Skip to content
Home » ஔரங்கசீப் #17 – அஸ்ஸாம், ஆஃப்கானிஸ்தான் எல்லைப் போர்கள் – 3

ஔரங்கசீப் #17 – அஸ்ஸாம், ஆஃப்கானிஸ்தான் எல்லைப் போர்கள் – 3

ஔரங்கசீப்

11. ஆஃப்கானியர்களின் குணங்கள்; மொகலாயப் பேரரசுடனான தொடர்புகள்.

இந்தியாவிலிருந்து காஷ்மீருக்கும் ஆஃப்கானிஸ்தானுக்கும் இட்டுச் செல்லும் பள்ளத்தாக்குகள், சுற்றியிருக்கும் மலைப்பகுதிகள் ஆகிய இடங்களில் துருக்கிய-இரானிய குலத்தினர் வசித்து வந்தனர். வடக்குப் பக்கம் இருந்தவர்கள் பதான்கள் என்று அழைக்கப்பட்டனர். தெற்கில் இருந்தவர்கள் பலூச்கள் என்று அழைக்கப்பட்டனர். இஸ்லாமுக்கு மதம் மாற்றப்பட்ட பின்னரும் அவர்கள் தமது பழங்குடி மொழி, பழங்குடி அமைப்புகள், காலகாலமாக ஈடுபட்டு வந்த வழிப்பறிக் கொள்ளை ஆகியவற்றைக் கைவிடாமல் பின்பற்றிவந்தனர்.

துணிச்சலும் முரட்டுத்தனமும் மிகுந்த இவர்கள் சமவெளிப்பகுதியில் இருந்த குலங்களைவிட மேலான நிலையில் இருந்தனர். இவர்கள் பெரிதும் குலங்களுக்கும் குடும்பங்களுக்கும் இடையேயான மோதல்களில் ஈடுபட்டுவந்தனர். தமது வரலாறில் என்றுமே பெரிய கட்டுக்கோப்பான அரசு அல்லது நீண்ட காலம் நீடிக்கும்படியான பழங்குடிக் கூட்டமைப்பு என எதையும் உருவாக்கிக் கொண்டிருக்கவில்லை.

ஒரு தேசமாக என்றைக்கும் இருந்திருக்கவில்லை. எப்போதும் தனிக் குலங்களாகவே இருந்தனர். குலங்களுக்கு இடையேயும் ராஜபுத்திர குலங்கள் போல் ஒழுங்கும் கட்டுப்பாடும் கிடையாது. யூசுஃப்ஜய் அல்லது அஃப்ரிதிகள் எல்லாம் தமக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே தமது பழங்குடி தலைவர் சொல்லுக் கட்டுப்பட்டு நடப்பார்கள்; மற்ற நேரங்களில் தமக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களில் தன்னிசையாக ஈடுபட்டனர். எப்போதும் நீடிக்கக்கூடியதும் எப்போதும் சிதையக்கூடியதுமான குடும்ப அமைப்புகளே தாக்குதல் அல்லது தற்காப்புக்கு உறுதுணையாக இருந்தன. பெயரளவிலான பழங்குடித் தலைவர் அந்தக் குலத்தினரின் வேண்டா வெறுப்புடனான ஆதரவுடனே தலைவராக நீடித்தார். உண்மையில் ஆஃப்கானிய சமூகத்தில் குலத்தைவிட குடும்பமே வலுவான அமைப்பு.

இந்த முரட்டுத்தனமான பழங்குடிகளின் குலத் தொழில் வழிப்பறிக் கொள்ளை. மிகவும் தந்திரமும் துணிச்சலும் மிகுந்தவர்கள். அவர்களுடைய மக்கள் தொகை அதிகமாகப் பெருகி வந்தது. அங்கிருந்த மலைக் காடுகளில் போதுமான பயிர் விளைச்சல் சாத்தியமில்லை. அதிலும் விவசாயத்தில் கிடைக்கும் லாபம் மிகவும் குறைவாகவும் நீண்ட கால உழைப்புக்குப் பின்பே கிடைப்பதாகவும் இருந்தது. அக்கம் பக்கம் வசிக்கும் உழைப்பாளர் குலங்களிடமிருந்தும் அந்த வழியில் போகும் செல்வந்தர்கள், வணிகர்கள் ஆகியோரிடமிருந்தும் கொள்ளையடிப்பதில் கிடைக்கும் லாபம் மிக அதிகமாகவும் உடனடியாக கிடைப்பதாகவும் இருந்தன.

இந்தியாவுக்கும் காபூலுக்கும் இடையிலான வழித்தடத்தில் செல்பவர்களிடம் அந்த மலைப்பகுதியில் வாழும் அஃப்ரிதிகள், ஷின்வாரிகள், யூசுஃப்ஜாயிகள், காதக்கள் போன்றோரிடம் சுங்க வரி வசூலித்துக் கொள்ளும் உரிமையை மொகலாயப் பேரரசினர் அங்கீகரித்து அனுமதித்திருந்தனர். அந்தப் பாதையில் பாதுகாப்புடன் சென்று வர வழி செய்ய, அந்தப் பகுதியில் இருப்பவர்களை அடக்க முற்படுவது நல்லதல்ல; அந்தப் பழங்குடியினருக்கு அவ்வப்போது மலிவான கையூட்டுகள், உதவித் தொகைகள் கொடுத்துவிடுவதே நல்ல பலன் தரும் என்ற உண்மையை நீண்ட காலப் போர்களுக்குப் பின்னர் தெரிந்துகொண்டிருந்தனர்.

இருந்தும் இப்படியான அரசாங்க சலுகைத் தொகைகள் எல்லா நேரங்களிலும் பழங்குடிகளை அடங்கி இருக்கவைத்திருக்கவில்லை. அவர்களிடையே திடீரென்று புதிய தலைவர் ஒருவர் முளைப்பார். தான் தான் உண்மையான தலைவன்; தனக்குத்தான் வாரிசுரிமை இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு சில இளைஞர்களுக்குத் தன் செலவில் சில காலம் உணவு, உடைகள் எல்லாம் கொடுத்து ஒரு குழுவை உருவாக்கிக் கொள்வார். திடீரென்று அக்கம் பக்கத்துப் பழங்குடிகளை அல்லது பேரரசப் பகுதிக்குள் நுழைந்து கொள்ளையடிக்க ஆரம்பிப்பார். போதிய செல்வம் கிடைத்துக் கொண்டிருக்கும்வரை இந்தக் கும்பல் ஒற்றுமையாக இருந்து கொள்ளையடித்துவரும். அது கிடைக்காமல் போக ஆரம்பித்ததும் அல்லது கொள்ளையடித்த பணத்தை சமமாகப் பங்கிடவில்லையென்றால், இயல்பிலேயே போர்க்குணம் கொண்ட இந்த ஜனநாயகவாதிகள் உடனே ஒருவருக்கு ஒருவர் எதிராக ஆயுதம் தூக்கிவிடுவார்கள். கும்பல் சிதறிவிடும்.

’நீங்கள் எப்போதும் சுதந்தரமானவர்களாகவே இருக்கவேண்டும். அதே நேரம் உங்களிடையே ஒற்றுமை நிலவவே கூடாது’ என்று யுசுஃப்ஜய்களில் உருவான ஃபகீர் அவர்களுக்கு ஒரு சாபம் போன்ற வரம் கொடுத்தாராம். அதனால்தான் அப்படி என்று ஒரு கதை அவர்கள் மத்தியில் உலவுகிறது.

வலிமையான முகலாயப் பேரரசர், தமது மக்களைப் பாதுகாக்கவும் தனது அதிகாரத்தை நிலைநாட்டவும் முடிவு செய்வார். பழங்குடிகள் வசிக்கும் பகுதிக்குப் பெரும் படைகள் அனுப்பிவைக்கப்படும். மிகக் கடுமையான போருக்குப் பின்னர் பழங்குடியினர் தோற்கடிக்கப்படுவார்கள். அவர்களுடைய வீடுகள் தரைமட்டமாக்கப்படும். ஏராளமான காப்பரண்கள் அங்கு அமைக்கப்பட்டுக் கட்டுக்குள் கொண்டுவரப்படும். விளைநிலங்கள் எல்லாம் சேதப்படுத்தப்படும். ஆஃப்கானியர்களின் எண்ணிக்கை வாளால் வெட்டிக் குறைக்கப்படும். ஆனால், ஒவ்வொரு முறையும் அவர்கள் பலம் குறைந்த காப்பரணை வீழ்த்தித் தம் கட்டுக்குள் கொண்டுசென்றுவிடுவர்கள்.

மொகலாய எல்லையோரப் படைகள் எல்லாம் குளிர் காலத்தில் பின்வாங்கிவிடுவார்கள். அதன் பின் வசந்த காலத்தில் மீண்டும் புதிய சமரச முயற்சிகளை ஆரம்பிக்கவேண்டியிருக்கும். மொகலாயப் படைகளினால் கொல்லப்படுபவர்களைவிட அதிக எண்ணிக்கையிலானவர்கள் சில வருடங்களுக்குள்ளாகவே பிறந்து பெருகிவிடுவார்கள். பசித்த வேட்டைக் குழுக்கள் அக்கம் பக்க மாவட்டங்கள் அல்லது வணிக நெடுந்தொடர் வண்டிகளைக் கொள்ளையடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

மொகலாயப் படைகளுக்கு முதல் பெரிய தோல்வி பிப் 1586-ல் கிடைத்தது. ராஜா பீர்பல்லின் தலைமையில் அனுப்பப்பட்ட 8000 படை வீரர்கள் ஸ்வாத் பள்ளத்தாக்கில் நடைபெற்ற போரில் வீழ்த்தப்பட்டனர். பழங்குடித் தலைவர்களுக்கு சன்மானங்கள் கொடுத்து சமரச உடன்படிக்கை செய்துகொண்டார். அவர்கள் செய்த சட்ட மீறல்களைத் தண்டிக்காமல் விட்டுவிட்டார். ஜஹாங்கீர், ஷாஜஹான் ஆட்சி காலத்திலும் இவையே தொடர்ந்து நடந்தன.

12. 1667-ல் நடைபெற்ற யூசுஃப்ஜய் எழுச்சி

வடக்கு பெஷாவர் சமவெளிகளிலும் ஸ்வாத் மற்றும் பஜாவூர் பள்ளத்தாக்குகளிலும் வசித்து வந்த யூசுஃபாஜய்களிடையே 1667 தொடக்கத்தில் ஒரு பெரிய எழுச்சி ஏற்பட்டது. பாகு என்றழைக்கப்பட்ட வீரர் ஒருவர் பிற குடும்பங்களைச் சேர்ந்தவர்களைத் தன் பின்னால் அணி திரட்டினார். அவர்களுடைய குலத்தில் ராஜ பரம்பரையில் வந்ததாகச் சொல்லும் ஒருவரை மன்னராக முடிசூட்டினார். அவருக்கு முஹம்மது ஷா என்ற பெயரும் சூட்டப்பட்டது. அந்த மன்னருக்கு அந்த ஊரில் பெரும் செல்வாக்குடன் இருந்த முல்லா சாலாக் என்பவரின் மூலம் மத அங்கீகாரம் பெற்றுக் கொடுத்தார். இந்த மன்னருடைய வாஸிராக (குறு நில மன்னராக) தன்னை நியமித்துக்கொண்டு (உண்மையில் முழு அதிகாரமும் பாகுவிடமே இருந்தது) 5000 பழங்குடியினரைக் கொண்ட ஒரு படையை உருவாக்கிக் கொண்டார்.

ஹஸாரா மாவட்டத்தில் அட்டோக் பகுதிக்கு மேலே இருந்த சிந்து நதியைக் கடந்து அதன் கிழக்குக் கரைச் சமவெளியில் இருந்த பாகில் என்ற பகுதியின் மீது படையெடுத்தார். அதன் வழியாகத்தான் காஷ்மீருக்கான பாதை சென்றது. ஷத்மன் என்ற உள்ளூர் பழங்குடித் தலைவரின் கோட்டையைக் கைப்பற்றி அங்கிருந்த விவசாயிகளிடமிருந்து வரி, குத்தகைப் பணம் வசூலிக்க ஆரம்பித்தார். தினம் தினமும் யூசுஃப்ஜய் வீரர்கள் பலர் வந்த வண்ணம் இருந்தனர். மொகலாய எல்லைப் படைகள் தொடர் தாக்குதலுக்கு ஆளாகின. பிற யூசுஃப்ஜய் குழுக்களும் மொகலாயப் பேரரசின் மேற்கு பெஷாவர் மற்றும் அடக் மாவட்டங்களில் கொள்ளையடிப்புகளில் ஈடுபட ஆரம்பித்தனர்.

பேரரசர் தற்காப்பு சார்ந்து கடுமையான முயற்சிகளை எடுத்தார். மூன்று படைகளை அனுப்பி ஊடுருவல்காரர்களின் நிலத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றார். சிந்து நதியின் ஹாருன் கிளை வழியாக தெற்கில் இருந்து மொகலாயப் படை வரும் என்பதை யூகித்து அங்கு அவர்களைத் தடுக்க எதிரிகள் கூடி நின்றனர். 1,ஏப், 1667-ல் அட்டோக் பகுதியின் தளபதி கமீல் கான் அவர்களை அந்த இடத்தில் தாக்கினார். தீவிரமான போருக்குப் பின்னர், யூசுஃப்ஜய் பழங்குடிகள் பின்வாங்கினர். சுமார் 2000 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம்பட்டனர். பல நதியில் மூழ்கினர். சிந்து நதியின் இந்தப் பக்கம் இருந்த மொகலாயப் பகுதி எதிரிகளிடமிருந்து மீட்கப்பட்டது.

மே மாதம் ஆஃப்கானிஸ்தானில் இருந்து ஒரு பெரிய படையை எடுத்துக்கொண்டு ஷம்ஷீர்கான் முழு அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சிந்து நதியைக் கடந்து யூசுஃப்ஜய் பகுதிக்குள் நுழைந்தார். அவர்களுடனான பல போர்களில் ஈடுபட்ட பல வெற்றிகளும் பெற்றார். ஒஹிந்து பகுதியில் முகாமிட்டிருந்தவர் யூசுஃப்ஜய்கள் பயிர் செய்யும் சமவெளிப்பகுதியான மந்தாவூர் பகுதியைக் கைப்பற்றினார். அங்கிருந்த விளைநிலங்கள், பண்ணைகள், பண்ணைவீடுகள் அனைத்தையும் அழித்தார்.

4, ஜூனில் ஓஹிந்து பகுதியில் இருந்து படையெடுத்துச் சென்று பாகுவை அவர் அப்போது இருந்த இடத்தில் தாக்க ஆரம்பித்தார். மிகவும் பாதகமான சூழலில் நடைபெற்ற தீவிர போருக்குப் பின் எதிரிகளின் பல கிராமங்கள் கைப்பற்றப்பட்டன. பல வீடுகள் தீவைக்கப்பட்டன. அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. எந்தவொரு விளை நிலமும் பயிரும் விட்டுவைக்கப்படவில்லை.

பஞ்சஷீர் நதிக்கரையில் மான்சூர் பகுதியில் எதிரிகள் உருவாக்கியிருந்த பள்ளங்கள், தடுப்பு அரண்கள் எல்லாம் தகர்க்கப்பட்டன (28, ஜூன், 1667). அந்த பிராந்தியத்தின் மிகப் பெரிய தலைவரான முஹம்மது அமின் கான், ஆகஸ்ட் மாத இறுதியில் படையுடன் வந்து ஷம்ஷீர் கானிடமிருந்து அதிகாரத்தைத் தன்வசம் எடுத்துக்கொண்டார். ஷாபாஸ்கரிக்குப் பக்கத்தில் இருந்த கிராங்கள் மற்றும் கராம்ஹர் பள்ளத்தாக்கு ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. ஸ்வாத் பள்ளத்தாக்கில் இருந்த ஹிஜாஸ் கிராமம் அக்டோபர் மாதம் அழிக்கப்பட்டது. யுசுஃப்ஜய்கள் இந்த கடுமையான தாக்குதல்களினால் கொஞ்சம் அடக்கிவைக்கப்பட்டதுபோல் தோன்றியது. 1672 வரை அந்த எல்லையோரப் பழங்குடிகளிடமிருந்து பெரிய பிரச்னை எதுவும் அதன் பின் எழவில்லை.

13. 1672-ல் அஃப்ரிதி மற்றும் கதக் பழங்குடிகளின் கலகம்; மொகலாயத் தளபதிகளுக்கு நேர்ந்த இழப்புகள்.

1672-ல் ஜலாலாபாத்தின் ஃபெளஜ்தார் செய்த விவேகமற்ற செயல்களினால் கைபர் கணவாய் பகுதியில் இருந்த பழங்குடியினரிடையே அதிருப்தி உருவானது. அங்கிருந்த அஃப்ரிதி குலத்தினர், அக்மல் கான் தலைமையில் கிளர்ந்தெழுந்தனர். பிறவி வீரரான அவர் தன்னை சுல்தானாக நியமித்துக்கொண்டு தன் பெயரில் நாணயங்கள் அச்சடிக்கவும் ஆரம்பித்தார். மொகலாயர்களுடன் போர் அறிவித்தார். அனைத்து பதான்களும் இந்த தேசியப் போராட்டத்தில் பங்கெடுக்கவேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். கைபர் கணவாய் வழியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.

1672 வசந்த காலத்தில், ஆஃப்கானிஸ்தானின் வாஸிராகியிருந்த முஹம்மது அமீன் கான் பெஷாவரிலிருந்து காபூலுக்குத் தன் படை, குடும்பத்தினர், சொத்துகள் ஆகியவற்றுடன் புறப்பட்டார். ஜம்ருத் பகுதிக்கு வந்த பின்னரே ஆஃப்கானியர்கள் கைபர் கணவாய் வழியைத் தடுத்துவிட்டிருப்பது அவருக்குத் தெரியவந்தது. பண மற்றும் அதிகாரபோதை தலைக்கு ஏறியிருந்த அவர் ஆஃப்கானியர்களின் வலிமையைக் குறைத்து எடைபோட்டார். கண்மூடித்தனமாகத் தாக்குதலில் ஈடுபட்டு அழிவைத் தேடிக் கொண்டார்.

21, ஏப்ரலில் அலி மஸ்ஜிதுக்குப் புறப்பட்டவர் தடுத்து நிறுத்தப்பட்டார். இரவில் அஃப்ரிதிகள் மலைப் பகுதியில் இருந்து இறங்கி வந்து நீரோடையில் இருந்து அவருடைய படை மற்றும் பரிவாரத்தைத் துண்டித்தனர். அவர்களுக்கு நீர் கிடைக்கும் வழி முடக்கப்பட்டதால், மறு நாள் படையினரும், யானை, குதிரை போன்ற விலங்குகளும் சூரிய வெப்பத்தினாலும் தாகத்தினாலும் தவிக்க ஆரம்பித்தன. ஆஃப்கானியர்கள் இடைவிடாமல் எரியம்புகள், துப்பாக்கிகள் கொண்டு மொகலாயப் படையைத் தாக்கத் தொடங்கினர். 3400 அடியில் மிக உயர்ந்த தார்தாரா சிகரத்தில் இருந்துகொண்டு பெரிய பாறாங்கற்களை, கீழே குறுகிய கணவாய் பகுதியில் குழுமியிருந்த மொகலாயப் படையினர் மீது உருட்டிவிட்டனர்.

மொகலாயப் படைகளின் தலைவர்கள் விரைவிலேயே கொல்லப்பட்டுவிட்டனர். படையின் ஒழுங்கு சிதைந்தது. குதிரைகள், யானைகள், வீரர்கள் எல்லாம் குழப்பத்தில் அங்குமிங்கும் ஓட ஆரம்பித்தனர். மலை உச்சியில் இருந்து இப்போது ஆஃப்கனிய வீரர்கள் வேகமாக பாய்ந்து இறங்கிவந்து கண்ணில் பட்டவர்களையெலாம் வெட்டி வீழ்த்தினர். மொகலாயப் படை முழுவதுமாக அழிக்கப்பட்டது. அங்கிருந்த பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டன.

முகம்மது அமீன் கானும் சில உயர் அதிகாரிகளும் அங்கிருந்து எப்படியோ உயிரை மட்டும் காப்பாற்றியபடி பெஷாவருக்குச் சென்று சேர்ந்தனர். எஞ்சிய அனைத்தும் பறிபோயிருந்தன. போரில் பத்தாயிரம் வீரர்கள் எதிரிகளின் வாளுக்கு இரையாகியிருந்தனர். இரண்டு கோடிக்கு மேல் பணமும் பொருட்களும் பறிபோனது. 20 ஆயிரம் ஆண்கள், பெண்கள் சிறைப்பிடிக்கப்பட்டு மத்திய ஆசியாவில் அடிமைச்சந்தைக்கு அனுப்பப்பட்டனர். வைஸ்ராயின் அம்மா, மனைவி, மகள் அனைவரும் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தனர். மிக அதிக பிணைத்தொகை தரப்பட்ட பின்னரே அவர்களை விடுவிக்க முடிந்தது. இந்த ஒற்றை வெற்றி அஃப்ரிதி படைத் தலைவரின் புகழையும் வளங்களையும் வெகுவாக அதிகரித்துவிட்டது. இந்த வெற்றிகரமான கொள்ளயடிப்பு பற்றிய செய்திகள் மலைப்பகுதி எங்கும் எதிரொலித்து அவருடைய படையில் சேர ஏராளமானவர்கள் விரைந்து முன்வந்தனர்.

பெஷாவர் மாவட்டம், கோஹாத் மற்றும் பானு பகுதிகளில் வசிக்கும் காதக்குகள் பெரிதும் போர்க்குணம் கொண்ட பழங்குடிகள். யூசுஃப்ஜய் பழங்குடிகளின் பரம்பரை பரம விரோதிகள். இந்த இரண்டு பழங்குடிகளின் எல்லைக்கோடானது பெஷாவர் மாவட்டத்தின் மையப்பகுதியில் இருந்தது. காதக்குகளின் தலைவர் ஒரு மாபெரும் கவிஞர். பேரரச ஆதிக்கத்துக்கு எதிராகத் தனது மக்களிடையே மிகப் பெரிய எழுச்சியை உருவாக்கியிருந்தார். தந்திரமாகக் கைது செய்யப்பட்டு ஹிந்துஸ்தானில் மூன்று ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். 1667-ல் யூசுஃப்ஜய் பகுதியின் மீது மொகலாயப் படை தாக்குதல் நடத்தியபோது இவர் அந்தப் படையில் சேர்ந்துகொண்டார். ஆனால் இப்போது அக்மல் கானுடன் இணைந்துகொண்டு தேசிய உணர்வுடன் தன் பழங்குடி மக்களுக்கு வாளைவிடக் கூரான தன் கவிதைகளினால் உத்வேகமூட்டியபடி மொகலாயர்களுக்கு எதிரான போரில் பெரு வெற்றி பெற்றார்.

பேரரசுக்கு உண்மையிலேயே பெரும் ஆபத்து வந்திருந்தது. இந்த எழுச்சி மிகப் பெரிய தேசிய எழுச்சியாக இருந்தது. காந்தஹார் தொடங்கி அடக் வரையான முழு பதான் பகுதியும் கிளர்ந்து எழுந்தது. அந்தப் பகுதியில் இருந்து பல பழங்குடி வீரர்கள் மொகலாயப் படையில் ஹிந்துஸ்தான், தக்காணம் எனப் பல படைகளில் போர்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு பேரரசப் படையினரின் போர்த் திறமை, வியூகங்கள் எல்லாம் நன்கு தெரியும். இரு தரப்புப் படையினரிடமும் ஒரேவிதமான ஆயுதங்களே இருந்தன. ஒரே ஒரு வித்தியாசம். ஆஃப்கானியர்களிடம் கன ரக பீரங்கிகள் இருந்திருக்கவில்லை. அவர்கள் பழங்குடிப் போர்வீரர்கள். அவர்களுக்கு சாதகமான மலைப்பகுதிகளில் இருந்து போரிட்டனர். இந்திய மொகலாயப் படைகளுக்கு மலைப்பகுதிப் போர்கள் என்றாலே பயம்தான். அங்கு நிலவும் பனி, உனவுத் தட்டுப்பாடு இவையெல்லாம் அவர்களுக்கு மிகுந்த சலிப்பைத் தந்திருந்தன.

இந்தத் தோல்வி பற்றிக் கேள்விப்பட்டதும் பேரரசர், ஆஃப்கானியப் படையெடுப்பிலிருந்து பெஷாவரைப் பாதுகாக்கத் தீவிர முயற்சிகள் எடுத்தார். முஹம்மது அமீன் கானைப் பதவியில் இருந்து இறக்கினார். ஆஃப்கான் பகுதியில் மூன்று முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்தவரும் ஆஃப்கானியர்களைக் கையாள்வதில் நல்ல வெற்றி பெற்றிருந்தவருமான முஹபத் கானை தக்காணத்தில் இருந்து வரச்சொல்லி காபூலின் வைஸ்ராயாக நான்காவது முறை நியமித்து அனுப்பிவைத்தார். ஆனால், முந்தைய வைஸ்ராய்க்கு நேர்ந்த கதியைப் பார்த்ததும் புதிய வைஸ்ராய், தன் நடவடிக்கைகளைச் சுருக்கிக்கொண்டார். வெற்றி மிதப்பில் இருந்த ஆஃகானியர்கள் மீது எந்தவொரு நேரடியான தாக்குதல் நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பரஸ்பரம் யாரும் மற்றவருக்கு எந்த கெடுதலும் செய்யக்கூடாது என்று அவர்களுடன் ரகசிய உடன்படிக்கை செய்துகொண்டார்.

அடுத்த புது வசந்த காலத்தில் கரப்பா கணவாய் வழியாக காபூலுக்குச் சென்றவர், ஆஃப்கனியர்களுக்கு கேட்ட பணம் கொடுத்து போர் தவிர்ப்பு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், கைபர் கணவாய் பாதையானது திறந்துவிடப்படவில்லை. இதனால் பெரிதும் அதிருப்தியுற்ற பேரரசர் ஷுஜாயத் கான் தலைமையில் பெரிய படை ஒன்றைப் போதிய ஆயுதங்களுடன் அனுப்பிவைத்தார் (14, நவ, 1673). ஆஃப்கனியர்களை வழிக்குக் கொண்டுவர ஜஸ்வந்த் சிங் தலைமையிலும் ஒரு படையைத் துணைக்கு அனுப்பிவைத்தார்.

ஷுஜாயத் கான் காபூலுக்குள் படையுடன் நுழைய முற்பட்டார். கந்தாப் பகுதியைக் கடந்தபின் கரப்பா கணவாயின் கோலால் மலை ஏற்றப் பாதையில் ஏறினார் (21, பிப்). அன்றிரவு நல்ல மழையும் பனிப் பொழிவும் இருந்தது. மொகலாயப் படையில் இருந்தவர்கள் அனைவரும் குளிரினாலும் உடல் நனைந்ததனாலும் மரணத்தின் விளிம்புக்குச் சென்றுவிட்டனர். இரு மலை உச்சியில் நின்று கொண்டிருந்த ஆஃப்கானியர்கள் எதிரிகளுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். பேரரசப் படையினர் குளிரினால் உறைந்துபோயிருந்தனர்.

அதிகாலையில் ஆஃப்கானியர்கள் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தாக்க ஆரம்பித்தனர். ஷுஜாயத் கான் தளபதிப் பொறுப்பை மறந்தவர்போல் களத்தில் காலாட்படை வீரரைப்போல் இறங்கிச் சென்று மோதினார். முன்னணி படை வீரராகச் சென்று உயிர் இழக்கவும் செய்தார். தலைவரை இழந்த படைகள் இப்போது சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டன. ஜஸ்வந்த் மூலம் சம்யோஜிதமாக அனுப்பிவைக்கப்பட்ட 500 ரத்தோர் வீரர்கள் துப்பாக்கி, பீரங்கிகளுடன் வந்து எதிரிப் படையைச் சிதறடித்தனர். உயிருடன் இருந்த மொகலாயப் படையினரைப் பத்திரமாக முகாமுக்கு அழைத்து வந்தனர். 300 ராஜபுத்திர வீரர்கள் வீரமாகப் போராடி உயிர் துறந்திருந்தனர். இதற்கு முன் ஷுஜாயத்தின் படையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இறந்திருந்தனர்.

பேரரசின் பெருமையை மீட்டெடுக்க ஒளரங்கசீப் ராவல் பிண்டிக்கும் பெஷாவருக்கும் நடுவே இருந்த ஹஸன் அப்தல் பகுதிக்கு 26, ஜூன், 1674-ல் படையுடன் சென்றார். இரண்டரை வருடங்கள் அங்கு தங்கியிருந்த படைகளை வழிநடத்தினார். மிகப் பிரமாண்டமான படை ஏராளமான ஆயுதங்களுடன் அவருடன் சென்றிருந்தன. எதிரிகளை வீழ்த்த வலிமையான முழு ஆயுதங்கள் தாங்கிய பல படையணிகள் அனுப்பிவைக்கப்பட்டன. துருக்கிய தளபதி அகார் கான் ஆஃப்கானியர்களுடன் போரிடுவதில் புகழ் பெற்றவர். தக்காணத்தில் இருந்த அவரை உடனே போர்முனைக்கு வரும்படியும் கைபர் கணவாய் பாதையை மீட்டுத் தரும்படியும் ஜூலையில் ஆணை பிறப்பித்தார். ஷுஜாயத் கானின் வீழ்ச்சிக்கு ரகசியமாக வழிவகுத்திருப்பார் என்ற சந்தேகத்தின் பேரில் முஹபத் கானை வைஸ்ராய் பதவியில் இருந்து கீழிறக்கினார்.

ஒளரங்கசீப் இங்கு வந்து சேர்ந்ததையடுத்து போர் நடவடிக்கைகள் மட்டுமல்லாமல் ராஜ தந்திர நடவடிக்கைகளும் பலன் தரத் தொடங்கின. பரிசுப் பொருட்கள், ஊக்கத் தொகைகள், ஜாகிர் உரிமைகள், மொகலாயப் படைகளில் பழங்குடித் தலைவருக்கு உயரிய பொறுப்பு என பலவழிகளில் பல்வேறு பழங்குடி குலங்களின் ஆதரவை ஒளரங்கசீப் விரைவில் பெற்றார். வழிக்கு வராதவர்களின் பகுதிகளுக்குள் பெஷாவரில் இருந்து படைகள் அனுப்பிவைக்கப்பட்டன. விரைவிலேயே கோரை, கில்ஜாய், ஷிரானி, யூசுஃப்ஜய் போன்ற குலங்கள் தோற்கடிக்கப்பட்டு அவர்களுடைய கிராமங்களில் இருந்து விரட்டப்பட்டனர். தரியா கான் அஃப்ரிதியின் ஆதரவாளர்கள் தமது தவறுகள் எல்லாம் மன்னிக்கப்படுமென்றால், தானே சுல்தான் என்று போலியாக முடிசூடிக் கொண்ட அக்மல் கானின் தலையை வெட்டிக் கொண்டுவர சம்மதித்தனர் (ஆகஸ்ட் முடிவில்).

இதனிடையில் அகார் கான் மூலம் பல அற்புதமான செயல்கள் பெஷாவருக்கு மேற்குப் பகுதியில் செய்யப்பட்டன. முதலாவதாக மொஹ்மண்ட்கள் மற்றும் அவர்களுடைய கூட்டாளிகள் சேர்ந்து நடத்திய இரவுத் தாக்குதலை முறியடித்தார். பதில் தாக்குதல் மேற்கொண்டு அவர்களில் 300 பேரைக் கொன்றார். அவர்களுடைய வீடுகளைச் சூறையாடினார். 2000 பேரைச் சிறைப்பிடித்ததோடு ஏராளமான சொத்தைக் கொள்ளையடித்துவந்தார். கைபர் கணவாய் வழியத் திறந்துவிட முயற்சிகள் எடுத்தார். ஆனால் அலி மஸ்ஜித் பகுதிக்கு அருகில் நடந்த மிகக் கடுமையான போருக்குப் பின்னர், இரு தரப்பிலும் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதையடுத்து அந்த முயற்சிகைவிடப்பட்டது. இந்தப் போரில் அகார் கானுக்கும் பலத்த காயம்பட்டிருந்தது. அகார் கானின் படையில் இருந்த ஹிந்துஸ்தானிய தளபதிகள் உட்பட பல முஸ்லிம் தளபதிகளின் பொறாமை காரணமாக துருக்கியரான அவருக்கும் அவருடைய துருக்கியப் படைவீரர்களுக்கும் பல நெருக்கடிகள் உருவாகின.

அடுத்ததாக, 5000 ராஜபுத்திர வீரர்கள், ஆஃப்கானிய நட்பு சக்திகள் ஆகியோருடன் நங்க்ராஹர் பகுதியைக் கைப்பற்றி கணவாய் வழிப்பாதையை திறந்துவிட முயற்சி செய்தார். ஜகத் தல் கணவாயைக் கைப்பற்றியிருந்த கில்ஜாயிஸ்களைத் தோற்கடித்து அங்கிருந்து விரட்டியடித்தார். மொகலாயத் தளபதிகளிலேயே இவர் மட்டுமே ஆஃப்கன் எல்லைப் பழங்குடிகளிடையே கணிசமான வெற்றியைப் பெற்றிருந்தார். ஆஃப்கானியத் தாய்மார்களிடமும் அவருடைய செல்வாக்கு பெருகியிருந்தது! படு பயங்கரமாகப் போரிடும் அகார் கானின் பெயரைச் சொல்லி மிரட்டித்தான் தமது குழந்தைகளைத் தூங்கவைப்பார்களாம்.

1675 வசந்த காலத்தில் ஃபிதாய் கான் காபூலில் இருந்து பெஷாவருக்குத் திரும்பி வந்தபோது ஆஃப்கானியர்கள் ஜகத் தல் கணவாய் பகுதியில் வைத்துத் தாக்கினர். அவருடைய படை தோற்கடிக்கப்பட்டது. அதன் அராபியத் தளபதி கொல்லப்பட்டார். ஏராளமான யானைகள், ஆயுதங்கள், விலை உயர்ந்த பொருட்கள், பெண்கள் அனைவரையும் எதிரிகள் கொள்ளையடித்துவிட்டனர். ஆனால் வைஸ்ராய் துணிச்சலாகத் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் போராடினார். கந்தமாக் பகுதியில் இருந்த அகார் கானுக்கு இந்தத் தகவல் கிடைத்ததும் இவர்களைக் காப்பாற்ற படையுடன் விரைந்தார். மலை உச்சியில் இருந்து தாக்குதல் நடத்தி எதிரிகளை விரட்டி ஜகத் தல் கணவாயையும் கைப்பற்றினார்.

எனினும் ஜூன் ஆரம்பத்தில் பேரரசுப் படைக்கு மிகப் பெரிய தோல்வி ஏற்பட்டது. மொகரம் கான் ஆஃப்கானியர்களுக்கு எதிராக பஜாவூர் பகுதியில் காபுஷ் மலை ஏற்றப் பாதைக்கு அருகில் (கோடால்) திடீர் தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றுவிடலாம் என்று தவறாக நினைத்துவிட்டார். அது உண்மையில் எதிரிகள் விரித்த வலை. அது தெரியாமல் தாக்குதலில் இறங்கிய மொகரம் கான் மறைவிலிருந்து வந்த எதிரிகளினால் மூர்க்கமாகத் தாக்கி வீழ்த்தப்பட்டார். உடனே ஆஃப்கானிய எல்லையில் இருந்த மொகலாய ப்படைகள் அனைத்தும் விரைந்து பலப்படுத்தப்பட்டன.

ஆகஸ்ட் மாத இறுதியில் இரண்டு பின்னடைவுச் செய்திகள் கிடைத்தன. சிறிய அளவிலானவைதான். ஜகத் தல் பகுதியின் தானாதாரான ஹிஸ்பர் கான், அவருடைய மகன், பிற மொகலாயப் படைவீரர்கள் சிலர் கொல்லப்பட்டனர். பரங்கப் மற்றும் சுர்கப் பகுதிகளின் தானாதாரான அப்துல்லா எதிரிகளால் தோற்கடிக்கப்பட்டு அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டார். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் பதான் பகுதியில் பல இடங்களில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மொகலாயப் படை வலுவாகவே நிலைகொண்டிருந்தது. 1675 முடிவு வாக்கில் நிலைமை நன்கு மேம்பட்டது. அதைத் தொடர்ந்து ஒளரங்கசீப் ஹஸன் அப்தல் பகுதியில் இருந்து புறப்பட்டு தில்லி திரும்பினார்.

14. அமீர் கானின் திறமையான நிர்வாகத்தின் கீழ் ஆஃப்கானிஸ்தான் 1678-98

காலியூலுல்லாவின் மகனான மீர் கான் ஏற்கெனவே ஷாபாஸ்கரி பகுதியைச் சேர்ந்த யூசுஃப்ஜய்களையும் பீஹாரில் கிளர்ந்தெழுந்த இரண்டு ஆஃப்கன் தலைவர்களையும் திறம்பட ஒடுக்கியதன் மூலம் தன் திறமையை நிரூபித்திருந்தார். 1675-ல் அவருக்கு அமீர் கான் என்ற பட்டம் தரப்பட்டது. 19, மார்ச் 1677-ல் காபூலின் வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார். 8, ஜூன், 1678-ல் தனது அரண்மனைக்குச் சென்று சேர்ந்தவர் ஆஃப்கானிஸ்தானை, இருபது ஆண்டுகள் கழித்து அவருடைய மரணம் வரையில் திறம்பட நிர்வகித்தார். ஆஃப்கானியர்களின் மனங்களை வென்றெடுக்க ஆர்வம் காட்டினார். அவர்களுடன் சமூக உறவுகளை மேற்கொண்டார். பழங்குடித் தலைவர்கள் தமது கூச்சம், பண்பற்ற நடைமுறைகள் ஆகியவற்றைக் கைவிட்டனர். எந்தவித சந்தேகமும் இன்றி இவருடன் நன்கு பழக ஆரம்பித்தனர். இவரைத் தமது நண்பராக மதித்ததோடு பழங்குடி விவகாரங்களில்கூட இவரிடம் ஆலோசனைகள் கேட்கும் அளவுக்கு நெருங்கிவந்தனர்.

அமீர் கானின் திறமையான நிர்வாகத்தின் கீழ் பழங்குடிகள் மொகலாயப் பேரரசுக்கு எந்தவொரு நெருக்கடியையும் தரவில்லை. தமக்குள்ளான மோதல்களில் மட்டுமே அவர்கள் கவனம் திரும்பியது. ஒருமுறை அக்மல் கானின் ஆதரவாளர்களிடையே அவர்கள் வென்ற பகுதிகளைப் பகிர்ந்துகொடுக்கச் சொல்லி ரகசியமாகத் தூண்டிவிட்டு அக்மல் கான் தலைமையிலான பழங்குடிக் கூட்டமைப்பை உடைத்தார்.

மிகச் சிறிய பகுதியை இத்தனை பேருக்கு எப்படிப் பிரித்துக் கொடுக்க என்று அக்மல் கான் கேட்டார். இது பழங்குடியினரை அதிருப்தியடையச் செய்தது. இதனால் அவர்கள் அக்மல் கானின் தலைமையை விட்டு விலகித் தமது சொந்த மலைக் கிராமங்களுக்குத் திரும்ப முடிவெடுத்தனர். வேறு வழியின்றி அக்மல் கான் சொற்பப் பகுதியைப் பிரித்துக் கொடுக்கவேண்டிவந்தது. ஆனால், இயல்பாகவே அவர் தனது குலத்தினர் மீது கூடுதல் அக்கறையை வெளிப்படுத்தியதால் அவருடைய பிற ஆதரவாளர்கள் பிரிந்துசென்றுவிட்டனர். அமீர் கானின் நிர்வாக வெற்றிக்குப் பெரும்பாலும் புத்திசாலித்தனமும் சமயோசிதமும் மிகுந்த மனைவி ஸாஹிப்ஜியே (அலி மர்தன் கானின் மகள்) காரணமாக இருந்தார்.

பழங்குடியினருக்கு சன்மானங்கள் தருதல், ஒரு குலத்தை இன்னொன்றுடன் மோதவிடுதல், ஒளரங்கசீப் பயன்படுத்திய உருவகத்தின்படிச் சொல்வதென்றால் ’இரண்டு எலும்புகளை ஒரே நேரத்தில் தாக்கி உடைத்தல்’ என்ற வழியைப் பின்பற்றினார். பேரரசப் பகுதிகளை அதன் பின் எல்லைக்கு அப்பால் இருந்து யாரும் ஆக்கிரமிக்கவில்லை. மலைப் பழங்குடித் தலைவர்களுக்கு முறையாக பணம் கொடுத்ததன் மூலம் கைபர் கணவாய் பாதையில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஆனது. அக்மல் கானுடைய ஆதரவை அமீர் கானின் ராஜ தந்திரம் வலுவிழக்கச் செய்துவிட்டது. தன்னைத் தானே அரசராக நியமித்துக் கொண்ட அவர் இறந்ததும் அஃப்ரிதிகள் பேரரசுடன் சமரச ஒப்பந்தத்துக்கு வந்துவிட்டனர்.

இறந்த அமீர் கானின் நிர்வாக வழிமுறைகள், அவர் எப்படி ஒரு நியாயமான ஆட்சியாளராக இருந்திருக்கிறார்; நடைமுறை அறிவு அவருக்கு எவ்வளவு இருந்தது; அனைவரையும் எப்படி சமயோஜிதமாகக் கையாண்டார்; அந்தப் பிராந்தியத்துக்குக் கொடுத்த அரசுப் பணத்தை அவர் எப்படியெல்லாம் சேமித்தார்; கணவாய் பாதைகளில் பாதுகாப்புடன் பயணம் நடக்க அவர் என்னவெல்லாம் செய்தார்; மலை வாழ் பழங்குடிகளை மொகலாயப் படையில் சேர்த்து அவர்களை எப்ப்டியெல்லாம் நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டார்; பேரரசின் கஜானா, சொந்தக் காசு, முறைகேடாகச் சேகரித்த பணம் இவற்றில் இருந்து பல்வேறு குலத் தலைவர்களுக்கு கையூட்டுகள் கொடுத்தவிதம் இவை பற்றியெல்லாம் ஒளரங்கசீப் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். 25, அக், 1681-ல் அமீர் கானிடமிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. அதில், ’வணிகப் பாதைகளைப் பாதுகாக்கும் நோக்கில் ஆஃப்கானியர்களுக்கு மொகலாயப் பேரரசு ஆறு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறது. அதில் ஒன்றரை லட்சம் மட்டுமே செலவழித்து அந்தப் பணியை முடித்துவிட்டேன். மிச்சத்தை அரசுக்கு சேமித்துக் கொடுத்திருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இருந்தும் பல ஆண்டுகள் அந்தப் பகுதியில் எதற்கும் வளைந்து கொடுக்காத குஷ் ஹால் கான் கதாக் மூலமாக நெருக்கடி நீடித்துவந்தது. அவருடைய மகன் அஷ்ரஃப், பங்காஷ் பழங்குடிகள், யூசுஃப்ஜய் பழங்குடிகள் ஆகியோர் மொகலாயப் படையில் சேர்ந்துகொண்டு அவரை எதிர்த்தனர். எனினும் முதுமையினாலோ தனது செல்வாக்கு குறைந்துவருவதனாலோ மொகலாயப் பேரரசு மீது அவர் கொண்டிருந்த கசப்புணர்வும் விடாப்பிடியும் துளியும் குறையவே இல்லை. பதான் பழங்குடிகளின் விடுதலைப் போரை இறுதிவரை தீவிரமாக முன்னெடுத்துவந்தார். இறுதியில் அவருடைய மகன் செய்த துரோகத்தின் மூலமே எதிரிகளிடம் பிடித்துக்கொடுக்கப்பட்டார். சொந்த நிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர் பகைவர்களின் கோட்டையில் சிறை வைக்கப்பட்டார். அங்கு இருந்த போதிலும், ‘ஒளரங்கசீபின் இதயத்தில் ஆழமான புண்ணை உருவாக்கியவன்; கைபர் கணவாய் பாதைக்கு மொகலாயர்கள் மிகப் பெரிய விலையைக் கொடுக்கவைத்தேன்’ என்று இறுமாப்புடன் சொன்னார்.

ஆஃப்கானியர்களுடனான போர் இப்படி தொடர்ந்து நீடித்துவந்ததால், ராஜபுத்திரர்களுடனான போரில் அவர்களில் இருந்து யாரையும் சேர்த்துக்கொள்ளவில்லை. வட மேற்கு எல்லைப் பகுதியில் மொகலாயப் படைகளுக்காக தக்காணத்தில் இருந்த படைகள், வளங்களை எல்லாம் செலவிட வேண்டியிருந்ததால் இது சிவாஜிக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது.

எதிரியின் படை பலத்தை இப்படி திருப்பிவிட வேண்டியிருந்த நிலையை மராட்டிய தலைவர் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். டிசம்பர் 1676க்குப் பின் வந்த 15 மாதங்களுக்குள் கோல்கொண்டா தொடங்கி கர்நாடகம் வரையிலும் மைசூர், பிஜப்பூர் தொடங்கி ராஜ்கர் வரையிலும் தொடர் வெற்றிகளைக் குவித்தார். அதுவே அவருடைய வாழ்வின் மாபெரும் வெற்றியாக அமைந்தது. அப்ஃரிதிகள் மற்றும் கதாக்களினால்தான் இந்த வெற்றி அவருக்கு சாத்தியமானது.

(தொடரும்)

___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts