Skip to content
Home » அரிய கல்வெட்டுகள் #2 – பூதுகனும் மணலேராவும்

அரிய கல்வெட்டுகள் #2 – பூதுகனும் மணலேராவும்

‘நன்னன், ஏற்றை, நறும் பூண் அத்தி,
துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி,
பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு’

மேற்கண்ட 44ஆம் அகநானூற்றுப் பாடல், நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை, கணையன் ஆகிய ஏழு பேர் ஒன்றுகூடிச் சோழரை வீழ்த்திய போர் குறித்துப் பாடுகிறது.

சங்ககால தமிழக வேளிர்களில் ஒரு பிரிவினரான கங்கர்கள், 8ஆம் நூற்றாண்டில் தமிழக – கர்நாடக எல்லைப்பகுதியில், குவலாளபுரம் என்றழைக்கப்பட்ட கோலாரை தலைமையிடமாகக்கொண்டு வலிமையான அரசமரபாக எழுச்சி பெற்றனர். பல்லவர்கள் மற்றும் சாளுக்கியர்களுக்கு உறவுமுறையினராகத் திகழ்ந்தனர். இத்தகைய மரபில் தோன்றிய மாபெரும் வீரரான இரண்டாம் பூதுகன் மற்றும் அவரது முக்கிய தளபதியான மணலேரா குறித்து தெரிந்துகொள்வது அவசியம். சோழர்கள் பங்கேற்ற மிக முக்கியமான ‘தக்கோல போரில்’ சோழ இளவரசன் ராஜாதித்தனை கொன்றதால் பூதுகன் நம் கண்களுக்கு வில்லனாகத் தோன்றினாலும், கர்நாடகத்தில் அவர் மாபெரும் வீரராகப் போற்றப்பட்டிருக்கிறார்.

சோழர் – ராஷ்டிரகூடர் உறவு மற்றும் பகை

இன்றைய மும்பைக்குத் தெற்கில் இருந்துகொண்டு அன்று ஆட்சி புரிந்தவர்கள் ராஷ்டிரகூடர்கள். தமிழகத்தைத் தாண்டி தம் செல்வாக்கைப் பெருக்க எண்ணிய சோழர்கள் ராஷ்டிரகூடர்களுடன் திருமண உறவை ஏற்படுத்திக்கொண்டார்கள். ராஷ்டிரகூட அரச மரபைத் தோற்றுவித்தவர் தந்தி துர்க்கர். கூர்ஜாரர்களை தோற்கடித்து அவர்களிடமிருந்து மாளவத்தை தந்தி துர்க்கர் கைப்பற்றினார். பின்னர், இரண்டாம் கீர்த்தி வர்மனை தோற்கடித்து சாளுக்கிய நாடான கர்நாடகத்தின் சில பகுதிகளைக் கைப்பற்றினார். இவ்வாறு ஒரு கட்டத்தில் தக்காணத்தில் முதன்மை அரசாக ராஷ்டிரகூடர்கள் உருமாறியிருந்தார்கள்.

ராஷ்டிரகூட அரசர் அமோகவர்ஷரின் வழித்தோன்றல் ஒருவரின் மகளை மணந்தார் ஆதித்த சோழர். இளங்கோப்பிச்சி என்பது அந்த ராஷ்டிரகூட இளவரசியின் பெயர். இவர்களுக்குக் கன்னரதேவன் (இவர் வேறு, பிற்காலத்தில் ராஷ்டிரகூட அரசரான கன்னர தேவன் என்பவர் வேறு) என்கிற மகன் பிறந்தார். இந்த மகனை இளவரசனாக்குவதற்கு மாறாக திரிபுனமாதேவி வயிரியக்கன் என்கிற மற்றொரு மனைவியின் மகன் பராந்தகனை இளவரசனாக்கினார் ஆதித்தர். இம்முடிவே பின்னாளில் சோழதேசத்துக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.

ஆதித்தருக்குப் பிறகு சோழ அரசரானார் பராந்தகர். தன்னுடைய மகள் வீரமாதேவியை ராஷ்டிரகூட அரசர் மூன்றாம் இந்திரனின் மகனான நான்காம் கோவிந்தனுக்கு அவர் மணமுடித்து வைத்தார். மூன்றாம் இந்திரனுக்கு இரண்டாம் அமோகவர்ஷன் என்கிற மற்றொரு மகன் இருந்தார். தந்தைக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இரண்டாம் அமோகவர்ஷர் ஓரிரு ஆண்டுகளிலேயே மறைந்தார். இதனால் பராந்தகரின் மருமகனான நான்காம் கோவிந்தர் குந்தள நாட்டுக்கு அரசரானார். ஆனால் தன்னுடைய ஆட்சியால் நாட்டு மக்களிடம் அவர் வெறுப்பைச் சம்பாதித்தார்.

இந்நிலையில், (ஆந்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி கீழை சாளுக்கியம் என்றும் கர்நாடகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மேலை சாளுக்கியம் என்றும் அழைக்கப்படுகிறது) கீழைசாளுக்கிய அரசன் யுத்தமல்லனுக்கும் – இரண்டாம் வீமனுக்கும் போர் நடைபெற்றது. இதில் யுத்தமல்லனுக்கு ஆதரவாகச் சென்று தோல்வி கண்ட நான்காம் கோவிந்தர், அங்கேயே தனது சிறிய தந்தையை அரசனாக்கிவிட்டு (இவர் மூன்றாம் அமோகவர்ஷர் என்கிற பட்டத்துடன் அரியணையேறினார்), மாமனார் பராந்தகரின் சோழநாட்டில் தஞ்சமடைந்தார்.

ஐந்தாண்டுகளுக்குப் பின் அரசர் மூன்றாம் அமோகவர்ஷர் இறக்க, அவரது மகன் மூன்றாம் கிருஷ்ணன் புதிய அரசராகப் பதவியேற்கத் தயாரானார். தன் மருமகனுக்கு அந்நாட்டைக் கைப்பற்றிக் கொடுக்க ஒரு பெரும்படையை பராந்தகர் அனுப்பினார். அச்சமயம் மூன்றாம் கிருஷ்ணரின் தமக்கையின் கணவனும் மேலைகங்க அரசனுமான பூதுகன் பெரும்படையுடன் வந்து தன்னுடைய மைத்துனருக்கு உதவினார். இப்போரில் சோழர் தோற்கவே, ராஷ்டிரகூட அரசரானார் மூன்றாம் கிருஷ்ணர். இந்த நிகழ்வால் உறவினரான சோழரும் – ராஷ்டிரகூடரும் பகைவரானார்கள். கூடுதலாகக் கங்கர்களின் பகையையும் சோழர்கள் சம்பாதித்தார்கள்.

0

தொண்டை நாட்டின் திருவல்லம் பகுதியில் வாணர் என்கிற அரசமரபினர் பல்லவர் காலத்தில் கோலோச்சி வந்தனர். இருநூற்றாண்டுக்கு மேலாகப் பல்லவர்களுக்குக் கட்டுப்பட்ட சிற்றரசாக அங்கு நிலைகொண்டிருந்தனர். தம்மை மகாபலி சக்கரவர்த்தி வழி வந்தவர்களாக இவர்கள் கூறிக்கொள்வர். பல்லவர் ஆட்சி முடிவுற்றதும் வாணர்கள் சுதந்திரமாக ஆட்சிபுரிய ஆரம்பித்தனர். இதனால் இவர்களை அடிபணிய வைக்கவேண்டிய கட்டாயம் பராந்தகருக்கு ஏற்பட்டது. மற்றொரு கங்க கிளையின் அரசரான இரண்டாம் பிரிதிவிபதி பராந்தகருடன் இணைந்தார். வாணருக்கு துணையாக நெல்லூர் – ரேணிகுண்டா பகுதியை ஆட்சி செய்த வைதும்பர் என்கிற குறுநில அரசமரபினர் உதவிக்கு வந்தார்கள்.

தன்னுடன் கைகோர்த்த இரண்டாம் பிரிதிவிபதிக்கு ‘செம்பியன் மாவலி வாணரையன்’ எனும் பட்டத்தைப் பராந்தகர் வழங்கினார். சோழர்களுக்கும் வாணர்களுக்கும் இடையே நடைபெற்ற போரில் வாணர்குல அரசர் விஜயாதித்தன் இறந்தார். அவரது மகன் விக்கிரமாதித்தனும் வைதும்ப அரசனும் ராஷ்டிரகூட அரசர் மூன்றாம் கிருஷ்ணரிடம் சென்று சரணடைந்தார்கள். ராஷ்டிரகூடர்களின் ஆளுமையை அன்றே கணித்ததால்தான் தன் மகளை அவர்களது குடும்பத்தில் பராந்தகர் மணமுடித்துக் கொடுத்திருந்தார்.

தென்னகம் முழுவதும் அரசியல் சூழல் ஓரளவுக்குச் சுமுகமாக இருந்த நிலையில் பராந்தக சோழரின் உற்ற நண்பனாக இருந்த அரசர் இரண்டாம் பிரிதிவிபதி இறந்தார். இதனால் மேலைகங்க அரசரும் ராஷ்டிரகூடரின் உறவினருமான இரண்டாம் பூதுகன், இதுவே சமயம் எனக் களமிறங்கி இரண்டாம் பிரிதிவிபதியின் நாட்டைக் கைப்பற்றினார். பராந்தகரின் எதிரிகள் எண்ணிக்கை இதனால் பெருகியது. இதன்பிறகு தனது மூத்த மகனும், பட்டத்து இளவரசருமான ராஜாதித்தனை தொண்டை நாட்டு பகுதியில் முன்னெச்சரிக்கையாக அவர் தங்க வைத்தார். உறவினர்களான ராஷ்டிரகூடர்களும் சோழர்களும் சின்னஞ்சிறு ராஜாங்க விஷயங்களால் எதிரிகளானார்கள். மூன்றாம் கிருஷ்ணர் தன் பக்கத்துக்கு வலுசேர்க்கத் தொடங்கினார்.

ராஷ்டிரகூட படையும் அதற்குப் பக்கபலமாக கங்கர் படையும் தொண்டை மண்டலம் வந்தது. தக்கோலம் என்கிற இடத்தில் போர் நிகழ, இருபுறமும் கடுமையான சேதம் ஏற்பட்டது. எவர் வெற்றி பெறுவர் என்பதைக் கணிக்க இயலாத வகையில் போர் நடைபெற்றது. கங்கர் வம்சத்தை சேர்ந்த இரண்டாம் பூதுகனே இப்போரின் கதாநாயகன். யானை மேலிருந்து சோழ இளவள் ராஜாதித்தன் போர்புரிய, வேகமாக ஓடிச்சென்று யானையின் அம்பாரியை ஆயுதமாகப் பயன்படுத்தி மேலேறி, அவனைக் கொன்றார் பூதுகன். (பிசிரே களனாகி – கர்நாடக கல்வெட்டு)

தலைவன் இறந்ததும் சோழப் படை சிதறுண்டது. பின்வாங்கிய வீரர்களை ராஷ்டிரகூடப் படை விரட்டி விரட்டி துவம்சம் செய்தது. இந்தப் போருக்குப் பின் மூன்றாம் கிருஷ்ணரின் ஆட்சி தொண்டைமண்டலம் முழுக்க பரவியது. ‘கச்சியும் தஞ்சையும் கொண்ட கன்னரதேவன்’ என்று அவர் அழைக்கப்பட்டார். தஞ்சையை இவர் வெற்றிகொண்டதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை, எனினும் இவருடைய கல்வெட்டுகள் தொண்டை மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளன. இதனால் ஏதோ உடன்படிக்கை அடிப்படையில் தஞ்சை மீண்டும் சோழதேசம் சென்றிருக்கவேண்டும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

சோழ வரலாற்றில் நடைபெற்ற மிக முக்கியமான தக்கோல போர் பற்றிய குறிப்புகளை கல்வெட்டு, செப்பேடுகள் முலமாக அறியமுடிகிறது. ராஷ்டிரகூடர் – கங்கர் சார்பில் தக்கோல போர் பற்றிய குறிப்புகளை தாங்கிய ஆவணமாக திகழ்வது அதக்கூர் என்ற ஊரிலுள்ள ஒரு நடுகல். மைசூர் மாவட்டத்திலுள்ள மாண்டியா என்கிற ஊருக்கு அருகே இருக்கும் அதக்கூர் கிராமத்தில் இந்நடுகல் கிடைத்தது. 1898ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது ஹல்ட்ஸ்ச் என்கிற அதிகாரியின் முயற்சியில் அதக்கூர் நடுகல் முறையாகக் கல்வெட்டு படி எடுக்கப்பட்டு அன்றைய பெங்களூர் அருங்காட்சியகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

0

இரண்டாம் பூதுகனின் சேவகன் அல்லது படைத் தளபதியான மணலேரா என்பவர் தக்கோலம் போரில் வீரத்துடன் போரிட்டு வெற்றிக்கு உதவினார். சோழரின் நான்கு வகைப் படைகளும் இப்போரின் மாதண்டநாயகனான ராஜாதித்தரை சூழ்ந்து பாதுகாப்புக்கு நிற்க, அதைக் கண்ட ராஷ்டிரகூட படை முன்னேறாமல் தயங்கி நின்றது. அந்தச் சமயத்தில் எதற்கும் அஞ்சாமல், ராஷ்டிரகூட படைகளை ஊடறுத்து வேகமாக முன்னேறிச் சென்ற மணலேரா, ராஜாதித்தர் அமர்ந்திருந்த ‘சோழர்களின் கோட்டை’ என்றழைக்கப்பட்ட யானையின் நெற்றியைத் தன் வாளால் குத்தி பிளந்தார்.  அதன்பிறகு தடுமாறிய யானையின் அம்பாரி மேலேறி சோழ இளவளைக் கொன்று பூதுகன் சரித்திரத்தில் இடம்பிடித்தார். இந்த வெற்றியால் அகமகிழ்ந்த பூதுகன் மணலேராவுக்கு பரிசளிக்க விரும்பினார். பூதுகன் ஆசையாக வளர்த்து வந்த ‘காளி’ என்கிற பெயரைக்கொண்ட வேட்டை நாயை மணலேரா கேட்டுப் பெற்றுக்கொண்டார். தக்கோலம் போரை ராஷ்டிரகூடர்களுக்குச் சாதகமாகத் திருப்பிய பெருமை மணலேராவையே சேரும்.

கேலே நாட்டில் பெல்த்துர் என்கிற மலைப்பகுதியில் மணலேரா வேட்டைக்கு சென்றபோது ஒரு காட்டுப்பன்றியை எதிர்த்துச் சண்டையிட்டு காளி மரணித்தது. காளியின் வீரத்தின் நினைவாக அதக்கூர் சோழீஸ்வரா கோவிலுக்கு முன்பாக ஒரு நடுகல்லை மணலேரா எழுப்பினார். இந்நடுகல்லுக்கு நில தானம் அளித்து, தினசரி பூஜைக்கு நெல் நிவந்தம் வழங்கியுள்ளார். இந்த நிலநிவந்தங்களை அழித்து, நடுகல் வழிபாட்டைத் தடை செய்பவர் எவராக இருந்தாலும் அவர்கள் காளியைக் கொன்ற பாவத்தைச் சுமப்பர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் தமிழாக்கம் பின்வருமாறு.

வரி 1: மங்களம் உண்டாகட்டும்! சகாப்தம் 872ஆம் ஆண்டு, சௌம்ய சம்வத்சரம் நடந்து கொண்டிருந்தபோது

வரி 2: மங்களம்! ஸ்ரீமத் அமோகவர்ஷதேவனுடைய (வடிகா) திருவடித் தாமரைகளில் மொய்க்கும் வண்டாக இருப்பவரும், செல்வம் மற்றும் பூமியின் தலைவரும், பரமேஸ்வரரும், பரமபட்டாரகருமான ஸ்ரீமத் கிருஷ்ணராஜதேவர் (கன்னரதேவர்) போர்க்களத்தில் முக்கண்ணனை (சிவன்) போன்றவர், யானைப்படையைக் கையாள்வதில் வித்தகர், பகைவர்களின் மதயானைகளை அடக்கும் மல்லர், ஆற்றல்மிக்கவர், மூவடிச் சோழன் ராஜாதித்தனை எதிர்த்துப் போரிட்டு, தக்கோலத்தில் அவனைக் கொன்று வெற்றிப் பெருமிதத்துடன் சென்றுகொண்டிருந்தபோது

வரி 5: மங்களம்! தர்மமகா ராஜாதி ராஜா, குவலாளப் புரபரமேஸ்வரன், நந்தகிரி நாதன், ஸ்ரீமத் பெர்மானடி, சத்தியவாக்கிய கங்கன், வெற்றியின் வாசல், கங்கர்களில் நரசிம்மன் எனப் புகழப்படுபவருமான இரண்டாம் பூதுகன் ஆட்சி செய்துகொண்டிருந்தபோது

வரி 7: மங்களம்! சகர வம்சத்தில் பிறந்தவரும், வல்லபி புரவரேஸ்வரரும், வீரர்களில் பகீரதனைப் போன்றவரும், மூக்கறுக்கும் கோபக்காரரும், போர்க்களத்தின் ஏக சூத்ரகருமான மணலரவ என்பவரின் போர்த்திறத்தைக் கண்டு வியந்த பூதுக மகாராஜா, ‘உனக்கு என்ன வேண்டும், கேள்!’ என்றார். அதற்கு மணலரவ, ‘உங்களுடைய விருப்பத்துக்குரிய, உரக்கக் குரைக்கும் ‘காளி’ என்ற வேட்டை நாயை எனக்குத் தாங்கள் அருள வேண்டும்’ எனக் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.

வரி 10: கொலாலே மாவட்டத்தின் ‘பொலதூர்’ கிராமத்தின் மேற்கு மலைப்பகுதியில் ஒரு பெரிய காட்டுப்பன்றியின் மீது அந்த நாயை ஏவிவிட்டபோது, அந்தப் பன்றியும் நாயும் சண்டையிட்டு ஒன்றையொன்று கொன்று மடிந்தன. அதன் நினைவாக, ஆதகூரில் உள்ள சல்லேஸ்வரர் ஆலயத்தின் முன்பாக இந்தக் கல்லை நட்டு, ஏரிக்குக் கீழ் உள்ள நிலத்தைத் தானமாக வழங்கினார்.

வரி 13: இந்த நிலத்தையோ அல்லது தர்மத்தையோ அழிக்கும் எவரும், அந்த நாய் செய்த பாவத்தைச் செய்தவர் ஆவர். இக்கோயிலைப் பராமரிக்கும் கோரட என்பவர் கல்லை வழிபடத் தவறினாலும் அதே பாவத்தைச் சுமப்பார். ஓம்.

வரி 15: சோழனின் நான்கு வகைப் படைகளும் அஞ்சாமல் நின்றபோது, எங்களது மற்ற வீரர்கள் முன்னேறத் தயங்கிய வேளையில், மணலரவ மட்டும் துணிந்து முன்சென்று தாக்கினார். சோழனே அதற்குச் சாட்சி. தன் பின்னால் அரசனும், முன்னால் எதிரிகளும் இருந்த நிலையில், மணலரவ சிங்கத்தைப்போலப் பாய்ந்து, ‘சோழனின் கோட்டை’ என்று அழைக்கப்பட்ட பட்டத்து யானையின் நெற்றியில் குத்தி அதைப் பிளந்தார்.

வரி 20: கன்னரதேவர் சோழனுடன் போரிட்டபோது, பூதுகன் ராஜாதித்தனைத் தழுவியபடியே வாளால் குத்திக் கொன்றார். இதற்காகக் கன்னரதேவர் பூதுகனுக்குப் ‘பனவாசி பன்னீராயிரம்’ உள்ளிட்ட பல நாடுகளைப் பரிசாக அளித்தார்.

வரி 21: மணலரவ தன் கண்முன்னே காட்டிய வீரத்துக்காக, பூதுக மகாராஜா அவருக்கு ‘ஆதகூர் பன்னிரண்டு’ மற்றும் ‘கடியூர்’ ஆகிய கிராமங்களைப் பரிசாக வழங்கினார். மேலும், ‘வாள் கழுவிக் கொடுத்தான்’ அவனுக்கு மங்களம் உண்டாகட்டும்.

இங்கு கூறப்பட்டுள்ள வாள் கழுவிக் கொடுத்தான் என்பது, மிக முக்கிய சங்ககால மரபு ஒன்றைச் சுட்டுகிறது.

‘வென்றி பெற வந்த வேந்தை இகன்மதில்வாய்க்
கொன்று குடுமி கொளக் கண்டு…. தன்பால்
விருந்தினர் வந்தார்க்கு விண் விருந்து செய்தான்
பெருந்தகை என்று ஆர்த்தார் பிறர்.’

பகைவன் முடிப் பொன் அழித்துப் பண்ணிய கழல் புனைந்து வெற்றி விழாக் கொண்டாடி மகிழ்ந்த அவன், அவ்வெற்றியைத் தேடித்தந்த வாள் வீரரை மறவாது, அவர் துணையின்றி அரணைக் காத்தல் இயலாது என்பதை உணர்ந்திருந்தமையால், அவர்க்குச் சிறப்பும் பெருமையும் அளிக்க விரும்பி அரண் காவல் போரில் பங்கு கொண்ட ஒவ்வொருவரையும் தனித்தனியே அழைத்துப் பாராட்டுவதினும், அவர் கையிற் கிடந்த அருந்துணை புரிந்த வீர வாளுக்குச் சிறப்பளிப்பதே சாலவும் பொருந்தும் என எண்ணியமையால், வீரவாளைத் தூயநீராட்டிப் பொட்டிட்டுப் பூவணிந்து வீர உலாவந்து விழாக் கொண்டாடினான். இவ்வாறு வீரவாளுக்கு விழா எடுப்பதை ‘வென்ற வாளின் மண்’ என்ற வாள் மண்ணு மங்கலத் துறை என்கிறது தொல்காப்பியம்.

‘தீர்த்த நீர் பூவொடு பெய்து திசைவிளங்கக்,
கூர்த்த வாள்மண்ணிக், கொடித்தேரான் – பேர்த்தும்
இடியார்பணைதுவைப்ப இம்மதிலுள் வேட்டான்,
புடையார் அறையப் புகழ்.’ (பு.வெ. மாலை.121)

வெற்றி தேடித்தந்த வீரர்களின் வாள்களுக்கு மன்னன் மரியாதை செய்யும் நிகழ்வு, சங்ககால தமிழரின் மரபாக இருந்ததை தொல்காப்பியமும், புறப்பொருள் வெண்பாமாலையும் கூறுகிறது. பூதுகனின் முன்னோர் சங்ககாலத் தமிழினமான கங்கர்களின் வழித்தோன்றலாக இருந்ததால், இந்நிகழ்வைப் பூதுகன் நிகழ்த்தியிருப்பாரோ என்று எண்ண வேண்டியுள்ளது.

பூதுகனின் இந்த வெற்றியைச் சாம்ராஜ்நகர் அருகேயுள்ள ஹர்கேஸ்வரா கோவில் தூண்களில் சிற்பமாக வடித்துள்ளார்கள். இதில் யானை மேல் ராஜாதித்தரை தாக்குவது, இறந்த ராஜாதித்தரின் உடலைச் சோழப் படை தூக்கிச் செல்வது, மணலேராவுக்கு மரியாதை செய்வது, போரில் வெற்றி பெற்ற பின் நிசும்பசூதனிக்கு நன்றி செலுத்துவது உள்ளிட்ட நிகழ்வுகள் குறுஞ்சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *