செங்கோட்டை – டில்லியில் உள்ள பிரதான சின்னங்களில் ஒன்று. இந்திய வரலாற்றை மாற்றியமைத்த முக்கிய சம்பவங்கள் செங்கோட்டையில்தான் நடந்தேறியுள்ளன.
முகலாயர்கள் இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருந்த காலத்தில், ஷாஜகானால் கட்டப்பட்டதுதான் இந்த செங்கோட்டை. 1648ஆம் வருடம் தொடங்கி சுமார் 200 ஆண்டுகள் செங்கோட்டை முகலாயர்களின் அரண்மனையாகவும், தர்பாராகவும் இருந்து வந்துள்ளது.
அமைச்சர் பிரதானிகள் புடை சூழ, அமீர்களுக்கு மத்தியில் முகலாய அரசர்கள் செங்கோட்டையிலிருந்து ஆட்சி புரிந்து வந்தனர். முதலில் ஷாஜகான், அவரைத் தொடர்ந்து ஔரங்கசீப், பின்னர் ஏராளமான மன்னர்கள் செங்கோட்டையில் ஆட்சி செய்திருக்கிறார்கள். அரசர்களைக் காண ஆயிரக்கணக்கான தூதுவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கின்றனர். குதிரையின் குழம்படி சத்தமும், பேகம்களின் கொலுசொலி சத்தமுமாக கேட்ட செங்கோட்டையில் மூன்று சரித்திர வழக்குகள் நடைபெற்றன. 1) பகதூர் ஷா சாஃபர் வழக்கு, 2) இந்திய தேசிய இராணுவ வழக்கு (ஐ.என்.ஏ வழக்கு) மற்றும் 3) காந்தி கொலை வழக்கு.
முதல் இரண்டு வழக்குகள் இந்திய சரித்திரத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்தன என்று சொன்னால் அது மிகையாகாது.
முதல் வழக்கு முடிந்த பிறகு, இந்தியாவில் முகலாயர்கள் மற்றும் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இந்தியா பிரிட்டிஷ் அரசியின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.
பின்னர் ஏறத்தாழ தொன்னூறு ஆண்டுகள் கழித்து, இரண்டாவது வழக்கினால் ஆங்கிலேயர்கள் இனி இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருக்க முடியாது என்ற நிலைமையை புரிந்துகொண்டு, அவ்வழக்கு முடிந்த சில ஆண்டுகளில் இந்தியாவிற்கு சுதந்திரத்தை வழங்கினார்கள்.
ஒரு வழக்கில் நாடாளும் மன்னர் குற்றவாளி. மற்றொரு வழக்கில் நாட்டைப் பாதுகாக்கும் இராணுவ அதிகாரிகள் குற்றவாளிகள். மூன்றாவது வழக்கில் நாட்டின் விடுதலைக்காக போராடிய மாகாத்மா காந்தியைக் கொன்றவர்கள் குற்றவாளிகள். முதல் இரண்டு வழக்குகளையும் நடத்தியது ஆங்கிலேய அரசு. மூன்றாவது வழக்கை நடத்தியது சுதந்திரம் பெற்ற புதிய இந்திய அரசு. செங்கோட்டையில் வாள்போருக்குப் பதிலாக வாய்ப்போர் நடந்தது. ஆட்சியாளர்கள் சாட்சியங்களில் கவனம் செலுத்தினர்.
0
250 ஆண்டுகளுக்கு மேலாக, பரந்து விரிந்து இருந்த முகலாயர்களின் சாம்ராஜ்ஜியம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விரைவாக மங்கத் தொடங்கியது. 1837ஆம் ஆண்டு, முகலாய மன்னர் அகமது ஷா இறந்ததால் அவருடைய மகன் இரண்டாம் பகதூர் ஷா சாஃபர் ஆட்சிக்கு வந்தார். அவரது இராஜ்ஜிய விஸ்தீரணம் டில்லிக்குள் அடங்கிவிட்டது. அவருடைய அதிகாரம் செங்கோட்டைக்குள் சுருங்கிவிட்டது.
பகதூர் ஷா பதவியேற்கும் சமயத்தில் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் உள்ள அநேக இடங்களை கைப்பற்றி விட்டார்கள். பல சுதந்திர அரசர்களை தங்கள் கட்டுபாட்டுக்குள் வைத்திருந்தனர். பகதூர் ஷா பேருக்குதான் அரசர், அவரை ஒரு பொம்மை அரசராகத்தான் கிழக்கிந்திய கம்பெனி நடத்தி வந்தது. 1764ஆம் ஆண்டு முகலாயர்களுக்கும் கிழக்கிந்திய கம்பெனிக்கும் நடந்த பக்சர் யுத்தத்தில் முகலாயர்கள் தோற்றார்கள். அதன் பின் முகலாயர்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிழக்கிந்திய கம்பெனி வரி வசூல் செய்யும் உரிமையைப் பெற்றது. முகலாய அரசருக்கு கிழக்கிந்திய கம்பெனி வருடத்திற்கு 26 லட்சம் ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்தது. இதுபோக, முகலாய அரசர் செங்கோட்டையில் ஒரு சிறிய படையை பராமரித்துக்கொள்ளும் உரிமையையும் தக்கவைத்துக் கொண்டார்.
மேற்சொன்ன உரிமைகளைக் கொண்டு மன்னர் பகதூர்ஷா சாஃபர், யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் தன் நான்கு பீவிக்களுடனும், பல இணைவிகளுடனும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். அவர் பொழுதுபோக்கே கசல்கள் எழுதுவதுதான். பகதூர் ஷா ஆயிரக்கணக்கான கசல்களை எழுதியிருக்கிறார். புகழ்பெற்ற உருது கவிஞரான மிர்சா காலிப், பகதூர் ஷாவின் அரசவையைச் சேர்ந்தவர்.
கசலும், கவிதையுமாக இனிமையாக காலம் கழித்து வந்த 82 வயதான அரசர் பகதூர் ஷா வாழ்க்கையில் விதி சுனாமி போலத் தாக்கியது.
கிழக்கிந்திய கம்பெனி, தான் இந்தியாவில் கைப்பற்றியப் பகுதிகளை பாதுகாக்க ஒரு இராணுவத்தை உருவாக்கியிருந்தது. அந்த இராணுவத்தின் அதிகாரிகள் அனைவரும் ஆங்கிலேயர்கள். ஆனால் சிப்பாய்கள் என்று அழைக்கப்படும் வீரர்கள் அனைவரும் இந்தியர்கள். அதாவது கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்த ராணுவத்தில் பணிபுரிந்த 90% பேர் இந்தியர்கள். ஆங்கிலேயர்கள் சிப்பாய்களுக்கு போர் பயிற்சி கொடுத்து, அவர்களை இராணுவம் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தினர். சிப்பாய்களில் ஹிந்துக்களும் இருந்தனர், முஸ்லீம்களும் இருந்தனர்.
கிழக்கிந்திய கம்பெனி, 1853ஆம் ஆண்டில், புதிதாக உருவாக்கப்பட்ட என்ஃபீல்ட் துப்பாக்கியை தன்னுடைய இந்திய இராணுவத்தில் அறிமுகப்படுத்தியது. அந்த துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் தோட்டா காகிதத்தால் சுற்றப்பட்ட வெடிமருந்து. துப்பாக்கியில் அந்த தோட்டாவை நிரப்ப வேண்டுமென்றால், தோட்டாவை சுற்றியிருக்கும் காகிதத்தை வாயால் கடித்து பிய்த்து எடுக்கவேண்டும். இதில் என்ன சங்கடம் என்றால், அந்த காகிதத்தில் மாடு மற்றும் பன்றியின் கொழுப்பால் உருவாக்கப்பட்ட பசை தடவப்பட்டிருக்கும். ஹிந்துக்களுக்கு மாடு புனிதமானது. மாடுகளைக் கொன்று அதனுடைய கொழுப்பில் தயாரிக்கப்பட்ட தோட்டாக்களை பயன்படுத்த ஹிந்துக்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். முஸ்லீம்களுக்கு பன்றி தவிர்க்கப்பட வேண்டிய ஒரு பிராணி. அவர்களைப் பொறுத்தவரை பன்றி என்பது ஹராம், தீண்டக்கூடாத ஒரு மிருகம். அதனால் முஸ்லீம்களும் பன்றிக் கொழுப்பால் உருவாக்கப்பட்ட தோட்டாவை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் ஆங்கிலேயர்கள் சதி செய்வதாக சிப்பாய்கள் எண்ணினார்கள். மாமிசக் கொழுப்பால் உருவான தோட்டாவை பயன்படுத்த வைப்பதன் மூலம், சிப்பாய்கள் தங்கள் ஜாதி மற்றும் மதத்தை இழந்துவிடுவார்கள். அதன் பின் சிப்பாய்களை எளிதாக கிருத்தவத்திற்கு மதம் மாற்றிவிடலாம் என்று ஆங்கிலேயர்கள் திட்டம் தீட்டியிருப்பதாக சிப்பாய்கள் நம்பினார்கள். எனவே மாடு மற்றும் பன்றி கொழுப்பு கலந்த தோட்டாக்களை பயன்படுத்த சிப்பாயகள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிப்பாய்களின் எதிர்ப்பு வலுத்து, புரட்சியாக மாறியது.
சிப்பாய் புரட்சிக்கு என்ஃபீல்ட் தோட்டாக்கள் மட்டும் காரணமில்லை. அது போராட்டத்திற்கான தீப்பொறி மட்டுமே. ஏற்கனவே ஆங்கிலேயர்களின் மீதான வெறுப்பு சிப்பாய்களிடம் புகைந்து கொண்டிருந்தது. வாரிசில்லாத இந்திய இராஜ்ஜியங்களை கிழக்கிந்திய கம்பெனி எடுத்துக்கொண்டது. நிலச் சீர்திருத்தம், அதிகமான நில வரி, இராணுவத்தில் பதவி உயர்வில் ஆங்கிலேயர்களுக்கு முன்னுரிமை போன்ற பல காரணங்கள் சிப்பாய் புரட்சிக்கு காரணம். புரட்சி செய்த சிப்பாய்களுடன், இந்திய ராஜாக்கள், பதவி இழந்த பேஷ்வாக்கள், நவாப்புகள், ஜமீன்தார்கள், பொது மக்களும் சேர்ந்து கொண்டதால் போராட்டம் இந்திய சுதந்திரப் போராக மாறியது. ஆனால் இந்த சுதந்திரப் போருக்கும், அரசர் பகதூர் ஷாவிற்கும் என்ன சம்மந்தம்?
கல்கத்தாவில் மங்கள் பாண்டே என்ற சிப்பாய், கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டான். அவன் படைப்பிரிவில் உள்ள ஏனைய சிப்பாய்களும் அவனுக்கு ஆதரவு தெரிவித்தனர். மங்கள் பாண்டே தூக்கிலிப்பட்டான். அவன் பணிபுரிந்த படைப்பிரிவு கலைக்கப்பட்டது.
கல்கத்தாவைத் தொடர்ந்து, உத்திரப் பிரதேசத்தில் உள்ள மீரட் நகரில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவத்தில் பெரிய அமளி துமளி ஏற்பட்டது. சிப்பாய்கள் ஆங்கிலேய அதிகாரிகளையும் அவர்களது குடும்பத்தாரையும் கொன்று விட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த மற்ற சிப்பாய்களையும், ஏனைய கைதிகளையும் விடுவித்துக்கொண்டு டெல்லியை நோக்கிப் புறப்பட்டனர்.
1857ஆம் வருடம், மே மாதம் 11ஆம் தேதி, புரட்சியாளர்கள் டெல்லி செங்கோட்டையில் புகுந்தனர். பகதூர் ஷாவை சந்தித்து, நீங்கள்தான் எங்கள் தலைவர். இனி நீங்கள்தான் எங்களுடைய போராட்டத்தை வழிநடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 82 வயதான பகதூர் ஷாவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இது என்னடா போதாத வேலை என்று கையைப் பிசைந்து கொண்டிருந்தார். அவருடைய பிரியமான பீவியான ஜீனத் மகாலும், ஆலோசகரான வைத்தியரும், நாம் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்றனர். ஆனால் அரசரின் புதல்வர்களும், இளசுகளும் இதுதான் ஆங்கிலேயர்களுக்கு பாடம் கற்பிக்க சரியான சமயம், அதனால் நாம் போராட்டத்தில் கண்டிப்பாக கலந்து கொள்ளவேண்டும் என்றனர். அப்படியே முடிவெடுத்து செயல்பட்டனர். பகதூர் ஷாவின் மகன்களின் ஒருவனான மிர்சா முகலாயப் புரட்சியாளர்களின் தளபதியாக பதவியேற்றுக் கொண்டான்.
செங்கோட்டையிலும், சுற்றுவட்டாரப் பகுதியிலும் இருந்த ஆங்கிலேயர்களின் உறைவிடங்கள் தாக்கப்பட்டன. பெண்கள், குழந்தைகள் உட்பட 49 ஆங்கிலேயர்கள் கைது செய்யப்பட்டு சிறைபிடிக்கப்பட்டனர். மே மாதம், 16ஆம் தேதி, அரசர் உத்தரவு என்ற பெயரில் 49 ஆங்கிலேயர்களும் பரலோகத்திற்கு அனுப்பப்பட்டனர். டில்லி மட்டுமல்லாது லக்னோ, ஜான்சி, பரேலி, குவாலியர் என்று இந்தியாவின் பிற பகுதிகளிலும் போராட்ட தீ பரவியது. ஜான்சியில், ராணி லட்சுமி பாய் போர்க்கொடி தூக்கினார். கான்பூரில், நானா சாகிப் மற்றும் அவருடைய தளபதி தாந்தியா தோப் ஆகியோர் போராட்டத்தை முன்னின்று நடத்தினர். நிலைமை கட்டுக்கடங்காமல் போனது.
கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்கு உட்பட்ட சென்னை, மும்பை மற்றும் பஞ்சாப் மாகாணாப் பகுதிகள் அமைதியாக இருந்தன. கிழக்கிந்திய கம்பெனி தன்னுடைய மற்ற பகுதிகளிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் இராணுவத்தை வரவழைத்தது.
பெரும் படையுடன் கிழக்கிந்திய கம்பெனி டில்லி நகரத்திற்குள் நுழைந்தது. புரட்சியாளர்களால் டில்லியை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. டில்லி வீழ்ந்தது. டில்லியை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் கொலைவெறித் தாக்குதல் புரிந்தனர். கண்டவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளினர். கொள்ளையில் ஈடுபட்டனர். டில்லி பற்றிக்கொண்டு எரிந்தது. செங்கோட்டைக்குள் நுழைந்த கம்பெனியின் ராணுவம், போராட்டத்திற்கு தலைமை வகித்த அந்தக் கிழட்டு அரசரும், அவரது சகாக்களும் எங்கே என்று தேடியது.
பகதூர் ஷா சாஃபரும், அவருடைய மகன்களான மிர்சா மொகல், மிர்சா கிஸிர் மற்றும் பகதூர் ஷாவின் பேரன் மிர்சா அபு பக்த் ஆகியோர் அனைவரும் ஹுமாயூனின் கல்லறையில் ஒளிந்து கொண்டிருந்தார்கள். கம்பெனி இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஹட்ஸன், பகதூர் ஷாவிற்கு தூது அனுப்பினான். கம்பெனியிடம் சரணடையும் பட்சத்தில் அரசர் மற்றும் அவரது மனைவியின் உயிர்களுக்கு உத்தரவாதம் வழங்குவதாக வாக்களித்தான்.
இதற்கு அரசர் சம்மதிக்கவே, 21.09.1857 அன்று, அவரும் அவரது பரிவாரங்களும் ஹுமாயூன் கல்லறையில் மேஜர் ஹட்ஸனால் கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட பகதூர் ஷாவின் மகன்களான மிர்சா முகல், மிர்சா கிஸிர் மற்றும் பகதூர் ஷாவின் பேரனான மிர்சா அபு பக்த் தனியாக அழைத்துச் செல்லப்பட்டு, டெல்லியின் நுழைவுவாயில் என்ற இடத்திற்கு அருகே மேஜர் ஹட்ஸனால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் (அரசரின் மகன்களைக் கொன்ற மேஜர் ஹட்ஸன், 11.03.1858 அன்று, லக்னோவில் கொல்லப்பட்டான்). இதில் பகதூர் ஷாவின் பிரியமான பீவியான ஜீனத் மகாலுக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சிதான். காரணம், அவளுடைய புதல்வன் மிர்சா ஜிவான் பக்த்தான், பகதூர் ஷாவிற்கு பிறகு அரசவையை அலங்கரிக்கப்போகும் அடுத்த வாரிசு என்று நினைத்திருந்தாள். ஆனால் பாவம், அந்த அம்மணிக்கு அப்போது தெரியாது, இன்னும் சில மாதங்களில் முகலாய சாம்ராஜ்ஜியமே முடிவுக்கு வரப்போகிறது என்று.
கைது செய்யப்பட்ட பகதூர் ஷா செங்கோட்டைக்கு அழைத்துவரப்பட்டார். அவர் மீது கிழக்கிந்திய கம்பெனி வழக்கு தொடுத்தது. அவ்வழக்கை விசாரிக்க பிரத்யேகமான ஒரு இராணுவ ஆணையத்தை அமைத்தது கம்பெனி. அந்த ஆணையத்தில் மொத்தம் ஐந்து உறுப்பினர்கள். அவர்கள் அனைவரும் கிழக்கிந்திய கம்பெனி ராணுவத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள். ஆணையத்தின் தலைவராக செயல்பட்டவர் லெப்டினன்ட் கர்னல் டாஸ். ஆணையத்தின் பிராசிக்கியூட்டராக செயல்பட்டவர் மேஜர் ஹாரியட்.
கிழக்கிந்திய சட்டப்படி, ராணுவத்தில் தன் வீரர்கள் செய்யும் தவறை விசாரிக்க Court Martial அல்லது விசாரணை ஆணையத்தை (Enquiry Commission) கம்பெனி நியமிக்கலாம். எதிரி நாட்டின் பிரஜையை விசாரிக்க கிழக்கிந்திய கம்பெனிக்கு சட்ட ரீதியான அதிகாரம் கிடையாது. இருப்பினும், கிழக்கிந்திய கம்பெனி முகலாய அரசரான பகதூர் ஷாவை விசாரிக்க, இராணுவ ஆணையத்தை (Military Commission) அமைத்தது. இது சட்டத்திற்குப் புறம்பானது.
பகதூர் ஷா ஒரு ராஜ்ஜியத்தின் அரசர். அவர் மீது வழக்கு தொடுக்க கம்பெனிக்கு அதிகாரமில்லை. கம்பெனியிடம் ஒய்வூதியம் பெற்றாலும், தான் ஒரு அரசர் என்ற அதிகாரத்தை பகதூர் ஷா ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை. கம்பெனி முகலாய சாம்ராஜ்ஜியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்று, அதற்கு பதிலாக முகலாய அரசருக்கு ஓய்வூதியத்தை வழங்கியது. மராட்டியர்கள் டில்லியைப் பிடித்த போது, பாதுகாப்புக்காக கிழக்கிந்திய கம்பெனியின் உதவியை பகதூர் ஷாவின் மூதாதையர்கள் நாடினர். கிழக்கிந்திய கம்பெனியும் முகலாயர்களுக்கு பாதுகாப்பு வழங்கியது. எந்த காலகட்டத்திலும் கிழக்கிந்திய கம்பெனியிடம், தன் ராஜ்ஜிய அதிகாரத்தை பகதூர் ஷாவோ, அவரது மூதாதையர்களோ விட்டுக்கொடுக்கவில்லை. அவர் சுதந்திர ராஜ்ஜியத்தின் அரசராகத்தான் செயல்பட்டார். கம்பெனியின் சட்டதிட்டத்துக்கு பகதூர் ஷா ஒருபோதும் உட்பட்டவரல்ல. அப்படியிருக்க, ஒரு நாட்டின் அரசர் மீது தேச துரோக குற்றத்தை எப்படி சுமத்தமுடியும்?. ஆனால் கிழக்கிந்திய கம்பெனி சுமத்தியது. வழக்கும் நடத்தியது.
(தொடரும்)