அரியாங்குப்பம் கொத்தளத்தைப் பிடித்துக்கொண்ட இங்கிலீஷ்காரர்களின் பீரங்கிகள் இப்போது புதுச்சேரி பட்டணத்தை நோக்கித் திரும்பின. ஒருநாள் மாலை திடீரென பட்டணத்தில் அங்கெங்கெண்ணாதபடி பீரங்கி குண்டுகள் விழுந்தன. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் அங்கும் இங்கும் ஓடினர். கும்பலின் ஊடாக ஆனந்தரங்கரும் ஓடினார். அப்போது அவரது அங்கி கிழிந்தது. இப்படிப் பயந்து ஓடியவர்கள் பெரும்பாலும் வெள்ளைக்காரர்தான். இதைப் பார்க்கும்போது ‘நம்முடைய தமிழர்கள் வெகு தைரியவான்களென்று நூறு தரம் சொல்லலாம்’ எனப் பெருமிதப்படுகிறார் ஆனந்தரங்கப்பிள்ளை.
அடுத்த நாள் காலை கடற்கரை கொத்தளத்தை ஆளுநர் துய்ப்ளேக்ஸ் பார்வையிட்டபோது சீறிப்பாய்ந்து வந்த பீரங்கிக் குண்டு ஒன்று அவருக்கு அருகிலே விழுந்தது. அவர் தாழக் கவிழ்ந்து படுத்துக்கொண்டார். நல்ல வேளை அந்தக் குண்டு வெடிக்கவில்லை. இங்கிலீஷ்காரர்களைத் திருடன், சண்டித்தாயோழி என்றெல்லாம் வசைபாடுகிறார் ஆனந்தரங்கர்.
இவ்வளவு கலவரத்துக்கு இடையிலும் ஆளுநர் துய்ப்ளேக்ஸ் மனைவி மதாம் துய்ப்ளேக்சின் தனி அரசாங்கம், ஆவர்த்தனம் தொடர்ந்தது. வீராநாய்க்கன் வீட்டுத் தோட்டத்தில் வெற்றிலை பறித்தப் பொதுமக்களிடம் இருந்து மதாமின் ஆட்கள் வலுக்கட்டாயமாகப் பறித்தனர். கொடுக்க மறுத்தவர்கள் மதாம் முன்பு கொண்டு போய் நிறுத்தப்பட்டு இங்கிலீஷ்காரருக்கு உளவு சொன்னார்கள் என்கிற பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கழுத்தில் விலங்கிடப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கலவர பீதியில் வீட்டைக் காலி செய்து ஓடியவர்கள் தங்களின் தட்டுமுட்டுச் சாமான்களைத் தோட்டத்தில் மண்ணில் புதைத்துச் சென்றனர். இவற்றைக் கொள்ளையடிப்பதையே தங்களின் முழுநேரத் தொழிலாகக் கொண்டனர் மதாமின் ஆட்கள்.
இதற்கெல்லாம் உச்சகட்ட நிகழ்வு: பட்டணத்தைவிட்டு வெளியேறிய பிராமணர், கோமுட்டிகள், வெள்ளாளர்கள் வீடுகளில் பறையர்கள் வலுக்கட்டாயமாக குடியேற்றப்பட்டனர். இதைத் தட்டிக் கேட்டவர்களை அடித்தனர். ‘அம்மாளிடம் வாருங்கள்’ என்று இழுத்தனர். இதனால், பட்டணத்திலே கலியுக அந்தியம் ஏற்பட்டு, சகல வர்ணாசிரமங்களும் தப்பிவிட்டதாக ஆதங்கப்படும் ஆனந்தரங்கர், பட்டணத்திற்கு இந்தளவிற்குக் கஷ்டதிசை கொடுத்து ஏன் கட்டளையிட்டீரோ? என்றும் சுவாமியை கேட்கிறார்!
1748 செப்டம்பர் 9 ஆவணி 28 ஆதிவாரம்
இற்றைநாள் இங்கிலீஷ்காரர் ஓர் இரண்டு பாய்மரச் சுலுப்பு அதைச் சுற்றிலும் எட்டு வத்தலும் வைத்துப் பிடித்து இன்றைய தினம் இருட்டோடே தீக்குடுக்கை எரிய ஆரம்பித்து எட்டுப் பத்து தீக்குடுக்கைகள் மாத்திரம் பட்டணத்திலே போட்டான். இதிலே ஒரு குண்டு துரையவர்கள் வீட்டிற்கு அடுத்த மேலண்டை சந்து வீதி இருக்கிறது; அந்த வீதிக்கு மேல் சின்னதுரை கிடங்கு ஒன்று. அப்பால் பீரங்கி மேஸ்திரி வீடு ஒன்று. அடுத்தாப்போலே பின்னையுமிரண்டு வீடு. வெள்ளைக்காரர் முசியே கெர்ழான் இருக்கிற வீடு முதலானது இருக்கிறது.
அதிலே பீரங்கி மேஸ்திரி முசியே புரோல் வீட்டுக் கீழண்டைச் சுவரிலே வாசற்படியண்டையிலே இருக்கிற பூவரசு மரத்துக் கிளையை முறித்துக் கொண்டு பீரங்கி மேஸ்திரி அடி சுவரிலே விழுந்தது. வெடிக்காதபடியினாலே விழுந்த அதிர்ச்சியிலே சுவர் பக்கவாய்விட்டது. அப்பால் ஒன்று துரை வீட்டுக் கீழண்டை பாரிசம் வீட்டோரத்திலே விழுந்து முசியே பெடுத்தரான் துரை எழுதுகிற வீட்டுக் கீழண்டைச் சுவர் கொற்னேசுவை பேற்றுக்கொண்டு ஓரத்திலே விழுந்தது. சுவர் கொஞ்சம் முச்சு விட்டது. அது வரும்போது நடுபாதையிலே வெடித்து அதிலே எட்டிலே ஒரு பங்கு துண்டு விழுந்ததினாலே ஆகறவாய்ப் போனது. பின்னை ஒன்று கோட்டைக்கு கீழண்டை வாசலுக்கு அடுத்த வடவண்டையிலே இரண்டு தீக்குடுக்கைகள் விழுந்து இடித்துக் கொண்டு போனது. வானூர் பாபுரெட்டி வீட்டு நடு வாசலிலே ஒரு குண்டு விழுந்து அரை அளவு புதைந்தது. பின்னை ஒரு தீக்குடுக்கை கனகராயமுதலி வீட்டுத் தெரு நாறசத்திலே பவழக்காரன் வீட்டுக்கு அடுத்தாப்போலே விழுந்தது.
இந்தபடிக்கு ஆங்காங்கே பத்து குண்டு மாத்திரம் விழுவதற்குள் வெள்ளைக்கார தெருவிலே யிருக்கிற பெண்டுகள் சமஸ்தான பேரும் நம்முடைய வீட்டுக்கு மேல் பக்கத்திலேயும் நம்முடைய வீட்டுக்கு எதிரிலே யிருக்கிற பாதிரி கோவிலிலேயும் ராவில் வருகிறதும், பகலில் மறுபடி அவரவர் வீட்டைப் போய்விடுகிறதும் இப்படி யிருந்தார்கள். மதாம் துய்ப்ளேக்ஸ் மதாம் தொத்தேலு மாத்திரம் நம்முடைய வீட்டுக்கு எதிரே இருக்கிற கோவிலிலே வீடுகள் முஸ்தீது பண்ணிக்கொண்டு தட்டுமுட்டுச் சமஸ்தமானதுகளும் கொண்டு வந்து வைத்துக்கொண்டு தீக்குடுக்கைப் போட எப்போ ஆரம்பிக்கிறார்களோ அந்த உத்திரக்ஷணமே போவோமென்று காத்துக் கொண்டிருந்தவர்கள் குண்டு எப்போ வந்து விழத் துவங்கினதோ சுருட்டி மடக்கிக் கொண்டு அஞ்சு மணி நேரமெல்லாம் ஓடிவந்து கோவிலில் சேர்ந்தார்கள். வரும்போது குண்டு விழப்போகுது சீக்கிறமத்துக்கு உள்ளே கொண்டு போ கொண்டு போ என்கிற வாக்கியத்துடனே வருகிற வெள்ளைக்கார்ச்சிகள் கோவிலுக்குள்ளே போய் எப்போ சேருவோமோ இதற்குள் என்னமோ என்ற பயத்தின் பேரிலே கோவிலுக்குள்ளே துரை பெண்சாதி முதலான பெண்டுகள் போனார்கள்.
துரையவர்களும் கோட்டைக்குள்ளே வாய்வு மூலையிலே யிருக்கிற புறாக் கூண்டின் கீழே இரண்டு காம்பிறா சின்னதிருக்கிறது. அதிலே ஒரு காம்பிராவிலே தாமும் பின்னையொரு காம்பிராவிலே சின்ன துரையும் முசியே கில்லியார் பராதி முதலான பேருக்கும் ஒவ்வொரு கட்டில் மாத்திரம் போடுகிறதற்கு இடம் பண்ணி அதற்கு சுற்றிலும் பெரிய பெரிய தேக்கு உத்திரங்களும் முழு முழு தென்னை மரங்களையும் சாத்தி அதிலே யிருந்தார்கள்.
இந்தப்படிக்கு அவரவர்கள் முஸ்தீது பண்ணிக்கொண்டு யிருந்து கடற்கரையிலேயும் வழுதாவூர் வாசற்படியிலேயும் வாணியத் தெருவு கொத்தளத்திலேயும் நடுக் கொத்தளத்திலேயும் சென்னப்பட்டணத்து வாசற்படி யண்டையிலே யிருக்கிற கொத்தளங்களிலே யிருக்கிற சட்டி பீரங்கியும் நிறுத்தி நாலு ராத்தல் குண்டு ஓடுகிற பீரங்கிகள் விடாமல் சுட்டார்கள்.
சற்றேறக்குறைய ஆயிரம் பீரங்கிக் குண்டுகள். இதிலே அவர்கள் ஒருத்தருக்கும் சேதமில்லை. ஏனென்றால் இவர்கள் போடுகிற பீரங்கி சுமார். அவர்கள் பார்த்துக்கொண்டு அதற்கப்பாலேயும் இப்பாலேயுமாக இருந்தார்கள். இந்தக் குண்டு போகமாட்டாது தீக்குடுக்கைப் போகிறது. விழுகிற சுமார் அவர்களுக்குத் தெரிந்திருக்கிற படியினாலே வெளியான படியினாலே வருகிறபோது நன்றாய் சப்தம் தெரிகிறபடியினாலே வருகிறது வெகு மெதுவின் பேரிலே வருகிறபடியினாலேயும் வரும்போது அப்புறத்திலே இடஞ்சி போகிறதினாலே ஒன்றும் செய்ய மாட்டாமல் போனது. இந்தப்படிக்கு சாயங்காலம் பரியந்திரம் இவர்கள் சுட்டு நிருத்திப் போட்டார்கள்.
சாயங்காலம் கேள்விப்பட்ட சேதி யென்னவென்றால்: கடற்கரையிலே வைத்துக் கொளுத்தின இரண்டு வெண்கல சட்டி பீரங்கியும் வெடித்துப் போனதென்றும் வழுதாவூர் வாசற்படியிலே வைத்து சுட்ட சட்டி பீரங்கியும் அடிப்பலகையெல்லாம் அணுக்கணுக்காய் போனதென்றும் அதனாலே அடிப்பலகை முஸ்தீதான பிறகு சுடவேணுமே யல்லாமல் அதற்கு முன் சுடப்போகாதென்று கடற்கரையிலே சுட்ட இருபத்தி நாலு ராத்தல் குண்டு ஓடுகிற பீரங்கிகளிப்படி நாலு பீரங்கிகள் விட்டுப்போச்சென்றும் சொன்னார்கள். இங்கிலீஷ்காரர் சாயங்கால மட்டுக்கும் பீரங்கி பாம் ஒன்றும் போடவில்லை சும்மாயிருந்தார்கள்.
… சாயங்காலமான ஆறு மணிவேளை துவக்கி தீக்குடுக்கைகள் போடும் போது நான் பாக்குக் கிடங்கிலே அன்னபூர்ணய்யன் வீராநாய்க்கன் முதலாக ஐந்தாறு பேர் தெரு வீதியிலே யிருந்து பேசிக்கொண்டு இருக்கும் போது தீக்குடுக்கை வந்தபடியினாலே நாங்களொருத்தருக் கொருத்தர் மேல் விழுந்து பாக்குக் கிடங்குக்குள்ளே ஓடினோம். அப்போ மெறிபட்டு என் அங்கி கூட கிழிந்தது. அப்போ சிறிது மிஷ்த்திசுக்கார்ச்சிகள் முதல் சட்டைக்கார்ச்சிகள் கூட குழந்தைகளை இழுத்துக்கொண்டு வந்து அழுத அழுகையும் அவர்கள் பட்ட தாபந்தமும் காகித முகாந்திரத்திலே எழுதி முடியாது.
அப்பால் அந்தக் குண்டு பாக்கு கிடங்கு எதிரே சின்னதுரை வீட்டுத் தோட்டத்திலே விழுந்தது. உடனே பின்னையொன்று அந்தச் சாடையிலே விழுந்தது. அப்பால் நாம் அங்கே இருக்கிறது உத்தமமல்ல வென்று புறப்பட்டு வீட்டுக்கு வந்தேன். அப்பால் ஒரு தீக்குடுக்கை புகையிலை கிடங்கு அண்டையிலே வந்து விழுந்து உடைந்தது. ஒன்று வந்து மிசியோனேர் கோவில் தோட்டத்திலே விழுந்தது. இப்படி மீராப்பள்ளியிலே மீர் குலாமுசேன் வீட்டு சமீபத்திலேயும் அடுத்த வீதியிலேயுமாக பத்துப் பன்னிரண்டு தீக்குடுக்கைகள் விழுந்து இரண்டொன்று கைக்கள தெருவண்டையிலே சேடத் தெருவண்டையிலே இந்தபடி சிதற பட்டணமெங்கும் போட்டார்கள்.
அவன் போடவேணுமென்றால் பட்டணத்திலே எங்கே விழப் போடவேணுமோ அங்கே விழப் போட சாமார்த்தியம் உண்டென்று தோன்றத்தக்கதாக எங்கும் விழப்பட்டன. நாலு மூலைகளிலும் போட்டான். அப்போ அந்த குண்டு வரும் போது சிறிது நடு ஆகாசத்திலே வெடித்து எட்டு துணுக்குகளாய் சிதறி விழுகிறது. சிறிது பூமியின் பேரிலே விழுந்தவுடனே வெடிக்கிறது. விழுந்து அரை அளவு ஆழம் கழுத்தளவு ஆழம் பூமியிலே பதிந்து போகிறது. இந்தப்படிக்கு விழுந்து மீராப்பள்ளியிலே நாலு இரண்டு வீட்டின் பேரிலே விழுந்து சேதப்பட்டது. சிறிது கோட்டையிலே யிருக்கிற கோவிலின் ஓரத்திலே விழும்போது வெடித்த துணுக்கு விழுந்து ஒரு பாரிசமிடித்துக் கொண்டு போனது. இரண்டொன்று அகரதையிலே விழுந்தது.
கோட்டை கீழண்டை வாசலுக்கு எதிரே விழுந்து இப்படி எங்கும் சர்வத்திரஸ்தானமாய் போட்ட பிற்பாடு ஒரு தீக்குடுக்கை கனகராயமுதலி வீட்டுத் தெருவிலே சடையப்ப முதலி வீட்டுக்குக் கீழண்டைப் பக்கத்திலே படேசாயபு வீட்டில் குடியிருக்கிற படியினாலே அந்த வீட்டிலே தெற்கு பார்த்த கூடத்திலே மேலண்டையிலிருக்கிற அறை வீட்டிலே விழுந்து கைகள் வலைச்சல் தட்டோடு எல்லாமுடைந்து சுக்கு சுக்காக்கி அந்த வீட்டிலே பெட்டி இருந்ததையும் உடைத்து இப்படி அலங்கோலம் பண்ணினது.
… மற்றபடி பட்டணத்திலுண்டான ஜனங்களை சமஸ்தான ஜனங்களும் இராத்திரி முப்பதும் அலைந்ததும் அவர்கள் துக்கப்பட்டதும் அவர்களுடைய கிலேசத்தை காகிதத்திலே எழுதி முடியாது. துரையவர்களிந்த கலாபமான வேளையிலே வெளியிலே போவதற்கு உத்தாரம் கொடாமல் போனாரென்று துக்கம் இந்த ஜனங்களெல்லாம் அது பேச்சாய்ப் பேசினார்கள்.
மற்றபடி அவன் போட்ட தீக்குடுக்கைகள் எல்லாம் நாற்பதுக்கு உண்டு. அது இப்படி சகல ஜனங்களும் அவஸ்தைப்பட்டார்கள். இந்த தீக்குடுக்கை 1-க்கு சிறிய நூற்றைம்பது ராத்தல் முதல் இருநூத்தி பத்து பதினைந்து மட்டுமிருக்கிறது. இது வரும் போது ஒரு சோதி போலவே புறப்படுகிற வேடிக்கையும் அப்பாலே மெல்ல அசைந்து அசைந்துகொண்டு அப்பாலே விழுந்தவுடனே வெடிக்கிற வேடிக்கையும் பார்க்கிறதற்கு ஒரு வேடிக்கையாகத்தானே இருக்கிறது. இத்தனை தீக்குடுக்கை விழுந்தும் ஒரு மனுஷருக்கும் சேதமில்லை. ஒருத்தருக்கும் காயம்பட்டதுமில்லை. இன்றைய தினம் இராத்திரி இப்படி நடந்தேறிப் போனது தீக்குடுக்கையினுடைய மகத்துவம். அதனுடைய சப்தமானதும் இந்த மட்டுக்கும் அது ஒருத்தருக்கும் தெரியாது. இன்றைய தினம் சிறு பெண்கள் பிள்ளைகள் சமஸ்தான பேருக்கும் தெரியவந்தது. தீக்குடுக்கை பயம் சிறிது பேருக்கு பயம் அரைவாசி தீர்ந்தது. … ஆனாலின்றைய தினம் பயந்தவர்களுக்குள்ளே வெள்ளைக்காரர் வெள்ளைக்கார்ச்சிகளுக்கு நம்முடைய தமிழர்கள் வெகு தைரியவான்களென்று நூறு தரம் சொல்லலாம்.
1748 செப்டம்பர் 10 ஆவணி 29 செவ்வாய்க்கிழமை
இற்றைநாள் காலத்தாலே ஏழரை மணிக்கு துரையவர்கள் கடற்கரைக் கொத்தளங்கள் பார்க்கப் போன விடத்திலே தீக்குடுக்கை சமீபத்திலே விழக்கண்டதும் துரையவர்கள் தாழக் கவிழ்ந்துப் படுத்துக்கொண்டார். அவரைப் போலவே மூன்று பொம்பார்தேர் படுத்துக்கொண்டார்கள். அது தெய்வாதீனமாய் வெடிக்காமல் பூமியிலே அமிழ்ந்து போனது. உடனே புறப்பட்டு துரை கோட்டைக்குப் போய்விட்டார்.
1748 செப்டம்பர் 11 ஆவணி 30 புதவாரம்
வீராநாய்க்கன் தோட்டம் வாரத்திற்கு பயிரிடுகிறவனுடையவர்களில் இரண்டு பேர் வெத்திலைத் தோட்டத்திலே எல்லாரும் போய் வெத்திலை பறிக்கிறார்களென்று அவர்களும் போய் வெத்திலை பறிக்கப்போன விடத்திலே மதாம் துய்ப்ளேக்ஸ் சேவகரும் வெத்திலை கொள்ளையிடப் போரார்கள். அவர்களிந்த இரண்டு பேரையும் கண்டு நீங்களெங்கே வந்தீர்களென்று கேட்டார்கள். இந்தத் தோட்டத்திலே பறச்சியர், பறயர்கள், சட்டக்காரர் ஏகத்துக்கு இருநூறு பேர் வெத்திலை பரிக்க வந்தோம் என்று சொல்லும் போது அவர்களைப் போலவே நாங்களும் வெத்திலை பறிக்க வந்தோம் என்று சொன்னார்கள். நல்லது நீங்கள் பறித்த வெத்திலையைக் கொடுத்து விடுங்களென்று கேட்டார்கள். நீங்கள் பறித்தது போலவே நாங்களும் பறித்தோம். நாங்களேன் உங்கள் கையிலே கொடுப்போம் என்று சொல்லி சொன்னதற்கு இவர்களிரண்டு பேர் கையிலிருக்கிற வெத்திலையைப் பிடுங்கினார்கள். நல்லது நாங்கள் போய் வீராநாய்க்கருடனே போய் சொல்லுகிறேமென்று சொன்னதற்கு அவர்கள் இவர்களைப் பின் கட்டு முறையாய்க் கட்டிக்கொண்டு வந்து மதாம் துய்ப்ளேக்ஸ் அண்டையிலே விட்டு வீராநாய்க்கன் தோட்டத்து ஆள்கள் வெத்திலை திருடி வந்தார்களென்று சொல்லி சொன்னதின் பேரிலே அதற்கு மதாம் துய்ப்ளேக்ஸ் அப்படிச் சொல்ல வேண்டாம். இங்கிலீஷ்காரருக்கு வேகு பார்க்கப் போனார்கள் என்று சொல்லச் சொல்லி அவர்கள் இரண்டு பேருக்கும் சாவடிக் கிடங்கிலே கொண்டு போய் வைத்து விலங்குப் போட்டு வைத்தார். அந்தபடிக்கு மரச்சி விலங்குப் போட்டு வைத்தார். ஆனால் பட்டணத்திலே அநியாயங்களிப்படி இருக்கிற படியினாலே சுவாமி என்னமாய் நடந்தேற விடுவாறோ நான் அறியேன்.
1748 செப்டம்பர் 19 புரட்டாசி 7 குருவாரம்
இற்றைநாள் காலத்தாலே சூரிய உதயத்திற்கு இங்கிலீஷ்கார திருடன் போட்ட தீக்குடுக்கை இரண்டும் சேன்லூய் கொத்தளத்துக்கு நேராய் வந்து வடவண்டை அகரதியிலே விழுந்துப் போனது. இற்றைநாள் இங்கிலீஷ்காரன் பாக்குமுடையான்பட்டு பறச்சேரியை மோற்சா போட்டது தெரியாமலிருந்ததே இன்றைக்கு நன்றாய் தெரிந்தது. அதைப் பார்த்து நம்முடையவர்கள் போடுகிற பீரங்கியும் படுது. போம்பூம் விழுந்து கலைத்துப் போடுகிறது. கலைத்துப் போட்டாலும் சண்டித்தாயோழி மறுபடி கொத்தளத்தை மண்போட்டு முஸ்தீது பண்ணிக்கொண்டு இருக்கிறான். அவர்கள் மனுஷர்களிலேயும் நம்முடையவர்கள் போடுகிற பீரங்கியினாலேயும் தீக்குடுக்கை யினாலேயும் வெகு மனுஷருக்கு சேதமுண்டு.
இதல்லாமல் நம்முடைய சேக்கு அப்துலாயிமான் தாலுக்கு சிப்பாய்கள் இன்று ஐந்து நாள் துவக்கி ராமார் முந்நூறு சிப்பாய்களும் அறுபத்தெழுபது குதிரை சுவார்கள் இருக்கிறவர்களும் புறப்பட்டு வடவண்டை நயினிப்ப சாவடி மட்டுக்கும் போனோமென்று சொல்லிப் போறோமென்று காண்பித்து குண்டுசாலை இதுக்குள்ளாக போயிருந்துக் கொண்டு முத்தாலுப்பேட்டையிலே அவரவர் கலகமென்று புதையல் போட்டு வைத்த தவலைகள், சொம்புகள், உலக்கை, உரல், ஏந்திரங்கள், கட்டில், புடவை, சீலைகள், பெட்டிகள், தேக்கு உத்திரங்கள், செம்மரத் தூண்கள், பூவரசம் பலகைகள், பூவரச உத்திரங்கள், வேப்பம் பலகைகள், வேப்பம் உத்திரங்கள், தென்னை மரங்கள், கொஞ்சம் நஞ்சமிருந்த பணம், காசு உடமை, தட்டுமுட்டுகள், நெல் முதலாகிய நவதானியங்கள் குழிப்போட்டு இருந்ததுகளையெல்லாம் இந்தச் சிப்பாய்களும் குதிரை சுவார்கள் மதாம் துய்ப்ளேக்ஸ் வேகு சேவகரென்று இருபது பேர் கூட போகிறவர்களும் ஏகத்துக்கு இவர்கள் காலத்தாலே கோட்டைக்குள்ளே வரும்போது பிரதி தினமும் மேலெழுதப்பட்ட தினுசுகளை அவரவர்கள் சரிபோன படிக்கெல்லாம் கொள்ளையிட்டுக் கட்டிக்கொண்டு வருவதே வேலையல்லாமல் மற்றபடி அவர்கள் வெளியே போய் சண்டை பண்ணுகிற சேதி கேட்டதுமில்லை. பார்த்ததுமில்லை.
முத்தாலுப்பேட்டை குடிகள் மேலெழுதப்பட்ட தானியம் முதலான தினுசுகள் இவர்கள் எடுக்கிறதை நாலைந்து பேர் போய்க் கேட்டதின் பேரிலே அவர்களை வேகுக்காரரென்று பிடித்துக்கொண்டு போய் மதாம் துய்ப்ளேக்ஸ் அண்டையிலே விட்டவிடத்திலே அவள் அவர்களை பேருக்கு நூறு அடி அடித்து கழுத்திலே சங்கிலியைப் போட்டு இவர்கள் சொல்லிக் கொள்ளுகிற முறைபாட்டைக் கேளாமல் மண் சுமக்கச் சொல்லிவிட்டபடியினாலே மற்ற பேர்கள் என்ன போனாலும் போகுது இங்கிலீஷ்காரன் வந்து எடுத்துக்கொண்டால் நாம் கேழ்க்கப்போகிறதில்லையே அப்படி யென்று எண்ணிக்கொண்டு சும்மாயிருக்கிறதே உத்தமமே யல்லாமல் அல்லவென்று உடமை போகுதென்று வாயைத் திறந்து சொன்னால் உடமை போகிறதும் அல்லாமல் சரீரத்துக்கு வேதனையும் வந்து அடிமைப்பட்டு விலங்குப் போட்டுக்கொண்டு மண் சுமக்க வேண்டியல்லோ பிராப்தமாகுது. ஆனபடியினாலே இந்தப் பேச்சைப் பேசுகிறதல்லவென்று அவரவர் சும்மா யிருந்துவிட்டார்கள்.
இப்படிப்பட்ட கஸ்தி சுவாமி நிரபராதியாய் இருக்கப்பட்டவர்களுக்குக் கூட கட்டளையிட்டது எது நிமித்தியமோ நான் அறியேன். இப்படி அகாரணமாய் நடத்தப்பட்ட அநீதிகளை சுவாமியினுடைய ஆக்கினை யென்று எண்ணினேன் அல்லாமல் மற்றபடி வேறே விதமாய் எண்ணவில்லை.
… முத்தியாலுப்பேட்டை முதலான இடங்களெல்லாம் கொள்ளையிட்டுக் கொண்டு குதிரைகள் சிப்பாய்களுடனே கூட வரும்போது முன்னும் பின்னுமாய் வரும்போது நம்முடைய ஊர் குடிகள் அவாளவாள் தட்டுமுட்டு கொள்ளைப் போகுதென்று பார்க்கப் போகிறவனையும் வெளியிலே அவரவர்களிருக்கிற யோக க்ஷேமங்கள் அறியத்தக்கதாகப் போக்குவரத்தா யிருக்கிறவர்களையும் இங்கிலீஷ்காரர் வேகுக்காரரென்று பிடித்துக்கொண்டு வந்து அம்மாளண்டை விட்ட மாத்திரத்தில் தன் வேகுக்கானா யிருக்கப்பட்ட திருட்டுப் பசங்கள் பேச்சை வேத வாக்கியமா யெண்ணிக்கொண்டு இது முன்னிலையாய்தான் வெகுபேரை அடிக்கவும் காதறுப்பிக்கவும் விலங்குப் போட்டு மண் சுமக்கச் சொல்லவும் தன்னுடைய அதிகாரத்திற்குப் பட்டணத்திலே யிருக்கிற ஜனங்களெல்லாம் நடுநடுங்குகிறதே ஒரு சந்தோஷமும் உற்சாகமும் மேலிடத்தக்கதாக இதனாலே மகத்தாகிய பாவம் சம்பவிக்குதென்கிற தோற்றமில்லாமல் பட்டணத்துக்குள்ளே தன் அதிகாரமே இல்லாமல் மற்றொருத்தன் வேறே துரைத்தனம் பண்ணி அவன் அதிகாரம் நடக்கிறதென்று சமஸ்த ஜனங்களும் தோற்றாதபடிக்கு அதிகாரம் பண்ணுகிறது தானென்றும் சமஸ்த ஜனங்களும் அறிய வேணுமென்கிற கருத்து எப்போதும் இருந்ததற்கு இப்போ சமயமென்று உத்தேசித்து நடத்துகிற படியினாலே பிடித்துக்கொண்டு வந்தவர்களை எவ்விடம் யார் என்று பூருவோத்திரம் கூட விளங்காமல் பிடித்த படியினாலே நூறடி இருநூறு அடி அடிப்பிக்கிறது, காதறுக்கிறது, கழுத்துக்கு விலங்குப் போட்டு மண் சுமக்கச் சொல்லுகிறதும் இந்தபடி வெகுபேரை பொழுது விடிந்து அந்திமட்டும் இது வேலையா நடத்துகிற படியினாலேயும் தமிழன் மதமென்று பேரில்லாமல் எல்லாம் சுவமதமாக்க வேணுமென்கிற புத்தியினாலே…
பிராமணாள், கோமுட்டிகள், வெள்ளாழர்கள், இப்படிப்பட்டவர்கள் இருக்கிற வீடுகளிலே யெல்லாம் பறயரைப் போய்க் குடியிருக்கச் சொல்லி அவர்கள் போய் குடியிருக்க அந்த வீட்டுக்காரர் பறயர் வரலாமா வென்று துரத்தினால் அவர்கள் போய் அம்மாளுடனே பிராது சொல்ல, அம்மாள் அந்த வீட்டுக்காரரை அழைப்பித்து ஆக்கினை பண்ணுகிற படியினாலே அவரவர்கள் வீடு போனாலும் போகுது என்ன போனாலும் போகுது. இந்த வேளைக்கு மானம் மாத்திரம் காப்பாற்றிக் கொண்டால் போதுமென்று அவர்கள் பயந்து நடுங்குகிறதை நான் என்னவென்று காகிதத்திலே எழுதப் போகிறேன்.
பட்டணத்துக்குள்ளே இருக்கிற ஜனங்கள் சொல்லிக்கொள்ளுகிறது என்னவென்றால்: கலியுக அந்தியத்திலே சகல மதங்களும் கெட்டுச் சங்கரசாதியா வர்னாஸ்ரம தர்மங்களில்லாமல் போகுமென்கிற சொல் இப்போ புதுச்சேரி பட்டணத்திலே மதாம் துய்ப்ளேக்சுனுடைய தயவினாலே இப்போதானே கலியுக அந்தியம் பார்த்தோமென்று வெகுஜனங்கள் சொல்லிக் கொள்ளுகிறார்கள்.
இந்தப்படி பட்டணத்துக்குள்ளே வர்னாஸ்ரமங்கள் தப்பியும் சகல மதங்களும் போய் சங்கர சாதியாயிருக்கவும் சுவாமிக்குச் சித்தமிராவிட்டால் முசியே துய்ப்ளேக்சுனுடைய அதிகாரம் நின்று மதாம் துய்ப்ளேக்ஸ் அதிகாரம் பண்ணத்தக்கதாக புறப்பட மாட்டாளென்றும் தோத்துது. இப்படிப்பட்ட அநியாயங்கள் பட்டணத்திலே நடக்கத்தக்கதாக அவனவன் தான் தான் துரையாய் அதிகாரம் செலுத்துகிறதும் பட்டணத்திலே காப்பிரிகள், சிப்பாய்கள், வெள்ளைக்காரர், சட்டைக்காரர் அவரவர் சரிபோனபடிக்கு அம்மாள் வேகுகார ரென்று நூறுபேர் கூட வீடுகளிலே பூராவும் கொள்ளையிடவும் பிராமணாள் கோமுட்டிகள் வெள்ளாழர்கள் செட்டிகள் இப்படிப்பட்டவர்கள் வீடுகளிலே பறயர் போய் குடியிருக்கவும் ஸ்திரீ ஜனங்களை பலவந்தமாய்க் கெடுக்கவும் இதுகளுக்கு தாது பிராது யில்லாமல் போனதென்னவென்றால்,
மற்றபடி அவனவன் காபிரி சட்டைக்காரன் வெள்ளைக்காரன் கோடாலி மண்வெட்டி எடுத்துக்கொண்டு வருவதும் தெருவிலே யிருக்கிற தென்னை மரங்களை வெட்டுகிறதும் குருத்தெடுத்துக் கொள்ளுகிறதும் போட்டுவிட்டு போகிறதுமல்லாமல் மரத்தை வீட்டின் பேரிலே தள்ளிப்போட்டுப் போகிறதினாலே அது வீட்டின் மேலே விழுந்து சேதப்படுத்துவதும் அப்படி சிறிது வீடுகள் சேதப்பட்டுப் போனது. தன்னரசு நாடாயிருக்கிற இப்போ புதுச்சேரி பட்டணம் முசியே துய்ப்ளேக்ஸ் குவர்னதோரிடமில்லை. மதாம் துய்ப்ளேக்சாம் காட்டும் மதாம் துரைத்தனம் பண்ணுகிறாள்.
அதினாள் அவள் மனுஷர் ஊரிலே அவரவர் வீட்டிலே புகுந்துக் கொள்ளையிட்டால் அம்மாள் மனுஷரை ஒருத்தரும் பேசப்போகாது. அல்லவென்று எவனாவது இங்கிலீஷ்காரனல்லவே வந்து கொள்ளையிடுவானென்று பத்திரம் பண்ணினோம், நீங்கள் தானே கொள்ளையிடுகிறீர்களாவென்று கேட்டால் அவனைக் கட்டாய்க் கட்டுகிறதும் வேகுக்காரனென்று கொண்டு போய் அம்மாளண்டையிலே விடுகிறதும் அவன் காதறுக்கிறதும் நூறு இருநூறு அடி அடிப்பிக்கிறதும் கழுத்துக்குக் காலுக்கு சங்கிலியை ரெவ்வெண்டு பேருக்குப் பின்னலாய் மாட்டுகிறதும் மண் சுமக்க விடுகிறதும் இப்படியாக இருக்கிற படியினாலே எவர்களும் தன்னைத்தான் தப்பித்துக் கொண்டால் போதும் என்ன போனாலும் போகட்டுமென்று இருக்கிறார்கள்.
… இந்தபடிக்குப் பட்டணத்திலே நடக்கிற அலங்கோலத்தைக் காகிதத்திலே என்னவென்று எழுதப் போகிறேன். இப்படி அலங்கோலம் வந்த காரியமென்ன? பிரபுவுக்கு இப்படி பட்டணத்துக் காரியத்தை சரிபோனவன் சரிபோனபடிக்குக் கொள்ளையிட்டுக்கொள்ளச் சொல்லச்சொல்லி புத்தி வந்ததென்னவென்றால்: இவர் சுவாபமே யிப்படி. அது எனக்கு நன்றாய் தெரியும். இப்படி துரைத்தனத்திலே கலாபம் வந்ததென்ன வென்றால்: முன் அக்ஷய புரட்டாசி 9உ (செப்டம்பர் 1746) சென்னப்பட்டணம் இவர்கள் வாங்கி அந்தப் பட்டணத்திலுண்டான ஜனங்களெல்லாம் எப்படி பிராஞ்சுக்கார மனுஷர் போய்க் கொள்ளையிட்டு அவரவர்களெப்படி அந்தப் பட்டணத்தார் அலைந்தார்களோ அந்தபடிக்கு இங்கிலீஷ்காரன் வாங்கிக்கொண்டு அந்தப்படிக்கு கொள்ளையிட்டு இந்தப் பட்டணத்து ஜனங்கள் அலைந்தும் கொள்ளைக் கொடுத்து வலசை போயும் சேதப்பட்டு கெட்டுப்போக வேணும்.
அதற்கு புதுச்சேரிக்கு கஷ்டதிசை மாத்திரமே யல்லாமல் நாசப்படுகிறதற்கு இல்லாத படியினாலே இங்கிலீஷ்காரன் வசமாய் அந்த அநுபவம் இந்தப் பட்டணத்திற்கு இங்கிலீஷ்காரரைத் தொட்டு இல்லாததினாலே நம்முடையவர்களைத் தொட்டடுத் தானே பட்டணத்திற்கு இந்த அவஸ்தை யெல்லாம் சுவாமி கட்டளையிட்டார் என்று எண்ணுகிறது மல்லாமல் சுவாமிக்கு அவனெப்போது முன் சுபாவம் அளந்த நாழிகைக்கொண்டு அளப்பான் என்று ஞாயம் லோகப்ரசித்தமாய் இருக்கிற படிக்கு அநேக விடத்திலே நடந்திருக்கிற படியினாலே இது சமஸ்தமான ஜனங்களும் அறிந்திருக்கிற படியினாலேயும் இதை நான் விஸ்தரித்து எழுத வேண்டியதென்ன? விவேகிகளா யிருக்கிறவர்கள் இதன் பேரிலே பார்த்துக்கொள்ளுகிறார்கள். அவ் விவேகிகளா யிருக்கிறவர்களுக்கு எழுதினாலும் தெரியப்போவதில்லை. ஆனபடியினாலே சூக்ஷமமா யெழிதினேன்.
(தொடரும்)