17. சம்பாஜி சிறைப்பிடிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்படுதல்
சம்பாஜிக்கு எதிராக ஜூன் 1680 மற்றும் அக் 1681களில் முன்னெடுக்கப்பட்ட சதிகள் முறியடிக்கப்பட்ட பின்னர் புதிதாக அக்டோபர் 1684-ல் வேறொரு சதித்திட்டம் தீட்டப்பட்டது. அதில் ஈடுபட்ட சில முக்கிய தலைவர்களை சாகும்வரை சிறையிலடைத்தார். அடுத்த நான்கு ஆண்டுகள் அவருடைய அரசவை அமைதியான முறையில் நடந்தது. ஆனால் 1688 அக்டோபரில் ஷிர்கே குடும்பம் அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தது. முதலில் மன்னரின் நண்பர் கவி கலஸைத் தாக்கவே அவர் கேல்னா பகுதிக்குள் தஞ்சம் தேடி ஓடினார். தனது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய கவியை மீட்க சம்பாஜி ராய்கட்டில் இருந்து படையுடன் சென்று சங்கமேஸ்வரில் கலகக்காரர்களைத் தோற்கடித்து கேல்னா பகுதியை நோக்கி முன்னேறினார். பிரகலாத் நீரஜ் ஜி உட்பட பல அமைச்சர்களையும் இந்த சதியில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட முக்கிய பிரமுகர்களையும் கைது செய்தார். கேல்னா கோட்டைக்குத் தேவையான உணவு உட்பட பல பொருட்களைக் கொடுத்த பின்னர் கவி கலஸை அழைத்துக்கொண்டு தலைநகருக்குத் திரும்பினார். வழியில் ராய்கட்டுக்கு 22 மைல் வட கிழக்கில் இருந்த சங்கமேஸ்வருக்கு திரும்பிவந்தார். அலக் நந்தா மற்றும் வருணா நதி ஆகிய இரண்டும் சங்கமிக்கும் இடத்தில் கவி கலஸ் தனது நண்பரும் மன்னருமான சம்பாஜிக்கு அழகிய தோட்டமும் அற்புதமான மாளிகையும் கட்டியிருந்த பகுதிக்குச் சென்றார். உடன் வந்த படைகளை ராய்கட்டுக்குத் திருப்பி அனுப்பிவிட்டு சொற்ப காவலர்களுடன் அங்கேயே தங்கி கேளிக்கைகளில் காலத்தைக் கழித்தார். மொகலாயப் படைகளால் இங்கு வரமுடியாது என்ற மெத்தனத்தில் காவல் கண்காணிப்பு எதுவும் இல்லாமல் அலட்சியமாக இருந்தார்.
குதுப் ஷாவின் பிரதான தளபதிகளில் ஒருவரான ஷேக் நிஸாமை கோல்கொண்டா கோட்டை முற்றுகையின்போது (28, மே, 1687) ஆசை காட்டி மொகலாயப் படை பக்கம் இழுத்திருந்தனர். அவருக்கு மஹ்ரப் கான் என்ற பட்டம் தந்து ஆறாயிரம் வீரர்களைக் கொண்ட படைக்குத் தளபதியாகவும் ஆக்கியிருந்தனர். பனாலா கோட்டையை முற்றுகையிடும்படி இந்த வீரமும் நிர்வாகத் திறமையும் மிகுந்த தளபதியை அனுப்பிவைத்தார் பேரரசர் (1688).
சங்கமேஸ்வர் பகுதியில் சம்பாஜி காவல் கண்காணிப்பு ஏதுமின்றி இருக்கும் விவரம் ஒற்றர்கள் மூலம் தெரியவந்ததும் மஹ்ரப் கான் விரைந்து செயல்பட்டார். மிகச் சிறந்த 2000 குதிரைப்படையினரையும் ஆயிரம் காலாட்படையினரையும் அழைத்துக்கொண்டு கோலாபூரில் இருந்த சம்பாஜியின் அரண்மனையை நோக்கி விரைந்தார். வழியில் இருந்த காடுகளையும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதையையும் சிதிலமடைந்திருந்த சாலைகளையும் விரைவாகக் கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டனர். மின்னல் வேகத்தில், புயல் வேகத்தில் 300 வீரர்கள் 90 மைல் தொலைவை இரண்டு மூன்று நாட்களுக்குள் கடந்து சங்கமேஸ்வரை அடைந்தனர்.
கவி கலஸ் நகருக்குள் ஊடுருவிய அவர்களை எதிர்த்துப் போரிட்டார். வலது கையில் ஒரு அம்பு துளைத்தது. மேலும் போரிட முடியாமல் குதிரையில் இருந்து இறங்கினார். ஆயுதங்கள், கவசங்களுடன் தயாராகி வந்த மராட்டியப் படை தற்போது தலைவர் இல்லாமல் போகவே சிதறி ஓடியது. சம்பாஜியும் அமைச்சரும் பிந்தையவரின் வீட்டில் இருந்த சுரங்கம் ஒன்றில் பதுங்கியிருந்தனர். அங்கிருந்து அவர்கள் பிடிக்கப்பட்டு வெளியில் யானை மேல் காத்திருந்த தளபதி இருக்கும் இடத்துக்கு, அவர்களுடைய நீண்ட முடியைப் பற்றியபடி இழுத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்த சம்பாஜியும் அவருடைய பிரதான ஆதரவாளர்களும் மனைவியரும் குழந்தைகளும் சிறைப்பிடிக்கப்பட்டனர் (1, பிப், 1689).
அக்லஜ் பகுதியில் முகாமிட்டிருந்த மொகலாயப் பேரரசருக்கு இந்தத் தகவல் உடனே சென்று சேர்ந்தது. பேரரசரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கியது.
15, பிப்ரவரி வாக்கில் பேரரசர் தன் படையுடன் பஹதுர்கட் வந்து சேர்ந்தார். சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் அங்கு கொண்டுவரப்பட்டனர். தக்காணத்தின் ஆட்சியாளர் மொகலாயப் பேரரசரின் உத்தரவின் பேரில் பொது மக்கள் முன்னிலையில் அவமதிக்கப்பட்டார். கோமாளி உடை, தொப்பிகள் அணிவிக்கப்பட்டு சம்பாஜியும் கவி கலஸும் ஒட்டகத்தில் ஏற்றி முரசுகள் ஒலிக்க பஹதுர்கட்டுக்கு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர். மொகலாயக் குடிமக்கள் நூற்றுக்கணக்கானவர்கள் வழியில் நின்று வேடிக்கை பார்த்தனர். சம்பாஜியை ஒரு காட்டு விலங்குபோலவும் சாத்தான் போலவும் பழித்தனர். அதன் பின்னர் பேரரசரின் முகாம் முழுவதும் இவர்கள் மிக மெதுவாக இழுத்துச் செல்லப்பட்டு பேரரசர் முன்னால் கொண்டுவந்து நிறுத்தினர். அங்கு அவர் தன் அரசவையைக் கூட்டியபடி தற்காலிக தர்பாரில் அமர்ந்திருந்தார். சம்பாஜி சிறைப்பிடிக்கப்பட்டு இழுத்துவரப்பட்டதைப் பார்த்ததும் தன் அரியணையில் இருந்து இறங்கி, தரையில் விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தில் மண்டியிட்டு அல்லாவுக்கு நன்றி தெரிவித்தார்.
இதைப் பார்த்த கவி கலஸ் ’மன்னா… ஆனானப்பட்ட ஒளரங்கஜீப் கூட உங்கள் முன்னால் அரியணையில் அமர பயந்து மண்டியிட்டுப் பணிகிறார் பாருங்கள்’ என்று ஹிந்தியில் சொன்னார். சம்பாஜியை மண்டியிடும்படி ஒளரங்கஜீப் கட்டளையிட்டபோது அவர் மறுத்துவிட்டார்.
பேரரசரின் அவையினர் சம்பாஜியை மன்னித்துவிடவேண்டும்; அமைதியான முறையில் தன் படையினர், அதிகாரிகள், அமைச்சர்களுடன் சரணடைய அனுமதிக்கவேண்டும் என்று சொன்னார்கள். சம்பாஜி தன் செல்வங்கள் அனைத்தையும் எங்கே மறைத்து வைத்திருக்கிறார் என்றும் அவருடன் மொகலாயத் தரப்பில் இருந்து யார் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்றும் தெரிந்துகொள்ள ரஹ்துல்லா கானை ஒளரங்கஜீப் அனுப்பினார். அனைவர் முன்னிலையும் அவமதிக்கப்பட்டதால் மிகவும் தளர்ந்துபோயிருந்த சம்பாஜி உயிர் பிச்சை கொடுத்ததைக் கண்டு ஆத்திரமடைந்து பேரரசரையும் இறைத்தூதரையும் வசைபாடினார். என் நட்புக்குப் பரிசாக உன் மகளைத் திருமணம் செய்துகொடு என்று ஆவேசத்தில் திட்டினார்.
மன்னிக்க முடியாத குற்றங்களைத் தொடர்ந்து செய்துகொண்டேயிருந்தார் மராட்டிய மன்னர். அன்றிரவு அவர்டைய கண்களைத் தோண்டி எடுத்தனர். கவி கலஸின் நாக்கைத் துண்டித்தனர். ’இஸ்லாமியப் பெண்களை அவமதித்ததற்காகவும் இஸ்லாமிய நகரங்களைச் சூறையாடியதற்காகவும்’ இஸ்லாமிய மதத் தலைவர்கள் சம்பாஜிக்கு மரண தண்டனை விதித்தனர். மொகலாயப் பேரரசர் அதற்கு சம்மதம் தெரிவித்தார். சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் சுமார் 10-15 நாட்கள் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். கோரேகாவுக்கு பேரரசர் தன் படையுடன் புறப்பட்டுச் சென்றபோது இவர்களையும் இழுத்துச் சென்றனர். புனேக்கு 12 மைல் வட கிழக்கில் பீமா நதிக்கரையில் (3, மார்ச்) முகாமிட்டனர். அங்கும் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டபின் 11, மார்ச்சில் கால்கள், கைகள் ஒவ்வொன்றாக வெட்டி நாய்களுக்கு வீசப்பட்டன. துண்டிக்கப்பட்ட தலையை வைக்கோல் திணித்து முரசுகள் முழவுகள் முழங்க தக்காணத்தின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் கொண்டு சென்று காட்சிப்படுத்தினர்.
18. 1689 போர். ராய்கட் கோட்டை மற்றும் சம்பாஜியின் ஒட்டு மொத்த குடும்பமும் கைப்பற்றப்படுதல்
சம்பாஜியின் வீழ்ச்சிக்குப் பின்னர் அவருடைய தம்பி ராஜாராம் சிறையில் இருந்து மீட்கப்பட்டு ராய்கட்டில் இருந்த அமைச்சர்களால் மன்னராக்கப்பட்டார். சம்பாஜியின் மகன் ஸாஹு (மஹராஜ்) அப்போது சிறுவராக இருந்தார். பயங்கர எதிரியான மொகலாயருக்கு எதிராக ஆட்சி செய்யும் வலிமை அவருக்கு இருந்திருக்கவில்லை. இதைத் தொடர்ந்து இதிஹத் கான் மராட்டிய தலைநகரை முற்றுகையிட்டார். யோகி போல் வேடமணிந்து ராஜா ராம் அங்கிருந்து தப்பினார் (5 ஏப்ரல்). பீஜப்பூரின் புதிய சுபேதாரான பர்ஹாவின் சையது அப்துல்லா கான் தப்பி ஓடியவர்களைப் பிடிக்கச் சென்றார். துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்திருக்கும் ஜரா மற்றும் சுபான்கட் பகுதியில் அவர்களை மூன்று நாளில் சிறைப்பிடித்தார். அந்தத் தீவில் அடைக்கலம் புகுந்திருந்த மராட்டியப் படையை இரவில் தாக்கி அங்கிருந்த முக்கிய பிரமுகர்கள் 100 பேரைக் கைது செய்தார். ராஜா ராம் இங்கிருந்தும் தப்பி ஓடிவிட்டார்.
பேந்தூர் ராணியின் ஆளுகைக்குபட்ட பகுதியில் (இன்றைய மைசூரில் ஷிமோகா மாவட்டமாக இருக்கிறது) அடைக்கலம் தேடினார். அங்கிருந்து செஞ்சிக் கோட்டைக்கு தப்பிச் சென்றவர் (1, நவம்பர்) மொகலாயப் பேரரசருக்கு சிறிய கப்பம் கட்டி சமாதானத்துக்கு வந்தார். தீவுப் பகுதியில் கைப்பற்றப்பட்ட மராட்டியத் தலைவர்கள் பீஜப்பூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர். ஆனால் இந்துராவ், பஹர் ஜி மற்றும் சுமார் 20 அமைச்சர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். காவலுக்கு இருந்தவர்களின் துணையின்றி இது நடந்திருக்க வாய்ப்பில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஒளரங்கஜீப் எஞ்சிய 80 பேருக்கு மரண தண்டனை விதித்தார்.
இதிஹாத் கான் (ஆஸாத் கானின் அமைச்சரின் மகன்) நீண்ட முயற்சிக்குப் பின் ராய்கட் கோட்டையை 19, ஆகஸ்ட், 1689-ல் கைப்பற்றினார். மறைந்த சிவாஜி, சம்பாஜியின் விதவை மனைவிகளையும் ராஜாராமின் மனைவிகளையும் அவர்களுடைய குழந்தைகளையும் சிறைப்பிடித்தார். அவர்களில் ஏழு வயதே ஆகியிருந்த சாஹு மஹராஜும் இருந்தார். பெண்கள் தனி முகாமில் தங்கவைக்கப்பட்டனர். சாஹுவுக்கு ஏழாயிரம் வீரர்களைக் கொண்ட படையும் ராஜா பட்டமும் தரப்பட்டது. எனினும் மொகலாய முகாமுக்கு அருகில் சிறைவைக்கப்பட்டே இருந்தார்.
அப்படியாக ஒருவழியாக ஒளரங்கஜீப் 1689 வாக்கில் வட இந்தியா மற்றும் தக்காணத்தின் வெல்ல முடியாத பாதுஷாவாக ஆனார். ஆதில் ஷா, குதுப் ஷா, ராஜா சம்பாஜி அனைவரும் வீழ்த்தப்பட்டு அவர்களுடைய ஆட்சிப் பகுதிகள் மொகலாய சாம்ராஜ்ஜியத்துடன் இணைக்கப்பட்டுவிட்டன.
அனைத்தையும் கைப்பற்றிவிட்டதுபோல் தோன்றியது. ஆனால் உண்மையில் அனைத்தும் கைவிட்டுப் போயிருந்தது. அவருடைய வீழ்ச்சியின் தொடக்கம் அது. ஒரே ஒரு நபரால் அல்லது ஒரே ஒரு தலைநகரில் இருந்துகொண்டு ஆளமுடியாத அளவுக்கு சாம்ராஜ்ஜியம் பெரிதாகிவிட்டிருந்தது. எல்லா பக்கங்களில் இருந்தும் எதிர்ப்புகள் முளைத்தெழுந்தன. அவர்களை அவரால் தோற்கடிக்க முடிந்தது. ஆனால் முற்றாக அழிக்கமுடியவில்லை. வட மற்றும் மத்திய இந்தியாவில் சட்டம் ஒழுங்குகள் சீர்கெடத்தொடங்கின. மொகலாய ஆட்சி நிர்வாகம் ஊழலும் மந்தத்தன்மையும் நிறைந்ததாக ஆனது. தக்காணப் பகுதியில் தொடர்ந்து பல வருடங்களாக நடைபெற்ற போரினால் கஜானா காலியாகிவிட்டிருந்த்து. ‘ஸ்பானிய வயிற்றுப் புண் (போர்கள்) என்னை வீழ்த்தியது’ என்று முதலாம் நெப்போலியன் சொன்னதுபோல் தக்காண வயிற்றுப் புண் (போர்கள்) ஒளரங்கஜீபை வீழ்த்தியது.
(தொடரும்)
___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின் தமிழாக்கம்.