ஜோசப் பிரான்சுவா துப்ளேக்ஸ் (Joseph Francois Dupleix). 1697இல் வணிகர் குடும்பத்தில் பிறந்தவர். 1720 இல் பிரெஞ்சிந்திய வணிகராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக புதுச்சேரி கவுன்சிலராகவும் இருந்தார். 1731இல் சந்திரநாகூர் திரெக்தராக நியமிக்கப்பட்ட துப்ளேக்ஸ் 14.01.1742இல் அசுபதி நக்ஷத்திரம் மகர லக்னத்தில் புதுச்சேரி ஆளுநராகப் பதவியேற்றார்.
ஆனந்தரங்கரின் வாழ்க்கையில் ஏற்றமும் இறக்கமும் துய்ப்ளேக்சை சார்ந்தே இருந்தது. அதனால்தான் நாட்குறிப்பின் பெரும்பாலான பக்கங்களை துப்ளேக்ஸ் ஆக்கிரமித்துள்ளார். ஆளுநருடன் மிகவும் நெருக்கமாக இருந்த பிள்ளை, பல நேரங்களில் அவர் மனசுக்கு சந்தோஷப்படும்படியான வார்த்தைகளைச் சொல்லி இருக்கிறார்.
‘உம்முடைய புகழ் இந்திய ராச்சியம் மட்டுமல்ல: ஈரோப்பா ராச்சியமெல்லாம் பரவி இருக்கிறது. இப்படியான பிள்ளை எங்கள் குலத்தில் பிறக்கவில்லையே என மற்றவர்கள் ஏங்குகிறார்கள். இதையெல்லாம் கேட்டு பிரான்சு ராசா உனக்கு மந்திரி பதவி கொடுக்க நினைத்திருக்கிறார்’ என்றெல்லாம் துரையை வானளாவப் புகழ்கிறார் ஆனந்தரங்கப் பிள்ளை.
ஒருமுறை பார்ப்பான் ஒருவர், ஆளுநரைப் புகழ்ந்து பாடிய தகவலை துய்ப்ளேக்சிடம் ஆனந்தரங்கர் சொல்ல, அந்தப் பாடகரை அழைத்து வந்து பாடச்சொல்லி இருக்கிறார்கள்.
சென்னப்பட்டணத்தைப் பிடித்த சந்தோஷத்தில் இருந்த பிரெஞ்சு ஆளுநர், வீட்டுக்கு வீடு சர்க்கரை கொடுக்கவும் வீடுகள் தோறும் விளக்கேற்றி வைத்துக் கொண்டாடவும் உத்தரவிட்டார். அந்த நேரத்தில், ‘ரங்கப்பா உனக்கு என்ன வேண்டும் கேள்’ என்று சொல்ல, சிறையில் இருப்வர்களை விடுவிக்க வேண்டும், மக்களைப் பெரிதும் பாதித்துள்ள வெற்றிலைப் புகையிலை விலைகளைக் குறைக்க வேண்டும் போன்ற பொதுநலன் சார்ந்த விஷயங்களைச் சொல்லி சாதித்திருக்கிறார் ஆனந்தரங்கப் பிள்ளை.
ஆளுநர் துப்ளேக்ஸ் குறித்து ஆனந்தரங்கரின் குறிப்புகளில் இருந்து:
1742 ஜனவரி 14 தை 4 சனிவாரம்
காலமே பத்து மணிக்கு வங்காளத்திலேயிருந்து ஒரு கப்பல் ஓடிவந்து வச்சு பிடிச்சு 9 பீரங்கி போட்டான். அந்த கப்பலே வந்த சேதி என்னவென்றால் இந்த கப்பலுடனே கூட நாலு கப்பல் வங்காளத்திலே புறப்பட்டோம். ஒரு கப்பலே துரை வருகிறார். அந்த மூணு கப்பலும் இன்றைக்கு காணுமோ நாளைக்கு காணுமோ என்று சொன்னான்.
இந்தநாள் சாயங்காலம் நாலு மணிக்கு அந்த மூணு கப்பலும் கண்டுது. அதிலே ஒரு கப்பலே முசே துப்ளேக்ஸ் அவர்கள் இவ்விடத்துக்கு துரைத்தனத்துக்கு வந்த படியினாலே அமரால் போட்டுக்கொண்டு வந்தார். வரச்சே தானே துறையிலேயிருந்த கப்பல்காரர் எல்லாம் அவரவர் பீரங்கி போட்டு மரியாதை பண்ணினார்கள்.
பிற்பாடு கோட்டைக்கு 21 பீரங்கி போட்டார். பதிலுக்கு கோட்டையிலே 21 பீரங்கி போட்டார்கள். கட்டுமரத்திலே கடுதாசி ஐந்தரை மணிக்கு வந்தது. அந்தக் கடுதாசியிலே கடல் உரமாயிருக்கிறது காலமே இறங்குகிறோம் என்று சேதி வந்தது. இதுக்குள்ளே இவ்விடத்திலே முஸ்தீது பண்ணி கடலோரத்திலேயிருந்து துரை வீடு மட்டுக்கும் இரண்டு புறமும் வாழை மரமும் தென்ன மட்டையும் நட்டு முஸ்தித்தா யிருந்தார்கள்.
அந்த மட்டிலேயிருந்து காலமே ஆதிவார நாள் காலமே ஆறு மணிக்கு அசுபதி நக்ஷத்திரம் மகர லக்னத்தில் முசே திப்பிளேக்சு அவர்களும் அவருடைய பெண்சாதியும் மற்றுமுள்ள சனங்களுடனே இறங்கினார். துறையிலே இறங்கின உடனே கோட்டையிலே 21 பீரங்கி போட்டார்கள்.
கடலோரத்திலே தானே இவ்விடத்தில் இருக்கப்பட்ட துரையின் ஆலோசனைக்காரர் மற்றுமுண்டான பெரிய மனுஷர் அனைவரும் போய் கண்டார்கள். அங்கேயிருந்து கால்நடையாய் இருபுறமும் பாருவரத்தக்கதாக கோட்டைக்குள்ளே போய் கோவிலிலே பூசை கேட்டவுடனே பாருவச்சு மூணுதரம் பாரு தீர்த்தார்கள். பிற்பாடு எட்டு மணிக்கு கோட்டையிலே யிருந்து வீட்டுக்கு வந்தார் வரச்சேயும் நடந்துதானே வந்தார். கோட்டை விட்டு புறப்பட்டு வரச்சே 21 பீரங்கியும் வீட்டுக்குள்ளே வந்து நுழைஞ்ச உடனே 21 பீரங்கியும் போட்டார்கள்.
அந்த மட்டிலே நட்டுமுட்டுக்காரர் நாடக சாலையாளுடனே சகல சம்பிரத்துடனேயும் வந்து சுபதினத்தில் வீட்டிலே வந்து துரைத்தனத்திற்கு உட்கார்ந்தார்.
1746 செப்தம்பர் 16 புரட்டாசி 4 சுக்கிரவாரம்
… அதற்கு நான் சொன்னது: உம்முடைய யோகம் பலத்த யோகம். உமக்கு மகத்தாகிய கீர்த்தி வருகிறது. ஆனபடியினாலே சென்னப்பட்டணத்துச் சண்டையிலே மனுஷர் சேதமும் வராமல் கோட்டையும் திரணம் பிராயமாய் கைவசமாகுது. இது முன்னிலையாய் இந்த இந்திய ராச்சியத்துக்குள்ளே டில்லி பரியந்திரமிருக்கிற துலுக்கர், ரசபுத்திரர், க்ஷத்திரியர், கன்னடியர், தெலுங்கர் முதலாகிய சாதிகளிலே யிருக்கப்பட்ட பாட்சாக்கள், ராசாக்கள், கில்லேதார், நபாபு முதலாகிய பாளையக்காரர் பெரிய மனுஷர்கள், எத்தனை எத்தனை பேருண்டோ அவர்களெல்லாரும் உம்முடைய சாதியை வீரத்துவமுள்ள சாதியென்றும், ராசா அதிக பராக்கிரமசாலி யென்றும் உம்முடைய புத்தியும் உம்முடைய சவுகரியத்துக்குச் சமானமான பேர்களிந்த உலகத்திலே யில்லை யென்றும் உம்முடைய புத்தியும் தைரியமும் உம்மைப் போலே மர்மியும் பிடித்த பத்து சாதிக்கிறதும், உம்முடைய நேர்பும் உம்முடைய தந்திரமும் ஒருத்தருக்கும் வராதென்றும், இப்போதே சமஸ்தான பேர்களும் கொண்டாடுகிறார்கள். இனிமேல் ராத்திரியும் பகலும் இதுவே தியானமாய் எண்ணிக் கொண்டு பாட்டாய்ப் பாடப் போகிறார்களென்றும், உம்முடைய கீர்த்தி இந்திய ராச்சியமும் எரோப்பா ராச்சியமும் எங்கும் பரவி உம்முடைய வமிசத்திலே யிருக்கப்பட்டவர்கள் எல்லாம் இப்படிப்பட்ட பிள்ளை ஒரு பிள்ளை பிறந்ததினாலே நம்முடைய குலத்துக்கெல்லாம் ராச்சியமெங்கும் கீர்த்தி சாசுவதமா யென்றால் என்றைக்கும் இருக்கத்தக்கதாக உண்டாக்கினான் என்று சொல்லத்தக்கதாகவும் மற்றப் பேர் எல்லாம் இப்படிப்பட்ட பிள்ளை நம்முடைய வமிசத்திலே பிறவாமல் போச்சுதென்று சொல்லிக் கொள்ளவும் பிரான்சு ராஜா கேட்டு இவர் புத்திக்கும் இவர் தைரியத்துக்கும் நம்முடைய ராச்சியத்துக்கு மந்திரி இடம் கொடுத்து வையாதே போனோம். இனிமேல் அப்படிச் செய்கிறோம். துருக்கி முதலான எரோப்பா ராச்சியமும் கட்டி ராச்சியத்துக் கெல்லாம் ஒரு ராசாவாய் இருக்க வேணுமென்று யோசனை பண்ணுவாரென்றும், பின்னையும் அநேகவிதமாய் தோற்றினபடி எல்லாம் சொன்னதின் பேரிலே துரைக்குச் சந்தோஷம் சொல்லி முடியாத சந்தோஷம் வந்து….
1746 செப்தம்பர் 19 புரட்டாசி 7 சோமவாரம்
நீர் உம்முடைய சாதிக்கு எல்லாம் தலை இறக்கப்பண்ணிவித்தீர். அதுவுமல்லாமல் டில்லி பரியந்தம் உம்முடைய சாதியினுடைய கீர்த்தியை விளங்க வைத்து ராத்திரியும் பகலும் பராக்கிரம சவுகரியத்துக்குள்ளே பிரான்சுக்காரருக்குச் சமானமில்லை என்று ஸ்வுத்தியம் பண்ணத்தக்கதாக ஒருத்தர் உண்டாகி உம்முடைய வமிசத்துக்கெல்லாம் கீர்த்தி கொண்டு வந்தீர் என்று சொன்னதற்கு,
‘ரங்கப்பா, நான் அப்போது தானே சொல்லவில்லையா இப்போது நகைக்கிறவர்கள் எல்லாரும் இனிமேல் அழுவார்கள். இப்போது அழுகிறவர்களினிமேல் நகைப்பார்கள். கடைசி நகைப்பாங்கட்டும் கவைக்கு வருகிறது என்று சொன்னேனே? இப்போது சரிப்பட்டதோ இல்லையோ’ வென்று கேட்டார்.
அதற்கு நான் அய்யா அப்போது தானே சொல்லவில்லையா உம்முடைய மனதிலே யிருக்கிற கோரிக்கை என்ன நினைத்துக் கொண்டிருக்கீரோ அந்தப் படிக்கு நடக்கும். உமக்கு ஈரோப்பா ராச்சியமெல்லாம் கொண்டாடவும் இந்தியா ராச்சியமெல்லாம் கொண்டாடுவார்கள். இது முன்னிலையாய் பிரான்சு ராசா உமக்கு மன்னவன் பட்டமுங் கொடுத்து மரெஷால் தெ பிரான்சு என்கிறவரும் என்று நான் சொல்லவில்லையா? வென்று கேட்டதற்கு, மெய்தானேன்று சொன்னார்.
நீங்கள் கோபித்துக் கொள்ளாவிட்டால் இன்னுமொரு வார்த்தை சொல்லுகிறேன் என்று சொன்னேன். சும்மா சொல்லு என்றார்.
போன வருஷம் செப்தம்பர் மாசத்திலே ஒரு பார்ப்பான் வந்து சொன்னான். இப்போது இவ்விடத்திற்குக் கப்பல் வராமல் இப்படி யிருக்கிறதே, வருகிற வருஷம் இந்த மாதத்திலே சென்னப்பட்டணம், தேவனாம்பட்டணம், கூடலூரை வாங்குவார். இந்த துரைக்கு மகத்தான கீர்த்தி வருமென்று சொன்னாரென்று சொன்னேன். அதற்கு பிராமணனா அப்படி சொன்னவன் என்று கேட்டார். ஆமய்யா வென்று சொன்னேன். பிராமணர்களினுடைய புத்திக்குச் சமானமாய் பின்னை ஒருத்தர் சாதி புத்தியும் சொல்லப் போகாது என்று சொன்னார். அது மெய்தான் இதல்லாமல் சீமையிலிருந்து ராசா இந்த சேதிகேட்டு வெகு சந்தோஷப்பட்டு மரெஷால் இவர் என்றும் சொன்னாரென்று சொன்னதற்கு மரெஷால் என்கிற பெயர் எப்படி இந்தப் பார்ப்பானுக்குத் தெரியும் என்று கேட்டார். அந்தப் பார்ப்பான் சொன்னது: இந்தத் துரை மகா யோகசாலி. இந்தப் பட்டணங்கள் வாங்கினதின் பேரிலே இவர்கள் சாதி ராசா கேட்டு சந்தோஷப்பட்டு வெகு அதிசயமான வெகுமானமும் பண்ணி பெரிய உத்தியோகம் கொடுத்து தம்முடைய கிட்ட வைத்துக்கொள்வார் என்றும் அங்கே மகா பிரபலமாய் நடக்கும் என்றும் சொன்னார். அதின் பேரிலே நான் மரொஷல் என்கிற பேர் ஆகவேணுமென்று யோசனை பண்ணி மரொஷல் தெ பிரான்சு என்னு பேரிட்டேனென்று சொன்னேன். அதற்குச் சந்தோஷமாய் நகைத்துக் கொண்டு முயித்துமேர் முயித்து ஓபிரகாத்து என்று சொன்னார்.
அதன் பேரிலே உம்முடைய கீர்த்தி எல்லாம் பாட்டாய் பாடுகிறார்களென்றும் சொன்னேன். அதேது யார் பாடினது? பாடிவித்தவர்கள் யார்? என்று கேட்டார். அவரவர் சந்தோஷமாய் அப்படி பாடுகிறார்கள் என்று சொன்னேன். அதற்குத் துரை இருந்து கொண்டு நீ பாடிவித்து ஆகவேணுமென்று சொல்லி உன் சாடைப் பார்த்தால் சங்கீதம் பாடத் தெரியும் போலே இருக்கிறது. நீ இங்கே சங்கீதம் பாடுகிற வேளையிலே வந்தால் அங்கே நீ கேட்கிற சாடை இப்போது எனக்குத் தெரிந்ததென்று சொன்னார்.
எனக்கு அதெல்லாம் தெரியாது என்று சொன்னேன். அது எனக்குச் சொல்லத் தேவையில்லை. உனக்கு நன்றாய்த் தெரியுமென்று சொன்னார். அப்பால் அதிலே என்ன பாடியிருக்கிற தென்றால், கப்பல் வராமல் சத்துருக்கள் வந்து மேலாடியிருக்கிற நீ பராக்கிரமம் காண்பித்ததும் உம்முடைய தைரியமும் உம்முடைய பேர் சொன்னால் இங்கிலீசுக்காரர் எல்லாம் கொத்துக் குடல் கூட வெளியிலே விழப் பயப்படுகிறதும் மூன்று வருஷத்திலே கட்டுகிற கடற்கரைப் பாரி சம்மதிகளும் கொத்தளத்தையும் ஆறு மாஸத்திலே கட்டிவித்ததும் அப்பால் சண்டைக் கப்பல்களை துரத்திவிட்டு அவர்களெல்லாம் சின்னாபின்னமாய் முறிந்து ஒரு கப்பலும் மூழ்கிப்போய் மற்றக் கப்பல்களும் காயங்கள் பட்டு நீருவாகம் பண்ணமாட்டாமல் ஓடிப் போனார்கள் என்றும் பின்னையும் உம்முடைய கீர்த்தியைப் பார்சா முதல் ஈரோப்பா ராச்சிய மட்டுக்கும் கொண்டாடுகிறார்கள் என்றும் இப்படியாகப் பின்னையும் அனேகவிதமாய்ப் பாடியிருக்கிறது. அந்தப்படிக்கு நான் கேள்விப்பட்டேன் என்று சொன்னதற்கு இதெல்லாம் நீ சொல்லிப் பாடிவிட்டதாய்ப் பின்னையும் ஒருத்தருக்கும் தெரியாதென்று சொல்லிப் போட்டு உள்ளேபோய்ப் பெண்சாதியுடனே சொல்லி அந்தப் பாட்டையும் பாடகனையும் அழைப்பிக்கச் சொல்லி நாராயணப் பிள்ளையுடனே சொல்லியனுப்பினார்கள்.
அதின் பேரிலே கஸ்தூரிரங்கனையும் வெங்கட்ட நாராயணப்பய்யனையும் அழைப்பித்து நாராயணப் பிள்ளையை அழைத்து வந்தார்களென்று சொன்னவிடத்திலே அம்மாளிப்போது தூங்குகிறாள் நாளைக்கு ஆகுது என்று சொன்னான். அதின் பேரிலே நாராயணப் பிள்ளை சொன்னது:
துரை என்னைக் கேட்டார். துரை யிருந்துகொண்டு சொன்னதற்கு நான் சொன்னது ஆரோ பிராமணன் ஒருத்தன் வந்து ரங்கப்பிள்ளையண்டையிலே பாடினான் என்று ஊரிலே அவரவர்கள் பாடம் பண்ணுகிறார்களென்றும் சேதி கேட்டேன் என்று சொன்னதின் பேரிலே துரை சந்தோஷத்தை ஒரு விதத்திலே சொல்லி முடியாது. அம்மாளுடைய சந்தோஷமும் அப்படித்தான்.
அதற்கு முன்னே தமிழோ வடுகோவென்று கேட்டார்கள். அதின் பேரிலே ரங்கப்பிள்ளையைக் கேட்க வேண்டுமென்று சொன்னேன் என்று கேட்டார். அப்படி தமிழிலே சொன்னால் ஆற்காடு, மைசூர், கொல்கொண்டா பரியந்திரம் அவர்கள் பாடார்கள். தமிழிலே பாட வேணுமானால் ஏழெட்டு நாளையிலே முஸ்தீது பண்ணிப் பாடச் சொல்வோமென்று சொல்லிப் போகச் சொல்லி நான் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் படுத்துக்கொள்ளப் போகச்சே மறுபடியும் அம்மாளும், துரையும் அந்தப் பாடகரை அழைக்கச் சொன்னார் என்று சேவகர் வந்து பாடகரை அழைத்துக் கொண்டு போனார்கள்.
அதன் பேரிலே அவர்களுக்கு வெள்ளைக்காரருடன் சாடைக்குத் தக்கதாக எப்படி உண்டோ அந்த வயணமெல்லாம் தெரியச் சொல்லி யனுப்பிவித்தோம். அதன் பேரிலே அவர்கள் துரையவர்கள் வீட்டுக்குப் போனவுடனே அவ்விடத்திலே துரையவர்களும் அம்மாளும் துரை மச்சினியும் பேதுரூசுப் பெண்சாதியும் இவர்கள் நாலுபேருமிருந்து கொண்டு இந்தப் பாடகருக்கு ரத்தினக் கம்பளி போட்டு உட்காரச் சொல்லி உத்தாரங் கொடுத்து பிற்பாடு பாடச் சொன்னார்களாம். அதன் பேரிலே இவர்கள் இந்த சம்பிரமங்களெல்லாம் பாடச்சே அதிலே பாடியிருக்கிற வயணமெல்லாம் தமிழிலே அவரவர் வெள்ளைக்காரிச்சியின் இரண்டு மூன்று பேரும் அம்மாளுக்கும் வியாரப்படுத்தச் சொல்லத்தக்கதாக அதை அவர்கள் துரை அவர்களுக்குச் சொல்லத்தக்கதாக எல்லோரும் சந்தோஷப்பட்டு…
1746 செப்தம்பர் 22 புரட்டாசி 10 வியாழக்கிழமை
… மகா சந்தோஷத்துடனே சென்னப்பட்டணம் நேற்றைய தினம் மத்தியானம் பனிரெண்டு மணிக்கு கோட்டையிலே வெள்ளை நிசானும் போட்டு கும்பினி உத்தியோகஸ்தர் மற்றப்பேரும் பெரியதுரை சின்னதுரை முதலாகிய பேரையும் காவல் பண்ணிவித்து நம்முடையவர்கள் சமஸ்தான பேரும் சென்னப்பட்டணம் கோட்டையைத் தாக்கினார்கள் என்கிறதாய்ச் சொல்லி பின்னையும் சிறிது உத்தரவுகள் சொல்ல வரச்சே அவர்களுடைய சந்தோஷப் பூரிப்பிலே நின்று போகக்கூடாமல் சகல துரைத்தனக்காரருடனே கூட கோட்டைக்குள்ளே போய்க் கோவிலிலே பூசை கேட்க உட்கார்ந்தார்கள்.
… அதின் பிற்பாடு பூசை கேட்டு ஆனவுடனே ஒரு வரிசை பீரங்கி இருத்தொரு பீரங்கி போட்டார்கள். அந்த மட்டிலே புறப்பட்டு துரையவர்கள் வளவுக்கு வந்த முசே லபோர்தொனே அவர்கள் பேரைச் சொல்லி அவரவர் சாராயம் குடித்து சந்தோஷம் கொண்டாடினார்கள்.
அதே வேளையிலே பின்னையும் பட்டணத்திலே உண்டாகிய கும்பினி உத்தியோகஸ்தர் வெள்ளைக்காரர், தமிழர், செட்டிமார்கள், வர்த்தகர் முதலான சமஸ்தான பேரும் வந்து முபார்க்கு சொல்லச் சொல்லிப் பேட்டிப்பண்ணிக் கொள்ளுகிறார்கள். அந்தச் சந்தடியிலே ராமச்சந்திரய்யனை அழைத்துப் பத்துப்பார் சர்க்கரைக்கு உத்தாரங் கொடுத்து பட்டணத்திலே சகலமான பேர் வீட்டுக்கும் சர்க்கரை வழங்கத்தக்கதாக உத்தாரங் கொடுத்தார்கள். அதன் பேரிலே என்னைப் பார்த்து பட்டணமெல்லாம் விளக்கு வைக்கச் சொல்லி உத்தாரங் கொடுத்தார்கள். அந்தப்படியே நயினாரை அழைத்து உத்தாரங்கொடுத்து பட்டணமெல்லாம் விளக்கு வைக்கச் சொன்னோம்.
அதன் பேரிலே என்னைப் பார்த்து உனக்கென்ன வேணும் அதுக்கெல்லாம் கேள். நல்ல மனதுடனே உத்தாரங் கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். அதன் பேரிலே காவலிலே இருக்கிற சிறைக்காரர் கடன்காரர் மற்றப் பேர் எல்லோரையும் விட்டுவிட வேணுமென்று சொன்னேன். அந்த க்ஷணம் விட்டுத் துரத்திவிடச் சொன்னார்கள்.
அதன் பேரிலே புகையிலை வெற்றிலை எப்போதும் காசுக்கு ஒன்பது வெற்றிலையும், பணத்துக்குப் பனிரெண்டு பலம் புகையிலையும் விற்றதை வாசுதேவபண்டிதன் என்கிற சண்டாளன் குருத்துரோகி குறைத்து காசுக்கு ஏழு வெற்றிலை பண்ணி பிறகு ஐந்து வெற்றிலையும் பத்துபலம் புகையிலையுமாகப் பண்ணிப் போட்டானென்று வெகுசனங்கள் அவனைத் திட்டுகிறதும் வைகிறதுமாகப் பட்டணத்திலே உண்டாகிய சிறுபிள்ளை சத்தியமாய் எப்போதும் வீதிக்கு வீதி மூலைக்கு மூலை ஏழை எளியவர்கள் முதலாகிய சனங்களெல்லாம் இந்த தர்ம பட்டணத்திலே இது மாத்திரம் ஒரு அநியாயம் நடக்கிறதென்று கூவிக்கொண்டு திரிகிற சப்தம் என்னுடைய காதிலே விழுந்திருக்கிற படியினாலே இந்த பட்டணத்துக்கு இந்த அபக்கியாதி வரலாகாதென்கிறதாய் துரை அவர்களைப் பார்த்து வெற்றிலைப் புகையிலை எப்போதும் போலே விற்கத்தக்கதாய்க் கேட்டோம். அந்நேரமே வாசுதேவ பண்டிதனை அழைப்பித்து இன்று முதலாய் பழயபடிக்கு எப்போதும் போலே காசுக்கு ஒன்பது வெற்றிலையும் பணத்துக்குப் பனிரெண்டரை பலம் புகையிலையும் விற்கச் சொல்லி உத்தாரங் கட்டளையிட்டார்கள்.
அதின் பேரிலே சுப்பய்யனுக்கு உத்தியோகங் கொடுக்க வேணும் அய்யா. அவர் வெகுநாளாய் கஷ்டப்படுகிறாரென்று சொன்னேன். அவருக்கு எப்போதும் போலே கோட்டை கிடங்கிலே உத்தியோகம் கொடுத்து காரைக்காலுக்கு அனுப்புவிக்கச் சொல்லி உத்தாரங் கட்டளையிட்டார்கள்.
(தொடரும்)