சென்னப்பட்டணம் தங்கள் கைக்கு வந்ததும் புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்சுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ஏனென்றால் இரண்டு ஆண்டுகால கனவு நனவாகி இருக்கிறதே. இதன் மூலம் தனது கீர்த்தி பிரான்சு தேசம் முழுவதும் பரவும் என்று நம்பிக்கைக் கொண்டார்.
துய்ப்ளேக்சின் மகிழ்ச்சி கணநேரம் கூட நீடிக்கவில்லை. அதற்குக் காரணம், சென்னை தாக்குதலை முன்னின்று நடத்திய கப்பற்படைதளபதி லபோன்தெனே, பட்டணத்தின் ஆட்சிப் பொறுப்பையும் தானே எடுத்துக் கொண்டது தான். லபோன்தெனே புதுச்சேரியில் இருந்து வரும் எந்த உத்தரவுகளையும் மதிப்பது கிடையாது. கேள்வி கேட்ட பிரெஞ்சு அதிகாரிகளைச் சிறைப்படுத்தினார். இதன் உச்சக்கட்டம், இரண்டு லட்சம் வராகனுக்கு பட்டணத்தை விற்பதாக ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது.
இதெல்லாம் ஆளுநர் துய்ப்ளேக்சுக்குப் பேரிடியாக அமைந்தது. பட்டணம் தன் கைக்குள் வந்தவுடன் பெரும் பொருளீட்டலாம் எனப் பெருங்கனவுடன் இருந்தவர் அவர். ‘துரை சகல கஷ்டப்பட்டு, சகலமும் தயார் பண்ணி, கலத்திலே வடித்துச் சாப்பிடுகிற வேளையிலே தட்டிப்போட்டுப் பின்னையொருத்தன் சாப்பிட்ட கதையாய் முசே துய்ப்ளேக்சுக்குப் பிரயாசைப்படவும் முசே லபோர்தொனே எடுத்துப் போகவுமாகத் தீர்ந்து போனால் முசே துய்ப்ளேக்சுக்கு எத்தனை விசாரமிருக்குமோ அதற்குக் கரையிருக்கிறதா? புருஷ ஆயுசுலேயும் இப்படிப்பட்ட வாய்ப்பு வாய்க்கலாமா? வாய்க்கமாட்டாதே? அப்படிப்பட்ட வாய்ப்பு வாய்த்துத் தட்டிப்போறது, பாக்கிய திசையில்லாத படியினாலே தட்டிப் போய்விட்டது’ என்றெல்லாம் துரைக்காக விசனப்படுகிறார் ஆனந்தரங்கர்.
சென்னப்பட்டணம் நிலவரம் குறித்து விவாதிக்க புதுச்சேரி கவுன்சில் ஒரே நாளில் பலமுறை கூடியது. விவாதித்தது. இரவு வரை ஆளுநர் விழித்திருந்தார். இந்தத் தொந்தரவுக்கு எல்லாம் காரணம், லபோர்தொனே நடவடிக்கைகள் தான் என்கிறார் ஆனந்தரங்கர்.
இந்த நிலையில்தான் சென்னப்பட்டணத்தில் திடீர் திருப்பம் ஏற்படுகிறது. ஆங்கிலேயருடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்தைத் தானே கிழித்துப் போட்டார் லபோர்தொனே. பிரெஞ்சு அதிகாரிகள் உடனடியாக சென்னைக்குத் திரும்ப வந்து பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள துய்ப்ளேக்சுக்கு கடிதம் எழுதினார். அவரது இந்தத் திடீர் மனமாற்றத்திற்குக் காரணம்?
தனது வீரர்களை எல்லாம் கப்பல் ஏற்றிவிட்டுத் தானும் புறப்படத் தயாரானார் லபோர்தொனே. அப்போதுதான், கோட்டை கொடி மரத்தின் கீழே இரண்டு லட்சம் வராகனை ஆங்கிலேயர் புதைத்து வைத்திருந்ததைப் பிரெஞ்சு படையினர் கண்டுபிடித்தனர். இதனால், ‘என்னை மோசம் செய்து விட்டீர்கள். இன்னும் என்னென்ன மோசம் செய்திருப்பீர்களோ?’ என்று ஆவேசமடைந்தார் லபோர்தொனே. இவரிடம் ஏற்பட்ட இந்த மாற்றம் துய்ளேக்ஸ் முகத்தில் மலர்ச்சியை ஏற்படுத்தியது!
1746 செப்தம்பர் 29 புரட்டாசி 17
… இதெல்லாமல் முசே புயல் என்கிறவன் கப்பலிலே வந்த கடுதாசியும் தபாலிலே வந்த கடுதாசியும் துரையவர்கள் பார்த்துக்கொண்ட விடத்திலே அதிலே எழுதி வந்த சேதி: முசே லபோர்தொனே என்கிறவர் துரையவர்கள் ஒடுதிப்படிக்கு நடக்கவில்லை யென்றும் துரையவர்கள் அனுப்புவிக்கிற கடுதாசிக்கும் மறு உத்தரம் எழுதுகிறதில்லை யென்றும் இப்படி நீர் நடத்துகிறது என்னவென்று முசே தெப்பிரமேனி, முசே துலோராம், முசே பெடத்தல்மே இவர்கள் கேட்டால் நீங்கள் கேட்கிற தென்னவென்றும் உங்கள் வேலையல்ல நாம் கும்பினியாருக்கு உத்தரவாதம் பண்ணிக்கொள்ளுகிறோம். நீங்கள் கணக்கு மாத்திரம் எழுதிக்கொள்ளுங்கள் என்று செம்மரம், புடவை, சீலைப் பணங்காசு, தட்டுமுட்டுப் பெரிய பீரங்கிகள் முதலானதுகள் கோட்டையிலே பட்டணத்திலே யிருக்கிறதெல்லாம் கப்பலின் மேலே ஏற்றிக்கொண்டு சென்னப்பட்டணம் கோட்டையையும் சின்ன பீரங்கிகளும் சிறிது மருந்து குண்டும் பதினொரு லட்சம் வராகனுக்கு இங்கிலீசுக்காரர் வசத்திலே கோட்டையையும் விட்டுப்போட்டு மசுக்கரைக்குப் போகிறதாய் முன்பே லபோர்தொனே யோசனை தீர்த்துக் கொண்டு அந்த அடியிலே காரியங்களெல்லாம் இப்படி வித்தியாசமாய் நடத்துகிறார் என்றும் இப்படி நடத்துகிறது நியாயமல்லவென்று முசே தெப்பிரமேனியும் முசே துலோராம் முசே பெடத்தல்லமியும் நானாவிதத்திலே இவர்கள் மூவரும் முசே லபோர்தொனே அவர்களுடனே கோபித்துக் கொண்டு புறப்பட்டு மயிலாப்பூரிலே வந்ததாகவும் எழுதி வந்தது. அது பார்த்ததும் துரையவர்களுக்கு மெத்தவும் விசாரமாச்சுது.
இப்படியிருக்கிறதிலே சென்னப்பட்டணமிருந்து முசே லபோர்தொனே அவர்கள் காகிதம் துரையவர்களுக்கு வந்தது. அதிலே எழுதியிருந்த வயணம்:
சென்னப்பட்டணத்திலே கும்பினியாரது பணம் காசு புடவை சீலைகள் சகலமும் நாம் எடுத்துக்கொள்கிறது. அரமனைக்காரர் வழியிருக்கிற பணம் காசிலே பாதி கொடுத்து பாதி எடுத்துக்கொள்கிறது. இன்னம் மற்றப்படி கோட்டையிலே இருக்கிற மருந்து குண்டு, பீரங்கி, துப்பாக்கி, மூடி கத்தி இதுகள் முதலான ஆயுதங்களிலே பாதி எடுத்துக்கொள்ளுகிறது. பாதி இங்கிலீசுக்காரருக்குக் கொடுத்து கோட்டையுங் கொடுக்கிறது. இங்கிலீசுக்காரர் இரண்டு வருஷத்திலே பதினோரு லக்ஷம் வராகன் கொடுக்கிறோமென்று சீட்டெழுதிக் கொடுக்கிறது. இனிமேல் என்றைக்கும் பிரான்சுக்காரருடனே சண்டை கொடுக்கிறதில்லையென்று சீட்டெழுதிக் கொடுக்கிறது. இப்படித் தீர்த்திருக்கிறேன் என்று எழுதியிருந்தது. இந்தக் காகிதம் பார்த்துக் கொண்டவுடனே துரையவர்களுக்கு வந்த கோபமும் விசாரமும் எழுதி முடியாது. இது நடந்த சேதி.
1746 செப்தேம்பர் 30 புரட்டாசி 18
… சகலமான பேரும் துரையவர்கள் வீட்டுக்கு வந்து துரையவர்களுடனே சொன்ன சேதி: நாங்களானால் பிரான்சு மகாராசாவினுடைய கீர்த்தியினாலே அவருடைய கொடியின் கீழே யிருக்கிறோம். இங்கிலீசுக்காரர் அனேகமாய் நியாயந் தப்பிதமான காரியங்களும் நடத்துவித்து ஏகத்தாளியும் பண்ணினார்கள். அப்படியிருக்கிற பேரை நீங்கள் மகாராசாவுக்கு இந்தத் தேசத்திலே டில்லி பார்சா மட்டுக்கும் கீர்த்தி யென்றைக்கும் நிற்கும் பொருட்டாக இங்கிலீசுக்காரரைப் பங்கம் பண்ணி சென்னப்பட்டணமும் கட்டினீர்கள். இது உம்முடைய மூர்த்தி வந்தமும் யோகாதிசயமும் அல்லாமல் மற்றப்படி ஒருத்தனாலே சாதிக்கிற காரியமல்ல.
இப்போதானால் முசே லபோர்தொனே அவர்கள் திரும்பவும் சென்னப்பட்டணம் கோட்டையை மறுபடியும் இங்கிலீசுக்காரருக்குக் கொடுக்கிறதாகச் சேதி கேட்டோம். அப்படிக் கொடுத்ததே உண்டானால் இந்த துலுக்காணியதிலே தலை நீட்டிக்கொண்டு நாங்களிருக்கத் தேவையில்லை. எங்கள் வெட்கம் எல்லாம் போய்விடும். இத்தனைப் பிரயாசைப்பட்டு மகத்தான கீர்த்தி சம்பாதித்து வாங்கின பட்டணத்தைத் திரும்பிவிடுகிறதென்ன. இது நிமித்தியம் நாங்களெல்லாரும் உங்களுடனே மனுவாகக் கேட்க வந்தோம் என்று சொன்னார்கள்.
அந்தச் சேதி துரையவர்கள் கேட்டு உங்களுக்குச் சம்மதியில்லாத காரியம் நடந்ததா நடத்தத்தக்கதில்லையே என்று இந்தப்படிக்குத்தானே இந்த க்ஷணம் முசே லபோர்தொனே யவர்களுக்கும் காகிதம் அனுப்புவிக்கிறோமென்றும் அவர்களுக்குச் சமாதானமாகச் சொல்லி அவர்களை யெல்லாம் அனுப்புவித்து அனுப்புவித்து…
1746 ஒக்தோபர் 2 புரட்டாசி 20
முசே லபோர்தொனே சென்னப்பட்டணத்திலேதான் உத்தரவாதம் பண்ணிக் கொள்ளுகிறோம் என்று கும்பினியாருக்கு புதுச்சேரி கோன்சேலுக்குக் கவையில்லையென்று நடத்தினதற்கு இங்கேயிருந்து முசே தெப்ரமேனியைப் பெரியவனாக்கி இவனாக்கினைக்குள்ளே எல்லாரும் நடக்கச் சொல்லியும் முசே லபோர்தொனே நடவாமல் போனால் அவனைக் காவல் வைக்கச் சொல்லியும் அனுப்பி ஒடுதிப்படிக்கு முசே லபோர்தொனே நடப்பானோ இல்லையென்று இவன் பெலத்து இருக்கிறபடியினாலே தள்ளிப் போனவர்களை வெளியே போகச் சொல்லுவானென்று அந்த பிக்கூர் பேரிலே துரையிருக்கிறது. மற்ற வெள்ளைக்காரரெல்லாரும் இதுவாய்ப் பேசுகிறதுமாய் இருந்தார்களே அல்லாமல் வேறே சேதியில்லை.
1746 ஒக்தோபர் 4 புரட்டாசி 22 மங்கள வாரம்
இற்றை நாள் முசே துபுவா வீட்டுக்குப் போனவிடத்திலே முசே துபுவா பேசியிருக்கச்சே சொன்ன வயணம்: முசே லபோர்தொனே புதுச்சேரி குவர்னதோர் முசே துப்பிளேக்சு பேச்சில்லாமல் இங்கிலீசுக்காரருக்கு உடன்படிக்கை பண்ணப் போகாது. பட்டணத்தைப் பதினொரு லக்ஷம் வராகனாகவும் விற்கவும் போகாது. இவர்களுத்தரவின் பேரிலே போன கோன்சேல்காரர்களைத் தள்ளிப்போட்டு நடத்தவும் போகாது. அவர்களைக் கோட்டையிலேயிருக்கக் கவையில்லையென்றும் உத்தரவே யல்லாமல் வேறே உத்தரவில்லை. நான் கும்பினீருக்கு உத்தரவாதம் பண்ணிக் கொள்கிறேன்.
1746 ஒக்தோபர் 4 புரட்டாசி 22 மங்கள வாரம்
…. அப்பால் துரை என்னை அழைத்தார். நான் போனவுடனே முசே லபோர்தொனே சென்னப்பட்டணத்திலே நடப்பித்த காரியத்தைப் பார்த்தாயா. சென்னப்பட்டணம் பதினொரு லக்ஷம் வராகனாக விற்றுப் போட்டானாம். காவற்காரர் கையிலே ஈரோப்பாவிலே இங்கிலீசுத் தேராவிலே வாங்கிக் தொள்ளத்தக்கதாக உண்டிகை வாங்கிக் கொண்டானாம். காவல்காரன் எழுதிக் கொடுத்தால் ஒருக்காலும் செல்லாது. அதறிந்தும் எழுதி வாங்கிக் கொண்டானாம். பின்னையும், இவன் கொள்ளையிட்டதும் இவன் நடத்தினதும் பார்த்தாயா ரங்கப்பா என்று கேட்டார். மெய்தானையா பொல்லாத வேளையான படியினாலே முசே லபோர்தொனே இப்படிப்பட்ட வேலை செய்யவும் அதனாலே பொல்லாப்பு வரவும் இருக்கச்சே தான் இப்படிப்பட்ட புத்தி அவனுக்கு வந்தது என்றும் இவர் மனோபாவத்துக்கு அடுத்தாப் போல் உத்தரவு சொன்னதின் பேரிலே உன் தம்பிக்கு இவன் நடத்தையும் இவன் செய்த காரியமும் ஒருக்காலும் சம்மதியாயிராது. முசே லபோர்தொனேயின் பேரிலே ரொம்ப பிராது எழுதியிருப்பான் என்று சொன்னார். மெய்தான், அவன் நடத்தின காரியமெல்லாம் பரிச்சேதமாய் சம்மதியில்லாமல் எழுதினது சேனையுண்டு என்று சொன்னேன். அது மெய்தான் என்று ஒத்துக்கொண்டு…
இற்றை நாள் சாயங்காலம் சென்னப்பட்டணத்திலிருந்து முசே தெப்ரெமெனி முசே துலோராம் முதலான பேர் காகிதங்கள் அனுப்பினார்கள். அந்தக் காகித வயணம்:
இவ்விடத்திலேயிருந்து (18உ) 30உசெப்தம்பர் வெள்ளிக்கிழமை நாள், போன முசே பரிதி, முசே புரி முதலான பேர் போனவர்கள் (19உ புரட்டாசி 1உபுரட்டாசி 1அக்டோபர்) சனிவாரம் மயிலாப்பூரிலிறங்கி அங்கே முசே லபோர்தொனேயுடனே கோபித்துக் கொண்டு வந்திருக்கிற முசே தெப்பிரமேனி முதலான பேருடனே கண்டு பேசி அங்கேயிருந்து 20உ ஆதிவாரம் சென்னப்பட்டணத்துக்குப் போய் முசே லபோர்தொனே யண்டையிலே
நீ சென்னப்பட்டணத்தை மறுபடியும் இங்கிலீசுக்காரருக்கு விற்கக் காரியமென்ன வென்று கேட்டார்கள். புதுச்சேரி கோன்சேல் காகிதம் என் மனதின்படியே நடந்துகொள்ளும்படி சொல்லி உத்தரவு கொடுத்தபடியினாலே என் மனதின் படியே விற்றேன் என்று சொன்னானாம். அதற்கு இவர்கள் சொன்னது: புதுச்சேரி கோன்சேல் ஒடுதி என்னவென்றால் சண்டைக்கு மாத்திரம் உன் மனதின் படியே நடப்பிக்கச் சொல்லி உத்தாரமே யல்லாமல் சண்டையான பிற்பாடு கோட்டை காரியத்துக்கும் உன் மனதின் படியே நடப்பிக்கச் சொல்லி எழுதிக் கொடுத்தோமா வென்று முசே தெப்பிரமேனி, முசே துலோராம் முதலான பேர் கேட்டார்கள்.
கரையிலே சண்டை கொடுக்கச் சொல்லி ராசாவினுடைய உத்தாரம் இல்லாத படியினாலே நாம் எல்லாரும் கூடிச்செய்த காரியமான படியினாலேயும் கோட்டையிலே வெகு பணம் இருந்ததை யெல்லாம் எடுத்துக்கொண்ட படியினாலே கோட்டைக்குப் பதினொரு லக்ஷம் வராகன் வருகிறபடியினாலேயும் நான் செய்தேனென்றும், அதன் பேரிலே இவர்கள் சொன்னது:
இப்போது புதுச்சேரி கொன்சேல் ஒடுதி யென்னவென்றால், முசே தெப்பிரமேனி ஒடுதியின் பேரிலே சமஸ்தான பேரும் நடந்து கொள்ளுகிறதே யல்லாமல் இனிமேலுன்னுடைய ஒடுதி நடவாது சொன்னதின் பேரிலே கத்தியை உருவிக் கொண்டு கப்பற்காரரெல்லாம் அழைத்தவுடனே இவர்கள் கப்பற்காரர், ஒபிசியேல்மார்கள், கப்பித்தான்மார் சமஸ்தான பேருக்கும் ராசாவினுடைய பேரிலே ஆணையிட்டு புதுச்சேரி கோன்சேலில் ஒடுதி முசே தெப்பிரமேனி உத்தாரப்படிக்கு நடக்கவேணுமென்று இவ்விடத்துக் கோன்சேல் காகிதம் படித்து முசே லபோர்தொனேயைக் கத்தியை வைத்துப்போட்டு இந்த ஒடுதிக்கு ஒப்தே சேரிட்டு நடந்து கொண்டாலாச்சுது இல்லாவிட்டால் உன்னைக் காவல் பண்ணி வைக்கச்சொல்லி உத்தாரம் அந்நபடிக்குச் செய்வோமென்று சொன்னதின் பேரிலே அந்த மட்டிலே யடங்கி கப்பல் கப்பித்தான்மாரும் ஒபிசி கப்பல் ஒபிசியேமாரும் சும்மாயிருந்தார்கள்.
அப்பால் கோட்டைச் சாவியை முசே தெப்பிரமேனி வாங்கிக்கொண்டு சகல ஒடுதியும் முசே தெப்பிரமேனி கொடுத்தான். அப்போது இங்கிலீசுக்காரர் துரையாயிருக்கிற மேஸ்தர் மாசு முதலானவர்கள் அழைத்து நீங்கள் காவல் உங்களுக்குக் கோட்டை விற்கவில்லை யென்று சொல்லி யந்தச் சேதிக்குப் புதுச்சேரி குவர்னதோருக்குக் காகித மெழுதியனுப்பியதாய் முசே றபேர், முசே லொஸ்தீசு, முசே துபுவா முதலான பேர் என்னுடனே சொன்னார்கள். இந்தக் காகிதம் நாலு மணிக்கு வந்தது. அப்போது கோன்சேல் கூடி எட்டுமணிக்குக் கலைந்தது. பதில் காகிதம் எழுதி ஒன்று டபாலிலேயும் ஒன்று கட்டுமரத்தின் பேரிலேயும் அனுப்பினார்கள். இதற்குப் பதிலுத்தாரம் எழுதினதற்கு வயணம் இன்னதென்று தெரியாது. இனிமேலறிய வேண்டியது.
1746 ஒக்தோபர் 6 புரட்டாசி 23
ஏழெட்டு மணிக்குக் கூடின கொம்மிசேல் பண்ணி பனிரெண்டு மணி வரைக்கும் எழுந்திராமல் கொம்மிசேல் பண்ணி பதினொரு மணிக்குச் சென்னப்பட்டணத்துக்குத் தபாலிலே காகிதமும் அனுப்புவித்து திரும்பவும் கொம்மிசேல் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். மறுபடி சாப்பிட்டுச் சாயங்காலம் ஆறுமணி மட்டுக்கும் கோன்சேல் கூடியிருந்தது. மறுபடியும் காகிதமும் எழுதித் தபாலிலே யனுப்பினார்கள். அப்பால் கோன்சேல் கலைந்து பிற்பாடு துரை மாத்திரம் கபினேத்திலே ராத்திரி சாப்பிடுகிற வேளை மட்டுக்கும் எழுதிக் கொண்டிருந்தார். இந்தக் குழப்பம் சென்னப்பட்டணத்திலே யிருக்கிற முசே லபோர்தொனே பண்ணுகிற தொந்தரையினாலே இப்படியெல்லாம் குழப்பமாய் வேசடையும். காலத்தாலே துவக்கின கோன்சேல் ராத்திரி மட்டுக்கும் நிற்கிறது…. …
1746 ஒக்தோபர் 7 புரட்டாசி 25
நேற்று உதய முதல் ராத்திரி ஆறு மணி வரைக்கும் கொம்மிசேல் பண்ணினதென்ன, இன்றைக்கும் இரண்டு மணி மட்டுக்கும் கொம்மிசேல் பண்ணினதென்ன. துரையவர்கள் ரொம்பவும் வியாசடையாய் இருக்கிறதென்ன வென்று விசாரிக்குமிடத்திலே முசே லத்தூஸ் சொன்ன வயணம்:
நாளது 21உ 22உ சென்னப்பட்டணத்திலே முசே லபோர்தொனே தமக்குப் பண்டிகை யென்று உதயத்திலே பீரங்கிகள் போடுவித்ததாகவும் முசே தெப்பிரமேனி, முசே துலோராம், முசே புரி, முசே பரிதி, முசே பெடதல்மே, முசே லத்தூர் இவர்கள் முதலான பெரிய மனுஷருக்கெல்லாம் சாப்பாட்டுக்குச் சொல்லப் பனிரண்டு மணிக்குள்ளே கோட்டை மெத்தைமேலே தீனிக்கு அழைப்பித்து எல்லாருங்கூடி சாப்பிடுகிற போது முசே லபோர்தொனே இவர்களைப் பார்த்துச் சொன்ன சேதி:
இங்கிலீசுக்காரர் கப்பல் வருகிறதாகச் சேதி கேட்கப்பட்டது. ஆகையாலே புதுச்சேரியிலிருந்து வந்திருக்கிற சொல்தாதுகளை யெல்லாம் கப்பலிலே ஏற்ற வேணுமென்று சொன்னதாகவும், உடனே முசே புரி, முசே பரிதி முதலான பேர் அப்படி கப்பலிலே ஏற்றப்படாது என்று சொன்னதாகவும், உடனே தன் மனுஷர் இருபத்து நாலு பேர் உருவின கத்தியும் கையுமாயிருக்கிற பேரை கிட்டேயழைத்து முசே புரி, முசே பரிதி, முசே லத்தூர் இவர்கள் நாலு பேரையும் காவல் பண்ணி முசே தெப்பிரமேனி அதிகாரத்தையும் தள்ளிப்போட்டத் தன்னுடைய அதிகாரம் பண்ணிக்கொண்டு கோட்டையிலே பட்டணத்திலே யிருக்கிற சரக்குகளை யெல்லாம் கப்பலிலே ஏற்றுகிறதாகவும் சொல்தாதுகளயும் கப்பலிலே ஏற்றிவிட்டதாகவும் சொன்னார்.
இப்படி ஒடுதி தப்பி முசே லபோர்தொனே துடுக்காய் நிராகரித்து நடத்துகிற படியினாலே இருக்கிற சரக்குகளை யெல்லாம் கப்பல் மேலே ஏற்றிக்கொண்டு இங்கிலீசுக்காரருக்குக் கோட்டையை விற்றுப் போட்டபடிக்குத்தானே நடப்பித்துப் போட்டத் தானும் சீர்மைக்குப் போய்விடுவாரென்று தோற்றப்படுகிறது. அப்பால் எப்படி நடத்துவானோ தெரியாது.
இதனால் துரைக்கு இருக்கிற விசாரம் ஒரு மிதத்திலேயில்லை. ஆனால் இவர் இரண்டு வருஷமும் சென்னப்பட்டணத்தை வாங்க வேணும் என்று பிரயாசைப்பட்டு கடைசியில் முசே லபோர்தொனே தனக்கு ராசாக்கள் மினீஸ்தர்கள் ஒடுதியில்லை யென்றதற்குக் கூட தான் ராசாக்களுக்குக்கூட மினிஸ்தர்களுக்குக் கூட உத்தரித்தக் கொள்ளுகிறோமென்று பாத்தியமாய்க் காகிதமெழுதிக் கொடுத்தனுப்பி ஆக்கீருக்குச் சென்னப்பட்டணமும் பிடித்துக் கொடியும் போட்டுக் கோட்டையிலே உண்டான திரவியமும் சுற்றிக் கொண்டு கோட்டையையும் மறுபடியும் இங்கிலீசுக்காரருக்குக் கொடுத்துவிட்டு இவருடைய ஒடுதியும் இல்லாமல் இவருக்குப் பிரயோசனமுமில்லாமல் இவர் அனுப்பப்பட்ட மனுஷருக்கும் காவலும் வந்ததனால் இதைவிட துக்கம் வேறே உண்டா பிரபஞ்சத்திலே. ஆனபடியினாலே இவர் துக்கத்தக் கரைகண்டு எழுதப் போகாது. வெளியிலே யிருந்த கீர்த்திக்கும் மகா தாட்சி வந்தது.
1746 ஒக்தோபர் 10 புரட்டாசி 28 சோமவாரம்
பட்டணம் இந்த இந்திய ராச்சியத்துக்குள்ளே சென்னப்பட்டணத்துக்குச் சமானமான பட்டணம் இல்லாதத்தினாலேயும் சுவர்ண பட்டணம் என்று ராச்சியமெல்லாஞ் சொல்லுகிறபடியினாலேயும் குபேரனுடைய பட்டணம் இதுதான் என்று பார்க்கிற பேருக்கெல்லாம் தோற்றியிருக்கிற படியினாலே அப்படிப்பட்ட பட்டணத்தை இவன் மனதின் படியே கொள்ளையிட்ட படியினாலே கோடி திரவியமென்று சொன்னாலும் சரிப்பட்டிருக்கும். துரை சகல கஷ்டப்பட்டு, சகலமும் தயார் பண்ணி, கலத்திலே வடித்து சாப்பிடுகிற வேளையிலே தட்டிப்போட்டுப் பின்னையொருத்தன் சாப்பிட்ட கதையாய் முசே துய்ப்ளேக்சுக்குப் பிரயாசைப்படவும் முசே லபோர்தொனே எடுத்துப் போகவுமாகத் தீர்ந்து போனால் முசே துய்ப்ளேக்சுக்கு எத்தனை விசாரமிருக்குமோ அதற்குக் கரையிருக்கிறதா? புருஷ ஆயுசுலேயும் இப்படிப்பட்ட வாய்ப்பு வாய்க்கலாமா? வாய்க்கமாட்டாதே? அப்படிப்பட்ட வாய்ப்பு வாய்த்துத் தட்டிபோறது, பாக்கிய திசையில்லாத படியினாலே தட்டிப் போய்விட்டது. நடந்திருக்கிற சம்மதிக்கு எழுதினது பத்து லக்ஷத்திலே ஒரு பங்கு காணாது.
சென்னப்பட்டணம் இங்கிலீசுக்காரருக்கு விற்ற பணம் பதினொரு லக்ஷம் வராகன் உடன்படிக்கை யின்னதென்று நன்றாய் வெளிப்படவில்லை. வெளிப்பட்டவுடனே பிறகாலே வயணமாய் எழுதுகிறேன்.
1746 ஒக்தோபர் 12 புரட்டாசி 30 புதவாரம்
இற்றை நாள் சென்னப்பட்டணத்திலிருந்து முசே மெல்வீல் வந்தான். வந்து அவ்விடத்துச் சமாசாரம், கோட்டையை மறுபடி இங்கிலீசுக்காரருக்குக் கொடுத்ததும் முசே லபோர்தொனே புதுச்சேரி கோன்சேல் ஒடுதியைத் தள்ளி இங்கேயிருந்து போனவர்களைக் காவல் வைத்துவிட்டதும் முசே துலோராம், முசே தெப்ரமேனி, முசே பர்த்தேலேமி முதலான பேரெல்லாம் தம்பி திருவேங்கடம் கூட வருகிற சேதியும் அவர்கள் வந்து மயிலாப்பூரிலே வந்திருக்கிறதும் இப்பால் பயணம் சாகி வருகிற சாடையும் வந்து சொன்னான்.
இதுவுமல்லாமல் முசே லபோர்தொனே சகல ஆயுதத்துடனேயும் கப்பலில் சரக்கும் மற்ற தீனி முதலானதும் ஏற்றிக்கொண்டு கப்பலின் பேரிலே ஏறிப்போகப் பயணமாயிருக்கிறதும் வந்து சொன்னான். தம்பி எனக்கு எழுதின காகிதத்திலேயும் முசே தெப்பிரமேனி முதலான வெள்ளைக்காரருடனே கூட புதுச்சேரிக்குப் பயணமாய் வரத்தக்கதாக மயிலாப்பூர் வந்து சேர்ந்தோம். நாளைய தினம் புறப்பட்டு வருகிறோமென்றும் ஒருவேளை அடிபட்டால் தனக்குச் சரீரம் சுவஸ்தமில்லையென்று அழைப்பித்துக்கொள்ளச் சொல்லியும் இப்படியாக எழுதினான். துரை சீர்மைக் கப்பலின் பேரிலே யனுப்புகிறதற்குக் காகிதங்கள் எழுதுகிறதும் அவர் முகத்திலே இருக்கிற வேசடையும் காகிதத்திலே எழுதி முடியாது.
இற்றைநாள் பத்து மணிக்குச் சென்னப்பட்டணத்திலிருந்து வந்த தபாலிலே இங்கிலீசுக்காரர் கொடி மரத்தின் கீழே இரண்டு லக்ஷம் வராகன் மட்டுக்கும் புதைத்து வைத்ததாய்ப் போலேயும், அது முசே லபோர்தொனே இங்கிலீசுக்காரரை மேஸ்தர் மாசு குவர்னதோரைப் பார்த்து, நீ என்னை மோசம் பண்ணினாய். நீங்கள் எனக்கு நிசமாய்ச் சொன்னீர்களென்று நான் புதுச்சேரி குவர்னதோருடனே கூட நான் துவேஷித்துக் கோட்டையும் பட்டணமும் உங்கள் வசம் பண்ணிவைக்க வேண்டுமென்று எல்லாரையும் போகச் சொல்லி உடன்படிக்கை எழுதிக்கொடுத்து நானும் இரண்டு மூன்று நாளையிலே பயணமாய் ஏறிப்போகிறதா யிருக்கும் போது இப்படி என்னை நீங்கள் மோசம் பண்ணின மட்டுக்கும் இன்னும் என்ன என்ன மோசம் பண்ணியிருக்கிறீர்களோ தெரியாது என்று அவர்களுக்கு எழுதிக்கொடுத்த உடன்படிக்கைக் காகிதத்தையும் கிழித்துப்போட்டு மேஸ்தர் மாசு முதலான பேரையும் காவல் வைத்துப் போட்டு இறக்கின இங்கிலீசுக்காரரையும் மறுபடி கப்பலின் பேரிலே ஏற்றிப் புதுச்சேரி சொல்தாதுகளைக் கப்பலிலே இருந்த பேரை இறக்கிப்போட்டு, கெவுனி வாசல்களுக்கெல்லாம் பிரான்சுக்காரர் சொலுதாதுகளை வைத்து,
புதுச்சேரி குவர்னதோரை அவர்களுக்கு முசே லபோர்தொனே காகிதம் இங்கிலீசுக்காரர் தன்னை மோசம் பண்ணின படியினாலே தான் மோசம் போனேனென்று இப்பவும் இங்கிலீசுக்காரருக்கு எழுதிக்கொடுத்த உடன்படிக்கை காகிதம் கிழிபட்டுப் போச்சுதென்றும், இங்கிலீசுக்காரரை யெல்லாம் காவல் வைத்திருக்குதென்றும், முசே தெப்பிரமேனி முதலான பேரை யனுப்புவித்துக் கோட்டையைக் ஒப்புவித்துக்கொள்ளச் சொல்லியும் எழுதியனுப்பினா னென்றும் அதின் பேரிலே துரைக்கு இருந்த மனது வேசடையெல்லாம் போய்ச் சந்தோஷம் வந்து முசே தெப்பிரமேனி முதலான பேரை யெல்லாம் மறுபடி வழியிலே எங்கே வந்தாலும் திருப்பிக் கொண்டு போகச் சொல்லி, கோன்சேல் கூடி காகிதம் எழுதி அனுப்பிவிட்டார். இது சேதி முசே லத்தூசு முதலான பேர் சொல்லக் கேட்டது. உள் வர்த்தமானம் அவ்விடத்திலே என்ன நடந்ததோ தெரியாது. இன்னம் நன்றாய் விசாரித்துப் பிறகாலே வயணமாய் எழுதுகிறேன்.
(தொடரும்)