4. ஷாஜி போ(ன்)ஸ்லே
போஸ்லே குலம் புனே மாவட்டத்தில் படாஸ் பகுதியில் இருந்த இரண்டு கிராமங்களின் தலையாரி குடும்பமாக இருந்தது. விவசாயத்தில் ஈடுபட்டுவந்த அவர்கள் தமது நேர்மையான குணம் மற்றும் தான தர்மங்கள் செய்ததன் மூலம் செல்வாக்கு பெற்றிருந்தனர். ஒருமுறை அவர்களுடைய நிலத்தில் இருந்து கிடைத்த புதையல் பணத்தைக் கொண்டு ஆயுதங்கள், குதிரைகள் வாங்கி 16-ம் நூற்றாண்டின் இறுதிவாக்கில் நிஜாம் ஷாஹி வம்ச ஆட்சியில் படை வீரர்களாக, தளபதிகளாக ஆனார்கள். மாலோஜி போஸ்லேயின் மூத்த மகன் ஷா(ஹ்)ஜி போஸ்லே.
1594-ல் பிறந்த இவருக்கு, அஹமது நகரின் புகழ் பெற்ற ஹிந்து நிலப்பிரபுக்களில் ஒருவரும் சிந்தகேத் பகுதியின் ஆட்சியாளரும் உயர் குடியில் பிறந்தவருமான லாக்ஜி யாதவ் ராவின் மகள் ஜீஜா பாயுடன் திருமணம் நடந்தது. நிஜாம் ஷாவின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்த மாலிக் அம்பரின் நிர்வாகத்தில் ஷாஜி போஸ்லே முதலில் படைத்தலைவராக இருந்தார். 1626-ல் மாலிக் அம்பர் இறந்ததும் அந்தப் பகுதியில் குழப்பம் உருவானது. ஆட்சியைக் கைப்பற்ற பலர் முயற்சி செய்தனர். அந்தக் கலவரமான காலகட்டத்தில் ஷாஜி முதலில் நிஜாம் ஷாஹியின் பக்கமே இருந்தார். அதன் பின்னர் மொகலாயர் பக்கம் சேர்ந்தார். அவர்களிடமிருந்து விலகிச் சென்று பீஜப்பூர் சுல்தான்களை எதிர்த்துப் போரிட்டார். அதன் பின் அவர்களுடன் நட்புறவு பாராட்டினார். கடைசியாக சஹ்யாத்ரி மலைப் பகுதியில் நிஜாம் ஷாஹி ஆட்சிப் பொறுப்பில் ஒரு பொம்மை அரசரை நியமித்து தன் கட்டுக்குள் வைத்துக்கொண்டார் (1633).
புனே தொடங்கி சாக்கான் வரையும் பாலகாட் வரையும் ஜுனார், அஹமது நகர், சங்கமனெர், திரியம்பக், நாசிக் என நிஜாம் ஷாஹியின் பிராந்தியம் முழுவதையும் கைப்பற்றினார். சுல்தானின் பெயரில் மூன்று ஆண்டுகாலம் (1633-36) இவரே ஆட்சி நிர்வாகம் செய்தார். தனது தலைநகராக ஜுனார் பகுதியை ஆக்கிக் கொண்டார். ஆனால், மொகலாயப் பேரரசினர் 1636 வாக்கில் மிகப் பெரிய படையுடன் இவரைத் தாக்கி படு தோல்வி அடையச் செய்தனர். இவருடைய எட்டு கோட்டைகளை அவர்கள் கைப்பற்றிக்கொண்டனர். இதைத் தொடர்ந்து ஷாஜி போஸ்லே மஹாராஷ்டிராவிலிருந்து புறப்பட்டுச் சென்று பீஜப்பூர் சுல்தானின் படைத்தளபதியாக ஆனார்.
5. சிவாஜியின் குழந்தைப் பருவம், கல்வி, குண நலன்கள்
10, ஏப்ரல், 1627-ல் ஜுனார் பிராந்தியத்துக்கு மேலே இருந்த சிவனேர் மலைக்கோட்டையில் ஷாஜி போஸ்லேவுக்கும் ஜீஜாபாய்க்கும் இரண்டாவது மகனாக சிவாஜி பிறந்தார். பீஜப்பூர் சுல்தானிடம் படைத்தளபதியாக ஷாஜி போஸ்லே 1636 இறுதிவாக்கில் சேர்ந்தார். மைசூர் பீடபூமி மற்றும் துங்கபத்ரா நதிப்படுகைப் பகுதிகளைக் காக்கும் பொறுப்பு அவருக்குத் தரப்பட்டது. அதன் பின்னர் புதிய எஜமானருக்காக புதிய நிலப்பகுதிகளைக் கைப்பற்றவும் தனக்கான ஆளுகைப் பகுதிகளை (ஜாஹிர் வரி வசூலித்துக்கொள்ளும் பகுதிகளை) வென்றெடுக்கவும் மதராஸ் கடற்கரைகளுக்கு அனுப்பப்பட்டார். ஆனால், அவருடைய ப்ரியத்துக்குரிய மனைவி துக்கா பாயையும் மகன் வ்யான்காஜியும் மட்டும் உடன் அழைத்துச் சென்றார். ஜீஜாபாயும் சிவாஜியும் தாதாஜி கொண்ட தேவின் பராமரிப்பில் புனேவில் பாதுகாப்பாக வாழ அனுப்பிவைக்கப்பட்டனர்.
கணவர் தன்னை உடன் அழைத்துச் செல்லாததால் மனம் உடைந்த ஜீஜாபாய் யாருடனும் அதிகம் பேசாதவராகவும் இறை வழிபாட்டில் திளைப்பவராகவும் ஆனார். அந்த இறை பக்தி மகனுக்கும் வந்து சேர்ந்தது. சிவாஜிக்கு சிறு வயதில் நண்பர்கள், சகோதரர்கள், சகோதரிகள், தந்தை என யாரும் அருகில் இல்லாமல் பெரிதும் தனிமையிலேயே வாழ நேர்ந்தது. தனிமையில் வாழ்ந்த தாய்க்கும் மகனுக்கும் இடையே பாசப் பிணைப்பு பலப்பட்டது. தன் தாயை தெய்வமாக மதித்துப் போற்றும் அளவுக்கு அந்த பாசம் வளர்ந்தது.
சிறு வயதிலிருந்தே சிவாஜிக்கு சுய காலில் நின்றாகவேண்டிய நிர்பந்தம் இருந்தது. யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் சுயமாகவே அனைத்தையும் முடிவெடுக்க வேண்டியிருந்தது. எந்தவொரு எஜமானரும் இல்லாமல் தன்னிச்சையாக இயங்க வேண்டியிருந்தது. அனைத்தையும் செய்து பார்த்துக் கற்றுக்கொள்ளவேண்டியிருந்தது. வாள் சண்டை, குதிரையேற்றம் போன்ற பலவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றார். இந்து காவியங்கள், புராணங்கள் அனைத்தையும் கதைகளாகவும் கதா காலக்ஷேபங்களாகவும் கேட்டு வளர்ந்தார். அவை சொல்லும் நீதி நெறிகள், அரசியல் நுட்பங்கள் எல்லாவற்றையும் புரிந்துகொண்டார். கீர்த்தனைகள், மத நூல் வாசிப்பு ஆகியவற்றில் அதிக ஈடுபாடு காட்டினார். எங்கு சென்றாலும் ஹிந்து துறவிகள், முஸ்லிம் சூஃபிகளைச் சந்திப்பது அவர் வழக்கம்.
புனே மாவட்டத்தின் மேற்குப் பகுதி அல்லது மாவல் என்ற பகுதி நீண்டதொரு காடாக இருந்தது. சஹ்யாத்ரி மலைத் தொடரில் அமைந்த அந்தப் பகுதியில் வீரமும் திடகாத்திரமும் மிகுந்த மாவல் விவசாயக் குலம் வசித்து வந்தது. சிவாஜியின் படையின் ஆரம்பகட்ட வீரர்கள் அந்தக் குலத்திலிருந்தே வந்தனர். அவர் மீது அவர்கள் உயிரையே வைத்திருந்தனர். மாவல் குலத் தலைவர்களின் துணையுடன் இளம் சிவாஜி சஹ்யாத்ரி மலைத் தொடர், கோட்டைப் பகுதிகள், ஆற்றுப் பள்ளத்தாக்குகள், அடர்ந்த காடுகள் என தொடர்ந்து அலைந்து திரிந்து நெருக்கடியான சூழலுக்குத் தன்னை வலுவாகத் தகவமைத்துக்கொண்டார். இன்ப துன்பங்களினால் மனம் அலைபாயாத தன்மையும் மத, ஆன்மிகப் பற்றும் இளம்வயதிலேயே சிவாஜிக்கு இயல்பாகவே கைவந்தது. இஸ்லாமிய மன்னருக்குத் தன் தந்தை படைத்தளபதியாக இருப்பதை வெறுக்க ஆரம்பித்தார். சுதந்தர வேட்கை மிகுந்தவராக வளர்ந்தார்.
தாதாஜி கொண்ட தேவ் 1647 நடுப்பகுதியில் இறந்தார். அப்படியாக 20 வயதில் சிவாஜி முழுவதும் சுதந்தரமான தனி நபரானார். போர்ப்பயிற்சி, ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றில் ஏற்கெனவே நல்ல பயிற்சி பெற்றிருந்தார். தனது தந்தையின் பொறுப்பில் இருந்த மேற்குப் பகுதி ஜாஹிர் படைகளுடன் ஏற்கெனவே நல்ல பரிச்சயம் பெற்றிருந்தார். பின்னாளில் அவர்கள் அவருடைய படையினராக ஆனார்கள். தலைமைக்குணம், சாகசத் துடிப்பு எல்லாம் இயல்பாகவே அவரிடம் வளர்ந்துவந்தன.
6. சிவாஜியின் ஆரம்ப கால வெற்றிகள்
பீஜப்பூரின் வரலாற்றில் 1646-ம் வருடம் மிகவும் முக்கியமானது. மன்னர் முஹம்மது அடில் ஷா தீவிர நோயில் விழுந்தார். அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அவரால் எந்தவொரு ஆக்கபூர்வமான அரசாங்கப் பணியும் செய்ய முடியாமல் போனது. சிவாஜிக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்தது. தோர்னா கோட்டையின் நிர்வாகத்தில் இருந்த பீஜப்பூர் தளபதியை வீழ்த்தி அதைக் கைப்பற்றினார். அங்கிருந்த இரண்டு லட்ச பணம் அவர் கைக்கு வந்தது. அந்தக் கோட்டைக்கு ஐந்து மைல் தொலைவில் மலை உச்சியில் ராஜ்கர் என்ற புதிய கோட்டையைக் கட்டினார். பின்னர் கோண்டனா பகுதியையும் பீஜப்பூர் தளபதியிடமிருந்து கைப்பற்றினார். தாதாஜியின் மறைவுக்குப் பின்னர், ஷாஜியின் மேற்குப் பக்க வாஸிர் பகுதிகள் அனைத்தையும் சிவாஜி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். அப்படியாக தனது ஆளுகையின் கீழ் ஒரு வலுவான, ஒருங்கிணைந்த நிலப்பகுதியைக் கொண்டுவந்தார்.
25, ஜூலை, 1648-ல் ஷாஜி போஸ்லே கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த படையும் தென் ஆர்க்காடு பகுதியில் செஞ்சி கோட்டைத் தளபதியாக இருந்த முஸ்தஃபா கான் மூலம் பறிக்கப்பட்டது.
பீஜப்பூருக்கு ஷாஜி போஸ்லேயை சங்கிலி மாட்டிக் கொண்டுவந்து சுல்தானிடம் ஒப்படைத்தனர்.
சிவாஜிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தக்காணத்தில் இருந்த மொகலாயப் பிரதிநிதி முராத் பக்ஷிடம் உதவி கேட்டார். ஷாஜி போஸ்லே கடந்தகாலத்தில் செய்த தவறுகளை மன்னித்துவிடும்படியும் அவருக்கும் அவருடைய குழந்தைகளுக்கும் பாதுகாப்பு தரும்படியும் இதன் கைமாறாக மொகலாயப் படையில் வந்து சேரத் தயாராக இருப்பதாகவும் பேரரசரிடம் தெரிவிக்கச் சொன்னார். ஷாஜி போஸ்லேயை விடுவிக்கும்படி அடில் ஷாவுக்கு ஷாஜஹான் எந்த அழுத்தமும் தரவில்லை. பங்களூரு, கொண்டானா, கந்தர்பி ஆகிய மூன்று கோட்டைகளை சிவாஜி பீஜப்பூர் சுல்தானுக்கு விட்டுக் கொடுத்தால் ஷாஜி போஸ்லேயை விடுவிக்கத் தயார் என்று பீஜப்பூர் செல்வந்தர் அஹமது கான் மூலம் மத்யஸ்தம் பேசப்பட்டது. இப்படி ஒரு நிபந்தனை மூலம் ஷாஜி போஸ்லே விடுவிக்கப்பட்டதால், 1649 தொடங்கி 1655 வரை சிவாஜி பீஜப்பூர் சுல்தானைக் கோபமடையச் செய்யும் எதையும் செய்யாமல் அமைதியாக இருந்தார். இந்தக் காலகட்டத்தில் மராட்டிய பேஷ்வா பிராமணர்களிடமிருந்த புரந்தர் கோட்டையைத் தந்திரமாகக் கைப்பற்றினார்.
சத்ரா மாவட்டத்தின் வட மேற்குக் கோடியில் ஜாவ்லி என்ற கிராமம் இருக்கிறது. மிகப் பெரிய சமஸ்தானத்தின் தலைமையகமாக அது இருந்தது. மோர் என்ற மராட்டிய குலம் அங்கு ஆதிக்கத்தில் இருந்தது. அதன் தலைவர்களுக்கு வம்சாவளியாக சந்திர ராவ் என்ற பட்டப் பெயர் இருந்துவந்தது. மாவல் குலத்தினரைப் போலவே கட்டான உடல்வாகு கொண்ட மலைவாழ் வீரர்கள் சுமார் 12,000 பேர் இந்தத் தலைவரின் கீழ் இருந்தனர்.
ஜாவ்லி பகுதி தெற்கு மற்றும் தென் மேற்கில் சிவாஜி முன்னேறிச் செல்ல தடையாக இருந்தது. எனவே சந்திர ராவின் மகளுக்கும் தனக்கும் திருமண நிச்சயதார்த்தம் என்ற போர்வையில் சந்திர ராவை அழைத்து, ரகசியமாகக் கொன்றுவிடும்படி சிவாஜி தன் பிராமண உதவியாளரான ரகுநாத பலால் கரோடை அனுப்பிவைத்தார். சந்திர ராவ் கொல்லப்பட்ட செய்தி கேட்டு ஜாவ்லி பகுதி மீது படையெடுத்துச் சென்று தாக்கினார் (15, ஜன, 1656). தலைவர் இல்லாத கோட்டை வீரர்கள் ஆறு மணி நேரம் போராடி இறுதியில் தோற்றனர். ஒட்டு மொத்த ஜாவ்லி அரசும் சிவாஜியின் வசம் வந்து சேர்ந்தது. அதற்கு இரண்டு மைல் மேற்கே பிரதாப்கர் என்ற புதிய கோட்டையை எழுப்பினார். தேவிபவானியின் திரு உருவச் சிலையை அங்கு ஸ்தாபித்தார். மோர் குலத்திடமிருந்து ஏப்ரல் வாக்கில் ராய்கர் கோட்டையைக் கைப்பற்றினார். அதுவே பின்னர் அவருடைய தலைநகரமானது.
7. மொகலாயர்களுடன் சிவாஜியின் முதல் போர், 1657.
முஹம்மது அடில் ஷா நவம்பர் 4, 1656-ல் இறந்ததும் பீஜப்பூரை ஆக்கிரமிக்க ஒளரங்கசீப் வேகமாகத் தயாரானார். அடில் ஷா அரசில் இருந்து தன் பக்கம் எத்தனை அமைச்சர்கள், அதிகாரிகள், படைத்தளபதிகள் ஆகியோரை இழுக்க முடியும் என்று வேகம் காட்டினார். சிவாஜியின் தூதர் சோனாஜி பிதாருக்கு முன் போடப்பட்ட இளவரசரின் முற்றுகை முகாமை அடைந்தார் (மார்ச் 1657). மேலும், சிவாஜியின் வசம் இருக்கும் பீஜப்பூர் கோட்டைகள், கிராமங்கள் அனைத்தையும் மொகலாயப் பேரரசு அங்கீகரித்து அனுமதிக்கவேண்டும் என்றும் தபோல் கோட்டை மற்றும் அதையொட்டிய பகுதிகளையும் தன்னுடன் இணைத்துக்கொள்ள மொகலாயப் பேரரசு அனுமதிக்கவேண்டும் என்றும் சிவாஜி தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. மராட்டியத் தலைவர் கேட்டுக்கொண்டவற்றை நிறைவேற்றித் தரும் என்று இளவரசரின் படை, வாக்குக் கொடுத்தது.
ஒளரங்கசீப் இதற்கு பதிலளித்து 23, ஏப், 1657-ல் இவற்றை ஒப்புக்கொண்டு ஒரு கடிதம் அனுப்பினார். ஆனால், சிவாஜி தனது ராஜ்ஜியத்தை நிலை நிறுத்திக்கொள்ள வேறு வழி ஒன்றை ஏற்கெனவே திட்டமிட்டுவைத்திருந்தார். மொகலாய இளவரசர் ஒளரங்கசீப் தரும் வாக்குறுதிகளையெல்லாம் பெரிதாக நம்ப முடியாது. மொகலாயர்களின் ஆளுகையில் இருந்த தக்காணத்தின் தென் மேற்கு பிராந்தியத்தை ஊடுருவிக் கைப்பற்ற பீஜப்பூர் படையெடுப்பை ஒரு திசை திருப்பலாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பினார்.
3000 குதிரைப் படையினரைக் கொண்ட மினாஜி போஸ்லே மற்று காசி என்ற இரண்டு மராட்டிய தளபதிகள் பீமா நதியைக் கடந்து சென்று முறையே சாமர்கந்தா மற்றும் ரஸின் பகுதி ஆகிய மொகலாய கிராமங்களைத் தாக்கிக் கைப்பற்றினர். மொகலாய தக்காணத்தின் பிரதான நகரமான அஹமது நகர் வரையிலும் முன்னேறிச் சென்று ஆக்கிரமித்தனர் (ஏப்ரல், 1657). அஹமது நகர் கோட்டையின் காவல் எல்லைக்குள் இருந்த பேத் நகருக்குள் மராட்டிய படை ஊடுருவ முயன்றது. அந்த முயற்சிகள் கோட்டைக் காவல் வீரர்களின் சரியான நடவடிக்கைகளினால் முறியடிக்கப்பட்டன.
அதே நேரம் சிவாஜி வடக்கில் இருந்த ஜுனார் பகுதியைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். ஏப்ரல் 30 அன்று நள்ளிரவில் ஜுனார் கோட்டைச் சுவர் வழியாக ரகசியமாக நூலேணிகள் மூலம் ஏறிச் சென்று கொத்தளங்களில் இருந்த காவல் வீரர்களை வீழ்த்தினார். அந்தக் கோட்டையைக் கைப்பற்றி அங்கிருந்த 3 லட்சம் பணம், 200 குதிரைகள், விலை உயர்ந்த பொருட்கள், நகைகள் ஆகியவற்றைக் கைப்பற்றினார். இவற்றையெல்லாம் கேள்விப்பட்ட ஒளரங்கசீப் அஹமது நகர் பகுதிக்கு, நஸ்ரி கான், இராஜ் கான் மற்றும் பல அதிகாரிகளின் தலைமையில் சுமார் 3000 குதிரை வீரர் படையை அனுப்பிவைத்தார். இதனிடையில் அஹமது நகர் கோட்டையில் இருந்து புறப்பட்டுச் சென்ற முல்தாஃபத் கான், சமர்கந்தா காவல் அரணை முற்றுகையிட்டிருந்த மினாஜி போஸ்லேயின் படையைத் தோற்கடித்து அந்தப் பகுதியை மீட்டார் (28, ஏப்ரல்).
வடக்கு பூனா பகுதியில் மொகலாயர்களின் நெருக்குதல் அதிகரித்ததும் சிவாஜி தன் படையுடன் அஹமது நகருக்குச் சென்று அதைத் தாக்க ஆரம்பித்தார். இதனிடையில் (மே இறுதிவாக்கில்) நஸிரி கான் களத்துக்கு வந்து சேர்ந்திருந்தார். எதிர்பாராத வகையில் நீண்ட நெடிய பயணத்தை விரைவாக முடித்து சிவாஜியின் படையை கிட்டத்தட்ட சுற்றி வளைத்துவிட்டார். அந்தப் போரில் ஏராளமான மராட்டிய வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். எஞ்சியவர்கள் தப்பி ஓடினர் (4 ஜூன்).
சிவாஜியின் ராஜ்ஜியத்துக்குள் அனைத்துப் பக்கங்களிலிருந்தும் தாக்குதல் நடத்தும்படி ஒளரங்கசீப் உத்தரவிட்டார். ’கிராமங்கள் எல்லாம் சூறையாடப்பட்டன. மக்கள் கருணையின்றிக் கொல்லப்பட்டனர். கொள்ளையடிப்பு உச்சத்தை எட்டியது’. தென் வடக்கு முனையைப் பாதுகாக்க அவர் முன்னெடுத்த முயற்சிகள் அவருடைய போர்த்திறமைக்கும் வியூகத் திறமைக்கும் சான்றாக விளங்கின. இந்தக் காலகட்டத்தில் பருவ மழை தீவிரமாகப் பொழிய ஆரம்பித்தது. இதனா ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் போர் நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்பட்டன.
செப்டம்பர் வாக்கில் பீஜப்பூர் மன்னர் அமைதிக்கான நேசக்கரம் நீட்டியதும் மொகலாயர்களுடனான போரைத் தனியாக முன்னெடுப்பது பயனற்றது மட்டுமல்ல; பெரும் அழிவையே கொண்டுவரும் என்பதை சிவாஜி புரிந்துகொண்டார். தன் ராஜாங்க அதிகாரி ரகுநாத பந்த் மூலம் ஒளரங்கசீபுக்குத் தூது அனுப்பினார். வட இந்தியாவுக்கு தன் படையுடன் புறப்பட்டுக் கொண்டிருந்த இளவரசர் ஒளரங்கசீப், சிவாஜிக்கு ஒருகடிதம் அனுப்பினார் (25, ஜன, 1658): நீங்கள் செய்த குற்றங்கள் மன்னிக்கத் தகுந்தவை அல்ல. எனினும் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் மன்னிக்கிறேன்’.
ஆனால், ஒளரங்கசீபின் மனம் அமைதியடையவில்லை. இளம் வீரரான சிவாஜியின் திறமை மற்றும் துணிச்சலை தனது தந்திரங்களின் மூலம் மட்டுமே வெல்லமுடியும். அவரைப் போன்ற சாகசக்காரர்கள் எல்லாம் விசுவாசத்தை விட சுய உரிமை, சுய நலன் ஆகியவற்றுக்கே முன்னுரிமை கொடுப்பார்கள் என்பது அவருக்குத் தெரியும்.
1657-ன் முதல் கால்பகுதியில், தில்லி அரியணையைக் கைப்பற்ற இளவரசர் ஒளரங்கசீப் வடக்கு நோக்கி பயணத்தை ஆரம்பித்தார். மொகலாயர்களுடன் சமீபத்தில் நடந்து முடிந்திருந்த போரில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு யார் காரணம் என்றூ பீஜப்பூர் சுல்தானின் அமைச்சர்கள், அதிகாரிகளிடையே மோதல் ஏற்பட்டது. வாஸிராக இருந்த கான் முஹம்மதுவின் கொலையில் இந்த மோதல் முடிந்தன. இந்த நிகழ்வுகள் எல்லாம் சிவாஜியின் முயற்சிகளுக்கு இருந்த தடைகளை விலக்கிவிட்டன. மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக கொங்கன் பகுதிக்குள் புயலெனப் பாய்ந்தார். கடலோரப் பகுதியின் வட முனையில் காலியன் (இன்றைய தானே பகுதி) மாவட்டம் இருந்தது. பீஜப்பூரின் மேட்டுக்குடிகளில் ஒன்றான (புலம் பெயர்ந்து வந்திருந்த) நவையாத் குலத்தைச் சேர்ந்த முல்லா அஹமது என்ற அரபியரால் ஆளப்பட்டுவந்தது.
கோட்டைச் சுவர்/ காவல் பாதுகாப்புகள் இல்லாத காலியான் மற்றும் பிவந்தி ஊர்களை சிவாஜி எளிதில் கைப்பற்றினார் (24, அக், 1657). அங்கிருந்த செல்வம், விலை மதிப்பு மிகுந்த பொருட்களை சிவாஜி கைப்பற்றினார். ஷாஜி போஸ்லேயின் இறுதி அடைக்கலப் பகுதியாக இருந்த மஹுலி கோட்டையையும் (8, ஜன, 1658) சிவாஜி கைப்பற்றினார். தென் திசையில் கொலாபா மாவட்டம் வரையில் இருந்த சிறிய போர்க்குலங்கள் எல்லாம் இஸ்லாமிய ஆதிக்கத்தை வீழ்த்தத் தயாராக இருந்தன. எனவே அவை சிவாஜியை கடிதம் எழுதி வரவழைத்தன. விரைவிலேயே காலியன் பகுதியும் பிவந்தியும் சிவாஜியின் ராஜ்ஜியத்தின் கடலோர காவல் அரண்களாகவும் தளவாடப் பகுதிகளாகவும் மாற்றப்பட்டன.
1659 வாக்கில் சத்ரா மாவட்டத்தின் தென் எல்லைவரையிலும் வட கொங்கன் பகுதியில் மஹுலி தொடங்கி மஹத் வரை தன் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார்.
(தொடரும்)
___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின் தமிழாக்கம்.