1. 17-ம் நூற்றாண்டில் தக்காண வரலாறின் முக்கிய அம்சங்கள்
தென்னிந்தியாவில் 14-ம் நூற்றாண்டின் மத்தியில் பாமினி சாம்ராஜ்ஜியம் ஒரு முக்கியமான, சுதந்தரமான இஸ்லாமிய அரசாக உருவானது. வட இந்தியாவில் தில்லி சுல்தானகம் எப்படி இந்து சாம்ராஜ்ஜியங்களையெல்லாம் அழித்து ஆதிக்கத்துக்கு வந்ததோ அதுபோலவே தக்காணப் பகுதியில் இருந்த மகத்தான ஹிந்து சாம்ராஜ்ஜியங்களை அழித்து இந்தியாவில் இஸ்லாம் அடுத்தகட்ட விஸ்தரிப்பை ஆரம்பித்தது. தக்காணத்தில் இருந்த இந்து சாம்ராஜ்ஜியங்கள் அதுவரை சுதந்தரமான ராஜ்ஜியங்களாக இருந்துவந்திருந்தன. 15-ம் நூற்றாண்டு முழுவதும் இந்த அழித்தொழிப்பு நீடித்தது.
அடுத்த நூற்றாண்டின் முதல் கால்பகுதியில் பாமினி சுல்தான் ஆட்சி வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து அந்த ராஜ்ஜியங்கள் நிஜாம் ஷா மற்றும் அடில் ஷா ஆகியோரின் கைகளுக்குத்தான் சென்று சேர்ந்தது. குல்பர்காவின் சுல்தான்களால் நிலைநிறுத்தப்பட்ட இஸ்லாமிய ஆதிக்கமும் இஸ்லாமிய கலாசாரமும் அஹமது நகர் மற்றும் பீஜப்பூர் அரசுகளினால் தொடர்ந்து பலப்படுத்தப்பட்டன. 17-ம் நூற்றாண்டின் முதல் கால்பகுதியில் நிஜாம் ஷாக்களின் ஆட்சி முழுமையாக வீழ்ச்சியுற்றது. அஹமது நகர் அரசில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப பீஜப்பூர் ஆட்சியாளர்கள் விரைந்தனர்.
ஆனால் தென்னிந்தியாவில் 17-ம் நூற்றாண்டுவாக்கில் புதிதாக ஓர் அரச சக்தி எழுந்தது. மொகலாயப் பேரரசர் இப்போது தக்காணத்தை ஆக்கிரமிக்க வழிபிறந்திருந்தது. 17-ம் நூற்றாண்டு முழுவதுமே இந்த ஆதிக்கமே மேலோங்கியது. பீஜப்பூரின் ஆட்சியாளரான அடில் ஷா பாமினிகள் மற்றும் நிஜாம் ஷாக்களின் வாரிசு என்ற வகையில் தென்னிந்தியா முழுவதையும் வென்று கீழடக்கும் கனவை விட்டுக்கொடுக்கவேண்டிவந்தது. வடக்குப் பகுதிகளின் பயங்கரமான ஆட்சியாளர்களான மொகலாயர்களுடன் மோதுவதைவிடுத்து தமது ஆதிக்கத்துக்கு வடிகாலாக மேலும் தெற்குப் பக்கமாக நகரவேண்டிவந்தது.
1636-ல் செய்துகொண்ட பிரிவினை ஒப்பந்தத்தின்படி மொகலாய தக்காணப் பகுதியின் தென் எல்லை மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தது. அடுத்த 20 ஆண்டுகள் பீஜப்பூர் சுல்தான் அரசு, இந்திய தீபகற்பத்தில் ஒரு கடலோரத்தில் ஆரம்பித்து இன்னொரு கடல் ஓரம் வரையிலான பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. பீஜப்பூர் சுல்தானகத்தின் உச்சகட்ட வலிமை நிலவிய காலம் அது. அவர்களுடைய தலைநகரமே கலைகளுக்கும் இலக்கியங்களுக்ம் மதவியலுக்கும் பல்வேறு அறிவுத்துறைகளுக்கும் தாயகமாகத் திகழ்ந்தது. முந்தைய போர் வெறி மிகுந்த அரசர்களைப் போல் போர்க்களக் கூடாரங்களில் தங்குவதிலும் குதிரையேறிப் போர் புரிவதிலும் கவனம் செலுத்துபவர்களாக அல்லாமல் அந்தப்புரங்களிலும் அரச தர்பார் நடவடிக்கைகளிலும் அதிக கவனம் செலுத்துபவர்களாக ஆனார்கள். அடில் ஷாவின் ராஜ்ஜியத்தின் உச்சமே அதன் வேகமான வீழ்ச்சியின் தொடக்கமாகவும் ஆகிப்போனது.
நில உடமைக்கால சாம்ராஜ்ஜிய விஸ்தரிப்பு அரசை மிதமான அரசராலோ அல்லது அரசியல் சாசன பிரதம மந்திரியாலோ நிர்வகிக்க முடியாது. மன்னர் போர் வெற்றிகளைக் குவிக்கும் நாயகராக இல்லாவிட்டால் பிராந்தியங்களை ஆளும் அவருடைய தளபதிகள் அவருக்கு அடிபணிந்து நடக்கமாட்டார்கள். எனவே மாபெரும் வெற்றிவீரரான அடில் ஷா நவம்பர் 1656-ல் இறந்ததைத் தொடர்ந்து தக்காணத்தில் இருந்த பிற இஸ்லாமிய அரசுகள் எல்லாம் சிதைய ஆரம்பித்தன. வலிமை மிகுந்த மொகலாய சாம்ராஜ்ஜியத்தினால் அந்தப் பகுதிகள் எல்லாம் வெகு எளிதில் சீக்கிரமே கைப்பற்றப்பட்டிருக்கும். இது மிகவும் இயல்பாக நடந்தேறியிருக்கக்கூடிய விஷயமே. ஆனால், தக்காண அரசில் புதியதாக ஒரு சக்தி முளைத்து வந்தது.
அவர்கள்தான் மராட்டியர்கள்.
அந்த நூற்றாண்டின் தென்னிந்திய வரலாறு மற்றும் ஔரங்கசீப் ஆட்சிக் கட்டிலில் ஏறியதைத் தொடர்ந்து 18-ம் நூற்றாண்டின் கடைசி ஐம்பது ஆண்டுகள் வரையிலுமான வட இந்திய வரலாறு ஆகியவற்றை இந்த மராட்டியர்களே ஆதிக்கம் செலுத்தினர். என்றிலிருந்து என்று கணக்கிடமுடியாத காலம் தொடங்கி மராட்டியர்கள் ஆட்சியில் இருந்துதான் வந்திருக்கின்றனர். ஆனால் 13-ம் நூற்றாண்டு தொடங்கி ஆட்சி அதிகாரம் இழந்து சொந்த மண்ணிலேயே அந்நிய ஆட்சியின் கீழ் அடங்கி வாழ நேர்ந்திருந்தது. எந்தவொரு அரசியல் அதிகாரமும் மதிப்பும் மரியாதையும் இன்றி சில நூற்றாண்டுகள் வாழ நேர்ந்திருந்தது. சிதறிக் கிடந்த மராட்டிய சக்திகள் மற்றும் வளங்களையெல்லாம் ஒன்று திரட்டி ஒரு தேசமாக ஆக்குவதற்கு ஒரு மாபெரும் தலைவரின் தேவை இருந்தது. மொகலாய சாம்ராஜ்ஜியத்தை கூரான வாள் போல் ஊடுருவிக் கிழிக்க ஒரு மாவீரனின் வருகை அவசியமாக இருந்தது. அந்த மாவீரனாக வந்தார் ஒளரங்கஜேபின் சமகாலத்தவரும் அவருடைய பரம விரோதியுமாக இருந்த சத்ரபதி சிவாஜி.
விந்திய மலைக்குத் தெற்குப் பக்கம் இருக்கும் பகுதிகளை வென்றாகவேண்டும் என்று பேரரசர் அக்பர் முடிவு செய்த நாளில் ஆரம்பித்து அதற்கு 94 வருடங்கள் கழித்து ஒளரங்கஜேபின் படைகள் குதுல் சுல்தான்களின் தலைநகரை வென்றது வரையிலும் பீஜப்பூர், கோல்கொண்டா ராஜ்ஜியங்களின் சுல்தான்கள் ஒரு நாள்கூட நிம்மதியாக இருந்ததில்லை. பீஜப்பூர்-கோல்கொண்டா அரசுகளை முற்றாக அழித்து அந்தப் பகுதிகளைத் தன்னுடன் இணைத்துக்கொள்வதையே மொகலாயப் பேரரசு தன் இலக்காகக் கொண்டிருக்கிறது என்பது பீஜப்பூர்-கோல்கொண்டா சுல்தான்களுக்கு நன்கு தெரிந்திருந்தது. அந்தப் பேரபாயத்தை எதிர்கொள்ள மாவீரர்கள் சிவாஜி மற்றும் சாம்பாஜியின் தளராத போர்க்குணமே தமக்கு ஒரே பாதுகாப்பு என்று அவர்கள் புரிந்துகொண்டிருந்தனர். பீஜப்பூர் அல்லது கோல்கொண்டா சுல்தான்களும் ஒளரங்கஜேபும் ஒன்று சேர்ந்து மராட்டியர்களை வீழ்த்துவதென்பது நடைமுறை சாத்தியமில்லாத கூட்டணியாகவே இருந்தது.
பீஜப்பூர் மற்றும் கோல்கொண்டாவை சுதந்தரமாக இயங்கவும் பலம் பெற்றுவந்த மராட்டிய சக்தியை தடுக்கும் வகையிலும் ஔரங்கசீப் அந்த சுல்தானகங்களை அனுமதித்திருந்தால் அதுவே அறிவார்ந்த செயலாக இருந்திருக்கும் என்று ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதைச் செய்யாமல் தவறியதால் மராட்டிய சக்தி மொகலாயர்களால் வீழ்த்தமுடியாத அளவுக்கு பலம் பெற்றுவிட்டது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இது உண்மையில் தக்காண அரசியல் சூழலைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் சொல்லப்பட்ட கூற்று.
இஸ்லாமியப் படைகளில் இருந்த மராட்டிய தளபதிகள் எல்லாம் சிவாஜி மஹராஜின் தலைமையின் கீழ் அணி திரண்டு வலிமையான அரசு ஒன்றை உருவாக்கிய காலகட்டத்துக்கு முன்பாகவே பீஜப்பூர்-கோல்கொண்டா சுல்தானகங்கள் தம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டிருந்தன. அதன் மன்னர்கள் எல்லாம் வெறும் சுக போகங்களில் திளைப்பவர்களாக ஆகிவிட்டிருந்தனர். வாஸிர் நில வரி உரிமை தொடர்பாக நடைபெற்றுவந்த உள் மோதல்களினால் எப்போதும் தலைநகர் ரத்தக் களறியாகவே இருந்தது. ஆட்சி நிர்வாகம் முற்றாக நிலைகுலைந்திருந்தது. சட்ட ஒழுங்கு கெட்டுவிட்டிருந்தது. பிராந்திய ஆட்சிப் பிரதிநிதிகள் எல்லாம் தனியாகப் பிரிந்து ஆட்சி செய்யத் தொடங்கியிருந்தனர். படைத்தளபதிகள் எல்லாம் அதிக பணம் கொடுப்பவர் பக்கம் சாயத்தொடங்கியிருந்தனர். இப்படியான சுல்தானகத்தினால் ஔரங்கசீப் செய்தற்கு மேலாக சாம்பாஜியை கட்டுக்குள் வைக்கவோ சாந்தா கோர்பரேயை அடக்கிவைக்கவோ நிச்சயம் முடிந்திருக்காது.
தக்காணத்தில் அரசியல் களம் இவ்விதமாகவே இருந்தது: மொகலாயர்களின் அராஜக நடவடிக்கைகள் கோல்கொண்டா சுல்தானை முழுமனதுடனும் பீஜப்பூர் சுல்தானைத் தயக்கத்துடனும் இடையிடையேயுமாக சிவாஜி மஹராஜ் பக்கம் அடைக்கலம் தேடவைத்தன. மொகலாயப் படைகள் பீஜப்பூரை முற்றுகையிட நெருங்கியகாலங்கள் மற்றும் அடில் ஷாவுக்கு நெருக்கடி முற்றிய காலங்களில் மட்டுமே சிவாஜியின் படைகளுடன் பீஜப்பூர் சுல்தான் கூட்டணி அமைத்துக்கொண்டார். அதேநேரம் சிவாஜி மஹராஜ் பீஜப்பூர் பகுதிகளையும் கோட்டைகளையும் கைப்பற்றி தன்வசமாக்கிக் கொண்டுவிடக்கூடும் என்ற அச்சத்தில் இந்தக் கூட்டணியை வெகு சீக்கிரமே கலைத்துக்கொள்ளவும் செய்துவந்தார். தக்காணத்திலிருந்த மூன்று இஸ்லாமிய அரசுகளில் குதுப் சுல்தானின் அரசை நாம் தனியே வைத்துவிடலாம். ஏனென்றால் இந்தக் காலகட்டத்தில் அவர்கள் மொகலாய அரசுடன் மோதலில் இருந்திருக்கவில்லை. 1646-ல் முஹம்மது அடில் ஷா நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானதிலிருந்தே பீஜப்பூர் அரசு வீழ்ச்சியடைய ஆரம்பித்திருந்தது. எனினும் 1666 வாக்கில் இரண்டாம் அடில் ஷா முழுவதும் சுகபோகங்களில் திளைக்க ஆரம்பித்த காலத்தில் வாஸிர் உரிமைக்காகவும் தலைநகரைக் கைப்பற்றவும் அவருடைய பிரதிநிதிகளே சண்டையிடத் தொடங்கியிருந்தனர். எனவே பீஜப்பூர் அரசின் வீழ்ச்சி அதிவேகமாகிவிட்டிருந்தது. 1672-ல் சிறிய வயதினரான சிக்கந்தர் ஆட்சிக் கட்டில் ஏறவேண்டிய நிலை ஏற்பட்டபோது பீஜப்பூர் சுல்தானின் ஆட்சி என்பது அதன் பிராந்தியப் பிரதிநிதிகளின் ஆட்சியாகிவிட்டிருந்தது. நிர்வாகம் முழுமையாக நிலைகுலைந்திருந்தது. இது சிவாஜி தனியொரு அரசராக பலம் பெற வழிவகுத்தது.
தில்லி அரசின் நட்புறவு, ஒப்பந்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றும் குணம் இவற்றையெல்லாம் சிவாஜி ஒருபோதும் நம்பியிருக்கவே இல்லை. எனவே அவர் தக்காணத்தில் இருந்த மொகலாயப் பகுதிகளைக் கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் தன்வசமாக்கிக் கொண்டார். பீஜப்பூருடன் அவருடைய நட்புறவு சற்று வித்தியாசமானதாக இருந்தது. பீஜப்பூர் பகுதிகளைக் கைப்பற்றியே அவரால் தலைதூக்கவும் ராஜ்ஜிய விஸ்தரிப்பைச் செய்யவும் முடிந்தது. ஆனால் அடில் ஷாவின் அமைச்சர்களுடன் செய்துகொண்ட ஓர் உடன்படிக்கையின் பேரில் பீஜப்பூர் சாம்ராஜ்ஜியத்தின் தலைநகர் பகுதியைக் கைப்பற்றுவதைக் கைவிட்டார். பீஜப்பூர் பிரதிநிதிகளின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகளே (கோலாபூர், கனரா, கோபால் போன்றவை) மராட்டிய சாம்ராஜ்ஜிய விஸ்தரிப்பு உகந்ததாக அதன் எல்லையை ஒட்டி அமைந்திருந்தன. இதனால், பீஜப்பூர் அரசுடன் மோதலை விரும்பியிருக்காத நிலையிலும் அவரால் அமைதியாகத் தொடர்ந்து இருக்கவும் முடிந்திருக்கவில்லை.
2. தக்காணத்தில் மொகலாயர்களின் பலவீனங்கள்
1658 ஜனவரியில் தந்தையிடமிருந்து சாம்ராஜ்ஜியத்தைப் பறிக்க ஔரங்கசீப் தக்காணத்தில் இருந்து புறப்பட்டதிலிருந்து தொடங்கி 1682 மார்ச்சில் அவர் தக்காணத்துக்குத் திரும்பியதுவரையிலான இடைப்பட்ட 24 ஆண்டுகளில் மொகலாய பிரதிநிதிகளாக ஐந்து வைஸ்ராய்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இளவரசர் ஷா ஆலம் 11 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். பஹதூர் கான் ஆறு வருடங்கள், சைஸ்தா கான் நான்கு வருடங்கள், ஜெய் சிங் இரண்டு வருடங்கள், திலிர் கான் ஒருவருடம் தக்காணத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தனர். இந்த 24 ஆண்டுகளில் ஜெய் சிங் (1666), பஹதூர் கான் (1676-77), திலிர் கான் (1679-80) ஆகிய காலங்களில் மட்டுமே மொகலாயர்கள் பீஜப்பூர் பகுதிகளுக்குள் ஊடுருவி ஆக்கிரமிக்க முயன்றனர். மராட்டியர்களுக்கு எதிரான படையெடுப்புகள் சைஸ்தா கான் (1660-62), ஜெய் சிங் (1665), மொஹ்பத் கான் (1671-72), பஹதூர் கான் (1673-75) திலிர் கான் (1678079) காலகட்டத்தில் மொகலாயர்களால் முன்னெடுக்கப்பட்டன. சிவாஜிக்கும் மொகலாயர்களுக்கும் இடையில் போர் இதைவிட அதிக காலம் நீடித்தது. ஆனால் பேரரசின் தளபதிகள் தொலைதூர எஜமானரை ஏமாற்றிவிட்டு சிவாஜியுடன் (பின்னாளில் சாம்பாஜியுடன்) ரகசிய ஒப்பந்தங்கள் செய்துகொண்டும் லஞ்சப் பணம் கொடுத்துக்கொண்டும் இருந்துவந்தனர்.
இந்த 24 ஆண்டுகளில் தக்காணத்தில் மொகலாயர்களுக்கு ஒரு சில வெற்றிகளே கிடைத்தன. மற்றபடி எந்தவொரு இறுதி வெற்றியும் கிடைத்திருக்கவில்லை. இந்தத் தோல்விக்கு ஒரு காரணம் அரசியல் சார்ந்தது. இன்னொன்று அந்த நபர்களின் தனிப்பட்ட விஷயங்கள், ஆளுமை சார்ந்தது. இளவரசர் ஷா ஆலம் அடிப்படையிலேயே போர்க் குணம் அற்றவர். அண்டை பகுதிகளுடன் அமைதியையே விரும்பினார். அந்தப்புர சுகங்களே உவப்பானதாகவும் இருந்தன. அதோடு அவருடைய தலைமைத் தளபதி திலீர் கான் எப்போதும் இளவரசரின் மேலாதிக்கத்தை வெளிப்படையாக எதிர்த்தே வந்தார். இதனால் தக்காணத்தில் இருந்த மொகலய வைஸ்ராய் நிர்வாகம் எப்போதும் உட் குழு மோதலினால் சிதைந்தே கிடந்தது. இவர்கள் இருவரும் எதிரும் புதிருமாகச் செயல்பட்டதால் தக்காணத்தில் மொகலாய ஆதிக்கம் மிகவும் பலவீனமாகவே இருந்தது.
இரண்டாவதாக, மொகலாயப் படைத் தளபதிகள் சிவாஜியின் படையுடனான முடிவற்ற போர்களினால் மிகவும் தளர்ந்துபோயிருந்தனர். மொகலாயப் படைகளில் இருந்த ஹிந்து தளபதிகள் பலர் ஹிந்துத்துவக் காவலரான சிவாஜி மஹராஜிடம் ரகசிய நட்புறவு பாராட்டினர். முஸ்லிம் தளபதிகளோ போர் தொல்லையில் இருந்துவிடுபட சிவாஜிக்கு லஞ்சப் பணம் (கப்பம்) கொடுக்கத் தயாராக இருந்தனர். பீஜப்பூர் படைகளையும் மராட்டியர்களையும் தோற்கடிப்பதற்குத் தேவையான பணம் மற்றும் ஆட்பலத்தில் பாதிகூட தக்காணத்தில் இருந்த மொகலாய ஆட்சிப்பொறுப்பாளருக்குத் தரப்பட்டிருக்கவே இல்லை.
இளவரசர் அக்பரின் கலகம், சாம்பாஜியுடன் அவர் சென்று சேர்ந்தது இவையெல்லாம் தில்லி அரியணைக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தின. தென் பகுதிக்கு ஔரங்கசீப் நேரில் சென்றாலே நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்ற நிலை உருவானது.
இப்படியாக, மொகலாயப் பேரரசு தக்காணம் தொடர்பான தன் நிலைப்பாட்டை முழுவதுமாக மாற்றியமைக்கும் நிர்பந்தம் உருவானது. சாம்பாஜியை உடனடியாக அடக்கி ஒடுக்கவேண்டும். கலகம் செய்த அக்பரை முடக்கியாகவேண்டும். இதுவே ஒளரங்கஜேபின் முதல் இலக்காக ஆனது.
3. மஹாராஷ்டிரம் மக்களும் பிராந்தியமும்
மராட்டியர்களின் ராஜ்ஜியம் மூன்று தெளிவான பகுதிகளை உள்ளடக்கியது. மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் இந்தியக் கடலுக்கும் (சிந்து கடலுக்கும்) இடைப்பட்ட நீண்ட , பல்வேறு அகலங்களில் இருக்கும் கொங்கன் பகுதி (மும்பைக்கும் கோவாவுக்கும் இடைப்பட்ட பகுதி) கனரா (கோவாவின் தெற்கே). இந்தப் பிராந்தியத்தில் ஆண்டுக்கு 100-120 அங்குலம் கன மழை கட்டாயம் பொழியும். நெல்தான் பிரதான பயிர். அடர்த்தியான மாந்தோப்புகள், வாழைப்பழத் தோட்டங்கள், தென்னந்தோப்புகள் நிறைந்த நிலம்.
இந்த மலைத் தொடரைத் தாண்டினால் சுமார் 20 மைல் அகலம் கொண்ட நிலப்பரப்பு இருக்கிறது. இது மாவெல் என்று அழைக்கப்படுகிறது. இருபுறமும் சுழன்று சுழன்று செல்லும் பள்ளத்தாக்குகளைக் கொண்ட நிலப்படுகை.
கிழக்குப் பக்கம் செல்லச் செல்ல மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் மெள்ள மெள்ளக் குறுகிச் சென்று ஆற்றுப்படுகை விரிந்துகொண்டே சென்று மத்திய தக்காணத்தின் கரிசல் மண் படுகையாக விரியும்.
மலைகளால் சூழப்பட்ட இந்தப் படுகைக்கு கிழக்குப் பக்கம் மட்டுமே நுழைவாயில் பகுதி உண்டு. மராட்டிய சாம்ராஜ்ஜியத்தின் தொட்டில். மலைத்தொடர்களுக்குக் கிழக்கே மழைப்பொழிவு வெகுவாகக் குறைந்து காணப்படும். எப்போது மழை வரும் என்பதும் உறுதியில்லை. எனவே விவசாயத்துக்குப் போதுமான நீர் கிடைக்காது. இந்த மண் இயல்பிலேயே வளமற்றது. இடையிடையே பாறைப்பாங்கான குன்றுகள் நீண்டு செல்லும். இந்த தக்காணப் பகுதி கடின உழைப்பைக் கோரும் பகுதி. போதிய வாழ்வாதாரம் கிடைக்கவும் செய்யாது.
இப்படியான இயற்கை நிலவியல் எளிமையான வாழ்க்கையை நிர்பந்தப்படுத்தியிருப்பதால் இங்கு சுகபோகங்கள், ஆடம்பரங்களுக்கோ ஓய்வு நிறைந்த வாழ்க்கைக்கோ (புரோகித வர்க்கத்தினர் நீங்கலாக) இடமில்லை. எந்தவொரு கலை ரசனைகளின் வளர்ச்சிக்கோ இதமான நடைமுறைகளுக்கோ இடமில்லை. தற்சார்பு, வீரம், விடாமுயற்சி, அதீத எளிமை, நேர்வழியில் செல்லும் குணம், சமூக சமத்துவம், ஆண்மை மீதான பெருமிதம் கொண்டவர்களாக இருந்தனர். ஏழாம் நூற்றாண்டில் இங்குவந்த சீன பயணி யுவான் சுவாங், ‘மராட்டியர்கள் பெருமிதம் மிகுந்த உத்வேகம் மிகுந்த போர்க்குணம் மிகுந்தவர்கள். நன்மை செய்தவர்களிடம் நன்றி உணர்வும் தவறு செய்தவர்கள் மீது பழிவாங்கும் போர்க்குணமும் மிகுந்தவர்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அடுத்த பத்து நூற்றாண்டுகள் தந்திரம் மிகுந்தவர்களாகவும் நற்பண்பு குறைந்தவர்களாகவும் ஆனார்கள். ஆனால் துடிப்பு, சுய சார்பு, சுய கெளரவம், சமத்துவம் ஆகிய குணங்கள் நிறைந்தவர்களாகவே நீடித்தனர்.
பிற வளமான நாகரிகமடைந்த சமூகங்களைவிட 16-ம் நூற்றாண்டு மராட்டியர்களிடையே சமூக வேறுபாடுகள் மிகவும் குறைவுதான். இந்த சமத்துவ உணர்வானது மதத்தினால் வளர்த்தெடுக்கப்பட்டிருந்தது. மராட்டியர்களின் 15 மற்றும் 16-ம் நூற்றாண்டு துறவிகள் எல்லாம் ஒருவருடைய நன்னடத்தைக்கே முக்கியத்துவம் தந்தனர்; பிறப்புக்கு அல்ல. கடவுளுக்கு முன்பாக அனைவரும் ஒன்றே என்று போதித்தனர்.
ஆரம்பகால மராட்டிய சமூகத்தின் எளிமையும் ஒன்றுபட்டதன்மையும் அவர்களுடைய இலக்கியம், மொழி ஆகியவற்றில் நன்கு வெளிப்பட்டது. அது ஏழ்மையுடனும் போதிய வளமற்றும் ஆனால், மிகுந்த செல்வாக்குடனும் திகழ்ந்தது. இயற்கை அந்த சமூகத்துக்கு வலிமையான யாராலும் எளிதில் கைப்பற்ற முடியாத கோட்டைகளை, அரண்களை வழங்கியிருந்தது. எதிரிகள் முற்றுகையிடும்போது அந்தப் பகுதிகளுக்கு தப்பிச் சென்று அடைக்கலம் தேடிக் கொண்டுவிடுவார்கள். எல்லா மலைத்தொடர்களும் சமதளமான பாறைச் சுவரில் சென்று முடிவடைகின்றன. தனித்தனியான மலைகளாகவும் இருக்கின்றன. இவை இயற்கையான கோட்டைபோலவே இருக்கின்றன. உச்சியில் சமதளமான பகுதிகொண்டதாகவும் அவற்றில் நன்னீர் ஊற்றுகள் மிகுதியாகவும் இருக்கும்.
அப்படியாக, மொழி, குலம், வாழ்க்கை சார்ந்து ஓர் அற்புதமான சமூகமாக மஹாராஷ்டிர பிரதேசம் 17-ம் நூற்றாண்டுவாக்கில் முன்னேறிய நிலையில் இருந்தது. சிவாஜியால் அரசியல் ஒற்றுமை அதன்பின் கொண்டுவரப்பட்டது.
சிவாஜியின் படையானது மராத்தா மற்றும் கன்பி ஜாதியைச் சேர்ந்த எளிய விவசாயத்தில் ஈடுபட்டுவந்தவர்களைக் கொண்டதாக இருந்தது. அவர்கள் எளிமை, வெளிப்படைத்தன்மை, சுதந்தர குணம் கொண்டவர்களாக இருந்தனர். குறிப்பாக கடினமான சூழல்களிலும் உறுதியுடன் தாக்குப்பிடிப்பவர்களாக இருந்தனர்.
தக்காணத்தை இஸ்லாமியர்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து கடைசி இந்து ராஜ்ஜியம் 14-ம் நூற்றாண்டுவாக்கில் முடிவுக்கு வந்திருந்தது. உள் நாட்டுப் போர்க்குடிகள் எல்லாம் தத்தமது குலத் தலைவர்களின் கீழ் சிறிய அணிகளாகத் திரண்டிருந்தனர். அந்தப் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்களுக்குப் படைகளை அனுப்பி உதவிவந்தனர். பல மராட்டிய குடும்பங்கள் செல்வத்திலும் அதிகாரத்திலும் மேல்நிலைக்குச் சென்றன. அக்கம்பக்கத்தில் இருந்த இஸ்லாமிய அரசுகளில் படைத்தளபதிகளாக, கூலிப் படைகளாக சிலர் இருந்தனர்.
(தொடரும்)
___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின் தமிழாக்கம்.