8. மொகலாயர்களின் பெரும் இழப்புகள்
கோல்கொண்டா படையினர் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டனர். 15 ஜூன் இரவில் நல்ல மழைபெய்துகொண்டிருந்தபோது, புயல்போல் மொகலாயப் படை மீது தாக்குதல் நடத்தினர். அகழிகள், பதுங்குகுழிகளைத் தாண்டிச் சென்று அலட்சியமாக இருந்த பீரங்கிப் படையினரை வெட்டி வீழ்த்தினர். பீரங்கி, துப்பாக்கிகளின் துவாரங்களில் இரும்பு ஆணிகளை அடித்து மூடினர். வெடி மருந்து, ஆயுதக் கிடங்குகளை அழித்தனர். படைத்தளபதிகள் மீது தாக்குதல் நடத்தி கைராத் கான் (பீரங்கி படை தளபதி), சர்பரா கான் (ஒளரங்கஜீபின் வயதான, விசுவாசமான சேவகர்) மற்றும் 12 உயர் நிலை வீரர்களைக் கைது செய்தனர். புதிய படைகள் வந்து உதவிய பின்னர் மூன்று நாள் தீவிரப் போருக்குப் பின்னரே எதிரிப் படைகளை விரட்டியடிக்க முடிந்தது. முடக்கப்பட்ட பீரங்கிகளைக் கைப்பற்றிக்கொள்ள மொகலாயர்களால் முடிந்தது.
கைது செய்யப்பட்ட மொகலாய வீரர்களை அபுல் ஹஸன் அன்பாக நடத்தினார். ஏராளமான பரிசுகள் கொடுத்து ஒளரங்கஜீபிடம் அவர்களை நல்லபடியாகத் திருப்பி அனுப்பினார். இந்தப் பின்னடைவை மாற்றியமைக்கவும் முற்றுகையை வெற்றிபெறச் செய்யவும் கடினமான முயற்சிகளை மொகலாயப் படை எடுத்தது.
மூன்று பெரிய வெடிகுண்டுகள் பதுங்குகுழிகளில் இருந்து கோல்கொண்டா கோட்டையின் கொத்தளத்தின் கீழ்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டுப் பொருத்தப்பட்டன. 19 ஜூன் வாக்கில் ஒவ்வொரு இடத்திலும் 500 மவுண்ட் வெடி மருந்துகளும் திரியும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
மறு நாள் வெடிக்க வைத்துத் தாக்குதலை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டது. ஃபிரூஸ் ஜங்கின் பதுங்குகுழி ஏற்பாடுகளை பேரரசர் தாமே நேரில் சென்று பார்வையிட்டார். உத்தரவு கிடைத்ததும் மொகலாயப் படையினர் கூக்குரலிட்டபடியே கொத்தளத்துக்குக் கீழே பாய்ந்து முன்னேறவேண்டும். எதிரிப் படையினர் அவர்களைத் தடுக்க்க் கொத்தளத்துக்கு விரைந்து வருவார்கள். கீழே பொருத்தப்பட்டிருக்கும் வெடி குண்டுகளை வெடிக்கச் செய்வதன் மூலம் எதிரிகளை எளிதில் கொன்றுவிடலாம் என்பதுதான் திட்டம். ஆனால், மறு நாள் காலையில் மொகலாயப்படை பாய்ந்து சென்றது. எதிரிகள் எதிர்பார்த்தபடியே கொத்தளத்தில் குவிந்தனர். முதல் வெடி குண்டு வெடிக்கவைக்கப்பட்டது. ஆனால் அந்த வெடி குண்டு கொத்தளத்தைத் தகர்ப்பதற்கு பதிலாக மொகலாயப் படையையே தாக்கிவிட்டது. கண் மூடிக் கண் திறக்கும் நேரத்துக்குள் பாறையும் மண்ணும் வெடித்துச் சிதறி 1100 மொகலாயப் படையினர் உடல் சிதறி துடி துடிக்க கொல்லப்பட்டனர். கோட்டை எந்த சேதாரமும் இன்றி கம்பீரமாக அப்படியே நின்று கொண்டிருந்தது.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு கோல்கொண்டா படையினர் பாய்ந்து வந்து தாக்கி மொகலாயர்களை விரட்டி அவர்கள் அமைத்திருந்த பதுங்குகுழிகள், தாக்குதல் அரண்கள் இவவற்றைக் கைப்பற்றினர். நான்கு மாத காலம் கஷ்டப்பட்டு மொகலாயர்கள் உருவாக்கியவை அவை. பேரரசர் அனுப்பிய புதிய படை மிக நீண்ட நேரம் போரிட்டு மிகப் பெரிய இழப்புக்குப் பின்னரே இவற்றை மீட்டெடுத்தன.
இரண்டாவது வெடி குண்டு வெடிக்க வைக்கப்பட்டபோதும் இதே இழப்பே ஏற்பட்டது. வெடி குண்டுச் சிதறல்கள் எல்லாம் மொகலாயப் படையையே தாக்கி அழித்தன. இங்கும் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இம்முறையும் கோல்கொண்டா படையினர் முன்னேறி வந்து தாக்கி மொகலாயப் படை அமைத்திருந்த தற்காப்பு, தாக்குதல் ஏற்பாடுகள் அனைத்தையும் கைப்பற்றினர். இங்கும் மிகத் தீவிரமான போர் மூண்டது. தளபதிகள் ருஸ்தம் கான், தல்பத் ராவ் புந்தேலா ஆகியோரும் ஃப்ரூஸ் ஜங்கும் காயமடைந்தனர். பெருமளவிலான மொகலாயப் படையினர் கொல்லப்பட்டனர்.
இந்த சோக செய்தியைக் கேள்விப்பட்ட ஒளரங்கஜீப் உடனே புறப்பட்டு ஃபிரூஸ் ஜங் மற்றும் அவருடைய படையினருக்கு உதவ விரைந்தார். அவருடைய நகரும் சிம்மாசனத்துக்கு அருகில் பீரங்கி குண்டுகள் வந்து விழுந்தன. அவற்றில் ஒன்று ஒளரங்கஜீபின் மெய்க்காவலர் ஒருவரின் கையைத் துண்டாக்கிவிட்டது. ஆனால், அவரோ துளியும் கலங்காமல் போர்க்களத்தில் நின்றுகொண்டு வீரர்களுக்கு உத்வேகமூட்டினார்.
போர் இப்படி மும்மரமாக நடந்துகொண்டிருந்த நேரத்தில் புயலும் மழையும் இடியும் சேர்ந்துகொண்டன. சூறைக்காற்றும் பேய் மழையும் தொடர்ந்து பெய்தன. காய்ந்து கிடந்த நீர் வழிகளிலெல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எதிரிகளாலும் அல்லாவினாலும் தண்டிக்கப்பட்ட மொகலாயப் படைகள் ஒதுங்கி நின்றன. எதிரிப் படையினர் மூன்றாவது முறையாக முன்னேறி வந்து தாக்கினர். பீரங்கிகள், ஆயுதங்கள் என கைக்குக் கிடைத்தவற்றையெல்லாம் கைப்பற்றிச் சென்றனர். எஞ்சியவற்றை உடைத்துப் போட்டனர். பதுங்கு குழி, பாதுகாப்பு அரண், தாக்குதல் அரண் ஆகியவற்றுக்கு பெரிய மரத்தடிகள், மரப் பலகைகள், மண்மூட்டைகள் என மொகலாயப்படை கொண்டுவந்து கொட்டியிருந்த அனைத்தையும் கண் இமைக்கும் நேரத்தில் கைப்பற்றிச் சென்று கோட்டையில் வெடி குண்டு வெடித்ததால் ஏற்பட்ட ஓட்டைகளையும் பள்ளங்களையும் அடைத்துக்கொண்டுவிட்டனர். இதனிடையில் மழையினால் போர்க்களமே சேற்றுக்குட்டையாகிவிட்டது. மொகலாயர்கள் அஸ்தமன நேரத்தில் தமது முகாமுக்கு தோல்வியுற்றுத் திரும்பினர். ஃபிரூஸ் ஜங்கின் முகாமில் பேரரசர் அன்று இரவு தங்கினார்.
9. தொடரும் மொகலாயத் தோல்விகள் : பஞ்சமும் நோயும்
மறு நாள் 21, ஜூன் காலையில் மூன்றாவது கொத்தளத்தின் கீழ் வைக்கப்பட்ட வெடி குண்டை வெடிக்கவைக்கும்படி உத்தரவிட்டார். என்ன நடக்கிறது என்பதை இம்முறை அவர் நேரில் பார்க்க விரும்பியிருந்தார். அந்த வெடி குண்டு வெடிக்காமலே போய்விட்டது. அங்கு வெடி குண்டு பொருத்தப்பட்டிருப்பதைத் தெரிந்துகொண்ட கோல்கொண்டா படையினர், தண்ணீரைத் திருப்பிவிட்டு அதை மூழ்கடித்துச் செயலிழக்கவைத்துவிட்டிருந்தனர். பேரரசர் ஆச்சரியத்துடன் சோர்ந்துபோய், களை இழந்து முகாமுக்குத் திரும்பினார். பல்வேறு திட்டங்கள் முயற்சி செய்துபார்க்கப்பட்டன. கணக்கற்ற செல்வம் செலவிடப்பட்டது. ஆனால் முற்றுகை நீடித்துக்கொண்டே போனது.
மொகலாயப் படையினரின் தன்னம்பிக்கை முற்றாக வடிந்துவிட்டிருந்தது. உணவுப் பற்றாக்குறை, பஞ்சம் தலைவிரித்து ஆடத்தொடங்கியது. கூடவே கொள்ளை நோயும் சேர்ந்துகொண்டது. ஹைதராபாத் நகரம் முற்றாக நசிந்திருந்தது. வீடுகள், ஆறுகள், சமவெளிகள் என எங்கு பார்த்தாலும் பிணக் குவியல். மொகலாயப் படையிலும் இதே நிலையே நிலவியது. பிணக் குவியல்கள் பெருகிக் கொண்டே சென்றன. சில மாதங்கள் கழித்து மழை நின்ற பின்னர் எங்கு பார்த்தாலும் எலும்புக்கூடுகள். தொலைவில் இருந்து பார்த்தால் பனிக் குன்றுகள் போல் அவை தென்பட்டன.
கோட்டைக்குள் இருப்பவர்களை பட்டினி போட்டு சரணடையவைக்க ஒளரங்கஜீப் முடிவு செய்தார். களிமண் மற்றும் மரத்தடிகள்கொண்டு கோல்கொண்டா கோட்டையைச் சுற்றி ஒரு சுவர் எழுப்பினார். அதன் வழியெங்கும் காவலர்களை நிறுத்தினார். அனுமதிச் சீட்டு இன்றி எதுவும் உள்ளே போகவோ வெளியே வரவோ முடியாதபடித் தடுத்தார். அதே நேரம் கோட்டைக்குள் எந்த உணவுப் பொருளும் கொண்டுசெல்லப்படாமல் தடுக்க ஹைதராபாத்தையும் தன் பேரரசுக்குள் இணைத்துக் கொண்டதாக உத்தரவு பிறப்பித்தார். நீதிபதிகள், வருவாய் சேகரிப்பாளர்கள், பிற பதவிகளுக்கு தன் ஆட்களை நியமித்தார். மசூதிகளில் ஒளரங்கஜீபின் பெயரில் குத்பா வாசிக்க ஏற்பாடுசெய்யப்பட்டது. பொது இடங்களில் ஷரியத் விதிகளுக்கு ஏற்ப விஷயங்கள் நடக்கின்றனவா என்பதை கண்காணிக்க முஹ்தசிப் அதிகாரி நியமிக்கப்பட்டார்.
10. துரோகத்தால் வீழ்ந்த கோல்கொண்டா
21 செப்டம்பர் வாக்கில் முற்றுகை எட்டு மாதங்களைக் கடந்துவிட்டிருந்த நிலையில், துரோகத்தினால் கோல்கொண்டா கோட்டை வீழ்ந்தது. ஆஃப்கனிய படைவீரர் அப்துல்லா பனி சர்தார் கான் என்பவர் பீஜப்பூர் படையில் இருந்து மொகலாயப் படைக்கு மாறியிருந்தார். பின் அங்கிருந்து கோல்கொண்டா படையில் அபுல் ஹஸனிடம் சேர்ந்திருந்தார். இப்போது அவர் கையூட்டு பெற்றுக் கொண்டு தன் இப்போதைய மாலிக்கை காட்டிக்கொடுத்தார். கோட்டையின் பின் வாசல் கதவை ரகசியமாகத் திறந்துவைத்தார். மொகலாயப் படை ருஸ்தம் கான் தலைமையில் எந்தவித எதிர்ப்பும் இன்றி 21, செப், 1687 அதிகாலை மூன்று மணி வாக்கில் கோட்டைக்குள் நுழைந்தது. சில வீரர்களை உள்ளே முக்கிய இடங்களில் நிறுத்திவிட்டு பிரதான கோட்டை வாசலைத் திறந்துவிட்டனர். மொகலாயப் படை வெள்ளம்போல் கோல்கொண்டா கோட்டைக்குள் நுழைந்தது. நதி வழியாக இளவரசர் ஆஸமின் படை கோட்டைச் சுவரின் அருகே வந்து உள்ளே சென்றது.
இந்த நேரத்தில் அது தீவிரமான சாகசம் ஒன்று நிகழ்த்தப்பட்டது. கோல்கொண்டா படைகளுக்கு மிகப் பெரிய பெருமையை அது தேடியும் தந்தது. வெற்றிக் கூக்குரலிட்டபடி மொகலாயப் படை கோட்டைக்குள் நுழைந்து அரண்மனையை நோக்கிப் பாய்ந்து முன்னேறியபோது கோல்கொண்டா தரப்பில் ஒற்றை வீரர் குதிரையின் மேல் சேணம் மாட்டவோ போதிய ஆயுதங்கள் எடுத்துக்கொள்ளவோ நேரமின்றி எதிரிப் படைக்குள் புயல் போல் புகுந்து தாக்கினார். அவர் பெயர் அப்துல் ரஸாக் லாரி முஸ்தஃபா கான். கோல்கொண்டா படைகளில் இருந்த அதி விசுவாசமான வீரர்.
ஒளரங்கஜீப் பல்வேறு வழிகளில் கையூட்டு கொடுத்து இவரைத் தன் பக்கம் இழுக்க முயற்சி செய்திருந்தார். மொகலாயப் படையில் ஆறாயிரம் குதிரைப் படையினருக்குத் தளபதியாக ஆக்குவதாக ஆசைகாட்டப்பட்டபோதும் அவர் மசிந்துகொடுத்திருக்கவில்லை. இமான் ஹுசேனுடன் கர்பலாவில் விசுவாசத்துடன் போரிட்டு இறந்த 72 வீரர்களில் ஒருவராக இருப்பேனே அல்லாமல் வெற்றி பெற்ற 22,000 துரோகிகளின் பக்கம் ஒருபோதும் சேரமாட்டேன் என்று சூளுரைத்திருந்தார். தன்னந்தனியாக மொகலாயப் படைக்குள் ஊடுருவி கைக்குக் கிடைத்தவர்களையெல்லாம் வெட்டி வீழ்த்தியபடி முன்னேறினார். ‘உலகமே கைவிட்டுச் சென்றாலும் அபுல் ஹசனுக்காக விசுவாசமாகப் போரிட்டு மடிய நான் ஒருவன் இருக்கிறேன்’ என்று முழங்கியபடியே தாக்கினார்.
அந்தத் தாக்குதலில் உடம்பில் சுமார் 70 இடங்களில் வெட்டுப்பட்டார். ஒரு கண் மோசமாகக் காயமடைந்தார். அவருடைய குதிரையும் படு காயம்பட்டு ரத்தம் ஒழுக துடித்தது. அதன் கடிவாளத்தை இவர் விட்டுவிடவே ஒருவழியாக குதிரை போர்க்களத்தில் இருந்து தப்பித்து, ஒரு தென்னை மரத்தினடியில் இவரை இறங்கிவிட்டு ஓடியது. பேரரசரின் உத்தரவின் பேரில் அங்கிருந்து அவரை மொகலாயப் படையினர் தூக்கிச் சென்று சிகிச்சை கொடுத்துக் காப்பாற்றினர்.
11. பிடிபட்ட அபுல் ஹஸன்
இதனிடையில் மொகலாயப்படை கோட்டைக்குள் வெறிக்கூச்சலிட்டபடி நுழையும் சத்தம் கேட்டதும் அபுல் ஹஸன் அரசவைக்கு விரைந்துவந்து அரியணையில் பெரும் சோகத்துடன் அழையா விருந்தாளிகளை எதிர்நோக்கிக் காத்திருந்தார். ருஸ்தம் கானும் படைவீரர்களும் நுழைந்ததும் அவர்களை அன்புடன் வரவேற்றார். அந்த்த் துயரம் நிறைந்த தருணத்திலும் ராஜ கம்பீரத்துடன் நடந்துகொண்டார். தன்னைச் சிறைப்பிடிக்க வந்தவர்களுடன் காலை உணவை முடித்துக்கொண்டு அவர்களுடன் அரண்மனையில் இருந்து புறப்பட்டார். மாலையில் இளவரசர் ஆஸம் அவரை பேரரசரின் முன்னால் கொண்டுசென்று நிறுத்தினார். அதன் பின் அபுல் ஹஸன் தெளலதாபாதுக்கு அனுப்பி சிறைவைக்கப்பட்டார். ஆண்டுக்கு ஓய்வூதியமாக ரூ 50,000 தரப்பட்டது.
அரியணை விட்டு இறங்கியது, பரம விரோதியால் சிறைப்பிடிக்கப்பட்டது போன்ற தருணங்களில் அபுல் ஹஸன் காட்டிய சுய கட்டுப்பாடும் கண்ணியமும் சிறைப்பிடித்தவர்களைப் பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதை அவர்கள் அவர் முன்பாகப் புகழ்ந்துரைத்தபோது ‘நான் சுல்தான் வம்சத்தில் பிறந்தவன் என்றாலும் மார்க்க வழியில் எளிய வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டிருந்தேன். இன்பம், துன்பம் இரண்டையும் அல்லா தரும் பரிசாக ஒரே மாதிரியாக எடுத்துக்கொள்ளக் கற்றுக்கொண்டிருக்கிறேன். அவரே என்னை ஏழ்மைக்குப் பழக்கினார்; சுல்தானாக்கி அழகுபார்த்தார். இப்போது ஏழ்மையில் தள்ளியிருக்கிறார். அல்லா தன் அடிமைகள் மீதான கருணையை ஒருபோதும் விலக்கிக் கொள்வதுல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவருக்குக் கிடைக்கவேண்டியவற்றை எப்போதும் தந்துவிடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு’ என்றார்.
கோல்கொண்டா கோட்டையில் இருந்து சுமார் ஏழு கோடி ரூபாய் மொகலாயப் பேரரசுக்குக் கிடைத்தது. அதோடு, தங்கம், வெள்ளித் தட்டு, நகைகள் என பெருமளவுக்குக் கிடைத்தன. கோல்கொண்டா சுல்தானகத்தின் ஆண்டு வருமானமாக இரண்டு கோடியே 87 லட்சம் ரூபாய் கிடைத்துக்கொண்டிருந்தது.
(தொடரும்)
படம்: அபுல் ஹஸன் குதுப் ஷா
___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின் தமிழாக்கம்.