1. வாரிசு உரிமை குழப்பம்; சம்பாஜி தானே முடிசூட்டிக் கொள்ளுதல்
சிவாஜியின் மரணம் புதிதாக உருவான மராட்டிய சாம்ராஜ்ஜியத்தில் வாரிசுப் போட்டியையும் குழப்பங்களையும் உருவாக்கியிருந்தது. எதிர்காலம் நிச்சயமற்றதாகியிருந்தது. மூத்த மகன் சம்பாஜியின் தீயொழுக்க மனநிலை மக்களுக்கு நெருக்கடிகளையே தந்தது. தர்மம் மற்றும் தந்தை நாட்டின் பரம விரோதியான மொகலாயர்கள் பக்கம் அவர் சேர்ந்துகொண்டது நேர்மையாளர்கள் மத்தியில் அவர் மீதான மதிப்பு மரியாதையைக் குறைத்தன. அரசியல் ஞானம் மிகுந்த சிவாஜி தன் கடைசிக் காலத்தில் மகனை நல்வழிப்படுத்த எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணானதைத் தொடர்ந்து பனாலா கோட்டையில் கண்காணிப்பின் கீழ் அவரை வைத்திருக்க முடிவுசெய்திருந்தார். எனவே சிவாஜியின் மரணத்துக்குப் பின் ராய்கர் கோட்டையில் இருந்த அமைச்சர்கள் அன்னாஜி தத்தோவின் தலைமையில் ஒன்று கூடி சிவாஜியின் பத்து வயதான இளைய மகன் ராஜா ராமை மன்னராக்கிவிட்டனர்.
மூத்த மகனே அரசாளவேண்டும் என்ற நியதிக்கு மாறான இந்த நடவடிக்கை தலைநகரில் செல்வாக்குடன் இருந்த ஒரு குழுவினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையாக மட்டுமே இருந்தது. மக்களையும் தலைநகருக்கு வெளியில் இருந்த படையினரையும் கலந்தாலோசித்திருக்கவே இல்லை. எனவே அவர்கள் மத்தியில் இதனால் அதிருப்தி எழுந்தது.
பாலகன் ராஜாராமை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியதால் மராட்டியர்களிடையே பிளவு ஏற்பட்டது. சம்பாஜிக்கு ஆதரவாக ஒரு பிரிவு விரைவிலேயே உருவானது. சிவாஜியின் காலத்தில் உருவாக்கப்பட்டிருந்த படையினருக்கு இந்தப் புதிய மன்னரின் நியமனத்தால், சிவாஜியின் காலத்தில் கிடைத்த செல்வம் எதுவும் கிடைக்காமல் போகவே அவர்கள் சம்பாஜி மகாராஜ் வசம் அதிகாரம் வந்துசேர விரும்பினர். சம்பாஜியும் தனக்கு ஆதரவாளர்கள் தேவை என்ற நிலையில் இருந்ததால் இவர்களுக்கு அதிக வாக்குறுதிகள் கொடுத்தார். ராய்கர் தலைநகரில் நிறுவப்பட்ட ஆட்சி, பிராமண ஆட்சியாக இருந்தது. படைத்தளபதியாக இருந்தவர் (மராத்தா ஜாதியைச் சேர்ந்தவர்) அரண்மனை ராஜகுருவிடமிருந்து உத்தரவுகளைப் பெற்றுச் செயல்பட தயாராக இருக்கவில்லை.
இதனால் சிவாஜி இறந்த ஒரு மாதத்திலேயே பனாலா கோட்டையில் இருந்த சம்பாஜி பக்கம் சேர்வதற்காக வீரர்கள் எல்லாம் சாரை சாரையாகச் செல்ல தொடங்கினர். ராய்கிரில் இருந்த அரசை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சம்பாஜி கேளிக்கை மனநிலை கொண்டவர் என்றாலும் ஆரம்பத்தில் யாரும் எதிர்பாராதவகையில் அவர் சமயோஜிதமாகவும் உத்வேகத்துடனும் செயல்பட்டார். முதலில் அவர் தன்னை பனாலா கோட்டையின் தலைவராக நியமித்துக் கொண்டார். அதன் பின்னர் வடக்கில் தலைநகரில் இருக்கும் அதிகார சக்திகளுடன் மோதுவதற்கு முன்பாக, மராட்டிய சாம்ராஜ்யத்தின் தென் பகுதியையும் தெற்கு கொங்கணி பகுதியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
இதனிடையில் ராஜாராமை ஆட்சி பீடத்தில் 21 ஏப்ரல் வாக்கில் அன்னாஜி தத்தோ நியமித்தார். அதன் பிறகு சம்பாஜி வசம் இருக்கும் கோட்டையை மீட்டு அவரை சிறையில் அடைக்கும் நோக்கத்துடன் பனாலா கோட்டையை நோக்கி பேஸ்வாவை அழைத்துக்கொண்டு படையுடன் புறப்பட்டார்.
சம்பாஜி முன்னெச்சரிக்கையுடன் செய்த விஷயங்கள் அவர்களை மனம் தளரச் செய்தது. அவரைத் தாக்குதவது தொடர்பாகத் தயங்கினர். விரைவிலேயே இரு தரப்புடனும் ரகசியப் பேச்சுகளில் ஈடுபட்ட அமைச்சர்கள் ராணுவத்தால் நெருக்குதலுக்கு ஆளானார்கள். மே மாத இறுதி வாக்கில், அன்னாஜி மற்றும் மோரோ பந்த் இருவரையும் படைத்தளபதி ஹம்பீர் ராவ் மோஹிதே, கைது செய்து பனாலா கோட்டையில் இருந்த சம்பாஜியிடம் கொண்டு சென்றார். அங்கு படைத் தளபதிகள் அனைவரும் ஒன்று கூடினர். சம்பாஜியே தமது அரசர் என்று அறிவித்தனர்.
அன்னாஜி தத்தோ சிறையில் அடைக்கப்பட்டுச் சங்கிலியால் கட்டிப் போடப்பட்டார். பேஷ்வா சரியான நேரத்தில் தன் நிலையை மாற்றிக்கொண்டதால் சம்பாஜி அவரை விட்டு விட்டார். ஆனால் பேஷ்வா மீது முழு நம்பிக்கை வந்திருக்கவில்லை. புதிய மன்னர் தன்னுடைய 20000 வீரர்கள் கொண்ட படையுடன் ராய்கர் நோக்கிப் புறப்பட்டார். 18 ஜூன் வாக்கில் தலைநகரக் கோட்டை கதவுகள் அவருக்காக திறக்கப்பட்டன. சிறுவன் ராஜாராம் பதவியில் இருந்து இறக்கப்பட்டான். இருந்தும் ‘அன்புடன்’ நடத்தப்பட்டான். ஏனென்றால் பின்னால் இருந்து ஆட்டி வைத்தவர்களின் கைப்பாவையாக மட்டுமே அவன் இருந்திருந்தான்.
20 ஜூலை அன்று முதன்முதலாக மராட்டிய அரியணையில் சம்பாஜி அமர்ந்தார். முறையான முடிசூட்டு விழா 16, ஜனவரி, 1681-ல் வெகு விமர்சையாக நடந்தது.
மே மாதம் 18, 1682-ல் அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. மராட்டிய சாம்ராஜ்யத்தின் ஆட்சிப் பொறுப்பை 30 ஆண்டுகள் கழித்து அந்த குழந்தையே ஏற்றுக்கொண்டு இரண்டாம் சிவாஜி எனவும் சாஹு மகராஜ் என்றும் புகழ்பெற்றது.
2. மொகலாயர்களுடன் சம்பாஜி தொடங்கிய போர்கள்
புதிதாகப் பதவியேற்ற மன்னருக்கு அந்நிய படையெடுப்புகளில் இருந்து நீண்ட காலம் விடுதலை கிடைத்திருந்தது. மொகலாயப் படைகள் பெரிதும் பேரரசரின் நேரடி மேற்பார்வையில் ராஜபுத்திரர்களுடன் போரில் ஈடுபட்டிருந்தன.
அக்டோபர் மாத இறுதி வாக்கில் வழக்கம் போல் தசரா கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர் மராட்டிய படைகள் புறப்பட்டிருந்தன. ஒரு குதிரை படை மற்றும் காலாட்படை சூரத் நோக்கி புறப்பட்டது. இரண்டாவது படை பர்கான்பூர் நோக்கி புறப்பட்டது. மூன்றாவது படை அவுரங்காபாதில் முகாமிட்டிருந்த பகதூர் கானின் (கான் இ ஜஹானின்) படையைத் தடுக்கும் நோக்கில் அதைச் சுற்றிலும் வேலி போல் நிறுத்தி வைக்கப்பட்டது.
மராட்டிய படைகள் புறப்பட்டுச் சென்ற செய்தி கிடைத்ததும் இந்த மொகலாயத் தளபதி 25 நவம்பரில் கந்தேஷ் பகுதியை நோக்கி முன்னேறினார். மராட்டிய படை அங்கிருந்து பின்வாங்கியது. ஆனால் இது ஒரு தற்காலிகப் பின்வாங்கல் மட்டுமே.
1681 ஜனவரி வாக்கில் வெளியே சென்ற மராட்டியப் படைகள் ஊர் திரும்பின. இளவரசர் இரண்டாம் அக்பர், ஒளரங்கஜீப்புக்கு எதிராகக் குரல் எழுப்பிய செய்தி கிடைத்ததும் மொகலாயரை எதிர்க்கத் தயாரானார்கள். ஹம்பீர் ராவ் தலைமையில் ஒரு படை தரன்காவ் நோக்கிப் புறப்பட்டது. அங்கிருந்து செல்வங்களைக் கவர்ந்த பின் வட கந்தேஷ் பகுதியில் இருந்த நகரங்களைக் கடந்து மேலும் கிழக்கு நோக்கி முன்னேறியது. பர்ஹான்பூரின் புற நகர் பகுதியான பஹதூர்பூர் மீது தாக்குதல் நடத்தியது (30, ஜன்). இவர்கள் படையெடுத்து வந்த விஷயம் மொகலாயர்களுக்குத் தெரியும் முன்பாகப் பெரும் செல்வத்தைக் கவர்ந்துவிட்டனர்.
கோட்டைக்கு வெளியில் இருந்த 17 புரங்களில் இருந்து இதுபோல் செல்வம் கைப்பற்றப்பட்டன. யாரும் தமது சொத்துகள், பொருட்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லவோ தப்பிக்கவோ துளியும் அவகாசம் இன்றி இந்தத் தாக்குதல் மிகவும் எதிர்பாராத வகையில் திறமையாக நடத்தப்பட்டது. தீ வைக்கப்பட்டு எரிந்த புகை மூலமாகவே தாக்குதல் நடந்திருப்பது கோட்டையில் இருந்தவர்களுக்குத் தெரியவந்தது. ஆனால், அந்தக் கோட்டையின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர் மிகவும் பலவீனமானவர். எனவே கோட்டைக்குள் ஓரிடத்தில் பதுங்கிக்கொண்டுவிட்டார். ஒவ்வொரு புறநகர் பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கில் செல்வம் கவரப்பட்டன.
மூன்று நாட்கள் மராட்டியப் படை இந்தப் பகுதிகளில் மனம் போன போக்கில் தாக்குதல் நடத்தின. எந்தவொரு எதிர்ப்பும் இருந்திருக்கவில்லை. ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பூமிக்குள் புதைத்துவைத்திருந்த செல்வங்களையெல்லாம்கூடக் கைப்பற்றினர். கான் இ ஜஹான் தன் படையுடன் மிக மெதுவாகவே இங்குவந்து சேர்ந்தார். மராட்டியப் படையின் பாதையைத் தவறாக்க் கணித்துவந்தார். எனவே பஹாதுர் கானின் படைகள் வந்து சேர்வதற்குள் மராட்டியப் படை கிடைத்த செல்வத்துடன் தப்பிவிட்டது.
அந்தக் கோட்டையின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த மொகலாயப் பிரதிநிதி சம்பாஜியிடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு அவரது வியூகத்துக்கு ஏற்ப நடந்துகொண்டதாக தக்காணப் பகுதியில் இருந்த முஸ்லிம்கள் குற்றம் சாட்டினர். பர்ஹான்பூர்வாசிகளும் இதுபோலவே ஒளரங்கஜீபிடம் முறையிட்டனர். அங்கிருந்த இஸ்லாமியர்கள் தமது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு கிடைக்காவிட்டால் வெள்ளிக் கிழமை தொழுகைகளை நிறுத்திவிடுவோம் என்று கூட எச்சரித்தனர்.
ஒளரங்காபாதைத் தாக்குவதற்கு இன்னொரு மராட்டியப்படை அஹமது நகர் மற்றும் முங்கி பதான் வழியாக தென் திசையில் வருவதாக கான் இ ஜஹானுக்கு தகவல் கிடைத்தது. அப்போது அவர் நகரிலிருந்து 26 மைல் மேற்கில் பாபுல்காவ் பகுதியில் முகாமிட்டிருந்தார். அதிகாலை மூன்று மணிக்கே தனது குதிரைப்படையுடன் புறப்பட்டு ஒளரங்காபாதுக்கு மதியம் வாக்கில் வந்து சேர்ந்தார். நகரம் பெரும் பீதியில் மூழ்கியிருந்தது. அனைத்து வீடுகளும் தாழிடப்பட்டிருந்தன. ஆண்கள் ஆயுதங்களுடன் நடுங்கியபடி அமர்ந்திருந்தனர். பெண்கள் மூடிய கதவுகளுக்குப் பின்னால் அழுதவண்ணம் இருந்தனர். பஹாதுர் கான் படையுடன் சரியான நேரத்தில் வந்து சேர்ந்த்தால் மராட்டியப் படை போரிடாமல் திரும்பிவிட்டது.
வழக்கம்போல் தசரா கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர் அக், 1681 வாக்கில் மீண்டும் மராட்டியப் படைகள் பல திசைகளிலும் புறப்பட்டன. திலீர் கான் சம்பாஜியின் மனைவி மற்றும் சகோதரி இருவரையும் அஹமது நகர் கோட்டைக்குள் சிறைப்பிடித்து வைத்திருந்ததால், அவர்களை மீட்கும் நோக்கில் அதன் மீதான தாக்குதலுக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கோட்டைக்குள் மாறு வேடமிட்டுப் புகுந்த மராட்டியப் படை வீரர்களைக் கோட்டைத் தலைமைக் காவலர் கண்டுபிடித்துக் கொன்றுவிட்டார். மற்றவர்களைப் போரிட்டுத் துரத்தியும் விட்டனர் (அக்டோபர் இறுதி வாக்கில்).
3. சம்பாஜியிடம் இளவரசர் இரண்டாம் அக்பர் அடைக்கலம் தேடுதல்
ஒளரங்கஜீபுக்கு எதிராகக் கலகம் செய்த அவருடைய மகன் இளவரசர் அக்பர், 9 மே அன்று அவருடையநம்பிக்கைக்குரிய துர்காதாஸ் ரத்தோர் வழிகாட்டுதலின் பேரில் அக்பர்பூர் கரையோரமாக நர்மதை நதியைக் கடந்து மஹாராஷ்டிரத்துக்குள் நுழைந்தார். மொகலாய எல்லையைக் கடந்து வந்த அவரை சம்பாஜியின் அவையின் உயர் அதிகாரிகள் பலரும் வரவேற்று 1, ஜூன் வாக்கில் அவரை மரியாதையுடன் பாலி பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
இளவரசர் அக்பருடன் 400 குதிரைப் படையினரும் சிறிய அளவில் காலாட்படையினரும் வந்திருந்தனர். பெரும்பாலும் அவர்கள் ராஜபுத்திர வீரர்கள். முஸ்லிம்கள் சொற்பமாகவே இருந்தனர். 50 ஒட்டகங்கள் போக்குவரத்துக்கு உதவியாகக் கொண்டுவரப்பட்டிருந்தன.
முன்னூறு மராட்டிய வீரர்கள் அவருக்கு மெய்க்காவல் படையாக நியமிக்கப்பட்டனர். சம்பாஜியின் சுபேதார்கள் அனைவரும் இளவரசர் அக்பருக்கு மரியாதை செலுத்த வழியில் காத்து நின்றனர். சம்பாஜியின் சார்பில் நேதாஜி பால்கர் இளவரசர் அக்பருடைய தேவைகளைப் பூர்த்தி செய்யத் தனிப்பட்ட முறையில் நியமிக்கப்பட்டிருந்தார்.
4. சம்பாஜிக்கு எதிராக சதி; கவி கலஸுடனான நட்பு
ராய்கர் தலைமையைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து (18, ஜூன், 1680) சம்பாஜி தன்னை எதிர்த்த அன்னாஜி தத்தோ, நீல்காந்த் மோரேஷ்வர் பிங்களே (பேஷ்வா மோரேஷ்வர் த்ரயம்பக்கின் மகன்) உள்ளிட்ட எதிரணித் தலைவர்கள் பலரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தார். அக்டோபர் ஆரம்பத்தில் மோரேஷ்வர் இறந்தார். அவருடைய மகன் நீல்காந்த் மேரேஷ்வரை சம்பாஜி விடுதலை செய்து காலியாக இருந்த முதன்மை அமைச்சர் பதவியை அவருக்குத் தந்தார். பிரதான எதிரி அன்னாஜி தத்தாவையும் விடுதலை செய்து அவருக்கு திவான் பதவியும் தந்தார்.
ஆகஸ்ட் 1681 வாக்கில் சிவாஜியின் இரண்டாம் மனைவி ஸோயரா பாய், ஹீராஜி ஃபர்சாந்த் மற்றும் சில முக்கிய பிரமுகர்களுடன் சேர்ந்துகொண்டு அன்னாஜி தத்தா மீண்டும் சம்பாஜிக்கு எதிராக சதி செய்தார். சம்பாஜியைக் கொன்றுவிட்டு ஆட்சியை இளவரசர் அக்பரின் அரவணைப்பில் ராஜாராமுக்குத் தரத் திட்டமிடப்பட்டிருந்தது. சம்பாஜியின் உணவில் விஷம் வைத்துக் கொல்லத் திட்டமிட்டனர்.
ஆனால், இந்த சதி முறியடிக்கப்பட்டது. சம்பாஜி உடனே துரோகிகளைக் கைது செய்து சிறையிலடைத்து சித்ரவதை செய்ய உத்தரவிட்டார். அன்னாஜி தத்தோ, அவருடைய சகோதரர் சோமாஜி தத்தோ, ஹிராஜி ஃப்ர்சந்த், பாலாஜி அவிஜி பிரபு, மஹாதேவ் அனந்த் மற்றும் மூன்று பேர் என அனைவரும் சங்கிலியால் கட்டப்பட்டு யானையை விட்டு மிதித்துக் கொல்லப்பட்டனர். பின்னர் மேலும் 20 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ராஜாராமின் தாய் ஸோயரா பாய் போஸ்லே தன் கணவருக்கு (சத்ரபதி சிவாஜிக்கு (ஒன்றரை வருடங்களுக்கு முன்) விஷம் கொடுத்துக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு சம்பாஜியால் விஷம் வைத்தோ பட்டினி போடப்பட்டோ கொல்லப்பட்டார். 1681 அக்டோபரில் இது நடந்தது. ஸோயரா பாயின் தந்தையின் குடும்பமும் சம்பாஜியினால் தண்டிக்கப்பட்டது. அந்தக் குடும்பத்தில் பலர் கொல்லப்பட்டனர். எஞ்சியவர்கள் அடைக்கலம் தேடி மொகலாயர் பக்கம் சென்றனர்.
சிவாஜி தனது அவையினரிடம் எந்த அளவுக்கு விசுவாசத்தையும் மரியாதையையும் பெற்றிருந்தாரோ சம்பாஜிக்கு அவருடைய குணங்கள் மற்றும் நடத்தையினால் ஒருபோதும் அது கிடைத்திருக்கவே இல்லை. தன்னை அடுத்த மன்னராக ஆக்கவிடாமல் அத்தனை அமைச்சர்களும் அதிகாரிகளும் எதிராகவே நின்றிருந்தனர் என்பதை அவரால் இறுதிவரை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சொந்த ராஜ்ஜியத்திலேயே நிராதரவாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்ததாக உணர்ந்தார். அவருடைய ஆட்சி காலம் முழுவதுமே பல சதிகள், பலர் விலகிச் செல்வது, சுபேதார்கள் கலகம் செய்வது என எப்போதும் குழப்பமும் கூச்சலும் நிரம்பியதாகவே இருந்தது.
இப்படி நெருக்கடி மிகுந்த சூழலில் அவருக்கு ஒரு ஆத்மார்த்தமான சேவகர் கிடைத்தார். அலஹாபாதில் இருந்த போஸ்லே குடும்பத்தின் குல புரோகிதரான கன்னெளஜி பிராமணர் கவி கலஸ். சம்பாஜியின் மாபெரும் முடி சூட்டுவிழாவுக்கு ராய்கருக்கு அழைக்கப்பட்டிருந்தார். மெள்ள சம்பாஜியின் மனதில் இடம்பிடித்து அவருடைய அன்புக்குப் பாத்திரமானார். ஆட்சி நிர்வாகத்தில் முழு அதிகாரத்தையும் தன் வசம் கொண்டுவந்தார். கவி கலஸ் (கவிகளிலேயே கலசம் போன்று சிறந்தவர்) என்ற பட்டமும் அவருக்குத் தரப்பட்டது. விரைவிலேயே சம்பாஜி இவர் சொல்வதைக் கண்மூடித்தனமாக நம்பிச் செயல்படத் தொடங்கினார். மது, மாது என அந்தப்புரத்திலேயே அதிக நேரத்தைச் செலவிட ஆரம்பித்தார். எப்போதாவது போருக்குச் செல்வது போக ஆட்சி நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
மறைந்து வாழ்ந்த இளவரசர் அக்பர் தன்னிடம் இருந்த செல்வத்துக்கு ஏற்ப ஒரு பாதுஷா வாழ்க்கையை வாழ்ந்துவந்தார். கூலிப் படையினர் அவர் பக்கம் வந்த வண்ணம் இருந்தனர். சுமார் 2000 குதிரைப் படையினர் ஆகஸ்ட் வாக்கில் அவர் பக்கம் வந்திருந்தனர். 13, நவம்பர், 1681-ல் இளவரசர் அக்பரை பதிஷாபூர் (பாலி) வந்து சம்பாஜி தனது முழு படையுடன் சந்தித்தார். அப்போது துர்கா தாஸ் இரண்டாம் அக்பருடன் இருந்தார். மொகலாயப் பேரரசைத் தாக்கிக் கைப்பற்றும் வாய்ப்பு இரண்டாம் அக்பர் இப்போது இழந்துவிட்டிருந்தார். ஜூன்வாக்கில் மொகலாயர்களுக்கும் ராஜபுத்திரர்களுக்குமிடையிலான போர் முடிவுக்கு வந்திருந்தது. இப்போது மொகலாயப் படை இரண்டாம் அக்பரைத் தேடி வந்து வீழ்த்தத் தயாராக இருந்தது.
13 நவம்பரில் ஒளரங்கஜீப் தன் படையுடன் பர்ஹான்பூர் வந்து சேர்ந்தார். அப்படியாக நவம்பர் நடுப்பகுதி வாக்கில் முழு மொகலாயப் படையும் பேரரசர் தலைமையில் தக்காணத்தில் குழுமிவிட்டிருந்தது. அவருடைய மூன்று மகன்களும் அனைத்து படைத்தளபதிகளும் இப்போது தயார் நிலையில் இருந்தனர். முதலில் ஒளரங்கஜீப் தாக்குதலை ஆரம்பிக்காமல் நிதானமாக, என்ன நடக்கிறது என்று பொறுமையுடன் காத்திருக்க முடிவுசெய்தார்.
(தொடரும்)
படம்: சம்பாஜி மஹராஜ்
___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின் தமிழாக்கம்.