Skip to content
Home » அறிவியல் பேசலாம் # 2 – வைஷ்ணவி (மரபியல் ஆய்வு மாணவர், எழுத்தாளர்) – 2

அறிவியல் பேசலாம் # 2 – வைஷ்ணவி (மரபியல் ஆய்வு மாணவர், எழுத்தாளர்) – 2

மனிதப் பரிமாணம் ஏன் தாமதமாக நிகழ்கிறது?

மரபணு நோய்களுக்கு இந்தியாவில் சொந்தத்திற்குள் நடைபெறும் திருமணம் முக்கியக் காரணமா?

ஆம். சொந்தத்திற்குள் இல்லாவிட்டாலும் நிச்சயிக்கப்படும் திருமணங்களில் சில இடங்களில் மறைமுகமாகக் குடும்பத்தாருக்கு மரபியல் நோய்கள் இருப்பதைச் சொல்லாமலேயே திருமணம் செய்துவிடுகிறார்கள். சில விநோத வழக்குகளும் இருக்கின்றன. எனக்குத் தெரிந்து இரண்டு பேர் காதல் திருமணம் செய்தார்கள். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேருடைய மரபணுக்களுமே வெவ்வேறானவை. ஆனால் குழந்தைக்கு Recessive Disorder எனும் குறைபாடு இருக்கிறது. அந்தக் குறைபாடு பொதுவாகச் சொந்தத்துக்குள் திருமணம் செய்தால் மட்டுமே வரக்கூடியது. இதுவெல்லாம் ஆச்சரியமாக இருந்தது.

மரபியல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் படிக்கச் சிறப்பு பள்ளிகள் இருக்கின்றனவா?

இருக்கிறது. சென்னையிலேயே இருக்கிறது. ஆட்டிசம் போன்றவைக்குப் பள்ளிகள் இருக்கின்றன. ஆனால் மரபியல் குறைபாடு உள்ளவர்களைப் பெரும்பாலும் பள்ளிகளில் சேர்த்துக்கொள்வதில்லை. எனது வீட்டின் அருகே இரண்டு சிறுவர்களுக்கு ஆட்டிசம் இருக்கிறது. இருவரையும் எந்தப் பள்ளிகளும் சேர்த்துக்கொள்ளவில்லை. அதேபோல வீட்டு உரிமையாளர்களும் வாடகைக்கு வீடு தர அனுமதிக்க மறுக்கிறார்கள்.

மரபியல் குறைபாடுகள் ஏற்படச் சுற்றுச்சூழலுக்கு எந்த அளவு பங்கு இருக்கிறது?

புற்றுநோய்களை எடுத்துக்கொள்வோம். 90-95% புற்றுநோய்கள் திடீர் பிறழ்வுகளால் வருபவை. 5-10% மட்டும்தான் பெற்றோர்களிடம் இருந்து வருபவை. இதில் இரண்டு வகை உண்டு. பொதுவாகப் பெற்றோர்களிடம் இருந்து நம் உடலுக்கு இரண்டு மரபணு வேறுபாடுகள் (Allele) வரும். அவற்றில் சிலவகை மரபணுக்களில் ஒன்று மட்டும் பாதிக்கப்பட்டிருந்தால் நமக்கு நோய் வராது. இன்னொன்றும் பாதிக்கப்பட்டால்தான் நோய் வரும். இது முதல் வகை. இரண்டாம் வகை, சில குறிப்பிட்ட மரபணுக்களில் ஒரு மரபணு வேறுபாடு பாதிக்கப்பட்டாலே நோய் வரும்.

பிரச்னை என்னவென்றால் நாம் அதிகம் வேதிப்பொருட்களை எடுக்கிறோம். மாசு இருக்கிறது. இதில் எல்லாம் கார்சினோஜென் (Carcinogen) எனும் வேதிப்பொருள் அதிகம் இருக்கிறது. இவற்றை நாம் நுகர நேரும்போது புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகரிக்கிறது. இதுதான் வாழ்வியல் புற்றுநோயை உருவாக்குகிறது. அதேபோல மைதா அதிகம் சாப்பிடுகிறோம். இதனால் கணையம் அடிவாங்கும். இன்சுலின் சுரத்தலில் மாறுபாடு ஏற்படும்.

மரபணுப் பிறழ்வுகளுகள் பிறப்பின்போது வருபவையா, சுற்றுச்சூழலால் ஏற்படுபவையா? எது ஆதிக்கம் செலுத்துகிறது? டார்வினின் கூற்றுப்படி பிறழ்வுகள் அனைத்தும் தன்னிச்சையாக நடைபெறுபவை. அதற்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. அதில் எவை எல்லாம் பிழைத்திருக்க பயன் தருகிறதோ அவை மட்டும் நீடிக்கும். பிழைத்திருக்க பயன் தராத மாற்றம் நீக்கப்பட்டுவிடும். சரியா? ஆனால் நீங்களோ சூழலுக்கு ஏற்றவாறுதான் மாற்றம் அடைகிறது என்கிறீர்களே!

நீங்கள் சொல்வது சரிதான். அதேசமயம் நாம் எந்த அளவுக்குச் சூழலை வேகமாக மாற்றுகிறோம் என்பதும் இருக்கிறது. இரண்டும் ஒன்றை ஒன்று பாதிக்கிறது. நாம் தொழில்நுட்பத்தில் அதிகம் மாறுதலடைகிறோம். இதன்மூலம் சூழலை வேகமாக மாற்றுகிறோம். இதற்கு ஏற்றவாறு நம் உடலும் மாறுகிறது. பரிணாம மாற்றம் என்பது நேர்கோட்டில் நடைபெறாது. சுழற்சி முறையில் இயங்கக்கூடியது.

பொதுவாக மனித உடலில் ஏற்படும் மரபணு பிறழ்வுகள் தானாகப் போய்விடுமா அல்லது அதற்கு ஏற்றாற்போல் நாம் மாறிவிடுவோமா என்கிற கேள்வி இருக்கிறது.

இயற்கையாகவே சில குறைபாடுகள் நீங்கிவிடும். தொடராது. பொதுவாக 5-6 தலைமுறையிலேயே ஒரு மரபியல் நோய் போய்விடும். 2-3 தலைமுறை வேண்டுமானால் இருக்கலாம். அதற்கு மேல் அந்த Allele பிழைக்காது.

இதற்கு என்ன காரணம் எனக் கருதுகிறீர்கள்?

எதிர் மரபியல் பிறழ்வு (Counter Mutation). மனிதனின் வாழ்வியல், உணவு, சுற்றுச்சூழலை மையப்படுத்தி எதிர் மரபியல் பிறழ்வு நடைபெறும் அல்லவா? அதனால்கூட அவை போய்விடலாம் என இப்போதைய தரவுகளை வைத்து நாம் சொல்லிவிட முடியும்.

நாம் ஒரு பிறழ்வைத் தூண்டுகிறோம். இயற்கை கண்டிப்பாக ஒரு எதிர் பிறழ்வைத் தூண்டும். காரணம், இயற்கை என்பதே சமநிலைதானே? இயற்கை பிழைத்திருப்பதற்காக இதைச் செய்கிறது. இந்த எதிர் பிறழ்வு என்ன என்பது நமக்குத் தெரியாது. அதோட விளைவுகளும் நமக்குத் தெரியாது.

அதனால்தான் மரபணு மாற்றப்பட்ட உயிரினங்களை (GMO) நம்மால் தார்மீக நெறியின் காரணமாக அனுமதிக்க இயலாது. நம்மால் இயற்கையில் இருந்து வெளிவந்து எதையும் செய்ய முடியாது. எந்தப் பிறழ்வுகளைத் தர வேண்டும் என்பது இயற்கையிடம்தான் இருக்கிறது.

ஆனால் இயற்கை எதையும் திட்டமிட்டு செய்வதில்லைதானே?

நாம் இன்னும் அதைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் ஒருவிஷயம் திட்டமிட்டு நடைபெறவில்லை என்றால் நாம் எப்படி Lactose Tolerantஆக இருக்க முடியும்.

அதாவது நம்மால் பாலில் உள்ள லேக்டோஸை கிரகிக்க முடியும். ஆனால் எல்லோருக்கும் அப்படிக் கிடையாது. பெரும்பாலும் ஐரோப்பிய மக்கள்தான் லேக்டோஸை முழுமையாகக் கிரகிக்கும் தன்மையைப் பெற்றிருக்கிறார்கள். மற்றவர்களுக்கு (இந்தியர்கள் உட்பட) இன்னும் பால் ஆகாத விஷயம்தான். குழந்தையாக இருக்கும் வரைதான் நம்மால் பாலை எடுத்துக்கொள்ளமுடியும். இந்தத் பாலை ஜீரணிக்கும் தன்மை நமக்கு வந்ததற்குக் காரணம் மரபணுப் பிறழ்வு. ஆனால் இது எப்படித் தன்னிச்சையாக நடைபெற்றிருக்க முடியும்?

அது தன்னிச்சையாக இருக்க வாய்ப்பில்லை. அது தன்னிச்சையாக இருந்தால் சூழல் சார்ந்த, சுற்றுச்சூழலை அடிப்படையாக கொண்ட மரபணுக்கள் (genepool) நம்மிடம் இருக்காது. டார்வின் இருந்த காலகட்டத்தில் அந்தப் புரிதல் இல்லாமல் இருந்திருக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட புற்றுநோய் ஒரு குறிப்பிட்ட பகுதியில் எப்படிப் பரவுகிறது என்பதற்கு அவை தன்னிச்சையாகப் பரவுகிறது என்று சொன்னார்கள். எங்கெல்லாம் புற்றுநோய் செல்கள் போகின்றனவோ அங்கெல்லாம் இரண்டாம்நிலை கட்டிகள் வரும் என்பதுதான் முதலில் சொன்னது.

ஆனால் இப்போது Seed and soil எனும் கோட்பாடு சொல்லப்படுகிறது. இதன்படி எங்கு புற்றுநோய் செல்கள் வளர்வதற்கான போஷாக்குகள் இருக்கிறதோ அங்குதான் புற்றுநோய்கள் வரும். அதுபோல மரபணுக்கள் மாற்றமும் தன்னிச்சையாக நடைபெறாது என்பது என் கருத்து.

அப்படியென்றால் இயற்கை, சூழல் இரண்டுக்குமே சமமான பங்கிருக்கிறது என்று சொல்லலாமா? இயற்கையாகவும் நிகழலாம். சூழலும் பாதிக்கலாம். அப்படி எடுத்துக்கொள்ளலாமா?

குறிப்பிட்ட மக்கள் மட்டும் லேக்டோஸ் டாலரெண்டாக எப்படி மாறினோம்? இந்த மாற்றம் வேறொங்கும் நடைபெறவில்லைதானே? எத்தியோப்பியர்கள், திபெத்தியர்களுக்கு மட்டும் ஹீமோகுளோபின் எண்ணிக்கை ஏன் அதிகம் இருக்க வேண்டும்? அப்போது அது திட்டமிட்டதுதானே? இங்குமட்டும் அது நடக்கவேண்டும் எனத் திட்டமிட்டு நடத்தியதுதானே?

வைட்டமின் சி நமது உடலில் சுரக்காது. மனிதன் இறைச்சி சாப்பிட்ட வரை வைட்டமின் சி நமது உடலிலேயே சுரந்தது. நாம் என்றைக்குக் காய்கறி சாப்பிட ஆரம்பித்தோமோ அப்போதே உடலில் வைட்டமின் சி அளவு குறைந்துவிட்டது. இப்போது நாம் வெளியில் இருந்துதான் வைட்டமின் சி-ஐ எடுக்க முடியும். இது பரிணாம மாற்றம்.

இதுவே ஆடுகளை எடுத்துக்கொண்டால் அவையும் தாவரப் பட்சிணிதான். ஆனால் அவற்றின் உடம்பில் வைட்டமின் சி இன்னும் சுரக்கிறது. நமக்கு அந்தப் பண்பு போயிருந்தால் ஆட்டுக்கும் போயிருக்க வேண்டும்தானே?

அது ஏன் ஆகவில்லை? காரணம் ஆடு, பஞ்சத்தில் வாழக்கூடிய மிருகம் எனச் சொல்லலாம். எல்லா நேரத்திலும் அதற்குப் போதிய வைட்டமின் சி கிடைக்காது என்பதால் இயற்கை அதைத் தக்க வைத்துள்ளது. அப்படி என்றால் இவை தன்னிச்சையாக நடைபெறவில்லை என்றுதான் அர்த்தம்.

டார்வின் சொல்வது இயற்கைத் தேர்வு அல்லவா? தகுதி வாய்ந்த பண்பை மட்டும் இயற்கை தக்க வைத்துக்கொள்கிறது. மற்றவை நீக்கப்படுகிறது. அது வாழ்வதற்கான சூழல் இல்லாததால் அழிந்துவிடுகிறது. அதனால் தகுதியுள்ளவை மட்டும் அடுத்த தலைமுறைக்கும் பிழைக்கிறது அல்லவா? அதுபோல அந்தத் தன்மை பிழைத்திருக்கலாம்.

இதை ஒரு தவளைக்கோ எலிக்கோ பொருத்திப் பார்க்கலாம். காரணம், அவற்றின் இனப்பெருக்க எண்ணிக்கை அதிகம். ஆனால் மனிதர்களுக்கு எப்படிப் பொறுத்திப் பார்க்க முடியும்?

உயிரினங்களில் கீழே செல்லச் செல்ல மரபணுக்கள் பிறழ்வு அடையும் வேகம் அதிகரிக்கிறது. மேலே செல்லச் செல்லப் பிறழ்வு அடையும் எண்ணிக்கை குறைகிறது. அதனால்தான் நாம் பரிணாம மாற்றம் அடைய லட்ச வருடங்கள் எடுக்கிறது. ஒரு கொசு பரிணாமம் அடைய சில நாட்களே போதும்.

இன்னொரு விஷயம் டி.என்.ஏவில் எக்ஸான்ஸ் (Exons), இன்ட்ரான்ஸ் (Introns) என இரு பிரிவுகள் இருக்கின்றன. எக்ஸானில்தான் எழுதப்பட்ட தகவல் (குறியீட்டுத் தகவல்) இருக்கும் (Coding Part). இன்ட்ரானில் இருப்பது எழுதப்படாத தகவல்கள். நம் உடலில் நடைபெறும் அதிகமான மாற்றங்கள் இன்ட்ரானில்தான் நடைபெறுகின்றன. அதனால்தான் நாம் உடலை எப்படிக் கெடுத்துக்கொண்டாலும். அதாவது குடித்தாலும் வேறுவிதமான சீர்கேட்டில் ஈடுபட்டாலும் நாம் இன்னுமே ஆரோக்கியமான தலைமுறையைக் கொண்டிருக்கிறோம். எக்ஸானோடு ஒப்பிடும்போது இன்ட்ரானின் பங்குதான் அதிகம்.

ஒருவேளை எக்ஸானில் நடந்தால் என்ன ஆகும்? எக்ஸானில்தான் நம் உடல் எப்படி இயங்க வேண்டும் என்கிற தகவல் எழுதப்பட்டிருக்கும். அந்தத் தகவல்களை அடிப்படையாக கொண்டுதான் புரதங்கள் உடலில் உருவாகும். புரதம் மூலமாக செல்கள் உருவாகி உடல் இயங்குகிறது. எக்ஸான் அடிவாங்கினால் மொத்தமும் முடிந்தது கதை.

அதிர்ஷ்டவசமாக இன்ட்ரான்தான் அதிகம் பாதிக்கப்படுகிறது என்பதால் நாம் சாதாரண வாழ்க்கையை வாழ முடிகிறது. இல்லையென்றால் நாம் பயன்படுத்தும் வேதிப்பொருட்களுக்கு, சாப்பிடும் உணவுக்கு எல்லோருக்கும் புற்றுநோய் வந்திருக்க வேண்டும். ஆனாலும் சிலருக்குப் புற்றுநோய் வருவதற்கு எக்ஸானிலும் பிறழ்வு நடைபெற வாய்ப்புள்ளது என்பதுதான் காரணம்.

இதுவே பரிணாம மரத்தின்கீழ் பகுதியில் உள்ள உயிரினங்களை எடுத்துக்கொள்வோம். அவற்றின் மரபணுத் தொகுப்பே சிறியது. இதனால் பிறழ்வு எக்ஸானில்தான் நடந்தாக வேண்டும். அதனால் பரிணாம மாற்றமும் ஜாஸ்தியாக இருக்கிறது.

மனித உடலில் 2 சதவிகிதம் ஜீனோம்தான் (குறியீடு) எழுதப்பட்ட பகுதி என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். மீதம் 98 சதவிகிதம் எதற்கு இருக்கிறது என்றே தெரியாது. அதாவது 98 சதவிகிதம் எதற்கானது என்பதை நாம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இதை நாம் கண்டுபிடித்தோம் என்றால் ஒரு விடை கிடைக்கலாம்.

நாம் தாமதமாகப் பரிணாமம் அடைவதற்கு மற்றொரு காரணம், நாம் டி.என்.ஏவை வெளியில் இருந்து எடுக்க மாட்டோம். ஆனால் வைரஸ்களும் பாக்டீரியாக்களும் அவற்றைச் செய்யும்.

பாக்டீரியா போன்ற உயிரிகள் சுற்றுச்சூழலில் இருக்கும் டி.என்.ஏவை எடுத்து தனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் அவை வேகமாகப் பரிணாம மாற்றம் அடைகின்றன. இவற்றை Horizontal Gene Transfer என்கிறோம்.

ஆனால் நம்மால் அப்படிச் செய்ய முடியாது. நாம் தலைமுறை தலைமுறையாகத்தான் டிஎன்ஏவைக் கடத்த முடியும். இதனை Vertical Gene Transfer என்கிறோம். இதுவும் நாம் பரிணாம மாற்றம் அடைவதற்குத் தாமதம் ஏற்பட காரணம். இதனாலும் மனிதப் பரிணாம மாற்றம் எப்படி நிகழ்கிறது என்பதை முழுமையாக நாம் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறோம்.

இன்றைய தம்பதிகளுக்குக் கர்ப்பம் தரிக்கும் தன்மை குறைவதற்கு மரபணுப் பிறழ்வு காரணமா?

பொதுவாகவே கருத்தரிக்கும் தன்மை ஆண், பெண் இருவருக்கும் இருக்கும். ஸ்வயர் சிண்ட்ரோம் போன்ற சிலருக்குத்தான் அந்த வாய்ப்பு கிட்டாது. அதற்கான வாய்ப்பு குறைவு. XXX சிண்ட்ரோம் போன்று அந்த உறுப்பே வளராமல் இருப்பவர்களுக்கும் வாய்ப்பு குறைவு. அவர்களைதான் sterile என்று சொல்ல முடியும். மற்றவர்களுக்குக் கருவுறச் சில காரணங்கள் இருக்குமல்லவா? அந்தக் காரணங்களில் ஏதோ பிரச்னை என எடுத்துக்கொள்ளலாம்.

உதாரணமாக, இன்றைய காலகட்டத்தில் ஃபோலிக் ஆசிட் பலருக்கு இருப்பதில்லை என்கிறார்கள். ஆனால் இது மரபணுப் பிறழ்வால் வந்த பிரச்னை கிடையாது. சாதாரண ஊட்டச்சத்து குறைப்பாடுதான். இதுபோன்ற பொது சுகாதாரம் சார்ந்த காரணங்களே அதிகம் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்குக் காரணம். மரபணுக்கள் அல்ல.

அதேபோல பெண்களுக்கு அவர்கள் குழந்தையாக அம்மா வயிற்றுக்குள் இருக்கும்போதே கருமுட்டை தயாராகிவிடுகிறது. 25 வயதில் அந்தப் பெண் குழந்தைக்காகத் திட்டமிடும் பட்சத்தில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் அந்த முட்டை அவர்களுக்குள் இருக்கிறது. அப்படி இருக்கும்போது நாம் சாப்பிடும் எல்லா விஷயங்களும் உடலுக்குள் சேகரிக்கப்படும் இல்லையா? வயதாக வயதாக நிறையக் கசடுகள் சேகரிக்கப்படும்போது ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம்.

அதற்காக 35 வயதுக்கு மேல் எல்லோருக்கும் குழந்தை பிறக்காது, ஆரோக்கியமாக இருக்காது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. மரபியலில் நிகழ்சாத்தியங்கள்தான் (Probability) அதிகம். முழு பதில் கிடையாது.

மனிதர்களுக்கு Y குரோமோசோம் குறுகிக்கொண்டு வருவதாகச் சொன்னீர்கள். இதை எப்படி எடுத்துக்கொள்ளலாம்?

மனிதர்களிடையே ஆண் பாலினத்தை உருவாக்குவது Y குரோமோசோம்தான். அது சமீபத்தில் குறுகி வருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அது உடனடியாக நடக்கும் காரியம் அல்ல. பல லட்சம் ஆண்டுகள் ஆகலாம்.

Y குரோமோசோம் இல்லாமல்போய்விட்டால் என்னவாகும்? இயற்கைக்கு ஆணே தேவை இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?

அப்படி முழுமையாகச் சொல்லிவிட முடியாது. வேறு எதாவது மாற்றம் வரலாம். சொல்லப்போனால் Y குரோமோசோமே பெண்ணின் X குரோமோசோமில் இருந்து வந்ததுதானே.

Y குரோமோசோம் மறைந்தால் மனிதர்கள் அல்பாலீர்ப்பு (Asexual) கொண்டவர்களாக மாற வாய்ப்பிருக்கிறதா?

அப்படி ஆகவும் வாய்ப்பிருக்கிறது. இல்லை அர்த்தநாதிஸ்வரர் மாதிரி, ஆணும் நானே பெண்ணும் நானே என்றும் ஆகலாம். எதையும் நம்மால் ஊகிக்க முடியாது.

மரபியலில் வெறும் நோய்கள் சம்பந்த ஆய்வுகள் மட்டும்தான் இருக்கிறதா?

இந்தத் துறையில் இருக்கும் மிகப்பெரிய குறைபாடு மற்ற துறையில் இருப்பதுபோன்று அதிகம் ஆய்வுகள் கிடையாது. தரவுகள் கிடையாது. இருக்கக்கூடிய தரவுகள் ஒரு நூற்றாண்டிற்கு உட்பட்டவை.

ஜனத்தொகையும் ஒரு பிரச்னை. தமிழ்நாடு என்றால் எல்லோரிடமும் தரவுகள் எடுக்க முடியாது. அவர்களாகத் தன்னார்வம் கொண்டு வந்தால் மட்டும்தான் எடுக்க முடியும். உதாரணமாக மூன்று பேர் மட்டும்தான் கிடைத்தார்கள் என்றால் அவர்களிடம் கவனிக்கும் மாறுபாடுகள், மரபணுப் பிறழ்வுகளை மட்டுமே நாம் பதிவு செய்ய முடியும்.

மரபியலில் ஆய்வு மிக மிகக் குறைவு. அதற்கான நிதி ஒதுக்கீடும் குறைவு. நான் இந்திய அளவில் சொல்லவில்லை. உலக அளவில் சொல்கிறேன். முதலில் புற்றுநோய்க்கு எப்படி நிதி வந்தது தெரியுமா? அமெரிக்காவில் ஆல்பர்ட் லாஸ்கர் என்னும் தொழிலதிபருக்கு புற்றுநோய் வந்தது, அதன் பிறகுதான் அவரது மனைவி மேரி லாஸ்கர் நீதிமன்றங்களில் வாதாடி இந்த நோய்க்கான ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தைப் புரிய வைத்து 1971, புற்றுநோய்க்கான தனிச் சட்டத்தை (National Act of Cancer, 1971) இயற்ற முக்கியக் காரணமாக இருந்தார். இது தவிர லாஸ்கர் அறக்கட்டளை மூலம் மருத்துவ ஆய்வுகளுக்காக நிதியுதவியும் விருதுகளும் வழங்கினார். அதன்பிறகு புற்றுநோய் ஆய்வுக்கான நிதி அமெரிக்காவில் அதிகமாகியது. பிறகுதான் மற்ற நாடுகளுக்கு நிதி கிடைத்தது.

அப்போது புற்றுநோய் மிக அரிதாக இருக்கக்கூடிய நோய். ஆனால் இப்போது அப்படிக் கிடையாது. சராசரியாக பத்து பேரில் ஒருவருக்குப் புற்றுநோய் இருக்கிறது. மேலும், மரபியல் ஆய்வுக்குத் தம்மை உட்படுத்த முன்வரமாட்டேன் என்கிறார்கள். நாம் கேட்டால் யாரும் வருவதில்லை. அவர்கள் அனுமதி அவசியம் என்பதால் நம்மால் எதையும் செய்ய முடியாது. அதுமட்டுமில்லாமல் பல சட்டத்திட்டங்கள் இருக்கின்றன. ஆய்வுக்குக் கிடைக்கும் மாதிரிகளும் மிகக் குறைவாக இருக்கிறது. நாம் மரபியல் படிப்பில் 5-6 நாள் ஆகக்கூடிய நாட்டுக்கோழி முட்டையை ஆராய என்றால்க்கூட அனுமதி வாங்க வேண்டும்.

இயற்கையோடு வாழ்தல் என்றால் என்ன? நாம் இயற்கையைத் துண்டித்துவிட்டு வாழ்வதுதான் நோய்கள் ஏற்பட பிரச்னையே எனப் பலரும் சொல்கிறார்களே?

இயற்கை என்பது ஒரு செயல்பாடு. அதைப் பெரும்பாலானோர்கள் புரிந்துகொள்வதில்லை. அந்த இயற்கைச் செயல்பாடுக்கு ஒருங்கிணைந்து வாழ்வதே இயற்கையோடு வாழ்தல். ஆனால் கலாசாரக் காவலர்கள் சொல்வதுபோல் இயற்கையோடு வாழ்தல் என்பது மலை, வயல், காடு, ஆடு, மாடு ஆகியவற்றுடன் மட்டுமே வாழ்வது அல்ல. அப்படிப் பார்த்தால் அவர்களுக்கு வளர்ச்சியே கூடாது. தகவமைத்துக்கொள்ளும் செயல்பாடுதான் (Process of Adaptation) இயற்கை. இன்னொன்று சமநிலை. எங்கெல்லாம் சமநிலை குறைகிறதோ அங்கெல்லாம் இயற்கை ஒரு அதீத முயற்சி எடுக்கும். அப்போது சமநிலை சரிசமமாகும்.

சிலர் கர்ப்பம் தரிப்பதில் பிரச்னை இருப்பதைக்கூட இயற்கை என்று சொல்கிறார்களே. அது இயற்கை, சமநிலையை ஏற்படுத்த செய்யும் செயலாக எடுத்துக்கொள்வது சரியா?

எல்லா இடங்களிலும் அப்படி சொல்ல முடியாது. சில இடங்களில் கரு தானாக கலைந்துவிடும். இதற்குக் காரணம் குரோமோசோம்களின் எண்ணிக்கையாக இருக்கலாம். இதனை Ploidy என்பார்கள். குரோமோசோம் எண்ணிக்கையில் இடறுகள் ஏற்பட்டால் (இரட்டித்தல், மும்மடங்காதல்) அது பிழைக்கவே பிழைக்காது. IVF-ல் கூட. இதை நாம் என்ன செய்தாலும் கருவை உண்டாக்க முடியாது. ஆனால் அதற்காக IVF செய்பவர்களை எல்லாம் இயற்கைக்கு எதிரானவர்கள் எனக் குற்றம்சாட்டுவது தவறு.

இந்த ஐவிஎஃப் முறையில் ஆண்கள், பெண்கள் எந்த வகை பாதிப்பை உணர்கிறார்கள்?

பொதுவாக ஆண்களுக்கு பெரிய பாதிப்புகள் கிடையாது. ஆனால் பெண்களுக்கு அப்படியல்ல. Super Ovalution என ஒரு செயல்பாடு இருக்கிறது. மிகவும் வலி மிகுந்தது. வழக்கமான மாதவிடாயின்போது ஒரு முட்டை வெளிவரும். ஆனால் இந்த சூப்பர் ஓவலியூஷனில் 6,7,…12 முட்டை வரை ஒரே நேரத்தில் வெளிவர வைப்பார்கள். அதைத்தான் சேகரித்து வைப்பார்கள். மாதம் ஒருமுறை ஒரு முட்டை வரும்போதே எத்தகைய வலியை பெண்கள் உணர்கிறார்கள். இதுவே சூப்பர் ஓவலியூஷன் என்றால் எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள். அவர்கள் மன ஆரோக்கியம் என்னவாக இருக்கும்? உடல் ஆரோக்கியம் என்னவாக இருக்கும்?

ஆனால் ஆண்களுக்கு அந்த மாதிரி கிடையாது. ஒருமுறை விந்தணுவை எடுத்தாலே பல லட்சம் விந்தணுக்கள் இருக்கும். பெண்களுக்குத்தான் மன ஆரோக்கியம் பாதிக்கப்படும். அதிகமாக எடை போடும். இதில் சிறந்த முட்டையைத் தேர்ந்தெடுத்து, விந்தணுவைச் சேர்க்க விடுவார்கள். பிறகு அதைக் குறிப்பிட்ட செல் பிரிவு நடைபெறும்வரை சோதனை கூடத்தில் வைத்து, பிறகு பெண்கள் உடலில் வைப்பார்கள். அது வெளியில் வராமல் இருக்க தைப்பார்கள். என்ன இருந்தாலும் கருப்பை சூழல் சோதனைக்கூடத்தில் இருக்காது. அதற்கு ஏற்ற வேதிப்பொருட்கள் எதுவும் சுரக்காது. இதனால்தான் ஐவிஎஃப் வெற்றி விகிதம் குறைவாக இருக்கிறது.

ஐந்து, ஆறு நாள் கருவை சோதனைக்கூடத்தில் வைப்பார்கள் எனச் சொன்னீர்கள். அது சாத்தியமா?

முடியும். அவை செல்கள்தானே.

விந்தணு, கருமுட்டை என்றால் நீங்கள் சொல்வது சரி. அவை செல்கள். ஆனால் கரு வளர்ச்சி என்பது செயல்பாடு அல்லவா? செல் பிரிதல் எனும் செயல்பாட்டை எப்படித் தாற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும்?

முடியும். உதாரணம் சொல்கிறேன். புற்றுநோய் பற்றிய ஆய்வுகளில் செல்களைப் பயன்படுத்துவோம். அந்த செல்களை ஹீலா செல்கள் என சொல்வார்கள். அந்த ஹீலா யார் தெரியுமா? 72 ஆண்டுகளுக்கு முன் இறந்த ஒருவர். 1951இல் 31 வயதான ஒரு பெண்மணியிடம் இருந்து எடுத்தது. அதைப் பதப்படுத்தி வைத்து இன்றைக்கும் பரிசோதனைகூடங்களில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். எத்தனை வருடம் ஆகிறது என்று பாருங்கள். அதனால் செல் இயக்கத்தை உறைய வைப்பது சாதாரணம்.

அப்படியென்றால் ஒருமுறை உறைய வைத்த செயல்பாடு திரும்பவும் தொடங்குமா?

தொடங்கும். அதற்கு என்று சில வழிமுறைகள் இருக்கின்றன. அதை நேரடியாக தண்ணிரில் உறைய வைக்க முடியாது. செல்கள் உடைந்துவிடும். அது உடையாமல் இருக்க, பாக்டீரியாவாக இருந்தால் கிளிசரால், மனித செல்களாக இருந்தால் அதற்கேற்ற வேதிப்பொருட்களை சேர்த்து உறைய வைப்பார்கள். அப்போது அது கிரிஸ்டாகாது. ஜெல்லி போன்று இருக்கும். அப்படிதான் சேகரிக்க முடியும்.

அதை மீண்டும் இயங்க வைக்க என்ன செய்ய வேண்டும்?

சாதாரண அறை வெப்பத்திற்குக்கொண்டு வந்தாலே போதும். சில நேரங்களில் அதைக் கைகளிலேயே தேய்த்து வெப்பம் உருவாக்க வேண்டும். அப்படிச் செய்யும் போது விரைவாக அது இயல்பு நிலைக்கு திரும்பும். இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு கிளிசரால் எல்லாவற்றையும் நீக்கிவிட்டு, வேறு சில வேதிப்பொருட்களைச் சேர்த்து, விழிக்க வைக்க வேண்டும்.

செல் வாழ்தலுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த திரவத்திற்கு மாற்ற வேண்டும். அதைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்ய வேண்டும். இல்லை என்றால் செல் இறந்துவிடும். ஆனால் எத்தனை வருடம் கழித்து அதை இயங்க வைக்கிறோம் என்பதும் அவசியம். கருவை உறைய வைக்கும்போது 5-10 ஆண்டுகளில் எடுத்து இயங்க வைத்துவிட்டோம் என்றால் பிரச்னை இல்லை. அதற்கு மேல் ஆண்டுகள் அதிகரிக்க அதிகரிக்க வாய்ப்பு குறைவு. இரட்டை குழந்தை ஒன்று 30 ஆண்டுகள் கழித்து பிறந்திருக்கிறது. ஆனால் அது போன்ற விஷயங்கள் அரிதானது.

பதப்படுத்திய ஒரு கருவை எடுத்து பல ஆண்டுகள் கழித்து பயன்படுத்தினால் அது காலத்திற்கு ஏற்ற மரபணு மாற்றத்தை அடைந்திருக்குமா?

சில பத்தாண்டுகள் கழித்து எடுத்துப் பயன்படுத்துவதால் பெரிய மாற்றம் எதுவும் வராது.

ஆயிரம் ஆண்டுகளை எடுத்துக்கொள்வோம். மனித இனமே புதிய பண்புகளை பெற்றிருக்கிறது என வைத்துக்கொள்வோம். அப்போது பழைய மாற்றமடையாத தன்மைதானே அந்தக் கருவிற்கு இருக்கும்?

அப்படி இருக்க நேர்ந்தால் அந்தக் கரு முதலில் உருவாகாது. ஆனால் அந்தக் கருவை வைத்து, அந்த விந்தணுவை வைத்து நாம் ஆய்வு செய்துகொள்ளலாம். ஒப்பிட்டுப்பார்க்கலாம். இப்படிப் பலவற்றை ஒப்பிட்டுத்தான் நாம் மனித பரிணாமம் பற்றிய புரிதலைப் பெற்றிருக்கிறோம்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *