Skip to content
Home » அரிய கல்வெட்டுகள் #14 – சங்க இலக்கிய நினைவுகள்

அரிய கல்வெட்டுகள் #14 – சங்க இலக்கிய நினைவுகள்

சங்க காலம் என்பது ஏறக்குறைய 2,500 ஆண்டுகள் பழமையானது எனக் காலக்கணிப்பு செய்துள்ளனர். சங்க காலத்தில் வாழ்ந்த முன்னோர்களையும், சீறூர், குறுநிலத் தலைவர்களையும், வேந்தர் பெருமக்களையும், அக்காலத்தைய இலக்கியங்களையும், ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஏதோ ஒரு வகையில் கல்வெட்டுகளில் தொடர்ந்து பதிவுசெய்துள்ளனர். ஹோமர் எழுதிய ஒடிசி, இலியட் ஆகிய காப்பியங்களை முதலில் கற்பனை என்று கூறியவர்கள், ட்ராய் நகரின் எச்சங்களைத் துருக்கியில் கண்டபொழுது தம் கருத்துகளை மாற்றிக்கொண்டனர்.

மேலைநாட்டு அறிஞர்களைப் போன்று, சங்க இலக்கியம் கூறும் நிலவியல் காட்சிகளை நிகழ்காலத்தில் ஆவணப்படுத்தும் முயற்சியை நிச்சயம் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், சங்க இலக்கியங்களை எளிதாக நாட்டுப்புறப் பாடல்கள் என்றும், அதீதக் கற்பனை என்றும் புறந்தள்ளும் வாய்ப்புகள் அதிகம். சங்க இலக்கியத்தை நினைவூட்டும் சில இடங்களையும், இலக்கியங்களையும், தலைவர்களைக் குறிப்பிடும் கல்வெட்டுகளையும் காண்போம்.

1. ஓய்மான் நாடு

‘பெருமாவிலங்கைத் தலைவன், சீறியாழ்
இல்லோர் சொன்மலை நல்லியக்கோடனை
உடையை வாழி’ (புறநானூறு – 176)

‘தொல்மா இலங்கைக் கருவொடு பெயரிய
நன்மா இலங்கை மன்னருள்ளும்
மறுஇன்றி விளங்கிய வடுஇல் வாய்வாள்
உறுபுலித் துப்பின் ஓவியர் பெருமகன்
களிற்றுத் தழும்பு இருந்த கழல்தயங்கு திருந்தடி
பிடிக்கணம் சிதறும் பெயல்மழைத் தடக்கை
பல்இயக் கோடியர் புரவலன் பேர்இசை
நல்லியக்கோடனை நயந்த கொள்கையொடு’ (சிறுபாணாற்றுப்படை)

‘நெல்லமல் புரவின் இலங்கை கிழவோன்
வில்லியாதன் கிணையேம் பெரும’ (புறநானூறு – 379)

மேற்கண்ட சங்க இலக்கியப் பாடல்களிலிருந்து நல்லியக்கோடன், நல்லியாதன், வில்லியாதன் என்கிற மூன்று வேளிர் தலைவர்கள் குறித்து அறிய முடிகிறது. இவர்கள் ஓவியர் எனும் தொன்மையான குடியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஆண்ட நிலப்பகுதி ஓய்மான் நாடு என்றழைக்கப்பட்டது. ஓவியர் பெருமகன், ஓவியர் மான் என்பது மருவி பின்னாளில் ஓய்மான் நாடு என்று கல்வெட்டில் வெட்டப்பட்டது. இவர்கள் மாவிலங்கை, வேலூர், கிடங்கில், எயிற்பட்டினம் ஆகிய பகுதிகளை அன்றைய காலகட்டத்தில் ஆண்டிருக்கின்றனர். இப்பகுதிகள் இன்று மேல் மாவிலங்கை, கீழ் மாவிலங்கை, உப்புவேலூர், கிடங்கில், மரக்காணம் என்றழைக்கப்படுகின்றன. இப்பகுதிகளில் அமைந்துள்ள கோவில்களில் கிடைக்கும் சோழர்காலக் கல்வெட்டுகள், ஓவியர் பெருமகன்கள் அன்று ஆண்டதாகக் கூறும் இன்றைய திண்டிவனத்தைச் சுற்றிய பகுதிகளை ‘ஓய்மான் நாடு’ என்றே அடையாளப்படுத்துகின்றன.

இப்பகுதியில் உள்ள இரும்பை மாகாளேஸ்வரர் கோவிலில் காணப்படும் மாறவிக்ரமன் கல்வெட்டொன்று, ‘நல்லாதான் மழவராயன், நல்லாதான் சேதிராயன், நல்லாதான் வேணாவுடையான், நல்லாதான் பல்லவராயன்’ ஆகிய அதிகாரிகளைக் குறிக்கிறது. ஓய்மான் நல்லியாதனின் நினைவுகளாக இப்பெயர்களைக் கருதலாம்.

உப்பு வேலூரின் திருவிருந்தப் பெருமாள் கோவிலில் இருக்கும் முதலாம் ராஜராஜனின் கல்வெட்டு, ‘ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து ஓய்மாநாட்டு வேலூர்’ என்கிறது. அதுபோல் மரக்காணம் கல்வெட்டு, ‘ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து ஓய்மானாட்டு எயிற்பட்டினம்’ என்கிறது. அதற்கு முன்பு இப்பெயர் வழக்காற்றில் இல்லை. சோழ மன்னர் ராஜராஜன், தமிழக நிலப்பரப்புகளைப் பல வளநாடுகளாகப் பிரித்த பெருமையால், உலகளந்தான் எனும் பட்டத்தைக் கொண்டவர். எனவே, பழமையான வேளிர் குடியினரை நினைவுபடுத்த திண்டிவனம் பகுதி முழுவதையும் அன்று ஓய்மான் நாடு என்று பெயரிட்டிருக்க வேண்டும். அதன்பின் மூன்றாம் ராஜராஜன் காலம் மட்டுமல்லாமல், சடையவர்மன் காலத்திலும்கூட, இப்பகுதி ஓய்மான் நாடு என்றழைக்கப்பட்டது. அதன்பின்னரே அந்த வழமை மாறிவிட்டது.

2. பாரி ஆண்ட பறம்பு மலை

கபிலர் முதலான புலவர்களால் பாடப்பெற்ற புகழுடைய இம்மலை, சங்க காலத்தில் பறம்பு மலை எனவும், கல்வெட்டுகளில் திருக்கொடுங்குன்றம் எனவும் பெயர்பெற்றது. தற்போது இது பிரான்மலை என வழங்கப்படுவதாகச் சிலர் கூறுவர். ஆனால் உண்மை என்பது அதற்கு நேர்மாறாய் இருக்கிறது. பிரான்மலை என்பது பறம்பு மலை அல்ல. பிரான்மலையைப் பற்றிய கல்வெட்டுகள், அதைத் திருமலை நாட்டு கொடுங்குன்றம் என்றே கூறுகின்றன. ஆனால் பறம்பு பற்றிய தகவல் அவற்றில் இடம்பெறவில்லை. ஆனால் அதே பிரான்மலையில் உள்ள சடையவர்மன் சுந்தரபாண்டியனின் 6ஆம் ஆட்சியாண்டின் கல்வெட்டு, ‘வடபறம்பு நாட்டு பாக்குடிப் பற்று’ என்கிற தகவலை அளிக்கிறது. அதன் மூலமாக, தென்பறம்பு நாடு என்பது திருவாதவூர், பாதிரிக்குடியை உள்ளடக்கியுள்ளதும், வடபறம்பு நாட்டில்தான் பறம்பு என்கிற ஊர் உள்ளதும் தெரியவருகிறது. ஆக, இன்றைய திருக்கொடுங்குன்றத்திற்கும், அழகர் கோவிலுக்கும் இடையே உள்ள மலைத்தொடர், அதிலும் குறிப்பாகப் பறம்பு எனும் ஊரில் உள்ள மலையே, பாரி ஆண்ட மலை என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

‘ஈண்டுநின் றோர்க்கும் தோன்றும் சிறுவரை சென்று நின்றோர்க்கும் தோன்றும்’ என்கிற கபிலரின் புறநானூறு பாடல் (114), பறம்பு மலை பற்றிக் குறிப்பிடுகிறது.

பறம்பு மலையின் வளம் (புறநானூறு பாடல் 109):

‘அளிதோ தானே, பாரியது பறம்பே;
நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும்
உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே;
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே;

இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே;
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே;
நான்கே, அணிநிற ஒரி பாய்தலின் மீதுஅழிந்து
திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே.
வான்கண் அற்றுஅவன் மலையே; வானத்து

மீன்கண் அற்றுஅதன் சுனையே; ஆங்கு
மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்
புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்
தாளிற் கொள்ளலிர்; வாளிற் றாரலன்;
யான்அறி குவன்அது கொள்ளு மாறே;

சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி,
விரையொலி கூந்தல்நும் விறலியர் பின்வர,
ஆடினிர் பாடினிர் செலினே
நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே’

பாடல் விளக்கம்:

‘பாரியின் பறம்பு மலை இரங்கத் தக்கது. பெருமையுடைய முரசுடன் நீங்கள் மூவரும் சேர்ந்து முற்றுகை இட்டாலும், உழவர் உழாமல் விளையும் பயனுள்ள நான்கு பொருள்கள் பறம்பு நாட்டில் உள்ளன. ஒன்று, சிறிய இலையையுடைய மூங்கிலில் நெல் விளையும்.

இரண்டு, இனிய சுளைகள் உள்ள பலாவில் பழுத்த பழங்கள் இருக்கும். மூன்று, வளமான வள்ளிக் கொடியிலிருந்து கிழங்குகள் கீழே தாழ்ந்து இருக்கும். நான்கு, அழகிய நிறமுள்ள குரங்குகள் தாவுவதால் தேனடைகள் மிகவும் அழிந்து, கனத்த நெடிய மலையிலிருந்து தேன் சொரியும். பாரியின் பறம்பு மலை அகல, நீள உயரத்தில் வானத்தைப் போன்றது.

அதிலுள்ள நீர்ச்சுனைகள் விண்மீன்கள் போன்றவை. அந்த மலையில், நீங்கள் மரங்கள் தோறும் யானைகளைக் கட்டினாலும், இடமெல்லாம் தேர்களை நிறுத்தினாலும் உங்கள் முயற்சியால் பறம்பு நாட்டைப் பெற முடியாது. நீங்கள் வாளால் போரிட்டாலும் அவன் தன் நாட்டை உங்களுக்குத் தரமாட்டான். அதை அடையும் வழியை நான் அறிவேன்.

தொய்வற்றதாகவும் இறுக்கமாகவும் முறுக்கப்பட்ட நரம்பினையுடைய சிறிய யாழைச் செய்து, அதை மீட்டி, மணமிக்க தழைத்த கூந்தலையுடைய உங்கள் விறலியர் பின் வர ஆடியும் பாடியும் சென்றால், பாரி பறம்பு நாட்டையும் பறம்பு மலையையும் ஒருங்கே உங்களுக்கு அளிப்பான்.’

இவ்வாறு, பறம்புமலைத் தலைவன் பாரியையும், அவனுக்குரிய பறம்புமலையின் சிறப்புகள் பற்றியும் கபிலர் புகழ்ந்து பாடியுள்ளார்.

இவ்வளவு வளமிக்க மலையை இன்றைய பிரான்மலையுடன் எவ்வாறு ஒப்பிடுவது? சிறிதேனும் மரங்களற்ற, வலிமையான பாறைகளைத் தன்னகத்தே கொண்டதால்தான் கல்வெட்டுகூட அம்மலையை ‘கொடுங்குன்றம்’ என அழைக்கிறது போலும்.

3. திருக்குறள் கல்வெட்டு

திருக்குறள் காலங்காலமாய் நம் மண்ணில் நிலைகொண்டுள்ளது என்பதற்கு, திருக்குறள் இயற்றி சுமார் 700 வருடம் கழித்து வாழ்ந்த திருமழிசையாரின் பதிகமும் ஒரு சான்றாகும். திருவள்ளுவரின் அறத்துப்பாலில் வரும் விருந்தோம்பல் அதிகாரத்திலுள்ள,

‘வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்’

என்கிற குறளை, திருமழிசையார் நேரடியாய் கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே இருக்கும் அம்மன் மலையில் அமைந்துள்ள பாறை ஒன்றில் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைவில் திருக்குறள் வெட்டப்பட்டுள்ளது. இக்குறள் அறத்துப்பாலில் துறவியலைக் குறிக்கும் 251வது குறளாகும். பொதுவாக இத்தகைய மலைப்பாங்கான பகுதிகளில் ஆரம்பத்தில் ஜைனர்களும், ஆசீவகர்களும் வாழ்ந்து வந்தனர். 10ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு அரசர்கள் மற்றும் வணிகர்களின் ஆதரவைப்பெற்ற ஜைனர்கள், மலைப்பகுதியை விடுத்து நிலப்பாங்கான பகுதிகளில் தமது வழிபாட்டுத் தலங்களையும், குடியிருப்புகளையும் மாற்றிக்கொண்டனர். இக்கல்வெட்டு வெட்டப்பட்ட காலப்பகுதியில், தமிழகத்தில் சித்தர் மரபு தழைத்தோங்கியிருந்தது. எனவே அவர்களில் எவரேனும் துறவறத்தின் மேன்மையை உணர்த்த இக்குறளை வெட்டியிருக்கக்கூடும்.

‘தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்’

தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காக, மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும் எனும் கொல்லாமை குறித்த கருத்தை இக்குறள் முன்வைக்கிறது.

4. தெய்வக் கவிதை செஞ்சொற் கபிலன்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில், தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள வீரட்டானேஸ்வரர் கோவில் முக்கியமான சைவத்தலம். அக்கோவிலில் உள்ள முதலாம் ராஜராஜ சோழனின் 27ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு பல முக்கியத் தகவல்களை அளிக்கிறது.

கல்வெட்டு: ‘வன்கரை பொருது வருபுனல் பெண்ணைத் தென்கரை உள்ளது தீர்த்தத் துறையது மொய்வைத் தியலு முத்தமிழ் நான்மைத் தெய்வக் கவிதைச் செஞ்சொல் கபிலன் மூரிவண் தடக்கைப் பாரிதன் அடைக்கலப் பெண்ணை மலயர்க் குதவிப் பெண்ணை அலைபுனல் அழுவத் தந்தரிட் சஞ்செல மினல்புகும் விசும்பின் வீடுபேறு எண்ணிக் கனல்புகும் கபிலக் கல்லது புனல்வளர் பேரெட்டான வீரட் டானம்’

‘தெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன்’ என்று கபிலரை மிகவும் உயர்வாக இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. வள்ளல் பாரி மூவேந்தர்களால் கொல்லப்பட்ட பின், அடைக்கலமாகத் தன்னிடம் இருந்த அவருடைய மகள்களை மலையமானுக்கு அளித்துவிட்டு, பின்னர் தென்பெண்ணையாற்றுப் பகுதியில் வீடுபேறு (மரணம்) அடைய எண்ணி கபிலர் நெருப்பில் புகுந்தார் என்றும், அந்த இடத்தின் பெயர் ‘கபிலக் கல்’ என்றும் கல்வெட்டு கூறுகிறது.

ராஜராஜனின் தாயார் வானவன் மாதேவி, அவரது கணவரான சுந்தரசோழன் இறந்ததும் உடன்கட்டை ஏறி இருந்தார். அவர் மலையமான் குலத்தைச் சேர்ந்தவர். அவருடைய குலத்தின் சிறப்பை எடுத்துக் கூற, அக்குலத்தின் சுடர் திருமுடிக்காரி என்பதையும், பாரியின் மகளை மணந்தால் மூவேந்தர்களின் கோபத்திற்கு ஆளாகக்கூடும் எனத் தெரிந்தும், அதற்கு அஞ்சாது அறம் பக்கம் நின்ற மலையமான் தெய்வீகன் என்பதையும், இப்பாடல் வடிவக் கல்வெட்டு கூறுகிறது. இலக்கியத்தில் எங்கும், கபிலர் தீயில் புகுந்து இறந்த தகவல் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் இக்கல்வெட்டு அத்தகவலைப் பதிவு செய்துள்ளது.

5. வெண்ணிப் பறந்தலை எனும் வெண்ணிக்கூற்றம்

‘காய்சின மொய்ம்பின் பெரும்பெயர்க் கரிகால் ஆர்கலி நறவின் வெண்ணி வாயில் சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பின்இமிழிசை முரசம் பொருகளத்து ஒழியப் பதினொரு வேளிரொடு வேந்தர் சாய மொய்வலி அறுத்த ஞான்றைத் தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே.’ (அகநானூறு 246)

இன்றைய திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள அமைதியான வளமையான கிராமம் வெண்ணி. ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகாலனை பதினொரு வேளிர்கள் இணைந்து எதிர்த்தனர். அவர்கள் அனைவரையும் புறமுதுகிட்டு ஓடச்செய்து பல உயிர்களைக் காவு வாங்கிய கடுமையான போர் நிகழ்ந்த இடமாகும் இந்த வெண்ணி. இவ்வூரினை 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உத்தமசோழனின் திருமழபாடி கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது.

வெண்ணிக் கூற்றத்து பூவனூரைச் சேர்ந்த ஆத்திரையன் சிவதாஸன் சோலை என்பவர் திருமழபாடி இறைவனுக்கு இரவும் பகலும் விளக்கெரிக்க சாவாமூவா பேராடுகளை தானமளிக்கிறார் என்கிற செய்தி அக்கல்வெட்டில் உள்ளது. இவரது பெயரும் ஊரும் மேலப்பழுவூர் கல்வெட்டிலும் இடம்பெறுகிறது.

6. காவிரி கரைகண்ட கரிகாலச் சோழன்

‘தெள்ளருவிச் சென்னிப் புலியேறு இருத்திக் கிரிதிரித்துப் பொன்னிக் கரை கண்ட பூபதி’ (விக்கிரமசோழனுலா)

காவிரி எனும் பொன்னி நதிக்கு கரிகாலன் கரையெழுப்பியதை மேற்கண்ட பாடல் கூறுகிறது. கரைபுரண்டோடும் காவிரிக்கு கரையெழுப்பினார் இளஞ்சேட் சென்னியின் மைந்தன் கரிகாலன் எனப் பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை வாயிலாய் அறிகிறோம். இலக்கியரீதியாகக் குறிப்பு இருப்பினும், இச்செய்திக்கு வலுசேர்க்கும் கல்வெட்டுகள் மிக அரிது.

எனினும் இதற்கான சான்றாய் திகழ்வது, முதலாம் ஆதித்தனின் தில்லைத்தானம் கல்வெட்டில் வரும் ‘கரிகாலக்கரை’ என்கிற குறிப்பு, அதே வார்த்தை மீண்டும் வரும் முதலாம் பராந்தகசோழனின் அல்லூர் கல்வெட்டு, கங்கைகொண்ட சோழபுரம் வீரராஜேந்திரனின் ‘கரிகாலக்கரை’ கல்வெட்டு மற்றும் முசிறி பேட்டைவாய்க்காலில் இருக்கும் ‘கரிகாலச்சோழ பேராறு’ என்று காவிரியை அழைக்கும் கல்வெட்டு ஆகியவை மட்டுமே. இத்தகைய அரிய கல்வெட்டுகளில் முதல் மற்றும் கடைசி கல்வெட்டுகள் இரண்டும் பிற்காலத்திய கட்டுமானங்களால் மறைந்துவிட்டன.

இவை தவிர திருவாவடுதுறை கோவிலின் வடக்குச் சுவரின் கொற்றவை காலுக்குக் கீழுள்ள கல்வெட்டு ‘காவிரி கரைகண்ட கரிகால சோழதேவர்’ எனும் தகவலை அளிக்கிறது. சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நம் குழுவினர் கண்டறிந்த 17ஆம் நூற்றாண்டு கல்வெட்டொன்று, கரிகாலனை நினைவுகூர்கிறது.

கரிகாலன் காவிரிக்கு கரையை உயர்த்தியதைக் கூறும் சோழர் செப்பேடுகள் மற்றும் இலக்கியங்கள்:

  1. முதலாம் பராந்தகனின் வேளஞ்சேரி செப்பேடு (கி.பி. 932).
    காவிரியை இரு கரைகளுக்குள் அடக்கி, நீருள்ளவளாய்ச் செய்த கரிகாலன். (செய்யுள் – 8)
  2. பெரிய லெய்டன் செப்பேடு (கி.பி. 1005)
    எதிரிகளுக்கு எமனான கரிகாலன் காவிரி நதிக்குக் கரை எடுத்தான். (செய்யுள் – 11)
  3. திருவாலங்காடு செப்பேடு (கி.பி.1018)
    காவேரியின் கரைகளைக் கட்டித் தன் புகழை மெய்ப்பித்தான். (செய்யுள் – 42)
  4. கரந்தை செப்பேடு (கி.பி. 1020)
    எதிரிகளுக்கு கூற்றுவனான கரிகாலன் காவிரி நதிக்குக் கரை எடுத்தான். (செய்யுள் – 13)
  5. எசாலம் செப்பேடு (கி.பி. 1037)
    கரிகாலனது ஆணையினால் அரசர்கள் காவிரிக்குக் கரை எடுத்தனர்.
  6. சாரளச் சேப்பேடு (கி.பி. 1069)
    சோழர்குல மன்னர்களின் திலகமான கரிகாலன், காவிரி நீர் வீணாகக் காட்டில் பாய்வதைக் கண்டு, எதிரி அரசர்களின் தலையில் மண் கூடைகளைச் சுமந்து வரச் செய்து கரையமைத்தான். (செய்யுள் – 49)
  7. ‘பொன்னி கரை கண்ட பூபதி’ என்கிறது விக்ரமச்சோழனுலா.
  8. ‘மண்கொண்ட பொன்னிகரைகட்ட வாராதான் கண் கொண்ட சென்னிக் கரிகாலன்’ என்கிறது குலோத்துங்கச் சோழனுலா.
  9. ‘தொழுது மன்னரே கரைசெய் பொன்னியில் தொடர’ என்கிறது கலிங்கத்துப்பரணி.

இத்துடன், புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூர் அருகேயுள்ள 16-17ஆம் நூற்றாண்டு கல்வெட்டொன்று, கரிகாலன் காவிரியின் கரையைப் புதுப்பித்தது குறித்த ஒரு தகவலைப் பாடல் வடிவில் அளிக்கிறது.

கல்வெட்டு: ‘கரிகாலன் பொன்னிக் கரையை புதுக்கி மீநாடு வார் புனற் சோணாடு வாழ்ந்தது, வேதமங்கை மாநாடு மார்பன் அழகன் மகன் வேதியன் வந்துதித்துக் கோநாடு வாழ்ந்தது கற்றளி, ஏரி, குளங்கள் கடமையே’

‘வேதமங்கை எனும் ஊரைச் சேர்ந்த, மாநாடு மார்பன் அழகன் எனும் வேதியர், ஓர் ஏரியை உருவாக்கினார். அச்செயலை அவர் கரிகாலன் காவிரிக்கு கரையைப் புதுப்பித்த செயலுக்கு ஈடாகக் கருதுகிறார்’ என்று கல்வெட்டு கூறுகிறது.

சங்க இலக்கியச் சுவடிகளை உ.வே.சா. புதுப்பித்த பின்னர்தான் ஓரளவு கரிகாலன் குறித்து பொதுமக்கள் அறிந்ததாகக் கருதுவதுண்டு. ஆனால் கரிகாலன் குறித்தும், கரிகாலன் காவிரிக்கரையைப் புதுப்பித்தார் என்பதும் வழிவழியாய் மக்களிடையே பரவியிருந்தது என்பதற்கு இந்த 16-17ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த கல்வெட்டும் ஒரு சான்று.

7. மலைபடுகடாம் பற்றிய கல்வெட்டு

ஆற்றுப்படை நூல்களுள் ஒன்று கூத்தராற்றுப்படை. இதற்கு ‘மலைபடுகடாம்’ என்கிற பெயரும் உண்டு. இந்நூலின் பாட்டுடைத் தலைவன் நன்னன் சேய் என்கிற வேளிர் ஆவார். இவர் ஆண்டது செங்கண்மா நகர். அது இன்றைய திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியாகும்.

திருவண்ணாமலை கோவிலில் உள்ள கோப்பெருஞ்சிங்கனின் பாடல் வடிவக் கல்வெட்டு:

‘தென்புலங் குறுகவும் வடதிசைத் தெலுங்கர் வடக்கிருந்தழியவும் போர் பல கடந்து பொருந்தா மன்னவ ராரெயிற் செர்ந்தூர் மலை யரணழித்து நல்லிசைக் கடாம் புனை நன்னன் வெற்பில் வெல்புக ழனைத்து மேம்படத் தங்கொன் வாகையும் குரங்கும் விசயைமுந் திட்டிய வடல்புனை நெடுவேலாட்கொண்தேவன்.’

மலைபடுகடாம் என்பதே இதில் கடாம் எனக் குறிப்பிடப்படுகிறது. கூத்தராற்றுப்படை குறிப்பிடும் நன்னன் பெயரையும் இதில் காணலாம்.

செங்கம் ரிஷபேஸ்வரர் கோவிலில் உள்ள பாடல் வடிவக் கல்வெட்டும் மலைபடுகடாம் பற்றிக் கூறுகிறது:

‘மூவண்டறை தார்மன்னர் மலைப்படைத் தென் மன்னரை வென்கண்ட திறற் காங்கேமன் கண்சிவப்ப பண்டே மலைகடாம் பாட்டுண்ட மால்வரை செஞ்சொரி அலைகடாம் பாட்டுண்டது.’

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *