1947ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், காந்தியைக் கொல்ல நாத்துராம் கோட்சேவும், ஆப்தேவும் முடிவெடுத்தார்கள். ‘காந்தியினுடைய தவறான கொள்கையினாலும், அணுகுமுறையினாலும் ஹிந்துக்கள் முஸ்லீம்களால் பாதிக்கப்படுகின்றனர்; சுதந்திர இந்திய அரசாங்கமும் காந்தி சொல்வதையே வேத வாக்காக கருதி செயல்படுகிறது; இதனால் ஹிந்துக்கள் மிகவும் இன்னலுறுகிறார்கள்; குறிப்பாக பாகப்பிரிவினைக்கு பின்னர் பாக்கிஸ்தானுக்கு கொடுக்க வேண்டிய 75 கோடி ரூபாய் பணத்தில் 20 கோடி ரூபாய் பணத்தை இந்தியா முதல் தவனையாகக் கொடுத்தது. ஒருபுறம் பணத்தைப் பெற்றுக்கொண்ட பாக்கிஸ்தான். மறுபுறம் பத்தானிய படைவீரர்களை அனுப்பி காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தி அதன் பகுதிகளை பிடித்தது; கோபமடைந்த இந்திய அரசு, பாக்கிஸ்தானுக்கு கொடுக்க வேண்டிய மீதித் தொகையான 55 கோடியை கொடுக்கவில்லை. இது தவறு என்று கருதிய காந்தி உண்ணாவிரதம் மேற்கொண்டார். அரசாங்கம் காந்திக்கு பயந்து பாக்கிப் பணத்தை பாக்கிஸ்தானுக்கு கொடுத்தது; மேலும் இது போன்ற நிலைமை தொடராமல் இருக்க வேண்டுமானால் காந்தி கொல்லப்படவேண்டும்’ என்ற முடிவுக்கு வருகின்றனர் கோட்சேவும், ஆப்தேவும்..விரைவில் இதற்கான திட்டம் தீட்டப்படுகிறது. ஏனைய குற்றவாளிகளும் கோட்சே மற்றும் ஆப்தேவுடன் சேர்ந்து கொள்கின்றனர்.
ஜனவரி 13ஆம் தேதி, நாத்துராம் கோட்சே, ஆப்தே, பாட்கே மற்றும் சங்கர் பூனாவை விட்டு மும்பை செல்கின்றனர். அவர்களுடன் இரண்டு நாட்டு வெடி குண்டுகள் மற்றும் கையெறி குண்டுகளையும் எடுத்துச் செல்கின்றனர். ஏற்கனவே, மும்பை சென்றிருந்த பாவாவும் கர்கரேவும், கோட்சே கூட்டத்தைச் சேர்ந்த நால்வரையும் சந்திக்கின்றனர். ஹிந்து மகா சபாவின் அலுவலகத்தில் சந்திப்பு நடைபெறுகிறது. பாவாவும், கர்கரேவும் மும்பையிலிருந்து தில்லி க்கு இரயிலில் பயணமாகின்றனர். கொலை நடந்த சமயத்தில், காந்தி தில்லி யில் உள்ள பிர்லா இல்லத்தில் தங்கியிருந்தார். பாவாவும், கர்கரேவும் தில்லி க்கு 17ஆம் தேதி வந்தனர். அங்கு சாந்தினி சவுக் பகுதியில் உள்ள ஒரு சாதாரண ஹோட்டலில் சிறிய அறையொன்றை எடுத்துத் தங்கினர். ஹோட்டல் மேலாளரிடம் தவறான பெயரையும், தவறான விலாசத்தையும் கொடுத்தனர்.
மற்ற நால்வரும் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பொய்க் காரணம் சொல்லி மும்பையில் பல பேரிடமிருந்து 2100 ரூபாய் நிதியை திரட்டினர். 17ஆம் தேதி, கோட்சேவும் ஆப்தேவும் விமானம் மூலம் மும்பையிலிருந்து தில்லி புறப்பட்டுச் சென்றனர். விமானத்தில் வேறு பெயரில் பயணம் செய்தனர். தில்லியில் உள்ள மெரினா ஹோட்டலில் இருவரும் தங்கினர். பாட்கேவும், சங்கரும் ரயில் மூலம், 19ஆம் தேதி, தில்லி வந்து சேர்ந்தனர். இவர்கள் இருவரும் ஹிந்து மகா சபா அலுவலகத்தில் தங்கினர்.
கோபால் கோட்சே இராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தான். அவன் விடுப்பு வேண்டி தான் பணி செய்யும் அலுவலகத்தில் விண்ணப்பித்தான். அவனுக்கு 17ஆம் தேதி விடுப்பு கிடைத்தது. 18ஆம் தேதி கோபால் கோட்சேவும் தில்லி வந்து சேர்ந்தான். ரயிலில் பயணம் செய்த கோபால் கோட்சேவை வரவேற்க புதுதில்லி இரயில் நிலையத்தில் அண்ணன் நாத்துராம் கோட்சே காத்திருந்தான். ஆனால் கோபால் கோட்சே கண்ணயர்ந்து தூங்கி விட்டதால், இறங்கும் இடத்தை கோட்டைவிட்டான். இறுதியில் பழைய தில்லி இரயில் நிலையத்தில் அகதிகளுடன் தங்கி மறுநாள் காலை ஹிந்து மகா சபா அலுவலகம் வந்து சேர்ந்தான். 19ஆம் தேதி அன்று, ஏழு குற்றவாளிகளும் பாவா தங்கியிருந்த ஹோட்டலில் சந்தித்து தங்கள் திட்டம் குறித்து பேசினர். அவர்களிடம் இரண்டு துப்பாக்கிகள், நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கையெறி குண்டுகள் இருந்தன. கோபால் கோட்சே இராணுவத்தில் பணியாற்றியதால் ஒரு துப்பாக்கி அவன் கைவசம் இருந்தது. மற்றொன்று பாட்கே கொண்டு வந்திருந்தான்.
20ஆம் தேதி காலை, ஆப்தே, கர்கரே, பாட்கே, சங்கர் ஆகியோர் காந்தி தங்கியிருந்த பிர்லா இல்லத்தை நோட்டமிட்டனர். பிர்லா இல்லத்திற்கு பிரார்த்தனைக் கூட்டத்திற்காக வருபவர்கள் பின் பக்கமாக உள்ள வழியின் மூலம் உள்ளே வருவார்கள். குற்றவாளிகள் இந்த வழியாகத்தான் பிர்லா இல்லத்தை நோட்டமிட வந்தனர். வீட்டின் பின்புறம் வேலையாட்கள் தங்கும் குடியிருப்பு இருந்தது. அதற்கு அடுத்தாற்போல் ஒரு முகப்பு இருந்தது. அந்த முகப்பிற்கு முன் ஒரு மேடை அமைக்கப்பட்டிருந்தது. அங்குதான் காந்தி தன் பிரார்த்தனை கூட்டத்தை நடத்துவார். மேடையில், ஒரு பலகையில் காந்தி அமர்ந்திருப்பார், பார்வையாளர்களெல்லாம் மேடையைச் சுற்றி அமர்ந்திருப்பர். காந்தி பிரார்த்தனைக்காக அமர்ந்திருக்கும் இடத்திற்குப் பின்னால் ஒரு சுவர் இருந்தது. அந்தச் சுவற்றில் வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு ஜன்னல் இருந்தது. இந்த ஜன்னல் வழியாகத்தான் பின்னால் இருக்கும் அறைக்கு வெளிச்சம் கிடைத்தது. அந்த ஜன்னல் வழியாக அறையை நோட்டமிட்டனர். பின்னர், அறையின் முகப்பில் அமர்ந்திருந்த ஒற்றைக்கண் ஆசாமியைக் கடந்து குற்றவாளிகள் அறைக்குள் சென்று ஜன்னலின் அளவை அளந்தனர். அந்த ஜன்னல் வழியே துப்பாக்கியைப் பயன்படுத்தி சுடலாமென்று முடிவெடுத்தனர்
திட்டம் வகுக்கப்பட்டது. ‘கோட்சேவும், ஆப்தேவும் சமிஞை செய்தவுடன் பாட்கே துப்பாக்கியுடனும், கையெறி குண்டுடனும் வேலையாட்களின் குடியிருப்பு வழியாக உள்ளே நுழைந்து, காந்தியை புகைப்படம் எடுப்பதாகக் கூறி, ஜன்னல் இருக்கும் அறையினுள் நுழைந்து காந்தியின் பின்புறம் சுடத் தயாராக இருக்கவேண்டும். மதன்லால் பாவா, பிர்லா இல்லத்தின் பின்பக்கத்தில் உள்ள கதவருகே நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்யவேண்டும். வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டு பிரார்த்தனைக்கு வரும் மக்கள் குழப்பமடைந்து, பயத்தில் நாலாப்புறமும் சிதறி ஓடுவார்கள். இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்தி, காந்தியின் பின்னால் நின்று கொண்டிருக்கும் பாட்கே துப்பாக்கியால் காந்தியைச் சுட வேண்டும். பின்னர் கையெறி குண்டு ஒன்றையும் அவர் மீது வீச வேண்டும். காந்தியின் முன்னாலிருக்கும் சங்கரும் காந்தியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, கையெறி குண்டை வீச வேண்டும். கோபால் கோட்சே, கர்கரே மற்றும் பாவா மூவரும் ஆளுக்கு ஒரு கையெறி குண்டை வீசிவிட்டு அனைவரும் அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடி விடவேண்டும்’.
கோபால் கோட்சே, பாட்கே கொண்டுவந்திருந்த துப்பாக்கிகள் சரியாக வேலை செய்கிறதா என்று சரிபார்க்க ஹிந்து மகா சபா அலுவலகத்திற்கு பின்புறம் அமைந்திருந்த வனாந்திரப்பகுதியில் துப்பாக்கிகள் இரண்டும் பயன்படுத்தி பார்க்கப்பட்டது. கோபால் கோட்சேவின் துப்பாக்கி சரியாக வேலை செய்யவில்லை. பாட்கேவின் துப்பாக்கி குறுகிய தூரம் வரையில் சுட்டது. கோபால் கோட்சே இரண்டு துப்பாக்கிகளையும் எண்ணெய் கொண்டு சரிசெய்தான். அப்போது அந்த வழியாக ஒரு வனக்காவலர் வந்தார். அவருக்கு சந்தேகம் வராதபடி, பாவா பஞ்சாபி மொழியில் பேசி அவரை அனுப்பி விட்டான்.
20ஆம் தேதி மதியம், மெரினா ஹோட்டலில் குற்றவாளிகள் அனைவரும் ஒன்றுகூடினர். தங்கள் திட்டம் குறித்து விவாதித்தனர். நாத்துராம் கோட்சே தலைவலி என்று படுத்துவிட்டான். மற்றவர்கள் ஆயுதங்களை தயார்படுத்திக் கொண்டனர். நாத்துராம், ‘இது நமக்கு கிடைத்த கடைசி சந்தர்ப்பம்; இதை தவறவிட்டுவிடக்கூடாது; ஒவ்வொருவரும் அவர்களது பங்கினை சரியாகச் செய்யவேண்டும்’ என்று அறிவுறுத்தினான். எல்லோருக்கும் போலியான பெயர்கள் சூட்டப்பட்டன. அனைவரும் தங்கள் உடைகளை மாற்றிக்கொண்டனர். கர்கரே போலியான மீசையை வரைந்து கொண்டான். கண் இமைகளுக்கு மை தீட்டிவிட்டு, குங்குமத்தை குழைத்து நெற்றியில் பெரிதாகத் தீட்டிக்கொண்டான். தன்னை ஒரு பிராமணன் போல் அடையாளப்படுத்திக்கொண்டான். 20ஆம் தேதி மாலை, அனைவரும் பிர்லா இல்லத்தை அடைந்தனர்.
காந்தி பிரார்த்தனைக்காக மேடை மீது வந்தமர்ந்தார். எதிர்பார்த்ததை விட அன்று கூட்டம் அதிகமாகவே இருந்தது. தில்லி மக்கள் அமைதிக்காக சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டதைப் பற்றி காந்தி சிலாகித்துப் பேசினார். தில்லி மக்கள் தங்கள் வாக்குப்படி நடந்துகொண்டால் உலகமே அவர்களைக் கண்டு பாடம் கற்றுக்கொள்ளும் என்று பெருமைபட பேசினார். ஹிந்து மகா சபாவைச் சேர்ந்தவர்கள் சத்தியப் பிரமானத்தை நிராகரித்திருந்ததால் வருத்தம் கொண்டிருந்த காந்தி, முஸ்லீம்களுக்கு எதிராக செயல்படும் ஹிந்து மகா சபையினர் இந்தியாவின் எதிரிகள் என்று சாடினார்.
இப்படியாக காந்தி பேசிக்கொண்டிருந்தபோது, திட்டத்தின்படி, பாட்கே ஜன்னல் இருக்கும் அறை நோக்கிச் சென்றான். அங்கு வெளியில் இருவர் நின்று கொண்டிருந்தனர். அதில் ஒருவன், முன்பு பார்த்த ஒற்றைக்கண் ஆசாமி. பாட்கே, ஒற்றைக்கண் ஆசாமியைப் பார்த்தது சகுனம் சரியில்லாததை உணர்த்துவதாக நினைத்தான். மேலும் அறைக்குள் சென்று துப்பாக்கியால் சுட்டு, கையெறி குண்டை தூக்கிப் போட்டுவிட்டுத் திரும்பி வெளியே வரமுடியாமல் மாட்டிக்கொள்வோம் என்று பயந்தான். நாத்துராம் கோட்சேவிடம் தன்னால் ஜன்னல் உள்ள அறைக்குள் செல்லமுடியாது என்று திட்டவட்டமாக கூறினான். இந்த நிலையைக் குறித்து குற்றவாளிகள் அனைவரும் ஒன்று கூடி பேசினர். திட்டம் மாற்றப்பட்டது. மதன் லால் பாவா நாட்டு வெடிகுண்டை வீச வேண்டும்; வெடிசத்தம் கேட்ட குழப்பத்தில் பிரார்த்தனைக்கு வந்தவர்கள் அனைவரும் பதறி ஓடுவர்; அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காந்தியைக் கொல்ல வேண்டும்.
மதன் லால் பாவா தயாரானான். நாட்டு வெடிகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்தான். சத்தம் கேட்டு பிரார்த்தனைக்கு வந்தவர்கள் மத்தியில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் காந்தி அவர்களை ஆசுவாசப்படுத்தி, இது கோழைகளின் வேலை, பயப்படவேண்டாம் என்று அனைவரையும் அமைதிப்படுத்தி இருந்த இடத்திலேயே அமரச்செய்தார். குற்றவாளிகளின் திட்டம் பலிக்கவில்லை. தவிடு பொடியானது. பிரார்த்தனை கூட்டம், எதுவும் நடக்காதது போல் அமைதியாக முடிந்தது. திட்டமிட்டபடி காந்தியைக் கொல்ல முடியவில்லை. அவர்களுடைய முயற்சி படுதோல்வி. இதற்குள் மதன் லால் பாவாவை சிலர் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
பாட்கேவும், சங்கரும் ஒரு டோங்காவைப் பிடித்து ஹிந்து மகா சபா அலுவலகத்திற்குச் சென்று தங்கள் மூட்டைமுடிச்சை எடுத்துக்கொண்டு அன்று இரவே இரயிலைப் பிடித்து பூனாவிற்குச் சென்றனர். நாத்துராம் கோட்சேவும், ஆப்தேவும் கான்பூருக்குச் சென்று, அங்கு ஒருநாள் தங்கி விட்டு 23ஆம் தேதியன்று, மும்பை வந்து சேர்ந்தனர். கோபால் கோட்சேவும், கர்கரேவும் வேறு ஒரு ஹோட்டலில் தங்கிவிட்டு அடுத்த நாள் பூனாவிற்கு செல்ல ரயிலேறினர்.
திட்டம் தோல்வி அடைந்ததாலோ, பாவா மாட்டிக்கொண்டதாலோ சிறிதும் தளர்வடையவில்லை காந்தியை கொல்ல நினைத்த கூட்டம். அடுத்த கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாத்துராம் கோட்சே, ஆப்தே, கர்கரே ஆகியோர் கூட்டத்தில் பங்கு கொண்டனர். போலீஸில் மாட்டிக்கொண்ட பாவா மற்றவர்களை காட்டிக்கொடுத்துவிட்டால் தாங்கள் இது வரை எடுத்த முயற்சி வீணாகிப்போய்விடும் என்பதால், விரைவாக முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். அதனால் நாத்துராம் கோட்சே ஒரு முடிவுக்கு வந்தான். காந்தியை தான் மட்டுமே கொல்லப்போவதாக தெரிவித்தான். இம்மாதிரியான காரியங்களுக்கு கூட்டமாகச் சென்றால் அந்த காரியம் சரிவராது என்றான். கர்சன் வைலியை மதன் லால் திங்ரா தனியாகச் சென்றுதான் கொன்றான். அதேபோல், வசந்தராவ் ராவி கோகேட் மும்பை மாகாண ஆளுனரான எர்னஸ்ட் ஹாட்சனை தனி ஆளாகத்தான் சுட்டான். எனவே தான்மட்டும் தனியாகச் சென்று காந்தியைக் கொல்லப்போவதாக முடிவெடுத்தான். ஆப்தேவும் அதற்கு உடன்பட்டான். கர்கரே அதற்கு உதவி செய்வதாக தெரிவித்தான். ஆப்தே, கர்கரேயிடம் 300 ரூபாய் பணத்தை கொடுத்து தில்லிக்கு அனுப்பினான். ஜனவரி மாதம் 27ஆம் தேதி, நாத்துராம் கோட்சேவும் ஆப்தேவும் விமானம் மூலம் தில்லிக்குச் சென்றனர்.
இதற்கிடையில் பாவாவை கைது செய்ததன் மூலம் காவல்துறைக்கு சில துப்பு கிடைத்தது. பாவா எந்த துப்பையும் கொடுக்கவில்லை. ஆனால் அவன் சில நாட்களுக்கு முன்பு சொன்ன தகவல் அவனை காட்டிக்கொடுத்துவிட்டது. சில மாதங்களுக்கு முன்பு, பாவாவிற்கு ஜே.சி. ஜெயின் என்ற மும்பை பேராசிரியரின் அறிமுகம் கிடைத்தது. அவர் ஹிந்தி பேராசிரியர். பாவா, தான் பாக்கிஸ்தானிலிருந்து அகதியாக இந்தியா வந்திருப்பதாகவும், தன்னுடைய சொந்த பந்தங்கள், சொத்து என அனைத்தையும் இழந்துவிட்டதாகவும், ஏதேனும் வேலையிருந்தால் தாருங்கள் என்று ஜெயினிடம் கேட்டான். ஜெயின் பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். பாவாவை, தன் புத்தங்களை விற்கும் முகவராக நியமித்தார். புத்தகங்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் கமிஷனை பாவா எடுத்துக்கொள்ளலாம் என்றார். ஆனால் இந்த புத்தக விற்பனையில் பாவாவிற்கு பெரிய இலாபம் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனால் பாவாவும், ஜெயினும் நல்ல நண்பர்களாகினர். பாவா, ஜெயினிடம் மனம் திறந்து தன்னுடைய உணர்வுகளையும், எதிர்ப்பார்புகளையும் கூறியிருக்கிறான். பாவா ஜெயினிடம், விரைவில் ஒரு முக்கியத் தலைவர் கொல்லப்படப்போகிறார், அதற்கான திட்டம் தயாராக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறான். ஜெயின் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்தமுறை, ஜெயின் பாவாவை சந்திக்கும்போது கொல்லப்படப்போகும் அந்த தலைவர் யார் என்று தற்செயலாகக் கேட்டார். அதற்கு காந்தி என்றான் பாவா. பாவா சொன்னதை நம்பமுடியாத ஜெயின் அவனுக்கு தந்தையைப் போல் ஆலோசனை வழங்கினார். ’சின்னப் பையன் மாதிரி முட்டாள் தனமாக பேசாதே. நீயோ ஒரு அகதி. நீ ஏற்கனவே பிரிவினையால் பாதிக்கப்பட்டிருக்கிறாய். வன்முறை உன் பிரச்சனைக்கு தீர்வு ஆகாது’ என்று பலவாறாக அவனுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். ஜெயின் பாவாவை மனம்திருந்த வைத்துவிட்டதாக நினைத்துக்கொண்டார்.
ஆனால் சில நாட்களுக்குப் பிறகு பிர்லா இல்லத்தில் பாவாவின் தாக்குதல் நிகழ்ச்சி குறித்து செய்தித்தாள்களில் செய்தி வெளியாகியிருந்தது. இதை படித்த ஜெயினுக்கு பகீர் என்று இருந்தது. அவர் உடனே இந்திய உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேலிடம் தொலைபேசியின் மூலம் பாவா குறித்த தகவலைக் கூற முயன்றார். ஆனால் படேலை தொடர்பு கொள்ள முடியவில்லை. அடுத்து மும்பை மாகாணத்தின் முதலமைச்சரான கெர்ரை தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் சந்தித்து தனக்குத் தெரிந்த தகவல்களை கூறினார். மும்பை மாகாண உள்துறை அமைச்சரான முரார்ஜி தேசாய் அவர்களையும் சந்தித்து பாவா பற்றியத் தகவல்களை தெரிவித்தார். தகவல் காவல்துறைக்குச் சென்றது. பாவாவின் கூட்டாளிகள் யார் என்பதை காவல்துறை சல்லடைபோட்டுத் தேடியது.
இதற்குள் நாத்துராம் கோட்சேவும், ஆப்தேவும் தில்லி வந்திறங்கினர். தில்லியிலிருந்து ரயில் மூலம் குவாலியர் வந்து சேர்ந்தனர். அங்கு டாக்டர் பாராச்சூரை சந்தித்தனர். சந்திப்பின் நோக்கம், ஒரு கைத்துப்பாக்கியை பெறுவது. சந்திப்பில் வெற்றி அடைந்தது. கைக்கு துப்பாக்கி கிட்டியது. கோட்சேவும், ஆப்தேவும் 29ஆம் தேதி காலை, குவாலியரிலிருந்து தில்லி வந்தடைந்தனர். இதற்குள் கர்கரேவும் தில்லி வந்தடைந்தான். அவன் கோட்சேவையும், ஆப்தேவையும் பிர்லா கோயிலில் சந்தித்தான். கர்கரேவிடம் கோட்சே ‘ஆப்தேவிற்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை இருக்கிறார்கள், நானோ தனி நபர், நல்ல எழுத்தாளர், நன்றாகவும் பேசக்கூடியவன். நான் செய்யப்போகும் காரியத்தை என்னால் நீதிமன்றத்திலும், அரசாங்கத்திடமும் நியாயபடுத்தமுடியும். ஆனால் ஆப்தேவின் உலகம் வேறு. அவனுக்கு வெளித் தொடர்பு அதிகம். அவனால் ஹிந்து ராஷ்டிரா பத்திரிக்கையை நல்ல முறையில் முன்னின்று கொண்டு செல்லமுடியும். அதனால் நீ அவனுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும். ஹிந்து மகா சபையின் வேலைகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டான்.
மாலை வேளை ஆனது. கர்கரே கோட்சேவிடம் சினிமாவிற்கு செல்லலாமா என்று கேட்டான். கோட்சே ‘எனக்கு ஓய்வு தேவை, என்னால் சினிமாவிற்கு வர இயலாது’ என்று கூறிவிட்டான். ஆப்தேவும், நாளை செய்யப்போகும் காரியத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்காதே. நமக்கு ஒரு சிறிய மாற்றம் தேவை என்று கூறி கோட்சேவை உற்சாகப்படுத்தினான். ஆனால் கோட்சே சினிமாவிற்கு வர மறுத்துவிட்டான். ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வாசிக்கத் தொடங்கிவிட்டான். ஆப்தேவும், கர்கரேவும் சினிமா பார்க்கச் சென்று விட்டனர்.
ஜனவரி 30ஆம் தேதி காலை, கோட்சே மற்றவர்களை விட முன்னதாக எழுந்து கொண்டான். குளித்துவிட்டு தன் ஆடைகளை மாற்றிக்கொண்டான். மற்ற இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். கோட்சேவிடம், தான் செய்யப்போகும் காரியத்தைப் பற்றி எந்த சலனமும் இல்லை. பின்னர் மூவரும் காலைச் சிற்றுண்டி முடித்த பிறகு, ஒரு டோங்காவைப் பிடித்து புதுதில்லி சென்றனர். அங்கே அருகிலிருந்த வனப்பகுதிக்குச் சென்றனர். கோட்சே தான் கொண்டுவந்த இத்தாலி நாட்டு பெரேட்டா கைத் துப்பாக்கியினால் நான்கு ரவுண்டுகள் சுட்டான். கர்கரே அருகிலிருந்த உயர்வான பாறை மீது நின்று யாராவது வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டான். துப்பாக்கி நன்றாகவே சுட்டது என்று திருப்தியடைந்த மூவரும் பழையதில்லி வந்தடைந்தனர்.
மதியமாகியது. கோட்சே அதிகமாக எதுவும் பேசவில்லை. அவன் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தான். கர்கரேவைப் பார்த்து, அடுத்தமுறை உன்னால் என்னைப் பார்க்க முடியாமல் போகும் என்றான். மாலை 4:30 மணிக்கு ஒரு டோங்காவில் ஏறினான். தன் நண்பர்களுக்கு கையசைத்தான். ஆப்தேவும், கர்கரேவும் கோட்சேவை பின் தொடர்ந்தனர். சில நிமிடங்களில், டோங்கா பிர்லா இல்லத்தை அடைந்தது. பிரார்த்தனைக் கூட்டம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. 200 பார்வையாளர்கள் காந்தியின் வருகைக்காகக் காத்திருந்தனர். நேரம் 5:15 மணியைத் தாண்டிவிட்டது. மக்கள் கூட்டத்தின் நடுவே கோட்சே சென்றான். அப்பொழுது கூட்டத்தில் ஒரு சலசலப்பு. அனைவரும் காந்தி நடந்து வருவதற்கு ஏதுவாக நின்று வழிவிட்டனர். காந்தி இருபக்கங்களிலும் இரண்டு பெண்களின் (ஆபாபென் சாட்டர்ஜி மற்றும் மிர்துளா என்ற மனுபென்) தோள்பட்டைகளில் கை வைத்தபடியே மெதுவாக நடந்து வந்தார். தன் கைகளை உயர்த்தி குழுமியிருந்த அனைவருக்கும் தன் வந்தனத்தை தெரிவித்தப்படி முன்னேறி வந்தார், 78 வயது நிரம்பிய காந்தி. பார்வையாளர்கள் கூட்டத்தின் இடையே வேகமாக முன்னேறிய கோட்சே, காந்தியின் முன் வந்து நின்றான். அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது போல் எழுந்தான். மனுபென் ‘காந்தி ஏற்கனவே 10 நிமிடங்கள் காலதாமதமாக வந்திருக்கிறார், நீங்கள் இன்னும் அவரை தாமதம் செய்யாதீர்கள்’ என்றாள். கோட்சே மனுபென்னை வலுவாகத் தள்ளிவிட்டு, தன் கைத்துப்பாக்கியை எடுத்து எதிரிலிருந்த காந்தியை மூன்று முறை அடுத்தடுத்து சுட்டான். காந்தி நிலைகுலைந்து அப்படியே கீழே சரிந்தார்.
(தொடரும்)