Skip to content
Home » ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #16 – ஆனந்தரங்கரை வறுத்தெடுத்த மதாம் துப்ளேக்ஸ்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #16 – ஆனந்தரங்கரை வறுத்தெடுத்த மதாம் துப்ளேக்ஸ்

மதாம் தியூப்ளே

மதாம் துப்ளேக்ஸ் என்று அழைக்கப்பட்ட ஷென்னி ஆல்பர்ட் புதுச்சேரி ஆளுநர் துப்ளேக்சின் மனைவி. தனி அரசாங்கம் நடத்தியவர். ஆளுநருக்கும் ஆனந்தரங்கருக்கும் அப்படியொரு நெருக்கம் என்றால், மதாமுக்கும் ஆனந்தரங்கருக்கும் ஏழாம் பொருத்தம்தான். காரணம், ‘ரங்கப்பன் தனக்குச் சக்களத்தியாக வந்துவிட்டதாக’க் கருதியதுதான். ‘அவன் (ஆனந்தங்கர்) பேரிலே இருக்கிற மோகம் (ஆளுநருக்கு) என்னிடத்திலே சற்றாகிலும் இல்லை’ என அங்கலாய்த்தவர்.

மேலும், எவ்வளவோ சொல்லியும் ஆனந்தரங்கர் கிருஸ்துவராக மதம் மாறாதது மதாமுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. எப்படியாகிலும் ஆளுநருக்கும் ஆனந்தரங்கருக்கும் இருக்கும் நெருக்கத்தைக் குலைத்துவிட வேண்டும் என கடும் பிரயத்தனம் பண்ணினார் மதாம். ‘உம்மை சூனியம் வைத்துக் கொல்லப் பார்க்கிறார்கள்’ என்றெல்லாம் தனது கணவரிடம் போட்டுக் கொடுத்தார். இதல்லாமல் தன்னிடம் வரும் வெள்ளைக்காரர்கள் வெள்ளைக்காரிச்சிகளிடம், ‘ரங்கப்பன் என் ஆம்படையானுக்கு மருந்து போட்டுக் கண்ணை மூடுவித்துப் போட்டான். ஊரெல்லாம் கொள்ளையிட்டுத் தன் ஆம்படையானுக்குக் கொடுக்கிற படியினாலே அவன் கண்ணை மூடிக்கொண்டு துரைத்தனம் இவனை (ரங்கப்பனை)ப் பண்ணச் சொன்னான்’ எனப் புலம்பியிருக்கிறார்.

கடிதம் ஒன்றில் ராசஸ்ரீ அம்மா என்று எழுதாமல் வெறும் ‘அம்மா’ என்று ஆனந்தரங்கர் எழுதிவிட்டார் என்பதற்காக அவரை வறுத்தெடுத்திருக்கிறார். பொழுது விடிந்து பொழுதுப்போனால் துரையிடம் ஆனந்தங்கர் குறித்த புகார்ப்படலம்தான். துரையும் சளைக்காமல் இவரிடம் விசாரிப்பார். இவரே, ‘பொழுது விடிந்தால் அந்திபட்டால் எனக்கு அபாண்டமாய் வந்து உங்களுடனே சொல்லுகிறதும், நீங்கள் என்னைக் கேட்கிறதும் இதன்கு நான் உத்தாரஞ் சொல்லுகிறதுந்தானே வேலையாய் இருக்கிறதேயல்லாமல் எனக்குப் பின்னொரு காரியம் பார்க்க நேரமில்லை. இதல்லாமல் இரவு பகல் இதுவே விசாரமானால் காரியத்திலே புத்தி எப்படி சேர வைக்கும்?’ என்று அலுத்துக் கொண்டார்.

மதாம் துப்ளேக்சினால் பல நேரங்களில் தன்மீது அபாண்டம் சுமத்தப்படும் போதெல்லாம், ‘அப்போது எனக்கிருந்த துக்கம் எழுதி முடியாது. துரை காலிலே போய் விழுந்து அழுவோமென்று யோசனை பண்ணினேன். தைரியத்தை வருவித்துக் கொண்டு என்ன நடந்தாலும் நடக்கட்டுமென்று இருக்கிறேன்’ என வேதனைப்பட்டிருக்கிறார். இன்னும் சில நேரங்களில், ‘என் பேரிலே யாதாமொருத்தர் அபாண்டம் போட வேணுமென்று நினைக்கிறார்களோ அவர்களுக்கு சுவாமி தானே ஆக்கினை கொடுப்பாரென்றும், மடியிலே கனமிருந்தால் தானே வழியிலே பயமிருக்கும். என்ன வந்தாலும் வரட்டும்’ என்றும் தைரியத்துடன் இருந்திருக்கிறார்.

ஆளுநர் துப்ளேக்ஸ் தனது மனைவியின் பேச்சுக்கு மிகவும் மதிப்புக் கொடுத்தார். இதனால் எரிச்சல் அடைந்த ஆனந்தரங்கர், ‘தன் புத்திக்கும் விவேகத்துக்கும் தானே பைத்தியக்காரன் பெண்டாட்டிப் பேச்சைக் கேட்டு இப்படியெல்லாம் கெடுத்துக் கொள்கிறான்’ என வருத்தப்பட்டுக் கொண்டார்.

ஆனந்தரங்கரின் நாட்குறிப்பின் பெரும்பாலான பக்கங்களை மதாம் துப்ளேக்ஸ் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார். அவற்றில் இருந்து சில பதிவுகள்:

1747 பிப்ரவரி 23 மாசி 15

…இதல்லாமல் முன் (14உ) நடந்த சேதி என்னவென்றால் மதானந்த பண்டிதர் வந்து சொன்னதென்னவென்றால் மதாம் துய்ப்ளேக்ஸ் தன்னை அழைத்து அவர்கள் மாதாவின் பேரிலே ஆணையிட்டுவித்துக் கொண்டு சிறிது சம்மதி கேட்டதாய் மதானந்த பண்டிதர் வந்து சொன்னார். அதென்ன சம்மதியென்று கேட்டபோது, சொல்லுகிறேன் கேளுக்கோளென்று சொன்ன சேதியாவது:

ரங்கப்பன் மெத்த பொல்லாதவன். அவனுக்குக் கடனிருக்கிறது. அந்தக் கடனை சென்னப்பட்டணத்து வர்த்தகரை அழைப்பிக்கிறதற்குள்ளேயும் இந்த நவாபு தீருகிறதற்குள்ளேயும் தன் கடனை அடைத்துப் போடவேணுமென்று யோசனை பண்ணி துரையினாலிவன் பொய் சொல்லுகிறவனல்ல. தன் பேரிலே பட்சமாயிருக்கிறவனென்கிறதைத் தோன்றியிருக்கிறது. இவனுக்கு நன்றாய் தோன்றியிருக்கிற படியினாலே இவன் துரைக்குப் போய், பொய்களைச் சொல்லிக் கொண்டு, ஆற்காட்டிலே யிருந்து வந்த ஸ்தானாதிபதி துலுக்கனைக் கைக்குள்ளே வைத்துக் கொண்டு அங்கே ஒன்று சொல்லுகிறது மிவர்களுடனே ஒன்று சொல்லுகிறதும். இவர்கள் மார்க்கத்திலே வராமற் போனார்களென்று தண்டை திருக்காஞ்சியிலே கொண்டு வந்து இறக்கி வைத்தாரென்று இவன் நடத்துகிற தம்முடைய தப்பு சம்மதிகளெல்லாம் நானன்று அறிவேன். அதுகளுக்கெல்லாம் நான் விசாரித்திருக்கிறேன் என்றும் இவனை இந்தாறு நாளையிலே பசீது பண்ணி வைக்கிறோமென்றும், இதுகள் நடந்த சமாச்சாரங்களென்ன வென்று கேட்டதாகவும், அதற்கு நான் சொன்னது:

ஏது அம்மா அப்படியுள் வட்டம் புறவட்டம் பண்ணி லஷாந்திரமாய்க் கொண்டு போகிறதற்கு இவன் கைக்குள்ளே துரைகள் ரொக்கமாய் இருக்கிறார்கள். அல்லவென்று துரைகள் கொடுக்கப் போகிற துகைதான் உங்களுக்குத் தெரிந்திருக்கிறதே. அதுவும் தினுசு அதற்கு அவர்கள் மனுஷன் கையிலே துரையவர்கள் ரூபுரூபாய் ஒப்புவிக்கப் போகிறார். அப்பால் எசமான்களுக்குத் தினுசு சாப்பித்தாப்படிக்கு அவர்கள் ஒத்துக்கொள்ளுகிறது. இதற்குப் பாரிசு போகிற துபாசி முசே தெலார்சு சமஸ்தான பேச்சும் அவன் மாரிபத்திலே நடக்கிறது. துரை சொன்னபடிக்குக் காகிதத்த்தை கொடுக்கிறது மாத்திரமே யல்லாமல் பின்னை ஒன்றுங் காணோமென்று சொன்னதாகவும் இதன் பேரிலே மதாம் துய்ப்ளேக்சு இருந்து கொண்டு,

உனக்கொன்றுந் தெரியாது. அதுகளெல்லாம் நான் நன்றாய் விசாரித்திருக்கிறேன் என்று மினிமேல் சோதி அப்போதைக்குப்போது வந்து சொல்லச் சொல்லியும், தான் கேட்ட சேதி ரங்கப்பனுடனே சொல்ல வேண்டாமென்று சொன்னாளென்றும், சின்ன முதலியார் அறியப் போகாதென்றும் சொன்னபடியினாலே அவர் சொன்னதாய்க் காணுதென்றும் இப்படிச் சொல்லி நீங்களிந்தப் பேச்சு வெளியிலே சொல்ல வேண்டாமென்றும் பரவசமாய்க் கேட்டாள்.

எனக்கொருத்தருடனே சொல்லக் கவையில்லை. என்னவிருக்கிறது. அப்படிச் சொல்லுகிறதில்லை. அப்போதல்ல இந்தத் துரை வந்து ஐந்து வருஷமாச்சுது. கனகராய முதலி செத்து ஒரு வருஷமாச்சுது. கனகராய முதலி நாலு வருஷமிருந்தாரே அந்த நாலு வருஷமும் என் மாரிபத்திலே தானே நடந்தது. அப்போது சேனே சம்மதி வழக்குகள் தீர்ந்தது. அப்படி வாங்க வேணுமானால் லஷம் வராகன் சம்பாதிப்பேன். அப்படிப்பட்ட புத்தியைச் சுவாமி நடத்தவிருக்கிறாரோ, நானறியேன். அம்மாளிப்போது விளங்குகிறோமென்ன படிக்கு விளங்கினால் நல்லதென்று சொன்னவுடனே இந்த மாபூசுகான் வந்து சமாதானமாகாமற் போனால் அம்மாளுங்கள் பேரிலே பழி வைப்பாள். தெய்வாதீனமாய்ச் சமாதானமாய்ப் போனது கொண்டு ஒன்றுமில்லாமற் போச்சுது. சொன்னவர்கள் முகம் கருப்புப் பண்ணிக்கொண்டார்கள் என்றும் மதானந்த பண்டிதர் சொன்னார்.

அதற்கு நான் சொன்னது: இந்தத்துரைக்கு கீர்த்திப் பிரதிஷ்டை யுண்டாக வேணுமென்று நான் சுவாமிக்குப் பொதுவாக நடந்தாப்போலே அவர்கள் என்ன சொன்னால் நானென்ன? பயமா. மடியிலே கனமிருந்தால் வழியிலே பயமென்று பெரியவர்கள் சொல்லுகிறது பொய்யா? ஆனால் ஒரு மாதத்திற்கு முன்னே அம்மாள் துலுக்கர் சம்மதியென்ன நடக்குதோ அதெல்லாம் வந்து கபுறு சொல்லு என்று சொல்லுவாள். துரையாலிந்தப் பேச்சுகள் ஒருத்தனூடே யாகிலும் சொல்ல வேண்டாமென்று சொல்லியிருக்கிறார். பிரபு மனதிலே யிவன் வெளியிலே சொல்லாதவனென்று எந்தப் பேச்சும் தாராளமாய் என்னுடனே அவர் சொல்ல, அப்பால் நான் சொன்னால் அது நமக்கு சுவாமி துரோகமாகுது. அவருத்தாரந் தள்ளுகிறபோது இரண்டாவது விளையாட்டுப் பேச்சல்ல. சமஸ்தமானதுடனே பேச்சுகள் இது சொல்லாமலிருக்கிறதே யுக்த மென்று யோசனை பண்ணினேன். ஆனாலிதைத் தொட்டு அம்மாள் மனதுக்குத் தாங்களாயிருக்கு மிதன் பேரிலேதாகிலும் புனைசுருட்டு முடைவாள். இல்லாததும் பொல்லதாததும் துரைக்கு சொல்லுவாள். துரை கேட்கிறதில்லை யென்றும் அறிவாள். அதற்குப் பக்கத்திலே யிருக்கிற வெள்ளைக்காரரைக் கொண்டு சொல்லுவித்தாகிலும் ஒரு தொந்தரவு பண்ணுவாளென்று அறிவேன்.

என்ன வந்தாலும் வரட்டும். நாமே எந்தப் பிரபுவின் கீழேயிருக்கிறோமோ அவருத்தாரப்படிக்கு அவருக்கு வஞ்சனை பண்ணாமல் நடந்து கொண்டால் வந்ததெல்லாம் வரட்டுமென்று தீர்க்க யோசனை பண்ணிக்கொண்டு…

1747 ஏப்ரல் 11 சித்திரை 2 செவ்வாய்கிழமை

… இப்படியிருக்கச்சே ஒரு மாதம் நாற்பது நாளைக்கு முன்பாக சென்னப்பட்டணத்துத் தபாலிலேயிருந்து தம்பி செட்டி காகிதம் ஒன்றும், மதாம் துய்ப்ளேக்ஸ் பேருக்குச் சாயங்காலமான எட்டுமணிக்கு வந்தது. அந்த காகிதத்தை எட்டுமணி யடித்துப் போச்சுதே சாப்பாட்டிலேயல்லவா யிருப்பார்கள். காலத்தாலே கொண்டு போய்க் கொடுப்போமென்று மேசை கவயத்திலே வைத்துவிட்டு வீட்டுக் போனேன். அப்போது துலுக்கர் வந்து கவரப்பட்டு சமாதான வேலையானபடியினாலேயும் அலுவல் மிகுதியானபடியினாலேயும் வெகு ஞாபகமில்லாமல் மறந்து போனாப்போலே யிருந்து விட்டேன். அன்றைய தினம் கூடாமற் போய் மறுநாளைக் காலத்தாலே நாராயணப் பிள்ளை நேற்றைக்குத் தபாலிலே மதாம் பேருக்கு வந்த காகிதம் உங்கள் வசம் கொண்டு வந்து கொடுத்தேன் என்று சொன்னான். அது இருக்குதா வென்று கேட்டான். அதற்கு மெய்தான், துலுக்கர் வந்திருக்கிற சந்தடியிலே மறந்து போனேன் என்று நாராயணபிள்ளை கூட இருக்கச்சே தானே எனக்கு வந்த காகிதத்தையும் நான் படிக்காமல் கூட வைத்து மறந்திருந்த நியாயத்தைத் திருஷ்டாந்திரமாய் சாதகத்துடனே காண்பித்துக் காகிதத்தைக் கொடுத்துவிட்டேன்.

இந்தச் சேதி மதாம் துய்ப்ளேக்ஸ் கேட்டு, இவன் எனக்கு வந்த காகிதத்தை வைத்திருந்ததற்கு இவன் கழுத்திலே கயிறு போடுவேனென்றும் இவன் பெண்டாட்டி பிள்ளைகள் அங்கலாய்க்கப் போகிறார்கள் என்று சும்மா விட்டு விட்டேனென்றும் துபாசி அப்பு, பலராம், நாராயணப்பிள்ளை, சேருவைக்காரருடனே பின்னையும் தப்புச்தாறுமாய் வாய்க்கொள்ளாத விசேஷமாய்ச் சொன்னாள். சொன்னதுமல்லாமல், என்னுடனே சொல்லச் சொல்லி அனுப்புவித்தாள்.

வந்தவள் என்னுடனே மறைத்தாப்போலே அவள் சொன்னதற்குச் சற்றேறக்குறையச் சொன்னாள். அதற்கு நான் சொன்னது: முந்தாம் நாள் ராத்திரி வந்ததும் அப்போது கொடுத்தனுப்புகிற சமயமில்லாமலிருந்தது. மறுநாள் துலுக்கர் சந்தடி வந்ததினாலே எனக்கு வந்த காகிதத்தைக்கூட படிக்கிறதற்கு இல்லாமல் சும்மா கிடந்த நியாயமதை சொல்லிக் காண்பித்து அவள் சொன்னதற்குச் சற்றேறக்குறையச் சொன்னாள். அதற்கு நான் சொன்னது: முந்தாம் நாள் ராத்திரி வந்ததும் அப்போது கொடுத்தனுப்புகிற சமயமில்லாமலிருந்தது. மறுநாள் துலுக்கர் சந்தடி வந்ததினாலே எனக்கு வந்த காகிதங்கூட படிக்கிறதற்கு இல்லாமல் சும்மாக்கிடந்த நியாமதை சொல்லிக் காண்பித்து அப்படி வஞ்சனையாய் வைத்தேனே அப்பால் அப்படியே நேரஸ்தனாக்குகிறேனென்றும் இதிலே எழுதியிருக்கிற வயணம் எனக்குத் தெரியாவிட்டாலோ அப்படிதான் ஆக்கத்தக்கதாக வைத்தானென்று எண்ணவேணும். இல்லாவிட்டால் நான் செய்திருக்கிற கொலை களவு இதனாலே மோசம் என்னறல்லவோ நான் பயந்து இந்தக் காகிதத்தை ஒளித்து வைக்க வேணும். நிஷ்காரணமாய் வைக்கக் காரியமென்ன வென்றால் அதற்கு அடுத்த நியாயமாய்ச் சொல்லி அனுப்புவிட்டேன். அப்படியெல்லாம் நடந்திருக்க, எனக்கு வந்திருக்கிற காகிதத்திலிருந்து வந்த காகிதத்தை அம்மாள் அப்போதழைத்துப் படித்துப் பார்த்து முத்திரைப் போட்டு அனுப்பினாள். அந்தக் காகிதத்தைப் பார்த்தவுடனே பார்த்தவுடனே சந்தேகமாய்க் கண்டு சேர்வைக்காரரை அழைப்பித்துக் கொண்டு கேட்டவிடத்திலே அவர்கள் நடந்த பூர்வோத்திரம் சொன்னார்கள். பின்னை ஒரு வழியிலேயும் உற்ற கபுறு வந்தது. அதற்குச் சுவாமி என்ன நடத்துகிறாரோ நானறியேன். இத்தனை அதறக்குணம் ஒருத்தருக்கும் ஆகாது.

1747 நவம்பர் 17 கார்த்திகை 5 சுக்கிரவாரம்

… இப்படியிருக்கச்சே வடுகனாத முதலியை அம்மாளழைக்கிறாள் என்று அழைத்துப் போய், நீ கொடுத்த சீட்டிலே ராசஸ்ரீ அம்மாளென்று எழுதாமல் சும்மா அம்மாளென்று எப்படி எழுதுவாய்? ரங்கப்பன் அப்படிப்பட்டவன். இப்படிப்பட்ட பொல்லதாவன். என்னைச் சட்டப்பண்ணுகிறது இல்லையென்று அப்புறம் சிறிது உதாசீனமாயும் சொல்லி, இவனைப் பதினைந்து அடி அடித்துச் சொன்னாளாம். இனிமேல் என் பேருக்கு வந்து சொன்ன மனுஷனைத் தெத்து வாலிலே விட்டாலே ஆச்சுது. இல்லாவிட்டால் இப்படி ரங்கப்பனைச் செய்வேனேன்று சொல்லிப் போகச் சொன்னாள். அந்த விசேஷத்தைத் துரை கையிலே அனுப்புவித்துக் கொண்டு வந்த பிற்பாடு வீட்டுக்குப் போகச்சே வடுகனாத முதலி வந்து சொன்னான்.

அப்போது என்க்கிருந்த துக்கம் எழுதி முடியாது. துரை காலிலே போய் விழுந்து அழுவோமென்று யோசனை பண்ணினேன். திரும்பியும் ஆலோசனை பண்ணிச் செய்வோமென்று வீட்டிற்குப் போனேன்.

1747 நொவம்பர் 23 கார்த்திகை 11 குருவாரம்

அதன் பேரிலே தெரிந்து கொண்டு என்னை அழைத்து எனக்கு மனது சமாதானம் ஆகும்படியாய் ரங்கப்பிள்ளே இங்கே வா, உன் பேரிலே எந்நேரமும் விவாதங்களாய் என் வீட்டில்தானே பொல்லாப்பான விஷயங்களாய்ச் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் இனிமேல் வாயெடுக்காதபடிக்கும் இனிமேல் என்றென்றைக்கும் உன்னுடைய பேரெடுக்காமல் இருக்கத்தக்கதாக நான் பண்ணுவிக்க வேணுமென்று சொல்லியாங்காட்டும் இதை மத்தியஸ்திலே விட்டேன். அதனால் ஒண்ணும் இல்லை. நீ சும்மாயிருவென்று சொல்லி…

…துரையண்டையிலே போய் மதாம் இந்தச் சம்மதிக்கு என்னவோ சொல்லப்போன விடத்திலே துரையிருந்து கொண்டு ஆனந்தராயன் அபினி தின்னுகிறவன், கஞ்சா தின்னுகிறவன், சாறாயம் குடிக்கிறவன், எந்நேரமும் தேவடியாள் வீட்டிலே திரிகிறவன். அவன் கிரகஸ்தனானால் கையிலே அகப்பட்ட பணத்தைப் போக்கடித்து இப்படி திரிவானா? அவன் பேச்சை நீ பேச வேண்டாம் என்று கண்டிப்பான வார்த்தையாய்ச் சொல்லிவிட்டார்.

இதிலே அவனுக்கு மனது முறிந்துபோய் இந்த மட்டுக்கும் துரை பேசின காரியமென்ன, இப்படியிப்படிச் சொல்ல வந்ததென்ன வென்கிறதாய் மதாம் இருந்து கொண்டு வற்லாமுடனே ரங்கப்பன் எனக்குச் சக்களத்தியாய் வந்து நேரிட்டான். நான் அவருடைய பெண்சாதியாய் அவன் பேரிலே இருக்கிற மோகம் என்னிடத்திலே சற்றாகிலும் இல்லை. இதென்ன பாவமாயிருக்கிறது என்றும், ஆனந்தராயன் அபினி தின்னுகிறவன், ரொட்டிக் குடியனென்றும் இப்படிச் சரிப்போன படிக்கெல்லாம் சொல்லுகிறா ளென்று வற்லாமுடனே சொன்னதாகவும் வற்லாம் வந்து வந்தவாசி திருவேங்கடத்துடனே சொன்னதாகத் திருவேங்கடம் வந்து என்னுடனே சொன்னான்.

ஆனால் துரையவர்கள் மத்தியானம் ஆனந்தராயனைக் கண்டித்தபோது அபினி தின்னுகிறவன், தேவடியாள் வீட்டிலே திரிகிறவனென்று சொன்னபடியினாலே இதுவும் நமக்குத் திருஷ்டாந்திரமாச்சுது.

…ஆனால் சுவாமி மத்தியஸ்தரான படியினாலே மதாம் துய்ப்ளேக்ஸ் எடுத்த எடுபாடுக்குத் தப்பிப்போச்சே யல்லாமல் எவ்வளவாகிலும் குற்றமுண்டாயிருந்தால் மகா தப்பிதம் வரும். ஆனால் நாம் ஒருத்தருக்கும் பொல்லாப்பு நினையாமல் நன்மையே நினைக்கிற படியினாலே எல்லாரையும் சுவாமி காப்பார். எவர்கள் பொல்லாத காரியம் நினைக்கிறார்களோ அவர்களுக்குப் பங்கம் வரும்.

1747 நொவம்பர் 25 கார்த்திகை 13 சனிவாரம்

சுவாமிக்குத் துரோகம் பண்ணினால் நம்மை சுவாமியும் விசாரிப்பார். அதற்குத் தக்கதாப் போலே நமக்குப் பொல்லாப்பும் சம்பவிக்குமிடத்திலே பரிசுத்தமிருக்கிறது மெய்யனால் என் பேரிலே யாதாமொருத்தர் அபாண்டம் போட வேணுமென்று நினைக்கிறார்களோ அவர்களுக்கு சுவாமி தானே ஆக்கினை கொடுப்பாரென்று திரிகரணசுத்திப்படி எண்ணிக்கொண்டு தைரியத்தை வருவித்துக் கொண்டு என்ன நடந்தாலும் நடக்கட்டுமென்று இருக்கிறேன்.

(தொடரும்)

பகிர:
nv-author-image

கோ. செங்குட்டுவன்

விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து வசித்து வருபவர். ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்று அமைப்புகளில் பங்கேற்று இயங்கி வருபவர். 'சமணர் கழுவேற்றம்', 'கூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள்' உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு : ko.senguttuvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *