4. மாதண்ணா பண்டிட்டின் மரணம், 1686
ஷா ஆலம் சில மாதங்கள் கோல்கொண்டாவுக்கு அருகில் முகாம் அமைத்துத் தங்கியிருந்தார். அதன் பின் குதுப் ஷாவின் வேண்டுகோளின் பேரில் அதற்கு 48 மைல் வட மேற்கில் இருந்த குஹிர் பகுதிக்குப் பின்வாங்கி, போர்க் கப்பம் கிடைப்பதற்காகக் காத்திருந்தார். மாதண்ணா பண்டிட்டை அபுல் ஹஸன் முடிந்தவரை பதவியில் இருந்து விலக்காமல் வைத்திருந்தார். ஆனால் இஸ்லாமிய மேட்டுக்குடியினர், அமைச்சர்கள் எல்லாம் மாதண்ணாவின் மீது மிகுந்த அதிருப்தியுடன் இருந்தனர். மொகலாயர் மூலம் வரும் நெருக்கடிகள் எல்லாவற்றுக்கும் இந்துவான அவரை உயர் பதவியில் வைத்திருப்பதுதான் காரணம் என்று சொன்னார்கள்.
அதிருப்தியடைந்த இஸ்லாமியப் பிரமுகர்கள் ஒன்று சேர்ந்து மாதண்ணா பண்டிட்டுக்கு எதிராக ஒரு சதித்திட்டம் தீட்டினர். அந்தக் குழுவின் தலைவராக ஷேக் மினாஜ் இருந்தார். இறந்துவிட்ட அப்துல்லா குதுப் ஷாவின் அந்தப்புரம் மீதான கட்டுப்பாடும் அவரிடமே இருந்தது. அப்துல்லாவின் விதவைகளான சருமா மற்றும் ஜனி ஸாஹிபா ஆகியோரும் அந்த சதியில் ஈடுபட்டனர்.
மார்ச், 1686 முன்னிரவில் மாதண்ணா பண்டிட், சுல்தான் அபுல் ஹஸனுடைய அவையில் இருந்து புறப்பட்டுச் சென்ற பின்னர், கோல்கொண்டா தெருவொன்றில் ஒளிந்திருந்த ஜம்ஷீத் மற்றும் சில அடிமைகளால் தாக்கிக் கொல்லப்பட்டார். உடன் வந்த அவருடைய சகோதரர் அக்கண்ணா பண்டிட்டும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார். வீரம் நிறைந்த அவர்களுடைய மருமகன் ருஸ்தம் ராவை வீட்டுக்குக் கொண்டு சென்று அங்கு உறவினர்கள் முன்னால் வைத்துக் கொன்றனர். அவர்களுடைய வீடு சூறையாடப்பட்டது. கோட்டைக்குள் இந்துக்கள் வசித்து வந்த பகுதியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த துரதிஷ்டமான இரவில் பல பிராமணர்கள் உயிரையும் உடமையையும் இழந்தனர்.
விதவை சுல்தானா பேகம், ஒளரங்கஜீபிடம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பொருத்தமான நபர்களை அனுப்பிவைத்தார். ஷா ஆலமை முற்றுகையை விலக்கிக் கொண்டு வந்துவிடும்படி ஒளரங்கஜீப் கேட்டுக்கொண்டார். 1686 ஜூன் 7 வாக்கில் ஷோலாபூருக்கு வந்து சேர்ந்தார். கோல்கொண்டா பகுதியில் இருந்து மொகலாயப்படை அப்படியாக முழுவதுமாக வெளியேறியது. அதே ஆண்டு 12, செப்டம்பரில் பீஜப்பூரும் வீழ்ச்சியடைந்தது. மொகலாயப் பேரரசு, குதுப் ஷா சுல்தானகத்துடன் இறுதி தீர்மானங்கள் எடுக்க அது வழிவகுத்தது.
5. கோல்கொண்டா மீதான ஒளரங்கஜீபின் முற்றுகை, 1687.
1687, பிப் 28-ல் பேரரசர் கோல்கொண்டாவுக்கு இரண்டு மைல் தொலைவு வரை வந்துவிட்டார். இதனிடையில் தலைநகர் ஹைதராபாதில் இருந்து தப்பி ஓடி சுல்தான் அபுல் ஹசன் இந்தக் கோல் கொண்டா கோட்டைக்குள் அடைக்கலம் தேடியிருந்தார். அப்படியாக ஹைதராபாத் மூன்றாவது முறையாக மொகலாயர்களின் பிடிக்கு வந்தது.
முசுகுந்த நதி (முசி நதி) மீதான கல் பாலத்துக்கு இரண்டு மைல் மேற்கே கோல்கொண்டா கோட்டை அமைந்திருக்கிறது. அந்த நதி ஹைதராபாத்தை இரு பாகங்களாகப் பிரிக்கிறது. அந்தக் கோட்டை ஒழுங்கற்ற சாய் சதுரம் போலிருக்கும். வட கிழக்குப் பகுதியில் ஐந்துமுனை கொண்ட புதிய கோட்டை ஒன்றும் கட்டப்பட்டிருந்தது. நான்கு மைல் நீளமும் மிகுந்த தடிமனும் கொண்ட கருங்கல் சுவர் சுற்றிலும் அமைந்திருந்தது. சுமார் ஐம்பதிலிருந்து அறுபது அடி உயரம் கொண்ட 87 அரைவட்டக் கொத்தளங்கள் இன்னொரு அடுக்கு பாதுகாப்பு அரணாக இருந்தன. வலுவான கருங்கல் பாளங்கள் (அவற்றில் சில ஒரு டன் எடை கொண்டவை) கொண்டு அவை கட்டப்பட்டிருந்தன.
17ம் நூற்றாண்டில் இருந்த பீரங்கிகளால் துளைக்கமுடியாத அளவுக்கு வலிமையான எட்டு கோட்டை வாசல்கள் / கதவுகள் இருந்தன. இதற்கு வெளியே ஐம்பது அடி அகலம் கொண்ட ஆழமான அகழி இருந்தது. அவற்றுக்கும் கருங்கல் சுவர்களே இருந்தன. உண்மையில் கோல்கொண்டா கோட்டை, நான்கு தனித்தனி கோட்டைகள் ஒன்றுக்கொன்று இணைப்பு பெற்றவையாக ஒரே வட்டப் பாதையில் அமைந்திருந்த்து. வெளி விளிம்பில் இருக்கும் கோட்டைதான் உயரம் குறைவானது. ஃபதே தர்வாஜா (ஃபதே வாசல்) வழியாக இதனுள் நுழையமுடியும். இது தென் கிழக்கு மூலையில் இருக்கிறது. இஸ்லாமிய, இந்து மேட்டுக்குடியினர், சந்தைப் பகுதி, கோவில்கள், மசூதிகள், படைவீரர்களின் தடுப்பரண்கள், வெடிமருந்துக் கிடங்குகள், லாயங்கள், சில இடங்களில் வயல்களும் இந்தக் கோட்டைக்குள் இருந்தன. நெருக்கடி ஏற்படும் நேரங்களில் ஹைதராபாத்வாசிகள் அனைவருமே இங்கு அடைக்கலம் தேடி வந்துவிடுவார்கள்.
ஃபதே தர்வாஜாவிலிருந்து 1250 அடி நீண்டு செல்லும் பிரதான அகலமான சாலை வழியே வலப்பக்கம் இருக்கும் அரண்மனைகள், அந்தப்புரங்கள், அரசவைகள் இவற்றைக் கடந்து சென்றால் பாலா ஹிஸார் கோட்டை வாசலுக்குச் சென்று சேரும். அங்கிருந்து படி ஏறிச் சென்றால் மூன்று அடுக்கு ஆயுதத் தளவாட மையம், துப்பாக்கிகள், பீரங்கிகள், லாயங்கள், மசூதிகள், அனுமன் கோவில், மக்களைச் சந்திக்கும் அரங்கங்கள், கலை அரங்கங்கள், அந்தப்புரங்கள், தோட்டங்கள், படிகள் கொண்ட பெரிய கிணறுகள், இரண்டு சிறைச்சாலைகள் எல்லாம் அமைந்திருந்தன.
மேற்குப் பக்கமாக கடினமான பாறையில் 200 படிகள் செதுக்கப்பட்டு கோட்டையின் உச்சிப் பகுதியான பாலா ஹிசூர் வரை செல்லமுடியும். அங்கிருக்கும் கருங்கல் சமதளத்திலிருந்து இங்குமங்குமாக கொத்தள பாதைகள் நீண்டு செல்கின்றன. இந்தப் பகுதி கோட்டைக்குள் ஒரு கோட்டைபோலிருக்கும். ஒட்டுமொத்தக் கோட்டையின் மையப்பகுதி இது. கோட்டையின் வட கிழக்கு மூலையில் ஒரு பெரிய குன்று காணப்படுகிறது. ஆனால் அதைச் சுற்றிலும் சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. ஒளரங்கஜீப் 1656-ல் முதல் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து அங்கு தற்காப்புக்காக ஒரு புதிய கோட்டையும் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.
இந்த இறுதிப் பகுதிக்கு வடக்கு, தெற்கு மற்றும் மேற்கில் பெரிய குளங்கள் அமைந்திருக்கின்றன. இதனால் கோட்டைக்குள் இருப்பவர்களுக்குத் தண்ணீர் பிரச்னையே வர வாய்ப்பு இல்லை. கோட்டைக்கு வடக்கே ஒன்றே கால் மைல் தொலைவில் ஒரு மலைத் தொடர் அமைந்துள்ளது. ஷோலாப்பூர் மற்றும் மேற்குப் பக்கம் இருந்து வரும் பழைய பிரதான சாலை ஒன்று இதன் வழியாகச் செல்கிறது. இறுதி முற்றுகையின்போது ஒளரங்கஜீப் இங்கு தனக்கென ஒரு வசிப்பிடம் உருவாக்கிக் கொண்டார்.
மொகலாயர்களின் தாக்குதல் முதலில் கோட்டையின் தென்கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நடைபெற்றது.முசுகுந்த நதியின் வட தென் கரைகளினூடாக படை முன்னேறிச் சென்றது. வட மேற்கு கோட்டை வாசலானது பீரங்கியால் தாக்கப்பட்டது. ஆனால், எதிரிகளைத் திசைதிருப்பச் செய்த தந்திரம் மட்டுமே.
கோல்கொண்டாவுக்கு மிக அருகில் வந்து சேர்ந்ததும் கோட்டையைச் சுற்றிலும் அமைந்திருக்கும் நீர் வற்றிய அகழிக்கு அருகில் இருந்த எதிரிப் படைகளை விரட்டியடிக்கும்படி உத்தரவிட்டார். காற்று வேகமாக வீசியதும் குப்பைகள் பறப்பதுபோல் மொகலாயப் படை ஒருமுறை முன்னேறிச் சென்று தாக்கியதுமே எதிரிப் படை சிட்டாகப் பறந்துவிட்டது. எதிரிகளின் உடமைகள், பெண்கள், சிறுவர்கள் அனைவரும் கைப்பற்றப்பட்டனர். முதல் நிஜாமின் தாத்தா க்வாலிச் கான் புகலிடம் தேடி ஓடுபவர்களுடன் சேர்ந்து தட்டுத் தடுமாறி முன்னேறிச் சென்று கோட்டையை ஒரே தாக்குதலில் கைப்பற்ற முயற்சி செய்தார். கோட்டை மேலிருந்து பாய்ந்து வந்த ஜம்பூரக் துப்பாக்கி குண்டு துளைத்து கீழே விழுந்தார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சைகள் தந்தும் மூன்று நாள் கழித்து இறந்துவிட்டார். 7 பிப்ரவரி வாக்கில் முறையான முற்றுகை ஆரம்பமானது.
6. ஷா ஆலம் கைதுசெய்யப்படுதல்
எடுத்த எடுப்பில் பேரரசரின் படைகள் தமக்குள் இருந்த போட்டி பொறாமைகளினால் முடக்கப்பட்டது. இளவரசர் ஷா ஆலம் சுக போகங்களில் அதிக ஈடுபாடுகொண்டவர். கடினமான வேலைகள், போர் சாகசன்கள் இவற்றில் அவருக்கு ஆர்வம் கிடையாது. அபுல் ஹசன் போன்ற சக சுல்தான் வீழ்ச்சியடைவதை அவர் விரும்பவும் இல்லை. இந்தப் பரந்த மனதுடன் வேறொரு என்ணமும் கலந்துகொண்டது: அமைதிப் பேச்சுவார்த்தைகள் மூலம் அபுல் ஹஸனை வழிக்குக் கொண்டுவர முடிந்தால் கோல்கொண்டா கோட்டையைக் கைப்பற்றிய வீரன் என்ற பெருமை தனக்குக் கிடைக்குமே என்று ஷா ஆலம் திட்டம் தீட்டினார்.
அபுல் ஹஸனின் பிரதிநிதிகள் ஏராளமான பரிசுப் பொருட்களுடன் ஷா ஆலமை ரகசியமாகச் சந்தித்தனர். பேரரசரிடம் பேசி கோல்கொண்டா சுல்தானகத்தின் வீழ்ச்சியையும் குதுப் ஷா வம்சத்தின் வீழ்ச்சியையும் தடுக்கும்படி மன்றாடினார்கள். இளவரசர் ஷா ஆலமும் அவர்களுக்கு நிறைய நம்பிக்கை வார்த்தைகள் சொல்லி அனுப்பினார். பேரரசர் எந்த நிலையிலும் மன்னிக்கத் தயாராக இல்லாத எதிரியுடன் அவருக்குத் தெரியாமல் இப்படியான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது மிகவும் அபாயகரமான விஷயமே. இளவரசர் ஷா ஆலமை வீழ்த்துவதற்கு அவருடைய முகாமிலேயே பலர் காத்துக் கொண்டிருந்தனர். அவருடைய சகோதரரும் போட்டியாளருமான முஹம்மது ஆஸம் ஷாவின் ஆதரவாளர்கள், ஷா ஆலமுக்கும் அபுல் ஹசணுக்கும் இடையிலான இந்த ரகசியப் பேச்சுவார்த்தைகளை பேரரசரின் காதுக்குக் கொண்டுசென்றுவிட்டனர்.
இதனிடையில் எதிரிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற போர்வையில் ஷா ஆலம் தனது மனைவியர் மற்றும் அந்தப்புரத்தை தனது முகாமுக்கு அருகில் கொண்டுவந்தார். ஷா ஆலம் தன் குடும்பத்துடன் அபுல் ஹஸன் பக்கம் தப்பி ஓடத் திட்டமிட்டிருக்கிறார் போலிருக்கிறது என்று இது ஒளரங்கஜீபுக்கு மேலும் பலத்த சந்தேகத்தைத் தந்தது. இளவரசர் ஷா ஆலம் கோட்டைக்குள் இருந்த அபுல் ஹஸனுக்கு அனுப்பிய சில கடிதங்களை ஒரு இரவில் ஃபிரூஸ் ஜங் கைப்பற்றி பேரரசரிடம் கொடுத்ததைத் தொடர்ந்து அனைத்து சநதேகங்களுக்கும் தெளிவான விடை கிடைத்துவிட்டது.
ஒளரங்கஜீப் விரைந்து செயல்பட்டார். இளவரசரின் முகாமைச் சுற்றிலும் படைவீரர்கள் நிறுத்தப்பட்டனர். மறுநாள் காலையில் (21, பிப்) ஒளரங்கஜீப் தன்னுடன் ஆலோசனைக்கு வரும்படி இளவரசரை நான்கு மகன்களுடன் வரும்படி அழைத்தார். சிறிது நேரம் இளவரசருடன் பேசிய நிலையில், அவர்களை அருகில் இருந்த அறைக்குச் செல்லும்படி வாஸிர் ஒருவர் வந்து சொன்னார். அங்கு அமைதியாக அவருக்கு அருகில் சென்று, ’நீங்கள் கைது செய்யப்பட்டிருக்கிறீர்கள்; ஆயுதங்களை ஒப்படைத்துவிடுங்கள்’ என்று பணிவுடன் சொன்னார். இளவரசரின் ஒட்டுமொத்தக் குடும்பமும் அப்படியாகச் சிறைவைக்கப்பட்டது. அவருடைய உடமைகள் கைப்பற்றப்பட்டன. அவருக்குக் கீழ் இருந்த படைகளைப் பிரித்து வெவ்வேறு தளபதிகளிடம் ஒப்படைத்தனர். இளவரசரின் ரகசிய திட்டங்களைப் பற்றிச் சொல்லும்படி அவருடைய அந்தரங்கப் பணியாளர்களான அலிகள் சித்ரவதை செய்யப்பட்டனர். இளவரசர் எந்த அளவுக்கு அப்பாவி வேடம் போட்டாரோ அந்த அளவுக்கு பேரரசரின் கோபம் அதிகரித்தது.
இளவரசர் முடிவெட்டவோ, நகம் வெட்டவோ அனுமதி மறுத்தார். நல்ல உணவு, குளிர்விக்கும் பானங்கள் அல்லது அவருடைய ராஜ உடை என எதுவுமே தராமல் தண்டித்தார். சுமார் ஏழு ஆண்டுகள் இந்த தண்டனையை இளவரசர் அனுபவிக்க நேர்ந்தது. ‘யா அல்லா… நாற்பது ஆண்டுகளில் நான் எந்த சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பினேனோ அதை நானே தரைமட்டமாக்கிவிட்டேனே’ என்று இளவரசரை சிறையிலடைக்கும் உத்தரவு பிறப்பித்ததும் வேகமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்று தன் மனைவி ஒளரங்கபாதி மஹால் முன்னால் சென்று தன்னைத்தானே அடித்துக்கொண்டு அரற்றினார்.
7. கோல்கொண்டா முற்றுகையில் ஒளரங்கஜீபுக்கு ஏற்பட்ட சிக்கல்கள்
முற்றுகை முகாமில் இளவரசர் ஷா ஆலம் மட்டுமே மாறுபட்ட கருத்தைக் கொண்டவராக இருந்திருக்கவில்லை. இந்தியாவிலிருந்த கடைசி ஷியா சுல்தானகமான குதுப் ஷா சுல்தானகத்தை அழிவுக்குத் தள்ளுவதை மொகலாயப் படையில் இருந்த ஷியாக்கள் மனப்பூர்வமாக வெறுத்தனர். அதோடு பல பழமைவாத சன்னி முஸ்லிம்களுமே ‘இஸ்லாமியர்களுக்கு இடையிலான இந்தப் போரையும்’ அபுல் ஹஸன் ஆட்சியை அழிக்கும் நடவடிக்கையையும் துளியும் விரும்பியிருக்கவில்லை. இதை மார்க்க விரோதமான செயலாகவே பார்த்தனர். நேர்மையும் மார்க்கப் பற்றும் மிகுந்த தலைமை நீதிபதி ஷேக் உல் இஸ்லாம், ஒளரங்கஜீபை நேரில் சந்தித்து தக்காண சுல்தானகங்கள் மீது படையெடுக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அவருடைய கோரிக்கை நிறைவேறாமல் போகவே தனது உயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மெக்காவுக்குச் சென்றுவிட்டார். அவரை அடுத்து அந்தப் பதவிக்கு வந்த க்வாஸி அப்துல்லாவும் இதுபோலவே ஆலோசனை சொல்லவே அவரையும் அங்கிருந்து மூட்டை கட்டி அனுப்பிவிட்டார் பேரரசர்.
ஷியாக்களின் அதிருப்தி பேரரசரின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்தன. ஆரம்பத்தில் ஃபிரூஸ் ஜங் மட்டுமே உயர் பதவியில் இருந்தவர்களில் இந்த முற்றுகை தொடர்பான அதிருப்தியில் இருந்தார். பீரங்கிப் படை தளபதி சாஃப் ஷிகான் கான் ஒரு பாரசீக இஸ்லாமியர். துருக்கியரான ஃபிரூஸ் ஜங்குக்கு உயர் பதவியும் கூடுதல் சலுகைகளும் தரப்படுவது தொடர்பான அதிருப்தியில் இருந்தார். சிறிது காலம் தீவிரமாகப் போரில் ஈடுபட்டவர் ஃபிரூஸ் ஜங்கைப் பலவீனப்படுத்தும் நோக்கில் பதவி விலகிவிட்டார். அவரையடுத்து சலாபத் கான் தளபதியானார். ஆனால், அவரால் திறம்படப் படையை நிர்வகிக்க முடியவில்லை. எனவே அவரும் சீக்கிரமே பதவி விலகினார்.
அடுத்ததாக பீரங்கிப் படைக்குத் தளபதியாக கைராத் கான் நியமிக்கப்பட்டார். அவர் மிகவும் மெத்தனமாக இருந்த நேரத்தில் எதிரிகள் முன்னேறி வந்து தாக்குதல் நடத்தியதோடு அவரையும் சிறைப்பிடித்துவிட்டனர். சிறிது காலம் அந்தப் பதவிக்கு வேறு யாரும் நியமிக்கப்படாமல் போகவே முற்றுகை நடவடிக்கைகள் முடங்கின. இறுதியாக சிறையில் இருந்த தளபதி மீட்கப்பட்டார். சாஃப் ஷிகான் 22, ஜூன் 1687-ல் மீண்டும் பீரங்கிப் படையின் பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.
ஆனால் ஐந்து மாத காலம் கஷ்டப்பட்டு அமைக்கப்பட்ட பதுங்குகுழிகள் மற்றும் தாக்குதல் அரண்கள் எல்லாம் எதிரிகளால் தகர்க்கப்பட்டன. மீண்டும் புதிதாக அனைத்தையும் செய்யவேண்டியிருந்தது. 7, பிப்ரவரியில் முற்றுகை ஆரம்பித்திருந்தது. கோட்டைக்குள் வெடி மருந்துகள் ஏராளம் கைவசம் இருந்தன. மொகலாய பீரங்கிகளால் அதன் கோட்டைச் சுவர்களை எளிதில் தகர்க்கமுடியவில்லை. கோட்டையை நெருங்கும் மொகலாயப் படையினரை கொத்தளங்களில் இருந்த கோட்டைக் காவல் படையினர் இடைவிடாமல் சுட்டு வீழ்த்தினர். தினமும் சிலர் மொகலாயப் படையில் கொல்லப்பட்டனர். அல்லது படுகாயம் அடைந்தனர். ஆனால் மொகலாயப் படைகளின் விடா முயற்சி, எந்த நிலையிலும் தளராமல் போரிடும் வீரம் இவற்றினால் சாஃப் ஷிகான் தன் படையை கோட்டை அகழிக்கு வெகு அருகில் ஆறு வாரங்களில் முன்னேற்றிக் கொண்டு சென்றார். அகழியை நிரப்பி படையை முன்னேற்றிக் கொண்டுசெல்லவேண்டியதுதான் அடுத்த நடவடிக்கை.
கோட்டையைத் தகர்க்கவும் ஊடுருவவும் இப்படியான நடவடிக்கைகள் மெதுவாக நடந்துகொண்டிருந்த நிலையில் தலைமைத் தளபதி ஃபிரூஸ் ஜங் 16 மே வாக்கில் கோட்டை மேலேறிச் சென்று தாக்குதல் நடத்தத் திட்டமிட்டார். இரவு 9 மணி வாக்கில் தன் முகாமிலிருந்து புறப்பட்டவர் எதிரிகள் அசந்து தூங்கிக் கொண்டிருந்த பகுதி வழியாக கோட்டை மேல் ஏணியை வைத்து தன் வீரர்கள் இருவரை மேலேறச் செய்தார். அவர் எடுத்துச் சென்றிருந்த வேறு இரண்டு ஏணிகள் உயரம் குறைவாக இருந்தன. எனவே கயிறு ஏணியை வீசினார். கோட்டை மதில் மேல் அப்போது ஒரு தெரு நாய் அகழியில் கிடக்கும் பிணங்களைத் தின்ன வழி தேடி அலைந்துகொண்டிருந்தது. அந்நியர்களின் வருகையைக் கண்டதும் உரத்த குரலில் குரைக்க ஆரம்பித்துவிட்டது. அது கோல்கொண்டா கோட்டைக் காவலர்களை எழுப்பிவிடவே மொகலாயர்களை விரட்டியடித்தனர்.
மொகலாயர்களைப் பொறுத்தவரையில் நாய்கள் மிகவும் அருவருப்பானவை. ஆனால் இந்த நாய் குதுப் ஷா வம்சத்தின் தலைநகரைக் காப்பாற்றியிருக்கிறது. எனவே அபுல் ஹசன் நவரத்னங்கள் பதித்த தங்கச் சங்கிலியை அணிவித்து தங்க மேலாடையும் அந்த ஹிஜாதி நாய்க்கு அணிவித்து கெளரவித்தார்! அதோடு நில்லாமல் சேஹ்தபா – மூன்று தங்கப்பதக்கங்கள் – என்ற பட்டமும் கொடுத்தார். அது உண்மையில் மொகலாயத் தளபதி ஃபிரூஸ் ஜங்குக்கு தரப்பட்டிருந்த கான், பஹதூர், ஜங் ஆகிய மூன்று பட்டங்களைக் கிண்டலடிக்கும் வகையில் செய்தார். இந்த நாய் (ஃபிரூஸ் ஜங் செய்ததைக் காட்டிலும்) மிகப் பெரிய சாதனை செய்திருக்கிறது என்று கிண்டலாகக் குத்திக்காட்டவும் செய்தார்.
இந்த திடீர் தாக்குதலினால் சுதாரித்த கோட்டைக் காவல் படையினர் மொகலாயப் படையினரை கடுமையாகத் தாக்கி பீரங்கிப் படையினரைக் கொன்று குவித்தனர். பீரங்கிப் படையில் ஏற்பட்ட இப்படியான பின்னடைவுகளினால் முற்றுகை சிறிது காலம் முடக்கப்பட்டது. கோட்டைச் சுவரை இதுவரையிலும் தகர்க்க முடிந்திருக்கவில்லை. அகழியை மூடிக்கடக்கவும் முடிந்திருக்கவில்லை. இதோடு உணவுப் பற்றாக்குறையும் மொகலாயப் படையைத் தாக்கத் தொடங்கியது. மொகலாயப்படையினருக்கு வந்துகொண்டிருந்த உணவு மற்றும் பிற பொருட்களை மராட்டிய மற்றும் தக்காணப் படையினர் வழியிலேயே தடுத்துவிட்டனர்.
ஜூன் மாத வாக்கில் பெரு மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. நதிகளைக் கடப்பது கடினமானது. சாலைகள் சேறும் சகதியுமாக படைகளை நகர்த்த முடியாததாக ஆனது. உணவு தானியங்கள் எதுவுமே மொகலாய முகாமுக்கு வந்துசேரமுடியவில்லை. ஜூன் நடுப்பகுதி வாக்கில் ஆரம்பித்த மழையினால் முற்றுகை ஏற்பாடுகள், நடவடிக்கைகள் அனைத்தும் அனைத்தும் வீணாகின. பீரங்கிகளுக்கு அமைத்த உயரமான மண் மேடுகள் எல்லாம் மழையில் கரைந்து சேற்றுக் குவியலாகின. பதுங்குகுழிகள் நீரால் நிரம்பின. தாக்குதல் அரண்கள் நொறுங்கி விழுந்து பாதையை மறித்தன. கோட்டையைச் சுற்றிலும் எங்கும் மழைநீர் நிரம்பியிருக்க முற்றுகைப் படையின் முகாம்கள் எல்லாம் நீரில் மிதக்கும் குமிழிகள் போல் காட்சியளித்தன.
(தொடரும்)
படம்: மாதண்ணா
___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின் தமிழாக்கம்.