Skip to content
Home » ஔரங்கசீப் #28 – சிவாஜியின் வெற்றிகள் (1670-1680) – 1

ஔரங்கசீப் #28 – சிவாஜியின் வெற்றிகள் (1670-1680) – 1

1.மொகலாயர்களுடனான சிவாஜியின் மோதலும் கோட்டைகளை மீட்டெடுத்தலும்

மொகலாயர்களுடனான புதிய ஒப்பந்தங்களின்படி, ஒளரங்காபாதுக்கு பிரதாப் ராவ் மற்றும் நீரஜ் ராவ்ஜி தலைமையில் சிவாஜி ஒரு மராட்டிய படையை அனுப்பிவைத்தார் (ஆக 1668). ஐயாயிரம் வீரர்கள் படைக்கு சாம்பாஜி மீண்டும் தளபதியாக்கப்பட்டார். அவருக்கு ஒரு யானையும் நவ ரத்னங்கள் பதித்த வாளும் தரப்பட்டன. பேரார் பகுதியிலிருந்த ஜாஹிர் – வருமானம் இவருக்குக் கிடைக்க வழிசெய்யப்பட்டது. 1667, 1668, 1669 ஆண்டுகளில் மொகலாயர்களின் கீழ் இருந்த குறு நில மன்னராக சிவாஜி அமைதியாக இருந்தார். பீஜப்பூர் சுல்தானுடனும் அவருடைய நட்புறவு இதமாகவே இருந்தது. உண்மையில் இந்த மூன்று ஆண்டுகளில் சில சாமர்த்தியமான நடவடிக்கைகளை எடுத்துவந்தார். அவையே அவருடைய பின்னாளைய அரசுக்கு வலுவான விரிவான அஸ்திவாரத்தை அமைத்துத் தந்தன.

அமைதி ஒப்பந்தம் இரு தரப்பிலும் ஒப்புக்குச் செய்துகொண்ட வெற்று உடன்படிக்கையாகவே இருந்தது. தன் மகன்கள் மீது முடிவற்ற சந்தேகம் கொண்டிருந்த ஒளரங்கஜீப் தன் மகன் ஷா ஆலம் முவாஸமுக்கும் சிவாஜிக்கும் இடையிலான நல்லுறவைத் தனது அரியணைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகவே பார்த்தார். இரண்டாவது முறை சிவாஜியைச் சிறைப்பிடிக்கத் திட்டமிட்டார். அதுமுடியாவிட்டால் அவருடைய மகன் அல்லது தளபதியையாவது பிணைக்கைதியாகப் பிடிக்கத் திட்டமிட்டார். 1666-ல் சிவாஜி தில்லிக்குத் தன் படையுடன் வந்ததற்கான முன்பணமாகத் தரப்பட்ட ஒரு லட்ச ரூபாய்க்கு ஈடாக, இப்போது சிவாஜிக்குத் தரப்பட்டிருக்கும் பேரார் பகுதியின் ஜாஹிர் உரிமையைப் பறிக்கவேண்டும் என்று ஒளரங்கஜீப் மிகவும் பிழையான திட்டம் ஒன்றைத்தீட்டினார். சிவாஜிக்கு இது தெரியவந்ததும் மொகலாயர்களுடன் செய்துகொண்ட அமைதி ஒப்பந்தத்தை 1669-ல் சிவாஜி முறித்துக்கொண்டார்.

சிவாஜி தன்னுடைய தாக்குதலை அதி தீவிரமாக முன்னெடுத்து உடனடி வெற்றிகளை ஈட்டினார். மொகலாயப் பகுதிகளைக் கைப்பற்றிய மராட்டியப்படை அவர்களிடமிருந்த செல்வத்தையெல்லாம் கவர்ந்துகொண்டது. புரந்தர் ஒப்பந்த்தின் மூலம் ஒளரங்கஜீபுக்குக் கொடுத்திருந்த கோட்டைகள் பலவற்றையும் மீட்டெடுத்தது. மொகலாயர்களின் ராஜபுத்திர கிலாதாரான உதய் பானிடமிருந்து கோண்டானா கோட்டையை மீட்டது சிவாஜியின் மிகப் பெரிய மற்றும் முக்கியமான வெற்றியாக அமைந்தது (4, பிப், 1670).

அந்தக் கோட்டைப் பகுதிகளைப்பற்றி நன்கு தெரிந்தவர்களான கோலி வழிகாட்டிகளின் துணையுடன் , தேர்ந்தெடுத்த 300 மாவ்லே காலாட்படையினருடன் காலியன் வாசல் வழியாக தானாஜி மாலுசரே மலைப்பகுதியில் நள்ளிரவில் கயிறு மற்றும் ஏணிகள் உதவியுடன் கோட்டைக்குள் நுழைந்தார். கோட்டைக் காவலர்கள் கடுமையாகப் போரிட்டனர். எனினும் மாவ்லே வீரர்களின் ’ஹர ஹர மஹாதேவ்’ என்ற போர்க்கோஷம் எதிர் தரப்பினரிடையே குழப்பத்தையும் கலக்கத்தையும் உருவாக்கியது. இரு தளபதிகளும் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் தாக்கப்பட்டு இறந்தனர். 1200 ராஜபுத்திரர்கள் வீழ்த்தப்பட்டனர். மலைப்பகுதியில் தப்பி ஓட முயன்றவர்களும் இறந்தனர். சிங்கம் போல் போரிட்டு வென்றதால் அந்தப் பகுதிக்கு சிங்க கர் என்று சிவாஜி பெயரிட்டார்.

கொங்கன் பகுதியின் ஃபெளஜ்தாரான லூதி கான் மராட்டியப் படையுடனான ஒரு போரில் காயம்பட்டார். இரண்டாவது தாக்குதலில் தோற்கடிக்கப்பட்டு மாவட்டத்தை விட்டே விரட்டப்பட்டார். நந்தேர் பகுதியின் மொகலாய ஃபெளஜ்தார் தன் கோட்டையை விட்டுவிட்டுத் தப்பி ஓடினார். தக்காணப் பகுதியில் மொகலாயப் பேரரசின் பெருமையைத் தக்கவைக்கப் போராடிய ஒரே நபர் தாவூத் கான் குரேஷி மட்டுமே. அவர் மட்டுமே பர்ணீர் மற்றும் ஜுனார் பகுதிகளை வெற்றிகரமாகத் தக்கவைத்துக்கொண்டார்.

ஏப் 1670 வாக்கில் சிவாஜி அஹமத் நகர், ஜுனார், பரேந்தா பகுதிகளில் 51 கிராமங்கள் மீது படையெடுத்திருந்தார்.

2. முவாஸம் மற்றும் திலீர் கானுக்கு இடையிலான மோதல்

1670-ன் பாதிப் பகுதியில் தக்காணத்தில் மொகலாய நிர்வாகம் தளபதி திலீர் கான் மற்றும் வைஸ்ராய் ஷா ஆலம் ஆகிய இருவருக்கு இடையிலான உள் பகையை எதிர்கொள்ளவேண்டிவந்தது. திலீர் கான் மொகலாய இளவரசரைச் சென்று சந்திக்க மறுத்தார். அப்படிச் சென்றால் தன்னைக் கொன்றுவிடுவார் அல்லது கைது செய்துவிடுவார் என்று தளபதி அஞ்சினார். இந்தக் கீழ்படிதலின்மையின் காரணமாக இளவரசரும் அவருடைய நம்பிக்கைக்குரிய தளபதியுமான ஜஸ்வந்தும் திலீர் கான் கலகம் செய்வதாக பேரரசருக்குக் கடிதம் அனுப்பினர். இளவரசர் சிவாஜியுடன் நட்பில் இருக்கிறார் என்று ஏற்கெனவே திலீர் கான் பேரரசருக்குப் புகார் கடிதம் அனுப்பியிருந்தார்.

இளவரசர் முவாஸம் சுகபோகங்களில் திளைத்தும், பேரரச ஆட்சியை முறையாகக் கவனிக்காமலும், உத்தரவுகளை முறையாக நடைமுறைப்படுத்தாமலும் இருந்துவந்ததால் ஒளரங்கஜீப் அவர் மீது மிகுந்த கோபத்தில் இருந்தார். சிவாஜியின் வெற்றி, மொகலாயப் படைகளின் செயலற்ற தன்மை இவையெல்லாம் இளவரசர் முவாஸம், சிவாஜியுடன் கூட்டு சேர்ந்து ஒளரங்கஜீபை வீழ்த்தத் திட்டமிட்டிருக்கிறார் என்றே தக்காணத்தில் இருந்தவர்களை இளவரசருக்கு எதிராகக் குரல் எழுப்பவைத்தன.

எனவே மார்ச் 1670-ன் இறுதிவாக்கில், பேரரசர் தன் அரசவையின் முக்கிய அதிகாரியான இஃப்திகார் கானை ஒளரங்காபாத்துக்கு அனுப்பி உண்மையிலேயே அங்கு என்ன நடக்கிறது. இளவரசர் ஷா ஆலம் முவாஸம் துரோகம் செய்ய நினைக்கிறாரா… சிவாஜியுடனான அவருடைய தொடர்புகள் என்னவாக இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டுவரச் சொல்லி அனுப்பினார். திலீர் கான் மீது இளவரசர் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுகளையும் அவர் விசாரிக்கவிருந்தார்.

ஏற்கெனவே தக்காணத்தில் இருக்கப் பிடிக்காத திலீர் கான் தில்லிக்குச் சென்று பேரரசரின் கீழ் பணிபுரியத் தீர்மானித்திருந்தார். ஷா ஆலம் முவாஸாமின் அனுமதிக்குக் காத்திருக்கவும் விரும்பியிருக்கவில்லை. ஆனால் அவருடைய இந்தத் தீர்மானத்தை வட இந்தியாவில் பெரும் குழப்பத்தை உருவாக்க திலீர் கான் திட்டமிட்டிருப்பதாக இளவரசர் கருதினார். திலீர் கானை இளவரசர் முவாசம் தனக்குக் கீழ்படிந்து நடக்கவைக்கவேண்டும் என்று பேரரசரிடமிருந்து உத்தரவு வந்தது. அது மழைக்காலம் உச்சத்தில் இருந்த தருணம் (ஆகஸ்ட்). நதிகள் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தன. சாலை வழி மிகவும் மோசமாக இருந்தது. திலீர் கான் தனது படை முகாமைக் கொளுத்திவிட்டு வடக்கே உஜ்ஜெய்னி நோக்கித் தன் படையுடன் தப்பிச் சென்றார்.

தக்காணத்திலிருந்து அவர் தப்ப முயன்றதுமே இளவரசரும் ஜஸ்வந்தும் கைவசம் இருந்த படையினரைக் கொண்டு துரத்தினர். ஆனால் அவர்கள் கந்தேஷ் எல்லையை அடைந்திருந்தபோது ஒளரங்காபாத்துக்கு திரும்பும்படி இளவரசர் முவாஸமுக்கு பேரரசரிடமிருந்து கடிதம் வந்து சேர்ந்தது (செப்டம்பர்). இதனிடையில் திலீர் கானுக்கு அடைக்கலம் தந்த குஜராத் ஆட்சியாளர் பஹதுர் கான், பேரரசருக்கு திலீர் கானின் விசுவாசத்தைப் புகழ்ந்தும் அவருடைய முந்தைய சேவைகளைப் பாராட்டியும் கடிதம் அனுப்பினார். திலீர் கான் தனக்குக் கீழே கத்தியவாரின் ஃபெளஜ்தாராகப் பணியாற்ற அனுமதிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். பேரரசர் ஒளரங்கஜீப் இதற்கு சம்மதித்தார். முவாஸமும் தன் தந்தையின் உத்தரவுக்கு ஏற்ப செப், 1670 இறுதிவாக்கில் ஒளரங்காபாதுக்குத் திரும்பினார்.

இந்த உட்பகைகள் மொகலாயப் படைகளை பலவீனமாக்கின. சிவாஜி இந்த நல்ல வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டார். சூரத்தில் இருந்த ஆங்கிலேய வணிகர்கள் மார்ச் மாதத்தில், இப்போது சிவாஜி எதிரிகளைத் தாக்கிச் செல்வத்தை அள்ளிச் செல்பவராக அல்லாமல், 30,000 வீரர்களைக் கொண்ட படையுடன் முன்னேறிச் செல்கிறார்.இளவரசர் முவாஸம் இங்கு இருப்பதைக் கண்டு அவர் சிறிதும் அஞ்சவே இல்லை’ என்று பேரரசருக்குக் கடிதம் அனுப்பினர். 3, அக்டோபர் வாக்கில் சூரத் மீது சிவாஜி இரண்டாவது தாக்குதலை நடத்தினார்.

3. சூரத் மீதான சிவாஜியின் இரண்டாம் தாக்குதல்

2, அக்டோபரில் சிவாஜி 15,000 குதிரை மற்றும் காலாட்படையினருடன் சூரத்துக்கு 20 மைல் தொலைவில் வந்து சேர்ந்திருந்தார். அந்த மாகாணத்தில் இருந்த வணிகர்கள், அரசு அதிகாரிகள் எல்லாரும் அந்தச் செய்தி கிடைத்த உடனேயே முந்தின இரவிலேயே தப்பி ஓடிவிட்டனர். 3-ம் தேதியன்று சிவாஜி சூரத்தைத் தாக்கினார். ஒளரங்கஜீப் அப்போதுதான் அந்த நகருக்கு மதில் சுவர் எழுப்பியிருந்தார். சிறிய அளவில் கோட்டை வீரர்கள் எதிர்த் தாக்குதல் நடத்தினர். அதன்பின் தப்பிஓடிவிட்டனர். ஆங்கிலேயர், ஃபிரெஞ்சு, டச்சு ஆகியோரின் வணிகக் கிடங்குகள், பாரசீக துருக்கிய வணிகர்களின் புதிய சராய் (மாளிகைகள்), மெக்கா பயணம் முடித்துவிட்டு வந்திருந்த காஷ்கர் பகுதியின் முன்னாள் மன்னரான அப்துல்லா கானின் சராய் மாளிகை (ஆங்கிலேய ஃபிரெஞ்சுக்காரர்களின் மாளிகைகளுக்கு நடுவே இருந்தது) ஆகியவை நீங்கலாக முழு நகரமும் மராட்டியப் படையின் வசம் போனது.

ஃப்ரெஞ்சுக்காரர்கள் மராட்டியப் படையினருக்கு ‘விலை மதிப்பு மிகுந்த பரிசுகள்’ கொடுத்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். திறந்தவெளியில் இருந்த ஆங்கிலேய வணிக மையங்களை ஸ்ட்ரென்ஸாம் மாஸ்டர் ஐம்பது கடலோடிகளின் துணையுடன் காப்பாற்றிக்கொண்டார்.

தார்த்தாரியர்கள் தொடர்ந்து மராட்டியப் படைகளை எதிர்த்தனர். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் போய்விடவே தமது மன்னருடன் சேர்ந்துகொண்டு அந்த மாளிகையை அதன் அத்தனை செல்வங்களுடன் விட்டுவிட்டுத் தப்பி ஓடினர். புதிய சராயில் இருந்த துருக்கியர்கள் தமது மாளிகையை வெற்றிகரமாகப் பாதுகாத்துக்கொண்டுவிட்டனர். மராட்டியப் படைக்கு சொற்ப இழப்பையும் ஏற்படுத்தினர். மராட்டியப் படை நகருக்குள் மிக நிதானமாகச் சென்று செல்வந்த மாளிகைகளை எல்லாம் சூறையாடியது. நகரில் பாதிக்கு மேற்பட்ட கட்டடங்களைத் தீவைத்துக் கொளுத்தியது. ஐந்தாம் தேதியன்று ஊர் திரும்பியது.

சூரத்திலிருந்து சிவாஜிக்கு இந்தத் தாக்குதலின் மூலம் 66 லட்சம் பணம் கிடைத்ததாக ஓர் அரசு அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், மராட்டியப் படை எடுத்துச் சென்றதை வைத்து சூரத்தின் இழப்பை எடைபோடமுடியாது. இந்தியாவின் செல்வ வளம் மிகுந்த அந்த நகரின் வணிகம் முழுமையாக முடக்கப்பட்டுவிட்டது. சிவாஜி அங்கிருந்து போன சில வருடங்களுக்கு மராட்டியப் படை அந்த நகருக்கு சற்று தொலைவில் வந்தாலோ வருவதாகப் புரளி கிளம்பினாலோ வணிக நகரம் பதற்றத்தில் மூழ்க ஆரம்பித்தது. அப்படியான செய்தி வந்ததும் வணிகர்கள் எல்லாம் அலறி அடித்துக்கொண்டு தமது பொருட்களையெல்லாம் கப்பல்களில் மளமளவென ஏற்றிக்கொண்டு ஓடுவார்கள். மக்கள் எல்லாரும் ஊரைவிட்டு ஓடிவிடுவார்கள். ஐரோப்பியர்கள் ஸ்வாலி பகுதிக்கு ஓடிவிடுவார்கள். அப்படியாக சூரத்தின் வணிகம் பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டது.

4. தின்தோரி பகுதியில் தாவூத்கானை சிவாஜி தோற்கடித்தல் (17, அக், 1670) மற்றும் பேரார் மீதான தாக்குதல்.

இரண்டாவது முறை சூரத்தைத் தாக்கியபின்னர் சிவாஜி பக்லனா பகுதிக்குள் நுழைந்து முல்ஹிர் கோட்டையின் அடிவாரத்தில் இருந்த கிராமங்களைக் கைப்பற்றினார். மராட்டியப் படைகளை அடக்க பர்ஹான் பூரிலிருந்து புறப்பட்டுச் செல்லுமாறு உத்தரவிடப்பட்ட தாவூத் கான் பக்லானாவிலிருந்து நாசிக்குக்குச் செல்லும் பாதை மலைத் தொடருடன் குறுக்கிடும் பகுதியில் இருக்கும் சந்தோர் ஊருக்குச் சென்று சேர்ந்தார். 16 அக்டோபர் நள்ளிரவில் சிவாஜி வேகமாக நாசிக் செல்லும் பாதையில் பாதி படையினருடன் விரைந்து சென்றுகொண்டிருக்கிறார் என்ற செய்தி ஒற்றர்கள் மூலம் கிடைத்தது. மீதி படையினர் அந்தக் கணவாய் வழியாக வரும் எதிரிப் படையை எதிர்கொள்ள அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் செய்தியும் கிடைத்தது. தாவூத் கான் உடனே படையை முன்னகர்த்தினார். அதிகாலை வாக்கில் படையை நடத்திச் சென்ற தளபதி இக்லாஸ் கான் மியானா மராட்டியப் படையை தூரத்தில் சந்தித்தார். தனது முழு படையும் வந்து சேரும்வரை காத்திருக்காமல் உடனே தாக்குதலை ஆரம்பித்தார். மராட்டியர்களின் பின்வரிசைப் படையில் 10,000 வலிமையான வீரர்கள் இருந்தனர். குதிரையேற்றத்தில் கைதேர்ந்த பிரதாப் ராவ் குஜ்ஜார், வியான்காஜி தத்தோ, மகாஜி ஆனந்த் ராவ் (ஷாஜி போன்ஸ்லேயின் திருமண உறவு கடந்த மகன்) முதலான தளபதிகள் அந்தப் படையில் இருந்தனர். இக்லாஸ் கான் விரைவிலேயே காயம் பட்டு குதிரையில் இருந்து வீழ்த்தப்பட்டார். சிறிது நேரத்திலேயே தாவூத் கான் அங்கு தன் படையுடன் வந்து சேர்ந்தார். சில மணிநேரங்கள் மிக மிகக் கடுமையான ரத்தக் களறியான போர் நடந்தது. தக்காணத்தைச் சேர்ந்த பார்கி குதிரைப்படையினரைப் போலவே மராட்டியப் படை மிகவும் தீவிரமாக மொகலாயப் படையைச் சுற்றி வளைத்துத் தாக்கியது. ஆனால் மொகலாயப் படையில் புந்தேலா காலாட்படை தன்னிடமிருந்து பீரங்கி, துப்பாக்கி, எரி ஆயுதங்கள் கொண்டு தாக்கி மராட்டியப்படையைப் பின்வாங்க வைத்தது.

மதிய வாக்கில் போர் கொஞ்சம் தணிந்தது. மாலையில் மீண்டும் மராட்டியப் படை வேகமாகத் தாக்கியது. ஆனால் பீரங்கி குண்டுகளினால் விரட்டப்பட்டனர். இலையுதிர்கால இரவு வானத்தின் கீழ் மொகலாயர்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டனர். அவர்களுடைய படை முகாம் அங்கு வலுவாகக் கால் ஊன்றிக் கொண்டது. இறந்தவர்களைப் புதைத்தும் காயம்பட்டவர்களுக்கு மருந்திட்டும் இரவைக் கழித்தனர். மராட்டியப் படை கொங்கன் பகுதிவரை திரும்பிச் சென்றது. வழியில் எந்த எதிர்ப்பும் இருந்திருக்கவில்லை.

ஒரு வாரம் கழித்து பேஷ்வாக்கள் நாசிக் மாவட்டத்திலிருந்த திரியம்பகக் கோட்டையைக் கைப்பற்றினர். இந்தத் தாக்குதல் ஒரு மாத காலத்துக்கு மொகலாயப் படையைத் தடுத்து நிறுத்தியது. தாவூத் கான் போர் முடிந்ததும் தன் எஞ்சிய படையை நாசிக்கு வழிநடத்திச் சென்று அங்கு ஒரு மாத காலம் தங்கிப் புத்துணர்வு ஊட்டிக்கொண்டார். நவம்பர் பிற்பகுதியில் அஹமது நகருக்குச் சென்றார். டிசம்பர் தொடக்கத்தில் கந்தேஷ் பகுதியில் பிரதாப் ராவ் தாக்குதல் மேற்கொண்டார். வழியில் அஹிவந்த் உட்பட பக்லானாவில் இருந்த மூன்று கோட்டைகளையும் கைப்பற்றியிருந்தார். பர்ஹான்பூருக்கு இரண்டு மைல் தொலைவில் இருந்த பஹதுர்புரா கிராமத்தையும் கைப்பற்றினார்.

பேராருக்குள் நுழைந்தவர் கரிஞ்சா பகுதியில் இருந்த செல்வந்தர்கள் மற்றும் அதன் செழுமையை முழுவதுமாகத் தன் வசமாக்கிக் கொண்டார். 4000 காளைகள், குதிரைகள், கோவேறு கழுதைகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன. அருமையான துணிமணிகள், வெள்ளி, தங்கம், ஒரு கோடி ரூபாய் அனைத்தும் கப்பமாகப் பெறப்பட்டன. பிற நகரங்களும் பெரும் செல்வத்தைக் கொடுத்தன. அரை நூற்றாண்டு காலம் நிலவிய அமைதியினால் சேர்த்திருந்த செல்வம் முழுவதையும் வளமான மண்ணையும் அந்த நகரங்கள் முதல் தாக்குதல் மேற்கொண்டவர்களுக்குக் கொடுத்தது.

பேராரில் கரிஞ்சா பகுதியை பிரதாப் ராவ் தன்வசமாக்கிக் கொண்டிருந்தபோது மோரோ திரியம்பக் பிங்க்ளே தலைமையில் இன்னொரு மராட்டியப் படை மேற்கு கந்தேஷையும் பக்லானாவையும் கைப்பற்றியது. இந்த இரண்டு படைகளும் சலீர் பகுதியில் ஒன்று கூடி அங்கிருந்த கோட்டையை முற்றுகையிட்டன. முலீருக்கு அருகில் தாவூத் கான் இரவு எட்டு மணி வாக்கில் வந்து சேர்ந்தார். அவருடைய படையில் பலர் பின்தங்கியிருந்ததால் அவரால் அதற்கு மேல் முன்னேறிச் செல்லமுடியவில்லை. இதனால் சலீர் கோட்டையினருக்கு உரிய நேரத்தில் அவரால் உதவமுடியாமல் போய்விட்டது.

சலீர் கோட்டையை முற்றுகையிட சிவாஜி 20000 குதிரை மற்றும் காலாட்படையினரை அனுப்பியிருந்தார். ஒரு நாள் அந்தக் கோட்டையின் காவல் பலவீனமடைந்திருந்ததைக் கண்டு கயிறு, ஏணிகள் மூலம் கோட்டைக்குள் ஏறிச் சென்றனர். கிலாதார் ஃபதுல்லாகான் போரிட்டு மடிந்தார். அவருடைய மனைவியின் சகோதரரிடமிருந்து கோட்டையை மராட்டியர் கைப்பற்றினர் (5, ஜன, 1671). மராட்டியர்களின் வெற்றி தொடர்ந்தது. பக்லானாவின் ஃபெளஜ்தாரான நெக்மம் கானுக்கும் அவருடைய படையினருக்குமான உணவு தானிய வண்டிகளைப் பிடித்தனர்.

5. மொகலாயத் தளபதிகளின் படையெடுப்புகள், 1671-72.

இப்படியாக மராட்டியர்களுக்குக் கிடைத்த வெற்றிகள் ஒளரங்கஜீபை விழித்துக்கொள்ளவைத்தன. தக்காணத்தின் தலைமைத் தளபதியாக முஹபத் கானை நியமித்தார். பக்லானா பகுதிக்கு ஏராளமான படைவீரர்கள், பண உதவிகள், உணவுப் பொருட்கள், தளவாடங்கள் அனுப்பிவைத்தார் (ஜன 1671).

1671 ஜனவரி இறுதிவாக்கில் சந்தூர் பகுதிக்கு அருகே தாவுத் கானுடன் மஹ்பத் கான் சேர்ந்துகொண்டு இருவரும் சமீபத்தில் சிவாஜி கைப்பற்றிய அஹிவந்த் கோட்டையை முற்றுகையிட்டனர். ஒரு மாத முற்றுகைக்குப் பின்னர் அந்தக் கோட்டை மொகலாயர் வசம் வந்தது. அந்தக் கோட்டையைத் தொடர்ந்து தக்கவைக்க ஒரு படையை அங்கு நிறுத்தினார் மொஹகத் கான். நாசிக்கிலேயே மூன்று மாத காலம் தங்கியும் இருந்தார். அஹமத் நகருக்கு 20 மைல் மேற்கிலிருந்த பர்னீர் பகுதிக்குச் சென்று ஜூன் முதல் செப்டம்பர் வரையான மழைக்காலத்தைக் கழித்தார்.

ஒளரங்கஜீபுக்கு மஹ்பத் கானின் மெதுவான நகர்வுகள் பிடிக்கவில்லை. சொற்ப வெற்றி பெற்றுவிட்டு நீண்ட காலம் ஓய்வில் இருக்கும் அவர் மீது, சிவாஜியுடன் ரகசியக் கூட்டு வைத்துக்கொண்டுவிட்டதாக சந்தேகமும் எழுந்தது. எனவே அடுத்த குளிர்காலத்தில் திலீர்கானையும் பஹதூர் கானையும் தக்காணத்துக்கு அனுப்பினார். குஜராத்திலிருந்து பக்லானாவுக்கு அவர்கள் படையெடுத்துச் சென்று மராட்டியர்களின் கைகளில் இருந்த சலீர் பகுதியை முற்றுகையிட்டனர். இக்லாஸ் கான் மியானா, ராவ் அமர் சிங் சந்தவத் மற்றும் சில முக்கியமான அதிகாரிகளை அங்கே இருந்து முற்றுகையைத் தொடரும்படிச் சொல்லிவிட்டு அவர்கள் அஹமது நகர் நோக்கிச் சென்றனர். அதிரடிப் படையுடன் சென்ற திலீர்கான் புனேவைக் கைப்பற்றினார். 9 வயதுக்கு மேலாக இருந்தவர்கள் அனைவரையும் கொன்று குவித்தார் (டிசம்பர், 1671 இறுதிவாக்கில்).

இதனிடையில், சலீர் பகுதியை முற்றுகையிட்டிருந்த மொகலாயப் படையை பிரதாப் ராவ் மற்றும் ஆனந்த ராவ் தலைமையிலான மராட்டியப் படையும் பேஷ்வா படைகளும் சேர்ந்து தாக்கின. மிகக் கடுமையான போருக்குப் பின்னர் இக்லாஸ் கானும் ராவ் அமர் சிங் சந்த்வத்தின் மகன் முகம் சிங்கும் காயம்பட்டுச் சிறைப்பிடிக்கப்பட்டனர். பிரதான அதிகாரிகள் பலரும் சிறைப்பிடிக்கப்பட்டனர். ராவ் அமர் சிங்கும் பிற பல தளபதிகளும் சில ஆயிரம் காலாட்படையினரும் கொல்லப்பட்டனர். ஒட்டு மொத்த மொகலாய முகாமும் மராட்டியர்களால் கைப்பற்றப்பட்டது. அதன் பின் மோரோ பந்த் முலீர் பகுதியையும் கைப்பற்றினார். இது 1672 ஜனவரி இறுதி மற்றும் பிப்ரவரி முதல் வாரத்தில் நடந்தது. இந்த வெற்றிகளினால் சிவாஜியின் தன்னம்பிக்கையும் பெருமையும் வெகுவாக அதிகரித்தது.

1672 நடுப்பகுதிவாக்கில் மஹ்பத் கானும் ஷா ஆலமும் தில்லிக்கு அழைக்கப்பட்டனர். இவர்களுடைய இடத்தில் தக்காணத்தின் தலைமைத் தளபதியாகவும் ஆட்சியாளராகவும் பஹாதூர் கான் நியமிக்கப்பட்டார். ஜனவரி 1673-ல் சுபேதாராகவும் ஆனவர் 1677 ஆகஸ்ட் வரையிலும் அந்தப் பதவியில் நீடித்தார்.

(தொடரும்)

___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *