Skip to content
Home » ஔரங்கசீப் #33 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 3

ஔரங்கசீப் #33 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 3

9. பிஜப்பூர் மீது திலீர்கானின் படையெடுப்பு; ஆதில் ஷாவுக்கு சிவாஜியின் உதவி, 1679.

பீஜப்பூர் சுல்தானே தன் மகள் ஷஹர் பேகத்தை முகலாய அந்தப்புரத்துக்கு அனுப்பி வைத்த பின்னரும் பிஜப்பூர் சுல்தானகத்தின் வீழ்ச்சியை எந்த வகையிலும் தடுக்க முடிந்திருக்கவில்லை. முகலாயப் பேராசை பூர்த்தி செய்யப்பட முடியாததாகவே இருந்தது.

சித்தி மசூத் தனது ஆட்சி பொறுப்பை விட்டு விட்டு விலகிச் செல்ல வேண்டும். முகலாயர்களின் பிரதிநிதி ஒருவரால் இனிமேல் பீஜப்பூர் நிர்வகிக்கப்படும் என்று திலீர் கான் நிர்பந்தம் கொடுத்தார். மசூத் அதை சாமர்த்தியமாக நிராகரித்தார். முகலாயத் தளபதிக்கு நேரடியாக தெரிவித்த எதிர்ப்பு போல் அது ஆனது. எனவே பீஜப்பூர் மீது படையெடுக்க திலீர் கான் முடிவு செய்தார். ஆனால் அவருடைய நிலைமை மிகவும் பலவீனமாகத்தான் இருந்தது. அவருடைய கஜானா காலியாக இருந்தது. படைவீரர்களுக்கு கொடுக்க வேண்டிய நிறைய தொகை நிலுவையில் இருந்தது.

இரண்டாவதாக, தக்காணத்தின் புதிய வைஸ்ராயாக நியமிக்கப்பட்ட இளவரசர் ஷா ஆலம், திலீர் கானின் எதிரியாகவே இருந்தார். அவருடைய முயற்சிகள் அனைத்தையும் வீழ்த்தவும் அவரை அவமதித்து விரட்டவும் எல்லா முயற்சிகளையும் ஈடுபட்டார். அப்படியாகப் படை எடுப்பை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே திலீர் கான் தடுத்து நிறுத்தப்பட்டார். இளவரசரிடம் நிதி உதவி கேட்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மசூத் பீஜப்பூரின் பாதுகாப்பை பலப்படுத்திக் கொண்டார். ஆதில் ஷாவுக்கு மிகவும் நெருக்கடி ஏற்பட்டிருக்கும் இந்தத் தருணத்தில் உதவும்படியாக சிவாஜிக்கு தூது அனுப்பினார். சிவாஜி உடனே பத்தாயிரம் மராட்டிய வீரர்களைக் கொண்ட குதிரைப்படையை அனுப்பி வைத்தார். மேலும் பீஜப்பூருக்கு 2000 காளை வண்டிகளில் உணவுப்பொருட்கள் மற்றும் தேவையான பிறவற்றையும் அனுப்பி வைத்தார்.

பீஜப்பூருக்கு 52 மைல் வடக்கில் இருந்த மங்கள்விதே பகுதியையும் அதன் கோட்டைக்கும் பீமா நதிக்கும் இடைப்பட்ட பகுதியையும் செப் 1679-ல் மொகலாயர்கள் கைப்பற்றினர். சலோகி, காசி காவ், அல்மலா பகுதிகளைச் சூறையாடியபின் அக்லுஜ் கோட்டையை முற்றுகையிட்டனர். இதில் வெற்றி கிடைக்கவில்லை. தலைநகருக்கு ஆறு மேல் வடகிழக்கில் இருந்த பரால்கி பகுதிக்கு 7, அக்டோபர் வாக்கில் வந்து சேர்ந்தார். ஷா ஆலம் கொடுத்த நெருக்கடிகள், படையெடுப்பைச் சீக்கிரம் ஆரம்பிக்காததால் பேரரசர் கடிந்து கொண்டது, தனது ஆலோசகர்கள், வீரர்கள், நட்பு சக்திகள் உடன் ஏற்பட்ட மோதல்கள் இவை எல்லாம் திலீர் கானை நெருக்கடிக்குள் தள்ளின. இதனிடையில் பத்தாயிரம் வலிமையான வீரர்களுடன் சிவாஜி பனாலாவுக்கும் பீஜப்ப்பூருக்கும் இடையில் இருந்த சேல்குர் பகுதிக்கு வந்து சேர்ந்திருந்தார். இந்தப் படையுடன் ஆனந்த ராவ் தலைமையில் இதே அளவு வலிமை கொண்ட படை முன்னதாகவே வந்து சேர்ந்திருந்தது. (31, அக், 1679).

சிவாஜி 4 நவம்பரில் தன் படையை இரண்டு பிரிவுகளாகப் பிரித்தார். தன் தலைமையின் கீழ் 8500 வீரர்கள் கொண்ட படையை முஸ்லா மற்றும் அல்மலா வழியாக வட கிழக்கில் முன்னெடுத்துச் சென்றார். 10,000 வீரர்கள் கொண்ட இரண்டாவது படை ஆனந்த ராவ் தலைமையில் வட மேற்கில் இருந்த சங்குலா வழியாக மொகலாயப் பிராந்தியத்துக்குள் நுழைந்தது.

30000 குதிரைப்படை வீரர்களைக் கொண்டதாகப் பெருகியிருந்த இந்தப் படை பீமா நதி தொடங்கி வடக்கே நர்மதை வரை பரவியிருந்த மொகலாயப் பகுதிக்குள் புகுந்து சூறையாடத் தொடங்கியது.

10. திலீர் கான் பீஜப்பூரைத் தாக்கி அழித்தல்; தலை நகர் மீது தாக்குதல் நடத்துதல்

பேரரசர் கடிந்துகொண்டதால் திலீர் கான் பீஜப்பூர் மீதான படையெடுப்பை விரைந்து முன்னெடுத்தார். பீஜப்பூரை எப்படியாவது முற்றுகையிட்டுக் கைப்பற்றியே ஆகவேண்டும் என்று துடித்தார். அதே நேரம் பின்பக்கமிருந்து சிவாஜியின்படையால் தாக்கப்படக்கூடும் என்று அஞ்சவும் செய்தார். எனவே 14 நவம்பரில் மேற்குப் பக்கமாக படையை நகர்த்திக்கொண்டு மிராஜ் பனாலா பகுதியை ஆக்கிரமிக்கப் புறப்பட்டார். பீஜப்பூர் பகுதியைக் கண்மூடித்தனமாக வெறிகொண்டு தாக்கி அழிக்கத் தொடங்கினார். அவர் கடந்து சென்ற வழிகளில் இருந்த கிராமங்கள் எல்லாம் நிர்மூலமாக்கப்பட்டன. அங்கு இருந்த இந்துக்கள், பீஜப்பூர் சுல்தானகத்தின் முஸ்லிம்கள் எல்லாரும் சிறைப்படுத்தப்பட்டு அடிமைச் சந்தையில் விற்கப்பட்டனர். இந்துப் பெண்கள் எல்லாம் குழந்தைகளுடன் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். 20 நவம்பரில் திலீர் கானின் முகாமில் இருந்து தப்பித்து சாம்பாஜி பீஜப்பூருக்குச் சென்று சேர்ந்தார். அதன் பின் டிசம்பர் நான்காம் தேதியன்று பனாலா பகுதிக்கு வந்து சேர்ந்தார்.

பீஜப்பூர் நகரின் தென் பகுதியில் இருந்த கிருஷ்ணா மற்றும் டான் நதிப் பள்ளத்தாக்கின் பசுமையான, வளமான கிராமங்களைச் சூறையாடினார். பீஜப்பூரின் தானியக் களஞ்சியம் என கிருஷ்ணா நதி பள்ளத்தாக்குப் பகுதிகள் அழைக்கப்பட்டன. அங்கிருந்த வயல்கள், தோப்புகள், கிராமங்கள் அனைத்தையும் சூறையாடினார். அங்கிருந்தவர்கள் அனைவரையும் சிறைப்பிடித்துக்கொண்டு அலியாபாத் பகுதிக்கு 4 டிசம்பரில் (நகருக்கு ஆறு மைல் வட கிழக்கில்) வந்து சேர்ந்தார். அங்கிருந்துகொண்டு தினமும் துப்பாக்கி, பீரங்கிகளுடன் புறப்பட்டுச் சென்று துளைக்க முடியாத கோட்டைச் சுவர்கள்மீது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் இருந்தபடித் தொடர்ந்து தாக்கினார்.

திலீர்கானுக்கும் ஷா ஆலமுக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்தது. திலீர் கானை வன்மையாகக் கண்டித்து இளவரசர் ஒரு கடிதம் எழுதினார். பீஜப்பூரில் இருந்த திலீர் கானுக்குத் தாக்குதலைத் தொடர்ந்து முன்னெடுக்கவும் முடியாமல் போனது. அவருடைய படையினர் அவருக்குக் கீழ்படிய மறுத்தனர். 29, ஜன, 1680 வாக்கில் பேகம் ஹெளஸ் பகுதியில் இருந்த முகாமைக் கலைத்துக்கொண்டு பின்வாங்கினார். பீஜப்பூர் கோட்டை முன்பாகத் தாக்குதலில் ஈடுபட்டு சுமார் 56 நாட்களை வீணடித்திருந்தார். வெறி பிடித்த நாய் போல் அலைந்தவர் வரும் வழியில் கண்ணில் பட்டவர்களையெல்லாம் கொடூரமாகக் கொன்று குவித்தார். அப்பாவி விவசாயிகளுக்கு அவர் இழைத்த கொடுமைகள் வார்த்தைகளில் விவரிக்கமுடியாதவையாக இருந்தன.

பீஜப்பூர் நகரம் தொடங்கி தெற்கே கிருஷ்ணா நதிவரையிலும் கிருஷ்ணா நதிக்கும் பீமா நதிக்கும் இடைப்பட்ட கிழக்குப் பகுதி முழுவதும் இருந்த கிராமங்களைச் சுடுகாடாக்கினார். அடுத்ததாக திலீர் கான் பேராத் பகுதியை ஆக்கிரமித்தார். அதன் தலைநகர் சாகர். பாம் நாயக் ஆண்டுவந்த அந்தப் பகுதிக்கு திலீர் கான் 20, பிப், 1680-ல் வந்து சேர்ந்தார். அங்கு கோகி பகுதிக்கு 8 மைல் தொலைவில் நடந்த சண்டையில் பாம் நாயகப் படையால் திலீர்கானின் படை மிக மோசமாகத் தோற்கடிக்கப்பட்டது. கோட்டை கொத்தளங்கள், மலை உச்சி, குன்றுகள் என பல இடங்களில் மறைந்திருந்த பேராத் படையினர் கிராமப் பகுதிகளில் குழுமி இருந்த மொகலாயப் படைகளின் மீது மிகக் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு விரட்டினர்.

மொகலாயக் குதிரைப்படை அஞ்சி நடுங்கி புறமுதுகிட்டு ஓடியது. வெகு வேகமாக ஓடியபடியே துரத்தி வந்த பேராத் படையினரிடம் கருணை கேட்டுக் கெஞ்சி ஓடினர். அன்று மட்டும் 1700 மொகலாயப் படையினர் கொல்லப்பட்டனர். படைவீரர்கள் அனைவரும் துவண்டுவிட்டனர். ஐயாயிரம் ரூபாய் தருவதாக ஆசை காட்டியும் எதிரியுடன் போரிட மறுத்துவிட்டனர்.

11. தோற்று அவமானப்பட்ட திரும்பி அழைக்கப்பட்ட திலீர் கான், 1680

தோல்வியினால் அவமானப்பட்டவர் 23, பிப்ரவரியில் பீஜப்பூருக்குக் கிழக்குப் பக்கமாக வடக்கு நோக்கிப் பின்வாங்கினார். ஆத்திரத்தில் வழியில் தென்பட்ட கிராமங்கள் அனைத்தையும் தீக்கிரையாக்கினார். அங்கிருந்தவர்களைப் பிணைக்கைதிகளாக்கினார். தக்காணப் பகுதியின் வைஸ்ராயாக இருந்த அவருடைய பதவிக் காலம் அக்டோபர் 1678-ல் ஷா ஆலம் நான்காவது முறையாக அந்தப் பதவிக்கு ஒளரங்கஜீபினால் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது. மே 1680 வரை இளவரசர் ஷா ஆலமே வைஸ்ராயாக இருந்தார். அவருடைய நிர்வாகமும் தோல்விகரமானதாகவே இருந்தது. அதிருப்தியுற்ற ஒளரங்கஜீப் தன் மகன் ஷா ஆலமையும் தளபதி திலீர் கானையும் தில்லிக்குத் திரும்பி வரும்படி உத்தரவிட்டார். பஹாதுர் கானை தக்காணத்தின் சுபேதாராக இரண்டாம் முறை நியமித்தார். மே, 1680லிருந்து ஷா ஆலமிடமிருந்து நிர்வாகப் பொறுப்பை பஹாதுர் கான் ஏற்றுக்கொண்டார்.

12. பீஜப்பூர் தொடர்பாக ஒளரங்கஜீபின் கொள்கை 1680-1684

திலீர்கானின் தோல்வி மற்றும் தில்லிக்குத் திரும்பியதற்கு பிந்தைய நான்கு வருடங்களில் பீஜப்பூருக்கு எதிராக மொகலாயர்களால் எந்தப் பெரிய படையெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை. சாம்பாஜி தொடர்பான விவகாரங்கள் அவர்களை அந்தப் பக்கமே திரும்பவைத்திருந்தன. ஷேர்ஷா கானுக்கு ஒளரங்கஜீப் நட்பார்ந்த முறையில் ஒரு கடிதம் அனுப்பி, சாம்பாஜியை அடக்குவதில் மொகலாயத் தளபதிகளுக்கு உதவும்படியும் அவரிடமிருந்து பீஜப்பூர் பகுதியை மீட்க உதவும்படியும் கேட்டுக்கொண்டார். பீஜப்பூர் சுல்தானின் மகன் ஷஹர் பானுவை தன் மகன் ஆஸம் கானுக்குக் கட்டாயத் திருமணம் முடித்துவைத்திருந்தார். ஷஹர் பானுவும் ஷேர்ஷா கானுக்குத் தனிப்பட்ட முறையில் இது தொடர்பாக ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் மொகலாயப் பேரரசரருடன் கை கோர்ப்பது தொடர்பாக ஆதில் ஷாவின் அவையிலிருந்து எந்தவொரு பதிலும் வந்திருக்கவில்லை. மராட்டியப் படைகளுக்கு பீஜப்பூர் சுல்தான்களிடமிருந்து உதவிகள் தொடர்ந்து கிடைத்து வருவது தொடர்பான, உறுதியான செய்திகள் பேரரசருக்கு வந்தவண்ணம் இருந்தன.

சாம்பாஜி மீது நெருக்கடிகளை அதிகரிப்பதன் மூலம் பீஜப்பூர் அரசு தம்மைத் தாமே தற்காத்துக்கொள்ளும்படியாகச் செய்ய திட்டமிட்டார். ஏப், 1682-ல் இளவரசர் ஆஸம் கான் தலைமையில் மிகப் பெரிய படையை பீஜப்பூர் மீது படையெடுக்கச் செய்தார். அவர் எல்லைப் பகுதிகளை சூறையாடி பீஜப்பூருக்கு 140 மைல் வடக்கில் இருந்த தாருர் கோட்டையைக் கைபற்றினார். இந்தப் படையெடுப்பு சில மாதங்கள் நீடித்தது. நிரா நதிக்கு தெற்கே மேலும் முன்னேறிச் செல்லவிருந்த நேரத்தில் அவரைத் திரும்பவும் தில்லிக்கு வரும்படி ஜூன் 1683-ல் ஒளரங்கஜீப் உத்தரவிட்டார். அதன் பிறகு சில மாதங்கள் பீஜப்பூர் மீது எந்தத் தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை.

பீஜப்பூரின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டிருந்தது. ஆதில் ஷாவின் ஐந்தாண்டு கால சுகபோக வாழ்க்கையின்போது வாஸிராக இருந்த சித்தி மசூதுக்கு மிகுந்த அதிருப்தியை உருவாக்கியது. தன்னாலான அத்தனை முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் ஆட்சி நிர்வாகத்தில் எந்தவொரு ஒழுங்கையும் அவரால் கொண்டுவரவே முடியாமல் போனது. ‘அந்த நாட்களில் அப்பாவி விவசாயி தொடங்கி அதிகாரம் மிக்க நபர்வரை ஒரே ஒரு குடிமகன் கூட ஒரே நேரமாகிலும் நிம்மதியாக ஒரு வாய் உணவு உண்ண முடிந்திருக்கவில்லை. சுல்தான் தொடங்கி ஏழை வரையில் ஒரு நாள் கூட நிம்மதியாகத் தூங்க முடிந்திருக்கவில்லை’. நிர்வாகத்தைச் சீர்திருத்த முடியாமல் மனம் வருந்தியபடி 21, நவம்பர், 1683-ல் ஆதில் ஷாவின் அவையைவிட்டு மசூதி வெளியேறினார். தனது அதோனி கோட்டையை அடைந்ததும் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

19, மார்க் 1684-ல் ஆகா குஸ்ருவிடம் வாஸிர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவர் ஆறு மாதங்களில் (11 அக்) இறந்துவிட்டார். பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சிக்கந்தர் ஷா ( 3 மார்ச், 1684-ல்) சைய்யது முகதம் ஷேர்ஷா கான்வசம் பீஜப்பூரின் பாதுகாப்புப் பொறுப்பை ஓப்படைத்தார். பீஜப்பீர் சுல்தானின் கீழ் இருந்த குறு நில மன்னரான பாம் நாயக்கரை (வாகின்கேராவின் அரசர்) முக்கிய தலையாரிகளை அழைத்துக்கொண்டு தலைநகருக்கு வரும்படி அழைப்புவிடுத்தார்.

30, மார்ச் வாக்கில் பீஜப்பூர் சுல்தானை மொகலாயப் பேரரசுக்கு அடிபணிந்து நடக்கும்படிச் சொல்லி ஒரு கடித்தை ஒளரங்கஜீப் அனுப்பினார். மொகலாயப் படைக்குத் தேவையான உணவுப் பொருட்களைத் தரவேண்டும்; பீஜப்பூர் வழியாக மொகலாயப் படை எளிதில் வந்து போக அனுமதி தரவேண்டும்; மராட்டியர்களுடனான மொகலாயப் போருக்கு ஐந்தாயிரம் அல்லது ஆறாயிரம் வீரர்களைக் கொண்ட குதிரைப் படையை அனுப்பித் தரவேண்டும். சாம்பாஜிக்கு உதவுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். அதோடு ஷேர்ஷா கானை நாட்டை விட்டே துரத்தவேண்டும் என்றெல்லாம் அந்தக் கடிதத்தில் உத்தரவிட்டிருந்தார். இதனிடையில் ஆதில் ஷாவின் சுல்தானகத்தின் சிறு பிராந்தியத்தை மொகலாயர்கள் கைப்பற்றித் தமது காவல் அரண்களை அமைக்க ஆரம்பித்தனர். மே இறுதிவாக்கில் ஷேர்ஷா கான் மங்கலாவிதே மற்றும் சங்கோலா கோட்டைகளைக் கைப்பற்றி அங்கிருந்த கோல்கொண்டா படைகளையும் தன் படையில் இணைத்துகொண்டார். 10 டிசம்பர் வாக்கில் ஹம்பீர் ராவ் தலைமையில் சாம்பாஜி அனுப்பிய படையும் வந்து சேர்ந்த்து.

29 ஜூன் 1685 வாக்கில் இளவரசர் ஆஸம் கான் பீஜப்பூருக்கு மிக அருகில் படையுடன் வந்து சேர்ந்தார். ஒரு மாதத்துக்குள் மிகக் கடுமையான மூன்று போர்களை அவருக்கு எதிர்கொள்ளவேண்டிவந்தது. 1, ஜூலை வாக்கில் மொகலாயர்களின் பதுங்கு குழிகள், பாதுகாப்பு அரண்கள் எல்லாம் ஷேர்ஷா கான் மற்றும் அப்துர் ராஃப் மூலம் தகர்க்கப்பட்டன. மொகலாயத் தளபதிகள், வீரர்கள் சிலர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். மறுநாள் மொகலாய தக்காணப் பிரிவினர், கோட்டைக்குள் முற்றுகைக்குள் இருந்த பீஜப்பூர் படைகளுக்கு வந்த உணவுப் பொருட்களைத் தடுத்து நிறுத்தினர்.

(தொடரும்)

___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *