Skip to content
Home » ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #12 – ஆளுநரின் மாமியார் மரணம்; 330 முறை முழங்கிய பீரங்கி!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #12 – ஆளுநரின் மாமியார் மரணம்; 330 முறை முழங்கிய பீரங்கி!

330 முறை முழங்கிய பீரங்கி!

புதுச்சேரியில் நிகழ்ந்தக் கொண்டாட்டங்கள், அதன் வர்ணனைகள் குறித்த ஆனந்தரங்கரின் பதிவுகளைக் கடந்த பதிவில் பார்த்தோம்.

கொண்டாட்டங்களில் மட்டும் அல்ல துக்க நிகழ்வுகளிலும் பங்கேற்றார் ஆனந்தரங்கர். சற்றே எட்டயிருந்து நிகழ்வுகளை உற்றுக்கவனிக்கிறார். பதிவும் செய்கிறார்.

சின்னதுரை முசே லெகுவின் பெண்சாதி, ஆளுநரின் மாமியார் மதாம் அல்பேர் ஆகியோரின் இறுதி ஊர்வலங்கள் குறித்த ஆனந்தரங்கரின் பதிவுகள் குறிப்பிடத்தக்கன.

மதாம் அல்பேரின் மறைவை, ‘பேரிழவு’ எனக்குறிப்பிடும் ஆனந்தரங்கர், அன்றைய தினம் 330 முறை பீரங்கிகள் சுடப்பட்டதையும் குறிப்பிடுகிறார். இந்தச் சாவுச் சடங்குகளில் பங்கேற்றவர்கள் அணிந்திருந்த கருப்பு ஆடைகள், இதிலும் குறிப்பாக துரை, சின்னதுரை ஆகியோர் அணிந்திருந்த தொப்பிகள், (அவை சீமையில் இருந்து வந்தவை. அதில் இரண்டு பக்கமும் விழுந்தத் தொங்கல்களையும் இவர் கவனித்திருக்கிறார்) அவர்கள் கைகளிலே பிடித்துச்சென்ற மெழுகுத்திரிகள், படித்துச் சென்ற வேதம், இசைக்கப்பட்ட இசைக்கருவி எனச் சகலமானவற்றையும் கவனித்திருக்கிறார் ஆனந்தரங்கர்.

ஓரிடத்தில், நிமிடத்தைக் குறிக்கும் minute எனும் ஆங்கில வார்த்தையை ‘மினிது’ என அப்படியே தமிழில் சொல்லியிருப்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

1746 சூலை 18 ஆனி 6 சோமவாரம்

இற்றைநாள் காலத்தாலே சின்னதுரையாயிருக்கிற முசே லெகு பெண்சாதி ஏழு மணிக்கு நோயாளிக்கிடங்கிலே மரணமடைந்தவளை வீட்டுக்கு எடுத்து வந்து அப்புறம் அவர்கள் சாதி ஆசாரத்தின்படிக்கு வாசற்படிக்கெல்லாம் கறுப்புக் கட்டி பிரேதத்தின் பேரிலே போத்திச்சுற்றி மெழுகுத்திரி கொளுத்தி வைத்தார்கள். அப்பால் பெரியதுரை பெண்சாதி முதலாகிய சமஸ்தான வெள்ளைக்காரரும் போய் விசாரித்து வந்தார்கள்.

அப்பால் சாயங்காலம் எடுக்கும்போது பெரியதுரை முசே லபோர்தோனே சமஸ்தான பேரும் வந்தார்கள். நூறு சொல்தாதுகள் இரண்டு பாரிசமும் வரிசையாக நின்றார்கள். மூன்றுமணி துவக்கி இரண்டு மினிட்டுக்கு ஒவ்வொரு பீரங்கி விழுக்காடு கரையிலேயும், கடலின் பேரிலேயும், கொமாந்தான் கப்பலிலேயும் அரை கொடி போட்டுச் சுட்டுவந்தார்கள். அப்பால் நாலு கோன்சேல்காரர் பிரேதத்தை யெடுத்துப் போகிற பெட்டியைக் கறுப்புப் பட்டுச்சுருட்டிலே கிழித்த துண்டு மார்பிலே பட்டைபோலே முடிந்து போட்டுக்கொண்டு தொட்டுக்கொண்டு போனார்கள்.

அந்தப்பெட்டியை சொல்தாதுகள் பிறகே குவர்னதோர் முதலாகிய சமஸ்தான வெள்ளைக்காரரும் வெள்ளைக்காரிகளும் பிரேதத்தின் பிறகே போனார்கள். பிறகே புருஷனாக இருக்கிற முசே லெகு மாத்திரம் கூடப்போகவில்லை. குமாரன் போனான். இந்தப்படி வீட்டிலேயிருந்து கப்சு கோயிலுக்கு மட்டுக்கும் கூடப்போய் அவ்விடத்திலே செய்ய வேண்டிய சடங்கெல்லாஞ் செய்து அடக்கின பிற்பாடு துப்பாக்கி இரண்டு வரிசை தீர்ந்த பிற்பாடு ஒவ்வொரு துப்பாக்கியாய்ச் சுட்டார்கள். அப்பால் கோட்டையிலே பதினைந்து பீரங்கியும், முசே லபோர்தொனே இஸ்தாதுரு எட்டுக்கப்பலும் ஏக வேளையிலே பதினைந்து பீரங்கி விழுக்காடு சுட்டார்கள்.

முன் பிரேதத்தின் பிறகே போனவர்கள் குவர்னதோர் முதலான சமஸ்தான பேரும் மறுபடி வரும்போது பல்லக்கின் பேரிலே அவரவர் ஏறிக்கொண்டு வந்து முசே லெகுவுக்கு உபசாரம் சொல்லிவிட்டு அவரவர் வீட்டுக்குப் போனார்கள். நாங்களும் அந்தப்படிக்குப் போய் காண்பித்துக் கொண்டு வீட்டுக்குப் போனோம்.

1749 சூலை 18 ஆடி 6 சுக்கிரவாரம்

இற்றைநாள் காலையில் முசியே துப்ளேக்சு கொவர்னதோர் ஜனரால் அவர்களுடைய மாமியார் மதாம் அல்பேர் நேற்று பதினோரு மணிக்கு செத்தவளை இந்தநாள் காலையில் ஏழரை மணிக்குப் புதைக்கிறதற்கு திட்டம் பண்ணியிருந்த படியினாலே நானும் போக வேண்டியதான படியினாலே ஆறரை மணிக்குச் சாப்பிட்டுப் போனேன். அப்போ துரையும் மதாம் அல்பேர் வீட்டுக்கு வந்தார். அங்கே நடந்த வயணம்:

ஆறுமணி யடிச்சாப்போலே அரைக்கொடி போட்டு மினுதுக்கு ஒரு பீரங்கி கோட்டையிலேயும் ஒரு பீரங்கி துறையிலே இருந்த கப்பலிலேயும் மினுதுக்கு இரண்டு பீரங்கி விழுக்காடு கோயிலிலே கொண்டுபோய் புதைத்துத் தீர எட்டே முக்கால் மணி பிடித்தது. அந்த மட்டுக்கும் பீரங்கிப் போட்டார்கள். ஏகத்துக்கும் இரண்டே முக்கால் மணிக்கும் கப்பலிலேயும் கரையிலேயும் சற்றேரக்குறைய முன்னூற்று முப்பது பீரங்கி சுட்டார்கள். அப்புறம் புதைத்துத் தீர்த்து வெளிப்புறபடச்சே இரண்டு வரிசை சொல்தாதுகள் ஏந்தின துப்பாக்கிகள் சுட்டு ஒரு வரிசை கோவிலைப் பார்த்து ஒவ்வொருத்தனாக சுட்ட பிற்பாடு கோட்டையிலே இருபத்தொரு பீரங்கி விழுக்காடும் சுட்டார்கள்.

அப்பால் மதாம் அல்பேரை எடுத்துக்கொண்டு வரச்சே நடந்த வயணம்: மதாம் அல்பேர் வீடு துவங்கி மேலண்டையிலே முசியே போய்லோ வீட்டு மட்டுக்கும் இரண்டு பார்சமும் சொல்தாதுகள் வரிசையாயிருந்து அதிலேயிருக்கிற ஒபிசியேமார்கள் கப்பித்தான்மார்கள் பயோராகளுக்கெல்லாம் பனிரெண்டு முழத்திலே கிழித்து பங்கோப வீதம் போட்டாற்போலே சட்டையின் பேரிலே முடித்துப் போட்டுக் கொண்டு ஒபிசியேல்மார் கப்பித்தான்மார்கள் சார்ந்துமார் இட்டிக்காருக்கு கூட ஒவ்வொரு முழமும் கறுப்பு முடிந்துப் போட்டு அப்பாலந்த தம்பூரு பேரிலே நவ்வாலு முழ கருப்பு கிழுவு போட்டு அதன் பேரிலே பொத்பொத்தென்று அடித்துவர சொல்தாதுகள் துப்பாக்கிகள் சாவுக்கு பிடிக்கிற சட்டமாய் அவர்கள் ஜாதி வழக்கப்படி பின் பாரிசமாய் முகவனத்தை சாய்த்து அப்பாலிந்த பிரேதம் போட்டிருக்கிற பெட்டியை எட்டுபேர் சாந்துமார் எடுக்கிறது.

அதன்பேரிலே போட்டிருக்கிற கருப்பு தாப்பித்தா நாலு முந்தாணியும் நாலு பேர் கொசெல்லியேரிடத்துக்கு பாத்திரவான்களாயிருக்கிற முசியே தெப்போரேன், முசிய கொர்னேத், முசியே சேன்சவோர், முசியே மினுசு, முசியே லெகு, இந்தபடிக்கு எல்லாம் கறுப்பு உடுத்திக்கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு எல்லாம் யக்ரோவீத சாடையாய் கருப்பு பிக்கோன் சுருட்டியிலே கிழித்த துண்டு மார்பட்டை போலே போட்டுக் கொண்டதுமல்லாமல் பிரேதத்தை சுத்திக்கொண்டு வருகிறார்கள். கொமிசிலேர்களும் சமர்ஷாம்களும் கருப்புடுத்திக் கொண்டு மார்பட்டை கருப்பு சுருட்டி துண்டு போட்டுக் கொண்டு வருகிறதுமல்லாமல் இவர்களெல்லாம் கையிலே ஒரு வெள்ளை மெழுகுத் திரி கொளுத்தி பிடித்துக் கொண்டு வருகிறதும், மற்றபடி ஒரு கம்பெனி உத்தியோகஸ்தர் வெள்ளைக்காரர் எல்லோரும் அப்பால் வூரிலே வரத்தக்க வெள்ளைக்காரர் வீட்டு பெண்டுகள் சமஸ்தான பேரும் கருப்பு உடுத்திக் கொண்டு வந்தார்கள்.

துரையவர்கள் சின்னதுரை மேற்படியார் குமாரன், முசியே அல்பேர் இவர்கள் கருப்பு உடுத்திக்கொண்டு வந்ததுமல்லாமல் தொப்பியிலே மெலிசு சீமையிலே யிருந்து வருகிறது, அது இரண்டு தொங்கல் விழத்தக்கதாக கட்டின தொப்பி போட்டுக் கொண்டதல்லாமல் கையினுட் சட்டை புறமாமிலே ஒரு வெள்ளைத் துண்டு போட்டுக்கொள்ளுகிற வாடிக்கை படிக்கு அது சடை ரெண்டு பற்மாமிலேயும் வெள்ளை போட்டிருக்க முழு கருப்பு பல்லக்கு சமஸ்தமும் கருப்பு போட்டுக் கொண்டு புறப்பட்டார்கள்.

அப்பால் மதாம் துய்ளேக்சு, மதாம் தொத்தேல் இவர்கள் இரண்டு பேர்கள், பெண்கள் பிள்ளைகள், பெண்களுடைய புருஷன்மார்க் இவர்களெல்லாம் கருப்பு உடுத்திக் கொள்கிறது எழுதக் கவையில்லை. இதையல்லாமல் துரையவர்கள் பல்லக்குகாரர், சேவகர், துபாசி கணக்கப்பிள்ளைகள் உட்பட தலைப்பாகையும் நடுகட்டும் கருப்பு ஆக்கிக் கொண்டார்கள். இந்தபடி பேரிழவு கொண்டாடி சன்னியாசிமார்கள் அவர்கள் ஜாதி வழக்கப்படிக்கு சிலுவை பாடுபட்ட சொரூப முதலானது கொண்டு எல்லாரும் மெழுகுவர்த்தி கையிலே பிடித்துக் கொண்டு பாருக்கு பிறகே பிரேதத்துக்கு முன்னே அவர்கள் ஜாதி வழக்கப்படிக்கு அவர்கள் மதத்தின் கட்டுப்படிக்கும் அவர்கள் படித்துக்கொண்டு போக பிரேதத்தின் பிறகே முசியே அல்பேர் துரை, சின்னதுரை முதலான கோன்சில்லியேர்கள் அப்பால் துரை பெண்சாதி முதலான அதற்கு தக்கலாய்க்கான பெண்டுகள் அப்பால் கமாஷா முகன் பெண்டுகள் தந்தாப்போலே புறப்பட்டு முசியே கில்லியார் வீட்டு தெரு வாசற்படியின் பேரிலே புறப்பட்டு முசியே தெலாராம் மதாம் கொடுத்துவிட வீட்டண்டையிலே புறப்பட்டு கப்புச்சு கோவிலிலே கொண்டுபோய் புதைத்து ஆன பிற்பாடு எல்லோரும் மதாம் அல்பேர் வீட்டுக்குப் போய் இழவுக்கு வந்தவர்கள் எல்லாரும் ஆண்பிள்ளைகள் பெண்பிள்ளைகள் சமஸ்தான பேர்களும் அனுப்பிவித்துக் கொண்டு போன பிற்பாடு துரையும் முசியே அல்பேரையும் தன் பெண்சாதியையும் தன் மச்சினிச்சியையும் அனுப்பிவித்துக் கொண்டு இரண்டடி நடந்த உடனே அல்பேரும் இவர்களுடனே பல்லக்கு ஏறிக்கொண்டு துரை வீட்டுக்கு வந்து துரை, சின்னதுரை முதலான பேர்கூட எப்போதும் காலையில் எட்டுமணிக்கு ரொட்டி வெண்ணை கபே குடிக்கிற வாடிக்கை படிக்கு குடித்து அவரவர்கள் உத்தியோகத்துக்குப் போனார்கள்.

(தொடரும்)

பகிர:
கோ. செங்குட்டுவன்

கோ. செங்குட்டுவன்

விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து வசித்து வருபவர். ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்று அமைப்புகளில் பங்கேற்று இயங்கி வருபவர். 'சமணர் கழுவேற்றம்', 'கூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள்' உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு : ko.senguttuvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *