பன்மொழிப் புலமைவாய்ந்த ஆனந்தரங்கர், மிகுந்த குறள் பற்றாளரும்கூட. தனது நாட்குறிப்பின் பல இடங்களில் குறளை மேற்கோள்காட்டி எழுதியிருக்கிறார்.
திருவள்ளுவரின் குறள் முதன்முதலில் 1812இல்தான் அச்சுப்பதிப்பினைக் கண்டது. ஆனால் அதற்கும் முன்பே சுவடிகள் மூலமாக மக்கள் மத்தியில் குறள் பரவியிருந்தது என்பதற்கு ஆனந்தரங்கரின் நாட்குறிப்பே சாட்சி. இவர் மட்டும் அல்ல, இவரைப் போன்றே பலரும் குறள் மீது பற்றுள்ளவர்களாக, ஆழ்ந்தப் புலமையுள்ளவர்களாக அக்காலத்தே இருந்து இருக்கின்றனர்.
இதற்கு ஆகச்சிறந்த உதாரணமாக இருந்தவர், ஆனந்தரங்கரின் நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ள சென்னப்பட்டணம் சித்துக்காட்சி சின்னதம்பி முதலியாராவார்.
1749 நொவம்பர் 16 கார்த்திகை 5 ஆதிவாரம்
பொம்மையாபாளையத்து வடவண்டை குளத்துக்கு அப்புரம் நம்முடைய அக்ரகாரத்துக்கு தென்புறம் சென்னப்பட்டணம் சித்துகாட்டு சின்னதம்பி முதலியார் எதிரே டோலி பிறகே வர இவர் முன்னே நடந்து வந்தார். என்னைக் கண்ட உடனே கும்பிட்டு தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதில்லார் தோன்றலின் தோன்றாமை நன்று என்கிற திருவள்ளுவர் குறளைச் சொல்லி ‘சுவாமி உம்முடைய ஜென்மம் திருவள்ளுவர் குறள் சொன்னபடிக்கு பிறப்பித்தார். ஆனபடியினாலே நீங்களெடுத்த ஜென்மமே அல்லாமல் மற்ற பேர் பிறந்ததில் பிரயோஜனமில்லை என்று சொல்லி ஆயிரம் இரண்டாயிரம் காத வழி மட்டும் பாதுஷா முதலானவர்கள் கூட உங்களை இன்னாரென்று சொரூபத்தை அறியாமல் போனாலும் ஆனந்தரங்கப்பிள்ளை என்கிற பெயரைக் கேட்டு சந்தோஷம்படும்படி நம்முடைய தமிழருக்குள்ளே கீர்த்தி சம்பாதித்தீரே, இதைவிட லோகத்துக்குள்ளே சம்பாத்தியம் பண்ண வேண்டிய வஸ்து ஒன்றுமில்லை’ என்று சொன்னார்.
அப்போ நான் நீங்கள் சின்னதம்பி முதலியாரோ என்று கேட்டேன். ஆம் என்று சொன்னார். அதன் பேரிலே உயர்வு சகிப்பார் உத்தியோகத்திலே இருந்தாலும் வித்தையிடத்திலே உங்கள் மனது தேர்ந்து இருக்கிற சம்மதியும் திருவள்ளுவர் குறள் ஆயிரத்து முன்னூத்தி முப்பதும் பாடம் பண்ணி அதனுடைய அனுபவ படியே உத்திரம் பிரதி உத்திரம் சொல்லுக்குச் சொல் உதாகரித்து சொல்லுகிறதும் கோபம் மென்கிறதை விட்டு சாந்தத்துடனே எப்போதும் விதவாம் ஸ்ருடனே பரிக்ஷித்துக் கொண்டு சகல ஜனங்களுக்கும் மித்துரத்துவமாய் நடந்து கொள்ளுகிற சேதி முதலானதுகளெல்லாம் நாளது வரைக்கும் கேட்டுக் கொண்டு வந்ததற்கு பார்க்க வேண்டுமென்கிற அபிலாஷை ஒன்று வாதித்துக் கொண்டிருந்ததற்கு இன்றைய தினம் மனதுக்கு சமாதானமான மாயிற்றென்று சொன்னேன். அவரும் ரொம்ப தோத்திரமாய் உபசாரத்தைச் சொன்னார்.
1750 மாயு வையாசி 9 அங்காரக வாரம்
இன்றைய தினம் துரையவர்களுக்கு பிறான்சு றாசா இங்கிறேசுக்காறர்களை செயித்துக்கு அனுப்பின செம்லூயி முத்திரையும் சிகப்பு அகலப்பட்டையும் உடைய சந்தோஷமோ அத்தனை சந்தோஷப்பட்டார்கள். அந்த சந்தோஷத்தை எத்தனையென்று எழுதப் போகிறேன் யென்னாலே எழுதி முடியாது. அடுத்தது காட்டும் பளிங்கு அதுபோல நெஞ்சிற் கடுத்தது காட்டும் முகம் யென்று திருவள்ளுவர் சொன்ன நீதியிது வரையிலே தப்பிதம் வராமல் வந்த படியினாலேயும்…
(தொடரும்)