Skip to content
Home » ஔரங்கசீப் #32 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 2

ஔரங்கசீப் #32 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 2

5.அடில்ஷாஹி சுல்தான்களின் நெருக்கடிகளும் வீழ்ச்சியும்

முஹம்மது அடில்ஷாவின் தலைமையின் கீழ் பீஜப்பூர் சுல்தானகம் உச்ச நிலையை எட்டியது. அரபிக்கடல் தொடங்கி வங்காள விரிகுடாவரை இந்திய தீபகற்பத்தினூடாகப் பரந்து விரிந்ததாக இருந்தது. ஆண்டு வருமானமாக ஏழு கோடியே 84 லட்சம் ரூபாயும் குறுநில மன்னர்கள், ஜமீந்தார்களிடமிருந்து ஐந்தே கால் கோடி ரூபாய் கப்பமாகவும் கிடைத்தது. 80,000 குதிரைப்படையினர், 2,50,000 காலாட்படையினர் இருந்தனர். 530 போர் யானைகள் இருந்தன.

மொகலாயப் படையெடுப்புப் புயல் ஒருவழியாக ஓய்ந்ததையடுத்து (1657) சிறிது காலத்துக்கு பீஜப்பூர் அரசு தன் செல்வாக்கை மீட்டெடுத்துக்கொண்டது. 1661-1666 வரையில் இரண்டாம் அலி அடில் ஷா திறமையாக ஆட்சி புரிந்தார். களத்தில் நேரடியாக இறங்கிச் செயல்பட்டார். சிவாஜியின் வலிமையைக் கட்டுப்படுத்தினார். வட கிழக்கு பிராந்தியத்தில் (கர்நூல் பகுதியில்) கிளர்ச்சி செய்த அபிசீனிய அதிகாரிகள், தளபதிகளை வழிக்குக் கொண்டுவந்தார். பேட்னூர் பகுதியின் ராஜாவையும் கீழடக்கினார். ஜெய் சிங் தலைமையில் மொகலாயப் படையெடுப்பில் இழந்த பகுதிகளை மீட்டெடுக்கவும் செய்தார்.

அதன்பின்னர் எஞ்சிய வாழ் நாள் முழுவதும், சுல்தான் மது, மாது என அந்தப்புர சுகபோகங்களில் திளைக்க ஆரம்பித்தார். ஆனால் அவருடைய திறமைசாலியான வாஸிர் அப்துல் முஹம்மது நிர்வாகத்தைத் திறமையாகக் கையாண்டார். இரண்டாம் அலி அடில் ஷா 1672, 24, நவம்பரில் இறந்ததையடுத்து பீஜப்பூர் சுல்தானகம் தன் பெருமையை இழக்க ஆரம்பித்தது. அவருடைய நான்கு வயதான மகன் சிக்கந்தர் ஷா அரியணையில் அமர்த்தப்பட்டார். சுய நலம் மிகுந்த தளபதிகள், அமைச்சர்களின் ஆட்சி ஆரம்பித்தது. இறுதியில் அந்த சுல்தானகம் வீழ்ந்தது.

1672 தொடங்கி 1686-ல் பீஜப்பூர் சுல்தான் வம்சம் அழிவைச் சந்தித்தது வரையான காலகட்டம் என்பது வாஸிர்களின் ஆட்சிக் காலமே. இஸ்லாமிய மேட்டுக்குடியினரிடையே உட் குழு மோதல் தொடர்ந்து நடைபெற்றுவந்தது. பிராந்திய ஆட்சியாளர்கள் எல்லாம் சுதந்தரமாகச் செல்ல ஆரம்பித்தனர். மைய அதிகாரம் தலைநகரிலேயே ஸ்தம்பித்துப் போனது. அவ்வப்போது நடைபெற்ற மொகலாய ஆக்கிரமிப்புகள், மராட்டியர்களுடன் வெளிப்பார்வைக்குத் தெரியும்படியான பகைமை, உள்ளுக்குள் இருந்த ரகசிய உடன்படிக்கை என பல வகைகளில் அந்த சுல்தானகம் வீழ்ச்சியை அடைந்தது.

அலி அடில் ஷா 24, நவ, 1672 இறந்ததைத் தொடர்ந்து தக்காணத்தில் இருந்த இஸ்லாமியப் படையின் அபிசீனியத் தலைவர் காவாஸ் கான் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி பாலகன் சிக்கந்தரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார். பீஜப்பூர் அடில் ஷாஹி சுல்தான் வம்சத்தின் கடைசி மன்னர் சிக்கந்தர் ஷா தான். அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த காவாஸ் கான் பிற தளபதிகள், ஆட்சியாளர்களுக்குச் செய்து கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப கோட்டைகளை ஒப்படைக்கவில்லை. இதனால் முன்பு வாஸிராக இருந்தவரும் திறமைசாலியும் அனுபவஸ்தருமான அப்துல் முஹம்மது மனமுடைந்து சுல்தானகத்திலிருந்து வெளியேறினார். சுல்தான் பாலகராக இருந்ததும் பிரதம அமைச்சருடைய திறமையின்மையும் பீஜப்பூர் சுல்தானகத்தை வீழ்ச்சிக்குத் தள்ளியது. அனைத்து தரப்புகளில் இருந்தும் கலகங்கள், குழப்பங்கள் எழுந்தன.

பீஜப்பூர் மீது தாக்குதல் நடத்திக் கைப்பற்று என்று மொகலாயப் பேரரசர் பஹதுர் கானுக்குப் பல முறை உத்தரவு பிறப்பித்தார். ஆனால், மிகச் சிறிய படையைத் தன்வசம் வைத்திருந்த சிறிய பிராந்திய தலைவரான பஹதுர் கான் மூலம் பீஜப்பூரைக் கைப்பற்றுவது சாத்தியமே இல்லை. பின்னாளில் பஹதுர் கர் என்று பெயரிடப்பட்ட பேட் காவ் பகுதியில் இருந்து புறப்பட்டு, புனேக்கு 55 மைல் கிழக்கில் பீமா நதிக்கரையோரம் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிக்குச் சென்று முகாமிட்டார். அது ஒளரங்காபாதுக்கும் பீஜப்பூருக்கும் நடுவில் இருந்தது. சிவாஜிக்கு எதிராகப் போர் தொடுக்கவேண்டும்; பீஜப்பூர் சுல்தானகத்தில் இருக்கும் அமைச்சர்கள், தளபதிகளை ஆசை வலையில் வீழ்த்தி பீஜப்பூர் பகுதிகளை வெல்லவேண்டும். இங்கு நேரடிப் போர் அவசியமில்லை என்று முடிவுசெய்திருந்தார்.

பீஜப்பூர் படையில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஆஃப்கானியர்களே. அவர்களுடைய தலைவரின் பெயர் அப்துல் கரீம். பின்னொட்டுப் பெயர் இரண்டாம் பஹோல் கான். அவர் பன்காபூரை நிர்வகித்துவந்தார். ஆஃப்கானியர்கள் தமக்குத் தரவேண்டிய நிலுவைத் தொகையை கறாராகக் கேட்க ஆரம்பித்தனர். அதோடு காவாஸ் கானின் நிர்வாகத்துக்கு எதிராகக் குரல் எழுப்பவும் ஆரம்பித்தனர். எனவே அவர் ஆஃப்கானியர்களை அமைதிப்படுத்தவோ அடக்கவோ செய்யும்படி மொகலாய நிர்வாகியிடம் ரகசியமாக உதவி கேட்டார். இதனால் பீமா நதிக்கரை வரையிலும் புறப்பட்டு வந்த மொகலாய நிர்வாகி 19 அக்டோபரில் காவாஸ் கானைச் சந்தித்துப் பேசினார். ஆஃப்கானியர்களை அடக்கி, சிவாஜி மீது படையெடுக்க இரு தரப்பினரும் முடிவெடுத்தனர்.

6. பஹோல் கானின் ஆட்சி (1675-1677)

மொகலாயர்களின் உதவி கிடைப்பது உறுதியானதும் ’கவாஸ் கானுக்கு கீழ்ப்படியாமல் நடந்துகொண்ட’ பஹோல்கானை விரட்டியடிக்கத் திட்டமிட்டார். இந்த விஷயம் அந்த ஆஃப்கானியத் தளபதிக்குத் தெரியவந்ததும் ஒரு தந்திரம் செய்தார். காவாஸ் கானை ஒரு விருந்துக்கு அழைத்து அதிகமாக மது அருந்தி மயங்கவைத்து பன்காபூரில் சிறையில் அடைத்தார் (11, நவ). அதன் பின்னர் பீஜப்பூருக்குள் நுழைந்து தன்னை வாஸிராக நியமித்துக் கொண்டார். அப்படியாக போரே புரியாமல் அதிகாரத்தைக் கைப்பற்றிய பஹோல் கானுடைய ஆட்சி காவாஸ் கானின் ஆட்சியையும் விட மோசமாகவே இருந்தது. காவஸ் கான் மூன்றாண்டுகள் பிரதம அமைச்சராகவும் கிட்டத்தட்ட சுல்தானாகவும் இருந்திருந்தார். திறமையின்மை, மது என அவருடைய நிர்வாகம் மோசமாகவே இருந்தது. ஆஃப்கனிய தளபதி பஹோல்கானின் ஆட்சி நிர்வாகமோ அதைவிட மோசமாக இருந்தது.

அதிகாரம் கைக்கு வந்ததும் தக்காணத் தளபதிகள், அதிகாரிகளை ஒவ்வொருவராக விலக்கி அந்தப் பதவிகளில் தன் உறவினர்களும் ஆதரவாளர்களுமான ஆஃப்கானியர்களை நியமித்தார். சில தக்காண அதிகாரிகளை நாடுகடத்தவும் செய்தார். பஹோல் கானின் ஆட்சியில் இதனால் பெரும் குழப்பமும் கூச்சலும் ஏற்பட்டன. தக்காணத்தில் இருந்த இஸ்லாமிய வீரர்கள் இதற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போருக்குத் தயாரானார்கள்.

பஹோல் கானின் ஆட்சி முழுவதும் தலைமை ஆலோசகரான கீஸர் கான் பாணி என்பவருடைய வீரத்தையும் சாமர்த்தியத்தையுமே சார்ந்திருந்தது. 12 ஜனவரி 1676 வாக்கில் இவரை ஒரு தக்காண வீரர் குத்திக் கொன்றுவிட்டார். உடனே நிராதரவாக இருந்த காவாஸ் கானை பஹோல் கான் கொன்றதோடு (18, ஜன) பீஜப்பூருக்குச் சென்று தக்காணப் படையினரைத் தண்டிக்கப் படையுடன் புறப்பட்டார். 21, மார்ச்சில் மோகா பகுதிக்கு அருகில் ஷேர்ஷா கானுக்கும் இவருடைய படைக்கும் இடையே கடுமையான போர் மூண்டது. இந்தப் போரில் ஆஃபனியர்களுக்கே வெற்றி கிடைத்தது. ஷேர்ஷா கான் தப்பி ஓடி ஷோலாபூரில் இருந்த பஹதுர் கானிடம் தஞ்சமடைந்தார். அவர் இப்போது தக்காண இஸ்லாமியப் படையினருடன் சேர்ந்து கொண்டு பீஜப்பூர் அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் ஆஃப்கானியர்களை வீழ்த்த முடிவு டெய்தார்.

ஷோலாபூரில் இருந்து தென் திசையில் பீமா நதியைக் கடந்து ஹல்சங்கி பகுதிக்கு 31, மார்ச்சில் வந்து சேர்ந்தார். பீஜப்பூரின் புற நகர்ப் பகுதியை அவருடைய குதிரைப்படை சூறையாட ஆரம்பித்தது. 13 ஜூனில் அலியாபாத் மற்றும் இண்டி பகுதிக்கு இடைப்பட்ட சமவெளியில் (பீஜப்பூரில் இருந்து 30 மைல் வட கிழக்கில்) பஹோல் கான் இந்தப் படையை எதிர்த்தார். இந்த தக்காணப் படையின் தாக்குதலில் பெரும் இழப்பை மால்வாவின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த மொகலாயத் தளபதி இஸ்லாம் கானின் படையும் துருக்கியப் படையுமே சந்திக்க வேண்டியிருந்தது. இரண்டு தாக்குதல்களை அவர்கள் முறியடித்தனர். ஆனால் போர்க்களத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் அவருடைய யானை எதிர்ப் படைக்குள் சென்று மாட்டிக் கொண்டுவிடவே இஸ்லாம் கானும் அவருடைய மகனும் கொல்லப்பட்டனர். பீமா நதிக்கு இந்தப் பக்கம் இருந்த மொகலாயப் படையையும் ஆஃப்கானியர்கள் தாக்கி அங்கிருந்தவர்களைக் கொன்றனர். இதனிடையில் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படவே பஹதுர் கானினால் படையை உதவிக்கு அனுப்ப முடியாமல் போய்விட்டது.

கோல்கொண்டாவிலிருந்து ஒரு பெரிய படை மதன பண்டிட் தலைமையில் பீஜப்பூர் படைகளுக்கு ஆதரவாக வந்து சேர்ந்ததும் பஹதுர் கானின் நிலைமை மேலும் மோசமாகவிருந்தது. ஆனால், புதிதாக வந்த படையை மொகலாயத் தளபதி கையூட்டு கொடுத்து சமாளித்துவிட்டார். ஏற்கெனவே பஹோல் கானுடன் அவர்களுக்கு கருத்து வேறுபாடு இருந்தது. எனவே கோல்கொண்டா படை மெள்ளத் திரும்பிச் சென்றுவிட்டது.

பஹதுர் கான் ஹல்சிங்கிக்குள் படையுடன் முன்னேறிச் சென்றார். அங்கு தன் முழு படையையும் அணிவகுக்கக்ச் செய்தார். இந்தப் பெரிய படையைப் பார்த்ததும் பஹோல் கான் பயந்து பின்வாங்கிவிட்டார். பீஜப்பூரின் சில மாவட்டங்களை எதிர்ப்பின்றி விட்டுக் கொடுத்தார். அப்படியாக, பஹதுர் கான் நளதுர்கா (14, மே, 1677), குல்பர்கா (7 ஜூலை) ஆகிய பகுதிகளை எளிதில் கைப்பற்றினார். ஆனால் அவருக்கும் இரண்டாம் நிலை தளபதியாக இருந்த திலீர் கானுக்கும் (இங்கு ஜூன் 1676-ல் வந்து சேர்ந்திருந்தார்) இடையில் மோதல் ஏற்பட்டது. ஆஃப்கனியரான அவர் பஹோல் கானின் நண்பராகி பீஜப்பூரில் அதிகாரத்தில் இருக்கும் ஆஃப்கனியப் படைக்கு ஆதரவாளராகிவிட்டார். திலீர் கானும் பஹோல் கானும் இருவருமாகச் சேர்ந்து பஹதுர் கானைக் கண்டித்து மொகலாயப் பேரரசருக்குக் கடிதம் அனுப்பினர். அதில் பஹதுர் கான் தக்காண இந்து ராஜ்ஜியங்களுடன் ரகசிய உடன்படிக்கை செய்துகொண்டிருப்பதாகவும் மொகலாயப் பேரரசின் நடவடிக்கைகளுக்கு அவர் கேடு விளைவிப்பதாகவும் குற்றம் சுமத்தியிருந்தனர்.

7. திலீர் கானும் பஹோல் கானும் கோல்கொண்டாவை ஆக்கிரமித்தல் (1677)

பஹதுர் கானைத் திரும்பிவரும்படி ஒளரங்கஜீப் உத்தரவிட்டார். செப்டம்பர் 1677-ல் அவர் அங்கிருந்து சென்ற பின்னர் திலீர் கான் அக்டோபர் 1678 வரை தக்காணத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தார். ஒளரங்கஜீபின் ஆட்சிக் காலத்தின் முதல் 20 ஆண்டுகளில் தக்காணத்தில் அவருக்குக் கிடைத்த வெற்றிகளைக் கணக்கிட்டுப் பார்த்தால், 1657 வாக்கில் பீஜப்பூரின் வட கிழக்கு மூலையில் இருந்த கலியாணி மற்றும் பிடார் ஆகிய பிராந்தியங்களை தன் பேரரசுடன் இணைத்திருந்தார். 1660 வாக்கில் வட கோடியில் இருந்த பரிந்தா மாவட்டத்தையும் கோட்டையையும் கையூட்டு மூலம் கைப்பற்றியிருந்தார். இப்போது நளதுர்கா, குல்பர்கா ஆகியவையும் பேரரசுடன் இணைக்கப்பட்டுவிட்டன.

பீமா நதியால் சூழப்பட்ட மிகப் பெரிய நிலப்பகுதி, குல்பர்காவை பிதாருடன் இணைக்கும் மஞ்சிரா (கிழக்குப் பகுதியில்) ஆகியவை எல்லாம் மொகலாயர் பிடிக்குள் வந்துவிட்டன. தெற்கில் மொகலாயப் பேரரசின் எல்லையானது பீமா நதியின் வட கரை வரையில் பீஜப்பூர் மீது தாக்குதல் நடத்த உகந்த தூரத்தில் இருந்த ஹில்சிங்கி வரையிலும் நீண்டிருந்தது. மேலும் தென் பகுதியில் கோல்கொண்டா ராஜ்ஜியத்தின் மேற்கு எல்லையில் இருந்த மல்கேத் கோட்டை வரையிலும் பரவியிருந்தது.

பீஜப்பூரில் இந்த வெற்றிகளைப் பெற்ற பின்னர் கொல்கொண்டா ராஜ்ஜியத்துடனான கணக்குகளைத் தீர்க்க மொகலாயர்கள் முடிவுசெய்தனர். சிவாஜியையும் ஷேக் மினாஜையும் ஒப்படைக்காவிட்டால் உங்கள் சுல்தானகத்தின் மீது படையெடுக்கப் போகிறோம் என்று ஆகஸ்ட் நடுப்பகுதி வாக்கில் குதுப் ஷாவை மிரட்டினர். ஷேக் மினாஜ் ஏற்கெனவே மொகலாயர்களுடன் சேர்வதாகச் சொல்லி ஏராளமான பணம் கையூட்டாகப் பெற்றிருந்தார். ஆனால், அதை வாங்கிக் கொண்டபின்னர் கோல்கொண்டா சுல்தான் பக்கம் சேர்ந்துவிட்டிருந்தார்.

செப்டம்பர் வாக்கில் திலீர் கானும் பஹோல் கானும் சேர்ந்து படையெடுத்து கோல்கொண்டாவைத் தாக்கினர். மொகலாயப் பேரரசின் கடைசிப் படையரணான குல்பர்காவிலிருந்து கிழக்கு திசையில் 24 மைல் தொலைவில் இருந்த மல்கேத் கோட்டையை நோக்கிப் படையெடுத்தனர். கோல்கொண்டா சுல்தானகத்தின் எல்லையில் இருக்கும் முதல் கோட்டை அது. அதை அவர்கள் ஒரே நாளில் கைப்பற்றிவிட்டனர். ஆனால், குதுப் ஷாஹியின் தலைநகரிலிருந்து 80 மைல் தொலைவில் இருந்த மல்கேத் கோட்டையில் இந்தப் படையானது எதிர் தரப்புப் படையால் முழுவதுமாகத் தடுக்கப்பட்டது. மல்கேதுக்கு ஏழு மைல் வடக்கே மங்கால்கி பகுதியில் முகாமிட்டிருந்தார் குதுப் ஷாஹி சுல்தான் (அக்டோபர்).

இரண்டு மாதங்கள் யாருக்கு வெற்றி தோல்வி என்பது தீர்மானமாகாமல் போர் நடந்தது. குதுப் ஷாஹி படைகள் பீஜப்பூருக்குள்ளும் மொகலாயப் பகுதிகளுக்குள்ளும் வெகுவாக ஊடுருவியிருந்தன. மொகலாயப் படைகளுக்கு வந்துகொண்டிருந்த தானிய வண்டிகளைத் தடுத்து நிறுத்தினர். நேசப் படைகளில் இருந்த ஆஃப்கானியர்களும் ராஜபுத்திர வீரர்களும் அதிக மழை மற்றும் உணவுப் பற்றாக்குறையினால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பஹோல் கான் தீவிர நோய் ஏற்பட்டு, படுத்த படுக்கையாகி இறுதியில் இறந்தார். அவருடைய படையினர் பட்டினி தாங்க முடியாமல் தப்பி ஓடினர். திலீர் கான் குல்பர்காவுக்குப் பின்வாங்கினார். எதிரிப் படையினர் அவர்களைத் துரத்தித் துரத்தித் தாக்கினர். அவருடைய பொருட்கள் எல்லாம் களவாடப்பட்டன. பட்டினியாக்கப்பட்ட மொகலாயப் படைகளுக்கு பனங்காய்கள், பேரிச்சை ஆகியவற்றைத் தின்று உயிர்தப்ப வேண்டியிருந்தது.

குல்பர்காவில் திலீர் கானை மசூத் சந்தித்து மொகலாயர்களுடன் அமைதி உடன்படிக்கை செய்துகொண்டார். பீஜப்பூரின் வாஸிராக அவர் இருப்பார். ஆனால் ஒளரங்கஜீபுக்குக் கீழ்படிந்து நடக்கவேண்டும். சிவாஜியிடன் கூட்டணி கூடாது. மராட்டிய மன்னருடனான போர்களில் மொகலாயர்களுக்கு உதவியாக நிற்கவேண்டும். மொகலாயப் பேரரசருடைய ஒரு மகனை மணந்துகொள்ள அடில் ஷாவின் சகோதரி ஷஹர் பானு பேகம் (பதிஷா பீவி என்று அறியப்பட்டவர்) மொகலாய அவைக்கு அனுப்பிவைக்கப்படவேண்டும் என்ற உடன்படிக்கைகள் செய்துகொள்ளப்பட்டன. கடைசியாக திலீர் கான் வடக்கு நோக்கிப் புறப்பட்டார்.

8. மசூத் ஆட்சிப் பொறுப்பில் நியமிக்கப்படுதல்; ஆஃப்கானியக் கலகம்; பீஜப்பூர் பகுதிகளில் ஏற்பட்ட கலகங்கள்

23, டிச, 1677-ல் பஹோல் கான் இறந்தார். அடுத்த வருடம் பிப்ரவரியில் கோல்கொண்டா படையின் துணையுடன் மசூத் ஆட்சிப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். ஆனால் கஜானா முழுவதும் காலியாக இருந்தது. ஆஃப்கானியக் கூலிப் படையினருக்கான நிலுவைத் தொகையைத் தரமுடியவில்லை. இதனால், ஆஃப்கானியர்கள் கலவரங்களில் ஈடுபட்டனர். இறந்த பஹோல் ஹானின் விதவைகள், உறவினர்கள் அனைவருடைய வீடுகளைக் கைப்பற்றி அனைவருக்கு முன்பாக அவமானப்படுத்தி நிலுவைத் தொகையைத் தரும்படி மிரட்டினர். செல்வந்தர்கள் என்று நம்பப்பட்ட அனைவரையும் பிடித்துத் துன்புறுத்தினர். ஆஃப்கானியர்கள் இப்படி அனைவரையும் துன்புறுத்திவந்தபோது மசூத் எதுவும் செய்யமுடியாதவராக தன் வீட்டுக் கதவுகளை மூடிக் கொண்டு ஒதுங்கிவிட்டார். மக்கள் பலரும் பயத்தில் கர்நாடகப் பகுதிகளுக்குத் தப்பிச் சென்றனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிக்கு மரியாதை எதுவும் இருந்திருக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவர் சிவாஜியுடன் ரகசியக் கூட்டணி அமைத்துக்கொண்டு மொகலாயர்களுக்கு எதிராகத் தன்னை பலப்படுத்திக்கொள்ள முயற்சிகள் எடுத்தார். அது மொகலாயர்களை ஆத்திரமடையவைத்தது. மசூத் இப்படி நடந்துகொண்டதால் திலீர் கான் குல்பர்கா உடன்படிக்கையை மீறத் திட்டமிட்டார். அதுவே அவர் இதுவரை பீஜப்பூருக்குள் ஆக்கிரமிக்காமல் இருக்க வைத்திருந்தது. மழைக்கால முடிவில் (அக், 1678) திலீர் கான் பேட் காவ் பகுதியிலிருந்து புறப்பட்டு அக்லுஜ் பகுதிக்குச் சென்று சேர்ந்தார்.

இதனிடையில் ஒப்பந்தப்படி சிவாஜி ஆறாயிரம் இரும்புக் கவசம் தரித்த வீரர்களை பீஜப்பூரைப் பாதுகாக்கவும் மசூதின் படைக்கு வலுவூட்டவும் அனுப்பிவைத்தார். ஆனால் அவர்களுக்கு இடையே மனப்பூர்வமான நட்புறவு மலர வாய்ப்பே இருந்திருக்கவில்லை. சிவாஜி பீஜப்பூரை தந்திரமாகக் கைப்பற்ற நினைத்தார். இரு தரப்பினருக்கிடையேயான அவ நம்பிக்கை மெள்ள மெள்ள அதிகரித்து மோதலில் சென்று முடிந்தது. பீஜப்பூர் பகுதிக்குள் நுழைந்து சிவாஜி தாக்குதல் நடத்த ஆரம்பித்தார். தெளலத்பூர், குஸ்ரபூர், ஜுஹ்ராபூர் முதலான புறநகர் பகுதிகளில் தாக்குதலில் ஈடுபட்டபடியே நகருக்குள் புகுந்தனர். தனது எதிரியைவிட நண்பர் போல் இருப்பவரைக் கண்டு அதிக அளவு பயந்த மசூத், திலீர் கானிடம் அடைக்கலம் புகுந்தார். பீஜப்பூருக்கு மொகலாயப் படையை வரச் சொல்லி அழைப்புவிடுத்தார்.

சிவாஜியின் வலிமையான பாபுல் கர் கோட்டையை (2, ஏப், 1679) கைப்பற்றி திலீர் கான் அழித்தார். 16,000 வீரர்களைக் கொண்ட மராட்டிய படைக்குப் பெரும் சேதத்தை விளைவித்தார். அவருடைய வருகைக்காகக் காத்திருந்த மசூத் பொறுமையிழந்து பீமா நதியை தல்கேத் பகுதிவழியாகக் கடந்து சென்று பீஜப்பூருக்கு 35 மைல் வடக்கே இருந்த ஹல்சிங்கி பகுதிக்கு சென்றார். அடில் ஷாஹி அரசு முற்றிலும் நிலைகுலைந்து பெரும் குழப்பமே அங்கு நிலவியது. மசூதுக்கும் ஷேர்ஷா கானுக்கும் இடையிலான மோதலினால் தலைநகரில் பெரும் குழப்பம் நிலவியது.

தக்காணத்தின் மொகலாயப் பிரதிநிதி பீஜப்பூரில் மோதலில் ஈடுபட்டதரப்ப்பினரிடையே சமாதான முயற்சிகளில் ஈடுபட்டார். தக்கான முஸ்லிம்கள், ஆஃப்கானியர்கள், மராட்டியர்கள் ஆகியோரைக் கொண்ட அடில் ஷாவின் 10,000 வீரர்கள் மொகலாயப் படையில் திலீர் கான் தலைமையில் சேர்ந்துகொண்டனர். மூன்று அல்லது நான்கு ஆயிரம் பட்டினியில் வாடும் வீரர்கள் மட்டுமே பீஜப்பூரில் மசூதுடன் தங்கிவிட்டனர். அவர்களுமேகூட மொகலாயப் படைகளைப்போல் சம்பளம் கிடைக்கவேண்டும் என்று விரும்பினர்.

சுல்தானின் தங்கை ஷஹர் பானுவை மொகலாய அந்தப்புரத்துக்கு அனுப்பிவைக்கவேண்டும் என்று ஒளரங்கஜீப் உத்தரவிட்டார். இந்த படிஷா பீவியை பீஜப்பூர் அரச குடும்பத்தினரும் மக்களும் பெரிதும் உயர்வாக மதித்துப் போற்றிவந்திருந்தனர். தான் பிறந்த நகரை விட்டு 1, ஜூலை 1679-ல் புறப்பட்ட அவரை மக்களும் அரசவையினரும் கண்ணீர் மல்க மத வெறி மிகுந்த சுன்னி இஸ்லாமிய வீட்டில் இனி வாழ்நாளை கழிக்க அனுப்பிவைத்தனர்.

(தொடரும்)

___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *