Skip to content
Home » ஔரங்கசீப் #30 – சிவாஜியின் வெற்றிகள் (1670-1680) – 3

ஔரங்கசீப் #30 – சிவாஜியின் வெற்றிகள் (1670-1680) – 3

11. மொகலாயர்கள், பீஜப்பூர் சுல்தானகம், சிவாஜி (1678-79)

1678-ல் சிவானீர் கோட்டையைக் கைப்பற்ற மராட்டியர்கள் இரண்டாவது முயற்சியை மேற்கொண்டனர். ஜுனார் கிராமத்து மலை அடிவாரத்தில் முகாமிட்டு இரவில் அந்தக் கோட்டை மீது ஏற முயற்சி செய்தனர். கயிறு ஏணி மாட்டியும் சுருக்குக் கயிறு வீசியும் சுமார் 300 மராட்டிய வீரர்கள் ஏறினர். ஆனால் அப்துல் அஜீஸ் கான் திறமையான கோட்டைக் காவலர். கோட்டைக்குள் நுழைந்த அத்தனை மராட்டிய வீரர்களையும் கொன்று குவித்தார். ’நான் இந்தக் கோட்டையின் தளபதியாக இருக்கும்வரை உங்களால் இதைக் கைப்பற்ற முடியாது’ என்ற செய்தியை சிவாஜிக்குச் சென்று சேரவைத்தார்.

சிவாஜிக்கும் குதுப் ஷாவுக்கும் இடையில் சிறிய விலகல் ஏற்பட்டது. மதன பண்டிட் இதுவரையிலும் நிதானமாக முன்னெடுத்திருந்த ராஜ தந்திர முயற்சிகள் தோல்வியடைந்தன. சிவாஜியின் கர்நாடகப் படையெடுப்பில் குதுப் ஷா வெறும் ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது தொடர்பாகக் கோபமடைந்தார். படையெடுப்பின் முழுச் செலவையும் அவரே பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆயுதங்கள், துணைப்படைகள் என அனுப்பியிருக்கிறார். இருந்தும் சிவாஜி வென்ற கோட்டைகளில் எந்தவொன்றும் குதுப் ஷாவுக்குத் தரப்படவில்லை. தங்கச் சுரங்கமான கர்நாடகப் பகுதிகளில் இருந்து கிடைத்த செல்வத்தில் ஒரு அணா பைசா கூட குதுப் ஷாவுக்குத் தரப்படவும் இல்லை.

இதனால் ஆத்திரமடைந்தவர் பீஜப்பூர் சுல்தானின் பிரதிநிதியான சித்தி மசூத், ஷார்ஸா கான் போன்ற சிவாஜியின் எதிரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அவர்களுக்கு பணம் கொடுத்து சிவாஜியை ’கொங்கன் பகுதிக்குள்ளாகவே முடக்கும்படிக்’ கேட்டுக்கொண்டார். ஆனால் திலீர் கான் திடீரென்று பீஜப்பூர் மீது படையெடுத்து வந்து இந்தத் திட்டம் முழுவதையும் குலைத்துவிட்டார்.

மூத்த மகன் சம்பாஜி, முதுமையடைந்திருந்த சிவாஜிக்கு ஒரு சாபம் போலிருந்தார். இளமைத் துடிப்புடன் இருந்த சம்பாஜி சுக போகங்களில் திளைப்பவராகவும் ஒழுக்கம் அற்றவராகவும் வன்முறையில் நாட்டம் கொண்டவராகவும் நிதானமற்றவராகவும் இருந்தார். திருமணமான பிராமணப் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதற்காக சிறைப்படுத்தப்பட்டிருந்தவர் தன் மனைவி யசோ பாயீயுடன் தப்பிச் சென்று திலீர் கானிடம் அடைக்கலம் புகுந்தார் (13, டிச, 1678). தன்னிடம் வந்து சேர்ந்திருக்கும் முக்கிய நபரைப் பயன்படுத்திக்கொண்டு பஹாதுர்கர் பகுதிக்கு 10 மைல் தெற்கில் அகுல்ஜி பகுதியில் முகாமிட்டு பீஜப்பூர் மீதான தாக்குதலுக்கு திலீர்கான் தயாரானார்.

சித்தி மசூத் இந்த அபாயத்தைத் தெரிந்துகொண்டு சிவாஜியிடம் உதவி கேட்டார். அவரும் சம்மதித்தார். பீஜப்பூரைப் பாதுகாக்க ஆறிலிருந்து ஏழாயிரம் திறமையான குதிரைப்படையை மன்னர் அனுப்பிவைத்தார். மசூதுக்கு சிவாஜியின் மீது முழு நம்பிக்கை வந்திருக்கவில்லை. சிவாஜியும் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அடில் ஷாகி பிராந்தியத்தைத் தாக்கித் தன்வசப்படுத்த முயற்சி செய்தார். இதனால் மசூத் உடனே திலீர் கானுடன் நட்புபாராட்டினார். பீஜப்பூருக்கு மொகலாயப் படையை வரச் சொல்லி ராஜ வரவேற்பு தரப்பட்டது.

திலீர் கான் அதன் பின் பூபால்கர் கோட்டையை நோக்கி படையெடுத்துச் சென்றார். அது ஜாத் பகுதிக்கு வட மேற்கில் 20 மைல் தொலைவிலும் புரந்தர்பூருக்கு தென் மேற்கில் 45 மைல் தொலைவிலும் இருந்தது. மொகலாயர்களுடனான போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கல முகாம் ஒன்றையும் தனது செல்வம், ஆயுதங்கள் ஆகியவற்றின் பாதுகாப்புக் கிடங்கு ஒன்றையும் சிவாஜி அங்கு அமைத்திருந்தார்.

2, ஏப், 1679 காலை 9 மணி அளவில் போர் மூண்டது. மொகலாயப் படைகள் மதியம் வரை தீவிரமாகப் போரிட்டன. இரு தரப்பிலும் மிகப் பெரிய உயிரிழப்புகளுக்குப் பின் அந்தக் கோட்டை மொகலாயர் வசம் விழுந்தது. ஏராளமான தானிய மூட்டைகள், பிற சொத்துகள், ஏராளமான மக்கள் எல்லாம் திலீர் கானின் படையால் கைப்பற்றப்பட்டன. கோட்டையில் உயிருடன் இருந்தவர்களில் 700 பேரின் ஒரு கையை மட்டும் வெட்டிவிட்டு தப்பிச் செல்ல அனுமதித்தனர். எஞ்சியவர்கள் அனைவரையும் அடிமைச் சந்தையில் விற்றனர்.

பூபால்கர் பகுதி மொகலாயர் வசம் போனதைத் தொடர்ந்து பீஜப்பூர் மேட்டுக்குடியினருக்கும் மொகலாய பிரதிநிதிக்கும் இடையில் சின்னஞ்சிறிய பூசல்கள் எழுந்தன. மசூதுக்கும் ஷேர்ஷா கானுக்கும் இடையிலும் மசூதுக்கும் திலீர் கானுக்கும் இடையிலும் மசூதுக்கும் அவருடைய நம்பிக்கைக்குரிய வெங்கடாத்ரி முராரிக்கும் இடையிலுமாக சண்டை மூண்டன. அந்த ஆண்டின் நடுப்பகுதி வாக்கில் ஜெஸியா வரி விதிப்பை எதிர்த்து ஒளரங்கஜீபுக்கு சிவாஜி ஓர் அற்புதமான கடிதம் எழுதினார். நீலா பிரபுவினால் பாரசீக மொழியில் அது மிகுந்த சொல்வன்மையுடன் எழுதப்பட்டிருந்தது.

12. சிவாஜியின் இறுதி யுத்தம்

18, ஆகஸ்ட் வாக்கில் திலீர் கான் பீஜப்பூருக்கு 40 மைல் வடக்கில் இருந்த தல்கேத் பகுதி வழியாக பீமா நதியைக் கடந்து சென்று மசூதுக்கு எதிராக புதிய தாக்குதலை மேற்கொண்டார். கையறு நிலையில் இருந்த அந்த பிரதிநிதி சிவாஜியிடம் உதவி கேட்டார். சிவாஜியும் பீஜப்பூரைக் காப்பாற்றும் பொறுப்பை உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டார். இதனிடையில் திலீர் கானிடமிருந்து விலகிவிட்டிருந்த சம்பாஜி 4 டிசம்பர் வாக்கில் பனாலாவுக்கு வந்து சேர்ந்திருந்தார்.

4, நவம்பர், 1679-ல் சிவாஜி பீஜப்பூருக்கு வடக்கில் 55 மைல் தொலைவில் இருந்த சேல்குர் பகுதிக்குப் படையுடன் சென்றார். 18,000 வலிமை மிகுந்த குதிரைப்படை சிவாஜி மற்றும் ஆனந்த ராவ் என இருவர் தலைமையில் இரண்டு இணையான வரிசையில் வெள்ளம் போல் மொகலாய தக்காணப் பகுதிக்குள் வெற்றி பெற்றபடி முன்னேறிச் சென்றன. பெரும் செல்வத்தைக் கவர்ந்துகொண்டனர். அந்த மாத நடுப்பகுதிவாக்கில் ஒளரங்காபாதுக்கு கிழக்கே 40 மைல் தொலைவில் இருந்த ஜல்னா என்ற வணிக நகரத்தைக் கைப்பற்றினார்கள்.

ஜல்னா நகரின் புற நகர் பகுதியில் புகழ் பெற்ற சூஃபி துறவியான சையது ஜன் முஹம்மதுவின் வசிப்பிடம் இருந்தது. ஜல்னா பகுதியில் இருந்த செல்வந்தர் பலரும் தமது நகைகள், செல்வங்களுடன் இந்த இடத்தில் தஞ்சமடைந்தனர். மராட்டிய படையினருக்கு ஊரில் செல்வம் இல்லை என்பதும் இந்த சூஃபி துறவியின் நந்தவனத்தில் அவை மறைத்துவைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்ததும் அங்கு நுழைந்து அவர்களைத் தாக்கி அவற்றைக் கைப்பற்றினர். சூஃபி துறவி, அடைக்கலம் தேடி வந்தவர்களை விட்டுவிடும்படி அவர்களிடம் கேட்டுக்கொண்டார். படையினர் கேட்கவில்லை. இதனால் கோபம் கொண்ட சூஃபி துறவி ’தனது பிரார்த்தனையின் வலிமையினால்’ சிவாஜியை சபித்தார். அடுத்த ஐந்து மாதங்களில் சிவாஜி இறந்தபோது மக்கள் இந்த சூஃபி துறவியின் சாபமே அதற்குக் காரணம் என்று சொன்னார்கள்.

ஜல்னா பகுதியை நான்கு நாட்கள் தாக்கி முடித்தபின்னர் மராட்டியப் படை தங்கம், வெள்ளி, நகைகள், விலை உயர்ந்த ஆடைகள், குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள் என அனைத்தையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டது. மொகலாயத் தளபதி ரன்மஸ்த் கான் அவர்களில் பின்வரிசைப் படையினரைத் தாக்கினார். சித்தோஜி நிம்பல்கர் சுமார் 5000 வீரர்களுடன் இவர்களை மூன்று நாட்கள் தடுத்து நிறுத்திப் போரிட்டார். இறுதியில் அவருடைய வீரர்கள் பலருடன் அவரும் கொல்லப்பட்டார்.

ஒளரங்காபாதிலிருந்து சர்தார் கான் மற்றும் கேசரி சிங் தலைமையில் மிகப் பெரிய மொகலாயப் படை விரைந்து வந்து சேர்ந்தது. இந்தப் புதிய படை சிவாஜியின் படையினருக்கு ஆறு மைல் தொலைவில் முகாமிட்டிருந்தபோது சக இந்துவான கேசரி சிங், சிவாஜிக்கு ஒற்றர் மூலம் தூது அனுப்பி தப்பிச் சென்றுவிடும்படிக் கேட்டுக்கொண்டார். சிவாஜி தனது தலைமை ஒற்றர் பாஹிர்ஜி மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். மொகலாயப் படை சுற்றி வளைப்பதற்கு முன்பாக அவர் காட்டிய ரகசிய வழியில் மராட்டியப்படை தப்பி ஓடியது. மூன்று பகல், மூன்று இரவுகள் எங்கும் நிற்காமல் விரைந்து சென்றனர். போரில் கைப்பற்றிய செல்வத்தில் பெரும் பகுதியை இழக்க நேர்ந்தது. அதோடு 4000 குதிரைப்படையினர் கொல்லப்பட்டனர். ஹம்பீர் ராவும் காயமடைந்தார்.

இப்படித் தோல்வியில் முடிவடைந்த படையெடுப்புக்குப் பின் சிவாஜி பட்டாகர் பகுதிக்கு 22, நவம்பரில் திரும்பினார். சோர்வடைந்திருந்த தனது படையினருக்குச் சில நாட்கள் ஓய்வு கொடுத்தார். டிசம்பர் தொடக்கத்தில் ராய்கர் திரும்பினார். நவம்பர் கடைசி வாரத்தில் கந்தேஷ் பகுதியை மராட்டியப் படையின் ஒரு பிரிவு தாக்கியது. தரன்காவ், சோப்ரா மற்றும் அவற்றின் அருகில் இருந்த பல ஊர்களைத் தாக்கியபடி ஊர் திரும்பினர்.

தனது மூத்த மகனுடைய நடவடிக்கைகள் சிவாஜிக்கு எதிர்காலம் குறித்த மிகப் பெரிய வேதனையைத் தந்தது. ஒழுக்கமில்லாத, க்ரூர குணம் கொண்ட, துளியும் மதிக்கத் தகுதியில்லாத, தேச பக்தியோ தெய்வ நம்பிக்கையோ இல்லாத மகனிடம் மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை ஒப்படைக்கவே முடியாது. சம்பாஜியை நல்வழிப்படுத்த சிவாஜி எவ்வளவோ முயற்சிகள் எடுத்தார். ஆனால் பிறவியிலேயே நல்லொழுக்கங்களில் சிறந்து விளங்கிய சிவாஜிக்கு தான் சொல்பவையெல்லாம் தரிசு நிலத்தில் தூவும் விதைபோல் வீணாகிக் கொண்டிருப்பது புரிந்தது. அப்படியாக அவருடைய இறுதிக் காலம் பெரும் வேதனை மிகுந்ததாக ஆகியிருந்தது. 23, மார்ச், 1680-ல் காய்ச்சலும் ரத்த பேதியும் ஏற்பட்டு படுத்த படுக்கையாக விழுந்தார். 12 நாட்கள் இந்த வலிகள் தொடர்ந்தன. இறுதியில் மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்த சிவாஜி 4, ஏப்ரல், 1680-ல் சித்திரா பெளர்ணமி நன்னாளில் உயிர் துறந்தார். அப்போது அவருக்கு வயது 53கூட முடிந்திருக்கவில்லை.

13. சிவாஜியின் சாம்ராஜ்ஜியம், படை, வருவாய்

வடக்கில் ராம் நகரில் ஆரம்பித்து (சூரத்திலிருக்கும் இன்றைய தரம்பூர் பகுதி) தெற்கே கர்வார் அல்லது கனரா பகுதியில் பம்பாய் மாவட்டத்தில் கங்காவதி ஆறு வரையிலும் சிவாஜியின் சாம்ராஜ்ஜியம் பரந்து விரிந்திருந்தது. வட கிழக்கில் பல்கானா வரையிலும் இருந்த ராஜ்ஜியம் தென்திசையில் நாசி, புனே மாவட்டங்கள் வழியாகச் சென்று சத்ரா, கோலாபூரின் பெரும்பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது. அப்போதுதான் கைப்பற்றியிருந்த மேற்கு கர்நாடகா அல்லது பேல் காவிலிருந்து துங்கபத்ரா நதிவரையிலுமான கன்னட மொழி பேசப்படும் பகுதிகள், மதராஸ் பிரஸிடென்ஸியில் பெல்லாரி வரையிலும் விரிந்திருந்தது.

துங்கபத்ரா நதிக்கரையில் கோபால் பகுதியிலிருந்து வேலூர், செஞ்சிவரையிலும் அதாவது மைசூர் ராஜ்ஜியத்தின் வட, மத்திய, கிழக்குப் பகுதிகள், மதரஸின் பெல்லாரி, சித்தூர், ஆர்காடு ஆகிய மாவட்டங்கள் எல்லாம் சிவாஜியால் மிக சமீபத்தில் கைப்பற்றப்பட்டிருந்தன. இங்கு நிறுத்தப்பட்டிருந்த படையால்தான் இந்தப் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. 1680 வாக்கில் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்ததாகச் சொல்லவும் முடியாது.

இப்படியாக முழு கட்டுப்பாட்டில் இருந்த மற்றும் பகுதி கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்கு அப்பால் பல பிராந்தியங்கள் சிவாஜியின் வலிமைக்குக் கட்டுப்பட்டிருந்தன. ஆனல் அவருடைய ஆளுகைக்கு உட்பட்டிருக்கவில்லை. மராட்டியப் படைகளினால் ஆண்டு தோறும் இந்தப் பிராந்தியங்களில் இருந்து கந்தானி (கப்பம்) வசூலிக்கப்பட்டன. அந்தப் பிராந்தியங்களின் மொத்த வருவாயில் நான்கில் ஒருபங்கு வசூலிக்கப்பட்டதால் செளத் (சம்ஸ்கிருதத்தில் சதுர்த் – நான்கு என்பதன் மராட்டிய பதம்) என்று அழைக்கப்பட்டது. இப்படிக் கப்பம் செலுத்தும் பகுதிகளில் மராட்டியப் படையெடுப்பு நடக்காது. ஆனால் அந்நிய படையெடுப்புகளில் இருந்து அல்லது உள் நாட்டுக்குழப்பங்களில் இருந்து இந்தப் பகுதிகளுக்கு மராட்டியப் பாதுகாப்பு கிடைக்காது. இந்தப் பகுதிகளில் இருந்து சிவாஜியின் வருமானம் ஒரு கோடி பணம் என்று அவருடைய அரசவை தீர்மானித்திருந்தது. இதுபோல் செளத் கப்பம் என்ற வகையில் 80 லட்சம் பணம் கிடைத்தது.

ஒவ்வொரு ஆண்டும் தன் படைகளை அனுப்பி தன் ஆளுகைக்குள் இல்லாத பகுதிகளில் இருந்து தமக்குத் தேவையான உணவுப் பொருட்கள் பிறவற்றைப் பெற்றுக்கொள்வது வழக்கம். ஜூன்-செப்டம்பர் வாக்கில் மழைக்காலத்தில் மராட்டியப் படை தற்காலிக முகாமில் தங்கும். அக்டோபர் ஆரம்பத்தில் தசரா காலத்தில் சிவாஜி சொல்லும் பகுதிக்கு இந்தப் படை புறப்பட்டுச் செல்லும். செல்லும் ஊர்களில் இருந்தே தமக்கான உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவேண்டும். அங்கு வரி விதித்து தொகையைச் சேகரித்துக்கொள்ளவும் வேண்டும். எட்டு மாத காலம் இந்தப் படையெடுப்பு நீடிக்கும்.

பெண்கள், தாசிகள், நடன மகளிர் என யாரும் படையினருடன் செல்லக்கூடாது. யாரேனும் படைவீரருடன் இப்படியானவர் இருப்பது தெரியவந்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும். எந்த ஊரிலும் பெண்களையோ குழந்தைகளையோ சிறைப்பிடிக்கவோ தாக்கவோ கூடாது. ஆண்களுடன் மட்டுமே போரிடவேண்டும். பிராமணர்களுக்குத் துன்பம் இழைக்கக்கூடாது. அவர்களைச் சிறைப்பிடித்து பிணைத்தொகை கேட்கக்கூடாது. படையெடுத்த பகுதிகளில் கிடைக்கும் செல்வத்தை ஒவ்வொரு வீரரும் அரசின் கஜானாவில் சேர்த்துவிடவேண்டும்.

14. சிவாஜியின் ஆட்சி

அஷ்ட பிரதான் (எண்பேராயம்) என்ற எட்டு அமைச்சர்கள் அடங்கிய குழு சிவாஜிக்கு ஆட்சி செய்வதில் ஆலோசனை வழங்கியது. (1) பேஷ்வா – முக்கிய பிரதான் – பிரதம அமைச்சர்; (2) மஜ்முவாதர் – கணக்கர் – மேலாளர் (சமஸ்கிருதத்தில் அமாத்யர்) (3) வஹ்யா நவிஸ் (மந்திரி) அரசரின் அன்றாட செயல்பாடுகள், அரசபை நிகழ்ச்சிகள் பற்றி ஆவணப்படுத்துபவர், (4) சுர்ணிஸ் (சசிவ்) கடிதம் மற்றும் பிற தகவல் தொடர்பு அதிகாரி (5) தபீர் (சுமந்த்) வெளியுறவுச் செயலர், ஒற்றர்படைத் தலைவர் (6) சேர் – இ – நெளபத் (சேனாபதி) தளபதி, (7) பண்டிட் ராவ் (பாரசீக அவையின் சதர் மற்றும் முஹ்தசீப் இருவரின் பணியைச் செய்பவர்) ஆன்மிக, மத விஷயங்கள், ஜாதி சிக்கல்கள் ஆகியவற்றில் ஆலோசனை வழங்குபவர், விசுவாசமின்மை, ஒழுக்கமின்மைக்கு தண்டனை வழங்குபவர்; வேத சாஸ்திரங்கள் கற்ற பிராமணர்களுக்கு தானங்கள் வழங்கும் பணியையும் கவனித்துக்கொள்வார் (8)நியாயஅத்யஷ் – தலைமை நீதிபதி.

சேனாபதி நீங்கலாகப் பிற அதிகாரிகள் அனைவரும் பிராமணர்கள். தேவைப்படும் நேரத்தில் முதல் ஆறு அதிகாரிகள் படையை வழிநடத்தும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வார்கள். அரசாங்கத் தகவல், கடிதப் பரிமாற்றங்கள் எல்லாம் காய்ஸ்த ஜாதியைச் சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்டன. அவர்களுக்கு பாரசீகம் நன்கு தெரியும். ராணுவத்தின் கணக்கு வழக்குகள் எல்லாம் பக்க்ஷி என்று பாரசீக மொழியில் அழைக்கப்பட்ட சப்னிசஸ் அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டன.

இந்த எட்டு அமைச்சர்கள் குழுவை ஓர் அமைச்சரவை என்று சொல்லமுடியாது. உண்மையில் இவர்கள் மன்னரின் செயலர்கள் போலவே செயல்பட்டனர். மன்னர் சொல்வதை மீறியோ வேறு கொள்கையை வலியுறுத்தியோ பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று சொல்லியோ தமது விருப்பத்தை ஏற்கவைக்கமுடியாது. மன்னர் ஆலோசனைகள் கேட்கும்போது அதைச் சொல்வது மட்டுமே இவர்களுடைய பணி. பிற தருணங்களில் மன்னர் உத்தரவிடுவதை நடைமுறைப்படுத்தினர். தத்தமது துறைகளின் பணிகளை மேற்பார்வையிட்டனர். பிரிட்டிஷாரின் அமைச்சரவை போன்ற வலிமையும் ஒற்றுமையும் மராட்டிய அவையில் இருந்திருக்கவில்லை. 14-ம் லூயி அல்லது மாமன்னர் ஃப்ரெடரிக் போல் சிவாஜியும் முழு அதிகாரத்தையும் தன் கைகளிலேயே வைத்திருந்தார்.

15. சிவாஜியின் குண நலன்கள் மற்றும் வரலாற்றில் அவருக்கான இடம்

சிவாஜி முன்னெடுத்த வழிமுறைகள் எப்படியானதாக இருந்தாலும் அவருடைய வெற்றிகள் மகத்தானவை. ஜாகிர்தாரின் மகனான இவர் மொகலாய சாம்ராஜ்ஜியம் தன் அத்தனை வளங்கள், பலங்களைக் கொண்டும் அடக்க முடியாத மாமன்னராகத் திகழ்ந்தார். தக்காணப் பகுதிக்கு ஒளரங்கஜீப் அனுப்பிய அத்தனை மொகலாயத் தளபதிகளும் தோற்றுவிட்டநிலையில் எப்படியாவது சிவாஜியை அடக்க வேண்டும் என்று தவியாகத் தவித்தார்.

புதிதாக மீண்டும் ஆரம்பித்திருந்த மத ஒடுக்குமுறைக்கு ஆளான ஹிந்துக்களுக்கு சிவாஜி மாபெரும் விடிவெள்ளியாகவும். இந்து மதத்தின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழ்ந்தார்.

சிவாஜியின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் ஒழுக்கங்களில் அப்பழுக்கற்ற நபராக இருந்தார். பணிவு மிகுந்த மகன், அன்பான தந்தை, அக்கறை மிகுந்த கணவராக இருந்தார். பால்ய காலத்திலிருந்தே மத, ஆன்மிக விஷயங்களில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார். தன்னியல்பாகவும் பயிற்சியின் மூலமாகவும் வாழ் நாள் முழுவதும் யோகி போல மிதமாகவே அனைத்தையும் துய்த்தார். ஒழுக்கக்கேடுகளில் இருந்து முற்றிலும் விலகி வாழ்ந்தார். துறவிகள் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார்.

ஹிந்து, முஸ்லிம் என அனைத்து மதத் துறவிகள் மீதும் அவர் கொண்டிருந்த மரியாதை, அனைத்து மதங்களையும் நட்புணர்வுடன் பார்த்த குணம் ஆகியவையெல்லாம் அவருடைய நல்லிணக்க சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.

பெண்கள் மீதான மரியாதை, அவருடைய படையினரிடையே அவர் அது தொடர்பாக நிலைநிறுத்தியிருந்த ஒழுக்கம், கட்டுப்பாடு இவையெல்லாம் அவருடைய காலகட்டத்தில் மாபெரும் அதிசயமாகவும் அற்புதமாகவும் இருந்தன. காஃபி கான் போன்று அவரை மிகக் கடுமையாக எதிர்த்தவர்களின் பாராட்டையும் இந்த ஒழுக்க நடவடிக்கைகள் பெற்றுத்தந்திருந்தன.

பிறவித் தலைவர்களின் வசீகரம் அவருக்கு இருந்தது. அவரைப் பற்றித் தெரிந்தவர்கள் அனைவரையும் மயக்கும் குணம் பெற்றிருந்தார். ராஜ்ஜியத்தின் உன்னதமான விஷயங்கள் அனைத்தையும் தன் பக்கம் இழுக்கும் சாமர்த்தியம் பெற்றிருந்தார். அவருடைய அதிகாரிகள், அமைச்சர்களிடமிருந்து அர்ப்பண உணர்வுடன்கூடிய மரியாதையை வென்றிருந்தார். அவர் பெற்ற அபாரமான வெற்றிகளும் முகத்தில் எப்போதும் மாறாமல் இருக்கும் புன்முறுவலும் அவரை அவருடைய படைவீரர்கள் மத்தியில் ஒரு தெய்வத்துக்கு நிகராக பூஜிக்கும் இடத்தில் வைத்திருந்தது.

ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவரைப் பற்றி மிகவும் சரியாக எடைபோட்டுவிடும் வரம் பெற்றிருந்தார். தளபதிகள், ஆட்சிப் பிரதிநிதிகள், ராஜ தந்திர அதிகாரிகள், தூதுவர்கள், செயலர்கள் என அவர் தேர்ந்தெடுத்த நபர்களில் ஒருவர்கூட சோடைபோனதில்லை. அவருடைய படை நிர்வாகமும் போர் வியூகங்களும் செய் நேர்த்தியின் முன்னுதாரணங்கள். படையினருக்குத் தேவையானவையெல்லாம் அவர்கள் கேட்கும் முன்பாகவே அவர்களுக்குக் கிடைத்துவிடும். அனைத்துத் தளவாடங்களும் பிற பொருட்களும் பத்திரமாக திறமையான நபரின் மேற்பார்வையின் கீழ் வைக்கப்பட்டிருக்கும்.

சிவாஜியின் ஒற்றர்படை அபாரமானது. ஒவ்வொரு படையெடுப்புக்கு முன்பாகவும் தேவையான அத்தனை நுட்பமான தகவல்களையும் வாரிவழங்கிவிடுவார்கள். படைகள் நினைத்த நேரத்தில் கூடியும் நினைத்த இடத்தில் பிரிந்தும் சென்று துல்லியமாகத் தாக்குதல்களை ஒருங்கிணைக்கும் திறமை பெற்றிருந்தன. எதிர்களைத் துரத்திச் செல்வதாகட்டும், தப்பிப்பதாகட்டும் எதிரிகளின் தடைகளை முறியடிப்பதாகட்டும் சிவாஜியின் படைக்கு நிகர் அவர்கள் மட்டுமே. எந்தநிலையிலும் போரில் கைப்பற்றப்பட்ட செல்வங்கள், வளங்கள் எல்லாம் பெரும்பாலான நேரங்களில் எந்தவித இழப்பும் இன்றி கஜானாவுக்குக் கொண்டுவந்து சேர்க்கப்பட்டுவிடும்.

படைவீரர்களுக்கு உகந்தவகையிலும் போரிடும் பகுதிக்கு ஏற்றவகையிலும் வியூகங்களை வகுக்கும் மேதமை நிறைந்தவராக இருந்தார். அன்றைய காலகட்டத்தின் நவீன ஆயுதங்கள், எதிரிகளின் பலம் பலவீனங்கள், உள் முரண்கள் பற்றிய துல்லிய புரிதல் இவையெல்லாம் அவர் கருவிலேயே உரு கொண்ட மாவீரர் என்பதை நிரூபிக்கின்றன. அவருடைய மின்னல் வேகக் குதிரைப்படையும், அதற்கு ஈடு கொடுக்கும் காலாட்படையும் ஒளரங்கஜீப் ஆட்சி செய்த காலகட்டத்தில் தோற்கடிக்கவோ தடுத்து நிறுத்தவோ முடியாத வலிமையுடன் திகழ்ந்தன.

சிவாஜியின் மகத்துவம் அவருடைய நல்லொழுக்கத்திலும் நடைமுறை சார்ந்த அறிவிலும்தான் இருந்தன; அவருடைய அரசியல் சாதுரியத்தையும் சுயமான சிந்தனைப்போக்கையும்விட அவையே அவருடைய வெற்றிக்கு காரணமாக இருந்தன. பிறரை மிகத் துல்லியமாக எடைபோடும் திறமை, நிர்வாக ஏற்பாடுகளை நேர்த்தியுடன் செய்து முடித்தல், நெருக்கடியான நேரத்தில் எது சாத்தியம்; எது அதிக நன்மையைத் தரும் என்பதை விரைந்து முடிவெடுக்கும் திறன் இவையெல்லாம் அவருடைய வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி வந்து குவியக் காரணமாக அமைந்தன.

சிதறிக் கிடத்த மராட்டியர்களை ஒன்று சேர்த்து ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கியதும் மக்கள் மத்தியில் தன்னிகரற்ற உத்வேகத்தையும் உற்சாகத்தையும் ஊட்டியதுமே சிவாஜியின் மகத்தான சாதனைகள். மொகலாயப் பேரரசு, பீஜப்பூர் சுல்தான், போர்ச்சுகீசியர்கள், ஜஞ்சீராவின் அபிசீனியர்கள் என நான்கு ராட்சஸ சக்திகளுக்கு மத்தியில் அவர் இந்த சாதனைகளைச் செய்துகாட்டியிருக்கிறார். அது சிவாஜியின் புகழை மேலும் உச்சத்துக்குக் கொண்டுசெல்கிறது.

நவீன காலகட்டத்தில் சிவாஜியின் அளவுக்கு மேதமையையும் வீரத்தையும் வெளிப்படுத்திய ஹிந்து மன்னர் வேறு யாரும் இல்லை. ஹிந்துக்களால் ஒரு ராஜ்ஜியத்தை நிர்மாணிக்க முடியும்; ஓர் அரசை நிர்வகிக்க முடியும்; எதிரிகளை துவம்சம் செய்ய முடியும் என்று அவர் செய்துகாட்டியிருக்கிறார். இந்துக்களால் தம்மைத் தாமே தற்காத்துக்கொள்ளமுடியும். தமது கலை, இலக்கியம், வர்த்தம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றைத் தாங்களே பாதுகாக்கவும் வளர்க்கவும் முடியும்; கடற்படைகளை நிர்வகிக்க முடியும்; நீண்ட தூரம் செல்லும் கப்பல்களை கட்டிப் பயன்படுத்தமுடியும். அந்நிய நாட்டினருக்கு சளைக்காமல் கடற் போர்களிலும் தீவிரமாக வீரத்துடன் ஈடுபடமுடியும் என்றெல்லாம் செய்துகாட்டினார். நவீன கால இந்துக்களுக்கு தமது முழு சக்தியைப் பயன்படுத்தி உச்சங்களைத் தொடமுடியும் என்று வாழ்ந்து வழிகாட்டியுமிருக்கிறார்.

(தொடரும்)

___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *