14. அபாயத்தில் இருந்த இளவரசர் முஹம்மது ஆஸம், விடுவிக்கவந்த ஃபிர்ஸ் ஜங்
உணவு தானிய வண்டிகளைத் தக்காண வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் இளவரசர் முஹம்மது ஆஸாமின் முற்றுகை முகாமில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. ஏற்கெனவே சூறையாடப்பட்டிருந்த பீஜப்பூர் பகுதிகளில் இருந்து எந்த உணவும் கிடைக்க வழியிருந்திருக்கவில்லை. மராட்டியர்களாலும் அப்போது ஆரம்பித்திருந்த மழையினால் பெருகிய வெள்ளத்தினாலும் வடக்குப் பக்கம் இருந்த சாலைகளும் துண்டிக்கப்பட்டிருந்தன. ‘ஒரு சேர் தானியம் 15 ரூபாய் என்ற கொள்ளை விலையில் விற்றது. அதுவும் மிகக் குறைவாகவே கிடைத்தது.’
பீஜப்பூருக்கும் ஷோலாபூருக்கும் இடையில் இருந்த இண்டி பகுதியில் போதிய வீரர்கள் இல்லாததால் மொகலாயக் காவல் அரண் விலக்கப்பட்டது. இதனால் பேரரசர் இருந்த இடத்திலிருந்து முற்றுகை முகாமுக்கு வருவதற்கான பாதையும் மூடப்பட்டது. தனது படையுடன் பீஜப்பூரில் இருந்து திரும்பிவந்துவிடும்படித் தன் மகன் முஹம்மது ஆஸமுக்கு உத்தரவிடுவதைத் தவிர ஒளரங்கஜீபுக்கு வேறு வழியிருந்திருக்கவில்லை. இளவரசர் ஆலோசனைக்கூட்டம் ஒன்றைக் கூட்டினார். அனைவரும் திரும்பிச் செல்ல முடிவெடுத்தனர். ஆனால், இளவரசருக்கு அதில் துளியும் விருப்பம் இருக்கவில்லை. இதுபோன்ற தோல்வியுடன் அப்போதுதான் திரும்பியிருந்த இன்னொரு இளவரசரான ஷா ஆலம் போல் தானும் வெறுங்கையுடன் திரும்ப அவருக்கு மனம் இருந்திருக்கவில்லை.
தன் படை வீரர்களையும் தளபதிகளையும் பார்த்துச் சொன்னார்: ‘உங்கள் நலனைக் குறித்துமட்டுமே நீங்கள் சிந்தித்திருக்கிறீர்கள். இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள். முஹம்மது ஆஸமாகிய நான் என் இரண்டு குழந்தைகள் மற்றும் பேகமுடன் உடம்பில் உயிர் இருக்கும்வரையில் முற்றுகையைக் கைவிட்டுவிட்டுத் திரும்பமாட்டேன். நான் இறந்த பின்னர் என் பிணத்தை வேண்டுமானால் தில்லிக்கு புதைக்க எடுத்துச் செல்லும்படி பேரரசர் உத்தரவிட்டுக்கொள்ளட்டும். உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னுடன் சேர்ந்து போரிடுங்கள். இல்லையென்றால் திரும்பிச் செல்லுங்கள்’.
‘உங்கள் விருப்பமே எங்களுக்கான உத்தரவு ஆலம்பனா’ என்று உரத்த குரலில் படையினர் கோஷமிட்டனர்.
இளவரசரின் இந்தத் தீர்மானம் ஒளரங்கஜீபை எட்டியதும் ஐயாயிரம் காளை வண்டிகளில் உணவுப் பொருட்கள், ஆயுதத் தளவாடங்கள் என இளவரசருக்கு உதவிக்கு அனுப்பினார். காஜி உத் தீன் கான் பஹாதுர் ஃபிர்ஸ் ஜங் தலைமையில் மிகப் பெரிய படை 4, அக், 1685-ல் புறப்பட்டு, நெருக்கடியில் இருந்த முஹம்மது ஆஸமின் படை முகாமை அடைந்து, ஷேர்ஷா கானை இண்டி பகுதியில் இருந்து விரட்டியடித்தது. ‘அந்தப் படை வந்து சேர்ந்ததும் பற்றாக்குறையெல்லாம் தீர்ந்துபோய் மொகலாயப் படையினரின் கவலைகள் எல்லாம் பறந்தன.’
அடுத்ததாக பாம நாயக்கர் தலைமையிலான பேராத் காலாட்படையினர் தலையில் பொதி சுமந்துகொண்டு முற்றுகையிடப்பட்டிருக்கும் கோட்டைக்குள் இரவில் செல்லமுயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர். அக்டோபர் ஆரம்பவாக்கில் குதுப் ஷாவின் தலைநகராக இருந்த ஹைதராபாத்துக்குள் முஹம்மது ஆஸம் எந்த எதிர்ப்பும் இன்றித் தன் படையுடன் நுழைந்தார். குதுப் ஷா கோல்கொண்டாவில் முடங்கியிருந்தார். அவருடைய படையில் இருந்த பலரும் ஷா ஆலம் பக்கம் வந்துவிட்டனர். மார்ச், 1686-ல் மதன பண்டிட் கொல்லப்பட்டார். பீஜப்பூர் சுல்தானகத்துடனும் மராட்டியர்களுடன் கூட்டணி முயற்சிகளை முன்னெடுத்துவந்திருந்த அவர் இறந்ததைத் தொடர்ந்து குதுப் ஷாஹி சுல்தானகம் மீதான முழு கட்டுப்பாடும் மொகலாயர் வசம் வந்து சேர்ந்தது.
15. பீஜப்பூர் முற்றுகையின்போது மொகலாயப் படையினருக்கு ஏற்பட்ட நெருக்கடிகள், கஷ்டங்கள்.
ஜூன் 1686 வாக்கில் பீஜப்பூர் மீதான மொகலாய முற்றுகை 15 மாதங்களாகியும் எந்த வெற்றியும் இன்றி இழுபறியாகவே இருந்தது. மொகலாயப் படைத் தளபதிகளிடையே கருத்து வேறுபாடுகளும் பொறாமையும் அதிருப்தியும் தலைதூக்க ஆரம்பித்தன. தானே நேரில் வந்து தலைமைப் பொறுப்பை ஏற்காவிட்டால் கோட்டை கைவிட்டுப் போய்விடும் என்பது ஒளரங்கஜீபுக்குப் புரிந்தது. 14, ஜூன், 1686-ல் ஷோலாபூரில் இருந்து புறப்பட்டு 3 ஜூலை வாக்கில் பீஜப்பூர் கோட்டைக்கு மேற்கில் இருந்த ரசூல்பூருக்கு வந்து சேர்ந்தார். முற்றுகையைக் கடுமையாக்கும்படி உடனே உத்தரவிட்டார். நகரம் முழுவதுமாக நிலைகுலைந்தது.
உயிருடன் இருந்தவர்களில் ஒளரங்கஜீபின் மூத்த வாரிசான இளவரசர் ஷா ஆலம் வட மேற்கு அல்லது ஷாபூர் கோட்டை வாசலில் இருந்த படையை முன்னகர்த்தி அந்தக் கோட்டையை முற்றுகையிட்டிருந்த தன் சகோதரர் முஹம்மது ஆஸமைப் பின்னுக்குத் தள்ளத் தீர்மானித்தார். அமைதியாகச் சரணடைந்துவிடும்படி சிக்கந்தர் ஆதில் ஷாவுக்குக் கடிதம் அனுப்பி பீஜப்பூர் கோட்டையைக் கைப்பற்றிய பெருமையைத் தாமே பெற்றுக்கொள்ளத் தீர்மானித்தார். அவருடைய பிரதான படைத் தளபதிகளில் ஒருவரான ஷா குலி ரகசியமாக்க் கோட்டைக்குள் சென்று இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவந்தார்.
இந்த விஷயம் முகாமில் பரவி முஹம்மது ஆஸம் ஷா மற்றும் பேரரசரின் காதில் வந்துவிழுந்தது. ஷா ஆலம் கடுமையாக்க் கண்டிக்கப்பட்டார். அவருடைய அதிகாரிகள், படை வீரர்கள் சிலர் குற்றம் சாற்றப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டனர் மற்றவர்கள் முற்றுகையில் இருந்து விலக்கப்பட்டனர்.
அந்த ஆண்டு மழை மிகவும் குறைவு என்பதால் முற்றுகையிட்ட மொகலாயப் படையினருக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால் முற்றுகையிடப்பட்ட பீஜப்பூர் சுல்தானகத்தின் கஷ்டங்களோ அதைவிடப் பத்து மடங்கு அதிகமாக இருந்தது. கோட்டைக்குள் பட்டினியால் ஏராளமானவர்களும் குதிரைகளும் இறக்க நேர்ந்தது. இதனால் முற்றுகையிடும் படையினரின் உணவு தானிய மற்றும் ஆயுதத் தளவாடப் பாதைத் துண்டித்தல், எதிரிகளைச் சுற்றி வளைத்துத் தாக்குதல் போன்ற வழக்கமான வழிமுறைகளில் ஈடுபடமுடியாமல் போனது.
முற்றுகை தீவிரமாக இருந்தபோது, பீஜப்பூர் சார்பில் இஸ்லாமிய மதத் தலைவர்கள் அடங்கிய குழுவொன்று ஒளரங்கஜீபைச் சந்தித்து, ‘நீங்கள் தீவிர மார்க்கப் பற்று கொண்டவர். குர்ரானை முழுவதும் ஓதி அறிந்தவர். மார்க்க வழிகாட்டிகளும் புனித நூலும் சொல்லாத எதையும் நீங்கள் செய்யமாட்டீர்கள். சகோதர முஸ்லிம்களான எங்கள் மீதான போரை உங்களால் எப்படி நியாயப்படுத்த முடிகிறது’ என்று மன்றாடினர்.
‘நீங்கள் சொன்னவை எல்லாம் உண்மைதான். உங்கள் சுல்தானகத்தை நான் விரும்பவில்லை. ஆனால் மார்க்க விரோதியும் காஃபிரின் மகனுமான ஒருவன் (சம்பாஜி சிவாஜி) உங்களிடம் அடைக்கலம் தேடிவந்திருக்கிறான். இந்த இடம் தொடங்கி தில்லி வரையிலும் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு அவர்கள் தொந்தரவு தந்துவருகிறார்கள். அது தொடர்பான புகார்கள் அல்லும் பகலும் என்னை வந்தடைந்தவண்ணம் இருக்கின்றன. சாம்பாஜியை எங்களிடம் ஒப்படையுங்கள். முற்றுகையை அந்த நொடியே விலக்கிக் கொள்கிறேன்.’
பீஜப்பூர் இஸ்லாமிய தலைவர்கள் எதுவும் பதில் சொல்லமுடியாமல் தலை குனிந்தபடி திரும்பினர்.
ஒளரங்கஜீப் பீஜப்பூர் கோட்டைக்கு அருகில் வந்ததைத் தொடர்ந்து படையைக் கோட்டை அகழிக்கு வெகு அருகில்வரை கொண்டுசென்றார். ஆனால் அகழியைத் தாண்டிச் செல்ல முடியவில்லை. ‘அகழிக்கு அருகே வந்த மொகலாயப் படையினரை கோட்டை கொத்தளங்களில் இருந்து பீஜப்பூர் வீரர்கள் துப்பாக்கிகளால் சுட்டு வீழ்த்தினர். இதனால் யாரும் தலையைக் காட்டத் துணியவில்லை. மூன்று மாத காலம் வெறுமனே அகழிக்கு முன்னால் காத்துக் கிடந்தனர்.’
செப்டம்பர் நான்கு வாக்கில் கோட்டைக்குப் பின்பக்கம் இருந்த பதுங்குகுழிகளுக்கு வெகு அண்மை வரை தன் படையை ஒளரங்கஜீப் நகர்த்தினார். முழு கவசங்களும் அணிந்துகொண்டு படைவீரர்கள் சுற்றி நின்று பாதுகாக்க, அணிவகுத்தவருக்கு அங்கிருந்த தளபதிகள் சலாம் வைத்தனர். அகழிக்கு வெகு அருகில் மெள்ளக் குதிரையில் சென்று முற்றுகை வெற்றி ஏன் இப்படித் தாமதமாகிக் கொண்டிருக்கிறது என்று நேரில் ஆய்வு செய்தார்.
16. பீஜப்பூரின் கடைசி அரசரும் வீழ்ந்தார்
ஒளரங்கஜீப் ஆய்வு செய்த ஒரு வாரத்தில் பீஜப்பூர் கோட்டை வீழ்ந்தது. தாக்குதலினால் அல்ல; பீஜப்பூர் சுல்தானகம் மனம் சோர்ந்துவிட்டிருந்தது. சுய நலம் மிகுந்த மேட்டுக்குடி முஸ்லிம்களின் கைப்பாவையாக இருந்தார் பீஜப்பூர் சுல்தான். வெளியில் இருந்து எதிர்பார்த்த உதவிகள் எல்லாம் கை நழுவிவிட்டிருந்தன. எதிர்காலம் முழுவதும் இருண்டுகிடந்தது. கோட்டைப் பாதுகாப்புப் படை 2000 வீரர்களை மட்டுமே கொண்டதாகச் சுருங்கிவிட்டிருந்தது. 9 செப்டம்பர் வாக்கில் பீஜப்பூர் தரப்பின் முக்கிய பிரமுகர்களில் இருவரான நவாப் அப்துர் ராஃப் மற்றும் ஷேர்ஷா கான் ஆகியோரின் செயலர்கள் ஃபிர்ஸ் ஜங்கைச் சென்று சந்தித்து சரணடைவது தொடர்பாகப் பேசினர். ஒளரங்கஜீப் அவர்களை இன் முகத்துடன் வரவேற்றார்.
19, செப், 1686 ஞாயிறன்று பீஜப்பூர் சுல்தானகம் முழுமையாக வீழ்ச்சியடைந்தது. வீதியெங்கும் கண்ணீரும் கம்மலையுமாக இருந்த மக்கள் மத்தியில் ஆதில் ஷாஹி சுல்தான் வம்சத்தின் கடைசி மன்னரான சிக்கந்தர் முன்னோர்களின் அரியணையை இழக்க நேர்ந்தது. மதியம் ஒருமணி வாக்கில் ராவ் தள்பத் புந்தேலா அவரை ரசூல்பூரில் முகாமிட்டிருந்த ஒளரங்கஜீபிடம் இட்டுச்சென்றார்.
ஒளரங்கஜீப் தங்கியிருந்த தற்காலிக முகாம் இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுக்காக வெகு விமர்சையாக அலங்கரிக்கப்பட்டது. சிக்கந்தர் வந்ததும் உயர் மட்ட மொகலாய அதிகாரிகள், அமைச்சர்கள் அவரை வரவேற்றனர். வீழ்ந்த சுல்தான் வெற்றி பெற்ற மொகலாயப் பேரரசரின் அரியணை முன்பாக வந்து தலை தாழ்த்தி வணங்கினார். பேரழகும் இளமையின் வசீகரமும் சுல்தான் வம்சப்பொலிவும் கொண்டவர் அங்கிருந்த அனைவருடைய நன்மதிப்பையும் பெற்றார். அவருடைய நிலை குறித்த பரிதாபமும் அனைவர் மனதிலும் உருவானது. ஒளரங்கஜீப் கூட உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். சிக்கந்தரிடம் இதமாகப் பேசினார். தோற்ற சுல்தானுக்கு மொகலாய அவையில் கெளரவப் பதவியும் கான் என்ற பட்டமும் தரப்பட்டன. ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் அவருக்கு ஓய்வூதியமாகத் தர முடிவுசெய்யப்பட்டது. பீஜப்பூர் சுல்தானத்தின் அமைச்சர்கள், அதிகாரிகள், படைத்தளபதிகள் அனைவரும் மொகலாய சேவைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர்.
19, செப்டம்பரில் செல்லுமிடமெல்லாம் சுமந்து செல்லப்படும் அரியணையில் வெற்றிப் பெருமித்ததில் அமர்ந்தபடி ஒளரங்கஜீப் பீஜப்பூர் கோட்டைக்குள் நுழைந்தார். தாக்குதல் நடத்தத் தீர்மானித்திருந்த அதே சாஃப் ஷிகன் கான் மற்றும் தெற்கு அல்லது மங்கலி வாசல் அகழியைக் கடந்து உள்ளே சென்றார். அவர் வெற்றிநடை போட்ட தெருக்களில் இடமும் வலமுமாக தங்க, வெள்ளி நாணயங்களை அள்ளி வீசியபடி ஊர்வலம் வந்தார். கோட்டை கொத்தளங்கள், அரண்மனைகள், அந்தப்புரங்கள் அனைத்தையும் பார்வையிட்டார். அல்லா காட்டிய கருணைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவும் அவருடைய கருணைக்கு என்றும் பாத்திரமாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டும் ஜமா மசூதிக்குச் சென்று தொழுதார்.
சிக்கந்தரின் அரண்மனையில் சிறிது நேரம் தங்கியிருந்து அவையினரின் மரியாதையையும் அன்புக் காணிக்கைகளையும் ஏற்றுக்கொண்டார். குர்ரானுக்கு விரோதமாக அல்லாவுக்கு இணைவைத்தல் கூடாதென்ற அடிப்படையில் அரண்மனைச் சுவரில் வரையப்பட்டிருந்த ஓவியங்கள் அனைத்தையும் அழிக்கச் சொன்னார். புகழ்பெற்ற பீரங்கி மைதானமான மாலிக் ஏ மைதானில் ஒளரங்கஜீபின் வெற்றிக் கல்வெட்டு பொறிக்கப்பட்டது.
சுதந்தர சுல்தானகம் வீழ்ந்ததைத் தொடர்ந்து பீஜப்பூர் முழுமையாக அழிந்தது. இந்த வீழ்ச்சிக்கு இரண்டு வருடங்கள் கழித்து பிளேக் தொற்று நோய் தீவிரமாகத் தாக்கி மக்கள் தொகையில் பாதியை அழித்தது. சில வருடங்கள் கழித்து இங்கு வந்த பீம்சென், அந்த சுல்தானகமும் அருகில் இருந்த நெளராஸ்பூரும் எப்படி கைவிடப்பட்டு சிதிலமடைந்திருந்தன என்பது பற்றி விவரித்திருக்கிறார்: ‘மக்கள் தொகை குறைந்திருந்தது. அந்தப் பகுதியில் அதுவரை இருந்த வற்றாத கிணறுகள்கூட திடீரென்று வற்றிப் போய்விட்டிருந்தன. சிதிலமடைந்த அரண்மனை, இடிந்துவிழுந்து கொண்டிருந்த பிரமாண்ட வீடுகள், எங்கும் மண்டிக் கிடந்த புதர் காடுகள்… என வாழ்ந்து கெட்ட ராஜ்ஜியத்தின் சோகமான உதாரணமாக ஆனது’.
ஆதில் ஷாஹி சுல்தானகத்தின் இறுதி சுல்தான் தெளலதாபாத் சிறையில் சிலகாலம் அடைத்துவைக்கப்பட்டிருந்தார். அதன்பின் ஒளரங்கஜீப் செல்லும் இடங்களுக்கெல்லாம் கைதியாக இழுத்துச் செல்லப்பட்டார். இப்படியான வேதனையான நிலையிலேயே 3, ஏப், 1700 வாக்கில் சத்ரா கோட்டைக்கு வெளியில் அவருடைய உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு 32 வயது கூட முடியவில்லை. அவருடைய இறுதி ஆசைக்கு ஏற்ப அவருடைய உடல் பீஜப்பூருக்குக் கொண்டுசெல்லப்பட்டு அவருடைய மார்க்க வழிகாட்டி ஷேக் ஃபஹிமுல்லாவின் கல்லறைக்கு அருகில் கூரையில்லாத கல்லறை மாடத்தில் புதைக்கப்பட்டது.
(தொடரும்)
___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின் தமிழாக்கம்.