Skip to content
Home » ஔரங்கசீப் #40 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 3

ஔரங்கசீப் #40 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 3

9. சம்பாஜி கோவாமீது படையெடுத்தல்

போண்டா கோட்டையிலிருந்து சம்பாஜி 7000 குதிரைப்படைவீரர்கள், 15000 காலாட்படை வீரர்களுடன் கோவா நகரை நோக்கிப் புறப்பட்டார். 14 நவம்பர் இரவு பத்துமணி வாக்கில் நாற்பது மராட்டிய வீரர்கள் கோவாவுக்கு வட கிழக்கில் இரண்டு மைல் தொலைவில் இருந்த சாண்டோ எஸ்டெவா தீவுக்குள் அந்தக் கடல் பகுதி கடந்து செல்ல எளிதாக இருக்கும் தாழ் அலைக் காலத்தில் நுழைந்தனர். அதன் பின் மலை உச்சியில் இருந்த கோட்டைக்குள் ஏறிச் சென்றனர். ஆற்றுப் பகுதியின் மறு பக்கம் வழியாக மேலும் நான்காயிரம் வீரர்கள் வந்ததையடுத்து படை மேலும் பலப்படுத்தப்பட்டது.

மறு நாள் காலை ஏழு மணி அளவில் போர்ச்சுகீசிய வைஸ்ராய் 400 வீரர்களுடன் சாண்டோ எஸ்டெவா தீவுக்குள் நுழைந்து மராட்டியப் படைகளைத் தாக்க ஆரம்பித்தார். ஆனால், அந்தப் போர்பற்றிய போர்ச்சுகீசியக் குறிப்பு கீழ்வருமாறு தெரிவிக்கிறது:

‘அவர்கள் எங்கள் மீது மூர்க்கத்தனமாகத் தாக்கினர். மேலும் முந்நூறு மராட்டியக் குதிரைப்படை களத்தில் புகுந்தது. நமது வீரர்கள் உயிர் பயத்தில் மலைக்குக் கீழே இறங்கித் தப்பி ஓடிவிட்டனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 150க்கு மேல் இருக்கும். பீரங்கி, வாள், கவண் கல் என எந்தவொன்றாலும் காயம்படாதவர் என்று ஒருவருமே இல்லை. வைஸ்ராயின் கையையும் ஒரு குண்டு துளைத்துவிட்டிருந்தது. மதியம் இரண்டு மணி வாக்கில் அவர் அங்கிருந்து கப்பலேறித் தப்பினார். எஞ்சியவர்கள் சுமார் 120 பேர் ஆற்றுப்பக்கம் ஓடித் தப்ப முயன்றனர். சிலர் சேற்றில் சிக்கிக் கொண்டனர். சிலர் நீந்தித் தப்பினர். சேற்றில் சிக்கியவர்கள் எல்லாம் இறந்துவிட்டனர். மறுநாள் (16 நவ) ஏனோ மராட்டியர்கள் அந்தத் தீவை விட்டுவிட்டு வேகமாக வெளியேறிவிட்டனர்’.

1 டிசம்பர் வாக்கில் ஆயிரம் மராட்டிய குதிரைப்படைவீரர்களும் 3000 காலாட்படையினரும் கோவாவுக்கு முறையே தெற்கிலும் வடக்கில் இருக்கும் சால்செட்டி மற்று பர்டேஸ் மாவட்டங்களுக்குள் நுழைந்தனர். கைக்குக் கிடைத்தவற்றையெல்லாம் கவர்ந்தனர். போர்ச்சுகீசியர்களைக் கைதிகளாகச் சிறைப்பிடித்தனர். அந்த பகுதிகளில் ஒரு மாத காலம் தங்கிச் சூறையாடினர். அதன் பின் அபாயத்தில் சிக்கியிருந்த கோவாவின் ரட்சகராக ஷா ஆலம் வந்து சேர்ந்தார். அவர் சம்பாஜியின் முக்கியமான நகரமான பிசோலிம் பகுதியைக் கைப்பற்றியிருந்தார். 5, ஜன, 1684-ல் அவர் வந்ததைத் தொடர்ந்து மூன்று நாள்கள் கழித்து மிகப் பெரிய மொகலாயப் படை கோவா துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. மொகலாய இளவரசர் படையுடன் வந்த செய்தி கிடைத்ததும் இரண்டாம் அக்பர், கவி கலஸ் இருவரையும் போர்ச்சுகீசியருடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடச் சொல்லிவிட்டு சம்பாஜி அங்கிருந்து ராய்கருக்குத் தப்பி ஓடிவிட்டார் (23, டிசம்பர்).

இந்தப் போர்க்களத்தின் வடக்குப் பகுதியில் அதாவது டாமன் மாவட்டத்தில் போர்ச்சுகீசியர்கள் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டனர். மராட்டியர்கள் அவர்களுடைய பல ஊர்களைக் கைப்பற்றித் தீவைத்தனர். 22 டிசம்பரில் சம்பாஜி கரிஞ்சா தீவைக் கைக்கபற்றினார். அது பம்பாய்க்கு 10 மைல் தென் கிழக்கில் இருந்தது. அதன்பின்னர் சம்பாஜி வேக வேகமாக வடக்கு திசையில் தன் தலைநகர் நோக்கிச் சென்றுவிட்டார். கவி கலஸ் போர்ச்சுகீசியர்களுடன் இரண்டாம் அக்பரின் மத்யஸ்தத்தில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். முதலில் அவர்கள் மொகலாயப் படையிடமிருந்து தப்பித்து பீம் கர் வனப்பகுதியில் அடைக்கலம் தேடியிருந்தனர் (கோவாவுக்கு 27 மைல் கிழக்கில் இருந்தது). அதன் பின் போண்டா பகுதியில் அடைக்கலம் புகுந்தனர். இறுதியாக மானுவேல் எஸ் தெ அல்பக்யெர்க்யூவுடன் (20, ஜன) அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இரு தரப்பும் பரஸ்பரம் பரிசுகள் பரிமாறிக் கொண்டனர். வருங்காலங்களில் போரை நிறுத்திவிட்டு நட்பாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்துகொண்டனர்.

ஆனால் இந்த ஒப்பந்தம் வெறும் ஒப்புக்குச் செய்யப்பட்டதுதான். மராட்டிய மன்னர் போர்ச்சுகீசியருடன் இரண்டாம் போருக்குத் தயாராகவேண்டிவந்தது. 19, செப்டம்பரில் போர்ச்சுக்கீசியர்கள் தாம் இழந்த கரிஞ்சா தீவைப் படையுடன் வந்து கைப்பற்றினர். சம்பாஜியின் ஆட்சி காலம் முடியும்வரையில் போர்ச்சுகீசியர்களுடனான பகைமை நீடித்தவண்ணம் இருந்தது.

10. இளவரசர் அக்பரின் வியூகங்கள், மராட்டிய மன்னரால் ஏற்பட்ட மனவருத்தங்கள்

சம்பாஜி சின்னச் சின்ன படையெடுப்புகள் மூலம் தன் படை பலத்தை வீணடித்துவந்தார். அல்லது போர்ச்சுகீசியர் மற்றும் சித்திகளுடன் வீணாகப் போரிட்டுக் கொண்டிருந்தார். டிசம்பர் 1683-ல் சூரத்தில் இருந்த ஆங்கிலேயர்கள் சொன்னதுபோல் ‘ஒரே நேரத்தில் பல போர்களில், செயல்பாடுகளில்’ ஈடுபட்டவண்ணம் இருந்தார். எதுவும் உருப்படியாக இருக்கவில்லை.

தில்லி அரியணையைக் கைப்பற்றுவதுதான் இரண்டாம் அக்பரின் ஒரே குறிக்கோளாக இருந்தது. அதை நடத்திக் கொடுக்க உதவும் கருவியாக மட்டுமே சம்பாஜியையும் அவருடைய நட்பையும் பார்த்தார். மராட்டிய ராஜ்ஜியத்தில் அவர் எத்தனை காலம் தங்கியிருந்தாரோ அவ்வளவுக்கு அவருக்கு நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. தேவையற்ற சுமையாகவே அந்த நட்பு தோன்ற ஆரம்பித்தது. மராட்டியப் பகுதியில் இருந்து வெளியேறினால்தான் அவரால் எதையேனும் உருப்படியாகச் செய்ய முடியும் என்ற நிலை உருவானது.

ஆனால் சம்பாஜியின் எதிர்பார்ப்புகள் அக்பருடைய எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போயிருக்கவில்லை. பாதுகாப்பான, சாதகமான தக்காண மலைப்ப்பகுதி மற்றும் வனப்பகுதியில் இருந்து புறப்பட்டு வட இந்தியாவின் பாதகமான திறந்தவெளிப் பகுதியில் போய் சண்டையிட வேண்டிய அவசியம் அவருக்கு இருந்திருக்கவில்லை. ஹிந்துஸ்தானைக் கைப்பற்றும் அக்பரின் பேராசைக்குத் துணைபோவதன் மூலம் ஒளரங்கஜீபுக்கு மகாராஷ்டிராவைத் தாக்கிக் கைப்பற்றும் வாய்ப்பைத் தானாக ஏன் உருவாக்கித் தரவேண்டும் என்று அவர் சிந்தித்தார்.

18 மாத காலம் நீண்ட, மனதைச் சோர்வடையவைக்கும் காத்திருப்புக்குப் பின்னர், பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போனதன் பின்னரே இளவரசர் அக்பர் சம்பாஜியின் எண்ணவோட்டம் மற்றும் கொள்கைகளைப் புரிந்துகொண்டார். தனக்கு உதவ அவர் என்றுமே தயாராக இருந்திருக்கவில்லை என்பதையும் புரிந்துகொண்டவர் மஹாராஷ்டிராவில் இருந்து வெளியேற முடிவெடுத்தார். பாலி பகுதியில் இருந்து ரத்தோருடன் படையைக் கிளப்பிக்கொண்டு சாவந்த்வாடியில் பண்டா பகுதிக்குப் புறப்பட்டுச் சென்றார் (டிசம்பர் 1682). அதுவும் மகாராஷ்டிர ராஜ்ஜியத்துக்குள்தான் இருந்தது. என்றாலும் அது கோவாவுக்கு வடக்கே 25 மைல் பக்கத்தில் இருந்தது. அங்கிருந்துகொண்டு ஜனவரி 1683-ல் இளவரசர் அக்பர் கோவாவின் வைஸ்ராய்க்குத் தூது அனுப்பினார். ரத்தினங்கள் பதித்த குறுவாளைப் பரிசளித்து கோவாவில் சில நகைகளை விற்க அனுமதி கேட்டார். அதோடு மங்களூரில் இருக்கும் போர்ச்சுகீசிய பிரதிநிதியிடம் பேசி தன்னை அரேபியாவுக்கு கப்பலில் அழைத்துச் செல்ல உதவும்படியும் கேட்டுக்கொண்டார். பேரரசர் ஒளரங்கஜீப்பின் உத்தரவின் பேரில் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் சித்தி படையொன்று அக்பர் கோவாவுக்கு ராஜபூர் நீரோடை வழியாகச் செல்கிறராரா என்று கண்காணித்துவந்தனர்.

செப்டம்பர் வாக்கில் அக்பர் பாண்டாவிலிருந்து சம்பாஜியின் ஆளுகைக்குள் இருந்த பிச்சோலிம் பகுதிக்குச் சென்றார். அது கோவாவுக்கு பத்து மைல் வடக்கில் இருந்தது. சம்பாஜியின் மீது முழு நம்பிக்கையை இழந்த பரிதாபத்துக்குரிய மொகலாய இளவரசர் அக்பர் இறுதியாக 8 நவம்பரில் ஒரு கப்பல் ஒன்றை வாங்கி வின்குர்லா பகுதியில் ஏறி பாரசீகம் செல்லத் தீர்மானித்தார். ஆனால் ராஜபூரில் இருந்து கவி கலஸ், துர்காதாஸுடன் விரைந்து வந்து அக்பரைக் கப்பலில் சந்தித்தார். இந்தியாவிலேயே அக்பருக்கு உரிய படைகளைத் தந்து சம்பாஜி உதவத் தயாராக இருப்பதாகச் சொன்னார். அதன்பின்னரே மராட்டியருக்கும் போர்ச்சுகீசியருக்கும் இடையே போர் மூண்டது. அதில் அக்பர் மராட்டியத் தரப்பு தூதுவராகச் செயல்பட்டார்.

1684 பிப்ரவரி தொடங்கி ஒரு வருட காலம் ரத்னகிரி மாவட்டத்தில் (ஷகர்பென் மற்றும் மல்காபூர் பகுதியில்) இருந்த அவரை கவி கலாஸ் அடிக்கடி வந்து சந்தித்து எதிர்காலத் திட்டங்கள் பற்றிக் கலந்தாலோசித்தார்.

11. சம்பாஜிக்கு எதிரான கலகங்கள்; ஜூலை 1683 தொடங்கி மொகலாய நடவடிக்கைகள்

ஜூலை 1683 தொடங்கி தக்காணத்தில் மொகலாயப் பேரரசின் வாய்ப்புகள் பிரகாசமாகத் தொடங்கின. சம்பாஜிக்கும் இளவரசர் அக்பருக்குமான நட்பு முறியத் தொடங்கியிருந்தது. அதோடு இந்தியாவில் இருந்து தப்பிச் செல்லவும் அக்பர் முடிவெடுத்திருந்தார். மராட்டியர்கள், போர்ச்சுகீசியர்களுடன் நீண்ட போரில் ஈடுபட்டனர். இந்தச் சூழ்நிலைகள் மொகலாயர்களுக்குச் சாதகமாக அமைந்தன. பேரரசர் பொறுமையாக, எதுவும் செய்யாமல் காத்துக் கொண்டிருந்ததை முடிவுக்குக் கொண்டுவந்து அதிரடியாக பல முனைகளில் தாக்குதல்களை ஆரம்பித்தார்.

சம்பாஜியின் சீர்கெட்ட நடத்தைகள், நிலையற்ற மனம், வன்முறை இவையெல்லாம் அவருடைய அமைச்சர்கள், அவருக்குக் கீழான குறுநில மன்னர்கள் ஆகியோரிடையே அதிருப்தியை உருவாக்கின. ஒளரங்கஜீப் கொடுத்த கையூட்டுகள் நிலைமையை மேலும் மோசமாக்கின. இதனால் மராட்டியப் படைகளில் இருந்து பலர் அடிக்கடிக் கட்சி மாறத் தொடங்கினர். 26, ஜூலை 1683 வாக்கில் சிவாஜியின் முன்ஷியான க்வாஸி ஹைதர், ஒளரங்கஜீப் பக்கம் சென்றுவிட்டார். இரண்டாயிரம் வீரர்களைக் கொண்ட ஒரு படையுடன் கான் பட்டமும் தரப்பட்டது. பின்னர் (1706) பேரரசின் தலைமை க்வாஸியானார்.

சாம்பாஜியின் கீழ் இருந்த குறுநிலமன்னரும் கூடல் பகுதியின் ஆட்சியாளருமான கெம் சாவந்த் அவருக்கு எதிராகக் கலகம் செய்தார். போர்ச்சுகீசியர்களின் உதவி பெற்று சாவந்தவாடி பகுதிக்குள் ஊடுருவி மராட்டிய ராஜ்ஜியத்தில் கோவாவுக்கு வடக்கே இருக்கும் பகுதிகள் வரை கொள்ளையடித்தும் தீவைத்துக் கொளுத்தியும் தன் படையுடன் திரிந்தார் (பிப் 1685). போண்டா பகுதியின் துல்வ நாயக், ராம் தல்வி ஆகிய இரண்டு கலகக்காரர்களுடன் இணைந்து, போர்ச்சுகீசியர்களிடம் தஞ்சம் புகுந்துகொண்டு கனரா மற்றும் தென் கொங்கன் பகுதிகளில் பெரும் குழப்பங்களை உருவாக்கி வந்தார். இதுபோன்ற கலகங்கள் பெருகத் தொடங்கின. விரைவிலேயே கடலோரப் பகுதிகள் முழுவதும் சம்பாஜிக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தின.

1683 செப்டம்பர் நடுப்பகுதிவாக்கில் மழைக்காலம் முடிந்த பின்னர் மொகலாயர்களின் தாக்குதல் ஆரம்பித்தன. செப் 15க்குச் சில நாட்கள் கழித்து ஷா ஆலம் ஒளரங்காபாதிலிருந்து படையுடன் புறப்பட்டு சாவந்தவாடி மற்றும் தெற்கு கொங்கணி பகுதிக்குள் ராம்காட் கணவாய் வழியாக நுழைந்தார். ஷாஹிப் உத் தீன், புனாவுக்கு படையுடன் அனுப்பப்பட்டார் (அக்டோபர்). அங்கிருந்து அவர் கொலாபா மாவட்டத்தில் மலைப்பகுதிக்கு அப்பால் இருந்த நிஜாம்பூரில் தாக்குதல் நடத்தினார். பீஜப்பூருக்கு எதிராகப் படையுடன் 20 ஆகஸ்டில் அனுப்பப்பட்ட இளவரசர் ஆஸம் அக்டோபரில் திரும்பிவந்தார். அதன்பின் அவர் நவம்பரில் பக்லானா மற்றும் கந்தேஷ் பகுதிக்கு வடக்கே இருக்கும் பாதையைக் காவல் காக்க நாஸிக்குக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பேரரசர் அஹமது நகருக்குத் தெற்கே தானே படையுடன் புறப்பட்டார் (நவம்பர்). கான் இ ஜஹான் தலைமையில் இன்னொரு படை பிடாரில் இருந்து அகல்கோட்டுக்குச் சென்றது. பீஜப்பூர் மற்றும் கோல்கொண்டா எல்லைப் பகுதிகளைக் கண்காணிக்கவும் அந்த சுல்தான்கங்கள் மராட்டியர்களுக்கு எந்தவொரு உதவியையும் செய்துவிடாமல் தடுக்கவும் அந்தப் படை அனுப்பப்பட்டது.

12. ஷா ஆலம் தெற்கு கொங்கணி பகுதியை ஆக்கிரமித்தல்

ஒளரங்காபாதிலிருந்து இளவரசர் ஷா ஆலம் பீஜப்பூர் பகுதியின் தெற்குப் பக்கமாக படையெடுத்துச் சென்று பேல்காவ் மாவட்டத்துக்குள் நுழைந்தார் (செப், 1683). ஷாபூர், சாம்ப்காவ் கோட்டைகளையும் (பேல்காவுக்கு தென் கிழக்கில் 18 மைல் தொலைவில் இருந்தது) மற்றும் பெரிய நகரங்களையும் மேலும் சில கோட்டைகளையும் கைப்பற்றினார். அங்கிருந்து பெரும் செல்வத்தையும் கவர்ந்தார். அதன்பின் மேற்குப் பக்கம் திரும்பி ராம்காட் கணவாயைக் கடந்து சாவந்தவாடி சமவெளிக்குள் சென்றார். அது பேல்காவுக்கு 26 மைல் மேற்கேயும் கோவாவுக்கு வட கிழக்கில் 30 மைல் தொலைவிலும் இருந்தது.

ஷா ஆலம் 5 ஜன 1684-ல் பிசோலிம் பகுதிக்குச் சென்றார். அங்கு இருந்த சாம்பாஜி மற்றும் இரண்டாம் அக்பரின் பெரிய வீடுகளையும் தோட்டங்களையும் அழித்தார். மூன்று நாட்கள் கழித்து இளவரசருடைய படைக்குத் தேவையான அனைத்தையும் ஏற்றிக்கொண்டு ஒரு மிகப் பெரிய மொகலாயக் கப்பல் கோவா துறைமுகம் வந்து சேர்ந்தது.

கோவாவுக்கு அருகில் வந்ததும் சாம்பாஜியின் தாக்குதலில் இருந்து போர்ச்சுகீசியர்களைக் காப்பாற்றியதற்காக அவர்களிடம் மிகப் பெரிய தொகையைக் கப்பமாகக் கேட்டார். கோவாவைத் தந்திரத்தால் கைப்பற்றவும் திட்டமிட்டார். இளவரசர் செய்த மிகப் பெரிய பிழை போர்ச்சுகீசியர்களுடன் அவர் மோதல் போக்கைக் கடைப்பிடித்ததுதான். இதனால் அவருடைய படைக்குத் தேவையான உணவு கிடைக்காமல் பெரும் அழிவைச் சந்திக்கவும் நேர்ந்தது.

கோவாவுக்கு அருகில் இருந்த பகுதிவழியாக ஷா ஆலம் வடக்கே இருந்த மால்வா பகுதிக்குள் நுழைந்தார். மராட்டிய மன்னர் கட்டிஎழுப்பியிருந்த வெண் பளிங்கு கோவில் மற்றும் பல மாளிகைகளை வெடிவைத்துத் தகர்த்தார். கூடல் மற்றும் சாவந்தவாடியில் இருக்கும் பாண்டா நகரங்கள் இரண்டும் தீவைக்கப்பட்டன. வின்குர்லா பகுதியும் இந்தப் படையெடுப்பின் போது சூறையாடப்பட்டது. தென்பக்கமாகத் திரும்பி கோவாவுக்கு வடக்கே இருக்கும் சாபோரா நதிக்கரை வழியாக போர்ச்சுகீசிய தலைநகரைத் தாக்கிக் கைப்பற்ற அல்லது தனது சரக்குக் கப்பல்களுடன் சேர்ந்துகொள்ள முன்னேறிச் சென்றார்.

பிப்ரவரி மாதவாக்கில் மொகலாயப் படை பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது. கோவா கடல் வழியாக இளவரசரின் முகாமுக்குச் சென்ற உணவுப் பொருள் கப்பலை போர்ச்சுக்கீசியர்கள் தடுத்துநிறுத்தினர். கோவாவில் பஞ்சம் தலைவிரித்தாடத் தொடங்கியிருந்ததால் முகாம் இருந்த பகுதியிலிருந்து எந்த உணவையும் சேகரிக்கவும் முடியவில்லை. ‘எந்தவொரு தடையும் இன்றி இங்குமங்குமாக இளவரசர் விரும்பிய திசையில் சென்றுகொண்டிருந்தார். எந்த இடத்திலும் தன் பிடியைப் பலப்படுத்திக்கொள்ளவில்லை. அந்தப் பிராந்தியம் முழுவதையுமே அழித்தபடிச் சென்றார். கண்ணில் பட்ட ஊர்களையெல்லாம் தீக்கிரையாக்கியபடி சென்றார்’.

இலளவரசரின் படையில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை உச்சத்தை எட்டியது. வீரர்கள் பட்டினி கிடந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டன. 20 பிப்ரவரி வாக்கில் இளவரசர் பின்வாங்கினார்.

இளவரசர் அக்பரின் நெருக்கடிகள் முற்றின. ராம்காட் மலைப்பாதையில் போகும்போது நோய்த்தொற்றும் பரவியது. அவருடைய படையின் மூன்றிலொரு பங்கினர் இறந்தனர். நோய் தாக்கியவர்களில் ஒருவர்கூட உயிர் பிழைக்கவில்லை. குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள் எல்லாம் பெரும் எண்ணிக்கையில் இறந்தன. ஆங்காங்கே செத்துக் கிடந்தவற்றின் பிணவாடை காற்றை நஞ்சாக்கியது. போக்குவரத்து வசதிகள் இல்லாததால் உணவுப் பொருட்கள் எதுவும் கிடைக்காமல் இரண்டாவது பஞ்சம் தாக்கியது. பலரும் வெப்பத்தைத் தாங்க முடியாமல் தாகத்தைத் தாங்க முடியாமல் இறந்தனர்.

ஷா ஆலம், மலைப்பாதையைக் கடந்து கனரா சமவெளிக்குச் சென்றார். எதிரிகள் சுற்றிவளைத்தனர். தனியாக மாட்டிக்கொண்டவர்களைத் தாக்கி உடமைகள் அனைத்தையும் ‘அனைத்து திசைகளிலும்’ கொள்ளையடித்தனர். எஞ்சிய படை ஒருவழியாக 18 மே வாக்கில் அஹமது நகர் வந்து சேர்ந்தது. இந்தப் படையெடுப்பில் இளவரசருடைய படை ஒரு சில கிராமங்களை எரித்தது சிலவற்றைக் கொள்ளையடித்தது. வேறொன்றும் செய்திருக்கவில்லை.

(தொடரும்)

___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *