் திட்டமாய்த்தானே சாப்பாடு காரியமெல்லாம் விசாரித்து வெள்ளைக்காரருக்கெல்லா மிவ்விடத்திலே தீனிகள் சமைத்துக்கொண்டுபோய் வெள்ளைக்காரருக்கெல்லாம் மேசை போடுவித்துத் திட்டமாய்த்தானே விசாரித்தார்கள்.

அந்த விருந்துக்கு மொறட்டாண்டி சாவடியிலேயிருந்து துரையவர்கள் முசே துய்ளெக்சு அவர் பெண்சாதி மற்றுமுள்ள ஆலோசனைக்காரர் எல்லாருமாய்க் கூட வந்திருந்து விருந்துகள் சாப்பிட்டுச் சாயங்காலம் மட்டுக்கும் இருந்து சாயங்காலம் ஐந்து மணிக்குப் புறப்பட்டு மறுபடியும் மொறட்டாண்டி சாவடிக்குப் போய்விட்டார்கள். இவ்விடத்திலே யிருந்துபோன சனங்களும் எல்லாரும் சாப்பிட்டுவிட்டுச் சாயங்காலம் புறப்பட்டு வந்துவிட்டார்கள்.

ஆனால் அவர் எத்தனம் பண்ணின காரியங்களிலேயும் தாட்சியில்லை. என்ன சம்பாதித்தும் என்ன செலவுபண்ணியும் சோபிதமாய், களையாய், சிறப்பாயிருக்கவில்லை. அதேனென்றால் அவரவர் மார்க்கத்துக்கடுத்த நியாயங்களை நடப்பித்தால் அந்த மார்க்கத்தின்படிக்கு அது இயற்கையாய் காணும். ஒரு மார்க்கத்துக்குள்ளே யிருந்து கொண்டு தமிழ் மார்க்கத்தின்படியே நடப்பிக்கவேணுமென்கிறதாய்த் தமிழ் மார்க்கத்திலே யிருக்கப்பட்ட பேரையெல்லாம் அழைப்பித்து இப்படி நடப்பித்த படியினாலே எகத்தாளிக்கிடமாகிக் கண்டவன் எல்லாம் கண்டபடிக்கெல்லாம் சொல்லிக் கொண்டார்கள். அவர்கள கோவிலுக்கடுத்த நியாயம் அவர்கள் வேதத்துக்கடுத்த மார்க்கமும் நடப்பிக்க வேணுமென்றால் வெள்ளைக்காரரும் கிறிஸ்துவரும் பறையரும் அந்த வேதத்துக்கடுத்தவர்கள் மாத்திரம் போய் சாப்பிட வேண்டியது. அவருடைய பிரபலத்துக்கும், பிரதிஷ்டைக்கும் அப்படி நடப்பித்தாலும் அதிகாலேயும் ஈனமாய்த்தானே சொல்லிக்கொள்ளுவார்கள். ஆனபடியினாலே எவனெவன் சாதிக்கு எப்படியோ அந்த நியாயத்தின்படிக்கு எத்தனை பிரபலமாய் செய்தாலும்…சொல்லிக்கொள்ளுவார்கள். ஒரு குலத்திலே பிறந்து மறு வேதத்தையடுத்த … மார்க்கத்தை ஆஸ்த்த பேருக்கெல்லாம் இந்தப்படிக்கு…

1746 பிப்ரவரி 13 மாசி 5 ஆதிவாரம்

புதுச்சேரி பட்டணத்திலே நடந்த சேதி யென்னவென்றால் நேற்று சனிவாரம் ராத்திரி பொழுது விடிய இரண்டு நாழிகைக்குள்ளாகக் காலம் பண்ணிப்போன கனகராய முதலியாரை அலங்காரம் பண்ணிப் பல்லக்கின் பேரிலே வைத்து முசே தும்மா சீர்மையிலிருந்து அனுப்பின சரிகைக் கச்சையையும் கட்டி, பின்னையும் அநேகவிதமான அலங்காரம் பண்ணி, ஒரு மண்டலாதிபதி சவாரி புறப்பட்டால் எப்படி அலங்கரிப்புப் பண்ணி புறப்படுகிறார்களோ அந்தப்படிக்கெல்லாம் அலங்கரிப்புப் பண்ணி இற்றைநாள் சாயங்காலம் ஏழுமணிக்கு வீடுவிட்டுப் பிரேதத்தை பல்லக்கின் பேரிலே வைத்துக்கொண்டு போய் குதிரைக் கொத்தளம் போக,

அதன் மேற்கே நாற்பது சொலுதாதுகள் முழு துப்பாக்கிப் பிடித்துக்கொண்டு போகிற கட்டாய்ப் பிடித்துக் கொண்டுபோக சாவு தம்புரு அடித்துக்கொண்டு போக, பாதிரி கோவிலிலே வெள்ளைக்காரர் பிள்ளைகள் படிக்கிறார்களே அவர்கள் இருபாரிசமும் நாற்பது பிள்ளைகள் மாத்திரம் போக, கப்புஸ் கோவில் பாதிரிமார், சம்பாக் கோவில் பாதிரிமார் அனைவரும் ஏகமாய்க் கூடிக்கொண்டு, அவர்கள் நியாயப்படிக்குப் படித்துக் கொண்டுபோக, மற்றச் சம்பிரம வீணை வாத்தியங்கள் என்ன உண்டோ அதுகளெல்லாம் வாத்தியம் பண்ணிக்கொண்டு போக, சகல சம்பிரமத்துடனே எடுத்துப் போகையிலே கோன்சேல்காரர் அவரவர்கள் வீட்டுப் பெண்டுகள் பிள்ளைகளும், புதுச்சேரி பட்டணத்திலேயுள்ள வெள்ளைக்காரிச்சிகள், வெள்ளைக்காரர், பெரிய மனுஷர் முதலாகிய பேர் மற்றப்படி தமிழர்கள், துலுக்கர், மற்றுமுண்டான சனங்களெல்லாம் ஸ்திரீகள்கூட புருஷாள் வந்து பார்த்தவர்களில்லை. அங்கலாய்த்தவர்களில்லை.

இந்தப்படிக்கு எல்லாம் சகலஜனங்களும் தாபந்தப்படத்தக்கதாக வீடுவிட்டுப் புறப்பட்டுக் கல்லறைக்குக் கொண்டு போகையிலே துரையவர்களும் அம்மாளவர்களும், கோக்சேலியர் அவர்களில் சிறிது பேரும் காளத்தீஸ்வரன் கோவிலண்டையில் வருகிறபோது அங்கிருந்த துரையவர்களும் மற்றப்பேர் அவ்விடத்திலே யிருந்த பேரும் பிரேதம் சமீபத்தவுடனே எழுந்திருந்து பிரேதம் தாங்கள் இருக்கிறதற்கு நேராக வருகையிலே கிறிஸ்துவ வேத நியாயப்படிக்குக் கையிலே மெழுகு திரி வாங்கிக் கொண்டு பிரேதம் அப்பால் நடந்தாற்போலே மெழுகு திரிகளைக் கொடுத்துவிட்டுப் பல்லக்கு ஏறிக்கொண்டு அப்பால் வீட்டிற்குப் போய்விட்டார்கள். அப்புறம் கல்லறைக்குப் போனவுடனே அவர் குமாரனை அடக்கியிருக்கிற கோரிக்குள்ளே இருவரையும் கூடவைத்தவுடனே வந்த துப்பாக்கிக்காரர் ஒரு வரிசை துப்பாக்கி தீர்ந்தனாற் போலே கோட்டையிலே பதினோரு பீரங்கி சுட்டார்கள்.

அந்தப்படிக்கு அடக்கமான பிறகு அவரவர் வீடுகளுக்குப் போனார்கள். அவர் தம்பி அங்கலாய்த்ததை காகிதத்தில் எழுதி முடியாது. அவர்கள் வீடு வந்து சேர்ந்த பிறகு சிறிது பேர்களிந்த பேர் எல்லாம் அனுப்பிவித்துக் கொண்டு போனார்கள்.

இவர் உத்தியோகம் பண்ணுகிறதற்கு முன், குரோதி புரட்டாசி 3 வெள்ளிக்கிழமை துவாதசி மகா நக்ஷத்திரம் உத்தியோகம் கொடுத்தது. இற்றைநாள் உத்தியோகத்திலே யிருக்கிறபோது மரணத்தை அடைந்தது இந்த மட்டுக்கும் இருபத்தொரு வருஷமும் ஐந்து மாதமும் சில்லரை நாளும் ஆகிற்று. இந்தப்படிக்கு வெகுநாள் ஒரே ரீதியாய் நடந்தது ஒருத்தருமில்லை.

1758 வருசம், பிப்ரேயி மாசம், தேதி 13. மாசி மாசம் தேதி 5 சோமவாரம்

…முன் குரோதன வருசம் மாசி மாசம் 4 தேதி (1746 பிப்ரவரி 12) நமக்குச் சத்துருவாயிருந்த கனகராய முதலியார் விழுந்து போனார். …

(தொடரும்)

 

படம்: புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள புனித ஆந்திரே ஆலய வளாகத்தில் இருக்கும் பெத்ரோ கனகராயரின் மார்ளவு சிலை.

பகிர:
nv-author-image

கோ. செங்குட்டுவன்

விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து வசித்து வருபவர். ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்று அமைப்புகளில் பங்கேற்று இயங்கி வருபவர். 'சமணர் கழுவேற்றம்', 'கூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள்' உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு : ko.senguttuvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *