Skip to content
Home » ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #37 – சந்தாசாயபு கடுதாசியும் துய்ப்ளேக்சின் கண்ணீரும்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #37 – சந்தாசாயபு கடுதாசியும் துய்ப்ளேக்சின் கண்ணீரும்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆற்காடு நவாபுகளில் ஒருவரான சந்தாசாகிப் மராத்தியர்களால் கைது செய்யப்பட்டதையும் அவரை விடுதலை செய்ய இலட்சக் கணக்கில் பேரம் பேசப்பட்டதையும் கடந்த பதிவில் பார்த்தோம். இதற்கிடையில் சதாராவிற்கு நாடு கடத்தப்பட்டார் சந்தாசாகிப். இடையிடையே பிரெஞ்சு அரசாங்கத்துடனான அவரது கடிதப் போக்குவரத்து தொடர்ந்தது. 1747 ஜுலையில் புதுச்சேரி ஆளுநருக்கு சந்தாசாகிப் எழுதிய கடிதத்தில் தன் மீதான அன்பிற்கும் தன் மனைவி குழந்தைகள் புதுச்சேரியில் மரியாதையுடன் நடத்தப்படுவதற்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.

இதற்கிடையே சந்தாசாகிப் அங்கு வந்து கொண்டிருக்கிறார் இங்கு வந்து கொண்டிருக்கிறார் என்றெல்லாம் புதுச்சேரிக்குத் தகவல்கள் வந்தன. ஆனால் அவை தவறான கபுறா (தகவலாக) கவே இருந்தன. ஆனால் 1748 மார்ச்சில் வந்த தகவல் தான் ஊர்ஜிதமானது என்கிறார் ஆனந்தரங்கர். சாகு மகாராஜாவின் இரண்டு மனைவியர் மூலமாகப் பேசிப் பணம் கொடுத்து சந்தாசாகிப் விடுதலை ஆனதாகவும், திருச்சிராப்பள்ளி மற்றும் ஆற்காடு ஆட்சிப் பொறுப்பு மீண்டும் தன்னிடம் ஒப்படைக்கப்படும் என ஒப்பந்தமாகி இருப்பதாகவும் இப்போது வந்த தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

1748 ஜுலையில் வந்த மற்றொரு கடிதத்தில் சந்தாசாகிப், கிருஷ்ணை நதிக்கரையில் மராட்டியக் குதிரை வீரர்களுடன் வந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் சந்தாசாகிப்புக்குத் திருச்சிராப்பள்ளியும் அவரது மகனுக்குச் செஞ்சி சீர்மையும் அளிக்கப்பட இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதல்லாமல், சந்தாசாகிப் தமையன் ஆரணி சீர்மையைத் தான் வாங்கிக் கொண்டு காஞ்சிபுரத்தில் இருக்கும் சிவ, விஷ்ணு ஆலயங்களை இடித்துவிட்டு மசூதி கட்டுவதற்கு எண்ணி இருக்கிறான் என்றும் தகவல் வந்தது.

1748ம் ஆண்டின் இறுதியில் புதுச்சேரியைப் போர் மேகங்கள் சூழ்ந்திருந்தன. இங்கிலீஷ்காரர்கள் எப்போது வேண்டுமானாலும் முற்றுகையிடுவார்கள் எனும் சூழல் இருந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் தஞ்சம் புகுந்திருக்கும் சந்தாசாகிப் மனைவியை விட்டு, தேவனாம்பட்டணம் கவர்னருக்குக் கடிதம் எழுத வைப்பது எனும் யோசனை ஆளுநர் துய்ப்ளேக்சுக்கு ஏற்பட்டது. இதனை ஆனந்தரங்கர் வரவேற்றார். இதற்கிடையில் 1748 ஆகஸ்டில் சந்தாசாகிப் இடமிருந்து 50, 60 கடுதாசிகள் புதுச்சேரிக்கு வந்தன. அதிலே சில கடுதாசிகள் மீது அத்தர் பூசப்பட்டுக் கமகமத்தன. கடிதம் எடுத்து வந்தவர்கள் இன்னும் இருபது நாட்களில் சந்தாசாகிப் இங்கு வந்துவிடுவார் என்று தெரிவித்தனர்.

இதனைக் கேட்ட ஆளுநரின் கண்களிலே தண்ணீர் தளும்பியது. ‘எங்கள் பட்டணத்தை இங்கிலீஷ்காரர் பிடித்துக்கொள்ளுகிறாயிருக்கிறது. நீர் சீக்கிரமத்துக்கு வந்து எங்களை ரக்ஷிக்க வேணுமென்று’ பதில் கடிதம் எழுதுமாறு ஆனந்தரங்கரிடம் கூறினார் ஆளுநர். அப்போதைய அவரது நிலைமையைப் பார்த்த பிள்ளை, ‘அப்போ அவர் முகம் பார்த்த எனக்கு மாத்திரமல்ல எப்படிப்பட்ட கடினச் சித்தனானாலும் துக்கம் வருமானால் என் பிறகுருதிக்கு என்ன கிலேசமும் துக்கமும் தோத்துமோ. நான் எழுத வேண்டியதென்ன? விவேகிகளாயிருக்கிறவர்கள் பார்த்துக் கொள்ளுகிறவர்கள்’ என விசனப்படுகிறார்.

போர்ச் சூழலில் இருந்து தப்பித்துக்கொள்ள அருகிலுள்ள வழுதாவூருக்குப் பயணப்படுகின்றனர், சந்தாசாகிப் மனைவி மற்றும் உறவினர்கள். பிரெஞ்சு வீரர்களால் அவர்கள் வழிமறிக்கப்படுகின்றனர். ‘இத்தனை அவமரியாதை எங்கள் ஜென்மத்திலேயும் அறியோமென்று’ அவர்கள் அப்போது வருத்தப்பட்டார்களாம். பதிவு செய்திருக்கிறார் ஆனந்தரங்கர்.

1747 ஜுலை 18 ஆடி 6 மங்களவாரம்

இற்றைநாள் காலத்தாலே சந்தராவிலேயிருந்து சந்தாசாயபு காகிதம் என் பேருக்கொன்றும் துரையவர்கள் பேருக்கொன்றுமாக வந்தது. ரசோ பண்டிருதருங்கூட வந்தார். அந்தக் காகிதச்சேதி துரையவர்களுக்குச் சொன்ன வயணம்:

சயராம் பண்டிதர் ரகோசிபோன்சலேவுடைய குமாஸ்தாக்களண்டைக்கு வந்து அவ்விடத்திலே தங்கள் கையிலனுப்புவித்து இவ்விடத்துக்கு வந்த பிற்பாடு தங்களதிசயமும் தங்களுக்கு வந்த செயமும் தங்களுடைய தைரியஸ் தைரியமும் பராக்கிரமும் தங்கள் கீர்த்தியும் தர்மங்கள் அவருக்கு என் நிமித்தியம் சாத்தாரா விட்டுப் புறப்பட்டவுடனே லக்ஷம் ரூபாயும் ஆற்காடு தாக்கீலானாப் போலே லக்ஷம் ரூபாயும் என்னைக் கொண்டு வந்து சேர்த்தால் பதினாயிரம் ரூபாயும் கொடுக்கிறோமென்று சொன்னது முதலான மரியாதை அவருக்கு நடப்பித்ததும் சமுசாரத்தின் பேரிலே மிகுந்த தயவாய் என் குமாரனுக்கு நடப்பித்துக் கொண்டு வருகிறதும் விஸ்தாரமாய் வந்து சொல்லச்சே என் மனதுக்கு அத்தியந்த சந்தோஷமானேன். இப்பவும் தாங்கள் இப்படியெல்லாம் தயவுபண்ணி இருக்கிறீர் ளென்கிற சேதி செயராம் பண்டிதர் வந்து சாவு ராசா, ரகோசி போன்சலா முதலான பேர்களுடனே சொன்னபடியினாலே என் காரியத்துக்கு மெத்தவும் அனுகூலப்பட்டிருக்கிறது. ஆனபடியினாலே சுவாமியும் உமக்கு இன்னும் அநேகமாகிய கீர்த்தியும் கொடுப்பார்.

இப்பவும் நான் அந்தப் பிராந்தியங்களுக்கு வரவேணுமென்று பவுன்சு முஸ்தீது பண்ணிக்கொண்டு புறப்படுகிற வேளையிலே நபாபு அசபுசாவும் நாசற்சங்கு அவர்களும் சீர்ப்பி அந்த வட்டங்களுக்கு வந்ததைத் தொட்டு தாமசமாய் நிற்கவேண்டியதாய் வந்தது. இதல்லாமல் நிசாமவர்கள் அவுரங்கபாத்துக்குப் போனபிற்பாடு நாசற்சங்கு அந்தப் பிராந்தியங்களிலே இருக்கிறதைத் தொட்டு அப்படிப்பட்டது அவருக்கு அந்தப் பிராந்தியங்களுக்குக் குல்யே குத்தியார் கொடுத்தனுப்பினவரல்ல. மைசூர் பேஷ்கஷ் பணமும் ஆற்காட்டிலுள்ளவர்கள் முதலானவர் சுபாவின் பேரிலே வெகு பணம் வரவேண்டியதான படியினாலே அந்தப் பணம் தாசில் பண்ணிக்கொண்டு வரச்சொல்லி இவரை நிறுத்திப் போனதே யல்லாமல் மற்றப்படி யல்ல. இதிலே மழைக்காலம் ஆகிறதாம். தாமதம் அவரிவ்விடத்திற்கு வருவார். நான் அவ்விடத்திற்கு வருவேன். வந்த உத்திரக்ஷணம் தாங்கள் நடப்பிப்பதற்கு என் தவுலத்தெல்லாம் தங்களுடையதாக நடப்பிப்பேன் என்றும், அந்த மழைக்காலம் போன பிற்பாடு கெட்டியாய் வருகிறேன் என்று எண்ணவும் என்று எழுதி,

இங்கிலீசுக்காரர் கப்பல் இரண்டொன்று மூலைக்கு மூலையாய் ஓடித்திரியுதென்றும் அப்படித் திரிந்தாலும் உம்முடைய தைரியமும் கோட்டை லாகாதிவிப்பம் போலேயிருக்கிறதை அவர்களைத்தொட்டுச் செய்யத்தக்கதொன்றுமில்லை ஆனாலும் ஒருவனைக் கொண்டு வந்தால் நம்முடைய குஞ்சு குழந்தைகள் இருக்கிறதற்குப் பயப்படுவார்கள். அவர்களை வந்தவாசிக்கு அனுப்புவிக்கச் சொல்லியும் அவ்வளவு பயம் தேவையில்லை யென்றால் குண்டு விழாமலிருக்கிற தாவாய்ப் பார்த்து அங்கே வைக்கச் சொல்லியும் எழுதி…

1748 மார்ச்சு 8 மாசி 29 சுக்கிரவாரம்

இற்றைநாள் சாயங்காலம் துரையவர்கள் அழைத்தனுப்பினவிடத்திலே நான் போய்க் கண்டு பேசினபோது நடந்த சமாசாரம்: சந்தாசாயபு பெண்சாதி பேரிலே வர வேண்டியதும் கான்பகதூர் பேரிலே வரவேண்டியதும் அவர்கள் எப்போது கொடுப்பார்களென்று கேட்டார். அவர்களும் இனி ஒருமாசம் இரண்டு மாசத்துக்குள்ளாக சம்மதி பண்ணிப்போடுகிறதாகச் சொல்லிக்கொண்டு வருகிறார்களென்று சொன்னேன்.

அதன் பேரிலே சந்தாசாயபு வருகிற சேதி என்ன? ஊர்ஜிதமாயிருக்குமா வென்று கேட்டார். முன்னாலே சொன்னது அங்கே வந்தார். இங்கே வந்தார் என்று பிறந்தது. அது அபத்தமாகி இவர்களாகத் தானே பிறப்பித்தார்கள். இப்போது ஊர்ஜிதமாகி வந்த சேதி என்னவென்றால்: சாகுவார் சாவுக்கு இரண்டு பேர் பெண்சாதிகள். அவர்கள் இரண்டு பேரும் அமுலே அல்லாமல் ராசாவினுடைய யோசனைபடிக்கு நடக்கிறதில்லையாம். ஆனபடியினாலே அந்தப் பெண்டுகள் வழியிலே கண்டுபேசி அவர்கள் அபிமானத்தார் சாவுக்குச் சொல்லி, அவர்கள் பரவசத்தின் பேரிலே திரிச்சிராப்பள்ளியும் ஆற்காடும் இவன் வசம் பண்ணிக்கொண்டு வருகிறேனென்று சேதிகள் எழுதி வந்தது மெய்தானென்று சொன்னேன். …

1748 சூலை 14 ஆடி 3 ஆதிவாரம்

அல்லிநக்கீம் சாயபு சந்தாசாயபு வீட்டுக்கு யெழுதியனுப்பின பசினிசு காகிதம் ராசோ பண்டிதன் அனுப்புவித்தானென்று கொண்டுவந்து படித்துச் சொன்ன வயணம்: சந்தாசாயபு எழுபதினாயிரம் குதிரைகளுடனே வந்து கிருஷ்ணை அக்கரையிலே யிறங்கி யிப்பால் வருகிறதாய் யெழுதி வந்ததாய் அதன் பேரிலே சந்தாசாயபுக்கு முத்திரைசலிகான் நடக்க வேண்டிய பாரதஸ்து யெழுதியனுப்பினது மல்லாமல் யோசனைப்பண்ணி தீர்த்து அப்புரம் நடத்துகிறதாயிருக்கிற மனதென்றும் யெழுதினபடி அதிலேயிருந்தபடிக்கு சந்தாசாயபுக்கு திருச்சினாப்பள்ளியும், அவர் குமாரன் அபிது சாயபுக்கு செஞ்சிக் கோட்டையும், செஞ்சி சீர்மை முன் கர்னாடகத்துக்கு நடந்த படிக்குச் சீர்மையும் நபாபு கிரியும் பவுஞ்சதருகீறீயும் வேலூர் முறுத்து சலிகானுக்கும் இந்தப்படி யோசனைப்பண்ணி தீர்த்து சந்தாசாயபுக்கு எழுதியனுப்பினதாகவும் சந்தாசாயபு தமயன் மமுதல்லிகானுடைய எண்ணம் என்னவென்றால்: ஆரணி கோட்டையும், காஞ்சீபுரத்துச் சீர்மைகளையும் வாங்கிக் கொண்டு பெருமாள் கோயில், ஈசுவரன் கோயில் இரண்டையும் இடித்து மசூதி கட்டவும் இப்படி யெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறதாகவும் இப்படிக்கு பெருமாள் தொண்டிக்காரன் கதையாய் நினைத்திருக்கிறார்கள். சுவாமி என்னமாய் நினைக்கிறாரோ என்னமாய் நடத்த இருக்கிறாரோ நான் அறியேன்.

இந்தச் சேதி எழுதியிருந்த மட்டுக்கும் துரையுடனே சொல்லாமலிருக்கப் போகாது என்று அவருடனே எச்சரித்ததற்கு அவரவர் பங்கு போட்டுக் கொண்டால் எனக்கு ஒரு பங்கு ஏன் போடவில்லை. இந்த சந்தாசாயபு கூட்டத்திற்கு எல்லாம் நான் வீணாக வர பிரயாசைப்பட்டது எனக்கும் ஒரு பங்கு போடச் சொல்லி சொல்லவில்லையா? சந்தாசாயபு பெண்சாதி பிள்ளைகள் முதலான பேர் எழுதியனுப்பவில்லையா வென்று அவர் சொன்ன படபடப்பும் கோபமும் இதிலே மிஞ்சிப் போனதாய் வருகிறது. முழுகிப் போனதாய் வர படவே சாடை. காகிதத்திலே எழுத முடியாது. சொன்னாலேயும் இன்னவித மென்று அதைப் பிரித்துச் சொல்லவும் தெரியாது.

1748 ஆகஸ்ட் 21 ஆவணி 9 புதவாரம்

அப்பால் சற்று நேரம் பொறுத்து என்னை அழைத்து நீ எங்கும் போக வேண்டாம். அடிக்கடி நானேதாகிலும் கேழ்க்க வேண்டியிருக்கிறது. போக வேண்டாமென்று சொன்னார். நல்லதென்று உட்கார்ந்தேன். அவ்விடத்திற்கு வந்த சந்தாசாயபு பெண்சாதியைக் கொண்டு இங்கிலீஷ்காரருக்கு ஒரு காகிதமெழுதி அனுப்பப் போகாதாவென்றார். அப்படி செய்யலாமென்றும் சொல்லி என்னவென்று எழுதுகிறதென்று கேட்டேன். அதற்கு துரை வயணம் சொன்னது: நான் இந்தப் பட்டணத்திலே இருக்கும் போது நீ இந்தப் பட்டணத்தின் பேரிலே சண்டைக்கு எப்படி வருவாய். என் புருஷன் மராட்டியர் பவுன்சுடனே வருகிற சேதி நீ அறியாயா. அல்லவென்று வந்தால் என் புருஷன் வந்து உன்னை என்ன செய்வானோ அறிந்திரு என்றும் நீ தூரம் விசாரித்துப் பார். அப்பால் அதனாலென்ன சம்பவிக்குமோ அறிவீரா வென்று எழுதினால் பயப்படுவானென்று தோற்றுது. அப்படி எழுதச்சொல்லென்று சொன்னார்.

1748 ஆகஸ்ட் 22 ஆவணி 10 குருவாரம்

அப்பால் துரையிருந்துக் கொண்டு நேற்று சொன்ன ஜாடை படிக்கச் சந்தாசாயபு மகனைக் கொண்டு தேவனாம்பட்டணம் குவர்னதோருக்கு எழுதிவைத்து அனுப்பச் சொன்ன படிக்கு அனுப்பவில்லையா யென்று கேட்டார். நேற்று உங்களுடனே அப்படி சமயம் வந்தால் பார்த்துக்கொள்ள வேண்டியதென்று சொன்னதற்கு நல்லதென்று சொன்னாப் போலே இருந்தது. ஆனபடியினாலே நிறுத்திப் போட்டேன். இப்பவும் இன்னும் நடக்கிற காரியத்தைப் பார்த்துக்கொண்டு செய்யலாமென்று சொன்னதற்கு, அப்படியல்ல, இப்போ தானே செய்ய வேண்டியதென்று சுருக்காய்ச் சொன்னார்.

இதிலே நாமேன் இரட்டிக்க வேணும். அவருக்குக் கோபம் வரவேணுமா வென்று மனதிலே எண்ணிக்கொண்டு அப்போ பதினொண்ணரை மணி ஆனபடியினாலே பாக்கு கிடங்குக்கு சந்தாசாயபு வீட்டு முசத்தி ராசோ பண்டிதனை அழைப்பித்து உங்கள் எஜமான் சந்தாசாயபு மகன் காகிதமாய் தேவனாம்பட்டணம் குவர்னதோர் பேருக்கு காகிதமெழுதி அனுப்ப வேணுமென்று சொன்னதற்கு, என்னவென்று எழுத வேணுமென்று கேட்டான். அதற்கு எழுத வேண்டிய வயணம் சொன்னது:

நாங்களும் நபாபு அல்லிதொஸ்துகான் மற்ற முதலான குடும்பமாய் ஐம்பது குடும்பம் மாத்திரம் நாங்கள் இந்தப் பட்டணத்திலே இருக்கிறது நீங்கள் அறிவீர்களே. அப்படி அறிந்திருந்தும் நீங்களிந்தப் பட்டணத்தின் பேரிலே சண்டைக்கு வருகிறதாய் கேழ்விப்பட்டோம். அப்படி வராமலிருந்தால் தானாச்சுதே அல்லவென்று வந்தால் எங்கள் தகப்பனார் சந்தாசாயபு எண்பதினாயிரம் குதிரையுடனே வருகிற சேதி கேழ்விப்பட்டிருக்கிறீர்கள். அப்பால் உங்களுக்கு அதற்குத் தக்க பலனை அனுபவிக்கப் போகிறீர்கள். அப்படி வராமல் நடத்திக்கொள்ளும் என்று எழுதியனுப்ப வேணுமென்று சொன்னேன்.

அப்பால் அவன் நகைத்து, அதற்கு பதிலுத்தாரம் நபாபு அல்லிதோஸ்துகான் மகன் சென்னப்பட்டணத்திலே இருக்கும் போது தானே பிராஞ்சுக்காரர் பட்டணம் பிடித்தார்களே. அதற்கு பிராஞ்சுக்காரரை என்ன செய்து போட்டீர்களோ அது எங்களுக்கு மாகுதென்று எழுதினால் அப்பால் அதற்கு எழுதவேண்டியதென்ன? அப்படி எழுதாவிட்டால் உங்கள் கையிலே ஆகிறதை நீங்கள் செய்யுங்கோல் நாங்களும் ஆஜராயிருக்கிறோமென்று எழுதினானல்லவென்று உங்களுக்குப் பயமிருந்தால் வெளியே புறப்பட்டுப் போய்விடுகிறது தானே யென்று எழுதினால் அதற்கென்ன உத்தாரம் சொல்லுகிறது? பயந்தெழுதினதாய் அவனுக்குத் தோணுமே யல்லாமல் மற்றபடி பின்னையொன்றுமாய் தோற்றாது.

இந்தப் பேச்சு கேட்டதும் எனக்குத்தான் பயமாயிருக்கிறது. அப்பாலே எங்களெஜமானிகள் நாங்கள் பெண்டுகளாச்சே பின்னையொரு சாதியார்ப் போலே ஆண் பிள்ளைகள் முன்னே போக்குவரத்தா யிருக்கக் கூடாமல் ராணி வசமாய் இருக்கிற சாதியானதே. அப்போ குண்டு வந்து விழுந்தால் நாங்கள் தெருவிலே எப்படி அந்நேரத்தில் ஓடப்போகிறோமென்று இப்போ தானே வெளியே போகிறோமென்று கேழ்ப்பதற்கு அட்டி சொல்லுவானேன். உங்கள் துரைகள் பெண்சாதி இருக்கிறதற்கு பயந்து தானல்லவோ உங்கள் வீட்டு அண்டையிலே இருக்கிற கோவிலை முஸ்தீது பண்ணதுமல்லாமல் மேலேகூட இருபத்தைந்து பாரம் பஞ்சுகூடப் போட்டு நனைத்து சேராமல் வைத்திருக்கிறது. எங்களுக்கு எந்த வீடும் எந்த பஞ்சு மூட்டையும் இருக்கிறது. இதிலே ஆயிரம் பங்கிலே ஒரு பங்கு ஜனங்கள் பேரிலே பச்சாதாபம் இருந்தால் சகல ஜனங்களும் பிழைத்துப் போவார்கள் என்று சொல்ல, அதற்கு நியாயமெப்படியோ அப்படியெல்லாம் சொல்லி காகிதமெழுதி வரச் சொன்னோம். அதன் பேரிலே இந்த சேதியையும் எஜமானிகளும் எஜமானுக்குச் சொல்லி அப்படியே தேவனாம்பட்டணம் குவர்னதோர் பேருக்கு காகிதமெழுதிக் கொண்டு வருகிறேனென்று சொல்லி இராசோ பண்டிகை அனுப்பிவித்துக் கொண்டு போனேன்.

1748 ஆகஸ்ட் 24 ஆவணி 12 சனிவாரம்

இதிலே சந்தாசாயபு அவர்கள் வீட்டுக்குச் சந்தாசாயபுவை பன்னீராயிரம் குதிரைகளுடனே சாவனூர், பங்காபுறத்திலே விட்டுப்போட்டு வந்தேன். அவர்கள் துரையவர்களுக்கும் சந்தாசாயபு அவர்களுக்கும் காகிதங்கள் கொடுத்தார்களென்றும் சற்றேறக்குறைய ஐம்பது அறுபது காகிதங்கள் மாத்திரம் அத்தர் கூட தடவி வாசனை கம கமமாயிருக்கிறது. கொண்டு வந்து காண்பித்த சேதியும் சொன்னார்கள். வந்த ஜோடிகள் இரண்டு பேரையும் கேட்டதற்கு சுவாமி தயவினாலே பன்னீராயிரம் குதிரைகளும் இன்று இருபதாம் நாள் இவ்விடம் வந்து சேருகிறார். அந்தபடிக்கு சுவாமி தயவு பண்ணினாரென்று சொன்னார்கள்.

அப்பால் துரையவர்களண்டைக்குப் போய் இப்படி சந்தாசாயபு மராட்டிக் குதிரை பன்னீராயிரம் குதிரைகளுடனே மங்காபுரம், சாவனூர் வந்து சேர்ந்தார்களென்றும் அவ்விடத்திலிருந்து அவர் வீட்டுக்காரன் கையிலே தானே அவர்கள் வளவுக்கும் உங்களுக்கும் மற்றுமுண்டான உறவின் முறையாருக்கும் நாற்பது, ஐம்பது காகிதங்கள் அனுப்பினார்களென்று சொன்ன மாத்திரத்தில் கண்களிலே தண்ணீர் தளும்ப இப்போதானே கடுதாசி எழுதி எங்கள் பட்டணத்தை இங்கிலீஷ்காரர் பிடித்துக்கொள்ளுகிறாயிருக்கிறது. நீர் சீக்கிரமத்துக்கு வந்து எங்களை ரக்ஷிக்க வேணுமென்று பின்னையும் எப்படி எழுத வேணுமோ அப்படியெல்லாம் எழுதி அவர்களையும் எழுதச் சொல்லி இப்போ தானே பயணம் பண்ணி, ரங்கப்பிள்ளை இது சமயமென்று எழுதென்று அவர் தீனவார்த்தையா யழுதுக்கொண்டு சொன்னதற்கு அதை காகிதத்திலே என்னவிதமென்றெழுதப் போகிறேன். அப்போ அவர் முகம் பார்த்த எனக்கு மாத்திரமல்ல எப்படிப்பட்ட கடின சித்தனானாலும் துக்கம் வருமானால் என் பிறகுருதிக்கு என்ன கிலேசமும் துக்கமும் தோத்துமோ. நான் எழுதவேண்டிய தென்ன? விவேகளாயிருக்கிறவர்கள் பார்த்துக் கொள்ளுகிறவர்கள்.

1748 செப்தம்பர் 1 ஆவணி 20 ஆதிவாரம்

நேற்று சாயங்காலம் சந்தாசாயபு பெண்சாதி அல்லி தொஸ்துகான் பெண்சாதி அசனல்லிகான் பெண்சாதி முதலான பேர் போகாமல் இற்றைநாள் காலமே ஏழரை எட்டுமணி வேளைக்கு பயணமாகி நடந்தார்கள். இவர்கள் போரார்களென்று ஊரிலே வர்த்தகர் செட்டி முதலான பேர்கள் எல்லாம் ஏகத்துக்கு ரெண்டாயிரம் மூட்டையும் கூட கொண்டுபோக வேணுமென்று யோசனை பண்ணி காத்துக்கொண்டு தெத்துவாசலிலே தெத்துவாசல் சந்தாசாயபு வீடு மட்டுக்கும் ஏக மூட்டைகளாயிருந்து சந்தாசாயபு அவர்கள் சீட்டிலே யெழுதப்பட்டது ஐந்து எருதுகளும் அன்பது கூலிக்காரர்கள் ஆனபடியினாலே அந்தப்படிக்கு எண்ணி விடுவேனே யல்லாமல் அதனமாயொரு மூட்டையாகிலும் விடுகிறதில்லை என்று வாசற்படியிலே யிருக்கிற சாரசந்து ராஜா சாயபுடனே சொன்னதும் அவர் குதிரை விட்டிறங்கி தங்கள் மூட்டையை மாத்திரம் அப்புறம் கையைக் காண்பித்து அப்புறத்திலே யிருக்கிறதும் மற்றவர்களாகிலும் வந்தால் இதுகள் எங்களுதல்லவென்று சொல்லுகிறதும் சொன்ன மாத்திரத்தில் வெள்ளைக்காரன் அவனை துப்பாக்கியினாலே இடிக்கிறதுமானது. அப்படி பத்து பேருக்கு மாத்திரம் துப்பாக்கி யிடிபட்டு போகாமல் இரண்டு பேர் மூட்டைகளைப் பிடிங்கினார்கள். அத்துடனே அங்கே நின்றவன் அங்கே பாயை விரித்து வீட்டுக்குக் கொண்டு போய் மூட்டைகளைச் சேர்த்துப் போட்டார்கள். சந்தாசாயபு அவர்கள் தட்டுமுட்டுகளும் அவர்கள் பெண்டுகளும் குஞ்சுகளும் கூட மேட்டு தாண்டினார்கள்.

இதிலே ராசோ பண்டிதர் யென்கிறவர் துரை பெண்சாதிக்கு சலாம் சொல்லி வரப்போனார். அவன் அங்கே போய் சொன்ன உடனே துரையும் அங்கே வந்தார். என்னவென்று துரை கேட்டார். நன்றியரிந்த உபசாரம் சொல்லி வரச் சொன்னார்களென்று சொன்னதற்கு துரை பெண்சாதி நாங்களுங்களை காப்பாற்றினதற்கு எங்களுக்கு ஒரு இக்கட்டு வந்த வேளையிலே விட்டுப்போட்டுப் போகிறது உங்களுக்கு நல்லதல்ல வென்று சொல்ல: அப்படி போகிறதில்லை. குண்டுக்கு பயந்து வெளியேயிருந்து வருவோமென்கிறதே யல்லாமல் மற்றபடி நாங்களுங்களை விட்டுப் போகிறதில்லை யென்று உபசாரமாய் பின்னையும் சொல்லதக்கபடிக்கு யெப்படி உண்டோ அப்படிச் சொல்லிப்போட்டு வந்து என்னுடனே வந்து சொன்னார்.

அப்போதானே எனக்கு அய்யம் தோன்றியது. அப்படியிருக்க அதிலே துரையுடனே அவர்களின் மேல் பரிச்சேதமாய் வருகிறதில்லை. வீட்டிலே யிருந்த முறம், விளக்குமாற் கூட நாலு பணத்து உடமையை ஒரு பணத்துக்கு விற்றுப்போட்டு வருகிறதேது? இனிமேல் வருகிறதில்லை யென்றும் யென் பேரிலே இவன் அரிந்திருந்தும் உம்முடனே சொல்லவில்லை யென்று சொல்லி பின்னையும் என்னென்ன சொன்னாறோ தெரியாது. நான் அவருடனே அல்லிதோஸ்துகான் மகன், அசனல்லிகான் மகன் வந்தவாசி ஆற்காடு வேலூர் போகிறதில்லை. கலாபமான பிறகு இவ்விடத்திற்கு வருகிறதே யல்லாமல் அப்பால் போவதில்லை. அந்த மட்டுக்கும் வழுதாவூரிலே இருப்பார்கள். சந்தாசாயபு பெண்சாதி மாத்திரம் ஒருவேளை வந்தவாசிக்குப் போவார்களா போகார்களா தெரியாது என்று சொன்னதற்கு துரை இருந்துக்கொண்டு எனக்கும் அப்படித்தான் தோணுது. சந்தாசாயபு அவர்களினிமேல் இவ்விடத்திற்கு வருவதில்லை யென்று அவர் வாயினாலே சொல்லி தீர்ந்திருக்கிற பேச்சான படியினாலே என்னைக் கண்டிக்கக் கூடாது.

… அப்பால் (துரை) சந்தாசாயபு அவர்கள் குஞ்சு குழந்தைகள் நேற்று போகவில்லையாவென்று கேட்டார். நேற்று போகவில்லையென்றும் காலத்தாலே போனார்களென்றும் (நான்) சொன்னேன். அவர்கள் வீட்டிலே யிருந்த முறங்கூட விற்றுவிட்டுப் போனார்களாம். நமக்கு பணம் வர வேணுமே அதை கொடுத்துவிட்டுப் போகச்சொல் என்று (துரை) என்னுடனே சொல்லிப்போக அப்பால் ஒரு கப்புறாலை அழைத்து மேட்டுக்கு அப்புறம் விடவேண்டாமென்று மேட்டிலே இப்போ யிருக்கிற ஒபிசியேமாருடனே சொல்லிவிட்டு வா வென்று அனுப்பினார்.

நான் வழுதாவூர் வாசற்படியண்டைக்கு சந்தாசாயபு மகனண்டைக்குப் போகும் போது அவரும் சுங்குவார் கிடங்கண்டையிலே யெதிரே வந்தார். அவரை நீர் அப்புரம் போக வேண்டாம். கண்டுபேசக் கவையுயிருக்குதென்று அவர் வீட்டை அழைத்துபோய் துரையண்டையிலே நடந்த சேதியைச் சொன்னேன். அவர் பணத்தை சம்மதி பண்ணிபோட்டு அப்பாலே போகிறேனென்று சொன்னார். நல்லதென்று அவரை அனுப்பி வைத்துக்கொண்டு துரையண்டைக்குப் போய் சந்தாசாயபு மகன் சொன்ன சேதியைச் சொன்னேன். ஆனால் பெண்டுகள் தட்டுமுட்டு போகிறவர்களை மறுபடி யழைத்து வந்து சாரத்து வெளியிலே மரித்துப் போட்டார்கள். அவர்களை விட்டுவிடச் சொல்லி வழுதாவூர் வாசற்படி சார சந்துடனே சொல்லியனுப்பினார். அவன் போய் மேட்டிலே யிருக்கிற வெள்ளைக்கார ஒப்பிசியாலுடனே சொல்லி மறித்திருந்த சந்தாசாயபு குஞ்சி குழந்தைகள் தட்டுமுட்டுகள் சமஸ்தமும் வெளியே அனுப்பிவிட்டார்கள். இத்தனை அவமரியாதை எங்கள் ஜென்மத்திலேயும் அறியோமென்று அவர்கள் மனது நொந்துக் கொண்டது காகித முகாந்திரத்திலே யெழுதி முடியாது. ரவுத்திர வைகாசி துவங்கி நாளது வரைக்கும் அவர்களுக்குப் பண்ணப்பட்ட உபகாரமெல்லாம் இன்றைய தினம் நடத்தியதுடனே தீர்ந்து போனது என்று பட்டணத்திலுண்டான ஜனங்கள் சமஸ்தான பேரும் சொல்லிக் கொண்டார்கள்.

(தொடரும்)

பகிர:
கோ. செங்குட்டுவன்

கோ. செங்குட்டுவன்

விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து வசித்து வருபவர். ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்று அமைப்புகளில் பங்கேற்று இயங்கி வருபவர். 'சமணர் கழுவேற்றம்', 'கூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள்' உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு : ko.senguttuvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *