5. ஒளரங்கஜீபின் வியூகங்கள், 1682.
1682 ஜனவரி முழுவதும் ஜஞ்சீரா மீதான தீவிர தாக்குதலை தன் நேரடிக் கண்காணிப்பில் சம்பாஜி முன்னெடுத்தார். ஒளரங்கஜீபுக்கு இது சாதகமாக அமைந்தது. சையது ஜசன் அலி கான் 14,000 வீரர்களுடன் ஜூனாரில் இருந்து வழி நெடுக இருந்த மராட்டிய கிராமங்களைச் சூறையாடி எரித்தபடியே வட கொங்கன் பகுதிக்குள் புகுந்து காலியன் பகுதியைக் கைப்பற்றினார் (ஜன, 1682). மேற்கு கடலோரப் பகுதியில் பெய்யும் அதிக மழையில் இருந்து தன் குதிரைப்படையைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து மே வாக்கில் பின்வாங்கிக் கொண்டார்.
22, மார், 1682-ல் ஒளரங்காபாதுக்கு பேரரசர் வந்து சேர்ந்தார். தெற்கில் இருந்த அஹமது நகருக்கு ஆஸம் ஷாவையும் திலீர் கானையும் படையுடன் அனுப்பினார். மேற்கு எல்லையில் இருந்த நாஸிக்குக்கு ஸஹாப் உத்தீன் கான் மற்றும் தல்பத் ராவ் ஆகியோரை படையுடன் அனுப்பினார். தல்பத் ராவ் அங்கு இருந்த சிறிய கோட்டைகளைக் கைப்பற்றினார். அதன் பின் நாஸிக்குக்கு ஏழு மைல் வடக்கில் இருந்த ராம்சேஜ் கோட்டையை முற்றுகையிட்டார் (ஏப்ரல்). ஆனால் அந்தக் கோட்டையை போர் வீரம் மிகுந்த ஒரு கிலாதார் தலைமையிலான தீரமான மராட்டிய காவல் படை பாதுகாத்து நின்றது. மொகலாயப் படையினால் அவர்களை ஒன்றும் செய்யமுடியவில்லை. கான் இ ஜஹான் தலைமையில் மேலும் பெரிய படையை அனுப்பி முற்றுகையை பேரரசர் தீவிரப்படுத்தினார். இரண்டுமுறை மேற்கொண்ட தாக்குதல்களில் மிகப் பெரிய இழப்பு மொகலாயப்படைக்கு நேர்ந்தது.
ஒளரங்கஜீப்புக்கு இந்த சவால் மேலும் உத்வேகத்தைக் கூட்டியது. சம்பாஜிக்கு எதிரான போர் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தினார். ’ஒளரங்கஜீப் தன் கிரீடத்தைக் (தகைப்பாகையைக்) கழற்றி கீழே எறிந்தவர் சம்பாஜி கொல்லப்படவேண்டும். அல்லது அவருடைய ராஜ்ஜியத்தில் இருந்து விரட்டியடிக்கப்படவேண்டும். அப்படி நடக்காதவரையில் இதை அணியமாட்டேன் என்று சபதம் செய்தார்’ என்று கார்வாரில் இருந்த ஆங்கிலேய பிரதிநிதி குறிப்பிட்டிருக்கிறார் (30, ஜூலை, 1682). ரஹுல்லா கானை 23 மே வாக்கிலும் முயிஸ் உத் தீனை 28 செப்டம்பரிலும் அஹமது நகரைப் பாதுகாக்கப் பெரும் படையுடன் அனுப்பினார். இளவரசர் ஆசம் ஷாவை (14 ஜூன்) மராட்டிய படைகளுக்கு உதவியும் ஆதரவும் தராமல் தடுக்க பீஜப்பூருக்கு அனுப்பிவைத்தார். நாஸிக்கிலிருந்து ஸஹாப் உத் தீன் கான் ஜூனாருக்கு (ஜூன்) அனுப்பிவைக்கப்பட்டார். கான் இ ஜஹானின் முக்கிய வீரரான ரன்மஸ்த் கானுக்குப் பதவி உயர்வு கொடுத்து தனியாக ஒரு படையையும் அவருக்குக் கொடுத்து கொங்கன் பகுதியைத் தாக்கச் சொல்லி அனுப்பினார் (செப்).
ராம்சேஜ் பகுதியின் முற்றுகையை மேலும் சில மாதங்கள் கான் இ ஜஹான் முன்னெடுத்தார். மீண்டும் ஒருமுறை தாக்குதல் மேற்கொண்டார். அதன் பின் அக் 1682 வாக்கில் முற்றுகையை விலக்கிக் கொண்டு பின்வாங்கினார்.
கொங்கணி பகுதிக்குள் நுழைந்த ரன்மஸ்த் கான் காலியன் பகுதியை ஆக்கிரமித்தார் (நவ, 1682). பல போர்களில் தீவிரமாகப் போராடிய ரூபாஜி போன்ஸ்லேயும் பேஸ்வாவும் எதிர்த்து நின்றும் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
ஒளரங்காபாதுக்கு 25 மைல் தெற்கே கோதாவரிக் கரையில் அமைந்திருக்கும் ராம்தூ பகுதியில் இளவரசரின் படையுடன் இணைந்துகொண்ட கான் இ ஜஹான் கிழக்கு நோக்கி நந்தர் பகுதியை நோக்கி முன்னேறினார். அதன் பின் தெற்கே 86 மைல் தொலைவில் இருந்த பிதாருக்கு அவர்கள் சென்று சேர்ந்தனர். அங்கிருந்த படையுடன் நீண்ட நேரம் போரிட்டுத் துரத்தியபடி சந்தா மற்றும் கோல்கொண்டா சுல்தானகத்தின் எல்லைக்கு சென்று சேர்ந்தனர். அது உண்மையிலேயே மிகப் பெரிய வெற்றிதான். இந்தப் போரில் அவருடைய படை மிகப் பெரிய அளவில் சிரமங்களை எதிர்கொள்ளவேண்டியும் இருந்தது.
1682 ஜூனில் இளவரசர் ஆசம் ஷா, அஹமது நகரில் இருந்து புறப்பட்டு ஆதில் ஷாவின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியை ஆக்கிரமிக்கப் புறப்பட்டார். வழியில் தாரூர் பகுதியைக் கைப்பற்றினார். அதன் பின் சம்பாஜியின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்கு நுழைந்தார். தனது மனைவி ஜஹான்ஜேப் பானுவை (ஜானி பேகமை) ராவ் அனுராத சிங் ஹடா மற்றும் பிற ராஜபுத்திர வீரர்களின் பாதுகாவலில் விட்டுவிட்டு எதிரியின் பகுதிக்குள் நுழைந்திருந்தார். மராட்டியர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி ஆசமின் படையை அங்கேயே போரிடவைத்துவிட்டு அவருடைய மனைவி பேகம் இருக்கும் முகாமுக்குப் பெரும் படையுடன் விரைந்தது. தாரா ஷுகோவின் மகளான பேகம் யானை மேல் ஏறி மராட்டியப் படையை எதிர்க்க இரண்டு மைல் முன்னேறிச் சென்றார்.
அருகில் பாதுகாப்பாக வந்த அனுராத் சிங்கிடம், ‘ராஜபுத்திரர்களுக்கு வீரமும் கற்பும் எவ்வளவு முக்கியமோ அதுபோலவேதான் சகதாயிகளுக்கும் (மொகலாயர்களுக்கும்) அது முக்கியம். உங்களை என் மகனாகவே மதிக்கிறேன். நமது இந்தச் சிறிய படைக்கு அல்லா வெற்றியைத் தந்தால் நல்லது. இல்லையென்றால், நான் செய்யவேண்டியதைச் செய்துமுடித்துக்கொள்வேன் (மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள தற்கொலை செய்துகொள்வேன்)’ என்றார்.
அதன் பின் வீரத்துடன் போரிட்டார். அனுராத் சிங்கின் படையில் இருந்த 900 ரஜபுத்திரர்கள் வீர மரணம் அடைந்தனர். இறுதியாக அவருடைய படை வெற்றி பெற்றது. அவருக்கு காயம் பட்டது.
நீரா நதிப்பகுதியில் சிறிது காலம் இருந்தபின்னர் ஆசம் ஷா ஜூன் 1683 வாக்கில் திரும்பி அழைத்துக்கொள்ளப்பட்டார்.
6. மொகலாயர்களின் முயற்சிகளின் தோல்வி; பேரரசரின் கவனச் சிதறல்களும் சந்தேகங்களும்
இளவரசர் இரண்டாம் அக்பருக்கு எதிராக இருந்த மொகலாயப் படைகள் எல்லாவற்றையும் மார்ச், 1683-ல் பேரரசர் தன் பக்கம் அணிவகுக்கும்படி அழைத்தார். 23, மார்ச்சில் ரஹுல்லா மற்றும் ரன்மஸ்த் கான் இருவரும் காலியன் பகுதியில் அந்த நகரைச் சுற்றி அவர்கள் கட்டி எழுப்பியிருந்த கோட்டைகளை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டுப் புறப்பட்டனர். அவர்களை ரூபாஜி போன்ஸ்லே தலைமையிலான மராட்டியப் படை காலியன் பகுதிக்கு வட கிழக்கில் ஏழு மைல் தொலைவில் இருந்த தித்வலா பகுதியில் தாக்கியது. பலரைக் கொன்றதோடு ஏராளமான குதிரைகளைக் கவர்ந்து சென்றது.
இப்படியாக தக்காணத்துக்கு நவம்பர் 1681-ல் பேரரசரின் தலைமையில் வந்த மொகலாயப் படை முழு பலத்துடன் இருந்த பின்னரும் ஏப் 1683 வரையிலும் எந்தவொரு குறிப்பிடத்தகுந்த வெற்றியையும் பெற முடியவில்லை. உண்மையில் இந்தக் காலகட்டத்தில் குடும்பக் குழப்பங்கள் மற்றும் தனிப்பட்ட அளவில் உளவியல் நெருக்கடிகளுக்கு ஒளரங்கஜீப் ஆளாகியிருந்தார். தன் குடும்பம் மீதான அவருடைய பாசமும் நம்பிக்கையும் முழுவதுமாகச் சிதைந்திருந்தது. யாரை நம்ப… எங்கு பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதெல்லாம் அவருக்குத் தெரியவே இல்லை. சிறிது காலத்துக்குப் பின் சந்தேகம், கண்காணிப்பு, சுய முரண்கள் கொண்டதாக அவருடைய நடவடிக்கைகள் ஆகின. “ஒளரங்கஜீபின் மனம் எப்போது எப்படி மாறும் என்று சொல்லவே முடியாது. அடிக்கடி சுல்தான் அக்பரினால் மிகவும் மன உளைச்சலுக்கும் எரிச்சலுக்கும் ஆளானார். அக்பருடன் பாசமாக இருக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரில், எந்தவித ஆதாரமும் இல்லாமல், சுல்தான் ஆஸம், பேகம் (ஜஹன்ஜேப் பேகம்), திலீர் கான் ஆகியோரின் அதிகாரங்களும் வெகுவாகக் குறைக்கப்பட்டன’ என்று 2, அக், 1683-ல் சூரத்தில் இருந்த ஆங்கிலேயர் குறிப்பிட்டிருக்கிறார்.
7. மராட்டிய கடற்படையும் சித்திகளுடனான போர்களும், 1680-82.
சம்பாஜிக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே நட்புக்கான வாய்ப்பு எதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், மொகலாயப் படைப்பிரிவுகள் சூரத்திலிருந்து புயல் மழை அதிகம் பெய்யும் மே தொடங்கி அக்டோபர் மாதங்களில் பயணம் செய்யும்போது, பம்பாய் துறைமுகத்தில் ஆண்டுதோறும் அடைக்கலம் தேடுவதுண்டு. சித்தி மக்களின் கப்பல்களும் அந்தப் பக்கமாகப் போகும்போது அடைக்கலம் தேடுவதுண்டு. அதே நேரம் மாஸாகாவ் தீவில் குடியேறியிருந்த சித்திகள் குர்லா பகுதிகளையும் பம்பாய்க்கு கிழக்குப் பக்கம் இருக்கும் செல்வ வளம் மிகுந்த மராட்டியப் பகுதிகளையும் அடிக்கடித் தாக்குவதுண்டு. ஆங்கிலேயர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பாஜி, சித்திகளை பம்பாய் துறைமுகப் பகுதியில் இருந்து விரட்டியடிக்க ஆங்கிலேயர்கள் உதவினால் அவர்களுடன் நட்புறவு பாராட்டத் தயார் என்று சொன்னார். ஆனால், சூரத்தில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் தலைவரும் ஆலோசனைக் குழுவும் பம்பாய் பிரிவுக்கு, ‘சம்பாஜி ராஜாவுடன் நாம் மோதல் போக்கைக் கடைப்பிடிக்க விரும்பவில்லை. அதேநேரம் சித்திக்களுடன் பகைமைபாராட்டுவதிலும் எந்த விவேகமும் இல்லை. இது அதற்கான நேரமே அல்ல’ என்று அறிவுரை வழங்கியது.
மராட்டியக் கலங்கள் அளவிலும் ஆயுதங்களிலும் சித்தி கலங்களைவிட சிறியவையாகவே இருந்தன. மழைக்காலங்களில் நகோத்னா கடலோடைப் பகுதியிலும் கந்தேரி துறைமுகத்திலும் வெறுமனே நிறுத்திவைக்கப்பட்டிருக்கும். எப்போதாவது மராட்டிய கலிவத் பாய் மரக்கலங்களுடன் மோதல் ஏற்படும்போது சித்தி கலங்களே வெற்றி பெறும். மராட்டிய கலங்கள் இந்தப் பகுதி வழியாகப் போக முடியாத நிலையே இருந்தது.
7, டிசம்பர், 1681-ல் பன்வேல் பகுதிக்கு பத்து மைல் தெற்கில் இருந்த பதல்கங்காவின் அப்தா ஊரை சித்தி படை தாக்கியது (1673-ல் ஒருமுறை ஏற்கெனவே தாக்கியிருந்தனர்). இதனால் ஆத்திரமடைந்த சம்பாஜி, இளவரசர் அக்பருடன் சேந்துகொண்டு ராய்கர் பகுதியிலிருந்து சுமார் 20,000 வீரர்கள், ஏராளமான பீரங்கிகளுடன் தண்டா பகுதிக்கு வந்தார் (18 டிச). ஜஞ்சீரா கோட்டைக்கு எதிரில் இருந்த மலை உச்சியில் இருந்து 30 நாட்கள் இடைவிடாமல் குண்டு வீசித் தாக்கினார். ஆனால் வட கொங்கன் பகுதியை மொகலாயப் படை ஊடுருவி காலியன் பகுதியைக் கைப்பற்றியதும் (30 ஜன) இங்கிருந்து பின்வாங்கி ராய்கருக்கு விரைந்து திரும்பினார்.
1682 ஜூலையில் மராட்டியப் படையினர் சில படகுகளில் வந்து ஜஞ்சீரா மீது தாக்குதல் நடத்தினர். ஆனால் பாறைகள் நிறைந்த கடற்கரைப் பகுதியில் கால் ஊன்ற முடியாமல் போனதால் பெரும் இழப்புடன் திரும்பவேண்டிவந்தது. அக், 4 வாக்கில் மராட்டியப் படையில் இருந்த சித்தி மிஸ்ரி என்பவர் 30 கலிவத் பாய்மரக் கலங்களுடன் சித்தி க்வாஸிமின் படையுடன் (16 பெரிய மரக்கலங்கள் கொண்ட படையுடன்) கொலாபா முனைக்கு எட்டு மைல் தெற்கில் கால்காவுக்கு அருகில் மோதினார். ஆனால் விரைவிலேயே தோற்கடிக்கப்பட்டார். அவருடைய படகுப் படையினர் தப்பி ஓடிவிட்டனர். படு காயமடைந்திருந்த சித்தி மிஸ்ரி சிறைப்பிடிக்கப்பட்டார். அவருடைய ஏழு படகுகளுடன் பம்பாய் அழைத்துவரப்பட்டார்.
8. போர்ச்சுகீசியர்களுடனான சம்பாஜியின் போர், 1683.
போர்ச்சுகீசியர்கள் மீது சம்பாஜியின் கோபம் திரும்பியது. கார்வாருக்கு தெற்கே இருக்கும் அஞ்சேடிவாவைக் கைப்பற்றி அங்கு ஒரு கோட்டையை போர்ச்சுகீசியர் கட்டினர். சித்திகளின் கோட்டையான ஜஞ்சீரா பகுதியின் மீது தாக்குதல் நடத்த இந்த இடத்தில் ஒரு வலுவான கடற்தளம் அமைக்க மராட்டிய மன்னர் விரும்பியிருந்தார்.
டிசம்பர் 1682-ல் கோவாவின் வைஸ்ராய் போர்ச்சுகீசியர்களின் தானே கோட்டை இருந்த வழியில் மொகலாயக் கப்பல்களை பயணம் செய்ய அனுமதித்திருந்தார். அந்த பகுதியை தாக்கிக் கொண்டிருந்த ரன்மஸ்த் கான் தலைமையிலான மொகலாயப் படைக்குத் தேவையான வசதிகள் செய்துகொடுத்துமிருந்தார். மராட்டிய வட கொங்கன் பகுதிக்கு போர்ச்சுகீசிய தாமன் வழியாக மொகலாயப்படை செல்ல அனுமதியும் அளித்திருந்தார்.
இப்படியாக, மராட்டியர்களுக்குப் பாரபட்சமாக நடந்துகொண்டதற்காக போர்ச்சுகீசியர் மீது சம்பாஜி கோபம் கொண்டு அவர்களைப் பழிவாங்கத் துடித்தார். 5, ஏப், 1683 வாக்கில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார். தாராபூர் நகரையும் தாமன் தொடங்கி பேஸின் வரையான பிற ஊர்களையும் 1000 குதிரைப்படையினர், 2000 காலாட்படையினர் கொண்ட படையின் மூலம் தாக்கி எரித்தார். 31, ஜூலையில் அவருடைய பேஷ்வா, 6000 காலாட்படை மற்றும் 2000 குதிரைப்படையினருடன் சென்று சாவுல் பகுதியை முற்றுகையிட்டார். 8, ஆகஸ்ட் அதிகாலையில் மராட்டியப் படை தாக்குதல் நடத்தியது. ஆனால் பெரும் இழப்புடன் பின்வாங்க வேண்டிவந்தது. 29 ஆகஸ்ட் நடு இரவில் போர்ச்சுகீசிய வைஸ்ராய் கோவாவைச் சேர்ந்த இந்தியர்கள் பலரை நீர்நிலையைக் கடந்து ஸவந்த்வாதி பகுதிக்குச் சென்று சம்பாஜியின் ஆளுகைக்கு உட்பட்ட கிராமங்களைத் தாக்கிக் கொள்ளையடிக்கவும் எரிக்கவும் அனுப்பினார். இந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டது . ஆனால், சாவுல் பகுதியை மராட்டியர்களால் பல மாத முற்றுகைக்குப் பின்னும் கைப்பற்றமுடியவில்லை.
கோவாவின் வைஸ்ராய், போண்டா பகுதியை முற்றுகையிட்டு சம்பாஜியின் கவனத்தைத் திருப்பத் திட்டமிட்டார். 800 வெள்ளையர்கள், 8000 கன்னடியப் படையினர் மற்றும் ஐந்து கனரக பீரங்கிகளுடன் போண்டா பகுதிக்கு 22, அக்டோபரில் சென்று சேர்ந்தவர், உடனேயே பீரங்கித் தாக்குதலை ஆரம்பித்தார்.
30, அக்டோபரில் கோட்டைக்குள் நுழையத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அன்று சம்பாஜியின் இன்னொரு படை வந்து போர்ச்சுகீசியப் படையைச் சுற்றிவளைத்துத் தாக்கியது. அதைத் தாங்க முடியாமல் முற்றுகையை விலக்கிக் கொண்டு திரும்ப முடிவெடுத்தார். மறுநாள் புறப்பட்டு 1, நவம்பரில் தர்பதா பகுதிக்குச் சென்று சேர்ந்தனர். அங்கிருந்து கோவாவுக்குத் திரும்புவதாகத் திட்டமிட்டிருந்தனர்.
தர்பதாவுக்குத் திரும்பிவந்த வழியில் போர்ச்சுகீசியப் படை பெரும் இழப்பைச் சந்திக்க நேர்ந்தது. மராட்டியக் குதிரைப்படை துரத்தி வந்து தாக்கினர்.
‘கோவாவின் உள்ளூர்வாசிகளைக் கொண்ட படை துப்பாகிகளைக் கீழே போட்டுவிட்டுத் தப்பி ஓடியது. இறுதியாக எல்லா போர்ச்சுகீசியர்களும் (வெள்ளைப் படையினரும்) தப்பி ஓடினர். ஆனால், கறுப்பர்களின் (உள் நாட்டு வீரர்களின்) காலில் மிதிபட்டு நம் வீரர்கள் மாட்டிக்கொண்டனர். நம் வீரர்கள் அனைவரும் சிதறி ஓடினர். ஒவ்வொரும் தம்மை மட்டும் பாதுகாத்துக்கொண்டபடி ஓடினர். போர்ச்சுகீசிய கடலோடிகளான காலாட்படை முழுவதும் கொல்லப்பட்டது. இறந்தவர்கள், காயம்பட்டவர்களின் எண்ணிக்கை இருநூறுக்கு மேல் இருந்தது’ என்று போர்ச்சுக்கீசியக் குறிப்பு தெரிவிக்கிறது.
(தொடரும்)
___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின் தமிழாக்கம்.