காந்தியை சுட்ட பிறகு கோட்சே தப்பித்து ஓட முயலவில்லை. சுற்றியிருந்தவர்கள் கோட்சேவைப் பிடித்தனர். அருகிலிருந்த காவல் துறை அதிகாரி, கொந்தளிப்புடன் காணப்பட்ட பொது மக்களிடமிருந்து கோட்சேவை மீட்டு தனியே கூட்டிச் சென்றார். ஆப்தேவும், கர்கரேவும் கூட்டத்தோடு கூட்டமாக பிர்லா இல்லத்தை விட்டு வெளியேறி இரயில் நிலையம் சென்று அங்கிருந்து மும்பைக்குச் சென்றனர்.
காவல் துறை துரிதமாக செயல்பட்டு, ஜனவரி 31ஆம் தேதி, பாட்கேவை கைது செய்தது. பிப்ரவரி 5ஆம் தேதி கோபால் கோட்சேவும், டாக்டர் பாராச்சூரும் கைது செய்யப்பட்டார்கள். அடுத்தநாள் சங்கரும், பிப்ரவரி 14ஆம் தேதி ஆப்தேவும், கர்கரேவும் கைது செய்யப்பட்டார்கள். தீவிர விசாரணைக்குப் பிறகு, குற்றவாளிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. நூற்றுக்கணக்கான சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. அதன் மூலம் குற்றவாளிகளின் சதிச்செயல் வெளிச்சத்திற்கு வந்தது.
நாத்துராம் கோட்சே, ஆப்தே, கோபால் கோட்சே, மதன் லால் பாவா, கர்கரே, பாட்கே, சங்கர், பாராச்சூர் இவர்களுடன் சேர்ந்து சாவர்க்கரும், சதித் திட்டம் தீட்டி காந்தியைக் கொன்றதாக காவல்துறை வழக்குத் தொடர்ந்தது. மேற்சொன்ன குற்றவாளிகளுடன் இன்னும் மூவரது பெயர்களும் சேர்க்கப்பட்டிருந்தன. கங்காதர் தண்டவேதி, கங்காதர் ஜாதவ் மற்றும் சூரியதேவ் சர்மா என்ற அந்த மூவரும் போலீசாரிடம் பிடிபடாமல் தப்பித்து ஓடிவிட்டனர்.
காந்தி கொலை வழக்கு அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. தேசம் மட்டும் அல்லாது சர்வதேச அளவிலும் இந்த வழக்கு உன்னிப்பாகவும், ஆர்வமாகவும் கவனிக்கப்பட்டது. வழக்கு நடைபெற தில்லி யில் உள்ள செங்கோட்டை தயார் செய்யப்பட்டது. செங்கோட்டையில் நடக்கும் மூன்றாவது பிரபலமான வழக்கு இது. முதல் வழக்கு 1858ஆம் ஆண்டு, முகலாய சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் பகதூர் ஷா சாஃபர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சிப்பாய் கலகத்தை ஏற்படுத்தியாக கூறி வழக்கு தொடரப்பட்டு, தண்டிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார். அடுத்து 1945ஆம் ஆண்டு, இந்திய தேசிய இராணுவத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளான ஷா நவாஸ் கான், பிரேம் குமார் சாஹல் மற்றும் குருசரண் சிங் தில்லோன் ஆகியோர் மீது இந்திய அரசுக்கு எதிராக போர் புரிந்ததற்காக வழக்கு தொடரப்பட்டு, குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர்; ஆனால் பொது மக்களின் எதிர்ப்பினால், மூவருக்கும் தண்டனை ஏதும் வழங்கப்படவில்லை. காந்தி கொலை வழக்கு செங்கோட்டையில் நடந்த மூன்றாவது வழக்கு. முதல் இரண்டு வழக்கும் ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்தது. மூன்றாம் வழக்கு இந்தியா சுதந்திரம் அடைந்ததும் நடந்தது.
காந்தி கொலை வழக்கை விசாரித்தவர் நீதிபதி ஆத்ம சரண். வழக்கு விசாரணை, ஜூன் மாதம் 22ஆம் தேதி, 1948ஆம் வருடம் தொடங்கியது. அரசு தரப்பில் பம்பாய் மாகாணத்தின் அட்வகேட் ஜெனரல் தப்தாரி ஆஜரானார். 149 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். நிறைய ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டன. குற்றவாளிகளில் ஒருவனான பாட்கே அப்ரூவராகி, அரசு தரப்புக்கு சாட்சியம் அளித்தான். சதிச்செயல் புரிந்து தேசத் தந்தை மகாத்மா காந்தியைக் கொன்ற குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை நீதிமன்றம் வழங்கவேண்டும் என்று தப்தாரி வாதாடினார்.
குற்றவாளிகள் தரப்பில் எந்த சாட்சியமும் அளிக்கப்படவில்லை. ஆனால், அவர்கள் தரப்பில் நிறைய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கோட்சே காந்தியைக் கொன்றதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டான். ஆனால் ‘நான் காந்தியைக் கொன்றது என்னுடைய தனிப்பட்ட செயல்’ என்று வாதிட்டான். காந்தியைக் கொல்ல யாருடனும் கூட்டுச்சதியில் ஈடுபடவில்லை என்று கூறினான். ஆனால், ஆப்தேவுடன் இருமுறை தில்லி சென்றது; புனைப்பெயரில் இருவரும் தில்லியில் தங்கியது; டாக்டர் பாராச்சூரை குவாலியரில் சந்தித்தது என அனைத்தையும் ஒப்புக்கொண்டான் கோட்சே. ஆப்தேவும், கோட்சேவுடன் இருமுறை தில்லி சென்றதை ஒப்புக்கொண்டான். ஆனால் டாக்டர் பாராச்சூரை குவாலியரில் பார்த்தபிறகு, தான் தில்லிக்குச் செல்லவில்லை என்றும் மாறாக மும்பைக்குச் சென்றதாக தெரிவித்தான். கர்கரே ஒரு முறை தில்லி வந்ததை ஒப்புக்கொண்டான். இரண்டாம் முறை தில்லிக்கு வரவில்லை என்று வாதிட்டான். கோபால் கோட்சே தான் ஒருமுறை கூட தில்லிக்கு வரவில்லை என்று வாதிட்டான். மதன் லால் பாவா பாக்கிஸ்தானிலிருந்து இந்தியா வந்து தஞ்சம் புகுந்து, அகதிகள் நடத்தப்படும் விதம் கண்டு வேதனை அடைந்ததாகவும், அந்த மனக்கசப்பை வெளிப்படுத்தும் விதமாக, பிர்லா இல்லத்தில் நாட்டு வெடிகுண்டை யாருக்கும் காயம் ஏற்படாமல் வீசியதாக தெரிவித்தான். டாக்டர் பாராச்சூர் கோட்சேவிற்கும், ஆப்தேவிற்கும் துப்பாக்கி கொடுத்ததை மறுத்தார். கோட்சேவும், ஆப்தேவும் தன்னை குவாலியரில் சந்தித்து தில்லியில் அமைதியான முறையில் நடக்கவிருக்கும் ஆர்பாட்டத்தில் பங்குகொள்ள சிலத் தொண்டர்களை அனுப்பும்படி கேட்டதாகவும், அதற்கு தான் மறுத்துவிட்டதாகவும் பாராச்சூர் கூறினார். பாட்கே அப்ரூவராகி அரசு தரப்பிற்கு சாட்சியமளித்தான். பாட்கேவின் உதவியாளனான சங்கர், பாட்கே அளித்த சாட்சியங்களை ஊர்ஜிதப்படுத்துவது போல் ஆரம்பத்தில் சாட்சியமளித்தான். பின்னர் வாதிடும்பொழுது தன் சாட்சியத்திலிருந்து பின் வாங்கினான். போலீஸ் கட்டாயத்தின் பேரில்தான் முன்னர் பொய் சாட்சி சொன்னதாக தெரிவித்தான். நீதிமன்றம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, காவல் துறையால் கட்டாயப்படுத்தி ஒருவரை சாட்சியம் சொல்ல வைக்கமுடியாது என்பது அடிப்படை புரிதல். சங்கர் தன் சாட்சியத்தை பின்னர் மறுத்ததன் காரணம் மற்ற குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக என்று நீதிமன்றம் கருதியது.
வாத விதாங்களைக் கேட்ட நீதிபதி, 1949ஆம் வருடம், பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி, தன் தீர்ப்பை வழங்கினார். சாவர்க்கர், காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். பாட்கே அப்ரூவர் ஆனதால், அவனுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு அவனும் விடுதலை செய்யப்பட்டான். நாத்துராம் கோட்சேவிற்கும், ஆப்தேவிற்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஏனைய குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தண்டிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்ய 15 நாட்கள் அவகாசம் இருப்பதாக நீதிபதி தெரிவித்தார். காந்தி கொலை வழக்கு விசாரணை, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நடைபெறவில்லை, மாறாக Bombay Public Security Measure Act-இன் கீழ் நடைபெற்றது. பம்பாய் மாகாணத்தில் பயன்படுத்தக்கூடிய இந்த சட்டம் மத்திய அரசால் தில்லிக்கும் அமல்படுத்தப்பட்டது.
தண்டனை பெற்ற 7 நபர்களும் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். மேல் முறையீடு நடக்க வேண்டிய லாகூர் உயர் நீதிமன்றம் பாக்கிஸ்தான் நாட்டுடன் சென்றதால், மேல் முறையீட்டு வழக்கு விசாரணைகளெல்லாம் தற்காலிகமாக சிம்லாவில் நடைபெற்றது. நாத்துராம் கோட்சேவைத் தவிர, தண்டனை பெற்ற 6 நபர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை செல்லாது என்று மேல் முறையீடு செய்தனர். நாத்துராம் கோட்சே, தான் தான் காந்தியைக் கொன்றதாகவும், ஆனால் காந்தியை கொலை செய்வதற்காக மற்ற குற்றவாளிகளுடன் கூட்டு சதியில் ஈடுபடவில்லை என்றும், இந்த விவகாரத்தில் கீழ் நீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்கவில்லை என்றும் மேல் முறையீடு செய்தான்.
நீதிபதி பண்டாரி, நீதிபதி அச்ரு ராம். மற்றும் நீதிபதி கோஸ்லா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில், மேல் முறையீடு விசாரிக்கப்பட்டது.
ஆப்தேவிற்கும், மதன் லால் பாவாவிற்கும் கல்கத்தாவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பானர்ஜி ஆஜரானார். கர்கரேவிற்கு டாங்கே என்ற வழக்கறிஞர் ஆஜரானார். வழக்கறிஞர் வைக்க வசதியில்லாத சங்கருக்கு, பொதுமக்கள் செலவில் பஞ்சாப் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அவஸ்தி வாதாடினார். பாராச்சூருக்கும், கோபால் கோட்சேவிற்கும் பம்பாய் நீதிமன்றத்தைச் சேர்ந்த இனாம்தார் வாதாடினார். நாத்துராம் கோட்சே வழக்கறிஞர் வைக்க வசதியில்லாத காரணத்தினால் தன் மேல்முறையீட்டை தானே வாதாடினான்.
அரசாங்க தரப்பில் பம்பாய் அட்வகேட் ஜெனரல் தப்தாரி ஆஜரானார். அவருக்கு உதவி செய்ய பம்பாயைச் சேர்ந்த வழக்கறிஞர்களான பதிகர் மற்றும் வியாவகர்கர் மற்றும் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த கர்தார் சிங் சாவ்லா ஆகியோர் களமிறங்கினர்.
பானர்ஜி, தன் வாதத்தின் போது ஒரு முக்கியமான கேள்வியை நீதிபதிகள் முன் வைத்தார். காந்தியை கொல்வதற்காகத்தான் குற்றவாளிகள் கூட்டு சதியில் ஈடுபட்டதாக அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. குற்றவாளிகள் தங்கள் சதியில் வென்றுவிட்டனர். காந்தி கொல்லப்பட்டார். அப்படியிருக்கையில் குற்றவாளிகள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டதில் நியாயம் இருக்கிறது. ஆனால் குற்றவாளிகளின் மீது ஏன் கூட்டு சதிக்கான குற்றப்பிரிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது? கொலை மற்றும் கொலையை செய்யத் தூண்டியதற்கான குற்றப்பிரிவுகளில் வேண்டுமானால் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கலாம். குற்றச்செயல், கூட்டு சதியில் ஆரம்பித்து கொலையில் முடிந்திருக்கிறது. எனவே கொலைக்காகவும், கொலையின் தொடக்கப்புள்ளியான கூட்டு சதிக்காகவும் என இறு வேறு சட்டப் பிரிவுகளில் குற்றவாளிகளின் மீது குற்றம் சுமத்தப்பட்டது செல்லாது என்று வாதாடினார்.
ஏனைய கைதிகளின் வாதம் என்னவென்றால், காந்தி கொலை வழக்கில் கூட்டு சதியே இல்லை. ஜனவரி 20ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பும், ஜனவரி 30ஆம் தேதி நடந்த காந்தியின் கொலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இவை இரண்டும் வெவ்வேறு நிகழ்வுகள். ஒன்றுக்கொன்று சம்மந்தம் இல்லாதவை. ஜனவரி 20ஆம் தேதி நடந்த சம்பவத்திற்கு பாவா மட்டுமே பொறுப்பு. அதேபோல் ஜனவரி 30ஆம் தேதி நடந்த காந்தி கொலைக்கு நாத்துராம் கோட்சே மட்டுமே பொறுப்பு. நாத்துராம் கோட்சே காந்தியைக் கொலை செய்யும் எண்ணம் கொண்டுள்ளான் என்பதே ஏனைய குற்றவாளிகளுக்குத் தெரியாது. குற்றவாளிகளை ஒரே சமயத்தில் பார்த்ததாக சொன்ன சாட்சியங்களில் ஒன்றுக்கொன்று முரண்பாடு இருக்கிறது. நாத்துராம் மட்டுமே செய்த கொலைக்கு மற்ற குற்றவாளிகளை எப்படி தண்டிக்கமுடியும் என்று வாதிடப்பட்டது.
மேல் முறையீட்டு வாதத்தில் சிறப்பாக அமைந்தது கோட்சேவின் வாதம். பல மணி நேரம் தொடர்ச்சியாக வாதிட்டான். நான் ஏன் காந்தியைக் கொன்றேன் என்று காரணங்கள் கூறி அதை நியாயப்படுத்தினான்.
(தொடரும்)