Skip to content
Home » ஔரங்கசீப் #29 – சிவாஜியின் வெற்றிகள் (1670-1680) – 2

ஔரங்கசீப் #29 – சிவாஜியின் வெற்றிகள் (1670-1680) – 2

6. கோலி ராஜ்ஜியத்தை மராட்டியர் வென்றெடுத்தல் மற்றும் சூரத்திலிருந்து நான்கில் ஒரு பங்கு வரி கோரிப் பெற்றது (1672)

ஐந்து ஜூனில் மோரோ திரியம்பக் பிங்களேயின் தலைமையில் மராட்டியப் படை ஒன்று புறப்பட்டுச் சென்று கோலி தேசத்தின் ராஜா விக்ரம் ஷாவிடமிருந்து ஜவஹர் பகுதியைக் கைப்பற்றியது. 17 லட்சம் அளவிலான பணத்தையும் எடுத்துச் சென்றது. மேலும் வடக்குப் பக்கமாக முன்னேறிச் சென்று ஜூலை முதல் வாரத்தில் கோலி ராஜ்ஜியத்தின் ராம் நகரையும் கைப்பற்றியது.

இந்த இரண்டு பகுதிகளையும் வென்றெடுத்ததன் மூலம் காலியன் பகுதியிலிருந்து வட கொங்கணி வழியாக சூரத்துக்குச் செல்லும் குறுகிய, பாதுகாப்பான பாதையும் கைவசமானது. தெற்கிலிருந்து சூரத் கோட்டையைத் தாக்குவது எளிதானது. இதனால் மராட்டியப் படை குறித்த நிரந்தர அச்சத்தில் அந்த நகரம் மூழ்கியது.

ராம் நகருக்கு அருகில் இருந்தபடி மோரோ திரியம்பக் பிங்களே தன் அரசர் சிவாஜியின் சார்பில் சூரத் ஆட்சியாளருக்கு மூன்று கடிதங்கள் தொடர்ந்து அனுப்பினார். சூரத்தில் இருக்கும் வணிகர்கள் நான்கு லட்சம் பணம் கப்பம் கட்டவேண்டும்; மறுத்தால் படையெடுத்துவருவேன் என்று எச்சரித்தார்.

கோலி ராஜ்ஜியத்தில் அவர்கள் அமைத்திருந்த முகாமிலிருந்து மோரோ திரியம்பக் தலைமையில் ஒரு படை மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக நாசிக் மாவட்டத்துக்குள் 1672 ஜூலை நடுப்பகுதி வாக்கில் நுழைந்து தாக்கியது. அந்த மாகாணத்தில் மொகலாயர் சார்பில் தெற்கு மற்றும் வடக்கு தானாதார்களான யாதவ் ராவ் மற்றும் சித்தி ஹலால் தலைமையில் இருந்த படைகளைத் தோற்கடித்தது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் பஹதூர் கான் கடுமையாகக் கடிந்துகொள்ளவே இருவரும் பெரும் கோபத்துடன் மராட்டியர் பக்கம் சேர்ந்துவிட்டனர்!

7. 1673-ல் மராட்டியர்களின் படையெடுப்புகள்

சிவாஜி நவம்பர் மாத வாக்கில் ஒரு பெரிய குதிரைப் படையை பேரார் மற்றும் தெலங்கானா மீது மின்னல் தாக்குதல் நடத்த அனுப்பினார். மொகலாயத் தளபதியால் அவர்களுடைய சாமர்த்தியத்துக்கு ஈடுகொடுக்கமுடியவில்லை. தாக்குதல் மேற்கொண்ட ராம்கிர் பகுதியிலிருந்த மராட்டியப்படை இரண்டாகப் பிரிந்தது. ஒரு படை தெற்கே கோல்கொண்டாவுக்குள் ஓடியது. இன்னொரு படை வடக்குப் பக்கம் சந்தா பகுதிக்குச் சென்று அங்கிருந்து மேற்கு திசையில் பேரார் பகுதிக்குள் சென்றுவிட்டது. முதல் படையை பீஜப்பூருக்குள் துரத்திச் சென்ற திலீர் கான் அவர்களிடமிருந்த பொருட்களில் பெரும்பகுதியைக் கைப்பற்றினார். இரண்டாவது படையை அந்தூர் பகுதிக்கு அருகில் (ஒளரங்காபாதுக்கு 38 மைல் வடக்கில்) பஹதுர் கான் எதிர்த்து நின்று அவர்களிடமிருந்தும் பெரும் தொகையைக் கைப்பற்றி உரியவர்களிடம் ஒப்படைத்தார். ஒளரங்காபாதுக்கு ஆறு மைல் தொலைவில் நடந்த இன்னொரு சிறிய போரில் மராட்டியர்கள் தோற்று ஓட நேர்ந்தது. சபாகரன் தலைமையிலான புந்தேல் வீரர்கள் 400 பேர் இறந்தனர் (டிசம்பர்).

முன்பு டிச 1670-ல் நடைபெற்ற தாக்குதலைப் போலல்லாமல் கந்தேஷ் மற்றும் பேராருக்குள்ளான இந்த மராட்டியப் படையெடுப்பு மொகலாயர்களால் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டது.

சாமர்குண்டாவுக்கு எட்டு மைல் தெற்கே பீமா நதியின் வட கரையில் பேட்காவ் பகுதியில் பஹதுர் கான் 1673-ல் முகாமிட்டிருந்தார். அதன் பின் பல வருடங்கள் அவருடைய படை அங்கேயே முகாமிட்டிருந்தது. அதனால் அங்கு ஒரு கோட்டையும் நகரமும் உருவாகி வளர்ச்சியடைந்தது. அந்தப் பகுதிக்கு பஹதுர் கர் என்று பெயர் சூட்டிக்கொள்ள ஒளரங்கஜீப் அனுமதி தந்தார்.

பேட்காவ் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருந்தது. புனேயிலிருந்து கிழக்குப் பக்கமாக இருக்கும் மலைத் தொடரிலிருந்து சற்று கீழே சமதளத்தில் அமைந்திருந்தது. மொகலாயத் தளபதிகள் இங்கிருந்து வட திசையில் மலைத்தொடரின் மேற்குப் பக்கப் பள்ளத்தாக்குகள் வழியாகச் சென்று முலா மற்றும் பீமா (வட பூனே மாவட்டம்) அல்லது தெற்கே நிரா மற்றும் பாராமதி (புனேயின் தென் பகுதி) ஆகியவற்றைப் பாதுகாக்க எளிதில் முன்னேறிச் செல்லமுடியும். அஹமது நகரில் இருக்கும் தமது மிகப் பெரிய ஆயுதக் கிடங்குடன் வடக்குப் பக்கத்தில் எளிதில் தொடர்புகொள்ளவும்முடியும். அந்தக் கோட்டைக்கு அடிவாரத்தில் இருக்கும் நதி நீங்கலாக வேறு எந்தவொரு நதியையும் கடக்க வேண்டிய அவசியம் இதில் இருக்காது. தென் திசையில் ஷோலாப்பூர் மாவட்டத்தினூடாகச் சென்று பீஜப்பூரை எளிதில் தாக்க முடியும்.

சிவானீர் (ஜுனார் கோட்டை) பகுதியைப் பணத்தாசை காட்டிப் பெற்றுவிட சிவாஜி மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. அந்தப் பகுதியின் ஆட்சியாளராக இருந்த அப்துல் அஜிஸ் கான் (இஸ்லாமுக்கு மாறிய பிராமணர்) ஒளரங்கஜீப் மீது மிகுந்த மரியாதை கொண்டவராக இருந்தார். சிவாஜி கொடுத்த கையூட்டைப் பெற்றுக்கொண்டவர் ரகசியமாக பஹதுர் கானிடம் இந்த தந்திரத்தைச் சொல்லியும்விட்டார். இதனால் அந்தக் கோட்டையை எளிதில் கைப்பற்றிவிடலாம் என்று நம்பி வந்த மராட்டியப்படை மறைந்திருந்த மொகலாயப் படையால் சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டனர். இறுதியில் பெரும் இழப்புடன் தப்பி ஓடினர்.

இரண்டாம் அலி அடில் ஷா 24, நவம்பர், 1672-ல் இறந்தார். அவருடைய மகனான நான்கு வயது குழந்தையே அரியணையில் இருந்ததால் சில மாதங்களில் பீஜப்பூர் ராஜ்ஜியத்தில் பெரும் குழப்பமும் கூச்சலும் ஏற்பட்டது. சிவாஜி இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டார். 6, மார்ச், 1673-ல் பணாலா பகுதியைப் பணத்தாசை காட்டி இரண்டாம் முறையாகக் கைப்பற்றினார். 27 ஜூலையில் சத்ரா மலைக்கோட்டையை இதே முறையில் கைப்பற்றினார். மே மாதத்தில் பிரதாப் ராவ் குஜ்ஜார் தலைமையில் ஒரு மராட்டியப் படை பீஜப்பூரி கனரா உள் நாட்டுப் பகுதிக்குள் படையெடுத்துச் சென்று, ஹூப்ளி மற்றும் பல செல்வந்த நகரங்களைக் கைப்பற்றினர். ஆனால் பீஜப்பூரி தளபதி பாலோல் கான் இவர்களைத் தீவிரமாகப் போரிட்டுத் தடுத்து நிறுத்தினார்.

தசரா நாளில் (10, அக், 1673) 25,000 வலிமையான வீரர்கள் சிவாஜியின் தலைமையின் கீழ் பீஜப்பூரி பகுதிக்குள் புயலெனப் பாய்ந்து தாக்கினர். செல்வந்த நகரங்கள் முழுவதையும் கைப்பற்றியபின் கனரா பகுதிக்குள் நுழைந்தனர். டிசம்பர் நடுப்பகுதிவரையிலும் அங்கேயே முகாமிட்டிருந்தனர்.

1674 ஜனவரி கடைசி வாக்கில் கொங்கன் பகுதிக்குள் மொகலாயப் படை வர முயன்றது. அதே நேரத்தில் பீஜப்பூரின் பணாலா பகுதியிலும் தாக்குதலை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தது. ஆனால் சிவாஜி, மலைக் கணவாய்ப் பகுதிகளில் பல இடங்களில் காவலைப் பலப்படுத்தி இந்தப் படைகள் முன்னேறிவரும் வழிகளைத் தடுத்துவிட்டார். இதனால் மொகலாயப் படை எதிர்பார்த்தபடி முன்னேற முடியாமல் திரும்பிச் சென்றது.

அதன் பின்னர், தக்காணத்தில் மொகலாயர்களின் ஆதிக்கம் பலவீனமடையத் தொடங்கியது. கைபர் கணவாய் பகுதியில் ஆஃப்கானியர்கள் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தனர். எனவே 7 ஏப்ரலில் ஒளரங்கஜீப் மொகலாயப் படையை ஹஸன் அப்தல் பகுதியிலிருந்து வழிநடத்த தில்லியிலிருந்து புறப்பட்டுச் சென்றார். அடுத்த மாதம் திலீர் கான் வட மேற்கு எல்லைப் பகுதிக்கு படையுடன் அழைக்கப்பட்டார். தக்காணத்தில் பஹதுர் கான் மட்டும் தனியே பலம் குன்றிய நிலையில் இருந்தார். இந்தச் சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சிவாஜி 1674, ஜூன், ஆறாம் தேதியன்று ராய்கர் கோட்டையில் மிக விமர்சையான முறையில் சத்ரபதி சிவாஜியாக முடிசூட்டிக் கொண்டார்.

8. பஹதுர் கானின் படை முகாம் மீதான தாக்குதல் மற்றும் மொகலாயர்களுடனான சிவாஜியின் போர்கள், 1674.

சிவாஜியின் முடி சூட்டு விழாவுக்குப் பெருமளவிலான பணம் செலவிடப்பட்டது. படையினருக்குத் தொடர்ந்து உணவளிக்க மேலும் அதிகப் பணம் தேவைப்பட்டது. எனவே ஜூலை நடுப்பகுதிவாக்கில் 2000 மராட்டியப் படையுடன் பஹதுர் கான் முகாமிட்டிருந்த பேட்காவ் பகுதிக்கு 50 மைல் தொலைவில் ஒரு சிறிய படையை நகர்த்தினார். அப்படியாக பஹதுர்கானின் கவனத்தை அந்தப் பக்கம் திருப்பிய சிவாஜி தன் தலைமையில் சுமார் 7000 வீரர்களுடன் இன்னொரு பக்கத்திலிருந்து போதிய பாதுகாவல் இல்லாத அவனுடைய முகாமைத் தாக்கி ஒரு கோடிக்கும் மேலான பணத்தைக் கைப்பற்றினார். 200 உயர் ரகக் குதிரைகளையும் கைப்பற்றினார்.

அக்டோபர் இறுதிவாக்கில் சிவாஜி தலைமையில் ஒரு மிகப் பெரிய படை தக்காணப் பீடபூமிக்குள் நுழைந்தது. கலவரமடைந்திருந்த பஹதுர் கானின் முகாமுக்கு ஓரமாகச் சென்று ஒளரங்காபாத் பகுதியிலிருந்த பல கிராமங்களில் தாக்குதல் மேற்கொண்டது. பக்லானா, கந்தேஷ் பகுதிகளுக்கும் முன்னேறிச் சென்று தாக்கியது. அந்தப் பகுதியில் ஒரு மாத காலம் தங்கித் தாக்குதலில் ஈடுபட்டது (நவம்பர் இறுதி தொடங்கி டிசம்பர் இறுதிவரை). எரந்தோலுக்கு பத்து மைல் வடக்கில் இருந்த தரன்காவ் பகுதியையும் அங்கிருந்த ஆங்கிலேயரின் வணிகக் கிடங்கையும் தாக்கினர்.

சிவாஜி இதன் பின்னர் பஹதுர் கானுடன் தந்திரமான அமைதிப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார். அடுத்த மூன்று மாத காலத்துக்கு (மார்ச்-மே 1675) மொகலாயர்களைப் போலியான வாக்குறுதிகளைத் தந்து அமைதி உருவாகும் என்று நம்பவைத்தார். ஜூலை 1675 வாக்கில் போந்தா பகுதியைக் கைப்பற்றியதும் வேடத்தைக் கலைத்துவிட்டு சிவாஜி மொகலாயத் தூதுவர்களை விரட்டியடித்தார்.

ஜனவரி 1676-ல் சிவாஜிக்கு கடும் ஜுரம் ஏற்பட்டது. சத்ராவில் அடுத்த மூன்று மாத காலம் படுத்த படுக்கையாக இருந்தார். பீஜப்பூரில் பஹோல் கான் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து (1675 இறுதியில்) அங்கிருந்த ஆஃப்கானியப் படையினருக்கும் தக்காணப் படையினருக்கும் இடையில் உள் மோதல் வெடித்தது. சிவாஜி இந்த வாய்ப்பையும் நன்கு பயன்படுத்திக்கொண்டார். சிவாஜி பெரும் படையுடன் பாய்ந்து சென்று பெரிய எதிர்ப்பும் அபாயமும் இல்லாத அந்தப் பகுதியை எளிதில் கைப்பற்றிவிட்டார். மே 31 வாக்கில் பஹதுர்கான் பீஜப்பூர் மீதான மிகப் பெரிய தீவிரமான படையெடுப்பை ஆரம்பித்தார். இதனால் புதிதாக ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் பஹோல் கான் சிவாஜியின் உதவியை நாடும் நிலை உருவானது.

9. கர்நாடகப் படையெடுப்புக்கான சிவாஜியின் ராஜ தந்திர நடவடிக்கைகள்

ஜனவரி 1677 வாக்கில் தன் வாழ்நாளிலேயே மிக மிகப் பெரியதான கர்நாடகப் படையெடுப்புக்கு மராட்டிய மன்னர் சிவாஜி தயாரானார். அண்டை ராஜ்ஜியங்களில் இருந்த நிலைமைகள் எல்லாம் சிவாஜிக்கு சாதகமாகவே இருந்தன. ஒளரங்கஜீபின் மிகச் சிறந்த படைகள் எல்லாம் ஆஃப்கான் எல்லையில் அந்த மலைப்பகுதி மக்களை அடக்குவதிலேயே ஈடுபட்டிருந்தன. பீஜப்பூரில் இருந்த மொகலாயப் பிரதிநிதி 31 மே வாக்கில் பீஜப்பூர் மீது தாக்குதலை ஆரம்பித்தார். அது ஒரு வருட காலம் நீண்டது. சிவாஜியின் ராஜ தந்திர நடவடிக்கைகள் பஹதுர் கானை வீழ்த்தியது. ஏற்கெனவே மராட்டிய மன்னருடன் நட்பு முயற்சிகளுக்கு செவி சாய்த்திருந்தார். பீஜப்பூர் மீதான மொகலாயப் படையெடுப்பு ஆரம்பித்த நிலையில் (மே, 1676) மராட்டியர்களுடன் நட்புறவில் இருந்துகொள்வது பஹதுர் கானுக்கு அவசியமாக இருந்தது. அதுபோலவே கர்நாடகப் பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளவிருந்த சிவாஜிக்கும் மொகலாயர்களுடன் நட்புறவில் இருப்பது அவசியமாக இருந்தது. விலை மதிப்பு மிகுந்த பரிசுப் பொருட்களுடன் பஹதுர் கானைச் சென்று சந்திக்கும்படி தன் தலைமை அமைச்சர் நீராஜி ராவ்ஜியை சிவாஜி அனுப்பிவைத்தார். கர்நாடகப் படையெடுப்பு ஒரு ஆண்டுகாலம் நீடிக்கும் என்பதால் சிவாஜி இல்லாதபோது மராட்டியப் பகுதிகளில் மொகலாயப் படை தாக்குதல் நடத்தாமல் இருக்கவேண்டும் என்று ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.

கோல்கொண்டா மன்னருடைய நட்பும் உதவியும்கூட சிவாஜி கேட்டுப் பெற்றுக்கொண்டார். அப்துல் ஹசன் குதுப் ஷாவின் வலிமை மிகுந்த வாஸிராக இருந்த மதன பண்டிட் ஏற்கெனவே சிவாஜியுடன் கூட்டணி அமைத்திருந்தார். அந்தப் பகுதியின் பாதுகாப்புக்காக ஆண்டு கப்பமாக ஒரு லட்ச பணம் தர சம்மதித்திருந்தார். பிரஹலாத நீராஜி மிகவும் சாமர்த்தியசாலி. மராட்டிய தூதுவராக ஹைதராபாதில் இருந்தார். கோல்கொண்டாவின் குதுப் ஷாவிடமிருந்து படையெடுப்புக்கான செலவு மற்றும் துணைப்படை ஒன்றையும் பெற்றுக்கொள்ளலாம்; பதிலுக்குப் போரில் கிடைக்கும் வெற்றியில் பங்கு தரலாம் என்று சிவாஜி முடிவெடுத்தார்.

10. சிவாஜி உருவாக்கிய கோல்கொண்டா சுல்தானுடனான கூட்டணி மற்றும் கர்நாடகப் போரில் வெற்றி

ஜனவரி 1677 வாக்கில் சிவாஜி ராய்கர் பகுதியிலிருந்து கிழக்கு திசையில் 50,000 வீரர்களுடன் புறப்பட்டு பிப்ரவரி ஆரம்ப நாட்களில் ஹைதராபாதுக்கு வந்து சேர்ந்தார். குதுப் ஷாகி பகுதிக்குள் நுழைந்தவர் அங்கு எந்தவிதக் கொள்ளையடிப்பிலோ அங்கிருப்பவர்களுக்கு எந்தவொரு தீங்கோ விளைவிக்கக்கூடாது என்று உறுதியான உத்தரவைப் பிறப்பித்தார். மீற முயன்றவர்களுக்குக் கடுமையான தண்டனையும் விதித்தார்.

தமது மன்னருடைய நண்பருக்காக ஹைதராபாத் நகரம் மிகப் பிரமாண்டமான ராஜ வரவேற்பைத் தந்தது. மராட்டியப் படை கம்பீரமாக வீர நடைபோட்டுச் சென்று தாத் மஹால் அரண்மனையில் தங்கியது. சிவாஜி தன்னுடைய ஐந்து அமைச்சர்களை அழைத்துக்கொண்டு அரண்மனைக்குள் சென்று சுல்தானுடன் மூன்று மணி நேரம் உரையாடினார். சிவாஜியின் வசீகர ஆளுமை, நன்னடத்தை, திறமை ஆகியவற்றையும் அவருடைய படையின் வலிமை, ஒழுங்கு ஆகியவற்றையும் கண்டு வியந்த அப்துல் ஹஸன் தனது வஸிர் உரிமையை அவருக்குத் தரவும் அவர் கேட்பதையெல்லாம் கொடுக்கவும் சம்மதித்தார். வரவிருந்த படையெடுப்பு தொடர்பாக ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.

சிவாஜிக்கு ஹைதராபாத் சுல்தான் நாளொன்றுக்கு 3000 ஃபனம் (அல்லது) மாதம் நான்கரை லட்சம் பணம் கப்பம் கட்டவேண்டும். அவருடைய தளபதி மிர்ஷா முஹம்மது அமீன் தலைமையில் 5000 வீரர்களைக் கொண்ட படையை கர்நாடகப் படையெடுப்பு அனுப்பி உதவவும் வேண்டும். இதற்கு பிரதியுபகாரமாக சிவாஜி தான் வெற்றி பெறவிருக்கும் கர்நாடகப் பகுதிகளில் தனது தந்தை ஷாஜி போன்ஸ்லேவுக்கு சொந்தமாக இருந்திராத பகுதிகளை ஹைதராபாத் சுல்தானுக்குத் தந்துவிடுவதாக ஒப்பந்தம் செய்துகொண்டார். மொகலாயர்களுடனான நல்லிணக்க உறவுகள் மீண்டும் புதிய ஒப்பந்தங்களுடன் உறுதி செய்துகொள்ளப்பட்டன.

மொகலாயர்களுடைய படையெடுப்பிலிருந்து தம்மைப் பாதுகாப்பதற்கு பிரதியுபகாரமாக சிவாஜிக்கு ஹைதராபாத் நிஜாம் ஆண்டுக்கு ஒரு லட்சம் பணம் தனியாகத் தரவும் ஒரு மராட்டியப் பிரதிநிதியை தனது அரசவையில் நல்லெண்ணத் தூதுவராகத் தங்க வைக்கவும் சம்மதித்தார்.

விஜய நகரப் பேரரசின் கீழிருந்த குறு நிலங்கள் எல்லாம் அடில் ஷா மற்றும் குதுப் ஷா ஆகியோரால் ஏற்கெனவே கைப்பற்றப்பட்டிருந்தன. வடக்கு மற்றும் கிழக்கு மைசூரானது பீஜப்பூர் சுல்தான் வசம் இருந்தது. பாலாறு தொடங்கி காவிரியின் கிளை நதியான கொள்ளிடம் வரையான அதாவது வேலூர் தொடங்கி தஞ்சாவூர் வரையான மதராஸ் பகுதியும் பீஜப்பூர் சுல்தான் வசம் இருந்தது. பாலாறுக்கு வடக்கே இருந்த ஸ்ரீகாகுளம் தொடங்கி சத்ராஸ் வரையான பகுதிகள் கோல்கொண்டா சுல்தான் வசம் இருந்தன.

கர்நாடகப் பகுதியில் பீஜப்பூர் சுல்தானின் பிரதிநிதியாக நாஸிர் முஹம்மது கான் (முன்னாள் வாஸிரான கான் முஹம்மதுவின் மகன்) செஞ்சி கோட்டையை தன் முகாமாகக் கொண்டு இருந்தார். தெற்கே ஷேர் கான் லோதி (ஆஃப்கானிய பஹோல் கானின் வாரிசு) திருச்சிக்கு வடக்கே இருந்த வாலிகண்டபுரம் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டுவந்தார். மேலும் தெற்கே தஞ்சை இந்து சாம்ராஜ்ஜியங்களும் (சிவாஜியின் ஒன்றுவிட்ட சகோதரர் வியான்கோஜி 1675-ல் இதைக் கைப்பற்றினார்) மதுரை ராஜ்ஜியமும் இருந்தன. இந்த ராஜ்ஜியங்கள் எல்லாம் தமக்குள் போரிட்டபடியும் ஒருவர் மற்றவருடைய பகுதியை தம் ராஜ்ஜியத்துடன் இணைத்தபடியும் இருந்தனர். இந்த உள் மோதல்களைப் பயன்படுத்திக்கொண்டு குதுப் ஷாஹியின் அமைச்சர் மதன பண்டிட் பீஜப்பூர் சுல்தான் வசமிருந்த கர்நாடகப் பகுதிகளை சிவாஜியின் துணையுடன் மீட்டு அங்கு ஹிந்து ராஜ்ஜியத்தை மீண்டும் கொண்டுவர விரும்பினார்.

ஹைதராபாதிலிருந்து ஒரு மாதம் கழித்து தென் திசையில் கர்னூல், ஸ்ரீ சைலம், அனந்தபூர், திருப்பதி, காளஹஸ்தி, பெடபாலம் (மதராஸுக்கு ஏழு மைல் தொலைவில்) வழியாக முன்னேறிச் சென்றார். செஞ்சி கோட்டையை அதன் தளபதியுடன் ஒப்பந்தம் செய்து கைப்பற்றினார். வேலூர் கோட்டையை முற்றுகையிட்டார். அதன் தளபதி 14 மாதங்கள் கடுமையாகப் போரிட்டு 21, ஆக, 1678 இறுதியில் தோற்றார்.

கர்நாடக சமவெளிப் பகுதிகளை மராட்டியப் படை விரைவில் கைப்பற்றியது. கோட்டை பாதுகாப்பு பெற்றிருந்த ஒரு சில பகுதிகள் மட்டுமே லேசாக எதிர்த்து நின்றன. செல்வந்தர்கள் எல்லாம் காடுகளுக்குத் தப்பி ஓடினர். அல்லது ஐரோப்பிய கோட்டைகளில் தஞ்சம் புகுந்தனர். ஷேர் கான் லோதி கடலூருக்கு 13 மைல் மேற்கில் இருந்த திருவடி பகுதியில் தோற்கடிக்கப்பட்டார். 26 ஜூன் வாக்கில் தன் வசம் இருந்த பகுதிகள் அனைத்தையும் மராட்டியர் வசம் ஒப்படைத்தார். கொள்ளிடம் ஆற்றின் வட கரையில் இருந்த திருமலவாடி வரை சென்ற சிவாஜி வியான்கோஜியைத் தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டுக்கொண்டார். தனது தந்தை இறப்பதற்கு முன்பாக அவரிடம் விட்டுச் சென்றிருந்த பகுதிகளில் நான்கில் மூன்று பகுதியை மீட்டெடுக்க முயன்றார். ஆனால், வியான்கோஜி சமயோஜிதமாக அங்கிருந்து தப்பி (23, ஜூலை) தஞ்சாவூருக்குச் சென்றுவிட்டார். சிவாஜி திரும்பிவரும் வழியில் பல்வேறு புனித ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டார். சிவாஜியின் படையெடுப்பினால் கர்நாடகப் பகுதிகள் பெரும் சேதத்தைச் சந்தித்தன.

1677 -1678 காலப் படையெடுப்பினால் சிவாஜியின் சாம்ராஜ்ஜியத்துடன் 60க்கு 40 லீக் அளவிலான கர்நாடகப் பகுதிகள் சேர்க்கப்பட்டன. அவற்றிலிருந்து ஆண்டுக்கு 20 லட்சம் பணம் வருமானமாகக் கிடைத்தது. சுமார் 100 கோட்டைகளும் மராட்டிய சாம்ராஜ்ஜியத்தில் இணைக்கப்பட்டன.

நவம்பர் 1677-ல் சிவாஜி மதராஸ் பகுதியிலிருந்து கிளம்பிச் சென்று மைசூரின் கிழக்கு மத்திய பகுதிகளைக் கைப்பற்றியபடி திரும்பினார். மைசூர் ராஜ்ஜியத்தின் மையப்பகுதியிலிருந்த சேரா பகுதியிலிருந்து கோபல், குடகு, பன்காபூர், பேல்வாடி (இன்றைய பேல்காவ் மாவட்டம்) துர்கல் வழியாக தனது கோட்டையாகத் திகழ்ந்த பணாலா பகுதிக்கு ஏப், 1678 முதல் வாரத்தில் சென்று சேர்ந்தார்.

(தொடரும்)

___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *