8. ஆக்ரா கோட்டையில் ஷாஜஹானின் சிறைவாசம்; ஒளரங்கசீபுடனான சச்சரவுகள்
வெற்றி முகத்தில் இருந்த தன் மகன் ஒளரங்கசீபுக்கு ஆக்ரா கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்டதைத் தொடர்ந்து ஷாஜஹான் எஞ்சிய தன் வாழ் நாள் முழுவதும் சிறையில் அடைபட வேண்டிவந்தது. அல் சுல்தானாக (மன்னருக்கெல்லாம் மன்னராக) இருந்தவருக்கு இந்த தலைகீழ் மாற்றமானது மிகவும் தாங்கமுடியாததாக இருந்தது. மிகக் கடுமையான போராட்டங்களுக்குப் பின்னரே இந்தச் சூழ்நிலைக்கு அவர் தன்னைத் தகவமைத்துக்கொண்டார். தாராஷுகோவுக்கும் ஷா ஷுஜாவுக்கும் அவர் அனுப்பிய கடிதங்களை ஒளரங்கசீபின் ஆட்கள் கைப்பற்றினர். இந்தக் கடிதங்களை ஆக்ரா கோட்டைக்கு வெளியே கொண்டுசெல்ல முயன்ற நபும்சகர்கள் மிகக் கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாகினர்.
எந்தப் பலனும் தராத இந்த முயற்சிகள் எல்லாம் ஷாஜஹானின் சிறைவாசத்தை மேலும் கடினமாக்கின. அவரைச் சுற்றிலும் இப்போது எதிரிகள் சூழ்ந்துவிட்டனர். வேறு யாரும் அவரை வந்து சந்திக்கவே முடியாது என்ற நிலை உருவானது. சிறையில் அவர் சொன்னவை, செய்தவை அனைத்தும் ஒற்றர்கள் மூலம் ஒளரங்கசீபுக்கு முழுமையாகத் தெரிவிக்கப்பட்டன. முன்னாள் பேரரசரிடமிருந்து எழுதுகோல், மை, ஓலைச்சுருள் போன்றவை கூடக் கைப்பற்றப்பட்டுவிட்டன.
ஒளரங்கசீப் எல்லையற்ற பேராசை கொண்டவராக இருந்தார். ஆக்ரா கோட்டையில் இருந்த மற்றும் ஷாஜஹான் அணிந்துகொண்டிருந்த கிரீடம், நகைகள் ஆகியவை தொடர்பாக ஷாஜஹானுக்கும் ஒளரங்கசீபுக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் மூண்டன. ‘அந்த சொத்துகள், நகைகள் அனைத்துக்கும் தான் தான் முறையான உரிமையாளர். ஆட்சியைக் குறுக்குவழியில் கைப்பற்றியிருக்கும் ஒளரங்கசீபுக்கு அவற்றைச் சொந்தமாக்கிக் கொள்ள எந்த தார்மிக உரிமையும் கிடையாது’ என்று கைதியாக இருந்த முன்னாள் பேரரசர் கருதினார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் ஒளாரங்கசீப், ‘அரசு பணங்கள், சொத்துகள் எல்லாம் சமூகத்தின் நன்மைக்காகவே இருக்கின்றன. சுல்தான்கள் எல்லாம் அல்லாவினால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பாளர்கள் மட்டுமே. அவர்களுக்கு சொத்துக்களின் மீது எந்த உரிமையும் கிடையாது. அவர்கள் அல்லாவின் அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குச் செலவிடவேண்டிய பணியாளர்கள் மட்டுமே’ என்று சொன்னார். அப்படியாக ஆக்ரா கோட்டையில் இருந்த மொகலாயப் பேரரசின் சொத்துகள் முழுவதும் ஆட்சியில் இருக்கும் அவருக்கே சொந்தம் என்றார்.
முஹம்மது சுல்தான் புறப்பட்டுப் போனபின்னர், ஷாஜஹானைக் கவனித்துக்கொள்ளும் முழுப் பொறுப்பும் நபும்சகர் முதாமத் வசம் வந்தது. அவர் ‘ஷாஜஹானைச் சில நேரங்களில் மிக கடுமையாக அடிமையைப் போல்’ நடத்தினார்.
சிறையில் அடைக்கப்பட்ட முதல் ஆண்டில், தந்தைக்கும் மகனுக்கும் இடையில் எரிச்சலும் கோபமும் மிகுந்த கடிதப் பரிமாற்றங்கள் நடைபெற்றன.
‘நான் இஸ்லாமிய மார்க்கத்தின் காவலன். நல்ல நிர்வாகமே என் இலக்கு. அல்லாவின் மீது மிகுந்த பற்றும் பணிவும் கொண்டு மக்கள் நலனுக்கான ஆட்சியைக் கொடுக்கும் அப்த் அல்லா (அல்லாவின் சேவகன்) நான்’ என்று அந்தக் கடிதங்களில் ஒளரங்கசீப் குறிப்பிட்டிருக்கிறார். தந்தையின் ஆட்சியில் நடைபெற்ற அநீதிகளையும் செய் நேர்த்தி இன்மையையும் மகன் கடுமையாக விமர்சித்தார். சுய ஒழுக்கம், மார்க்க விதிகளை ஆர்வத்துடன் பின்பற்றுபவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, தன் செயல்களை நியாயப்படுத்தினார்.
தந்தைக்குக் கீழ்படியாத, கலகங்கள்செய்யும் மகன் என்ற குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லும்விதமாக ஒளரங்கசீப் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்:
’நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவரையிலும் நான் உங்கள் அனுமதி பெறாமல் எதையும் செய்யவில்லை. நீங்கள் எனக்குக் கொடுத்த பதவி, அதிகாரம் இவற்றைத்தாண்டி நான் எதுவும் செய்யவில்லை. நீங்கள் நோய்வாய்ப்பட்டதும் தாரா ஷுகோ அதிகாரம் முழுவதையும் கைப்பற்றிக்கொண்டுவிட்டார். ஹிந்து மதத்தை வளர்க்கவும், இஸ்லாமை அழிக்கவும் கச்சை கட்டிக் கொண்டு இறங்கிவிட்டார். உங்களை முழுமையாக ஓரங்கட்டிவிட்டு அவரே சுல்தான் போல் செயல்பட்டார். அரச நிர்வாகம் குழப்பத்தில் ஆழ்ந்தது.
’நான் ஆக்ராவை நோக்கிப் புறப்பட்டுவந்ததற்கு கலக எண்ணம் காரணமல்ல. தாராவின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று மட்டுமே விரும்பியிருந்தேன். இஸ்லாமில் இருந்து வழுவிச் சென்ற அவர் நம் ராஜ்ஜியம் முழுவதும் உருவ வழிபாட்டு மரபுகளை உற்சாகத்துடன் முன்னெடுத்தார். மார்க்க போதனைகளின்படி மறு உலகம் தொடர்பான இலக்குகளைப் பூர்த்தி செய்யும் நோக்கிலேயே சுல்தான் பதவி எனும் ஆபத்தான சுமையைச் சுமக்க நேர்ந்துவிட்டது. இஸ்லாமிய மார்க்க விதிகளைக் காப்பாற்றவும் சாந்தியும் சமாதானத்தையும் கொண்டுவரவும் வேண்டியே இதைச் செய்தேன். என் தனிப்பட்ட விருப்பத்தினால் அல்ல’.
சுல்தானின் பதவி மற்றும் கடமை பற்றி அவர் மிக உயர்வாக மதித்தார். ஒருவகையான விருப்பு வெறுப்பு அற்ற செயல்பாடாக அதை மதித்தார். ‘சுல்தான் பதவி என்பது மார்க்க ராஜ்ஜியத்தையும் மக்களையும் காப்பாற்றுவதுதானே ஒழிய சுக போகங்களில் திளைப்பதற்கானது அல்ல’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
’தன்னை எதிர்த்து நின்ற பலமான எதிரிகளையெல்லாம் வெல்ல முடிந்திருப்பதில் இருந்து அல்லாவின் அருளாசி தனக்கு இருப்பதாக’ அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டிருக்கிறார். தனது சுய ஒழுங்கும் நேர்மையுமே வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறது; புத்திசாலியான ஷாஜஹான் அல்லாவின் விருப்பத்தைப் புரிந்துகொண்டு அதற்கு ஒப்புக் கொடுக்கவேண்டும். தன் வெற்றி என்பது ஷாஜஹானின் வாழ்க்கையில் நடந்த மிக நல்ல விஷயம் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்’ என்று கடிதங்களில் ஒளரங்கசீப் குறிப்பிட்டிருக்கிறார்.
இப்படியான ஒளரங்கசீபின் போலியான வாதங்களைப் படித்த ஷாஜஹான் மிகுந்த கோபம் கொண்டார். மக்களின் உடமைகளையும் உரிமைகளையும் கொள்ளையடித்துவிட்டு மார்க்கப்பற்றுள்ள முசல்மான் போல் வேடம் போடுவதாகத் திட்டினார்.
மிக உயர்ந்த லட்சியவாத வார்த்தைகளினால் ஒளரங்கசீப் தன் நடத்தையை நியாயப்படுத்தினார்: ‘மற்றவருடைய உடமையைப் பறிப்பது மார்க்கத்துக்கு விரோதமானது என்று சொல்கிறீர்கள். மக்களுடைய நலனுக்காகவே அரசாங்க சொத்துகள் இருக்கின்றன. அரச பதவி என்பது பரம்பரை உரிமையானதோ தனிப்பட்டவர்களின் சொத்தோ அல்ல. மக்களின் நன்மைக்காக அல்லாவினால் தேர்ந்தெடுக்கப்படும் நபரே ஒரு சுல்தான். அல்லாவின் சொத்துக்களை மக்களுடைய நலனுக்காகப் பயன்படுத்தும் பணியைச் செய்யவதற்கான பொறுப்பாளர் மற்றும் நிர்வாகிதான் சுல்தான்’.
அடுத்ததாக, ஒருவன் தன் தந்தையை எப்படி நடத்துகிறானோ அப்படித்தான் அவனுடைய மகனால் நடத்தப்படுவான் என்று தன்னைக் கொடூரமாக நடத்தும் மகனை ஷாஜஹான் எச்சரித்தார். இதற்கு ஒளரங்கசீப் எழுதிய பதிலானது, மார்க்கப் பற்று கொண்ட ஒருவருக்குத் தன் நடத்தையில் இருக்கும் தன்னம்பிக்கையை எடுத்துக்காட்டுவதாக இருந்தது:
‘அல்லாவின் விருப்பம் இல்லாமல் எதுவும் நடக்காது. நீங்கள் சொன்ன விஷயங்கள்தான் நம் முன்னோர்களுக்கும் நடந்தேறியிருக்கிறது. எல்லையற்ற அருளாளனின் விருப்பங்களை என்னால் எப்படி மீறமுடியும்? ஒருவருடைய சிந்தனை, செயல்பாடுகள் எப்படி இருக்கின்றனவோ அதற்கேற்பவே அல்லாவிடமிருந்து எல்லாம் கிடைக்கின்றன. என் சிந்தனையும் செயலும் நல்லவை. எனவே என் மகன்களிடமிருந்து எனக்கு நல்லவையே கிடைக்கும்’.
ஆனால் தற்பெருமை பேசிக்கொண்ட தனையனைவிட தந்தை சொன்னதே பின்னாளில் நடந்தேறியது. ஒளரங்கசீபுக்கான தண்டனை அவருடைய நான்காவது மகன் முஹம்மது அக்பர் மூலம் கிடைத்தது.
1681-ல் இளவரசர் கலகக் குரல் எழுப்பினார். ஒளரங்கசீப் தன் தந்தை ஷாஜஹானுக்கு எழுதிய கடிதங்களில் என்னவிதமான கடுமையும் கசப்பும் காட்டப்பட்டிருந்தனவோ அவை முஹம்மது அக்பர் தன் தந்தை ஒளரங்கசீபுக்கு எழுதிய கடிதங்களிலும் அப்படியே வெளிப்பட்டன. நிர்வாகத் தோல்விக்காக ஒளரங்கசீப் அவருடைய மகனால் கடிந்துகொள்ளப்பட்டார். ‘தந்தையை (ஷாஜஹானை) ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கி, இரண்டு சகோதரர்களையும் கொன்ற பாவங்களுக்கு பரிகாரங்களைச் செய்து வயதான காலத்தில் மார்க்கத் தொழுகைச் சடங்குகளைச் செய்து கழிக்கும்படி’ ஆலோசனை சொன்னார். நீங்களே உங்கள் தந்தைக்கு எதிராகக் கலகம் செய்து ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் நிலையில் என்னைக் கீழ்படிதலற்ற மகன் என்று குறை சொல்ல உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்றும் ஒளரங்கசீபை முஹம்மது அக்பர் கண்டித்தார்.
ஷாஜஹானுக்கும் ஒளரங்கசீபுக்கும் இடையிலான கடிதப் பரிமாற்றம் நாளாக நாளாக வேதனையும் கசப்பும் மிகுந்ததாக ஆனது. ஒரு குழந்தை அழுது அழுது தூங்கிப் போவதுபோல், பேரரசர் புகார் சொல்லிச் சொல்லிக் களைத்துப் போய் இறுதியில் ஒளரங்கசீபுக்கு அடிபணிந்தார்.
இறுதிக்காலத்தில் ஷாஜஹானுக்கு அடி மேல் அடியாக விழுந்தது. முதலில் தாராஷுகோ, அதன் பின் முராத் பக்ஷ்; அதன் பின்னர் சுலைமான் ஷுகோ என ஒவ்வொருவராக ஒளரங்கசீபினால் கொல்லப்பட்டனர். மாக் குலத்தினரின் வனப்பகுதியில் சொல்லொண்ணா துயரங்களுக்கு ஷா ஷுஜாவும் அவருடைய குடும்பத்தினரும் ஆளாக நேர்ந்தது. இப்படித் துன்பங்கள் தொடர்ந்து வந்தபோதிலும் ஷாஜஹான் பொறுமையை இழக்கவில்லை. அல்லா மீதான நன்றியை மறக்கவில்லை. உயிர் பிரியும் வரையில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் அவர் வாழ்ந்தார்.
இஸ்லாமிய மார்க்கமே அவருக்கு ஆறுதலைத் தந்தது. கன்னோஜி பகுதியைச் சேர்ந்த சைய்யது முஹம்மதுதான் அவருடைய கடைசிக் கால துணையாக இருந்தார். அந்த இஸ்லாமிய போதகரே சிறைச்சாலையில் ஷாஜஹானுக்கு புனித வசனங்கள் வாசித்துக் காட்டுபவராகவும் அவருடைய தேவைகளை நிறைவேற்றித் தருபவராகவும் இருந்தார். தினமும் இறை சிந்தனை, தொழுகை, குர்ரான் வாசிப்பு, கடந்த கால மார்க்க வழிகாட்டிகள், இஸ்லாமியத் தலைவர்கள் பற்றிய கதைகளைக் கேட்பது என முழுக்கவும் மார்க்க வழியிலானதாக ஷாஜஹானின் இறுதிக்காலம் இருந்தது.
மார்க்க விஷயங்களில் இருந்து சற்று விலகி பாசத்துடன் இதமளித்தவராக ஷாஜஹானின் மகள் ஜஹான் ஆரா இருந்தார். பிற வாரிசுகள் செய்த அத்தனை கெடுதல்களுக்கும் பிராயச்சித்தம் என்பதுபோல் மகளின் பாசம் மிகுந்த கவனிப்பு அவருக்கு ஆறுதல் அளித்தது. சூஃபி துறவியான மியான் மீரின் சிஷ்யரான ஜஹான் ஆரா ஆக்ரா கோட்டைக்குள் துறவு வாழ்க்கையை வாழ்ந்தார். துயரம் நிறைந்த தன் தந்தையின் கடைசிக் காலத்தில் மகளாகவும் தாயாகவும் அருகில் இருந்து அன்புடன் கவனித்துக் கொண்டார். கூடவே தாரா ஷுகோ, முராத் ஆகியோரின் அநாதைப் பெண் குழந்தைகளையும் தனது அரவணைப்பில் பாதுகாத்துவந்தார்.
இப்படியான இறை நாட்டமுள்ளவர்களின் நல்லுறவில் இருந்த காலத்தில், மறு உலகு நோக்கிய பயணத்துக்கு ஷாஜஹான் தன்னைத் தயார்படுத்திக்கொண்டார். மரண பயம் இன்றித் தன் இறுதிநாட்களைக் கழித்தவருக்கு, இறுதியில் அது வந்து சேர்ந்தபோது துன்பங்களில் இருந்து கிடைத்த விடுதலையாகவே இருந்தது.
9. ஷாஜஹானின் இறுதிக் கால நோயும் மரணமும்
மரணம் சீக்கிரமே வந்துவிடக்கூடாதா என்று ஷாஜஹான் மிகவும் விரும்பினார். ஆனால் மிக மெதுவாக ஜனவரி 1666-ல் தான் வந்து சேர்ந்தது. அந்த மாதம் ஏழாம் தேதியன்று ஷாஜஹானுக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. கூடவே பிற உபாதைகளும் ஏற்படத் தொடங்கின. இப்போது அவருக்கு 74 வயதாகிவிட்டது. அரியணை ஏறியதில் இருந்து மிகக் கடுமையான பல போராட்டங்களைச் சந்தித்துவிட்டார். பனிக்காலத்தின் நடுப்பகுதியின் குளிர் அவருடைய உயிராற்றலை உறையவைக்கத் தொடங்கியிருந்தது.
22, ஜன, திங்கள் முன்னிரவில் இனி பிழைப்பார் என்ற நம்பிக்கை முழுவதுமாகப் போய்விட்டது. மரணம் எப்போது வேண்டுமானாலும் சம்பவிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. அந்த இறுதி தருணத்தை உணர்ந்துகொண்ட ஷாஜஹான், அதுவரை தன் வாழ்க்கையில் நடந்த நன்மைகள் அனைத்துக்கும் அல்லாவுக்கு நன்றி தெரிவித்தார். அல்லாவின் விருப்பப்படியே நடக்கட்டும் என்று ஒப்புக்கொடுத்தார். தனது இறுதிச் சடங்குகள் எப்படி நடக்கவேண்டும் என்று விவரித்தார்.
அக்பராபாதி மஹல், ஃபதேபுரி மஹல் என தன்னுடன் இருந்த மனைவியருக்கும் தன் அன்பு மகள் ஜஹான் ஆராவுக்கும் அந்தப்புர மகளிர் அனைவருக்கும் ஆறுதல் சொன்னார். அவர்கள் அனைவரும் அவருடைய படுக்கையைச் சுற்றி அமர்ந்துகொண்டு அழுதுகொண்டிருந்தனர். தனது மரணத்துக்குப் பின் நிர்கதியாகப் போகிற ஜஹன் ஆராவின் ஒன்று விட்ட சகோதரி பர்ஹானர் பானு மற்றும் பிற பெண்களை நன்கு கவனித்துக்கொள்ளும்படி மகளிடம் கேட்டுக்கொண்டார்.
குடும்பத்தினர், பணியாளர்களிடம் விடைபெற்றுக்கொண்டார். தமது இறுதிப் பரிசுகளையும் நினைவுப் பரிசுகளையும் அவர்களுக்குக் கொடுத்தார். குர்ரான் வாசிக்கும்படிக் கேட்டுக்கொண்டார். புனித வாசனங்கள் வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது அன்புக்குரியவர்கள், பணியாளர்கள் சுற்றி நின்று அழுதுகொண்டிருக்க, ஷாஜஹான், தனது பேரன்புக்குரியவரும் வெகு காலத்துக்கு முன்பே இறந்துவிட்டவருமான மும்தாஜ் மஹலின் நினைவிடத்தைப் பார்த்தபடியே முழு நினைவுடன் இறுதி பிரார்த்தனையை உச்சரித்தார்:
யா அல்லா… இந்த உலகிலும் மறு உலகிலும் என் நிலைமையை நன்மை நிறைந்ததாக ஆக்குவாயாக. நரகத் தீயில் இருந்து என்னைக் காப்பாற்றுவாயாக.
அதன் பின் மெள்ள நிரந்தர அமைதியில் ஆழ்ந்தார். அப்போது மணி 7.15.
எண் கோண மாடத்தில் (முசம்மன் புர்ஜ்- ஆக்ரா கோட்டை) தாஜ்மஹாலை நன்கு பார்க்கும்படியாக அமைந்திருக்கும் இடத்தில் அவர் உயிர் துறந்தார். தனது இறுதி மூச்சு தன் அன்புக்குரிய ராணியுடன் கலக்கவேண்டும் என்று விரும்பி உயிர் துறந்த இடம்.
அந்த மாட மாளிகையில் மாடிக்குச் செல்லும் வாசலில் கீழ்த்தளத்தில் ஷாஜஹான் உயிருடன் இருந்த காலத்தில் எழுப்பப்பட்டிருந்த சுவரை உடைத்து, ஷாஜஹானின் உடம்பை சவப்பெட்டியில் வைத்து எடுத்துவந்தனர். யமுனை நதியில் படகில் அந்த உடம்பைச் சுமந்து சென்று மும்தாஜ் மஹலைப் புதைத்த இடத்துக்கு அருகில் புதைத்தனர்.
ஷாஜஹானின் மரணம், பேரரசில் இருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவர் மீது அவர்கள் உள்ளார்ந்த அன்பு கொண்டிருந்தனர். அவர் செய்த சிறிய தவறுகள் மன்னிக்கப்பட்டன. அவர் செய்த நன்மைகள், நல்ல விஷயங்கள் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்பட்டன.
ஒரு மாதம் கழித்து ஒளரங்கசீப் ஆக்ராவுக்கு வந்து ஜஹான் ஆராவை சந்த்தித்தார். தன் சகோதரிக்கு உரிய மரியாதையும் மதிப்பும் அளித்துவந்திருந்தார். ஷாஜஹானின் இறுதி நாட்களில் அவளுடைய வேண்டுகோள்கள் மகன் மீது அதிருப்தியில் இருந்த தந்தையை மெள்ள அமைதிப்படுத்தியிருந்தன. பல முறை மறுத்த ஷாஜஹான் இறுதியில் ஒளரங்கசீப் செய்த கெடுதல்களையெல்லாம் மன்னித்து எழுதப்பட்ட ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.
தன் தந்தையை ஒளரங்கசீப் நடத்தியவிதமானது சம காலத்தவர்களின் தார்மிகக் கோபத்தை அதிகரித்தது. அந்நாளைய சமூக மரபுகளையும் மீறியதாகவும் இருந்தது.
(தொடரும்)
___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின் தமிழாக்கம்.