4. இளவரசர் அக்பரின் மார்வார் படையெடுப்பு
இளவரசர் அக்பர் சித்தூரில் இருந்து புறப்பட்டு மார்வாரில் இருந்த சோஜாத் பகுதிக்கு 18, ஜூலை, 1680-ல் வந்து சேர்ந்தார். ஆனால் மேவார் போலவே அவருக்கு இங்கும் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. ரத்தோர் படைகள் அந்தப் பிராந்தியம் முழுவதும் பரவி, வணிகப்பாதைகளை முடக்கியிருந்தது. இதனால் அங்கு மொகலாயப் படைகளுக்குள் பெரும் குழப்பமே நிலவியது.
சோஜத் பகுதியில் இருக்கும் பிரதான முகாமைப் பாதுகாத்துக்கொண்டபடியே கோத்வார் மாவட்டத்தின் பிரதான நகரான நாதோலை ஆக்கிரமிக்கவேண்டும்; அந்தப் புதிய படைமுகாமில் இருந்து தஹவூர் கான் தலைமையில் கிழக்கு நோக்கி படையை முன்னெடுத்து நார்லை நகரத்தின் வழியாக மேவாருக்குள் நுழையவேண்டும். தேவசூரி கணவாய் வழியாக ஊடறுத்துச் என்று மஹாராணா மற்றும் பிற ரத்தோர்கள் அடைக்கலம் தேடியிருக்கும் கமால்மீர் பகுதியைத் தாக்கவேண்டும் என்று அக்பர் திட்டம் வகுத்தார். ஆனால் மரணத்தைத் துச்சமென மதித்த ராஜபுத்திரர்கள் ஏற்படுத்தியிருந்த அச்சத்தினால் தஹ்வூர் கானின் படைகள் செயலற்று முடங்கிக் கிடந்தன.
21 செப்டம்பரில் அக்பர் சோஜத்திலிருந்து புறப்பட்டு அந்த மாத இறுதிவாக்கில் நாதோல் பகுதிக்குச் சென்று சேர்ந்தார். ஆனால் தஹாவூர் கான் மலைப்பகுதிக்குப் படையெடுத்துச் செல்ல மறுத்துவிட்டார். அக்பர் அவரை மிரட்டிப் பணிய வைக்கவேண்டியிருந்தது. 27 செப்டம்பரில் கணவாயின் முகத்துவாரத்துக்கு பயந்து நடுங்கியபடியே படையுடன் சென்றார். ராஜபுத்திரர்களின் வீரம் கண்டு அஞ்சி நடுங்கியவர் எப்போது ராஜ புத்திரர் பக்கம் சேர்ந்தார் என்பது தெரியவில்லை. ஆனால் 1680 செப்டம்பர் வாக்கிலிருந்து அவருடைய நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரியதாக ஆகிவிட்டிருந்தன.
பேரரசர் பொறுமை இழந்தார். ’படையை முன்னெடுத்துச் செல்லுங்கள்; இனியும் தாமதித்தால் மன்னிக்கமாட்டேன்’ என்று இளவரசர் அக்பருக்கு பேரரசப் படைகளின் நிதி நிர்வாகியிடம் செய்தி சொல்லி அனுப்பினார். எனவே நாதோல் பகுதியிலிருந்து தேவசூரி கணவாய் நோக்கி அக்பர் 19 நவம்பரில் படையுடன் முன்னேறினார். அங்கிருந்தபடியே ஜில்வாரா கணவாய் வழியாக படையுடன் முன்னேறும்படி தஹாவூர் கானுக்குச் செய்தி அனுப்பினார். வழியில் இருந்த தடுப்பரண்களையெல்லாம் தகர்த்தபடி மொகலாயப் படை முன்னேறியது. தஹாவூர் கான் ஜில்வாரா பகுதியில் முகாமிட்டு அக்கம் பக்கத்தில் இருந்த கிராமங்களைச் சூறையாடிக் கொண்டிருந்தார்.
22 நவம்பரில் ஜில்வாராவுக்குச் சென்ற படை அடுத்ததாக, எட்டு மைல் தெற்கில் மஹாராணாவின் இறுதிப் புகலிடமாக இருந்த கமால்மீர் பகுதிக்கு முன்னேறிச் செல்லவேண்டிய நிலையில் இருந்தது. ஆனால் தவ்ஹீர் கான் அடுத்த ஐந்து வாரங்கள் சந்தேகத்துக்குரிய மூறையில் நடந்துகொண்டார். உண்மையில் இந்தக் காலகட்டத்தில்தான் இளவரசர் அக்பரின் கலகத் திட்டங்கள் முழுவடிவம் பெற்றன. 1, ஜன, 1681-ல் அவர் ராஜபுத்திரக் கலகக்காரர்களுடன் இணைந்துகொண்டு தன் தந்தை ஒளரங்கசீபைப் பதவியில் இருந்து நீக்கிவிட்டுத் தன்னைப் பேரரசராக முடிசூட்டிக் கொள்ளவிரும்பினார். மறு நாளே மொகலாய அரியணையைக் கைப்பற்றும் நோக்கில் அஜ்மீர் நோக்கிப் படையுடன் புறப்பட்டார்.
5. இளவரசர் அக்பர் தன்னைப் பேரரசராக அறிவித்தல், 1681
ஒளரங்கசீபின் நான்காவது மகன் சுல்தான் முஹம்மது அக்பருக்கு அப்போது வயது 23 மட்டுமே ஆகியிருந்தது. மேவாரில் படையெடுத்துச் சென்றபோது அவருடைய திறமையின்மையும் மெத்தனமும் வெளிப்பட்டிருந்தன. இதனால் ஒளரங்கசீப் அவரைக் கடுமையாகக் கடிந்துகொண்டிருந்தார். அடுத்ததாக மார்வாருக்கு அனுப்பப்பட்ட அக்பர், தந்தை எதிர்பார்த்ததுபோல் ரத்தோர் குழுக்களை வெல்லவும் முடிந்திருக்கவில்லை; தேவசூரி கணவாய்வழியாக மேவாருக்குள் நுழையவும் முடிந்திருக்கவில்லை. இந்தத் தொடர் தோல்விகளினால் அவமானப்பட்ட அக்பர், ராஜபுத்திரர்கள் சொல் பேச்சு கேட்டு தந்தையை அரியணையில் இருந்து இறக்க முன்வந்தார்.
தஹ்வூர் கான் தான் இந்த சதி நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்தார். மஹாராணா ராஜ் சிங், ரதோர் தலைவர் துர்காதாஸ் ஆகியோர் ராஜபுத்திரர்கள் மீது ஒளரங்கசீப் காட்டும் வன்மமானது மொகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கு எப்படியெல்லாம் வழிவகுத்துவருகிறது என்பதை எடுத்துச் சொன்னார்கள். மொகலாய சாம்ராஜ்ஜியம் அழிவதைத் தடுக்கவேண்டுமென்றால் ஒளரங்கசீபை அரியணையில் இருந்து கீழிறக்கவேண்டும்; மொகலாய முன்னோர்களின் சமயோஜிதமான கொள்கைளை இளவரசர் அக்பரே முன்னெடுக்கவேண்டும் என்று ஆலோசனை சொன்னார்கள். சிசோடிகள், ரத்தோர்கள் என இரண்டு மகத்தான ராஜபுத்திர குலங்கள் இளவரசர் அக்பருக்குத் துணை நிற்கும் என்றும் வாக்குறுதி கொடுத்தார்கள்.
அஜ்மீரில் இருந்த ஒளரங்கசீபை வீழ்த்த எல்லா படை ஏற்பாடுகளும் செய்துமுடிக்கப்பட்டன. இந்த நேரம் பார்த்து மஹாராணா உயிர் துறந்தார் (22, அக், 1680). எனவே அவருடைய மகன் ஜெய் சிங் ஒரு மாத காலம் துக்கம் அனுஷ்டித்தபடி போர் நடவடிக்கைகளில் இருந்து விலகி நின்றார். அதன்பின் தவ்ஹீர் கான் ஜில்வாரா கணவாய்க்கு வந்தார். ராஜபுத்திரர்களின் கமால்மீர் தலைமைப் பகுதிக்கு அருகில்தான் அது இருந்தது. எனவே நிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் உடனே ஆரம்பித்து இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டன. ஜெய் சிங் காலாட்படை, குதிரைப்படை என தன் படையில் பாதியை அனுப்புவதென்றும் மொகலாய இளவரசருக்கான போரை தன் மகன் அல்லது சகோதரனின் தலைமையில் முன்னெடுப்பதென்று புதிய ராணா சம்மதித்தார். 2, ஜன 1681-ல் அக்பர் அஜ்மீர் நோக்கிப் படையெடுத்துச் சென்று மொகலாய அரியணையைக் கைப்பற்றுவது என்று முடிவுசெய்யப்பட்டது.
அதற்கு முன்பாக தந்தைக்கு எந்த சந்தேகமும் வந்துவிடக்கூடாதென்று பொய்யாக ஒரு கடிதத்தை 22, அக், 1680-ல் அனுப்பிவைத்தார்: ’புதிய ராணாவின் சகோதரரும் மகனும் தவ்ஹீர்கானின் வழிகாட்டுதலின் பேரில் மலையில் இருந்து இறங்கிவந்து என்னை சந்தித்தார்கள். ரத்தோர் வீரர்களும் கான் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளின் பலனாக நம்முடன் சேர விரும்புகிறார்கள். நானே அவர்களை தலைமை தாங்கி அழைத்து வருகிறேன்; உங்களிடம் நேரடியாக மன்னிப்புக் கேட்க விரும்புகிறார்கள். .அது கிடைத்தபின்னரே நம் பக்கம் வந்து நிற்க அவர்களால் முடியும் என்று சொல்கிறார்கள். எனவே நான் அவர்களையும் அழைத்துக் கொண்டு உங்களைச் சந்திக்க வருகிறேன்’ என்று கடிதம் அனுப்பினார்.
அஜ்மீருக்கு வந்து சேர்ந்ததும் அக்பர் முகமூடியைக் கழற்றி எறிந்து சுயரூபத்தைக் காட்டினார். ஒளரங்கசீபை ஓரங்கட்டினார். நான்கு இஸ்லாமிய மெளல்விகள் இஸ்லாமிய மார்க்க விரோதமாக நடந்துகொண்ட ஒளரங்கசீப் தன் அரியணையைத் துறந்ததாக மத முத்திரை பதித்த ஆணை வெளியிட்டனர். 1, ஜனவரியன்று அக்பர் பேரரசராக முடிசூட்டிக் கொண்டார். தஹ்வூர் கானை தனது பிரதான அமைச்சராக-தளபதியாக நியமித்தார். பேரரசில் இருந்த பெரும்பாலான அதிகாரிகள் இதை எதிர்க்கவோ தப்பிக்கவோ முடியாத நிலையில் இருந்தனர். அக்பரின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டனர்.
அஜ்மீரில் இருந்த ஒளரங்கசீபின் நிலைமை மோசமானது. இந்தக் கலகத்தில் பங்கு பெறாத அவருடைய படைகளின் இரண்டு முக்கிய பிரிவுகள் வெகு தொலைவில் இருந்தன. அவருக்கு அருகில் இருந்தவர்களெல்லாம் போரிட முடியாத மெய்க்காவல் படையினர், உதவியாளர்கள், கணக்கர்கள், நபும்சகர்கள் போன்றவர்களே. அதோடு எதிரிகளின் படையில் 70,000 படை வீரர்கள் இருப்பதாகவும் ராஜபுதனத்து மகத்தான வாள் வீரர்கள் அங்கு இருப்பதாகவும் செய்திகள் பரவின.
ஒளரங்கசீபின் சிறிய குழுவை அக்பரின் படைகள் விரைந்து சென்று எளிதில் அழித்துவிடும்; ஆட்சி மாற்றம் உடனே நிகழ்ந்துவிடும் என்று பலரும் நினைத்தனர். ஆனால், இளவரசர் அக்பர் கேளிக்கைகளில் ஈடுபட்டு நேரத்தைக் கழித்தார். தனக்கும் தந்தைக்கும் இடையில் இருந்த 120 மைல் தொலைவைக் கடக்க ஜன 2-15 வரையில் 15 நாட்கள் எடுத்துக்கொண்டார். அவர் தாமதித்த ஒவ்வொரு நிமிடமும் ஒளரங்கசீபுக்கு சாதகமாக அமைந்தது.
இதனிடையில் ஆங்காங்கே பிரிந்து கிடந்த மொகலாயப் படைகள் அனைத்தையும் அஜ்மீருக்கு வரச் சொல்லி தூதுகள் பறந்தன. ஒளரங்கசீப் மீது விசுவாசம் கொண்ட தளபதிகள் அனைவரும் புயல் வேகத்தில் பேரரசருக்கு உதவ தம் படையுடன் விரைந்து வந்தனர். முதல் நிஜாமின் தந்தை ஷாஹிப்-உத்-தீன் கான் 9 ஜனவரியன்று தன் படையுடன் வந்து சேர்ந்தார். 120 மைல் தொலைவில் இருந்த சிரோஹி பகுதியில் இருந்து இரண்டே நாட்களில் எங்கும் நிற்காமல் பயணம் செய்து வந்து சேர்ந்திருந்தார். வேறு பல தளபதிகளும் இதுபோலவே விரைந்து வந்து சேர்ந்தனர். அப்படியாக ஒளரங்கசீபுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய அபாயம் மிக எளிதில் அகன்றது. அஜ்மீர் கோட்டை முழு பலத்துடன் எழுந்து நின்றது. அகழிகள், தடுப்பரண்கள், எல்லைப் படைகள் எல்லாம் பலப்படுத்தப்பட்டன. நகரை நோக்கிய கணவாய் பகுதிகளில் காவல் பலப்படுத்தப்பட்டது.
14 ஜனவரியன்று அஜ்மீருக்கு தெற்கே ஆறு மைல் தொலைவில் இருந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேவராய் பகுதியில் படையுடன் வெளியேறி வந்து முகாமிட்டார். அக்பரின் படையில் அவநம்பிக்கை பெருகியிருந்தது. பலர் அவரை விட்டுச் சென்றுவிட்டனர். அஜ்மீரை நெருங்க நெருங்கப் பல அதிகாரிகள் அவரைவிட்டு விலகி ஒளரங்கசீப் பக்கம் சேர்துகொண்டனர். எனினும் 30,000 ராஜபுத்திரர்கள் அவர் பக்கமே விசுவாசத்துடன் நின்றனர்.
15 ஜனவரியன்று நிலைமை மேலும் சிக்கலானது. ஒளரங்கசீப் தன் படையுடன் தென்பக்கம் மேலும் முன்னேறிவந்து தோ ராஹ் பகுதியில் முகாமிட்டார்.
மாலையில் இளவரசர் முஜாம், பனிக்காலத்தின் நடுவில் மழையும் புயல்காற்றும் குளிரும் நிறைந்த பாதையினூடாக சிரமப்பட்டு முன்னேறி பேரரசருடன் வந்து சேர்ந்து அவருடைய படை பலத்தை இரட்டிப்பாக்கினார். மறுபக்கம், தந்தையின் முகாமுக்கு மூன்று மைல் தொலையில் அக்பர் தன் படையுடன் வந்து சேர்ந்து முகாமிட்டார். இரவு அங்கு தங்கிவிட்டு மறு நாள் போரை ஆரம்பிப்பது என்று முடிவுசெய்தார். அது அவர் செய்த மிகப் பெரிய தவறாகிப் போனது.
6. தஹ்வூர் கானின் படுகொலை, அக்பரின் தோல்வி
அன்றிரவே ஒளரங்கசீபின் நரித்தனமான ராஜ தந்திரம் எந்தவொரு ஆயுதத்தையுமே தூக்காமல் முழு வெற்றியை அவருக்குப் பெற்றுத் தந்தது. அக்பரின் வலதுகரமான தஹ்வூர்கான் பேரரச முகாமின் உயர் நிலை அதிகாரியான இனாயத் கானின் ஒரு மகளைத் திருமணம் செய்துகொண்டிருந்தார். ’தஹ்வூர் கான் செய்த தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்டபடி ஒளரங்கசீப் பக்கம் வந்துவிடவேண்டும். இல்லையென்றால் அவனுடைய மனைவி பொதுவெளியில் பலர் முன்னிலையில் மானபங்கப்படுத்தப்படுவார். குழந்தைகள் எல்லாம் நாயின் விலையில் அடிமைச் சந்தையில் விற்பக்கடுவார்கள்’ என்று இனாயத் கானைவிட்டு ஒரு கடிதம் எழுதி அனுப்பும்படி சொன்னார் ஒளரங்கசீப்.
அந்தக் கடிதத்தைப் பார்த்த தஹ்வூர் கான் நடுங்கிவிட்டார். அக்பரிடமோ துர்கா தாஸிடமோ எதுவும் சொல்லாமல் தப்பி ஓட முடிவு செய்தார். கண்டுபிடித்துவிட்டால் அம்பு, ஈட்டி எய்துவிடக்கூடும் என்று முன்னெச்சரிக்கையாகக் கவச உடையை உள்ளுக்குள் அணிந்துகொண்டு மேலே சாதா உடையால் போர்த்திக்கொண்டு பேரரசர் முகாமிட்டிருந்த இடத்துக்கு அந்த இரவே தப்பி ஓடிவிட்டார். சிறைப்பிடிக்கப்பட்டவரைப் போல் அல்லாமல், ஆயுதங்களுடனே பேரரசரைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார். ஒளரங்கசீபின் ஆட்கள் இதற்கு சம்மதிக்கவில்லை. விவாதம் முற்றியது. பேரரசரின் மெய்க்காவலர்களுக்கு இந்த கூச்சல் கேட்டதும் ஈட்டிகளை சரமாரியாக எறிந்தனர். உள்ளுக்குள் போட்டிருந்த கவசம் சிறுது நேரத்துக்கு தஹ்வூர் கானின் உயிரைக் காப்பாற்றியது. ஆனால் யாரோ ஒரு வீரர் அவருடைய கழுத்தை அறுத்து ’கூச்சலை முடிவுக்குக் கொண்டுவந்தார்’.
இதனிடையில், அக்பருக்கு ஒளரங்கசீப் ஒரு ஏமாற்றுக் கடிதம் எழுதினார்: ’ராஜபுத்திரர்களை, நான் சொன்னதுபோல் ஏமாற்றிக் கைக்கு எட்டும் தொலைவுக்குக் கொண்டுவந்து நிறுத்தியிருப்பதற்கு உன்னைப் பாராட்டுகிறேன். அவர்களைப் போர்முனையில் முன்னால் நிறுத்து; முன்பக்கம் இருந்து என் படையும் பின் பக்கமிருந்து உன்னுடைய படையும் சேர்ந்து அவர்களை அழித்துவிடுவோம்’ என்று கடிதம் எழுதினார். ஒளரங்கசீப் திட்டமிட்டபடியே அந்தக் கடிதம் துர்காதாஸ் கைகளைச் சென்று சேர்ந்தது. அவர் அதை எடுத்துக்கொண்டு அக்பரிடம் விளக்கம் கேட்கச் சென்றார். இளவரசர் அக்பரோ தூங்கிக் கொண்டிருந்தார். யாரும் வந்து தன்னை எழுப்பக்கூடாது என்று நபும்சகர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
தஹ்வூர் கானை அழைத்துவரும்படி துர்காதாஸ் ஆளனுப்பினார். சில மணி நேரங்களுக்கு முன்பாக இந்தப் படையெடுப்பின் பிரதான தளபதியாக இருந்தவர் எதிர்முகாமுக்குத் தப்பி ஓடிவிட்ட விஷயம் தெரியவந்தது. அவர்கள் கைக்குக் கிடைத்த கடிதம் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்பிவிட்டனர். அதிர்ஷ்டவசமாகத் தெரியவந்த இந்த சதியில் இருந்து ராஜபுத்திரர்கள் தப்பிக்கவேண்டுமென்றால் ஒரு நொடி கூடத் தாமதிக்கக்கூடாது என்று முடிவெடுத்தனர். பொழுதுவிடிவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பாகவே அக்பரிடமிருந்து முடிந்தவற்றையெல்லாம் பறித்துக்கொண்டு மார்வாருக்குத் தப்பி ஓடினர்.
இதுவரை அக்பர் தனது உத்தரவுக்குக் கீழ்படிந்து நடக்கும்படி நிர்பந்தித்திருந்த பேரரசப் படையினரும் உத்தரவுக்குக் கீழ்படியாததால் சிறைப்படுத்தப்பட்டிருந்த தளபதிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு ஒளரங்கசீப் பக்கம் விரைந்து சென்று சேர்ந்துகொண்டனர். ராஜபுத்திரர்களுக்கும் அக்பருக்கும் இடையில் மத்யஸ்தராக இணைப்புக் கண்ணியாக தஹ்வூர் கான்தான் இருந்தார். அவர்தான் புதிய பேரரசர் அக்பரின் தலைமைத் தளபதியாகவும் முதன்மை அமைச்சராகவும் இருந்தார். அவர் தப்பி ஓடிச் சென்றுவிட்டதால் இந்தக் கூட்டணி அந்த நிமிடமே கலைந்துவிட்டது.
காலையில் அக்பர் எழுந்து பார்த்தபோது அனைவரும் அவரைக் கைவிட்டுப் போயிருந்தனர். ஒரே இரவில் அவருடைய மாபெரும் படை மந்திரம் போட்டதுபோல் மாயமாக மறைந்துவிட்டது. மிகவும் விசுவாசமான 350 குதிரைப் படையினர் மட்டுமே அவருடன் இருந்தனர். தன் அரவணைப்பில் இருந்த பெண்களைக் குதிரையில் ஏற்றிக் கொண்டு முடிந்த பொருட்களையெல்லாம் ஒட்டகங்களில் ஏற்றிக் கொண்டு, இளவரசர் அக்பரும் ராஜபுத்திரர்கள் போன பாதையிலேயே உயிர் பிழைத்து ஓடினார்.
அக்பர் விட்டுச் சென்றவற்றில் சூறையாடப்பட்டவை போக எஞ்சியவை கைப்பற்றப்பட்டன. விட்டுவிட்டுச் சென்றிருந்த அக்பரின் ஒரு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் அனைவரும் பேரரசரின் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அக்பரின் ஆதரவாளர்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் தரப்பட்டன. அக்பருடன் இளவரசி ஜெப்-உன் –நிஸா ரகசியமாகக் கடிதப் பரிமாற்றம் வைத்துக் கொண்டிருந்தது தெரியவந்ததும் சாலிம்கர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டார். அவருக்குத் தரப்பட்டிருந்த உதவித்தொகையான ரூ நான்கு லட்சம் நிறுத்தப்பட்டது. அவருக்குத் தரப்பட்டிருந்த நிலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அக்பரைச் சிறைப்பிடிக்க மார்வாருக்குள் இளவரசர் முஜாம் தலைமையில் ஒரு படை அனுப்பப்பட்டது. அக்பர் தப்பி ஓடியதற்குப் பிந்தைய இரண்டாவது நாள் இரவில் துர்கதாஸுக்கு ஒளரங்கசீப் செய்த தந்திரம் புரிந்தது. அக்பர் அவரிடம் மீண்டும் உதவி கேட்டார். தம்மிடம் அடைக்கலம் பெற்றிருப்பவரை உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றவேண்டும் என்பது ராஜபுத்திரர்களின் தர்மம். அக்பர் மார்வாரில் தன் பாதுகாவலருடன் ஓரிடத்தில் ஒரு நாளுக்கு மேல் தங்காமல் சுற்றிக் கொண்டே இருந்தார். ஆனால் குஜராத் பகுதியில் இருந்த மொகலாயத் தளபதிகள் அக்பரைச் சிறைப்பிடிக்க தீவிரமாக முனைந்தனர்.
மராட்டிய சாம்ராஜ்ஜியத்துக்கு அக்பரைக் கொண்டு செல்வதில் துர்கா தாஸ் மிகுந்த முனைப்புடன் இருந்தார். மொகலாய சாம்ராஜ்ஜியத்தைத் துணிந்து வெற்றிகரமாக எதிர்த்து நின்ற ஒரே சாம்ராஜ்ஜியம் அதுவாகவே இருந்தது. கணவாய் பகுதிகள், நதி வழியில் செல்லும் படகுகள் எல்லாமே பேரரசப் படைகளினால் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன. ரத்தோர் தலைவர் துர்கா தாஸ் அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு நர்மதை நதியை (9 மே) அக்பர்பூர் அருகே கடந்துசென்று தப்தி நதியில் பர்ஹான்பூருக்கு அருகில் சென்று சேர்ந்தனர் (15 மே). மொகலாயப் படையினர் அவர்களை முற்றுகையிட்டனர். எனினும் அங்கிருந்து தப்பி மேற்கு திசையில் கந்தேஷ், பக்லானா வழியாக இறுதியில் கொங்கனி பகுதியில் இருந்த சாம்பாஜியிடம் தஞ்சம் அடைந்தனர் (1 ஜூன்).
7. மஹராணா உடனான சமாதான உடன்படிக்கை
இளவரசர் அக்பருடைய கலகம் மொகலாயர்களின் போர் நடவடிக்கைகளை நிறுத்திவைத்திருந்தது. மார்வாரில் இருந்த அக்பரைச் சிறைப்பிடிக்க வலையை நெருக்கியவண்ணம் இருந்தனர். இது நாட்டில் இயல்பாகவே பலருக்கும் ஆறுதலைத் தந்தது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு சிசோடிகள் அபாரமான இளவரசர் பீம் சிங் மற்றும் மஹாராணாவின் நிதி அமைச்சர் தயாள்தாஸ் ஆகியவர்கள் தலைமையில் குஜராத் மற்றும் மால்வா பகுதிகளில் இருந்த மொகலாய அரண்களைத் தகர்த்தனர்.
ராஜபுத்திர மொகலாயப் போர் ஒருவகையில் வெற்றி தோல்வியின்றி நடுநிலையில் இருந்தது. ஆனால் அதனால் ஏற்பட்ட பொருளாதாரப் பின்விளைவுகள் மஹாராணாவின் படையினரைப் பெருமளவுக்கு பாதித்தது. அவருடைய பிராந்தியத்தில் இருந்த வயல்வெளிகள் எல்லாம் மொகலாயப் படைகளால் சூறையாடப்பட்டன. மஹாராணாவின் படையினரால் தோல்வியைத் தவிர்க்க முடிந்தது. ஆனால் பசியை வெல்ல முடியவில்லை. எனவே இரண்டு தரப்பினரும் அமைதி உடன்படிக்கைக்குத் தயாராக இருந்தனர். இளவரசர் முஹம்மது ஆஸமை (14, ஜூன், 1681) சென்று நேரில் சந்தித்த மஹாராண ஜெய் சிங், கீழ்க்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார்.
- ஜெஸியா வரிக்கு பதிலாக மண்டல், பூர், பெண்டார் ஆகிய பகுதிகளை பேரரசுக்கு விட்டுக் கொடுத்தார்.
- மேவாரிலிருந்து மொகலாயப் படைகள் பின்வாங்கிக் கொள்ளப்பட்டன. மேவார் பகுதி ஜெய் சிங்கிடம் தரப்பட்டது. ராணா பட்டமும் ஐந்தாயிரம் படைவீரர்கள் கொண்ட படையும் அனுமதிக்கப்பட்டது.
அப்படியாக ஒருவழியாக மேவார் பகுதியில் அமைதி திரும்பியது. சுதந்தரமும் கிடைத்தது. மார்வார் இன்னும் மீண்டிருக்கவில்லை. ஜோத்பூர் பகுதியில் எந்த உடன்படிக்கையும் எட்டப்பட்டிருக்காததால் போர் சூழலில், அமைதியற்று, விவசாய வளம் குறைந்துபோய் அடுத்த முப்பது ஆண்டுகள் மிக மோசமாகிப் போனது. அக்பரும் சாம்பாஜியும் இணைந்ததென்பது ஒளரங்கசீபுக்கும் மொகலாயப் பேரரசுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாகவே இருந்தது. அதனால் தக்காணப் பகுதியில் தன் கவனத்தைக் குவிக்கவேண்டியிருந்தது. அவரே நேரடியாக அந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் வேண்டிவந்தது. இது ரத்தோர்களுக்கு ஆசுவாசத்தைத் தந்தது. மார்வார் மீதான மொகலாயப் பிடி மெள்ள இளகியது. அடுத்த தலைமுறை முழுவதும் தக்காணத்தில் மொகலாயப் போர் நடவடிக்கைகளுக்கு ஏற்ப மார்வாரின் மீதான மொகலாயப் பிடி ஏறி இறங்குவதாக இருந்தது.
துர்காதாஸின் தலைமையின் கீழ் ரதோர்களின் போர் வியூகங்கள் பேரரசப் படைகளை கிலியூட்டியும் சோர்ந்துபோகவும் வைத்தன. மொகலாய வீரர்கள் ரதோர்களுடன் ரகசிய அமைதி உடன்படிக்கை கூடச் செய்துகொண்டனர். அப்படியாக இந்தப் பிராந்தியத்தில் போர் இரு தரப்புக்கும் இறுதி வெற்றி தோல்வி இன்றி அடுத்த முப்பது ஆண்டுகள் (ஆகஸ்ட் 1709) நீடித்தன. இறுதியாக, அஜித் சிங் ஜோத்பூருக்குள் வெற்றி பெற்று நுழைந்தார். தில்லி பேரரசர் அவருடைய ஆதிக்கத்தை இறுதியில் ஒருவழியாக அங்கீகரித்தார்.
வட மேற்கு எல்லையில் ஆஃப்கானியர்களின் மோதல் போக்கை முழுவதுமாக அடக்க முடிந்திருக்கவில்லை. அப்படியான நிலையில் ஒளரங்கசீப் ராஜபுதனாவில் திட்டமிட்டு கலகம் தலைதூக்க வழிவகுத்ததென்பது அரசியல்ரீதியாக மிகப் பெரிய அறிவீனமாகிவிட்டது. இரண்டு ராஜபுதன குலங்களும் அவரை எதிர்த்தன. அவருடைய படைக்கு வீரமும் விசுவாசமும் மிகுந்த வீரர்கள் கிடைக்காமல் போய்விட்டது. மார்வார், மேவார் பகுதிகளோடு பிரச்னை முடிந்துவிடவும் இல்லை. ஹடா, கெளர் குலங்களும் மொகலாயர்களுக்கு எதிர் நிலையை எடுத்தனர். அப்படியாக மொகலாயப் பேரரசுக்கு எதிரான மனநிலை மால்வா பகுதிக்கும் பரவியது. மொகலாயப் படைகள் தக்காணத்துக்குச் செல்லும் பாதையானது இந்த மால்வாவினூடாகவே சென்றது.
(தொடரும்)
___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின் தமிழாக்கம்.