மகன் உரைக்கும் தந்தை நலத்தை; ஒருவன்
முகன் உரைக்கும் உள்நின்ற வேட்கை; அகல் நீர்ப்
புலத்து இயல்பு புக்கான் உரைக்கும்; நிலத்து இயல்பு
வானம் உரைத்து விடும் (71)
(முகன் = முகம்; புலத்து இயல்பு = விளைநிலத்தின் தன்மை; புக்கான் = நிலத்துக்கு உரியவன்; வானம் = மழை) தன் தந்தையின் சிறப்பை, நற்குணத்தை, மகனின் நல்லியல்புகள், நற்செயல்கள், பிறர்க்குக் காட்டிவிடும். மனத்துக்குள் இருக்கும் விருப்பத்தை, கிளர்ந்தெழும் ஆசைகளை, ஒருவன் முகமே பிறர்க்கு வெளிப்படுத்திவிடும். அகன்ற நீர்ப்பரப்பு நிறைந்துள்ள விளைநிலத்தின் தன்மையை, அந்த நிலத்துக்குச் சொந்தக்காரனால் பிறர்க்குத் தெரியவரும். உலகில் வாழும் மக்களின் இயல்பை, அங்குப் பெய்யும் / பெய்யாத மழையின் நிலையே சொல்லிவிடும்.
தந்தையின் பண்பை மகனே தெரிவிப்பான். உள்ளக் குறிப்பை முகமே காட்டும். வயலின் தன்மையை உரியவனே அறிவிப்பான். உலக மக்கள் இயல்பை மழையே உணர்த்தும்.
பதிநன்று பல்லார் உறையின்; ஒருவன்
மதி நன்று மாசு அறக் கற்பின்; நுதி மருப்பின்
ஏற்றான் வீறு எய்தும் இனநிரை; தான் கொடுக்கும்
சோற்றான் வீறு எய்தும் குடி (72)
(பதி = ஊர்; பல்லார் = நல்லோர் பலர்; உறையின் = வாழ்ந்தால், மாசு = குற்றம்; இனநிரை = பசுக்கூட்டம்; நுதி மருப்பின் = கூரிய கொம்புகளை உடைய; ஏற்றான் = ஏறு = எருது) பல குடிகள் நல்லவர்கள் கூடி நிறைந்து ஒத்து வாழ்ந்தால், ஊர் நலமாகும். குற்றம் குறை இன்றி ஐயமின்றி ஒருவன் தெள்ளத் தெளிவாகக் கல்வி கற்றால், அறிவு மேம்படும். பசுக் கூட்டம் கூரிய கொம்புகளை உடைய எருதுகளோடு இருந்தால், சிறப்பு அடையும். இரப்போர்க்கு இல்லை என ஒருவன் கொடுக்கும் பொருளால், உணவால், பிறந்த குடி பெருமை அடையும்.
நல்லவர் கூடி வாழ்ந்தால் ஊர் நலமாகும். கற்றுத் தெளிந்தால் அறிவு மேம்படும். எருதுகளால் பசுக்கள் சிறப்படையும். ஈகைக் குணத்தால் குடிப்பெருமை ஓங்கும்.
ஊர்ந்தான் வகைய கலினமா; நேர்ந்து ஒருவன்
ஆற்றல் வகைய அறம் செய்கை; தோட்ட
குளத்து அனைய தூம்பின் அகலங்கள்; தத்தம்
வளத்து அனைய வாழ்வார் வழக்கு (73)
(ஊர்ந்தான் = செலுத்துபவன்; கலின் = கடிவாளம்; மா =குதிரை; தோட்ட = தோண்டிய; தூம்பு = நீரோடும் வாய்க்கால்) கடிவாளம் பூட்டப்பட்ட குதிரையின் பாய்ச்சல், அதன் மேல் அமர்ந்து அதைச் செலுத்துபவனது திறமைக்கு ஏற்ப அமையும். நல்ல அறச்செயல்கள் புரிவது அதைச் செய்பவனின் ஆற்றலைப் பொருத்து இருக்கும். நீர் பெருக்கெடுத்து வரும் வாய்க்காலின் அளவு, தோண்டப்பட்ட குளத்தின் அளவுக்கு ஏற்ப விளங்கும். (குளம் ஆழமாகவும், விரிந்தும் இருந்தால், நீரோடும் வாய்க்காலும் அகன்று பெரிதாக இருக்கும்). இல்வாழ்க்கை நடத்துவோர் வாழ்க்கை முறைமைகள், அவரவர் செல்வச் செழிப்புக்கு ஏற்றவாறு அமையும்.
குதிரையின் பாய்ச்சல் செலுத்துபவன் திறமைக்கேற்ப இருக்கும். ஒருவன் அறச் செயல்கள் அவன் ஆற்றலுக்கேற்ப இருக்கும். குளத்தின் அளவுக்கேற்ப வாய்க்கால் இருக்கும். வாழ்க்கை முறை செல்வ வளத்துக்கேற்ப இருக்கும்.
ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன; யாமமும்
நாழிகை யானே நடந்தன; தாழீயாத்
தெற்றென்றார் கண்ணே தெளிந்தனர்; வெட்கென்றார்
வெஞ்சொலால் இன்புறு வார் (74)
(ஊழி = யுகங்கள் பல கொண்டது; யுகம் = பல ஆண்டுகளைக் கொண்டது; தாழியா = காலம் தாழ்த்தாது; வெட்கு = அறிவின்மை) பலப்பல யுகங்களைக் கொண்ட ஊழிக்காலமும் ஆண்டு ஆண்டாய் எண்ணக் கழிந்து போகின்றது. இரவு பகல் என்னும் சிறுபொழுதும் நாழிகை நாழிகையாய் எண்ணக் கழிந்து போகின்றது. நம்முடைய வாழ்நாள் எல்லாம் முதலில் பெரிதாகத் தோன்றினாலும், சிறிது சிறிதாகக் கழிந்து போகின்றது. இதை நன்கு உணர்ந்த நல்லோர், காலம் தாழ்த்தாது, அறிவுடையோரிடம் சேர்ந்து, தங்கள் ஐயம் தீரத் தெளிவு பெற்று, இன்பமுடன் காலம் கழிக்கின்றனர். ஆனால், அறிவற்ற தீயோர் பிறர் மீது தீய சொற்களைக் கூறி, வீணே காலம் கழிக்கின்றனர்.
ஊழிக் காலம் ஆண்டுகளால் கழியும். நாள் பொழுது நாழிகையால் கழியும். நல்லோர் சான்றோரை வணங்கிக் காலம் கழிப்பர். தீயோர் பிறரை வெகுண்டு காலம் கழிப்பர்.
கற்றான் தளரின் எழுந்திருக்கும்; கல்லாத
பேதையான் வீழ்வானேல் கால்முரியும்; எல்லாம்
ஒருமைத் தான் செய்த கருவி; தெரிவு எண்ணின்
பொய்யா வித்து ஆகி விடும் (75)
(கால் = முயற்சி; முரியும் = தோல்வியுறும்; ஒருமை = ஒரு பிறப்பில்; தெரிவு = மெய் உணர்வு) கற்றறிந்த மேதை தனது முயற்சியில் தளர்ந்து, சோர்ந்து, விழுந்தாலும், மீண்டும் துள்ளி எழுவான். வெற்றி கிட்டும் வரை தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருப்பான். ஆனால், கல்வி கற்காத மூடன் தனது முயற்சியில் தளர்ந்து, சோர்ந்து, இடறி விழுவானே ஆனால், மீண்டும் எழுந்திருக்க மாட்டான். மீண்டும் முயற்சியைத் தொடர மாட்டான். ஒரு பிறப்பில் தான் செய்த நல்ல செயல்கள் அனைத்தும், மறுபிறப்பில் அடையவிருக்கும் இன்பங்களுக்கு உதவும் கருவிகள், காரணங்கள் ஆகும். தெளிந்து, ஆராய்ந்து எண்ணிப் பார்த்தால், மெய்யுணர்வு, வீடு பேற்றுக்கு அழியாத விதையாக மூலமாக அமையும்.
கற்றோர் தோற்றால் மீண்டும் முயன்று எழுவர். கல்லாதோர் தோற்றால் முயலார், எழார். இம்மையில் அறம் மறுமையில் நன்மை தரும். மெய்யறிவு உண்மையான பலனைத் தரும்.
தேவர் அனையர் புலவரும்; தேவர்
தமர் அனையர் ஓர்ஊர் உறைவார் – தமர் உள்ளும்
பெற்றன்னர் பேணி வழிபடுவார்; கற்றன்னர்
கற்றாரைக் காத லவர் (76)
(அனையர் = போன்ற; தமர் = உறவு) கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் அறிவில் மேம்பட்ட புலவர்கள், தேவர்களுக்கு ஒப்பாவர். அத்தகைய அறிவில் சிறந்த புலவர்களுடன் அதே ஊரில் வசிப்போர், அத்தேவர்களின் உறவுகளுக்குச் சமமானவர்கள் ஆவர். இத்தகைய உறவினர்களுக்குள்ளும், அப்புலவர் பெருமக்களைப் போற்றி வணங்கிப் பாராட்டுபவர்கள், அப்புலவர்களின் அறிவு நலமாகிய அருளைப் பெற்றவர்கள் ஆவர். அப்புலவர் பெருமக்கள் மீது அன்பு பாராட்டிப் போற்றி வணங்கிக் கொண்டாடுவோர், அப்புலவர்களைப் போலவே கற்றறிந்த பெருமக்களாகக் கருதப்படுவர்.
புலவர்கள் தேவர்களுக்கு நிகர். புலவரோடு வாழ்வோர் தேவர்களுக்கு உறவு. புலவரைப் போற்றுவோர் அருள் பெற்றோர். புலவரை விரும்புவோர் கல்வியறிவு மிக்கோர்.
தூர்ந்து ஒழியும் பொய் பிறந்த போழ்தே; மருத்துவன்
சொல் என்ற போழ்தே பிணி உரைக்கும்; நல்லார்
விடுக என்ற போழ்தே விடுக; அதற்கு உரியான்
தா எனின் தாயம் வகுத்து (77)
(தூர்ந்து = பாழாகும், கெடும்; உரியான் = உரிமை உடையவன்; தாயம் = உரிமைப் பொருள்) நண்பர்களுக்கு இடையில் நட்பு அழித்து பாழாகும் எனில், பொய் சொல்வதைத் தவிர்த்துவிடு. உடல் பிரச்னை குறித்து மருத்துவன் கேட்டால், நோய்த் துன்பத்தைச் சொல்லிவிடு. கல்வி கற்றறிந்த சான்றோர் பெருமக்கள், ஏதேனும் ஒரு தீய பழக்கத்தை விட்டு விடச் சொன்னால், மறுகணமே அதை ஒழித்துவிடு. ஒரு பொருளுக்கு உரிமை உடையவன், கொடு எனக் கேட்ட மாத்திரத்தில், அவனுக்கு உரியதைப் பங்கிட்டுக் கொடுத்துவிடு.
நட்பு கெடுமானால் பொய்யை விட்டுவிடு. மருத்துவன் கேட்டால் நோயைச் சொல்லிவிடு. பெரியோர் சொன்னால் தீய பழக்கத்தை ஒழித்துவிடு. உரியவன் கோரினால் பங்கைத் தந்துவிடு.
நாக்கின் அறிப இனியவை; மூக்கினான்
மோந்து அறிப எல்லா மலர்களும்; நோக்குள்ளும்
கண்ணினால் காண்ப அணியவற்றைத்; தொக்கு இருந்து
எண்ணினான் எண்ணப் படும் (78)
(மோந்து = முகர்ந்து, தொக்கு இருந்து = கூடி இருந்து) இனிப்பான பொருள் வகைகளை, நாக்கால் சுவைத்து, ருசித்து அறியலாம். வண்ண வண்ணப் பூக்களின் நறுமணத்தை, மூக்கால் மோந்து அறியலாம். அழகான காட்சிகளை, பொருள்களை, நல்ல கண்பார்வை உள்ள விழிகளால் கண்டு அறியலாம். மாட்சிக்கு உரிய பொருளை, நல்ல கருத்துகளை, அறிஞர் பெருமக்களோடு கூடி ஆராய்ந்து அறிவினால் அறியலாம்.
இனிப்பை நாவினால் சுவைத்து அறியலாம். நறுமணத்தை மூக்கால் மோந்து அறியலாம். அழகை விழிகளால் கண்டு அறியலாம். நற்கருத்துக்களை ஆராய்ந்து அறிவினால் அறியலாம்.
சாவாத இல்லை பிறந்த உயிர் ஏல்லாம்;
தாவாத இல்லை வலிகளும்; மூவா
இளமை இசைந்தாரும் இல்லை; வளமையில்
கேடு இன்றிச் சென்றாரும் இல் (79)
(தாவாத = கெடாத; மூவா = மூப்பு அடையாமல்) இந்த மண்ணில் உடலெடுத்துப் பிறந்த உயிர்கள் அனைத்தும் சாகாத வரம் பெற்றவை இல்லை. என்றேனும் ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும். என்றென்றும் வலிமை கெட்டாது நிலைத்து நிற்கும் பொருளும் எதுவும் இல்லை. வலிமை குன்றும். தளரும். நரை, திரை, முதுமை வாராமல் என்றென்றும் மாறாத இளமையோடு நிலைத்து இருப்போரும் யாரும் இல்லை. என்றேனும் ஒரு நாள் உடல் கிழப்பருவம் எய்தும். செல்வச் செழிப்பு கெடாமல் என்றென்றும் சீரும் சிறப்புடன் வாழ்ந்தாரும் எவரும் இல்லை. சேர்த்த செல்வம் ஓரிடம் நில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கும்.
பிறந்த உயிர் இறக்கும். வலிமை நிலைக்காது குன்றும். இளமை மறைந்து மூப்படையும். சேர்த்த செல்வம் அழியும்.
சொல்லான் அறிப ஒருவனை; மெல் என்ற
நீரான் அறிப மடுவினை; யார் கண்ணும்
ஒப்புரவி னான் அறிப சான்றாண்மை; மெய்க்கண்
மகிழான் அறிப நறா (80)
(மெல்லென்ற = மென்மையான; மடு = குளம் / பள்ளம்; ஒப்புரவு = நடுநிலைமை; மெய் = உடல்; நறா = கள்) ஒருவனுடைய குணத்தை, அதாவது, அவன் நல்லவனா, தீயவனா என்னும் தன்மையை, அவன் பேசுகின்ற சொற்களாலேயே அறிவார்கள். தெளிந்த நீர் இல்லாத குளம் சேறும் சகதியுமாக இருக்கும். எனவே, குளத்தில் உள்ள தண்ணீர் தெளிவாக இருக்கிறதா, கலங்கி இருக்கிறதா என்னும் தன்மையை, மென்மையான நீராலே அறிவார்கள். பல குணங்கள் நிறைந்து அவற்றை ஆளும் ஒருவனின் பெரும் தகைமையை, எல்லோரிடமும் ஒரே மாதிரியாக நடுநிலை தவறாமல் பழகும் தன்மையை, உலக நடையினால் அறிவார்கள். கள் உண்ட மயக்கத்தில் ஆட்டம் போடுவதால், மது அருந்தியவனை, அவன் உடலில் தோன்றும் களிப்பின் அறிகுறிகளால் அறிவார்கள்.
ஒருவன் குணத்தைப் பேசும் சொற்களால் அறியலாம். குளத்தின் தன்மையைத் தெளிந்த நீரால் அறியலாம். பெரும் தகைமையை நடுநிலைப் பண்பால் அறியலாம். குடிகாரனைச் சேட்டைகளால் களிப்பின் அறிகுறிகளால் அறியலாம்.
நா அன்றோ நட்பு அறுக்கும்? தேற்றம் இல் பேதை
விடும் அன்றோ வீங்கப் பிணிப்பின்? அவாஅப்
படும் அன்றோ பன்னூல் வலையில்? கெடும் அன்றோ
மாறுள் நிறுக்கும் துணிபு (81)
(அன்றோ என்பன கேள்விகள்; நா = பதறிப் பேசும் நாக்கு; தேற்றம் இல் பேதை = தெளிவற்ற அறிவிலி; வீங்கிப் பிணிப்பின் = மிகுந்த அன்புடன் கட்டாயப்படுத்தினால்; பன்னூல் = பல நூல்; மாறு = பகை). நரம்பின்றி வாய்க்கு வந்தபடி சுடுசொல் பேசும் நாக்கு, நட்பைக் கெடுக்கும். மிகுந்த அன்பு கொண்டு பேதைகளையும், அறிவிலிகளையும், கட்டாயப்படுத்தும் வற்புறுத்தல்கள், நல்ல குணங்களையும், செயல்களையும், கைவிடும் நிலைக்குத் தள்ளிவிடும். நல்ல நூல்களைப் பயில்வதன் காரணமாக, அறிவென்னும் வலையில் சிக்கிய மாணவனின் மனத்தில், தீய எண்ணங்கள் கெட்டு ஒழிந்து விடும். எதற்கும் மாறுபட்டு நிற்கும் துணிவும், எல்லோரையும் பகைத்துக் கொள்ளும் குணமும், ஒருவனைக் கெடுத்துவிடும்.
நாக்கின் சுடுசொற்களால் நட்பு முறியும். வற்புறுத்தல்களால் மூடர்களின் நற்செயல்கள் நின்றுவிடும். நூல் அறிவால் தீய ஆசைகள் அகலும். மாறுபட்ட துணிவால் பண்பு கெடும்.
கொடுப்பின் அசனம் கொடுக்க; விடுப்பின்
உயிர் இடையீட்டை விடுக்க; எடுப்பின்
கிளை உள் கழிந்தார் எடுக்க; கெடுப்பின்
வெகுளி கெடுத்து விடல் (82)
(ஆசனம் = உணவு; இடையீடு =துன்பம்; கிளை = சுற்றம்; கழிந்தார் = ஏழைகள்; வெகுளி = கோபம்) தானத்தில் சிறந்தது அன்ன தானம் ஆகும். எனவே, ஒருவருக்கு ஒரு பொருளைக் கொடுப்பதானால், உண்பதற்கு உணவு அளித்துச் சாப்பிடச் சொல்க. ஒன்றை விட்டு விடுவதானால், உயிர் மீதான பற்றை விட்டு விடுக. ஒருவரைத் தாங்கி மேலே தூக்கிவிட்டு உயர்த்துவதானால், உறவினர் சுற்றத்தாருள், வாழ வசதியின்றி, ஏழைகளாக உள்ளவர்களைத் தாங்கி மேலே உயர்த்துக. ஒன்றை நீக்க விரும்பினால், மனத்தில் எழும் கோபத்தை, சினத்தை நீக்குக.
கொடுக்க விரும்பினால் உணவு தருக. விட விரும்பினால் உயிர் மீதான பற்றை விடுக. உயர்த்த விரும்பினால் ஏழைகளை உயர்த்துக. நீக்க விரும்பினால் சினத்தை நீக்குக.
நலனும் இளமையும் நல்குரவின் கீழ்ச்சாம்;
குலனும் குடிமையும் கல்லாமைக் கீழ்ச்சாம்;
வளம் இல் குளத்தின் கீழ் நெல்சாம்; பரம் அல்லாப்
பண்டத்தின் கீழ்ச்சாம் பகடு (83)
(நல்குரவு = வறுமை; சாம் = சாகும்; பரமல்லா = சுமக்க முடியாத; பண்டம் = சுமை; பகடு = எருது) அழகு நலமும், இளமை எழிலும், வறுமை வாட்டும் காலத்தில் பொலிவை இழக்கும். குலப் பெருமையும், குடிச்சிறப்பு ஒழுக்கமும், கல்லாமையாலும், அறியாமையாலும் கெடும். நீர்வளம் இல்லாத குளத்தின் அல்லது ஏரியின் தண்ணீர்ப் பாசனத்தை நம்பி இருக்கும் வயலின் நெற்பயிர்கள், வாடி வதங்கும். சுமக்க முடியாத பாரத்தைச் சுமக்கின்ற எருதுகள், சுமையின் அழுத்தம் காரணமாக, அதன் கீழேயே வருந்திச் சாகும்.
அழகையும் இளமையையும், வறுமை அழிக்கும். குலத்தையும் குடியையும், கல்லாமை கெடுக்கும். நீரற்ற குளத்தைச் சார்ந்தால், நெற்பயிர்கள் வாடும். பாரம் தாங்காத எருதுகள், சுமையால் சாகும்.
நல்லார்க்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை; நன்நெறிச்
செல்வார்க்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை; அல்லாக்
கடைகட்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை; தம் கைத்து
உடையார்க்கும் எவ்வூரும் ஊர் (84)
(அல்லார் = அல்லாதவர்; கடைகட்கும் = கீழ்மக்களுக்கும்) கல்வி அறிவில் சிறந்த சான்றோர்க்கு உரிமையான ஊர் என ஏதும் இல்லை. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதுபோல், எல்லா ஊரும் அவர்களுக்குச் சொந்தமான ஊரே. தவ நெறியில் அறச் செயல்களை மேற்கொண்டு ஒழுகுவோர்க்கும், அவர்க்கு உரியது என எந்த ஊரும் இல்லை. எல்லா ஊரும் அவர்களுக்குச் சொந்தமான ஊரே. அற ஒழுக்கம் மேற்கொள்ளாத கீழ் மக்களுக்கும், தமக்கு உரிய ஊர் என ஏதும் இல்லை. இவர்கள் நிலையாக ஓர் ஊரில் தங்காமல் ஊர் சுற்றுவதால், இவர்களுக்கும் சொந்தமான ஊர் எதுவும் இல்லை. எல்லா ஊரும் இவர்க்கும் உரிய ஊரே. கையில் பொருள் உள்ள வசதி படைத்தவர்கள், எந்த ஊருக்குச் சென்றாலும் பிழைத்துக் கொள்வர் என்பதால், எல்லா ஊரும் அவர்க்கும் உரிய ஊரே.
கற்றோர்க்கு எந்த ஊரும் சொந்த ஊராகும். அறவோர்க்கு எந்த ஊரும் சொந்த ஊராகும். கீழ்மக்களுக்கு எந்த ஊரும் சொந்த ஊராகும். வசதி படைத்தோர்க்கு எந்த ஊரும் சொந்த ஊராகும்.
கல்லார் ஒருவர்க்குத் தம்வாயில் சொல்கூற்றம்;
மெல் இலை வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம்;
அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்; கூற்றமே
இல்இருந்து தீங்கு ஒழுகு வாள் (85)
கல்வி கற்காத மூடர்களுக்கு அவர்கள் வாயிலிருந்து வரும் சொல்லே யமன் ஆகும். வாயில் இருந்து வரும் பொய் பித்தலாட்டம் மற்றும் சுடுசொல் ஆகியவையே மூடனுக்குப் பகை என்பதால் வார்த்தைகளே யமன் எனப்பட்டது. மெல்லிய தளிர் இலைகளை உடைய வாழை மரத்துக்கு அதில் தோன்றும் காய்களே யமன் ஆகும். வாழை மரம் ஒருமுறை குலை தள்ளியவுடன் அதில் மீண்டும் காய்கள் தோன்றுவதில்லை. இடைக்கன்றுகள் வளர்வதற்காக அதை வெட்டி விடுவர். எனவே, வாழை மரத்துக்கு அதன் காய்களே யமன் எனப்பட்டது. நற்செயல்களைச் செய்யாமல், தீய செயல்களைப் புரிவோர்க்கு நீதிதேவதையே தண்டனை தந்துவிடும். கோவலனைத் தவறாகத் தண்டித்த பாண்டியன் நெடுஞ்செழியனை அறமே தண்டித்தது. எனவே, தவறு இழைப்போர்க்கு அறமே யமன் எனப்பட்டது. இல்லறமாகிய வீட்டில் நல்லறம் புரியாமல், தீய ஒழுக்கம் கொண்டு வாழ்பவள், கணவனுக்கே யமன் ஆவாள்.
அறிவிலார்க்கு வாய்ச்சொல் யமன். வாழைக்கு அதன் காய்கள் யமன். தீயோர்க்கு அறக் கடவுள் யமன். கணவனுக்கு ஒழுக்கம் இல்லாப் பெண் யமன்.
(தொடரும்)
வாழைக்கு தான் என்று காய் கூற்றம்
வாழைக்கு தான் ஈன்ற கன்று ( வாழைக் கன்று) யமன் என கொள்ள வேண்டும் அல்லவா?