Skip to content
Home » ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #36 – சந்தா சாகிப் விடுதலைக்கு 22 லட்சம்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #36 – சந்தா சாகிப் விடுதலைக்கு 22 லட்சம்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

சந்தா சாகிப். ஆற்காடு நவாபுகளில் குறிப்பிடத்தக்கவர். பிரெஞ்சு ஆதரவாளர். புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்சின் நண்பர்.‌ ஒருமுறை புதுச்சேரி வந்த சந்தா சாகிபின் வைத்தியர் பிரான்சிஸ்கோ பெரோரா என்பவர் ஒரு லட்சம் வராகனை துய்ப்ளேக்சிடம் கொடுத்தார். இதன் மூலமான வட்டி வருவாயை நவாப் எதிர்பார்த்தார். இப்படி வட்டிக்குக் கொடுத்துவிட்டு பின்னர் இதே அளவுக்கு அவர்கள் வியாபாரம் செய்யப் போகிறார்கள் என்கிறார் ஆனந்தரங்கர்.

பின்னர் ஒருநாள் சந்தா சாகிப் சார்பில் திருவதி பாலு செட்டியார் புதுச்சேரி வந்து ஆளுநரைச் சந்தித்தார். அப்போது அவரிடம் “சந்தாசாகிப் எப்படி இருக்கிறார்” என்று விசாரித்தார் துய்ப்ளேக்ஸ். முஸ்லிம் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் மராத்தியரின் தாக்குதல் நடந்தது. எனவே அந்தப் பகுதிகளில் இருக்கும் கோட்டைகளில் இருந்து ஆளுகிறவர்களின் உறவினர் குறிப்பாக பெண்கள், புதுச்சேரியில் தஞ்சம் புகுந்தனர். இப்படியாக சந்தா சாகிப் மனைவியும் 1740 ஜுலையில் புதுச்சேரி வந்தார்.

1740 செப்டம்பரில் புதுச்சேரி வந்த சந்தா சாகிப் சுமார் 15 நாட்களுக்குப் பிறகு புறப்பட்டு ஆற்காடு சென்று அங்கிருந்து திருச்சிக் கோட்டையைச் சென்றடைந்தார். அடுத்த சில மாதங்களில் மராத்தியரின் முற்றுகைக்கு உள்ளானது திருச்சிக் கோட்டை. இதில் சிக்கிக்கொண்ட சந்தா சாகிப், நிருவாகம் செய்ய முடியாமல் முடங்கிக் கிடப்பதாகவும், பணம் கொடுத்து மராத்தியர்களுடன் உடன்படிக்கை ஏதாவது செய்யாததால் தான் தன்னால் உயிரோடு தப்பிக்க முடியும் என்றும் ஆற்காட்டிற்கு கடிதம் எழுதினார். இதனைத் தொடர்ந்து சந்தா சாகிப் மனைவி உள்பட பலரிடமும் ரூ. 22 லட்சம் வசூல் செய்து சந்தா சாகிபை விடுவிப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில் ரகசியமாக கோட்டையில் இருந்து வெளியேறிய சந்தா சாகிப், மராத்திய மன்னரிடம் சரணடைந்தார். அவரது கத்தியை வாங்கிக் கொண்ட மன்னர், தஞ்சையில் சாதாரண காவலில் வைத்தார். இந்தத் தகவல் அறிந்த துய்ப்ளேக்ஸ் பெரிதும் அங்கலாய்த்தார். இச்சம்பவம் நடந்த சில நாட்களில் புதுச்சேரியில் இருந்து தஞ்சாவூர் அரசருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில் குறிப்பிட்டிருந்த விவரம் தெரியவில்லை. மேலும் தொடர்ந்து இங்கிருந்து அங்கும் மராத்திய அரசாங்கத்தில் இருந்து இங்கும் கடிதம், ஆள் போக்குவரத்து நடந்து வந்தது. ஆனாலும் சந்தா சாகிப் குறித்து இருதரப்பும் ஏதும் பேசவில்லை எனத் தெரிகிறது.

இதன் பிறகு சுமார் 5 ஆண்டு காலம் சந்தா சாகிப் குறித்த தனிப்பட்ட குறிப்புகள் ஏதும் ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் இல்லை.. 1746 நவம்பரில் துய்ப்ளேக்சுக்குக் கடிதம் எழுதிய போளூர் மமுதலி (முகமது அலி) சந்தா சாகிபை விடுவிக்க தங்களால் ஆன பிரயத்தனம் செய்து வருவதாகவும் நீங்களும் பிரயத்தனம் செய்யுங்கள் என்றும் வலியுறுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மன்னர் உள்ளிட்டவர்களுக்கு சந்தா சாகிபை விடுதலை செய்யக்கோரி ஆளுநர் துய்ப்ளேக்ஸ் கடிதம் எழுதினார். இக்கடிதத்தை புதுச்சேரியில் இருந்த சந்தா சாகிப் கணக்கர் ரகோ பண்டிதரைக் கொண்டு எழுதப்பட்டது. இதனை ஆனந்தரங்கர் சரிபார்த்தார்.

இதற்கிடையில் சந்தா சாகிப் மகள் திருமணத்திற்கான ஏற்பாடுகள் புதுச்சேரியில் நடந்தன. தேவையான உதவிகளை ஆளுநர் துய்ப்ளேக்ஸ் செய்தார். இந்நிலையில் 1747 ஜனவரியில் தனக்கு ரூ.ஐம்பதாயிரம் கடன் தர வேண்டும் எனும் வேண்டுகோளை தனது மகன் மூலமாக ஆளுநர் துய்ப்ளேக்சிடம் வைத்தார் சந்தாசாயபு. பிரெஞ்சு அரசாங்கத்திற்கு ஒரு லட்சம் கடன் கொடுத்தவர், இப்போது அதே அரசாங்கத்திடம் 50,000 கடன் கேட்கிறார்!

இந்தப் பணம் கொடுக்கப்பட்டதா? சந்தா சாகிப் விடுதலை செய்யப்பட்டாரா? பின்னாட்களில் அவரது நிலை? போன்ற விவரங்களை அடுத்தப் பதிவில் பார்க்கலாம்!

1738 ஜுலை 9 ஆனி 29 புதன் கிழமை

இன்றைய மத்தியானம் பிறான்சிஸ்கோ பிரோரா சந்தா சாகிப்புவின் வைத்தியன். சந்தா சாகிப்பு, குவர்னர் துரைக்கு அனுப்பிய வெகுமானத்தைக் கொண்டு வந்தான். முசே இங்கிராமும், முசே கோலாரும் மேளதாளம் நல்ல தட்டுமுட்டு இந்த வாத்தியங்களுடனே திருவேங்கடபிள்ளை அவர்கள் தோட்டத்திலே அந்த ஹக்கீம் இறங்கியிருக்கிற சமயம் அந்த மட்டுக்கும் போய் அந்த வெகுமானம் பிடிச்சுக் கொண்டு வழுதாவூர் கேட்டு வாசலிலே வரச்சே ஏழு பீரங்கி போட்டார்கள். அப்புறம் துரை வீட்டுக்குப் போய் படியின் மேலே ஏறிப்போய் மேலே போனவுடனே துரை எதிரே கட்டிக்கொண்டு வந்து நடு சால்லே அழைத்துக்கொண்டு போய் பாங்கு மேல் உட்கார்ந்தவுடனே பதினேழு பீரங்கி போட்டார்கள்.

இவர் கொண்டு வந்த வெகுமானம் என்னவென்றால்: ஒரு முடிச்சு பட்டு சட்டகமாய் மாட்டியிருக்கிறது. அது நூற்றுக்கு மேலே பெறும். ஒரு பாகை பத்து வராகன் பெறும். அதன் மேல் ஒரு கச்சையும் அப்படித்தான் இதுக்கு முன்னே ஒரு மாதத்திற்கு முன்னே வந்து குவர்னர் துரைக்கு ஒரு துருக்கி குதிரையும் நான்கு நகை வெகுமானமும் சந்தா சாகிபுவினதென்று கொண்டு வந்ததல்லாமல் கோன்செல்லியர்களுக்கெல்லாம் அவரவர்களுக்கு நாற்பது அன்பது வராகனுக்கும் அதிகமாகத்தானே கொடுத்து பதினஞ்சு நாளும் இவ்விடத்திலிருந்து அவ்விடத்திற்குப் போனவர் சந்தாசாகிபு திருவண்ணாமலை மட்டும் வந்து அங்கேயிருந்து இந்த ஹக்கீமை மறுபடி அனுப்பிவிச்சதென்ன யென்று விசாரிக்குமிடத்தில் அவர் வராகன் லட்சம் கூட கொண்டு வந்து துரைக்கு கொடுத்தார். இதுக்கு வட்டி ஒரு வருஷம் மட்டுக்கும் கவையில்லை. அப்புறம் வருஷத்துக்கு மேல் யிருக்கிற வட்டியும் இதுக்குள்ளாகக் கொடுத்துவிட்டால் கவையில்லை யென்றும் உடன்படிக்கை பண்ணிக் கொண்டதாய் ஊர்ச்சிதமான சேதியாய் சொன்னார்கள். அந்தப்படி இவர்கள் கொண்டு வந்து கொடுத்து பின்னால் லட்சம் வராகன் வியாபாரத்துக்கு ஆகும்படி போய்க்கொண்டு வரப்போகிறான் என்று சொன்னார்கள்.

ஆவனி 8 1738 ஆகஸ்ட் 20 புதன்கிழமை

பகலுக்கு மேல் சுமார் நாலரை மணிக்கு மேல் அஞ்சு மணிக்குள்ளாக திருவதி பாலுசெட்டியார் துரையவர்களைப் பேட்டி காணப்போனார். போய் சந்தித்த உடனே கோட்டையிலே ஒன்பது பீரங்கி போட்டார்கள். பிற்பாடு துரையவர்கள் வீட்டு நடுசாலையிலே போய் உட்கார்ந்து இரண்டு வார்த்தை லோகாபிசாரமாய் பேசிக்கொண்டு இருக்கச்சே சந்தாசாயபு நன்றாயிருக்கிறாரா என்று துரையவர்கள் பாலு செட்டியாரைக் கேட்க அதுக்கு அவர் சொன்னது அவர்கள் சிறிது சேதி உங்களுக்குச் சொல்ல சொன்னார்கள். அது தனிச்சுக் கண்டு பேசிக்கொள்ள வேண்டுமென்று சொன்னார். அதின் பேரிலே துரையவர்கள் எழுந்து கபினெத்தை திறந்து அதுக்குள்ளே துரையவர்களும் கனகராய முதலியாரும் திருவதி பாலுசெட்டியாரும் சலத்து வேங்கடாசல செட்டியாரும் இவர்கள் நாலு பேரும் மூணு மூணரை நாழிகை நேரம் பேசிக்கொண்டிருந்து இப்புறத்திலே வந்து நடுச்சாலையிலே உட்கார்ந்த உடனே திருவதி பாலு பெட்டிக்கு வெகுமானம் கொடுத்த வயணம்:

1740 சூலை 8 ஆனி 28 வெள்ளிக்கிழமை

காலமே 11 மணிக்கு திருச்சிராப்பள்ளியிலே இருந்து சந்தாசாயபு பெண்சாதி புதுச்சேரிக்கு வந்தாள்.

1740 செப்டம்பர் 1 ஆவணி 20 வியாழக்கிழமை

சாயங்காலம் ஐந்து மணிக்கு அசரத்து நவாபு சப்பிதரல்லிகான் சாயபு அவர்களும் சந்தாசாயபு – டக்கே சாயபு பின்னையும் பெரிய மனுஷரெல்லாம் கூட வருகிறார்களென்று சொல்லி மேற்கு கெவுனி வாசல் தோட்டத்து கடைத்தெரு சந்து மட்டுக்கும் இரண்டு புறமும் பாருவைத்து கெவுனிக்கு மேலே வடபாரிசத்திலே பந்தல் போட்டு அந்தப் பந்தலுக்குள்ளே வெள்ளைக்காரச்சிகள், துரைத்தனத்தார் பெண்சாதிகளெல்லாம் நின்று கொண்டிருக்க கெவுனிக்கு அடுத்தாப் போல் போட்டிருக்கப்பட்ட துரையவர்கள் கூடாரத்திலே சுத்தி நாற்காலியைப் போட்டு துரையவர்களும் மற்றுமுள்ள கோன்சேல்காரரும் சகலமான பேரும் அந்தக் கூடாரத்திலே இருந்து கொண்டு சின்ன துரையவர்களும் அவர் பிறகே ஒரு இஸுத் தாங்கி ஐம்பது பேர் சொல்தாதுகளும் கொடியும் புள்ளாங்குழல் தம்பூறு கொம்பு தமுக்கு மேளதாளம் தாசியள் கூட இதல்லாமல் கனகராய முதலியார் முத்தியாப்பிள்ளை யவர்களுமாய் சகல சம்பிரமத்துடனே எதிர்கொண்டு குண்டுதாழை மட்டுக்கும் போய் அழைத்துக்கொண்டு வந்தார்கள். வந்தவுடனே கெவுனிக்கு வெளியிலே போட்டிருக்கப்பட்ட கூடாரத்திலே இறங்கி துரையவர்கள் எதிரே வந்து கட்டிக்கொண்டு கூடாரத்திலே உட்கார்ந்த உடனே அலங்கத்தின் பேரிலே 21 பீரங்கி போட்டார்கள்.

1740 செப்தம்பர் 17 புரட்டாசி 5 சனிவாரம்

காலமே 10 மணிக்கு மேல் நவாபு சப்பித்தரல்லிகான் சந்தாசாயபு மற்றுமுள்ள சத்தியன் கூட செஞ்சிக்குப் போக வேணுமென்கிறதாகப் பயணமாகி, சுக்கிரவார நாள் இராத்திரி இரண்டு சாமத்திற்கு மேல் ஒரு நகராவும் வெடிய சாம மென்னச்சே ஒரு நகராவும் அடிச்சார்கள். காலமே ஏழு மணிக்கு துரையவர்களும் கோன்செல்காரரும் பல்லக்கின் பேரிலே ஏறிக்கொண்டு ஒரு இஸ்த்தாங்கி அன்பது சொலுதாதுமாக வரிசை வச்சுக்கொண்டு நவாபு இருக்கப்பட்ட கேட்டினைக் கூடத்துக்கு எதிரான வீட்டிற்கு வந்து நபாபு அவர்களை பேட்டி பண்ணிக்கொண்டு சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்து அனுப்பிவிச்சுக் கொண்டு புறப்பட்டுப் போய்விட்டார்கள். அதன் பேரிலே சாப்பிட்டு பத்து மணிக்கு பயணம் புறப்பட்டு போனார்கள். போகச்சே கொத்தளத்தின் பேரிலே பீரங்கி போட்டார்கள். அன்றைய தினம் ஆனந்தரங்கப் பிள்ளையவர்கள் பரங்கிப்பேட்டையிலிருந்து காலமே எட்டரை மணிக்கு புதுச்சேரி வந்து சேர்ந்தார்கள்.

அசரத்து நவாபு சப்பித்தல்லிகான் சாயபு அவர்களும் சந்தாசாயபும் செஞ்சிக்குப் போகவேணுமென்று புறப்பட்டவர்கள் அவ்விடத்துக்குப் போகாமல் ஆற்காடு போய்ச் சேர்ந்து அவ்விடத்திலே இருந்து நவாபு சந்தாசாயபு கையிலே அனுப்பிவிச்சுக் கொண்டு தம்முடைய ராணுவுக்கு திரையுடனே புறப்பட்டு திருச்சிராப்பள்ளிக் கோட்டைக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

1741 மார்ச்சு 15 பங்குனி 6 புதன்கிழமை நாள்

… இதல்லாமல் இதுக்கு முன் அஞ்சாறு நாளைக்கு முன்னே நடந்த சேதி: திரிச்சிராப்பள்ளி கோட்டைக்குள்ளே யிருக்கிற சந்தாசாயபு தமக்கு நிருவாகமில்லாமல் ஒரு கடுதாசி எழுதி சப்பித்தரல்லிகான் மோரசாவிலே போட்டாராம். அந்தக் கடுதாசியை அவர்கள் எடுத்துக்கொண்டு போய் சேர்த்துப்பட்டிலே யிருக்கிற சப்பித்தரல்லிகான் கையிலே கொடுத்தான். உடனே அவர் அதை வாசித்துக்கொண்டார். அதிலே எழுதியிருக்கிற சேதியானால் மறாட்டியர் கோட்டை நெருங்கி வந்து போனார்கள். வெகு முத்திக்கையா யிருக்கிறது. இனிமேலே இனி என்னாலே ஒன்றும் நிருவாகத்துக்கு வருகிறதில்லை. இந்த வேளை நீங்கள் அவர்களுக்கு உபேக்ஷையாயிருந்தால் இனிமேல் என்னைக் காண மாட்டீர்கள் என்றும் கண்டிதமாய் எழுதியிருந்ததாம்.

அவர் அதைப்பார்த்துக் கொனார் முதலியவை அழைத்தனுப்புவித்து காரியமானால் இப்படி நிருவாகம் தப்பியிருக்குதே. சிறிது திரவியமாகிலும் கொடுக்க உடன்படிக்கை பண்ணிக்கொண்டே அவர்களை பிராணத்தோடே வெளியே விட்டுவிடத்தக்கதாக ஆகிலும் யேற்படுத்துவோம் என்று யோசனை பண்ணி இருபத்து இரண்டு லக்ஷம் ரூபாய் கொடுத்தால் அந்தப்படிக்கு மறாட்டியர் சம்மதிப்பார்களென்று பேசிக்கொண்டு இதுக்கு சப்பிரத்தல்லி 5 லக்ஷமும் சப்பிரத்தல்லிகான் தாயார் 5 லக்ஷமும் சந்தாசாயபு பெண்சாதி 5 லக்ஷமும் படேசாயபு பெண்சாதி 5 லக்ஷமும் போளூர் மமுதலி ஒரு லக்ஷமும் அல்லினக்கி சாயபு ஒரு லக்ஷமும் ஆக இருபத்து இரண்டு லக்ஷம் பிரிவு எழுதிக்கொண்டு இந்தபடிக்கு இவ்விடத்திலே யிருக்கிற சந்தாசாயபு பெண்சாதி படேசாயபு பெண்சாதி இரண்டு பேரும் எழுதி அனுப்பினார்கள். அதுக்கு இவர்கள் எழுதின உத்திரவு எசமான் உத்தாரமில்லாமல் கொடுக்கிறதில்லை என்று எழுதிவிட்டார்கள். இந்த மட்டிலே இருக்கிறது இராசகாரியம்.

1741 மார்ச்சு 21 பங்குனி 12 செவ்வாய்க்கிழமை நாள்

மத்தியானம் மூன்று மணிக்கு வேலூரிலே யிருந்து போளூர் மமுதல்லியும் டக்கே சாயபு குமாரன் அல்லினக்கீம் சாயபும் இரண்டு பேரும் வந்தார்கள். வரச்சே கோட்டையிலே யிருந்து கனகராய முதலியார் ஒரு கும்மிசெல்காரன் முத்தியா பிள்ளையும் கொம்பு தமுக்கு மேளத்துடனே எதிர் போகச்சே அவர்களுக்கு நிண்ணு மெதுவிலே வருகிறதுக்கு கூட இல்லாமல் அவதிப்பட்டு ஓடி வருகிறார்களோ லே எதிர்கொண்டு போனவர்கள் கெவுனிக்கு வெளிப்படுகிறதுக்கு முன்னமே அவர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். அவர்கள் என்ன காரியமாய் வந்தார்கள் என்றால் சந்தாசாயபு திருச்சிராப்பள்ளி கோட்டைக்குள்ளே அகப்பட்டுக் கொண்டு மறாட்டியர் முத்திகையினாலே ரொம்ப அவதிப்பட்டு பிராணனை போக்கடிச்சுக் கொள்ளுகிறதா யிருக்குதென்றும், மறாட்டியருக்குப் பணங்காசு எவ்வளவாகிலும் கொடுத்து சமாதானம் பேசினால் பிராணன் மாத்திரமாகிலும் தப்பவிட்டார்களேயென்று சந்தாசாயபு படேசாயபு இரண்டு பேர் பெண்டுகளையும் பணம் கேட்டனுப்பிவிச்சதுக்கு இவர்கள் கொடுக்கிறதில்லை யென்று சொன்ன படியினாலே இவர்கள் இரண்டு பேரும் வந்தார்கள் என்று சொன்னார்கள்.

1741 மார்ச்சு 22 பங்குனி 13 புதன்கிழமை நாள்

சாயங்காலம் எட்டு மணிக்கு போளூர் மமுதல்லியும் அல்லினக்கீம் சாயபும் இரண்டு பேரும் பயணம் புறப்பட்டு வேலூர் கோட்டைக்குப் போய்விட்டார்கள்.

1741 மார்ச்சு 30 பங்குனி 21 வியாழக்கிழமை

மத்தியானம் 11 மணிக்கு திரிச்சிராப்பள்ளியிலே மறாட்டியர் தண்டியிலே யிருந்து பிராஞ்சுக்காரருடைய வக்கீலும் நாம் அக்கீமும் எழுதின கடுதாசி துரையவர்களுக்கு வந்தது. அந்த கடுதாசியிலே எழுதியிருந்த வயணம் என்னவென்றால் பங்குனி 16 சனிவார நாள் ரகோசி போசுறா பாளையக்காரர் மறவன் தொண்டைமான் மனுஷர் கள்ளர் பெண்டியள். இவர்களை அழைச்சு கோட்டையின் பேரிலே லக்கை ஏறச்சொல்லி உத்தாரங் கொடுத்த உடனே அவர்கள் எல்லோரும் ஒருமிச்சு லக்கை ஏறினார்கள். அதின்பேரிலே கோட்டைக்குள்ளே இருக்கிற சந்தாசாயபு யோசனை பண்ணி இனிமேலிருந்தால் பிராண சேதம் வருமென்று சொல்லி பட்டாணியன் பெரிய மனுஷன் முன்னிலையாய் சந்தாசாயபு ராசாவிடம் பேசி சந்தாசாயபு பனிரெண்டு லக்ஷம் ரூபாய் மறாட்டியருக்கு கொடுக்கவும், சந்தாசாயபை பிராண சேதம் இல்லாமல் வெளியிலே விடவும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டு அன்றைய தினம் சனிவார நாள் இராத்திரி பதினைந்து நாழிகைக்கு கோட்டையை விட்டு வெளியே சந்தாசாயபும் அவர் குமாரன் அபீத்து சாயபும் அவருடைய மருமகன் கான்பகதூரும் செரீபு சாயபும் இவர்கள் நாலு பேரும் புறப்பட்டு மறாட்டியன் தண்டிலே போய் ரகோசி போசுறாவை சந்தித்தார்கள். அவரும் இவர்களைக் கண்ட மாத்திரத்திலே பின்னே ஒன்றும் சொல்லாமல் அவர்கள் கையிலே யிருந்த கத்திகளை வாங்கி வைத்துக்கொண்டு தண்டிலே தானே மரியாதைக் காவலாய்த்தானே வைத்துக்கொண்டு இருக்கிறார்களென்றும் மறாட்டியர் திருச்சிராப்பள்ளி கோட்டையிலே சண்டை போட்டார்களென்றும் இப்படியாக உத்த கபுறா எழுதி வந்தது.

இந்தக் கடுதாசியைப் பார்த்துக்கொண்டவுடனே துரையவர்களும் ரொம்பவும் அங்கலாச்சுக் கொண்டு அந்தக் கடுதாசியை கனகராய முதலியார் கையிலே கொடுத்து சந்தாசாயபு மாலிலே கொண்டுபோய் படிச்சுக் காண்பித்து வரச்சொல்லி உத்தாரங் கொடுத்தார்கள். அந்தப் படியே கனகராய முதலியார் போய் படித்து காண்பித்திருந்த சமாசாரம் சொன்ன உடனே அவர் பெண்சாதி கேட்டு மெத்தவும் அழுது அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள். இன்றைய தினம் சாயங்காலம் நாலுமணிக்கு சேத்துப்பட்டிலே யிருந்து சந்தாசாயபு மாலுக்கு பயண ஒட்டகம் ஒன்று வந்தது. அந்த ஒட்டகம் வந்த சேதி என்ன வென்றால் சந்தாசாயபு மறாட்டியர் கையிலே அகப்பட்டுப் போனார் என்றும் மறாட்டியர் திருச்சிராப்பள்ளி கோட்டையைப் பிடித்துக் கொண்டு சண்டைப் போட்டார்களென்றும் இப்படி எழுதி வந்ததாகச் சொன்னார்கள்.

1741 ஏப்ரல் 3 பங்குனி 24 ஆதிவார நாள்

மத்தியானம் இவ்விடத்திலே யிருந்து நாலுபேர் கும்பினி சேவகர் துரையவர்களுடைய கடுதாசி ரகோசி போசுறாவண்டைக்கு கொண்டு போனார்கள்.

1746 நவம்பர் 11 அற்பிசி 29 சுக்கிரவாரம்

… அந்த நாள் சந்தாசாயபு மகளுக்குக் கலியாணமென்று சிறிது தினுசுகளுக்கும் வீட்டுகளுக்கும் கேட்கவந்த விடத்திலே துரையுடனே போய்ச்சொன்ன விடத்திலே தம்முடைய கையிலேயிருந்து குலாபி அத்தர் ஆறு சின்ன சீசா ஒரு பெட்டியிலேயிருந்து கொடுத்தார். இருபது டொரையாக (துரியாம்பழம்) கும்பினீரிலே ஒரு கட்டிருக்க வேணும். அது பார்த்து எடுத்துத் தருகிறோம் என்று சொன்னார். அப்பால் சந்தாசாயபு மகளுக்கு ஒரு துப்பாக்கி ஒற்றைக் குழலும் கொடுக்கிறோமென்று சொல்லியிருந்ததைக் கேட்டதற்கு முசே கெர்னேவுக்கு உத்தாரங் கொடுத்தார். பாதாங்காய் முதலான தினுசு எல்லாம் சென்னப்பட்டணத்துக்கு எழுதியனுப்பி அழைப்பித்துத் தருகிறோமென்று என்னை லீஸ்துரு எழுதிக்கொண்டு வந்து கொடுக்கச் சொன்னார்.

நல்லதென்று சொன்னதன் பின்பு, வீட்டிற்குக் கனகராய முதலி வீடு இருக்கிறதே என்று கேட்டார். இருக்கிறது. அவர் கொடுப்பார்களோ என்னமோ வென்று சொன்னதற்கு லாசரை அழையென்று சொன்னார். அவன் வந்த பிற்பாடு அவனைக் கேட்டதற்கு, மகா மரியாதை தாழ்வித்து, நானிருக்கிற வீடு ஒன்றும் கனகராய முதலி விடுதி வீடும் விடுகிறோமென்று சொன்னார்…

1746 நவம்பர் 16 கார்த்திகை 4 புதன்கிழமை

அப்பால் துரை வீட்டுக்கு வந்தவிடத்திலே மமுதல்லிகான் காகிதம் வந்தது. அதிலே எழுதியிருந்த வயணம்: … சந்தாசாயபை அழைப்பிக்கிற பிரயத்தனத்தின் பேரிலே நானும் பிரயத்தனம் பண்ணுகிறேன். நீங்களும் பிரயத்தனம் பண்ணுங்கோளென்றும் பின்னையும் உபசாரஞ் சொல்லி எழுதியனுப்பச் சொன்னான். அந்தப் படிக்கு எழுதியனுப்புவித்தோம்.

1746 நவம்பர் 19 கார்த்திகை 7

… அப்பால், சந்தாசாயபு அவர்கள் நிமித்தியம் பத்தே சிங்குக்கும், றகோசி பாசுராசாவுக்கும், ராயருக்கும், சாயாசிராவுக்கும் நிசாமண்டையிலே யிருக்கிற ஷா அகமத்கான் மகன் அமனத்துக் கானுக்கும், சந்தாசாயபு மனுஷர் ரகோ பண்டிதரைத் தானே எப்படி எழுதவேணுமோ அந்தப்படியே எழுதி வரச்சொல்லிச் சொன்னார். அவர்களும் நல்லதென்று போனார்கள்.

1746 டிசம்பர் 3 கார்த்திகை 21 சனிவாரம்

இற்றைநாள் சனிவாரம் துரையண்டைக்குப் போனவிடத்திலே சந்தாசாயபு, பால அமுசத்திராச பண்டிதர், ரகோசிபோன், சிலாபத்தேசிங்கு, பாஜிராவ், பதிராயன், சாகு ராசாவுக்கு இவர்களுக்கு நான் காகிதமெழுத வேண்டிய வயணமுண்டாயிருந்தால் நீங்கள் சவாதுப் பண்ணக் கொண்டு வாருங்கள்.‌அதைப் பார்த்துக்கொண்டு காகிதமெழுதி அனுப்புவிப்போமென்று துரையவர்கள் உத்தாரங் கொடுத்தபடிக்கு ஐந்தாறு நாளைக்காக இன்றைக்கு எழுதிவந்த சவாதுகளைப் படித்துக் காண்பித்து சொன்னவிடத்திலே அவர் சொன்னது: இது உனக்கெப்படி இருக்குதென்று கேட்டார். இதற்குச் சந்தாசாயபு அவர்களை அனுப்புகிறதற்கு இந்த ராச்சியம் நவாத்து சபை நீக்கினது. தப்பிதமாய் அன்வருதிகான் சபைக்கு வந்த பிற்பாடு ராச்சியமெல்லாம் எடுத்துப் போட்டதுமல்லாமல் கரை துறையிலே இருக்கிற பறங்கிகள்… பண்ணினதாலே இரண்டு லக்ஷம் வராகன் மட்டுக்கும் தீவானத்துக்கு மிருக்குது. அப்படிப்பட்டவர்களுக்கு அநியாயமாய் நடத்தலாமென்றும், இதைத்தொட்டு வெகு சண்டை… தப்பாயிருக்கிறது… அதற்கு ராச்சியத்தையுங் குட்டிச்சுவராக்கினானென்றும், சந்தாசாயபு அனுப்புவித்தால் அந்தப் பணம் நானுமுத்தரவாதியாய் இருக்கிறான் என்றும் எழுதியிருக்கிற படியினாலே மற்ற வயணமெல்லாம் மிருக்க வேண்டு… வேண்டியதுஞ் சரி, பணத்துக்கு உத்தரவாதம் நானே… திரம் எழுதப் போகாதென்றும் சொன்னேன். அதற்கு மெய்தான் அப்படியிருக்கலாகாது. சந்தாசாயபு ஒப்புக்கொள்ளுகிறோம், அதற்கு நான் தங்கள் குமாஸ்தாவாயிருந்து பணம் அறுவு பண்ணி அனுப்புகிறோம். இந்தப் பணம் தங்களுக்குச் சேருகிறதற்கு என்னாலே ஆன சகாயமெல்லாம் செய்து சேரப்பண்ணுகிறே னென்றும் என் சகாயமில்லாமல் போனால் அவருக்கு ஒரு காசாகிலும் சேர மாட்டாதென்று மிப்படியாக எழுதச் சொல்லி எப்படி இதுவென்று கேட்டார். நன்றாயிருக்குது எழுதலாமென்று சொன்னேன்.

1747 சனவரி 24 தை 15 மங்களவாரம்

இற்றைநாள் மத்தியானம் சந்தாசாயபு மகனும், சாத்திராவுக்கப்புறம் பதினைந்து கோசிலே யிருக்கிற பொன்னா என்கிற துறக்கத்திலே யிருக்கிற சந்தாசாயபு அண்டையிலே யிருந்து இருபத்திரண்டு நாளையிலே வந்த அல்லி அக்பர் என்கிறவனும் சாமராயனும் முதலான முசத்திகளுடனே துரையண்டைக்கு வந்து சந்தாசாயபு அவர்கள் அனுப்பின காகிதமும் கொடுத்துச் சொன்ன சேதி யென்னவென்றால்: நிசாம் அண்டையிலே யிருக்கிற அமானத்துக்கான் என்கிறவர் சந்தாசாயபுக்கு அவர் குமாரனை அனுப்பச் சொல்லி எழுதினதாகவும் அன்வருதிகான்கூடச் சென்னப்பட்டணத்து அண்டையிலே யிருக்கிற மயிலாப்பூர் சண்டையிலே பிராஞ்சுக்காரருக்கு நிற்க மாட்டாமல் காஞ்சீபுரத்துக்கு ஓடிப்போய்விட்ட சேதி நபாபு அசபுஷா அறிந்து அவர்கள் பேரிலே கோபமாய் இருக்கிறதினாலே இனிமேலவர்களுக்கு ஆற்காட்டு சுபா நிற்க அறியாது. உம்முடைய குமாரனை அனுப்புவித்தால் உங்களுக்கு ஆற்காட்டு சுபா மோகர் பண்ணிக் கொடுக்கிறோமென்று வரச்சொல்லி எழுதினதாகவும் அதன் பேரிலே அபித்து சாயபை நிசாமல் சர்க்காருக்கு அனுப்புகிறதாய் எத்தனம் பண்ணி யிருக்கிறாரொன்றும் ஒரு வேளை நபாபு அசபுஷா சம்மதிக்க மாட்டார் என்றால் சவாபாசி ராயன் முப்பதினாயிரம் குதிரை கூட்டி அன்வருதிகானைத் துரத்திவிட்டுச் சந்தாசாயபை வைக்கிறதாய் மோகர் பண்ணியிருக்கிறார்களென்றும் இந்தச் செலவுக்கு நீங்கள் சொல்லியிருந்த லக்ஷம் ரூபாயிலேயும் ஐம்பதினாயிரம் ரூபாய் கடப்பைச் சேர்ந்தாப் போலே கொடுக்க உண்டிகை அனுப்பச் சொல்லியும் மற்ற ஐம்பதினாயிரம் ரூபாய் சத்தாரா செலவுக்கு அனுப்பச் சொல்லியும் எழுதி வந்தது என்றும்…. …

(தொடரும்)

பகிர:
கோ. செங்குட்டுவன்

கோ. செங்குட்டுவன்

விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து வசித்து வருபவர். ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்று அமைப்புகளில் பங்கேற்று இயங்கி வருபவர். 'சமணர் கழுவேற்றம்', 'கூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள்' உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு : ko.senguttuvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *