Skip to content
Home » ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #31 – சென்னை கோட்டையில் கிடா வெட்டு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #31 – சென்னை கோட்டையில் கிடா வெட்டு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

சொந்த நாட்டு மக்களிடமே கொள்ளையடித்த ராணுவத்தைப் பற்றி, சென்னைப் பட்டணத்தில் பிரெஞ்சு படையினர் நடத்திய அட்டூழியத்தைப் பற்றியெல்லாம் ‘குபேரன் பட்டணம் இப்படிக் கொள்ளைப் போகிறது’ எனும் ஆனந்தரங்கரின் ஆதங்கத்தையும் கடந்த பதிவில் விரிவாகப் பார்த்தோம்.

சென்னைப் பட்டணத்தைத் தரைமட்டமாக்க வேண்டும்; இங்கிருந்து வெளியேறுபவர்களைப் புதுச்சேரியில் குடியமர்த்தி அந்தப் பட்டணத்தை அகண்ட பட்டணமாக்க வேண்டும் என்பதே பிரெஞ்சு ஆளுநர் துய்ப்ளேக்சின் கனவு. ஆனால் இது நிறைவேறவில்லை. பிரான்சில் (பிரெஞ்சு, பிரிட்டிஷ்) ராஜாக்களிடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி சென்னைப்பட்டணம் கிழக்கிந்திய கம்பெனி வசம் மீண்டும் ஒப்படைக்க வேண்டியதாயிற்று.

இது தொடர்பான கடிதப் போக்குவரத்துகள் 1749 ஜூலை இரண்டாவது வாரத்திற்குப் பிறகு நடந்தேறின. இது, ஆளுநர் துய்ப்ளேக்சுக்கு பெரும் விசனத்தை ஏற்படுத்தியது. பட்டணத்தை ஒப்படைப்பதற்குத் தவணை கேட்டு இங்கிலீஷ்காரர்களுக்குக் கடிதம் எழுதினார். இதற்கிடையில் சென்னையின் நிர்வாகப் பணிக்குப் போயிருந்த பிரெஞ்சு அதிகாரிகள் தட்டுமுட்டுச் சாமான்களுடன் புதுச்சேரி திரும்பினார்.

ஆமாம்: 1749 செப்டம்பர் மாதம் முதல் தேதி திங்கட்கிழமையன்று சென்னைக் கோட்டை இங்கிலீஷ்காரர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் இரண்டு வருஷம் பதினொரு மாதம் பத்து நாள், பிரெஞ்சு ஆட்சி முடிவுக்கு வந்தது. இதற்கு முன்பு நூற்று இருபத்தொரு வருஷமும் ஐந்து மாதத்துக்கு இங்கிலீஷ்காரர் ஆட்சி சென்னப்பட்டணத்தில் நடந்தது என்கிறார் ஆனந்தரங்கர். இது, அவரது வரலாற்று அறிவை நமக்குக் காட்டுகிறது.

சென்னை கோட்டையில் இங்கிலீஷ்காரர் மீண்டும் கொடி போட்டவுடன், ‘அந்தக் கொடி போடுகிற வேளைக்கு அநேகம் தமிழர்களும் துலுக்கர்களும் சோணகர்களும் பட்டணவர்கள் கூலிக்காரர் முதலாய் பத்து லக்ஷம் பிரஜைகள் வந்து நிரம்பிப் போனதாக’ சொல்கிறார் ஆனந்தரங்கர்.

கொடி போடுவதற்கு முன்பாக, கோட்டையில் பிராமணர்களைக் கொண்டு தேங்காய் உடைத்துப் பூசைகள் நடைபெறுகின்றன. மேலும், ஆடுகள் வெட்டி பலியிட்டு தமிழர் முறைப்படி என்னென்ன சடங்குகள் செய்ய வேணுமோ அவற்றையும் செய்தனர். மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட இங்கிலீஷ்காரர்கள் சகல ஜனங்களுக்கும் தமுக்கு போட்டுச் சொன்னது: ‘தீர்வை வரி மற்றும் சகல சரக்கு வீட்டு வரி குப்பை வரி முதலானது களென்ன என்ன உண்டோ அதுகளெல்லாம் இன்னும் ஐந்து வருஷத்துக்கு செலுத்தத் தேவையில்லை.‌’

‘பட்டணத்துக்குள்ளே குடியிருக்கிற ஜனங்கள் வந்து நிரம்பினாலும் பழய சென்னைப்பட்டணமாக இன்னம் இருபது முப்பது வருஷம் செல்லாமல்படி சுவர்ண பட்டணமாகமாட்டாது. அது எதனாலென்றால் நூற்று இருபத்தொரு வருஷம் பட்டணமானது எடுபட்டுப் போய் சின்னாபின்னமாய் தெரித்துப் போய் மறுபடி பழையப்படி யாகிறது விளையாட்டிலே யிருக்கிறதா?’ என்றும் கேட்கிறார் ஆனந்தரங்கர்.

இவற்றினூடாக ‘கோல்கொண்டா விசாபுரம் ஆற்காடு முதலான பட்டணங்கள் அழிந்து ஒரு சென்னைப் பட்டணமாச்சுது’ எனும் தகவலையும் பதிவு செய்கிறார் ஆனந்தரங்கர்.

இதற்கிடையில் சென்னை கோட்டை தங்கள் வசமான தகவல் செப்டம்பர் 3ம் தேதி தான் தேவனாம் பட்டணத்திலுள்ள இங்கிலீஷ்காரர்களுக்குக் கிடைத்தது. அந்த சந்தோஷத்தை வெளிப்படுத்தி அவர்கள் விஸ்தாரமாய் போட்ட பீரங்கி குண்டுகள் சத்தம் புதுச்சேரியில் கேட்டது!

சென்னைப்பட்டணம் இங்கிலீஷ்காரர் வசமானமானதைச் சொல்லும் பதிவிலிருந்து அடுத்த மூன்று (செப்டம்பர் 5 முதல் 8 வரையிலான) நாட்களுக்கான குறிப்புகள் ஆனந்தரங்கரின் நாட்குறிப்பில் இல்லை. அவை இருந்திருந்தால் ஆங்கிலேயரிடம் சென்னை ஒப்படைத்தது குறித்த மேலும் பல தகவல்களை நாம் அறிந்துகொள்ள ஏதுவாக இருந்திருக்கும்!

சுக்கில ஆடி 6 1749 சூலை 18 சுக்கிரவாரம்

… அப்பால் இங்கிலீஷ்காரருக்கு எட்டு நாளைக்குள்ளாக இரண்டு கப்பல் சீர்மையிலிருந்து வந்ததே அதிலே சென்னைப்பட்டணம் ஒப்பித்துக்கொள்ளச் சொல்லி சேதி வந்தது. …

சுக்கில ஆடி 7 1749 ஜூலை 19 சனிவாரம்

இற்றைநாள் காலையில் துரையவர்களிடத்தில் போனவிடத்திலே அவர்கள் மேஸ்தர் புஸ்காவேன் அனுப்பின காகிதத்துக்குப் பதில் எழுதுகிறதற்கு கோன்சேல் பண்ணி பதில் காகிதமெழுதிக் கொடுத்து அங்கேயிருந்து வந்த சோபுதார் மூன்று நாளாய் காத்திருந்தவன் கையில் கொடுத்துப்போகச் சொன்னார்கள். இந்த காகித சேதி பார்த்தால் அவர்கள் சென்னைப்பட்டணம் ஒப்பிச்சுக் கொள்ளச் சொல்லி தங்களுக்கு சீர்மையிலிருந்து ஏழெட்டு நாள்களுக்கு முன்பாக வந்த சீர்மை கப்பலிலே வந்த சேதி யெழுதினதாக வேணும். அதற்கு அவர்களப்படியே ஒப்புச்சுப் போடுகிறோம். எங்களுக்கு கப்பல் வருகிறதற்கு நாழிகை கெடுவின் பேரிலே யிருக்கிறது. அப்படியே வந்த உடனே அதன் பேரிலே எங்களுக்கு வருகிற காகிதம் பார்த்துக்கொண்டு ஒப்பித்துப் போகிறோமென்று எழுதினார்களே அல்லவென்று அதிலே யாதொரு தவணை எழுதியிருந்து அந்த தவணைபடிக்கு ஒப்பித்து போகுகிரோமென்று எழுதினார்களே. இதிலே இரண்டிலே ஒன்று எழுதியிருக்க வேண்டுமென்று தோற்றுவது. …

சுக்கில ஆடி 11 1749 ஜூலை 23 புதவாரம்

இற்றைநாள் காலையிலே பிரபுவுனிடத்திலே போனவிடத்திலே பிரபு அலுவலாயிருந்த படியினாலே பாக்குக் கிடங்குக்கே வந்தேன். ஆனால் மூன்று நான்கு நாளாய் வெகு யோசனையின் பேரிலே யிருக்கிறதாய் தோற்றி யிருக்கிறது. அது எதனாலென்றால்: சென்னப்பட்டணம் முசியே லபோர்தொனே ஒப்பித்து வந்தபடிக்கு சென்னப்பட்டணத்தை இங்கிலீஷ்காரருக்கு ஒப்பித்துப் போடச்சொல்லி சீர்மையிலிருந்து மாஸிஸ்தருகான் எழுதி கொடுத்த காகிதத்தை மேஸ்தர் புஸ்காவேன் அனுப்புவித்து ஒப்பிக்கச் சொல்லி எழுதியனுப்பின படியினாலே அதற்கு பதிலுத்தாரம் எங்களுக்கு கப்பல் ஏழெட்டு நாளையிலே வரும். வந்தவுடனே அதன் பேரிலே வருகிற காகிதங்களைப் பார்த்துக்கொண்டு உங்கள் பட்டணம் உங்களுக்கு ஒப்பித்துப் போடுகிறோம் என்று எழுதியனுப்பின படியினாலே முசியே லபோர்தொனே ஒப்பித்தும் போனபடிக்கு ஒப்பித்துப் போடச்சொல்லி எழுதிவந்த படியினாலே பிற்பாடு வீடுகளெல்லாம் பிடித்துப் போட்ட படியினாலே வீட்டுக்கிரயங்கள் கொடுக்க வேண்டி வரப்போகுதென்று அந்தப் பிக்காரமிலே மனதுக்கு விசாரமாயிருக்கிறதாய் சொல்லிக்கொள்ளுகிறார்கள்.

சுக்கில ஆவணி 23 1749 செப்டம்பர் 4 குருவாரம்

இந்த நாள் பகலுக்கு மேலாக முசியே பெடுத்தல்மி முசியே மோறா முதலான சென்னைப்பட்டணம் கொம்மாந்தாம் இரண்டாவது சொல்தாது கப்பித்தான் மாரி சேருவைக்காரன் முதல் கூலிக்காரர் முதலாய் இவ்விடத்திலிருந்து சென்னப்பட்டணம் பிரான்சுகாரதானப் பிற்பாடு போயிருந்தவர்கள் சமஸ்தான பேருக்கும் அவரவர் தட்டுமுட்டுகள் சட்டிப்பானை உட்பட முன் அனுப்பிவிட்டது போக மற்றதுகளிருக்கிறதை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தார்கள். அப்பால் நாலரை மணிக்கு கோட்டைக்கு துரையவர்களண்டைக்குப் போய் சந்தித்துக் கொண்டு முசியே பெடுத்தல்மி முசியே மோறா முசியே குப்பி சொல்தாது கப்பித்தான் முசியே லொத்திசு இவர்கள் நாலு பேரும் துரையவர்களுடனே சொன்னதென்னவென்றால்:

நாளது செப்டம்பர் மாத முதல் தேதி திங்கட்கிழமையன்று சென்னப்பட்டணம் கோட்டையும் பட்டணமும் இங்கிலீஷ்காரர் முசியே லேரென்சு தேவனாம்பட்டணம் மேஜர் அரியாங்குப்பத்து சண்டையிலே அகப்பட்டு பிரிசோன்னாயிருந்து அப்பால் சென்னப்பட்டணம் ஒப்பிக்கொள்ளுகிற நிமித்தியம் இவ்விடத்திற்கு வந்து சென்னைப்பட்டணம் செப்டம்பர் முதல் தேதி ஒப்பித்துக்கொள்ளுகிறதற்கு உடன்படிக்கை பண்ணிக்கொண்டு போன மேஸ்தர் லேரென்சு நாளாகிய செப்தம்பர் முதல் தேதி திங்கட்கிழமை எட்டு மணி வேளைக்கு அவர்களிங்கே ரெசு போடச்சே பிராமணர்கள் வந்து பூசைபண்ணி தேங்காயுடைத்து ஆடுவெட்டி பலியிட்டு என்ன என்னமோ தமிழ்ச்சடங்குகள் செய்து கொடி போட்டார்களென்று அப்பால் கோட்டையிலே இருக்கிற பீரங்கிகளும் கப்பல்களிலே இருக்கிற பீரங்கிகளும் ஏக வேளையிலே விபரீதமாய் சுட்டார்களென்றும் முன் சென்னப்பட்டணத்திலிருந்து வெளியே போயிருந்த தமிழர்கள் நம்முடைய நாளையிலே ஒருத்தராவது வராது இருந்தவர்களெல்லாம் எங்கே யிருந்தார்களோ அந்த கொடி போடுகிற வேளைக்கு அநேகம் தமிழர்களும் துலுக்கர்களும் சோணகர்களும் பட்டணவர்கள் கூலிக்காரர் முதலாய் பத்து லக்ஷம் பிரஜைகள் வந்து நிரம்பிப் போய் அவரவர்களுக்குத்தான் கோட்டையும் பட்டணமும் வந்தாப்போலே அந்த ஜனங்களுடைய சந்தோஷத்தையும் அவர்களங்கே நடப்பித்த தமிழ் சடங்குகளையும் சொல்லி அப்பால் மேஸ்தர் புஸ்காவேன் அமிரால் மலாட்டு என்கிற ராஜாவினுடைய இஸ்காதுக்கு தலைவன் முதலான பேர்களும் கும்பினீரை சேவித்த மேஸ்தர் மார்சு முதலான இங்கிலீஷ்காரர்களும் இறங்கி மத்தியானத்துக்கு சாப்பிடுகிறதற்கு என்னைக் கூட இருக்கச் சொன்னார்கள்.

அதற்கு முன்பாக நான் தவிர மற்ற சமஸ்தமான பேரும் மயிலாப்பூரிலே போயிருந்து நான் வருகிற மட்டுக்கும் காத்துக் கொண்டிருந்தார்களென்றும் அப்பால் நான் பகலுக்கு சாப்பிட்டு இங்கிலீஷ்காரருடனே மூன்று மணிக்கு புறப்பட்டு வந்தேனென்றும் இங்கிலீஷ்காரர் பட்டணத்துக்குள்ளே வந்து கோட்டையிலே கொடி போட்ட உடனே சகல ஜனங்களுக்கும் சொன்னது என்னவென்றால் ஐந்து வருஷத்துக்கு தீர்வை வரி முதலானதுகள் சகல சரக்கு வீட்டு வரி குப்பை வரி முதலானதுகளென்ன என்ன உண்டோ அதுகளெல்லாம் கவையில்லை யென்று தமுக்கு போட்டுவிச்சார்களென்று இதுமுதலான சேதிகளெல்லாம் துரையவர்களுடனே சொல்லிக் கொண்டிருந்து கோட்டையிலிருந்து துரையவர்களுடனே கூட வீட்டுக்கு வந்தார்கள்.

ஆனால் இங்கிலீஷ்காரர் முன் இந்தியாவுக்கு வந்து சென்னபட்டணத்திலே வந்து கொடி போட்ட நூற்று இருபத்தொரு வருஷமும் ஐந்து மாதத்துக்கு பிற்பாடு புறப்பட்டு பட்டணத்துக்கு இந்த கேடு வந்து முன் அக்ஷய புரட்டாசி 9 புதவாரம் நாள் 1746 செப்டம்பர் 29 பிரான்ஸ் கொடி பறக்க பிரான்சுகாரர் வசமாய் முசியே லபோர்தொனே சண்டை போட்டு மேஸ்தர் மார்சு கொவர்னதோர் வசத்திலே ஒப்புக்கொண்டு மறுபடி இங்கிலீஷ்காரருக்கும் பிரான்சுகாரருக்கும் முன் 1748 (ஒக்தோபர் 17) விபவ வருஷம் ஐப்பசி 5 சீர்மையிலே ராஜாக்கள் சமாதானமாய் கையெழுத்துப் போட்டுக்கொண்டு சென்னப்பட்டணம் ஒப்புவித்துப் போடச் சொல்லி எழுதி வந்து இங்கிலீஷ்காரர் மேஸ்தர் புஸ்காவேன் முதலான பேர் போய் ஒப்பித்துக்கொண்டது. 1749 செப்டம்பர் முதலுக்கு சுக்ல ஆவணி 20 சோமவாரம் நாள் ஒப்பித்துக் கொண்ட மட்டுக்கும் வருஷம் மூன்றுக்கு குரைச்சல் நாள் இருப்பதொன்று இந்த ரெண்டு வருஷம் பதினோரு மாதம் பத்து நாளும் சென்னப்பட்டணம் பிரான்சுக்காரர் துரைத்தனம் சொல்லவும் வெள்ளைக்காரர் கொடி பறக்கவும் சங்கல்பம் இருந்த படிக்கு நடந்தது.

அப்பால் எப்போதையும் போலே இங்கிலீஷ் கொடி பறக்க பிராப்தியான படியினாலே இங்கிலீஷ் கொடி போட்டுக்கொண்டு இங்கிலீஷ்காரரும் சென்னைப்பட்டணம் போய் சேர்ந்தார்கள். ஆனபடியினாலே மனுஷ வல்லமை படிக்கு ஒன்றும் நடக்கத்தக்கதல்ல. சுவாமி ஆதியிலே சங்கல்பித்தபடிக்கு நடக்கப் போகிறது என்பது விவேகிகளாயிருக்கிற பேர்கள் கெட்டியா யெண்ணுவார்கள். ஆனால் பட்டணம் கஷ்டகாலம் வந்து ஒரு கொடி போய் மறு கொடியானதினால் வீடுகள் முதலானவைகளெல்லாம் இடிபட்டுப் போனதுமல்லாமல் கனமான வர்த்தகர்கள் வெளியே புறப்பட்டு திரவியங்களைப் போக்கடித்துக் கொண்டு போனதுமல்லாமல் அனேகம் பெரிய மனுஷர்கள் எல்லாம் செத்துப் போனார்கள். ஆனபடியினாலே பட்டணத்துக்குள்ளே குடியிருக்கிற ஜனங்கள் வந்து நிரம்பினாலும் பழய சென்னைப்பட்டணமாக இன்னம் இருபது முப்பது வருஷம் செல்லாமல்படி சுவர்ண பட்டணமாகமாட்டாது. அது எதனாலென்றால் நூற்று இருபத்தொரு வருஷம் பட்டணமானது எடுபட்டுப் போய் சின்னாபின்னமாய் தெரித்துப் போய் மறுபடி பழையப்படியாகிறது விளையாட்டிலே யிருக்கிறதா. கோல்கொண்டா விசாபுரம் ஆற்காடு முதலான பட்டணங்கள் அழிந்து ஒரு சென்னைப்பட்டணமாச்சுது.

இதல்லாமல் இப்போ தீவு தீவாந்திரங்களெல்லாம் நூறுக்கு இரனூறு ஆதாயம் வந்து அவனவன் வெகு பணம் நாளது வரையிலே சம்பாதித்து இப்போ தீவாந்திரங்கள் மணிலா மொச்சா முதலான இடங்களெல்லாம் முதல் பணம் வருகிறது ரொம்பவும் பிரயாசையாயிருக்கிற காலமானபடியினாலே இப்போ சென்னப்பட்டணமே யல்லாமல் பழய சுவர்ண பட்டணம் இப்போதுக்கெல்லாம் ஆகமாட்டாது போலே என் புத்திக்குத் தோற்றினபடிக்கு எழுதினேன். ஆனால் சுவாமி என்ன பண்ணுகிராறோ நானறியேன்.

சென்னப்பட்டணம் இங்கிலீஷ்காரர் வசமான சேதி நேத்துதான் தேவனாம்பட்டணத்துக்கு வந்தது. அவர்களும் கோட்டையிலே பீரங்கிகள் விஸ்தாரமாய் சுட்டது இங்கே கேட்டது.

(தொடரும்)

பகிர:
கோ. செங்குட்டுவன்

கோ. செங்குட்டுவன்

விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து வசித்து வருபவர். ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்று அமைப்புகளில் பங்கேற்று இயங்கி வருபவர். 'சமணர் கழுவேற்றம்', 'கூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள்' உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு : ko.senguttuvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *