13. சம்பாஜியின் செயல்பாடுகள் – 1683க்குப் பின்
1683-85-ல் நடைபெற்ற சிறிய சம்பவங்கள் பற்றி இங்கு விளக்கப் போவதில்லை. 1684 முதல் பாதியில் நடைபெற்ற மொகலாயப் படையெடுப்புகள் பெரிதும் வெற்றிகரமான அமைந்தன. பல மராட்டியக் கோட்டைகள் கைப்பற்றப்பட்டன. அவர்களுடைய படைகள் மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்பட்டன. பெரும்பாலான பகுதிகள் மொகலாய சாம்ராஜ்ஜியத்துடன் இணைக்கப்பட்டன. ஜூலை மாதம் சம்பாஜியின் இரு மனைவிகள், ஒரு மகள், மூன்று தாசிகள் ஆகியோரைச் சிறைப்பிடித்தது அவற்றில் முக்கியமான சம்பவம். அவர்கள் பஹதூர்கர் கோட்டையில் இருந்தபோது சிறைப்பிடிக்கப்பட்டனர். திலீர் கான் மராட்டிய மன்னரின் ஒரு மனைவி மற்றும் சகோதரியை அஹமது நகர் கோட்டையில் சிறைவைத்தார்.
சம்பாஜி இந்தக் காலகட்டத்தில் எங்கு இருந்தார்?
1683 வாக்கில் கோவா மீதான அவருடைய படையெடுப்பு தோல்வியில் முடிவடைந்ததும் மனம் தளர்ந்து முழுவதும் மது, மாது என கேளிக்கைகளில் ஆழ்ந்துவிட்டார். அவருடைய வீரம் நிறைந்த தந்தைபோல் களத்தில் இறங்கி போராடாமல் ஓதுங்கிவிட்டார்.
1685 ஜனவரி 15 வாக்கில் ஷிஹாப் உத் தீன் கான் கொங்கணி பகுதிக்குள் போர்காட் வழியாக நுழைந்து ராய்கர் கோட்டைக்கு அடிவாரத்தில் இருந்த பச்சாத் கிராமத்துக்குத் தீ வைத்தார். உருவ வழிபாட்டில் நம்பிக்கை கொண்ட காஃபிர் தலைவர்கள் பலரைக் கொன்று குவித்தார். அவர்களின் செல்வங்கள், சொத்துகளைச் சூறையாடினார். பலரைச் சிறைப்பிடித்தார். அது மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது. இதனால் அவருக்கு கான் பஹாதுர் ஃபெரோஸ் ஜங் என்ற சிறப்புப் பட்டம் தரப்பட்டது.
பல மராட்டிய தளபதிகளை பணத்தாசை காட்டி ஃபெரோஸ் ஜங் மொகலாயர் பக்கம் இழுத்துக் கொண்டார். டிசம்பர் ஆரம்பத்தில் கோண்டானா பகுதியை அப்துல் காதிர் கைப்பற்றினார். ராஜ்ஜியத்தின் தலைநகரைக் காப்பாற்ற அனைத்து மராட்டிய வீரர்களின் உதவியும் தேவையாக இருந்த நேரத்தில் கந்தேஷ் பகுதியைத் தாக்கப் பலர் அங்குசென்றுவிட்டனர். அது மிகப் பெரிய தவறாகிப் போனது. 1685 மார்ச் இறுதியில் பீஜப்பூர் சுல்தானகம் மீதான முற்றுகை ஆரம்பமானது. மொகலாயப் படைகள் அங்கு குவிந்துவிட்டதால் மராட்டியர்கள் மீதான நெருக்கடிகள் சிறிது காலத்துக்குக் குறைந்தது.
கிழக்கிந்திய கம்பெனி கவர்னரிடமிருந்து பம்பாய் கோட்டையைக் கைப்பற்றிய கேப்டன் ரிச்சர்ட் கெய்க்வின் தீவிர நடவடிக்கைகள் எடுத்தார். ஏப்ரல் 1684-ல் மொகலாயத் தளபதி சித்தி க்வாஸிமை, பம்பாய் தீவைப் பயன்படுத்திக் கொண்டு மராட்டிய கிராமங்களைத் தாக்குவதை நிறுத்தும்படிக் கேட்டுக்கொண்டார். ஏப்ரல் இறுதிவாக்கில் கேப்டன் ஹென்றி கேரி மற்றும் லெப்டின்ண்ட் கர்னல் வில்கின்ஸ் ஆகிய இருவரையும் சம்பாஜியிடம் தூது அனுப்பினார். மார்ச் 1661 வாக்கில் சிவாஜியின் படையினர் ராஜபூரில் இருந்த ஆங்கிலேய வணிகக் கிடங்கைத் தாக்கியதற்கான நஷ்டஈட்டில் நீண்டகாலமாக இருக்கும் நிலுவைத் தொகையைத் தரும்படிக் கேட்டார். மராட்டிய மன்னருடன் நட்புக்கரம் நீட்டவும் தயார் என்பதையும் சொன்னார். இந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. ஆங்கிலேயர் கேட்ட அனைத்து கோரிக்கைகளையும் சம்பாஜி ஏற்றுக்கொண்டார். முப்பது மற்றும் பதினோரு கோரிக்கைகள் கொண்ட இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்தும் இட்டார்.
14. பீஜப்பூர் பகுதிகளை மொகலாயர் கைப்பற்றுதல்
12 செப், 1686-ல் பீஜப்பூர் சுல்தான் சரணடைந்ததும் ஒளரங்கஜீப் தன் தளபதிகளை புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் பீஜப்பூரின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வருவாய் ஒப்பந்தங்கள், அமைதிய நிலை நாட்டுதல், கோட்டைகளைக் கைப்பற்றுதல் ஆகிய பணிகளை முடுக்கிவிட்டார். அடுத்த வருட பிப்ரவரி தொடங்கி செப்டம்பர் வரையிலும் மொகலாயப்படைகள் கோல்கொண்டா சுல்தானகத்தைக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டது. அந்த சுல்தானகம் 21 செப், 1687-ல் வீழ்ந்தது. அதன் பின்னரே ஆதில் ஷாவின் பீஜப்பூர் பகுதியில் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிந்தது.
முதலில் பேரட் குலத்தின் மீது அவர்களின் கவனம் குவிந்தது. கிருஷ்ணா நதிக்கும் பீமா நதிக்கும் இடைப்பட்ட பகுதியை சாகர் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தனர். பீஜப்பூர் மற்றும் கோல்கொண்டா இரண்டுமே ஒரு வருட இடைவெளியில் மொகலாயப் படையெடுப்பைத் தாங்க முடியாமல் வீழ்ந்ததையொட்டி பேரட் மன்னரும் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். பேரட்டின் தலைவரான பாம் நாயக்கர் தனது கோட்டையை 28 நவம்பரில் மொகலாயர் வசம் ஒப்படைத்தார். 27 டிசம்பர், 1687-ல் ஒளரங்கசீபைச் சென்று சந்தித்தார். திடீரென்று ஐந்து நாட்களில் அவர் இறந்தும் போனார். அவருடைய ராஜ்ஜியமும் மொகலாயப் பேரரசுடன் இணைக்கப்பட்டது.
புதிதாகக் கைப்பற்றிய தக்காண சுல்தானகங்களின் தெற்கு மற்றும் கிழக்கு பக்கம் இருந்த ஊர்களைக் கைப்பற்ற மொகலாயப் படை புறப்பட்டது. கர்னூல் மற்றும் துங்கபத்ராவுக்கு தெற்கே இருந்த அதோனி கோட்டை ஆகியவை சுதந்தரமாகப் பிரிந்து சென்றிருந்த சித்தி மசூதின் ஆளுகையின் கீழ் இருந்தது. ஃபெரோஸ் ஜங் அந்தப் பகுதிகள் மீது படையெடுத்துச் சென்றார். 6, ஆகஸ்ட், 1688 வாக்கில் சித்தி மசூத் தன் தோல்வியை ஒப்புக்கொள்ளவைக்கப்பட்டார். அவருடைய கோட்டை கைப்பற்றப்பட்டு இம்தியாஸ் கர் என்று பெயர் சூட்டப்பட்டது. ஏழாயிரம் வீரர்களைக் கொண்ட மொகலாயப் படைக்கு சித்தி மசூத் தளபதியாக்கப்பட்டார்.
மார்ச் வாக்கில் பேல்காவ் கோட்டையை இளவரசர் ஷா ஆலம் முற்றுகையிட்டுக் கைப்பற்றினார். மொகலாயப் படை மேலும் பல்வேறு கோட்டைகளையும் எளிதில் கைப்பற்றியது.
ஹைதராபாதிலிருந்து ஒளரங்கஜீப் 25, ஜன, 1688-ல்புறப்பட்டு பீஜப்பூருக்கு 15 மார்ச்சில் வந்து சேர்ந்தார். அந்த நகரமும் சுற்றுவட்டாரங்களும் போரினால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்ததால் அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை முதலில் முடுக்கிவிட்டார். அவர்களுக்குக் குடிக்கப் போதிய தண்ணீர் இல்லாமலிருந்தது. முற்றுகையின் போது கால்வாய் பாலங்கள் எல்லாம் சேதப்படுத்தப்பட்டிருந்தன. நீர் இருப்பும் நீர்வரத்தும் முற்றிலுமாக நின்றுவிட்டிருந்தது. முக்லிஸ் கான், மீர் அதிஷ் இருவரிடமும் கிருஷ்ணா நதி நீரை நகருக்குள் கொண்டுவர ஒரு கால்வாய் வெட்டும்படி பேரரசர் உத்தரவிட்டார்.
பீஜப்பூரிலும் மொகலாய முகாமிலும் மிகப் பெரிய நோய் நவம்பர் 1688-ல் பரவியது. அந்த நோயில் ஒருவருக்கு முதலில் கை இடுக்கிலும் அதன் பின் தொடை ஓரத்திலும் நிண நீர்க்கட்டி தோன்றின. காய்ச்சலும் மயக்கமும் அதைத் தொடர்ந்து வந்தன. எந்த மருந்து கொடுத்தும் நோய் தீரவில்லை. நோய் தாக்கியவர்களில் இரண்டு நாளுக்கு மேல் ஒரு சிலரே உயிர் பிழைத்தனர். ஒளரங்கஜீபின் மூத்த மனைவி ஒளரங்கபாதி மஹல், மஹாராஜா ஜஸ்வந்த் சிங்கின் மகன் என்று சொல்லப்பட்ட முஹம்மது ராஜ் (வயது 13), சதார் ஃபாஸில் கான் போன்ற முக்கியமான பலரும் இறந்தனர். மத்திய தர மற்றும் ஏழைய எளிய இஸ்லாமியர், இந்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடவே முடியாது. கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் மேல் இறந்திருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. ஃபெரோஸ் ஜங்குக்குக் கண்பார்வை பறிபோனது.
நோய்த்தொற்று பரவிய நிலையிலும் ஒளரங்கஜீப் தன்னுடைய படையெடுப்பை நிறுத்தவில்லை. 14 டிசம்பர், 1688-ல் எஞ்சியவர்களுடன் புறப்பட்டு பீஜப்பூருக்கு 85 மைல் வடக்கில் இருந்த அக்லஜ் பகுதிக்குச் சென்று முகாமிட்டார்.
15. இந்தியாவில் இரண்டாம் அக்பரின் இறுதி நடவடிக்கைகள்
1686-ல் பீஜப்பூரை முற்றுகையிட்டிருந்த படைகளுடன் சேர்ந்துகொள்ள ஒளரங்கஜீப் ஷோலாபூருக்குச் சென்றார். மொகலாய தக்காணப் பகுதிகளின் பாதுகாப்பு கணிசமாகக் குறைந்திருந்த இந்த நேரத்தில் அங்கு இரண்டாம் அக்பர் தன் படையுடன் நுழைந்தார். ஆனால் இப்படி ஏதாவது நடக்கும் என்பது தெரிந்து ஒளரங்கஜீப் ஏற்கெனவே அஹமது நகரில் தனது தளபதி மர்ஹமத் கானை ஒரு படையுடன் விட்டுவிட்டுத்தான் சென்றிருந்தார். எனவே இரண்டாம் அக்பரால் தன் முயற்சியில் வெற்றி பெற முடியாமல் போனது. சக்கான் பகுதியில் மர்ஹமத் கான் வீரத்துடன் போரிட்டு இரண்டாம் அக்பரை விரட்டியடித்தார். சம்பாஜியின் ஆளுகையில் இருந்த பகுதிக்கு இரண்டாம் அக்பர் திரும்பிச் சென்றார். மஹுலி மற்றும் ஜவ்ஹர் பகுதிகளினூடாக சூரத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சிகள் செய்தார். அதிலும் தோற்றார்.
இறுதியாக தன்னுடன் எஞ்சியிருந்த 45 பேர் மற்றும் ஷுஜாவின் முன்னாள் ஆதரவாளரான ஜியா உத் தீன் முஹம்மதுவுடன் ராஜ்பூர் பகுதியில் ஒரு கப்பலை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு (பெண்டல் என்ற ஆங்கிலேயர் அதன் கேப்டனாக இருந்தார்) பாரசீகத்துக்கு பிப் 1687-ல் பயணம் செய்தார். ஆனால் வழியில் கடல் சீற்றம் காரணமாக மஸ்கட் துறைமுகம் நோக்கிச் சென்று சேர்ந்தார். சிறிது காலம் அங்கு தங்கியவர் 24 ஜன, 1688-ல் பாரசீக மன்னரை இஸ்ஃபஹானில் சென்று சந்தித்தார். இப்படியாக இரண்டாம் அக்பரை பத்திரமாக இந்தியாவில் இருந்து வெளியேற உதவியபின்னர் துர்கா தாஸ் தன் சொந்த ஊரான மார்வாருக்குத் திரும்பினார்.
16. மராட்டிய சாம்ராஜ்ஜியத்தின் உள் விவகாரங்கள் மற்றும் சம்பாஜியின் நடவடிக்கைகள், 1685-1687.
பீஜப்பூரையும் கோல்கொண்டாவையும் கைப்பற்ற ஒளரங்கஜீப் தன் முழு பலத்தையும் பயன்படுத்திக் கொண்டிருந்தபோது, சம்பாஜி தக்காண அரசுகள் அனைத்துக்குமே ஏற்படவிருந்த அபாயம் குறித்து எந்தப் புரிதலும் அதற்கான எந்த்த் தற்காப்பு முயற்சியும் எடுக்காமல் இருந்தார். மொகலாயப் பகுதிகளுக்குள் அவருடைய படையினர் அடிக்கடிச் சென்று சூறையாடிவிட்டு வந்தனர். ஆனால் இந்த தாக்குதல்கள் ஒரு முறையான படையெடுப்பாக இருந்திருக்கவில்லை. ஒளரங்கஜீப் இப்படியான சில்லறைத் தாக்குதல்களைப் பொருட்படுத்தவில்லை. பீஜப்பூர் மற்றும் கோல்கொண்டா பகுதியில் இருந்து மொகலாயப் படையைத் திசை திருப்பி, தனது வீழ்ச்சியைத் தவிர்த்துக்கொள்ளும் அளவுக்கு சம்பாஜிக்கு எந்தவொரு பெரிய வியூகம் வகுக்கும் அரசியல் முதிர்ச்சி இருந்திருக்கவில்லை. இது போதாதென்று சம்பாஜியின் ஆளுகைக்குட்பட்ட பாளையக்காரர்கள் கலகங்களில் ஈடுபட்டனர். சம்பாஜியின் அரச சபையில் இருந்த அமைச்சர்களும் பல சதிகளில் ஈடுபட்டனர்.
சம்பாஜி பதவியேற்ற சில வருடங்களுக்குள்ளாகவே அவருடைய மகத்தான தந்தையின் வெற்றிக்கும் புகழுக்கும் காரணமாக இருந்த பல தளபதிகளும் அமைச்சர்களும் விலகிச் சென்றுவிட்டிருந்தனர். அவருடைய ஆளுகைப் பகுதியின் எல்லையோரங்களில் இருந்த காவல் அரண்களில் திறமையான தளபதிகளை நியமித்திருக்கவில்லை. புதிது புதிதாக மன்னருக்கு எதிராக சதிவேலைகள் நடந்தவண்ணம் இருந்தன. இதனால் முன்னணி தளபதிகள், அமைச்சர்கள் எல்லாம் ஒன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்; அல்லது சிறைப்படுத்தப்பட்டனர். மதராஸ்-கர்நாடகப் பகுதி சம்பாஜியின் மைத்துனர் ஹரிஜி மஹாடிக்கின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது. அவர் தானே மஹாராஜாவாக பட்டம் சூட்டிக்கொண்டு தனி ராஜ்ஜியம் போலவே ஆள ஆரம்பித்திருந்தார்.
சம்பாஜியின் ஆட்சி காலத்தில் மராட்டிய சாம்ராஜ்ஜியத்தின் பொருளாதார நிலை பலவீனமடைந்தது. அரசு அதிகாரிகளின் ஊழல், கலகக்காரர்களால் விளைவிக்கப்பட்ட குழப்பங்கள் இவை பற்றியெல்லாம் ஆங்கிலேய வணிக நிறுவனங்களின் ஆவணங்களில் மிகத் தெளிவாக் விவரிக்கப்பட்டுள்ளன: ’முன்பெல்லாம் சிவாஜியின் ஆளுகையின் கீழ் இருந்தபோது ராஜபூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் 1500 கண்டி மிளகு (ஒரு கண்டி=227 கிலோகிராம்) உற்பத்தியாகின. இன்று அதில் பத்தில் ஒரு பங்கு கூட இப்போது விளைவிக்கப்படுவதில்லை. இன்று அந்த நகரம் மிகவும் வறிய நிலையில் இருக்கிறது’.
வணிகம் தொழில்துறை, விவசாய உற்பத்தி இவற்றில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு சம்பாஜியின் நிர்வாகச் சீர்கேடும் மராட்டிய அரச அதிகாரிகளிடையே இருந்த லஞ்ச ஊழல் பேராசையும்தான் முக்கிய காரணங்கள். ’அரசரில் தொடங்கி கடைநிலை உழவர் வரையிலும் பேஷ்கஷ் (சன்மானம்) பித்துப்பிடித்து அலைகிறார்கள். அது இல்லாமல் எந்தவொரு வேலையும் நடக்காது என்ற நிலை நிலவுகிறது’.
தானா, சாவுல் பகுதிகளில் இருந்து பம்பாய்க்கு 600 நெசவாளர் குடும்பங்கள் வந்திருந்தன. ஆனால் சாவுல் பகுதியை மராட்டியப் படை முற்றூகையிட்ட ஒரு வருடத்துக்குள் (1683) 400 குடும்பங்கள் போதிய அரச உதவியின்றி பம்பாயிலிருந்து திரும்பிப் போய்விட்டன. எஞ்சியவர்களில் 150 குடும்பத்தினர் இறந்துவிட்டனர். 1685 வாக்கில் வெறும் 50 நெசவாளர் குடும்பங்கள் மட்டுமே பம்பாயில் இருந்தன.
கார்வாருக்கு அருகில் செல்லும் பாதைகளில் சம்பாஜியின் ஆளுகையின் கீழ் இருந்த குறுநில மன்னர்கள் கலகங்களில் ஈடுபட்டனர். ’சம்பாஜியின் பகுதிகளில் எந்தவொரு பாதுகாப்பும் இருந்திருக்கவில்லை. பொதுவாகவே வணிக நடவடிக்கைகள் பெருமளவுக்கு முடங்கிவிட்டன’.
(தொடரும்)
___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின் தமிழாக்கம்.