Skip to content
Home » ஔரங்கசீப் #18 – மதக் கொள்கைகளும் ஹிந்துக்களின் எதிர்வினைகளும் – 1

ஔரங்கசீப் #18 – மதக் கொள்கைகளும் ஹிந்துக்களின் எதிர்வினைகளும் – 1

ஔரங்கசீப்

1. இஸ்லாமிய அரசு – கொள்கையும் குணமும்

இஸ்லாமிய அரசு என்பது தோற்றம் முதலே மத அடிப்படை கொண்டதுதான். அதன் உண்மையான அரசர் அல்லாவே. மண்ணுலக சுல்தான்கள் எல்லாம் அல்லாவின் எண்ணங்களை நடைமுறைப்படுத்தவேண்டிய பிரதிநிதிகளே. அரசாங்க அதிகாரிகள், அமைப்புகள் எல்லாம் அல்லாவின் மார்க்கத்தைப் பரப்புவதற்காக உருவானவையே. இப்படியான ஓர் அரசில் கடவுள் நம்பிக்கை இன்மை என்பது மார்க்க விரோதமானதுதான். ஏனென்றால் அவர்கள் ஏக இறைவனை மறுதலிக்கிறார்கள். போலிக் கடவுள்களுக்கும் பெண் தெய்வங்களுக்கும் விசுவாசமாக நடந்துகொள்கிறார்கள். எனவே பழமைவாத – அடிப்படை மார்க்கம் அல்லாத வேறொரு சமயப் பிரிவை சகித்துக்கொள்வதென்பது மிகப் பெரிய குற்றம். பல தெய்வங்களை வழிபடுவதும் உண்மைக் கடவுளுக்கு பெண் துணைகள் உண்டு என்று நம்புவதும் இவ்வகைக் குற்றங்களிலேயே மிகவும் மோசமானது.

இஸ்லாமிய மார்க்கவியல் அடிப்படையில் ஓர் உண்மையான முஸ்லிமின் மிகப் பெரிய கடமை, மார்க்க வழியில் ஜிஹாத் போரில் ஈடுபடுவதுதான். காஃபிர்களின் நாடுகளுக்கு (தார்-உல்-ஹராப்)1 எதிராகப் போர் தொடுத்து அவற்றை இஸ்லாமிய அகிலத்தின் அங்கமாக (தார்-உல்-இஸ்லாம்) மாற்றி அங்கிருப்பவர்களை உண்மையான இஸ்லாம் மார்க்கத்தினராக ஆக்கவேண்டும். காஃபிர்களின் நாடுகளை வென்றபின் அங்கிருப்பவர்கள் எல்லாம் வென்றெடுத்தவர்களின் அடிமைகளாக ஆகிவிடுகிறார்கள்.

அனைவரையும் இஸ்லாமுக்கு மதம் மாற்றுதல், இணைவைப்புகள், மார்க்கவிரோதங்கள் எல்லாவற்றையும் அழித்தொழித்தல் இவையே இஸ்லாமிய அரசின் லட்சியங்கள். சமூகத்தில் யாரேனும் மார்க்க நம்பிக்கையற்று இருப்பதால் துயரங்கள் பட நேர்ந்தால் அது தவிர்க்க முடியாத தீமையே. நல் மார்க்கம் நோக்கி நகர்ந்துவந்துவிடும்வரையில் மட்டுமே அந்தத் தற்காலிக துயரங்கள் இருக்கும். காஃபிர்கள் மீது அரசியல், சமூக நெருக்கடிகளைத் திணித்தோ, அரசாங்கப் பணத்தை எடுத்துக் கையூட்டுகள் கொடுத்தோ அவர்களுடைய ஆன்மிக விழிப்பு உணர்வை அதிகரிக்கவேண்டும். அவர்களை உண்மையாக மார்க்க விசுவாசிகளாக ஆக்கவேண்டும்.2

________
1. போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் பிற மதத்தினரைக் கண்ட இடங்களில் கொல்லுங்கள்… ஆனால் அவர்கள் தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள். (குர்ரான் 9:5-6). (முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்… ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் – நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.(குர்ரான் 8:39-42)

2. குர்ரானின் போதனைகளின் அடிப்படையில் அல்லா-உத்-தின் கில்ஜியிடம் இஸ்லாமிய மார்க்க போதகர் க்வாஸி முகிஸ்-உத்-தின் அறிவித்தவை: இப்படியான ஒடுக்குமுறைகள் மூலம் ஜிம்மிகளுக்கு மிக மிகப் பணிவான வாழ்க்கைமுறை அடையாளம் காட்டப்படுகிறது. தூய இஸ்லாமிய மார்க்கம் மகிமைப்படுத்தப்படுகிறது. போலி இறைக் கொள்கைகள் எல்லாம் மட்டம்தட்டப்படுகின்றன. நாம் பிற மதத்தினரைக் கொல்ல வேண்டும்; கொள்ளையடிக்க வேண்டும்; சிறைப்பிடிக்க வேண்டும் என்று இறைத்தூதர் மார்க்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார். நாம் ஹிந்துக்களிடமிருந்து ஜிஸியா வரியை வசூலிக்க வேண்டும் என்று இமாம் ஹனீஃபா மட்டுமே அறிவுருத்தியிருக்கிறார். மற்ற மார்க்க போதகர்கள் எல்லாம் ஒன்று அவர்கள் இஸ்லாமுக்கு மாறவேண்டும்; அல்லது கொல்லப்படவேண்டும் என்றே வழிகாட்டியிருக்கிறார்கள்.

 

2. இஸ்லாமியர் அல்லாதவர் மீதான அரசியல் ஒடுக்குமுறைகள்

அப்படியாக, இஸ்லாமியரல்லாத ஒருவர் இஸ்லாமிய தேசத்தின் குடிமகனாக இருக்கமுடியாது. அவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் மட்டுமே. அவருடைய வாழ்க்கை நிலை என்பது அடிமை முறையின் மாறுபட்ட வடிவமே. இஸ்லாமிய அரசில் அவர்கள் (ஜிம்மி – Zimmi) ஒருவித ஒப்பந்தத்தின் பேரில் வசிப்பவர் மட்டுமே. ஏக இறைவனின் பிரதிநிதியான சுல்தான், வேண்டா வெறுப்புடன் அவர்களை உயிருடனும் உடமைகளுடன் வாழ அனுமதித்திருக்கிறார். ஜிம்மிகள் அரசியல், சமூக ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படவேண்டியவரே. ஜிஸியா வரியை மார்க்க நம்பிக்கை இல்லாத காஃபிர்கள், இஸ்லாமிய அரசுக்குக் கொடுக்கவேண்டும்.

காஃபிர்கள் தாம் வைத்திருக்கும் நிலங்களுக்கு கராஜ் வரி கொடுக்கவேண்டும். இஸ்லாமியர்கள் இந்த வரி கொடுக்கவேண்டிய அவசியமில்லை. இஸ்லாமியப் படைகளை நிர்வகிக்கத் தேவைப்படும் பிற வரிகளையும் காஃபிர்கள் கொடுக்கவேண்டும்; ஆனால் அந்தப் படையில் அவர் சேரமுடியாது. ஜிஸியா வரி கொடுப்பதற்கு பதிலாகப் படையில் சேர்ந்து போரிடுகிறேன் என்று சொன்னாலும் அதற்கு அனுமதி கிடையாது. பணிவான உடைகள், நடத்தை ஆகியவற்றின் மூலம் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தவேண்டும்.  ஜிம்மிகள் (இஸ்லாமியர் அல்லாதவர்கள்) ஆடம்பரமான, நல்ல உடைகள் அணியக்கூடாது. குதிரையில் ஏறிப் பயணம் செய்யக்கூடாது. ஆயுதங்கள் வைத்துக் கொள்ளக்கூடாது. ஆதிக்கவாதிகளான இஸ்லாமியரைக் கண்டு மரியாதையுடனும் அடிபணிந்தும் நடந்துகொள்ளவேண்டும்.1

ஜிம்மிகள் அல்லது அடைக்கலம் தேடிய இஸ்லாமியர் அல்லாதவர்களில் ஒவ்வொரு சுய உணர்வுள்ள பெரியவரும் (ஆண்கள்) ஜிஸியா வரி கொடுக்கவேண்டும். அவருடைய நிலங்கள், தோப்புகள் எல்லாம் ஒன்று, முஸ்லிம்களின் வகஃப் உடமைகளாகிவிடும்; ஜிம்மிகள் அந்த சொத்துகளை ஆண்டு அனுபவிக்க உரிமை உண்டு. அல்லது நிலத்தில் விளைபவற்றுக்கு வரியை அதன் உரிமையாளரான இஸ்லாமியருக்குக் கொடுக்கவேண்டும். இஸ்லாமிய படைகளை நிர்வகிக்கு ஆகும் செலவையும் ஜிம்மிகள் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஜிம்மிகளின் சாட்சிகள், வாக்குமூலங்களுக்கு இஸ்லாமிய நீதிமன்றத்தில் முக்கியத்துவம் கிடையாது. குற்றவியல், திருமணம் போன்ற இஸ்லாமிய சட்டங்களின் பாதுகாப்பு அவர்களுக்குக் கிடையாது. ஜிம்மிகள் தமது வழிபாடு சார்ந்து விளம்பரப்படுத்தும்படியான, மனதைப் புண்படுத்தும் எதையும் செய்யக்கூடாது. அவர்கள் இஸ்லாமிய அரசின் குடிமகன்கள் அல்ல.

ஜிம்மிகளுக்கு இஸ்லாமிய நீதிமன்றங்களில் வாக்குமூலம், சாட்சிகள் சொல்வதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் சட்டம், நிக்காஹ் போன்ற விஷயங்களில் பல கட்டுப்பாடுகள் உண்டு. ஜிம்மி ஒப்பந்தத்தின் இன்னொரு தரப்பான இஸ்லாமிய அரசு காஃபிர் ஹிந்துக்களுக்கு உயிர், உடமை பாதுகாப்பும் தனது மதத்தைப் பின்பற்றிக் கொள்ள திருத்தப்பட்ட பாதுகாப்பு வழிமுறையையும் வகுத்திருக்கிறது. புதிய கோவில்களைக் கட்டக்கூடாது. தனது மதத்தை வெளிப்படையாக இஸ்லாமிய மார்க்கத்தினரின் மனம் புண்படும் வகையில் வெளிப்படுத்தக்கூடாது.

ஆரம்பகால அரேபிய வெற்றியாளர்கள் இந்தியாவில், குறிப்பாக சிந்து பகுதியில், இருந்த வழிபாட்டு மையங்கள், மத பழக்க வழக்கங்கள் ஆகியவற்றுக்கு எந்தவொரு கெடுதலும் செய்யவதில்லை என்ற சமயோஜிதமானதும் ஆதாயம் தரக்கூடியதுமான கொள்கையைக் கடைப்பிடித்தனர். உருவ வழிபாட்டுக்கு எதிரான மனநிலை, அழிக்கும் தன்மை முதலில் இருந்திருக்கவில்லை. முஸ்லிம்களின் எண்ணிக்கை இந்துஸ்தானில் அதிகரிக்க ஆரம்பித்தது. வெகு நீண்ட காலத்துக்கு அவர்களுடைய ஆதிக்கத்துக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இருந்திருக்கவில்லை.2  எனவே மத சகிப்பின்மையும் வன்முறைச் செயல்பாடுகள் மீது ஈடுபாடும் அதிகரித்தன. உருவ வழிபாட்டாளர்களை மதம் மாற்றும் நோக்கில் படுகொலைக்கு சற்று குறைவாக ரத்தக்களறி ஏற்படுத்த ஆரம்பித்தனர். ஜிஸியா வரி அல்லாமல் உடைகளில், நடத்தையில் பணிவு வெளிப்படவேண்டும் என்று வெளிப்படையான அவமானப்படுத்தல்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டன. பல்வேறுவிதமான பயங்கள், நம்பிக்கைகள் ஊட்டப்பட்டன. பணம், அரசு பதவி போன்றவை ஹிந்து மதத்து போதகர்களுக்குத் தரப்பட்டன. ஆன்மிக போதனைகள், வழிகாட்டுதல்கள் எல்லாம் கிடைக்காமல் போகச் செய்யும் நோக்கில் ஹிந்து மதத் தலைவர்கள், ஹிந்து சமூகத்தினர் எல்லாம் திட்டமிட்டு ஒடுக்கப்பட்டனர். அவர்களிடையே ஒற்றுமை ஏற்பட்டுவிடக்கூடாதென்பதற்காக  மத விழாக்கள், ஊர்வலங்கள் எல்லாம் தடை செய்யப்பட்டன. புதிதாக எந்தவொரு ஆலயமும் கட்டவிடவில்லை. பழுதடைந்தவற்றைச் சரி செய்யவும் விடவில்லை. இதனால் இந்து வழிபாட்டு மையங்கள் அனைத்துமே காலப்போக்கில் சிதைந்துபோயிருக்கும். ஆனால் தீவிர இஸ்லாமிய உணார்வு கொண்டவர்கள் காலம் அழித்து முடிப்பதுவரை காத்திருக்க விரும்பாமல் பல கோவில்களை இடித்துத் தரைமட்டமாக்கினர்.

பின்னாட்களில் துருக்கியர்கள் படையெடுத்துவந்தபோது ஆரம்ப காலத்தில் அராபியர்கள் காட்டிய பிற மதங்கள் மீதான சகிப்புத் தன்மை மார்க்க விரோதமாகப் பார்க்கப்பட்டது. அவர்களுடைய தேசத்துக்கு வெளியேஆலயங்களை இடித்தல், இந்துக்களைப் படு கொலை செய்தல் எல்லாம் ஒவ்வொரு ஆக்கிரமிப்புப் போரின் தவிர்க்க முடியாத அங்கமாகின.  அப்படியாக ஏற்கெனவே ஜிஹாத் போரில் கொள்ளை, படுகொலை ஆகியவற்றையெல்லாம் மார்க்கத்தின் தூய, அடிப்படையான செயல்பாடுகளாக ஏற்றுக்கொண்டிருந்த முஸ்லிம் சமுதாயத்துக்கு இந்தப் போர்கள் ஒரு தெளிவான மன வார்ப்பை உருவாக்கித் தந்தன.

காஃபிர்களைக் கொல்லுதல் என்பது ஒரு முஸ்லிமிடம் இருக்கும் நற்குணங்களில் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. தனது உள்ளார்ந்த வன்மத்தை அடக்கிக்கொள்ளவோ குற்ற உணர்ச்சி கொள்ளவோ அவசியமில்லை. அதிகமான ஆன்மிக உணர்வை வளர்த்துக் கொள்வதால் எந்தப் பலனும் இல்லை. மனித உயிர்களில் சில குறிப்பிட்ட பிரிவினரைக் கொல்லவேண்டும்; அல்லது கொள்ளையடிக்கவேண்டும். இதுவே ஒரு முஸ்லிமை சொர்க்கத்துக்கு இட்டுச் செல்லும்.

கொலையையும் கொள்ளையையும் மதக்கடமையாகப் பார்க்கும்படியாக தனது ஆதரவாளர்களுக்கு போதிக்கும் மதம், மனித குல மேம்பாட்டுக்கோ உலகின் அமைதிக்கோ துளியும் ஏதுவானதே அல்ல.

________
1. அரபு தேசம் அல்லாத பிற நாடுகளில் வாழும் உருவ வழிபாட்டாளர்கள் மூலமும் அழிவுகள்/ஒடுக்குமுறைகள் ஏற்பட்டுள்ளன என்று ஷஃபி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், பிற இஸ்லாமிய அறிஞர்கள், என்ன சொல்லியிருக்கிறார்கெளென்றால், உருவ வழிபாட்டாளர்களை அடிமைகளாக்குவது மார்க்க போதனைகளின் படி மிகவும் நியாயமானதுதான். அவர்கள் அப்போது அனுபவிக்கும் துயரங்கள் அல்லாவைத் திருப்திப்படுத்தி, அவர்களை மார்க்க பாதையும் நடக்கவைக்க உதவும். அதேநேரம் அதுவரையிலும் அவர்களையும் அவர்களுடைய உடமைகளையும் இஸ்லாமின் நன்மைக்காகவே பயன்படுத்தவேண்டும். (ஹ்யூக்ஸ், 710, என்சைக்ளோபீடியா இஸ்லாம். 917, தார் உல் ஹராப்). 

2. ஜிம்மிகள் தமது வழிபாட்டிடங்களை பழுது பார்த்துக் கொள்ளலாம். மறு கட்டுமானம் செய்துகொள்ளலாம். ஆனால் புதிதாகவோ புதிய இடத்திலோ எதையும் கட்டக்கூடாது.  இஸ்லாமிய நிலங்களில் பிற வழிபாட்டு மையங்கள் கட்டுவது மார்க்க விரோதம். ஜிம்மிகள் தமது வீடுகளுக்குள் கட்டிக்கொள்ளலாம். கிறிஸ்தவர்கள், யூதர்கள் ஆகியோரின் வழிபாட்டுமையங்கள் இடிக்கப்பட்டு அல்லது சிதிலமடைந்து கிடந்தால் அவர்கள் அதை மீண்டும் கட்டிக் கொள்ளலாம். மிகப் பழமையான எந்தவொரு கோவிலையும் இடிக்கக்கூடாது; புதிதாக எதையும் கட்டக்கூடாது (ஒளரங்கசீபின் ஃபர்மான் ஜே.ஏ.எஸ்.பி. 1911, 689).

3. 1910-ல் பெளட்ரஸ் பாஷாவை எகிப்திய முஹமதியர் ஒருவர் தனிப்பட்ட வெறுப்புகள் அல்லாமல், அவர் தென்ஷாவாய் கிராமத்தினருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றத்துக்குத் தலைமை வகித்திருந்தார் என்ற காரணத்துக்காகக் கொன்றிருந்தார். குற்றம் மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டிருந்தது. எகிப்தின் தலைமை க்வாஜி , இஸ்லாமின் போதனைகளின்படி ஒரு முஸ்லிம், ஒரு காஃபிரைக் கொல்வது தவறில்லை என்று சொன்னார். நவீன நாகரிக உலகில் இஸ்லாமிய ஷரியத் தொடர்பான மிக உயரிய பதவியில் இருக்கும் ஒருவருடைய கருத்து இதுதான்.

 

3. குர்ரானின் அரசியல் கருத்துகளின் செல்வாக்கு இஸ்லாமியர்கள் மற்றும் குடிமக்களின் மீது ஏற்படுத்தும் தாக்கம்

குர்ரானின் இப்படியான போதனைகள் அதன் உண்மையான ஆதரவாளர்களுக்கும் நன்மை தருவதாக இருக்கவில்லை.  இஸ்லாமிய அரசியல் என்பது மார்க்க விசுவாசிகளை போர் தவிர வேறு எந்தத் தொழிலும் செய்யத் தேவையில்லை என்ற ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறது. இந்த உலகில் வெல்லப்படாத புதிய பகுதிகளும் கொள்ளையடிப்பதற்கு செல்வ வளம் மிகுந்த காஃபிர்களும் இருக்கும்வரை இஸ்லாமிய அரசுக்கு எந்தவொரு பிரச்னையும் இருக்காது. செயல் ஊக்கம் மிகுந்த அமைப்பு, அதி வேகமாகப் பல்கிப் பெருகியது. கலைகள், தொழில்கள், இலக்கியம், ஒருவகையான ஓவியம் இவற்றுக்கெல்லாம் ஆதரவுகள் தரப்பட்டன. ஆனால் (மொகலாய) இஸ்லாமிய விரிவாக்கம் அஸ்ஸாம் மற்றும் சாட்காவ் பகுதியில் தன் தொலைதூர இலக்கு மற்றும் வளம் குறைந்த மலைப்பகுதியை முட்டியபின்னர் அல்லது மஹாராஷ்டிராவின் வறண்ட நிலங்களை சென்றடைந்தபின்னர் அதன் வீழ்ச்சியைத் தடுக்க யாராலும் முடிந்திருக்கவில்லை. இஸ்லாமிய அரசுக்கு போர் வருமானம் அல்லாமல் வேறு எந்தவொரு பொருளாதார அடித்தளமும் இல்லை. அதோடு அமைதிக் காலத்தை அவர்களால் எதிர்கொள்ளமுடியவில்லை.

மொகலாய அரசாங்கத்தின் கொடூரம் கலந்த அன்பானது போர்க்குணம் மிகுந்த இஸ்லாமியர்களுக்கு உவப்பாக இருந்திருக்கவில்லை. போர் இல்லாத காலத்துத் தொழில்களும் அமைதியான சூழலும் அவர்களுக்கு மிகுந்த நெருக்கடியைத் தரத் தொடங்கின. போர்த்தொழிலில் மட்டுமே அவர்களால் இயல்பாக, உத்வேகத்துடன் ஈடுபடமுடியும். அமைதிக்காலம் என்றால் அவர்களைப் பொறுத்தவரையில் வேலையில்லா காலம் போன்றது. தீய ஒழுக்கங்களைத் தூண்டும். வீழ்ச்சியைக் கொண்டுவரும் என்று கருதினர்.

வென்றெடுத்த பகுதிகளில் இருந்த உபரிகளைக் கொண்டே அராபியர்கள் வாழ்ந்துவந்தனர். வெல்லப்பட்ட மனிதர்கள் இவர்களுக்கு சேவகம் புரிந்தனர். ஒரு போரில் கிடைக்கும் கொள்ளைப் பணத்தில் ஐந்தில் நான்கு பங்கு போர்க்களத்திலேயே படைவீரர்களுக்குப் பிரித்துத் தரப்பட்டன. மொகலாய அரசில் நில வருவாய், ஜிஸியா போன்று புதிதாகப் பணம் வரத்தொடங்கின. குடிமைப் பணிகள், ராணுவம் ஆகியவற்றுக்கு ஒதுக்கிய பின்னர் எஞ்சிய உபரியானது போர் முலம் கிடைக்கும் பணத்துக்கு இணையாக கூடுதல் வருமானமாக வந்து குவிந்தது (முய்ர் எழுதிய காலிஃபேட், 158).

இஸ்லாமியர்களிடையே நீண்ட காலம் நிலைநிறுத்தப்பட்டிருந்த போர் வாழ்க்கையானது அவர்கள் ஆதிக்க சக்திகளாக சலுகைகள் அனுபவிக்கும் உயர் பிரிவினராக ஆனதைத் தொடர்ந்து முடிவுக்கு வரத் தொடங்கியது. அமைதிக் காலகட்டடதில் சுக போகங்களில் திளைக்கும் அதிகாரவர்க்கமாக ஆனார்கள். வாழ்க்கையின் பிற தளங்களில் சொந்தக் காலில் நிற்கும் பலத்தை இழந்தனர். அரசு வேலைகள் எல்லாம் இஸ்லாமிய மார்க்கத்தினருக்குப் பிறப்புரிமையாகக் கிடைத்தன.  திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள், கடுமையான முயற்சி இவையெல்லாம் தேவையில்லை என்ற நிலை உருவாகிவிட்டது.

ரமலான் போன்ற புனித நாட்களில் தரப்பட்ட தானங்கள், நலிவடைந்த அமைப்புகளுக்குச் செலவிட்ட தொகை, கேளிக்கைகள் இவையெல்லாம் சோம்பலையே அவர்களிடையே உருவாக்கியது. இப்படியாக சோம்பலும் போஷிப்பும் மிகுந்த மேட்டுக்குடிவர்க்கம் மொகலாய சாம்ராஜ்ஜியத்தில் உருவாகினர். அவர்கள் அரசின் சக்தியை முழுவதுமாக உறிஞ்சினர். அதேநேரம் அரசின் வளர்ச்சி முடங்கியபோது முதலில் இவர்களே பாதிக்கவும்பட்டனர்.

செல்வச் செழிப்பு மிகுந்ததால் சோம்பலும் உழைக்காமல் எதையும் செய்யும் மனநிலையும் வந்துவிட்டன. இவையெல்லாம் தீயொழுக்கங்களில் அவர்களை இட்டுச் சென்றது. தொடர்ந்து அவை வறுமையையும் அழிவையும் கொண்டுவந்தன.

அதேநேரம், குடிமக்களை இவர்கள் நடத்தியவிதம் தேச வளங்களின் பெருக்கத்தை முடக்கின. சட்டத்தினாலும் பேராசை மிகுந்த அதிகாரவர்க்கத்தினாலும் குடி மக்களில் ஒரு பிரிவினர் (ஹிந்துக்கள்) வெளிப்படையாக ஒடுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர். இதனால் அவர்கள் அனைத்துவகையிலும் தளர்ந்துபோய் விலங்குகளைப்போல் நடைபிணமாகிவிட்டிருந்தனர். அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட உச்ச பட்ச உற்பத்தியை செய்ய முடியாத நிலை உருவானது.   மரம் வெட்டுதல், தண்ணீர் சுமந்துவருதல், துரும்பையும் வீணாக்கமல் பயன்படுத்திக்கொள்ளூதல், தமது உழைப்பின் பயனை கெஞ்சிக் கூத்தாடி  மீட்டுக்கொள்ளுதல் என அவர்களுடைய செயல்பாடுகள் இருந்தன. இப்படியான சமூகச் சூழலில் மனிதர்களின் உடம்பும் மனமும் உத்வேகத்துடன் செயல்படவே முடியாது.

ஹிந்து அறிவுப்புலத்தின் வறட்சி, மேட்டுக்குடியினரின் உற்சாகக் குறைவு இவையே மொகலாய ஆட்சி இந்தியாவில் ஏற்படுத்திய மிகப் பெரிய வீழ்ச்சி. இஸ்லாமிய அரசியல் மரத்தை அதன் கனிகளை வைத்து எடைபோடுவதென்றால் அது முழுத் தோல்வி என்றே சொல்லவேண்டும்.

தேசம் முழுவதும் பயணங்கள் மேற்கொண்டவரும் நவீன தத்துவஞானியுமானவர் எழுதுகிறார்: இஸ்லாம் அல்லாவிடம் முழு சரணடைதலையும் முழுமையான கீழ்ப்படிதலையும் வலியுறுத்தும் ஒரு மதம். அதன் கடவுள் போர்ப் படைத் தளபதி. இந்த எண்ணமே கீழ்ப்படிதலைக் கொண்டுவருகிறது. இஸ்லாமின் இந்த ராணுவக் கட்டுப்பாடுதான் ஓர் இஸ்லாமியரின் அனைத்துச் செயல்பாடுகளையும் விளக்குவதாக இருக்கின்றது. இஸ்லாமியரின் பிற்போக்குத்தனம், சூழ் நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறன் இன்மை, ஊக்கமும் புதுமை காண் தேடலும் இல்லாமை இவை எல்லாவற்றுக்கும் இந்தக் கேள்வி இல்லா கீழ்ப்படிதலே காரணமாக இருக்கிறது. ஒரு படைவீரனுடைய ஒரே வேலை உத்தரவுகளுக்குக் கட்டுப்படுவதுமட்டுமே. பிறவற்றையெல்லாம் அல்லாவே பார்த்துக்கொள்வார் (ஹெச்.கேசர்லிங்).

திறமைக்கு மதிப்பு இல்லாமல் போய், அரசுப் பதவிகள் எல்லாம் இனம், மதம் போன்றவற்றின் அடிப்படையில் தீர்மானமானது. இதனால் முஸ்லிம் அல்லாதவர்கள் இப்படியான ஓர் ராஜ்ஜியத்தில் தமக்கு எந்த இடமும் இல்லை; தமது பங்களிப்பு இல்லை என்று முடிவுகட்டினர்.

தீயொழுக்கங்கள், அந்நிய ஆட்சி ஆகியவற்றின் மிக மோசமான தீமைகள் அனைத்தும் இஸ்லாமிய மதத்தின் அடிப்படையில் ஒரு பேரரசை நிறுவப்படும்போது மக்கள் அனுபவிக்க நேரும்.

மொகலாய இந்தியாவில் மிகக் குறைவான எண்ணிக்கை கொண்ட சிறுபான்மையினரின் ஆதிக்கம் என்ற தீமையும் சேர்ந்திருந்தது. ஆதிக்கம் செலுத்திய இந்தச் சிறுபான்மையினர் அடக்கி ஆளப்பட்டிருந்த ஹிந்து பெரும்பான்மையிலிருந்து  இனரீதியாகவோ உடல் அல்லது மன ரீதியாகவோ அல்லாமல் மதத்தின் அடிப்படையில் மட்டும் வேறுபட்டிருந்தனர். ஆதிக்க மதத்தினருக்கு வெளியே இருந்த அனைவரும் இந்த அடக்குமுறையை அனுபவிக்க வேண்டியிருந்தது. மக்கள் நலனுக்கென்று ஒப்படைக்கப்பட்டிருந்த அதிகாரமும் வளங்களும் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டன. ஆட்சியாளர்களின் மதத்தைப் பரப்பவும் ஆளப்பட்டவர்களின் மதத்தை அழிக்கவும் பயன்படுத்தப்பட்டன. இப்படியான ஓர் அரசை தேசிய அரசு என்று அழைக்கவே முடியாது. அது மக்களின் ஆதரவையும் அர்ப்பணிப்பையும் பெற்றிருக்கவே இல்லை.

(தொடரும்)

___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *