Skip to content
Home » ஔரங்கசீப் #35 – குதுப் ஷா வம்சத்தின் வீழ்ச்சி – 1

ஔரங்கசீப் #35 – குதுப் ஷா வம்சத்தின் வீழ்ச்சி – 1

1. அபுல் ஹசன் குதுப் ஷாவின் ஆட்சி

அப்துல்லா குதுப் ஷா கோல்கொண்டாவின் ஆறாவது அரசர். அவரது தந்தை 1626 வாக்கில் இறந்ததைத் தொடர்ந்து தன் 12வது வயதில் ஆட்சிக்கட்டில் ஏறினார். 46 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். எனினும் பெரும்பாலான காலம் ஒரு பொம்மை சுல்தானாகவே இருந்தார். திட சித்தம் கொண்ட அவருடைய தாய் ஹயாத் பக்‌ஷ் பேகம் தான் 40 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி நிர்வாகத்தைப் பார்த்துக்கொண்டார். அவர் இறந்த பின்னர் அப்துல்லாவின் மூத்த மருமகன் சையது அஹமது ஆட்சி நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டார். அப்துல்லா குதுப் ஷா தன் ஆயுள் முழுவதும் சுக போகங்களில் திளைப்பவராகவும் சோம்பேறியாகவும் முழு மூடனாகவும் இருந்தார். மக்கள் முன்பாகவோ அரசவைக்கு வந்தோ ஒருபோதும் எதையும் செய்ததே இல்லை. கோல்கொண்டா கோட்டைக்கு வெளியே சென்றும் எதுவும் செய்ததுமில்லை. நிலைமை இப்படி இருந்ததால் ஆட்சி நிர்வாகம் தவிர்க்க முடியாமல் குழப்பமும் கூச்சலும் நிறைந்ததாகவே இருந்தது.

அப்துல்லாவுக்கு ஆண் வாரிசுகள் இல்லை. மூன்று பெண் குழந்தைகள். இரண்டாவது மகளை ஒளரங்கசீபின் மகன் முஹம்மது சுல்தானுக்கு மணமுடித்திருந்தார். முதல் மகளை சைய்யது அஹமதுவுக்கு மணமுடித்திருந்தார். சையது முஹம்மது மெக்காவில் வசித்த மேட்டுக்குடிக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். தனது திறமையின் மூலம் படிப்படியாக முன்னேறி குதுப் ஷா வம்ச ஆட்சியில் பிரதம அமைச்சர் மற்றும் மறைமுக ஆட்சியாளர் என்ற அளவுக்கு உயர்ந்திருந்தார். சையது சுல்தானுக்கு மூன்றாவது மகளைத் திருமணம் முடிக்க நிச்சயிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு மணமுடித்துக் கொடுத்தால் அந்த நிமிடமே நாட்டை விட்டு வெளியேறிவிடுவேன் என்று சைய்யது அஹமது சொன்னார்.

குதுப் ஷாகி வம்சத்தினரின் ஆண் வழி குடும்ப வாரிசான இளைஞர் அப்துல் ஹசனுக்குத்தான் திருமணம் முடிக்கவேண்டும் என்று அரச சபை பிரதிநிதிகள் தீர்மானித்திருந்தனர். சைய்யது ராஜி கத்தால் என்ற சூஃபியின் சீடராக துறவு வாழ்க்கையை அவர் 16 ஆண்டுகள் வாழ்ந்திருந்தார். அவரை அங்கிருந்து இழுத்து வந்து மூன்றாவது இளவரசியுடன் திருமணம் செய்துவைத்தனர்.

21, ஏப், 1672-ல் அப்துல்லா இறந்ததைத் தொடர்ந்து ஆட்சிக்கட்டிலில் யார் ஏறுவது என்ற போட்டி ஆரம்பித்தது. சில மாதக் குழப்பங்களுக்குப் பின்னர் பாரசீர வம்சாவளித் தளபதி சைய்யது முஸாஃபர் என்பவர் மூஸா கான் மஹல்தர் மற்றும் பல அரசு அதிகாரிகளின் ஆதரவுடன், சைய்யது அஹமதுவை ஓரங்கட்டிச் சிறையில் அடைத்தார். அதன் பின் அப்துல் ஹசனை சுல்தான் ஆக்கிவிட்டு முஸாஃபர் பிரதம அமைச்சர் ஆனார். ஆனால் சில மாதங்களிலேயே முஸாஃபரின் பணியாளர்களில் ஒருவரான மதன பண்டிட்டின் ஆதரவைக் கையூட்டுகளின் மூலம் பெற்று அவரைக்கொண்டு அரசவை அதிகாரிகள் பலரைத் தன் பக்கம் ஹசன் இழுத்துக்கொண்டார். சிறிது காலத்தில் முஸாஃபரை அவருடைய வாஸிர் நில உரிமைகளில் இருந்து நீக்கி மதன பண்டிட்டிடம் அதைக் கொடுத்ததோடு அவருக்கு சூர்ய பிரகாச ராவ் என்ற பட்டம் தந்து கெளரவித்தார். 1673 வாக்கில் இந்த பதவி மாற்றங்கள் நடந்தன.

1686-ல் மதன பண்டிட் கொல்லப்படும்வரை அவரே ஆட்சி நிர்வாகத்தைக் கவனித்துவந்தார். அவருடைய மரணத்தைத் தொடர்ந்து குதுப் ஷாஹி கோல்கொண்டா சுல்தான் ஆட்சி வீழ்ச்சியடையத் தொடங்கியது. மதன பண்டிடின் சகோதரர் அக்கண்ணா நிர்வாகத் தலைவர் ஆனார். அவருடைய மருமகனும் வீரமும் விவேகமும் நிறைந்த எங்கன்ணா ருஸ்தம் ராவ்க்கு உயர் பதவி தரப்பட்டது. மதன பண்டிட்டின் மூலம் பயிற்றுவிக்கப்பட்ட முஹம்மது இப்ராஹிம் இணை பதவியில் நியமிக்கப்பட்டார்.

மதன பண்டிட்டின் 12 ஆண்டு கால ஆட்சியில் அப்துல்லாவின் ஆட்சிக்காலம் போலவே குழப்பமும் கலகமும் நிலவிவந்தன. நிலைமை மேலும் மேலும் மோசமாகிக்கொண்டே சென்றது. மக்களைக் கசக்கி பிழிவது மட்டுமே ஒரே செயல்பாடாக இருந்தது. முன்பு இருந்த அதே அயலுறவுக் கொள்கைகளையே சற்றே தேவையான மாறுதல்களுடம் மதன பண்டிட்டும் பின்பற்றினார். ஆதில் ஷாஹி சுல்தான் வம்சத்துடன் எந்த மோதலும் இருந்திருக்கவில்லை. எனினும் குதுப் ஷாஹி சுல்தானகம் இப்போது குழப்பமும் அரியணைப் போட்டியும் மலிந்ததாகிவிட்டிருந்தது. எனவே தொடர் வெற்றி பெற்றுவந்த மராட்டிய அரசருடன் நட்புறவு பாராட்டி மதன பண்டிட் அவருக்கு கோல்கொண்டா சுல்தானகத்தைக் காக்கும் பொறுப்பைத் தந்து ஆண்டுக்கு ஒரு லட்சம் பணம் கப்பம் கட்டவும் சம்மதித்தார்.

2. கோல்கொண்டா சுல்தானகம் தொடர்பான மொகலாய அணுகுமுறை

பிஜப்பூர் சுல்தானகம் வலிமையாக இருக்கும்வரை கோல்கொண்டா சுல்தானகமும் பாதுகாப்புடன் இருக்கமுடியும். இது ஒளரங்கஜீபுக்கும் தெரிந்திருந்தது. எனவே கோல்கொண்டா சுல்தானத்தை மொகலாயப் பேரரசுடன் இணைப்பதில் அவர் அதிக ஆர்வம் காட்டவில்லை. அதற்கான அவசியமும் அவருக்கு இருந்திருக்கவில்லை. குதுப் ஷா வம்சத்தை அழிப்பதைவிடவும அதை அச்சுறுத்தி அடக்கிவைப்பதிலேயே அதிக ஆதாயம் இருந்தது. ஹைதராபாத்தில் நியமிக்கப்பட்ட மொகலாயப் ’பிரதிநிதி’ கோல்கொண்டா சுல்தான் மற்றும் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவராக இருந்தார்; எந்தவித படையெடுப்பும் இன்றி அவரை அவமானப்படுத்தி நினைத்த வரியை விதித்து வசூலித்தும் வந்தார்.

வாஸிர் மதன்ன பண்டிட்டிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்த அபுல் ஹஸன் அந்தப்புரத்துக்குள் தன்னை அடைத்துக்கொண்டு சுக போகங்களில் திளைத்துவந்தார். அவருக்கு முன் ஆட்சியில் இருந்தவருடைய காலத்தில் ஹைதராபாத் இந்தியாவின் பாபிலோனாக ஆகியிருந்தது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பொது அரங்கில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொது மகளிர் ஆடிப்பாடி அவரை மகிழ்வித்துவந்தனர். அந்தப்புரத்துக்கு அருகில் இருந்த மதுபான விடுதியில் தினமும் 1200 மொந்தை கள் காலியானது. எனினும் அவர் சில நுண்கலைகளுக்கு ஆதரவும் தந்தார். பல்வேறு கலை மற்றும் கைவினைக் கலைஞர்களைத் தனது தலைநகரில் தங்கவைத்து கலை வளர உதவினார். அவர்கள் உற்பத்தி செய்தவை தேசம் முழுவதிலும் பெரும் வரவேற்பைப்பெற்றன. சுல்தானும் மிகச் சிறந்த இசைக் கலைஞராக இருந்தார். தானா ஷா அல்லது ’கலை அரசர்’ என்று புகழப்பட்டார்.

கோல்கொண்டா சுல்தானகத்தின் செல்வச் செழிப்புக்கு அதன் நீர்ப்பாசனம் நிறைந்த வளமான நிலங்களே முக்கிய காரணம். எங்கும் பச்சைப் பசுமை பூத்துக் குலுங்கும். ஏராளமான கனிவகைகள் அணிவகுக்கும். பீஜப்பூரின் வறண்ட தரிசு நிலப் பகுதியைக் கடந்து இந்த சுல்தானகத்துக்குள் நுழைபவருக்கு இந்தக் காட்சிகள் பெரும் மன நிம்மதியையும் உற்சாகத்தையும் தரும். வைரச் சுரங்கங்கள், இரும்புப் படுகைகள், கிழக்கு கடற்கரையில் ஸ்ரீகாகுளம் தொடங்கி தெற்கே செயிண்ட் தாமஸ் கோட்டை வரையிலுமான பரபரப்பான துறைமுகங்கள் என இந்த சுல்தானகம் வளம் கொழிப்பதாகத் திகழ்ந்தது. சுல்தானுக்கு ஆண்டு வருமானமாக இரண்டே முக்கால் கோடி பணம் எளிதில் கிடைத்தது.

ஒளரங்கஜீப் ஆட்சிக்கட்டில் ஏறி 30 வருடங்கள்வரையிலும் கோல்கொண்டா மொகலாயத் தாக்குதலுக்கு ஆளாகாமல் தப்பியிருந்தது. சிவாஜி மற்றும் கோல்கொண்டா ராஜ்ஜியத்தின் பாதுகாவலரான பீஜப்பூர் சுல்தானகம் மீதே மொகலாயர்களின் கவனம் குவிந்திருந்தது. அதோடு பீஜப்பூர் சுல்தானைவிட மிகத் துல்லியமாக நேரம் தவறாமல் மொகலாயப் பேரரசுக்கு கோல்கொண்டா சுல்தான் உரிய கப்பம் கட்டியும்வந்தார். எனவே கோல்கொண்டா பக்கம் அவர்கள் வரவே இல்லை.

ஜெய் சிங்கின் தலைமையில் 1665-67 வாக்கிலும் 1679-ல் திலீர் கான் மூலமும் 1685 வாக்கில் இளவரசர் முஹம்மது ஆஸம் மூலமும் பீஜப்பூர் மீது மொகலாயப் படையெடுப்பு நடந்தபோது கோல்கொண்டா சுல்தான் தனது சகோதரருக்கு உதவியாகப் படைகளை வெளிப்படையாகவே அனுப்பிவந்திருந்தார். மொகலாயப் பேரரசுக்கு உரிய கப்பத்தையும் இவர் கட்டி வந்ததால் முதல் இரண்டு படையெடுப்புகளின் போது இவர் இப்படி உதவி செய்ததை பேரரசர் மன்னித்துவிட்டார். அல்லது அந்த கப்பமே அதற்கான பிராயச்சித்தமாகவும் பார்க்கப்பட்டுவிட்டது. கடைசி போரில் உதவியது அவருக்கு அழிவைக் கொண்டுவந்துவிட்டது. ஒளரங்கஜீபின் பார்வையில் இந்தப் படைகளை பீஜப்பூர் சுல்தானுக்கு அனுப்பி உதவி செய்ததைவிட காஃபிர்களுடனான அவருடைய நட்பையே சகித்துக்கொள்ளமுடியவில்லை.

1666-ல் ஆக்ரா கோட்டையில் இருந்து தப்பிய சிவாஜிக்கு இஸ்லாமியப் போர் தந்திரங்களைக் கற்றுத் தந்து மொகலாயர்களிடம் இழந்த கோட்டைகளையெல்லாம் மீட்டுக்க்கொள்ள வழிவகுத்துவிட்டிருந்தார். 1677-ல் சிவாஜி ஹைதராபாதுக்கு படையுடன் வந்தபோது அவரை வெகு விமர்சையாக வரவேற்றார். அவருடைய குதிரைக்கு நவரத்தினங்கள் பதித்த மாலையை அணிவித்து மராட்டிய மன்னரின் கீழிருக்கும் குறுநில மன்னர்போல் நடந்துகொண்டிருந்தார். தனது கோல்கொண்டா பகுதியைப் பாதுகாக்கவென்று சிவாஜிக்கு ஆண்டு கப்பமாக ஒரு லட்சம் பணம் தரவும் செய்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக கோல்கொண்டா சுல்தான் தனது பிரதான அமைச்சர்களாக பிராமணர்களான மதன பண்டிட் மற்றும் அக்கண்ணாவை நியமித்திருந்தார். இதன் மூலம் அந்த சுல்தானகத்தில் ஹிந்து செல்வாக்கு அதிகரிக்க வழிவகுத்திருந்தார். இவை ஒளரங்கஜீபுக்குத் துளியும் பிடித்திருக்கவில்லை.

கோல்கொண்டா சுல்தானவையில் இருந்த மொகலாயப் பிரதிநிதிக்கு ஒளரங்கஜீப் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தவை:

இந்த கேடுகெட்டவன் (அப்துல் ஹஸன் குதுப் ஷா) தன் அவையில் காஃபிர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்துவைத்திருக்கிறான். சையதுகள், ஷேக்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் எல்லாம் அந்த காஃபிருக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டியிருக்கிறது. அதோடு தனது அந்தப்புரத்தில் அனைத்து மார்க்க விரோதச் செயல்களையும் (மது அருந்துதல், விபச்சாரம், சூதாட்ட விடுதிகள்) செய்துவருகிறான். இரவும் பகலும் இந்தப் பாவங்களையே செய்துவருகிறான். இஸ்லாமுக்கும் உருவ வழிபாட்டு வழிமுறைக்குமான வித்தியாசம் இவனுக்குத் தெரியவில்லை. நீதி, ஒடுக்குமுறை, பாவம், பரிதாபம் இவற்றுக்கிடையிலான வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. அல்லாவின் போதனைகளையும் நபுகளாரின் ஹதீஸ்களையும் ஹலால்களையும் ஹராம்களையும் புரிந்துகொள்ளாமல் காஃபிர்களுக்கு படை அனுப்பி உதவி செய்கிறான். காஃபிர் சாம்பாஜிக்கு மிக சமீபத்தில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறான். இவற்றால் அல்லாவின் முன் மன்னிக்க முடியாத தவறைச் செய்தவனாகிவிட்டான்.

3. மொகலாயர்களுடனான போர் மற்றும் ஹைதராபாத்தைக் கைப்பற்றுதல், 1685.

சிக்கந்தர் ஆதில் ஷாவுக்கு அபுல் ஹஸன் எந்த உதவியும் செய்துதரக்கூடாது என்று எச்சரித்துவிட்டு ஒளரங்கஜீப் பீஜப்பூர் மீது மார்ச் 1685-ல் தாக்குதலை ஆரம்பித்தார். ஆனால், ஜூன் இறுதிவாக்கில், அபுல் ஹசன் தன் பிரதிநிதிகளுக்கு அனுப்பிய கடிதம் ஒன்றை ஒளரங்கஜீப் கைப்பற்றியிருந்தார். அதில், ’பேரரசர் மிகவும் மாட்சிமை பொருந்தியவர். இதுவரையிலும் நம்மிடம் பெருந்தன்மையுடனே நடந்துகொண்டிருக்கிறார். ஆனால் இப்போது சிக்கந்தர் நிராதரவான நிலையில் மாட்டிக்கொண்டிருக்கிறார். பீஜப்பூரை பேரரசர் முற்றுகையிட்டுவிட்டார். எனவே பீஜப்பூர் படைகளும் சாம்பாஜியின் எண்ணற்ற வீரர்களும் ஒருபக்கமிருந்து மொகலாயர்களை எதிர்க்கும் நிலையில் காலியுல்லாகானின் தலைமையில் 40000 வீரர்களை அனுப்பவேண்டியது நம் கடமையாகிறது. எந்தப் பக்கத்து எதிரிகளைப் பேரரசர் விரட்டுகிறார் என்று பார்ப்போம்’ என்று அபுல் ஹஸன் எழுதியிருந்தார்.

இது தெரியவந்ததும் ஒளரங்கஜீப் உடனே இளவரசர் ஷா ஆலம் தலைமையில் மிகப் பெரிய படையொன்றை ஹைதராபாத்துக்கு அனுப்பிவைத்தார். ஆனால் பேரரசரின் படை மல்கேத் பகுதிக்கு எட்டு மைல் கிழக்கே இருந்தபோது கோல்கொண்டா படை அதைத் தடுத்தது. இதனால் அவர்கள் முன்னேறிச் செல்வது தடுக்கப்படவே அங்கு மல்கேத் மீது தாக்குதலை மேற்கொண்டனர். தினம் தினம் சிறு சிறு சண்டைகள் நடந்தன. கான் இ ஜான் மல்கேத் பகுதியில் இருந்த முகாமைச் சுற்றிலும் சுவர் போல் படைகளை நிறுத்தினார். அது ஒரு முற்றுகை போலிருந்தது.

சில நாட்களில் பெரும் படையுடன் வந்து சேர்ந்த இளவரசர், மல்கேதில் முகாமிட்டார். ஹைதராபாத் வரையிலும் முன்னேறிச் செல்ல கான் இ ஜஹான் தலைமையில் ஒரு படையை அனுப்பினார். தக்காண முஸ்லிம் படை இவர்களைவிட மூன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் பெரியதாக இருந்தது. தொடர்ந்து சிறு சிறு சண்டைகள் நடந்தன. ஒரு மோதல் வெடிக்கும். அதன்பின் மூன்று நான்கு நாட்கள் மொகலாயர் தரப்பில் அமைதி நிலவும். ஏற்கெனவே மழைக்காலம் ஆரம்பித்துவிட்டிருந்தது. எனவே மொகலாயப் படையினால் நினைத்த வேகத்தில் முன்னேறமுடியவில்லை. அடிக்கடி நடந்த மோதல்களில் இறந்த வீரர்களின் எண்ணிக்கையைப் பார்த்து மொகலாயப் படைவீரர்கள் மனம் சோர்வடைந்தனர். எனவே மல்கேத் பகுதியில் எந்தப் போரிலும் ஈடுபடாமல் சுமார் இரண்டு மாதங்கள் அமைதியாக இருந்து நேரத்தை வீணடித்தனர்.

இது தெரிந்யவந்ததும் பேரரசர் கடிந்துகொண்டார். அதோடு இளவரசரின் முகாமில் இருந்தவர்கள் மீது மறைந்திருந்து துப்பாக்கிச் சூடு நடந்தது. இவற்றால் வீறுகொண்டு எழுந்த படையினர் மீண்டும் போரை ஆரம்பித்தனர். ரத்தக் களறியான போர் நடந்துமுடிந்த பின்னர் ஒருவழியாக தக்காண முஸ்லிம் படை தன் முகாமுக்குத் துரத்தப்பட்டது. மறுநாள் காலையில்தான் அவர்கள் ஹைதராபாத் பக்கம் தப்பி ஓடியது தெரியவந்தது. தக்காணப் படையின் தளபதி மீர் முஹம்மது இப்ராஹிமுக்கும் அவருடைய அடுத்த கட்ட தளபதியான ஷேக் மினாஜுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதலினால் இந்தப் பின்னடைவு அவர்களுக்கு ஏற்பட்டது. மொகலாயப் படை மீர் முஹம்மது இப்ராஹிமை ஆசைகாட்டித் தன் பக்கம் இழுத்துக்கொண்டது. எந்த எதிர்ப்பும் இல்லாத நிலையில் இளவரசர் ஷா ஆலம் ஹைதராபாத் நோக்கி விரைந்து முன்னேறினார்.

படைத்தளபதி தப்பி ஓடியதைத் தொடர்ந்து ஹைதராபாத்தின் பாதுகாப்பு பலவீனப்பட்டது. குதுப் ஷாவுக்கு யாரை நம்புவது என்று தெரியவில்லை. அவர் கோல்கொண்டா கோட்டைக்குத் தப்பிச் சென்றார். வேகவேகமாகத் தப்பிச் சென்றதால் அவருடைய உடமைகள், சொத்துகள் எல்லாம் அரண்மனையிலேயே விடப்பட்டிருந்தன. சுல்தான் தப்பிச் சென்றுவிட்டார்; மொகலாயப் படை விரைவில் தாக்கப்போகிறது என்ற விவரங்கள் ஹைதராபாத் மக்களுக்குத் தெரியவந்ததும் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு கோட்டைக்குள் பதுங்க முயற்சி செய்தனர். இந்தக் குழப்பத்தோடு குழப்பமாக ஊருக்குள் கொள்ளையடிப்பும் ஆரம்பித்தது. எதிரிப் படை வந்து தாக்கி அழித்தது போன்ற ஒரு கோர தாண்டவம் அங்கு நடந்தேறியது.

ஒவ்வொரு வீதியிலும் சந்தையிலும் லட்சக்கணக்கில் பணம், பொருட்கள், மேட்டுக்குடியினரின் விலை உயர்ந்த சீன பொருட்கள், சுல்தான் மற்றும் அமீர்களின் கம்பளங்கள், உடமைகள் இவை நீங்கலாக யானைகள், குதிரைகள் எனக் குவிந்து கிடந்தன. இவை அனைத்தும், உயிரைக் கையில் பிடித்தபடி ஓடும் களேபரத்தின் இடையில் கொள்ளையடிக்கவும்பட்டன. ஏராளமான ஹிந்து, முஸ்லிம் பெண்கள் குழந்தைகள் கடத்தப்பட்டனர். பலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர்.

மறுநாள் ஷா ஆலம் அந்த நகரின் மக்களைப் பாதுகாக்கத் தன் படை வீரர்களை அனுப்பினார். ஆனால் அவர்களும் சூறையாடலில் கலந்துகொண்டனர். இரண்டு நாட்கள் கழித்து கான் இ ஜஹானை அனுப்பி ஊருக்குள் அமைதியைக் கொண்டுவரவைத்தார். ஓரளவுக்கு நிலைமைகட்டுக்குள் வந்த்து. 8, அக், 1685 வாக்கில் மொகலாயப் படை இரண்டாம் முறையாக ஹைதராபாத்துக்குள் நுழைந்தது. இளவரசர் ஷா லமிடம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு குதுப் ஷா தன் பிரதிநிதிகள் பலரை அனுப்பினார். 18 அக்டோபரில் பேரரசரின் சம்மதத்தைக் கேட்டு இளவரசர் அனுப்பிய பரிந்துரை வந்து சேர்ந்தது. சில நிபந்தனைகளின் பேரில் அபுல் ஹஸனை மன்னிக்கப் பேரரசர் சம்மதித்தார்:

(1) பழைய கப்பத் தொகை பாக்கியாக இருந்த ஒரு கோடியே 20 லட்சம் முழுவதையும் கொடுக்கவேண்டும். அதோடு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு லட்சம் பணம் கூடுதலாகத் தரவும் வேண்டும். (2) மதன பண்டிட் மற்றும் அக்கண்ணாவைப் பதவியில் இருந்து நீக்கவேண்டும். (3) மொகலாயப் படை கைப்பற்றியிருக்கும் மல்கேத் பகுதி மற்றும் சீரம் பகுதி ஆகிய இரண்டின் மீதான உரிமைகளை விட்டுக்கொடுத்துவிடவேண்டும்.

(தொடரும்)

படம்: அபுல் ஹசன் குதுப் ஷா

___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *