மேல் முறையீட்டு விசாரணையின் போது, கோட்சே தன்னுடைய முழு எழுத்தாற்றலையும், சொல்லாற்றலையும் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தினான். அவனுடைய முழுத் திறனையும் வாதிடுவதில் காண்பித்தான். கோட்சேவை பொருத்தவரை, ஹிந்து சாஸ்திரத்தில் குறிப்பிட்ட தர்மத்தின் படி அவன் நடந்ததாகத் தெரிவித்தான். சரித்திர நிகழ்வுகளை மேற்கோள் காட்டி, ஹிந்துக்கள் தங்களது தேசத்தைக் காக்க வேண்டும்; தங்களது உயிரைக் கொடுத்தாவது தேசத்தின் உரிமையைக் காக்க வேண்டும் என்று குறிப்பிட்டான். உணர்ச்சி மிகுந்த தன்னுடைய வாதத்தை பகவத் கீதை சுலோகங்களைக் சொல்லி முடித்துக்கொண்டான்.
மேல் முறையீட்டை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான ஜி.டி. கோஷ்லா, தன்னுடைய சுய சரிதையில் கோட்சேயின் வாதத்தைப் பற்றி பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்.
‘கோட்சே பேசி முடித்ததும், நீதிமன்றத்தில் பார்வையாளர்கள் குழுமியிருந்த இடத்தில் மயான அமைதி நிலவியது. கோட்சேவின் வாதம் பார்வையாளர்களை வெகுவாக பாதித்திருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. பார்வையாளர்களில் இருந்த பெண்களின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. ஆண்கள் தங்கள் கைக்குட்டையை எடுத்து கண்களை துடைத்துக்கொண்டனர். பார்வையாளர்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து வெளிப்பட்ட மூக்கு சிந்தும் சப்தமும், இருமல் சத்தமும் அப்படியே மயான அமைதியில் கரைந்து போனது. ஏதோ ஹாலிவுட் படம் பார்த்த உணர்வு அனைவருக்கும் ஏற்பட்டிருந்தது.
கோட்சேவின் மேல் முறையீட்டை தீர்மானிக்க ஜூரி அமைக்கப்பட்டிருந்தால் அவர்கள் நிச்சயம் கோட்சே நிரபராதி என்ற தீர்ப்பையே வழங்கியிருப்பார்கள். என்பதில் எனக்கு எல்லளவும் சந்தேகமில்லை’.
நீதிமன்றத்தில் கோட்சே வைத்த வாதங்களையும், அவன் ஆற்றிய உரையையும் பத்திரிக்கைகளில் பிரசுரிக்க முடியாதபடி மத்திய அரசாங்கம் செய்துவிட்டது. எங்கே கோட்சேவின் வாத விவாதங்கள் அச்சில் ஏற்றப்பட்டால், மக்கள் மத்தியில் மகாத்மாவிற்கு இருந்த நற்பெயருக்கு கலங்கம் வருமோ என்று மத்திய காங்கிரஸ் சர்க்கார் அஞ்சியது.
மேல் முறையீட்டை விசாரித்த பஞ்சாப் உயர் நிதிமன்ற அமர்வு, 08.11.1949 ஆம் தேதியன்று, டாக்டர் பாராச்சூரையும், சங்கர் கிஸ்தியாவையும் சந்தேகத்தின் அடிப்படையில் (Benefit of doubt) விடுதலை செய்தது. ஏனைய ஐவரின் மேல் முறையீடுகளையும் தள்ளுபடி செய்தது. வழக்கு நடந்த காலத்தில் உச்ச நீதிமன்றம் உருவாக்கப்படவில்லை. அதனால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. இந்தியா பிரிட்டிஷிடமிருந்து விடுதலையானதால், தண்டனைப் பெற்றவர்களால் பிரிவி கவுன்சிலிலும் மேல் முறையயீடு செய்யமுடியவில்லை. விளைவு, நாத்துராம் கோட்சேவும், ஆப்தேவும் தூக்கிலிடப்படுவார்கள். மற்ற மூன்று குற்றவாளிகளும் ஆயுள் தண்டனையை நிறைவேற்ற சிறையில் அடைக்கப்படுவார்கள்.
நாத்துராம் கோட்சேவும், ஆப்தேவும் அம்பாலா ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கு கோட்சே நிறைய புத்தகங்களை வாசித்தான். உயில் ஒன்றையும் எழுதினான். தன் உயிலில், எப்பொழுது பிளவுபட்ட பாரதம் ஒன்று சேருகிறதோ அப்போதுதான் தன்னுடைய அஸ்தியை சிந்து நதிக் கரையில் கரைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தான். ஆப்தே, இந்திய தத்துவம் குறித்து கட்டுரை ஒன்றை எழுதினான். 15.11.1949 ஆம் தேதி, நாத்துராம் கோட்சேவையும் ஆப்தேவையும் கைகள் பின்னால் கட்டப்பட்டு தூக்கிலிட தூக்கு மேடைக்கு காவலர்கள் கூட்டிச் சென்றார்கள். செல்லும் வழியில் கோட்சே ’அகண்ட பாரதம்’ என்று குரல் எழுப்பினான். ஆப்தே ’என்றும் நிலைத்து நிற்கட்டும்’ என்று குரலெழுப்பி முடித்து வைத்தான். இருவரும் தூக்கிலப்பட்டார்கள். ஆப்தேவின் உயிர் உடனே பிரிந்தது. கோட்சேவின் உடலில் சுமார் 15 நிமிடங்கள் உயிர் துடிப்பு இருந்து பின்னர் அடங்கியது.
இருவரது உடலும் ஜெயிலிலேயே தகனம் செய்யப்பட்டு, அஸ்தி காகர் நதியில் கரைக்கப்பட்டது. ஹிந்து மகா சபையைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆழமில்லாத நதியில் விடப்பட்ட மண்பாண்ட அஸ்தியை பூனாவிற்கு கொண்டுசென்றனர். அந்த அஸ்தி இப்பொழுது கோபால் கோட்சேவின் குடும்பத்தார்களால் பாதுகாக்கப்படுகிறது. எப்பொழுது அகண்ட பாரதம் உருவாகிறதோ அப்போதுதான் கோட்சேவின் அஸ்தி சிந்து நதியில் கரைக்கப்படும் என்று கோபால் கோட்சேவின் வாரிசுகள் தெரிவிக்கின்றனர்.
1964 ஆம் ஆண்டு, கோபால் கோட்சே, கர்கரே மற்றும் மதன் லால் மூவரும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
விடுதலையான கோபால் கோட்சே ஹிந்து மகா சபாவின் செயலாளராக பல ஆண்டுகள் செயல்பட்டான். கோபால் கோட்சே 9 புத்தகங்களை எழுதினான். அதில் முக்கியமானது, காந்தி கொலையைப் பற்றியது. நாத்துராம் கோட்சே நீதிமன்றத்தில் வைத்த வாதத்தைத் தொகுத்து ‘May it please your Honour’ என்ற புத்தகமாக அச்சடித்து வெளியிட்டான். அரசாங்கம் அந்த புத்தகத்தை தடை செய்தது. இருப்பினும் அந்த புத்தகம் தற்போது கிடைக்கிறது. 2005 ஆம் ஆண்டு கோபால் கோட்சே இயற்கை எய்தினான்.
மதன் லால் பாவா சிறையிலிருந்து விடுதலையானதும் சிறு சிறு வேலைகள் செய்து வந்தான். 1966 ஆம் ஆண்டு, மஞ்சரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டான். தாதரில் வசித்து வந்த பாவா, 2000 ஆம் ஆண்டு, சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு இறந்து போனான்.
கர்கரே விடுதலையானதும் அஹமத் நகரில் தன்னுடைய உணவகத் தொழிலை தொடர்ந்தான். 1974 ஆம் ஆண்டு, மாரடைப்பால் காலமானான்.
சாவர்க்கர் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தாலும். அவ்வப்பொழுது சாவர்க்கர் காந்தி கொலையில் சம்மந்தப்பட்டிருப்பதாக சர்ச்சை வெளியாகிக் கொண்டிருந்தது. இதை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, 1964 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்ற நீதிபதியான ஜீவன்லால் கபூர் தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை மத்திய அரசு நியமித்தது. கபூர் கமிஷன், தன் விசாரணையின் முடிவில், சாவர்க்கருக்கு காந்தி கொலை வழக்கில் எந்த சம்மந்தமும் இல்லை என்று தெரிவித்தது. அம்பேத்கர் கூட சாவர்க்கரின் வழக்கறிஞரான போப்ட்கரிடம், காந்தி கொலை வழக்கில் சாவர்க்கர் எந்த முகாந்திரமும் இல்லாமல் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார். 1955 ஆம் ஆண்டு, அம்பேத்கர் ஹிந்து மதத்தை விட்டு விலகி வேறு மதத்திற்கு செல்ல நினைத்தபோது, சாவர்க்கர் அம்பேத்கரிடம் அன்னிய மதங்களை விட்டு இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு மதத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கூறினார். அவ்வாறே அம்பேத்கரும் பெளத்த மதத்தில் சேர்ந்தார். சாவர்க்கர் ஒரு நாத்திகவாதி. சாதியப் பாகுபாடுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் எதிர்த்தார்.
சாவர்க்கர், 1966 ஆம் ஆண்டு, பிப்ரவரி 1 ஆம் தேதியிலிருந்து, ஆத்மார்பனில் ஈடுபட்டார். அதாவது பட்டினி கிடந்து இறப்பது. ’தன்னுடைய வேலை முடிந்துவிட்டது, இனி உயிர் அவசியமில்லை’ என்று நினைத்தார் சாவர்க்கர். உணவு, தண்ணீர், மருந்து என எதையும் அவர் எடுத்துக்கொள்ளவில்லை. பிப்ரவரி 26 ஆம் தேதி, தன் உயிரை நீத்தார். அப்போது அவருக்கு வயது 82. சாவர்க்கர் ஆங்கிலத்திலும், மராத்தியிலும் 38 புத்தகங்களை எழுதியுள்ளார்.
0