8. அஃப்சல்கானை பீஜப்பூரில் சிவாஜி வீழ்த்துதல், 1659
எல்லைப் பகுதியில் மொகலாயர்களின் தொடர்ச்சியான நெருக்குதலிலிருந்து 1659 வாக்கில் பீஜப்பூர் அரசுக்கு விடுதலை கிடைத்தது. உடனே தனது ஆளுகைக்குட்பட்ட குறுநில ஆட்சியாளர்களை வழிக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்தது. அப்துல்லா பதாரி அஃப்சல்கானிடம் சிவாஜியை அடக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. சமீபத்திய மொகலாயர்களுடனான போர்களிலும் கர்நாடகப் படையெடுப்புகளிலும் வீரத்துடன் முன்னணியில் இருந்து போரிட்ட தளபதி. ஆனால், அஃப்சல்கானுடன் 10000 குதிரைப்படை வீரர்களை மட்டுமே அனுப்ப முடிந்தது. மாவ்லே காலாட்படையினரின் எண்ணிக்கையோ அறுபதாயிரத்துக்கும் மேலிருக்கும் என்று சொல்லப்பட்டது. இதனால் அஃப்சல்கான் நட்பை விரும்புவதுபோல் நடித்து சிவாஜியைச் சிறைப்பிடிக்கவோ கொல்லவோ செய்யும்படி ஷாவின் விதவை பேகம் ஆலோசனை கூறினார். அதன்படியே அஃப்சல்கானும் சிவாஜிக்கு தனது பிரதிநிதி கிருஷ்ணாஜி பாஸ்கர் மூலம் தூது அனுப்பினார்:
‘நண்பரே… உங்கள் தந்தை ஷாஜி போன்ஸ்லே என்னுடைய நெருங்கிய நண்பர். எனவே நீங்கள் எனக்கு அந்நியரல்ல. என்னை வந்து சந்தியுங்கள். கொங்கன் மற்றும் உங்கள் வசம் இருக்கும் கோட்டைகளையெல்லாம் உங்களுக்கே தந்துவிடும்படி அடில் ஷாவிடம் நான் பேசி சம்மதம் வாங்கித் தருகிறேன்’ என்று செய்தி அனுப்பினார்.
அஃப்சல் கான் அனுப்பிய தூதுவர் கிருஷ்ணஜி பாஸ்கரரை சிவாஜி மரியாதையுடன் நடத்தினார். ரகசியமாக இரவில் அவரை சந்தித்து, அஃப்சல்கானின் உண்மையான நோக்கம் என்ன என்பதை ஒரு இந்து என்ற வகையிலும் புரோகிதர் என்ற வகையிலும் கிருஷ்ணஜி பாஸ்கரர் தனக்குச் சொல்லவேண்டும் என்று சத்தியம் செய்யச் சொல்லிக் கேட்டார். இதற்கு முன்னர் சேரா கோட்டையை முற்றூகையிட்டபோது அதன் அரசர் கஸ்தூரி ரங்கா இதுபோல் பேச்சுவார்த்தைக்கு வந்தபோது அவரை நயவஞ்சகமாக அஃப்சல்கான் கொன்றிருந்தான். கிருஷ்ணாஜி பாஸ்கரர் அதைச் சூசகமாகச் சொல்லி அஃப்சல்கானின் தந்திரத்தை சிவாஜிக்குக் கோடிகாட்டினார். சிவாஜி உடனே தனது உதவியாளர் பந்தஜி கோபிநாத்தை கிருஷ்ண ஜியுடன் அனுப்பிவைத்தார். அவர் அங்கு சென்று அஃப்சல்கானின் அதிகாரிகள் சிலருக்குக் கையூட்டு கொடுத்தார். சிவாஜியைப் போரில் வெல்ல முடியாதென்பதால் தந்திரமாகக் கைது செய்ய அஃப்சல்கான் திட்டமிட்டிருப்பதாக அவர்களும் சொன்னார்கள்.
சந்திப்புக்கான இடமாக பிரதாப்கர் கோட்டையின் கீழ்ப்பகுதியில் கோய்னா பள்ளத்தாக்கைப் பார்த்தபடி இருக்கும் சமதளத்தில் அலங்கார வேலைப்பாடுகள் மிகுந்த கூடாரம் அமைக்கப்பட்டது. கூடாரத்தின் இரு பக்கத்திலும் தளபதி, இரண்டு ஆயுதம் தாங்கிய வீரர்கள், ஒரு ராஜாங்க அதிகாரி என நான்குபேர் இருந்தனர். சிவாஜி ஆயுதம் எதுவும் இல்லாமல் சரணடைய வந்தவர்போல் வந்தார். அஃப்சல்கான் வசம் ஆயுதம் இருந்தது. ஆனால் சிவாஜியின் இடதுகையில் புலி நகங்கள் கைவிரல்களுடன் வளையங்களால் கட்டப்பட்டிருந்தன. முழுக்கை சட்டைக்குள் பிச்சுவா கத்தியும் மறைத்துவைக்கப்பட்டிருந்தது.
உதவியாளர்கள் கீழே சற்று தொலையில் நின்றுகொண்டிருந்தனர். சிவாஜி உயரமான இடத்தில் அமர்ந்திருந்த அஃப்சல்கானைப் பார்த்து வணக்கம் தெரிவித்தபடியே மேலேறிச் சென்றார். கான் தனது ஆசனத்தில் இருந்து எழுந்து, சிவாஜியை ஆரத் தழுவுவதுபோல் கைகளை விரித்தபடி நெருங்கினான். அஃப்சல் கானின் தோளுயரமே சிவாஜி இருந்தார். மெலிந்த உடல் வாகுவேறு. கட்டி அணைத்த அஃப்சல்கான் திடீரென்று சிவாஜியின் கழுத்தை இடதுகையால் நெரித்தான். வலது கையால் பெரிய குத்துவாளை எடுத்து சிவாஜியின் விலாப்பக்கத்தில் ஓங்கிக் குத்தினான். ஆனால் சிவாஜி, ஆடைக்குள் கவசம் அணிந்திருந்ததால் கத்தியால் துளைக்கமுடியவில்லை. கழுத்து நெரிபட்டதால் மூச்சுவிட முடியாமல் திணறினார். ஆனால் சட்டென்று சுதாரித்துக்கொண்டு தன் புலி நகக் கையை அப்சல்கானின் இடுப்புப் பக்கம் பாய்ச்சி குடலை உருவி வெளியே எடுத்தார். வலது கையால் பிச்சுவாவை உருவி அப்ஃசல்கான் மீது பாய்ச்சினார். காயம்பட்ட அஃப்சல்கான் தளர்ந்து பின்வாங்க சிவாஜி அவனுடைய பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு மேடையில் இருந்து கீழிறங்கி தன் வீரர்களை நோக்கிச் சென்றார்.
துரோகி… கொலைகாரன்… காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று அஃப்சல்கான் கத்தினான். அவனுடைய ஆட்கள் விரைந்து உதவிக்கு ஓடிவந்தனர். அஃப்சல்கானுக்கு வலக்கரமாக இருந்த மற்றும் வாள் வீச்சில் கை தேர்ந்த சையது பந்தா சிவாஜியை நேருக்கு நேர் எதிர்கொண்டு அவருடைய தலையில் வாளைப் பாய்ச்சினான். சிவாஜியின் தலைப்பாகை கிழிந்து, உள்ளே அணிந்திருந்த இரும்புக் கவசத்திலும் ஓட்டை விழுந்தது. ஆனால் சிவாஜியின் தளபதி சிவ் மஹாலா பாய்ந்து வந்து சையதின் கையை வெட்டி எறிந்ததோடு அவன் மார்பில் கத்தியைப் பாய்ச்சிக் கொல்லவும் செய்தார். இதனிடையில் சம்பூஜி காவ்ஜி, அஃப்சல் கானின் தலையைக் கொய்து சிவாஜியிடம் கொண்டுவந்து பெருமிதத்துடன் சமர்ப்பித்தார்.
எதிரிகளை வீழ்த்திய சிவாஜியும் வீரர்களும் பிரதாப் கர் கோட்டைக்குள் சென்று பிரங்கியை வெடித்தனர். கீழே பள்ளத்தாக்கில் பதுங்கியிருந்த அவருடைய வீரர்களுக்கான வெற்றி சமிக்ஞை அது. மோரோ திம்பக், நேதாஜி பால்கர் ஆகியோரின் தலைமையினால மால்வா படையினர் பீஜப்பூர் படைகளை நான்குபக்கமிருந்தும் சுற்றி வளைத்தனர். அஃப்சல்கானின் படையினர் தலைவரின் உயிர் போன செய்தியைக் கேள்விப்பட்டதும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்த்திராத அவர்கள் அவர்களுக்குப் பரிச்சயம் இல்லாத அந்த இடத்தில் பெரும் அச்சத்தில் ஆழ்ந்தனர். அங்கிருந்த ஒவ்வொரு புதருக்குப் பின்னாலும் எதிரிகள் ஒளிந்திருப்பதாக அஞ்சி நடுங்கினர்.
பீஜப்பூர் படை துவம்சம் செய்யப்பட்டது. அவர்களுடைய போர்த்தளவாடங்கள், வெடி மருந்துகள், செல்வம், கூடாரம், பிற கருவிகள், போக்குவரத்துக்கான கால்நடைகள், வண்டிகள், ஒட்டு மொத்த படையின் உணவுப் பொருட்கள், பிற பொருட்கள் அனைத்தையும் சிவாஜி படையினர் கைப்பற்றினர். 65 யானைகள், 4000 குதிரைகள், 1200 ஒட்டகங்கள், 2000 பொதி துணிகள், பத்து லட்சம் பணம், நகைகள் எனக் கிடைத்தன.
அஃப்சல்கானைக் கொன்று அவனுடைய படையுடனான போரில் வெற்றி பெற்ற மராட்டியர்கள் (10, நவ, 1659), தென் கொங்கன் மற்றும் கோலாபூர் பகுதிகளுக்குள் நுழைந்து பீஜப்பூர் சுல்தானின் இன்னொரு படையையும் தோற்கடித்து பனாலா கோட்டையையும் கைப்பற்றினர் (டிச, 1659 – பிப் 1660).
9. பனாலா கோட்டையில் சிவாஜி சிறைவைப்பு
1660-ல் இரண்டாம் அடில் ஷா தனது அபிசீனிய அடிமை சித்தி ஜாஹுர் (சலாபத் கான்) தலைமையில் ஒரு படையை அனுப்பி சிவாஜியை அடக்கத் தீர்மானித்தார். பனாலா கோட்டைக்குள் சிவாஜியை ஜாஹுர் துரத்தினார் (2, மார்ச், 1660). அங்கு அவருடைய 15,000 வீரர்கள் இருந்தனர். சிவாஜி தந்திரமாக சலாபத் கானை தன் வழிக்குக் கொண்டுவந்தார். அந்த முற்றுகை வெறும் கண் துடைப்பாக முன்னெடுக்கப்பட்டது. கொல்லப்பட்ட அஃப்சல் கானின் மகன் ஃப்சல் கான் மராட்டியப் படையை ஆக்ரோஷத்துடன் தாக்கினான். பனாலா கோட்டைக்கு அருகில் இருந்த மலை உச்சியைக் கைப்பற்றி அந்தக் கோட்டையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை உருவாக்கினான்.
13 ஜூலை நள்ளிரவில் சிவாஜி அங்கிருந்து தன் படைவீரர்களில் பாதி பேருடன் தப்பிச் சென்றார் (13, ஜூலை). பீஜப்பூர் படை அவர்களைத் துரத்தியபோதிலும் மேற்கில் 27 மைல் தொலைவில் இருந்த விஷால்கர் பகுதிக்குத் தப்பிச் சென்றனர். பின்வரிசையில் இருந்த பாஜி பிரபு தலைமையிலான படை பீஜப்பூர் படைகளை கஜபூர் கணவாய் பகுதியில் தடுத்து நிறுத்தியதால் சிவாஜியின் படையினரால் எளிதில் தப்பிக்க முடிந்தது. சிவாஜி பனாலா கோட்டையில் விட்டுச் சென்ற பாதி வீரர்கள் அந்தக் கோட்டையை 22 செப்டம்பரில் பீஜப்பூர் சுல்தான் வசம் விட்டுக் கொடுத்தனர்.
10. ஷாயிஸ்தா கான் புனே மற்றும் சக்கான் பகுதியை ஆக்கிரமித்தல்.
1660-ன் தொடக்கத்தில் தக்காணப் பகுதியின் மொகலாய பிரதிநிதியான ஷாயிஸ்தா கான் வடக்குப் பக்கமாக சிவாஜிக்கு எதிராகப் படையெடுத்தார். அதேநேரத்தில் பீஜப்பூர் சுல்தானின் படைகள் தெற்குப் பக்கமாக இருந்து தாக்கும்படியும் ஏற்பாடு செய்திருந்தார். 25 பிப்ரவரியில் மிகப் பெரிய படையுடன் அஹமத் நகலிருந்து புனே மாவட்டத்தின் கிழக்குப் பக்கமாக படையுடன் முன்னேறினார். கிழக்கு மற்றும் தெற்குப் பக்கங்களில் புனேக்கு செல்லும் வழியில் இருந்த அனைத்து கோட்டைகள், காவல் அரண்களை வரிசையாகக் கைப்பற்றினார். மராட்டியப் படையினர் முதலில் எந்த எதிர்ப்பும் காட்டாமல் புரந்தர் பகுதிவரை பின்வாங்கினர். மே, 9 வாக்கில் புனேக்குள் மொகலாயப் படை வெற்றிகரமாக உள்ளே நுழைந்தது.
19, ஜூனில் புனேயில் இருந்து புறப்பட்டு அருகில் (வடக்கே 18 மைல் தொலைவில்) இருந்த சக்கான் பகுதிக்கு 21-ம் தேதியன்று சென்று சேர்ந்தார். அங்கிருந்த கோட்டையை வேவு பார்த்து அதை நோக்கிப் படையெடுக்கத் தேவையான பதுங்குகுழிகள், படை அரண்கள் அமைக்க ஆரம்பித்தார். 54 நாட்கள் கடுமையாக சுரங்கம் அமைத்து கோட்டையின் வட கிழக்கு முனையில் 14, ஆக, 1660 மதியம் மூன்று மணி வாக்கில் ஒரு வெடி குண்டை வெடிக்கச் செய்தார். கோட்டைச் சுவரும் காவல் வீரர்களும் வெடித்துச் சிதறினர். மொகலாயப் படை கோட்டைக்குள் நுழைந்து தாக்கியது. அடுத்த நாளில் அந்தக் கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆனால் இந்தப் போரில் மொகலாயப் படையில் 268 பேர் கொல்லப்பட்டனர். 600 பேர் காயமடைந்தனர்.
சக்கான் கோட்டையைக் கைப்பற்றியபின் (1660, ஆகஸ்ட் முடிவில்) ஷாயிஸ்தா கான் புனேக்குத் திரும்பிவந்தார். மழைக்காலம் ஆரம்பித்திருந்ததால் அது முடியும்வரை அங்கு முடங்கிக் கிடக்க நேர்ந்தது. அந்த ஓய்வு நேரத்தைப் பயனுள்ளவகையில் பயன்படுத்திக்கொண்டார். பரிந்தா பகுதியின் பீஜப்பூர் தளபதி காலிபிடம் அந்தப் பகுதியை பெரும் தொகையை வாங்கிக்கொண்டு ஒளரங்கசீபுக்குக் கொடுத்துவிடும்படி நைச்சியமாகப் பேசி சம்மதிக்கவைத்தார்.
அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் (1661) ஷாயிஸ்தா கான் வடக்கு கொங்கன் அல்லது காலியன் மாவட்டத்தின் மீது தன் கவனத்தைக் குவித்தார். இங்கு இஸ்லாமயில் கானின் தலைமையில் வெறும் 3000 வீரர்கள் மட்டுமே கொண்ட படை, கடந்த ஏப்ரல் முதல் இந்தப் பிரதேசத்தையும் காலியன் கோட்டை மற்றும் நகரம் போன்ற சிலவற்றையும் பாதுகாத்துவந்தது.
ஜனவரி, 1661-ல் புனேயிலிருந்து கர் தல்ப் கான் தலைமையில் வலிமையான மொகலாயப் படை கொங்கன் பகுதிக்குள் ஊடுருவியது. உம்பர்கிண்ட் (பெணே நகருக்கு 15 மைல் கிழக்கில்) பகுதியில் சிவாஜியின் படையினர் இவர்கள் முன்னேறிச் செல்லவும் பின்வாங்கித் தப்பிக்கவும் முடியாதபடி ரகசியமாகச் சுற்றி வளைத்தனர். கர் தல்ப் கானின் படை தாகத்துக்கு நீர் கிடைக்காமல் தவித்து அடுத்த அடி எடுத்துவைக்க முடியாமல் துவண்டது. தனது படையினரிடம் இருந்த அனைத்தையும் சிவாஜிக்கு கப்பமாகக் கொடுத்துவிட்டு தன் படையுடன் உயிர் தப்பி ஓடினார் (3, பிப், 1661).
காலியன் மாவட்டம் இப்படியாக எதிரிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டதும் அதை அப்படியேவிட்டுவிட்டு சிவாஜி தென் திசையில் இருந்த நகரங்கள் ஒவ்வொன்றையாகக் கைப்பற்றியபடியே தண்ட-ராஜ்புரி தொடங்கி கரேபதன் வரையான கடலோரப் பகுதி முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். ஆனால் அடுத்ததாக வந்த பெரிய தோல்வி ஒன்று இந்த வெற்றிப் பயணத்தைத் தடுத்து நிறுத்தியது.
மே, 1661-ல் மராட்டியர்களிடமிருந்து காலியன் நகரை மொகலாயர்கள் கைப்பற்றினர். அடுத்த ஒன்பது ஆண்டுகள் அது அவர்கள் வசமே இருந்தது. கொங்கன் பகுதியின் வட முனையில் மொகலாயர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகள் வலுவாகக் காலூன்றி நின்றனர். தென் பகுதி சிவாஜியின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. மார்ச் 1663-ல் சிவாஜியின் படையில் குதிரைப் படைத் தளபதியாக இருந்த நேதாஜியின் படையை நீண்ட தூரம் தீவிரமாகத் துரத்திச் சென்றனர். நேதாஜி பிடிபடாமல் தப்பிச் சென்றார். ஆனால், 300 குதிரைகளுக்கும் அவருக்கும் காயம்பட்டது.
11. ஷாயிஸ்தா கான் மீதான சிவாஜியின் நள்ளிரவுத் தாக்குதல்
இந்தப் பின்னடைவுகளுக்கு ஒரு மாதம் கழித்து சிவாஜி மொகலாயர்களுக்கு மரண அடி கொடுத்தார். தக்காணத்தின் மொகலாய பிரதிநிதியை அவர் எதிர்பாராதவிதமாக அவருடைய கூடாரத்துக்குள் சென்று தாக்கினார். அவருடைய மெய்க்காவல் படை, அடிமை வீரர்கள் அனைவரையும் தாண்டிச் சென்று ஷாயிஸ்தா கானை படுக்கை அறையிலேயே சென்று தாக்கினார்.
புனேயில் சிவாஜி தன் இளமைப் பருவத்தைக் கழித்த லால் மஹாலில் ஷாயிஸ்தா கான் தங்கியிருந்தார். அவருடைய அந்தப்புர மகளிரும் உடன் இருந்தனர். அவருடைய மாளிகையைச் சுற்றிலும் பாதுகாவலர்களும் பணியாளர்களும் நிரம்பியிருந்தனர். போர் முரசுகள், டிரெம்பட்கள் கொண்ட அறையும் அங்கு இருந்தது. அதற்கு அப்பால் சாலையில் தென் திசையில் சிங்க கர் போகும்வழியில் அவருடைய தளபதி மஹாராஜா ஜஸ்வந்த் சிங்கின் கூடாரம் இருந்தது. அங்கு அவருடன் சுமார் 10,000 வீரர்களும் இருந்தனர். அவர்களைத் தாண்டி உள்ளே சென்று தாக்குவதென்றால் மிக அதிக சாமர்த்தியமும் அதி வேகப் பாய்ச்சலும் இருந்தாலே சாத்தியம்.
சிவாஜி, தன்னுடைய தளபதிகளான நேதாஜி பால்கர் மற்றும் பேஷ்வா மார பந்து ஆகிய இருவரின் கீழ் தலா ஆயிரம் வீரர்களைக் கொண்ட படைகளை, மொகலாயர்களின் முகாமை வெளிப்புறமாக ஒரு மைல் தொலைவில் நின்று தாக்கும்படி அனுப்பினார். இரவானதும் (ஞாயிறு, 5, ஏப், 1663) திறமைசாலியான 400 வீரர்களுடன் புனே மாவட்டத்துக்குள் நுழைந்தார். மொகலாயப் படையில் இருந்த தக்காணப் படைவீரர்கள் காவலுக்காகத் தத்தமது இடங்களுக்குச் சென்று சேரும்வரை சில மணி நேரம் பிரதான முகாமுக்கு அருகில் பதுங்கியிருந்தார். அவருடைய பால்ய காலத்தைக் கழித்தது அந்த ஊரில்தானே. எனவே அந்த ஊரின் அத்தனை குறுக்குச் சாலைகளும், தெருக்களும் சிவாஜிக்கு நன்கு தெரியும்.
இஸ்லாமியர்களின் விரத காலமான ரமலான் மாதத்தின் ஆறாம் நாள். நவாபின் வீட்டுப் பணியாளர்கள் எல்லாம் பகல் முழுவதுமான விரதம், இரவில் சேர்த்துவைத்துச் சாப்பிட்ட உணவு என களைத்துப்போய் தூங்க ஆரம்பித்திருந்தனர். ரமலான் மாதத்தில் அதிகாலை உணவுக்காக சில சமையல்காரர்கள் தூங்கி எழுந்து சமையலறையில் வேலைகளில் இருந்தனர். அவர்களை மராட்டியப் படையினர் சத்தம் எழாமல் முடித்துக்கட்டினர். இந்த வெளிப்புற சமையலறையையும் அந்தப்புரத்துக்குள் இருந்த மெய்க்காவலர் அறையையும் ஒரு திரைப் படுதா பிரித்திருந்தது. முன்பு அந்த மெய்க்காவலர் அறையில் ஒரு கதவு இருந்தது. அந்தப்புரத்துக்குத் தனிமை வேண்டும் என்பதால் அந்தக் கதவை எடுத்துவிட்டு சுவர் எழுப்பிவிட்டிருந்தார்கள்.
மராட்டிய வீரர்கள் அந்த புதிய சுவரை மெள்ள உடைத்து வழி ஏற்படுத்திக்கொண்டனர். சிவாஜி தன்னுடைய நம்பகமான தளபதி சிம்னாஜி பாபுஜியுடன் முதலில் உள்ளே நுழைந்தார். பின்னால் அவருடைய 200 வீரர்களும் நுழைந்தனர். ஷாயிஸ்தா கானின் படுக்கை அறையை அடைந்ததும் அங்கிருந்த பெண்கள் பயந்து அலறிக்கொண்டு ஓடினர். நவாப் எழுந்து ஆயுதத்தை எடுக்கும் முன் சிவாஜி அவர் மீது பாய்ந்து கட்டைவிரலை வாளால் வெட்டி வீழ்த்தினார். அங்கிருந்த பெண்களில் சிலர் சமயோசிதமாக விளக்குகளை ஏற்றினர். இருளில் ஏற்கெனவே இரண்டு மராட்டிய வீரர்கள் தடுமாறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்திருந்தனர். இந்தக் களேபரங்களுக்கு நடுவே சில அடிமைப் பெண்கள் ஷாயிஸ்தா கானை பத்திரமான இடத்துக்குத் தூக்கிச் சென்றனர். மராட்டியவீரர்கள் இருளுக்குள் எதிர்பட்டவர்களையெல்லாம் வெட்டினர்.
இதனிடையில் வெளியில் நிறுத்தப்பட்ட சிவாஜியின் வீரர்களில் மீதி பேர் (200) பிரதான வாசல் வழியாகப் பாய்ந்து வந்து தூங்கி கொண்டிருப்பவர்களையும் முழித்துக் கொண்டிருப்பவர்களையும் இதுதான் நீங்கள் காவல் காக்கும் லட்சணமா என்றபடியே வெட்டி வீழ்த்தினர். அதன் பின் போர்ப்படைக் கருவிகள் இருக்கும் மண்டபத்தினுள் நுழைந்து ஷாயிஸ்தா கான் உத்தரவிட்டதாகச் சொல்லி இசைக்கருவிகளை இசைக்கச் சொன்னார்கள். அந்த முரசுகளின் உரத்த சப்தம் மற்ற அனைத்துக் சப்தங்களையும் மூழ்கடித்தன. எதிரிகளின் கூச்சலும் குழப்பமும் அதிகரித்தன.
ஷாயிஸ்தா கானின் மகன் அதுல் ஃபதே, தந்தையைக் காப்பாற்ற முதலில் ஓடி வந்தான். ஆனால் அந்த இளைஞன் இரண்டு மூன்று மராட்டியர்களைக் கொன்ற பின்னர் அவர்களால் கொல்லப்பட்டான்.
எதிரிகள் முழுவதும் எழுந்து ஆயுதம் தரித்ததைப் பார்த்ததும் சிவாஜியும் வீரர்களும் அங்கிருந்து வெளியேறி எந்தப் பிரச்னையும் தடைகளும் இன்றி தாம் திட்டமிட்ட பாதையில் தப்பிச் சென்றனர். இந்த கெரில்லா தாக்குதலில் மராட்டியர்களில் ஆறு பேர் மட்டுமே இறந்தனர். 40 பேர்மட்டுமே காயமடைந்தனர். ஷாயிஸ்தா கானின் மகன், தளபதி, 40 பணியாளர்கள், அடிமைகள் ஆகியோர் கொல்லப்பட்டனர். எட்டு பெண்களும் இரண்டு மகன்களும் ஷாயிஸ்தா கானும் காயம்பட்டனர். சிவாஜியின் இந்தத் தாக்குதலுக்கு ஜஸ்வந்த் சிங்கின் துரோகமே காரணம் என்று சொல்லப்பட்டது.
மராட்டிய நாயகனின் வீரமும் தந்திரமும் இஸ்லாமியர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது. சாத்தானின் மறு வடிவமாகப் பார்க்கப்பட்டார். அவருடைய நுழைவை யாராலும் தடுக்க முடியாது. அவரால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை என்று அஞ்சினர். பேரரசருக்கு இந்தத் தகவல் போய்ச் சேர்ந்தது. ஷாயிஸ்தா கானின் அலட்சியம் மற்றும் திறமையின்மையே இதற்குக் காரணம் என்று கண்டித்தார். தனது அதிருப்தியை வெளிக்காட்டும்வகையில் ஷாயிஸ்தா கானைப் பதவியில் இருந்து மாற்றி வங்காளத்துக்கு அனுப்பிவைத்தார் (1, டிச, 1663). அது ஒருவகையான தண்டனையாகவே பார்க்கப்பட்டது. ஷாயிஸ்தா கான் ஜனவரி, 1664 நடுப்பகுதி வாக்கில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இளவரசர் முவாஸாம் தக்காணத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
(தொடரும்)
___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின் தமிழாக்கம்.