கோட்சே வாதத்தின் சாராம்சமாவது,
1) நான் ஒரு அர்ப்பணிப்பு கொண்ட பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் ஹிந்து மதம், அதன் சரித்திரம் மற்றும் அதன் கலாச்சாரத்தின் மீது அதிகப் பற்று கொண்டவன். ஹிந்து மதத்தின் மீது பெருமிதம் கொண்டுள்ளேன். என்னுடைய இளம் பருவத்தில் சுயமாக சிந்திக்கும் தெளிவு கொண்டேன். எதையும் கண்மூடித்தனமாக நம்ப மாட்டேன். அது அரசியலானாலும் சரி அல்லது மதமானாலும் சரி. இதன் காரணமாகத் தீண்டாமையையும், பிறப்பினால் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளையும் ஒழிக்க தீவிரமாக பாடுபட்டேன். ஜாதி ஒழிப்பு இயக்கங்களில் வெளிப்படையாகவே கலந்துகொண்டேன். ஹிந்துக்கள் அனைவரும் சமமாக பாவிக்கப்படவேண்டும். பிறப்பால் ஒருவரை உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ அங்கீகரிக்கக்கூடாது, அவரது திறமையை வைத்து அவர் அங்கீகரிக்கப்படவேண்டும். பிராமணர், சத்ரியர், வைசியர், சாமர், பாங்கி என பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் நடத்தும் சம போஜன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளேன்.
2) நான் தாதாபாய் நவ்ரோஜி, சுவாமி விவேகானந்தர், திலகர் ஆகியோரது புத்தகங்களைப் படித்திருக்கிறேன். இந்தியாவின் முற்கால மற்றும் இடைக்கால வரலாறுகளை படித்திருக்கிறேன். அதேபோல் உலகின் முக்கியமான நாடுகளான இங்கிலாந்து, பிரான்சு, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் சரித்திரத்தையும் வாசித்திருக்கிறேன். அதுமட்டுமல்லாது சமூக உடைமை, கம்யூனிசம் குறித்தும் விரிவாகப் படித்திருக்கிறேன். இவை அனைத்தையும் தவிர, வீர சாவர்க்கர் மற்றும் காந்தி ஆகிய இருவர் எழுதியதை பேசியதை நிறைய படித்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன். இவர்கள் இருவரது கொள்கைகளும் கடந்த 50 ஆண்டுகளில் நவீன இந்தியா உருவாவதற்கு அடிப்படையாக இருந்திருக்கிறது.
3) நான் படித்த விஷயங்கள், அதனால் தோன்றிய யோசனைகள் அனைத்தும் எனக்கு ஹிந்து மதத்திற்காகவும், ஹிந்து மக்களுக்காகவும் பாடுபட வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்தது. 30 கோடி ஹிந்துக்களின் சுதந்திரத்திற்கும், நலனுக்கும் பாடுபடுவது உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்களின் விடுதலைக்கு பாடுபடுவதாகாதா? இந்த வைராக்கியம்தான் என்னை ஹிந்துத்வா கொள்கையின் பால் ஈர்த்தது. ஹிந்துத்வா கொள்கையே நாட்டின் விடுதலையை பெற்றுத்தரவும், மேலும் அதை பேணிக்காக்கவும் காரணமாக இருக்கும் என்று தீர்க்கமாக நம்பினேன். இப்படிப் பெறும் விடுதலை உலக ஷேமத்திற்கே வழி வகுக்கும்.
4) 1946 ஆம் ஆண்டு, வங்காளத்தில் சுகரவார்டி அரசாங்கத்தின் துணை கொண்டு, நவகாளியில் முஸ்லீம்கள் ஹிந்துக்களின் மீது கட்டவிழ்த்துவிட்ட கொடூரங்கள் எங்களது இரத்தத்தை கொதிக்கச் செய்தது. இந்த சூழ்நிலையில், சுகரவார்டி செய்த அட்டூழியங்களை மறைத்து, காந்தி தன்னுடைய பிரார்த்தனைக் கூட்டங்களில் சுகரவார்டியை சாகித் சாகிப் (தியாகத்தின் உருவம்) என்று சித்தரித்ததால் ஏற்பட்ட அவமானத்திற்கும், ஆத்திரத்திற்கும் அளவே இல்லை. அது போகட்டும், காந்தி தில்லி வந்தவுடன் பாங்கி காலனியில் உள்ள ஹிந்து கோயிலில் பிரார்த்தனைக்குச் சென்ற போது குரானிலிருந்து வாசகங்களை படித்தார். அங்கிருத்தவர்கள் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தும் காந்தி குரான் வாசகங்களை படிப்பதை நிறுத்தவில்லை. ஆனால் அதே காந்திக்கு ஒரு மசூதியில் சென்று கீதையை வாசிக்க துணிவு இருந்ததில்லை. அப்படி அவர் செய்தால் என்ன விளைவு நடக்கும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் காந்தியால் எந்த பாதிப்பும் இல்லாமல் ஹிந்துக்களின் உணர்வுகளின் மீது ஏறி மிதித்து எளிதாக நடந்து சென்று விட முடியும். காந்தியின் இந்த தவறான கொள்கையை அதாவது ஹிந்துக்களும் தங்கள் மரியாதைக்கு பங்கம் ஏற்பட்டால் சகித்துக்கொள்ளமாட்டார்கள் என்பதை நிரூபிக்க நான் முடிவெடுத்தேன்.
5) இந்த சமயத்தில்தான் பஞ்சாபில் முஸ்லீம் பயங்கரவாதம் தலை விரித்தாடியது. இது மற்ற இடங்களுக்கும் பரவியது. முஸ்லீம்களின் அடாவடிகளை சகிக்கமாட்டாமல் தடுத்து நிறுத்திய ஹிந்துக்களின் மீது பீகார், கல்கத்தா, பஞ்சாப் மற்றும் ஏனைய பகுதிகளில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசாங்கம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. வழக்குகளைப் போட்டு அவர்களை தண்டித்தது. பஞ்சாப்பையும், வங்காளத்தையும் முஸ்லீம்கள் சுடுகாடாக்கினர். ஹிந்துக்களின் இரத்தம் ஆறாக ஓடியது. இந்த சூழ்நிலையில், 15.08.1947 ஆம் தேதியன்று பட்டாசு வெடித்து விழாவாக கொண்டாடியது மிகவும் வேதனையாகவும், இழிவாகவும் இருந்தது. இதன் காரணமாகவே ஹிந்து மகா சபாவைச் சேர்ந்தவர்கள் சுதந்திர தின விழாவையும், காங்கிரஸ் அரசாங்கத்தையும் புறக்கணித்தோம். கூடவே முஸ்லீம்களின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கத் தயாரானோம்.
6) இந்த நாட்டில் இருந்த ஐந்து கோடி முஸ்லீம்கள் இந்நாட்டின் பிரஜைகளாக இல்லாமல் போனர். மேற்கு பாக்கிஸ்தானில் முஸ்லீம் அல்லாதவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டும், அவர்கள் ஆண்டாண்டுகளாக வாழந்த வாழ்விடங்களை விட்டு அகற்றப்பட்டும் அழித்தொழிக்கப்பட்டார்கள். கிழக்கு பாக்கிஸ்தானிலும் இதே செயல்தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. பதினோரு கோடி மக்கள் அவர்கள் வாழ்விடம் இழந்திருக்கிறார்கள். அதில் குறைந்தது நான்கு கோடி பேர் முஸ்லீம்கள். இவ்வளவு ஆன பிறகும், காந்தி முஸ்லீம்களை தாஜா செய்யும் வேலையை நிறுத்தவில்லை. இதை பார்த்து என் இரத்தம் கொதித்தது. என்னால் இதை ஒரு நொடி கூட பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நான் தனிப்பட்ட முறையில் காந்தியின் மீது கடினமான சொற்களை பயன்படுத்த விரும்பவில்லை. அதே சமயம் காந்தியினுடைய கொள்கையின் மீதும் செயல்பாட்டின் மீதும் எனக்கு இருந்த எதிர்ப்பையும், வேறுபாட்டையும் மறைக்க விரும்பவில்லை. ஆங்கிலேயர்கள் எதை நினைத்தனரோ அதை காந்தி செய்து முடித்தார், அதாவது ‘பிரித்து ஆள்வது’. காந்தி இந்தியாவைப் பிரித்துவிட்டார். ஆனால் ஆங்கிலேயர்களின் ஆளுமை முடிவடைந்துவிட்டதா என்று இன்னும் உறுதியாகவில்லை.
7) காந்தியின் கடந்த 32 ஆண்டுகால முஸ்லீம்களுக்கு ஆதரவான நிலைப்பாடும், அதற்கு முத்தாய்பாக அமைந்த அவருடைய கடைசி உண்ணாவிரதமும் என்னை ஒரு முடிவுக்கு வரச்செய்தது. ஆம், இந்த மனிதர் இனி உயிருடன் இருக்கக்கூடாது. காந்தி எடுக்கும் முடிவுகள் சரியா தவறா என்று மற்றவர்கள் தீர்மானிக்கமுடியாது. அவரே நீதிபதியாக இருந்து, தான் எடுக்கும் முடிவு சரியா அல்லது தவறா என்று தீர்மானிப்பார். காந்தியின் தலைமை இந்த நாட்டிற்கு வேண்டும் என்றால் அவர் அப்பழுக்கற்றவர் என்று காங்கிரஸில் உள்ளாவர்களும், மற்றவர்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும், இல்லையென்றால் அவர் காங்கிரஸை விட்டு விலகிச் சென்றுவிடுவார். தனக்கென தனிப் பாதை அமைத்துக்கொண்டு அதில் பயணிக்க தொடங்கிவிடுவார். இம்மாதிரி சூழ்நிலையில் காங்கிரஸுக்கு வேறு வழி கிடையாது. ஒன்று காங்கிரஸ் காந்திக்கு பணிந்து சரணடையவேண்டும். அவருடைய பழமையான எண்ணங்களுக்கும், விசித்திரமான முடிவுகளுக்கும் காங்கிரஸ் தலையை அசைக்கவேண்டும். அவரே அனைவருக்கும் நீதிபதி. அவர் தான் ஒத்துழையாமை திட்டத்தின் சூத்திரதாரி. ஒத்துழையாமையின் நுட்பத்தை அவர் மட்டுமே அறிவார். ஒத்துழையாமை திட்டத்தை, எப்போது ஆரம்பிக்க வேண்டும் எப்போது முடிக்கவேண்டும் என்பதை அவர் மட்டுமே அறிவார். அவருடைய திட்டம் தோல்வியுறலாம், அதனால் சொல்லொண்ணாப் பேரழிவுகள் ஏற்படலாம், அரசியலே தலைகீழாக புரட்டிப்போடப்படலாம். இருப்பினும் மகாத்மாவை அப்பழுக்கற்றவர் என்று அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு சத்தியாகிரகி என்றும் தோல்வியை தழுவ மாட்டான், அவன் அப்பழுக்கற்றவனாக இருப்பான் என்பது காந்தியின் சூத்திரம். ஆனால் அப்படிப்பட்ட ஒரு சத்தியாகிரகியை காந்தியைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. எது சத்தியாகிரக்கம் என்று வாதாடுவதும் அவரே, எது சத்தியாகிரகம் என்று தீர்மானிக்கும் நீதிபதியும் அவரே. காந்தியின் சிறுபிள்ளைத்தனமான பிடிவாதங்களும்; எளிமையான வாழ்க்கையும்; கடினமான உழைப்பும்; உயர்ந்த குணங்களும் அவரை வல்லமைமிக்க மனிதராய் மாற்றியது. காந்தியினுடைய அரசியல் அணுகுமுறை முட்டாள்தனமானது என்று பலருக்குத் தெரிந்தாலும் அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஒன்று, அவர்கள் காந்தியின் அரசியல் பிடிக்காமல் காங்கிரசை விட்டு ஒதுங்கவேண்டும் அல்லது அவர்களது சுய புத்தியை அவரது காலடியில் வைத்து அவர் சொல்வதற்கெல்லாம் தலையசைக்கவேண்டும். இதுபோன்ற நிலை உருவானதால், காந்தி அடுக்கடுக்காக பல தவறுகள் செய்தார், தோல்வி மேல் தோல்வியடைந்தார், பேரழிவு மேல் பேரழிவு ஏற்பட்டது. காந்தியின் கடந்த 33 ஆண்டு கால அரசியல் ஆதிக்கத்தில், எந்த ஒரு அரசியல் வெற்றியையும் அவர் பெற்றதில்லை.
8) காந்தியின் கொள்கைகள் கோலோச்சி இருக்கும்போது, அனைவருக்கும் விரக்தி ஒன்றே விளைவாக கிடைத்திருக்கிறது. காந்தி இதுவரை, தனிப்பட்ட முறையிலோ அல்லது அமைப்பு ரீதியாகவோ நடந்த உற்சாகமான புரட்சிகளுக்கும், தீவிரமான செயல்பாடுகளுக்கும் எதிர்ப்பையே தெரிவித்து வந்திருக்கிறார். மாறாக இராட்டை சுற்றுதல், அஹிம்சை, சத்தியாகிரகம் ஆகிய கொள்கைகளையே விடாமல் முன்னிறுத்தினார். காந்தி 34 ஆண்டுகள் இராட்டை சுற்றி என்ன பயன்? இயந்திரத் தறி தொழில் 200 மடங்கு அதிகரித்திருக்கிறது. நாட்டில் உள்ள ஒரு சதவிகித மக்களின் துணி தேவையைக் கூட காந்தியினுடைய இராட்டையால் பூர்த்தி செய்யமுடியவில்லை. இந்தியாவில் உள்ள 40 கோடி மக்களும் அஹிம்சை என்ற உன்னதக் கொள்கையின் படி தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவீனம். 1942 ஆம் ஆண்டு நடந்த ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின் போது அஹிம்சை என்ற கொள்கை காற்றில் பறக்கவிடப்பட்டது. ஒரு சராசரி காங்கிரஸ்காரரின் ’சத்தியத்தை கடைபிடிப்பது’ என்பது தெருவில் இருக்கும் அன்றாடங்காச்சி கடைபிடிக்கும் சத்தியத்தை விட குறைவானதே. பல சந்தர்ப்பங்களில் காங்கிரஸ்காரர்கள் அசத்தியத்தையே கடைபிடிக்கிறார்கள். இன்னும் தெளிவாக சொல்லப்போனால் சத்தியத்தை கடைபிடிப்பது போன்று நடிக்கிறார்கள்.
9) காந்தியினுடைய ஆன்மீக சக்தி, ஆத்ம வழிகாட்டி, அஹிம்சை எல்லாம் ஜின்னாவினுடைய மன உறுதிக்கு முன்னால் தவிடு பொடியாகிவிட்டது. காந்தியால் தன்னுடைய ஆன்மீக சக்தியைக் கொண்டு ஜின்னாவை மாற்றமுடியவில்லை. எனவே காந்தி தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, ஜின்னாவையும், முஸ்லீம் லீக்கையும் எதிர்கொள்ள மாற்று அரசியல் கொள்ளை உடையவர்களுக்கு வழி விட்டிருக்கவேண்டும். காந்தி நேர்மையான மனிதராக இருந்திருந்தால் இதைத்தான் செய்திருப்பார். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. அவருடைய அகங்காரம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. தேசத்தின் நலனை விட காந்திக்கு அவருடைய அகங்காரமும், சுயநலனுமும் முக்கியமாக போயிற்று. யதார்த்த அரசியலுக்கு வழியில்லாமல் போயிற்று. தவறு மேல் தவறு, ஹிமாலயத் தவறுகள் நடைபெற்றன.
10) என்னை நன்கு அறிந்தவர்கள், நான் மென்மையான நபர் என்பதை அறிவார்கள். காந்தியின் ஒப்புதலின் பேரில் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்கள், நாங்கள் தெய்வமாக வணக்கும் தேசத்தைப் பிரித்து துண்டாடிய போது எனக்கு அடக்க முடியாத ஆத்திரம் ஏற்பட்டது.
11) காந்தியைக் கொல்லவேண்டும் என்று நினைத்தபோது என் மனக்கண் முன்னால் தோன்றியது என்னவென்றால், ”என் வாழ்க்கை வீணாகிவிடும். பொது மக்களிடையே நான் விரோதத்தை மட்டுமே சம்பாதிப்பேன். என் உயிரினும் மேலாக நான் மதிக்கும் மானத்தையும், மரியாதையும் இழந்துவிடுவேன். இருப்பினும் காந்தி இல்லாத இந்தியா யதார்த்த அரசியலுக்கு மாறிவிடும்; பிரிவினைவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும்; பலம் பொருந்திய இராணுவத்தை கட்டமைக்கும்; ஆனால் பாக்கிஸ்தானின் அராஜகங்களிலிருந்து மீளும். காந்தியைக் கொல்வதென்றால், சந்தேகமே இல்லாமல் என்னுடைய எதிர்காலம் நிர்மூலமாகிவிடும்.. மக்கள் என்னை மதிகெட்டவன், முட்டாள் என்று பரிகாசம் செய்வார்கள். ஆனால் தேசம் வல்லமையை நோக்கி பயணப்படும். இதைப் பற்றி நன்கு தீர யோசித்த பிறகே நான் ஒரு நல்ல முடிவுக்கு வந்தேன். என்னுடைய முடிவை யாரிடமும் சொல்லவில்லை. என்னுடைய இருகரங்களிலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டேன். 1948 ஆம் வருடம், ஜனவரி மாதம் 30 ஆம் தேதி காந்தியை சுட்டேன். பிர்லா இல்லத்தில் பிரார்த்தனை மைதானத்தில் காந்தியை சுட்டேன்.
12) இதற்கு மேல் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. தன் நாட்டின் மீது ஒருவன் பக்தி கொள்வது பாவம் என்றால். ஆம்! நான் ஒத்துக்கொள்கிறேன், நான் பாவம் செய்தவன்தான். நான் செய்த செயல் பாராட்டுக்குரிய செயலென்றால் அந்த பாராட்டு என்னையே சாரும். நான் தீர்க்கமாக நம்புகிறேன், இந்த நீதிமன்றமல்லாது இதற்கு மேலான, மனிதர்களால் உருவாக்கப்படாத நீதிமன்றம் ஒன்று இருக்குமேயானால் நான் செய்த காரியம் சரி என்றே தீர்ப்பு வரும். இறப்பிற்குப் பிறகு போவதற்கான இடம் ஒன்றும் இல்லை, செல்வதற்கான வழி ஏதுமில்லை என்றால் அதைப்பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. மனித சமுதாயத்தின் நன்மைக்காகவே இந்த காரியத்தைச் செய்தேன். இலட்சக்கணக்கான ஹிந்துக்களுக்கு சொல்லொண்ணாத் துயரத்தையும், கஷ்டத்தையும், பேரழிவையும் ஏற்படுத்திய தவறான கொள்கைகள், செயல்பாடுகள் கொண்ட ஒரு மனிதரைத் தான் நான் சுட்டேன்.
13) ஹிந்துஸ்தான் என்று அழைக்கப்பட்ட அகண்ட பாரதமாக இருந்த தேசம் மறுபடியும் ஒன்றிணையட்டும். இத்தேசத்தின் மக்களுக்கு தோல்வி மனப்பான்மை ஒரு போதும் வரக்கூடாது. இந்த தேசத்து மக்கள் தோல்வி மனப்பான்மையால் அராஜகம் செய்பவர்களுக்கு எள்ளளவும் அடிபணியக்கூடாது. இதுதான் இறைவனிடம் நான் முறையிடும் வேண்டுகோள் மற்றும் என்னுடைய கடைசி ஆசை.
14) பலர் பல்வேறாக நான் செய்ததை குறை கூறினாலும் என்னுடைய காரியத்தின் தார்மீகத் தன்மை மீது எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளது. வருங்காலத்தில் சரித்திரத்தை பதிவுசெய்யும் நேர்மையான எழுத்தாளர்கள் நிச்சயமாக நான் செய்த காரியத்தின் உண்மைத் தன்மையை புரிந்துகொள்வார்கள்.
(தொடரும்)