Skip to content
Home » ஔரங்கசீப் #43 – 1700 வரை மராட்டியர்களுடனான மோதல்கள் – 1

ஔரங்கசீப் #43 – 1700 வரை மராட்டியர்களுடனான மோதல்கள் – 1

1. ஒளரங்கஜீபின் ஆட்சியின் இரண்டாம் பாதியில் அவருடைய படை நகர்வுகள்

8 செப் 1681-ல் ராஜபுதனப் பகுதிகளில் இருந்து புறப்பட்டுச் சென்ற ஒளரங்கஜீப் 22 மார்ச் வாக்கில் ஒளரங்கபாதுக்கு வந்து சேர்ந்தார். 13 நவம்பர் 1683 வரை அங்கிருந்தபடியே அனைத்துத் திசைகளிலான போர் நடவடிக்கைகளை முன்னின்று வழிநடத்தி வந்தார். அதன் பின்னர் அங்கிருந்து அஹமது நகருக்கு அப்பால் தெற்கே முன்னேறிச் சென்றார். 24 மே 1685-ல் பீஜப்பூருக்கு மிக அருகில் இருந்த ஷோலாபூருக்குச் சென்றுசேர்ந்தார். ஏற்கெனவே மொகலாயப் படைகள் பீஜப்பூர் கோட்டையை முற்றுகையிட்டிருந்தன. முற்றுகையை வெற்றிகரமாக முடித்தாகவேண்டும் என்று 3, ஜூலை 1686 வாக்கில் பீஜப்பூரின் புறநகர்ப் பகுதியில் இருந்த ரஸல்பூருக்குச் சென்றார்.

புதிதாகக் கைப்பற்றிய பீஜப்பூர் ஆதில் ஷாஹி சுல்தானின் தலைநகரைவிட்டு 30 அக்டோபரில் புறப்பட்டு குல்பர்கா மற்றும் பிதார் பகுதிக்குச் சென்றார். 28 ஜனவரி 1687 வாக்கில் கோல்கொண்டாவை முற்றுகையிட்டார். ஒருவருட காலம் அந்த முகாமில் இருந்தார். அதன் பின் பீஜப்பூருக்கு இரண்டாம் முறையாக 15 மார்ச், 1688-ல் திரும்பி அங்கு சுமார் 9 மாதங்கள் முகாமிட்டார். 14 டிசம்பரில் அங்கு பெருகிய பிளேக் தொற்றுநோயின் காரணமாக வெளியேறிச் சென்றார். பீமா நதிக்கரையில் இருந்த பஹதுர்கட் மற்றும் அகுல்ஜ் வழியாக புனேயில் இருந்த கோரேகாவுக்கு சென்று 3 மார்ச்சிலிருந்து 18 டிசம்பர் 1689 வரை முகாமிட்டார். 11, ஜன, 1690-ல் பீஜப்பூர் திரும்பினார் . ஆனால் அங்கு அதிகக் காலம் தங்காமல் அந்த நகரின் தெற்கே கிருஷ்ணா நதிக்கரையில் இருந்த பல்வேறு ஊர்களில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களைக் கழித்தார்.

இறுதியாக அந்த நதியின் தென் பகுதியில் பீஜப்பூருக்கு 34 மைல் தென் மேற்கே இருந்த ஜல்கங்கா பகுதியில் 21, மே, 1690-ல் முகாமிட்டார். அந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களையும் அடுத்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களையும் அங்கேயே கழித்தார். அதன்பின் மீண்டும் பீஜப்பூருக்குச் சென்று மார்ச் 1691-மே 1692 வரை 14 மாதங்களைக் கழித்தார். அதன் பின் மூன்று வருடங்களுக்கு (மே 1692-மார்ச் 1695) ஜல்கங்காவில் முகாமிட்டார்.

இறுதியில் ஐந்தாம் முறையாக பீஜப்பூருக்குச் சென்றார் (ஏப்ரல்-மே 1695). பீமா நதியின் பிரம்மபுரி பகுதியில் முகாமிட்டவர் அந்தப் பகுதிக்கு இஸ்லாம்புரி என்று பெயர் மாற்றினார். அங்கு நான்கரை ஆண்டுகள் தங்கினார் (21 மே 1695-19 அக் 1699). அங்கு அவருடைய முகாமைச் சுற்றிலும் சுவர் எழுப்பப்பட்டது. அங்கிருந்த ஆட்சிப் பிரதிநிதியிடம் தன் குடும்பத்தினரை விட்டுவிட்டு 19, அக், 1699-ல் மராட்டியக் கோட்டைகளைக் கைப்பற்றப்புறப்பட்டார். அவருடைய இறுதிக் காலம் முழுவதையும் இந்த மோதல்களே முழுமையாக எடுத்துக்கொண்டன. அஹமது நகருக்கு 20 ஜன 1706-ல் திரும்பியவர் 20 பிப் 1707-ல் உயிர் துறந்தார்.

2. மராட்டிய மீட்சி 1690-95

1688-1689 ஆண்டுகளில் மொகலயப் பேரரசருக்குத் தொடர் வெற்றிகள் கிடைத்தன. பீஜப்பூர், கோல்கொண்டா சுல்தானகங்களை முழுமையாகக் கைப்பற்றி தன் பேரரசுடன் இணைத்துக்கொண்டார். உதாரணமாக பேராதின் தலைநகரான சாகர், கிழக்கில் இருந்த ராய்ச்சுர், அதோனி, மைசூரில் இருந்த செரா, பெங்களூர், வந்தவாசி, காஞ்சீபுரம் (மதராஸ் கர்நாடகம்), பங்காபூர், பேல்வாவ் (தென் மேற்கில்) ராய்கட் உட்படப் பல மராட்டியக் கோட்டைகள் ஆகியவற்றைக் கைப்பற்றியிருந்தார். வட இந்தியாவிலும் கணிசமான வெற்றிகள் கிடைத்திருந்தன. ஜாட் பிரிவினரின் கலகத்தை அடக்கி அதன் தலைவரைக் கொன்றார் (4, ஜூலை, 1688).

1689 வாக்கில் புதிய மராட்டிய மன்னர் ராஜா ராம் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இருந்த மராட்டிய ஜின்ஜி கோட்டைக்கு வந்திருந்தார். ராய்கட் பகுதியில் இருந்த எஞ்சிய அமைச்சர்கள், தளபதிகள் எல்லாம் மேற்குப் பக்கமாக இருந்து வந்த மொகலாயப் படைகளை எதிர்த்தனர். மராட்டியர்களிடையே ஒற்றைத் தலைவரும் ஒரே மைய அதிகார ஆட்சியும் இல்லாமல் போனதால் ஒளரங்கஜீபின் நெருக்கடிகள் அதிகரித்தன. ஒவ்வொரு மராட்டிய தளபதியும் பல்வேறு திசைகளில் இருந்து தமது இலக்குகளுடன் தமது படைகளைக் கொண்டு தாக்கத் தொடங்கினர். அது ஒருவகையில் மக்கள் புரட்சிபோல் ஆகிவிட்டது. ஒளரங்கஜீபினால் அதைத் தடுத்து நிறுத்தமுடியவில்லை. ஏனென்றால் மராட்டிய அரசு என்றோ மராட்டிய அரசுப் படை, ராணுவம் என்றோ எதுவும் தனியாக அவர் தாக்கி அழிக்கும்படியாக இருந்திருக்கவில்லை.

மொகலாயப் படைகளால் எல்லா இடங்களிலும் முழு வலிமையுடன் இருந்து போரிட முடியவில்லை. எனவே பல இடங்களில் அவர்கள் தோற்று ஓட வேண்டிவந்தது. சம்பாஜியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தினால் மொகலாயர்கள் கைப்பற்றிய மராட்டியக் கோட்டைகள் எல்லாம் இப்போது மராட்டியர்களால் மீட்கப்பட்டுவிட்டன. மே 1690 தொடங்கி ஒளரங்கஜீபுக்கு எதிராக அலையடிக்க ஆரம்பித்தது. அப்போதுதான் ஒளரங்கஜீபின் பிரதான தளபதி ரஸ்தம் கான் மராட்டியப் படையால் சிறைப்பிடிக்கப்பட்டார். அவருடைய முகாம் முழுவதும் மராட்டியர்களால் சூறையாடப்பட்டது.

1690 மற்றும் 1691 முழுவதும் தெற்கிலும் கிழக்கிலும் வளமாக இருந்த பரந்துவிரிந்த பகுதிகள் முழுவதும் தன் ஆளுகையை அமலாக்குவதே ஒளரங்கஜீபின் முக்கிய நோக்கமாக இருந்தது. ஆதில் ஷா மற்றும் குதூப் ஷா ராஜ்ஜியங்களை வென்றதன் மூலம் இந்தப் பகுதிகள் மொகலாயர் வசம் வந்து சேர்ந்திருந்தன. இந்தக் காலகட்டத்தில் அவர் மராட்டியப் படைகளைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டுமிருந்தார். பெரிய அரசர்கள் யாரும் இல்லை என்பதால் மராட்டிய ராஜ்ஜியம் முற்றாக வீழ்த்தப்பட்டதாகவே கருதினார். மராட்டிய மக்களை அவர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

1691 இலையுதிர் காலத்தில் ஜின்ஜி கோட்டையின் முற்றுகைக்கு மிகப் பெரிய படையை அனுப்பிவைத்தாக வேண்டிய நெருக்கடி பேரரசருக்கு நேர்ந்தது. 1692-ல் மொகலாயப் படைகளுக்கு மேற்குப் பக்கத்தில் பெரிய வெற்றி எதுவும் கிடைக்காமல் போனது. கிழக்குக் கடற்கரைப் பக்கத்திலும் அவர்களுக்குப் பெரும் தோல்வியே கிடைத்தது. இரண்டு உயர் நிலை மொகலாயத் தளபதிகள் மராட்டியப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டனர். ஜின்ஜி கோட்டைக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மொகலாயப் படைகளைப் பின்வாங்கிக் கொள்ளவேண்டிவந்தது. இளவரசர் காம் பக்ஷை அவருடன் இருந்தவர்களே சிறைப்பிடித்துவிட்டனர் (டிச 1692 – ஜன 1693). எனவே முதல் வேலையாக கிழக்கு கர்நாடகப் பகுதிக்கு மிகப் பெரிய படையையும் ஆயுதங்களையும் உணவுப் பொருட்களையும் அனுப்புவதே முக்கியமானதாக இருந்தது. மேற்குப் பக்கம் அக் 1692-ல் பனாலா கோட்டையை முற்றுகையிட்டிருந்த இளவரசர் முயிஸ் உத் தீன் அடுத்த வருடம் முழுவதும் வெற்றி கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டார். 1694-ல் மராட்டியப் படை அவருடைய படையை முழுவதுமாக விரட்டியும் அடித்தது. அதோடு சந்தாஜி கோர்படே, தன யாதவ், நிமா சிந்தியா, ஹனுமந்த ராவ் மற்றும் பல மராட்டியத் தலைவர்கள் தொடர்ந்து படையெடுத்து மொகலாய ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளைத் தாக்கிவந்தனர்.

இதனிடையில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பிதாரிலிருந்து பீஜப்பூர் வரையிலும் ராய்ச்சூரில் இருந்து மல்கேத் வரையிலுமான பகுதிகளில் பிதியா நாயக்கர் தலைமையில் பேராத் பழங்குடிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனால் மொகலாயத் தளபதி பெரிய படையுடன் சாகர் பகுதியில் ஜூன் 1691 தொடங்கி டிசம்பர் 1692 வரை முகாமிட்டுக் கண்காணிக்கவேண்டியிருந்தது. பேராத் பழங்குடித் தலைவரை ஒருவழியாகத் தோற்கடித்தனர். ஆனால் மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் தலைமையில் அடுத்த கலகம் எழுந்தது. அதை அடக்க 1696-ல் மிகப் பெரிய படையை மீண்டும் அனுப்பவேண்டியிருந்தது. மேற்கு தக்காணப் பகுதியில் 1694-ல் நடைபெற்ற போரிலும் இதுபோலவே உறுதியான இறுதி வெற்றி கிடைக்காமல் போனது. மதராஸ்-கர்நாடகப் பகுதியில் மட்டும் புதிய படைகள் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து மொகலாயத் தளபதி, கணிசமான வெற்றிகளைப் பெற்றார். தஞ்சாவூர் பகுதிகளின் மீது வரிகள், கப்பம் விதித்தார். ஆனால் ஜின்ஜி இறுதிவரை கைப்பற்றப்படாமலே இருந்தது.

இறுதியில் ஏப் 1695-ல் ஆதில் ஷா மற்றும் குதுப் ஷாஹி ஆகியோரின் சுல்தானகங்களைப் போராடிப் பெற்றதன் மூலம் மொகலாயப் பேரரசுக்குப் பெரிய ஆதாயம் எதுவும் கிடைக்கவில்லை என்பதை ஒருவழியாகப் புரிந்துகொண்டார். சிவாஜி காலத்திலோ சம்பாஜி காலத்திலோ இருந்ததுபோல் இப்போதைய மராட்டிய எதிர்ப்புகள் இல்லை; அவை வேறு வகையாக உருவாகிவிட்டிருக்கின்றன என்பதையும் புரிந்துகொண்டார். அவர்கள் வெறும் பழங்குடிப் போராளிகளோ உள்ளூர் கலகக்காரர்களோ அல்ல; இந்தியத் துணைக்கண்டத்தில் பம்பாய் தொடங்கி மதராஸ் வரையிலும் காற்றைப் போல் கையில் பிடிக்க முடியாத எங்கும் நிறைந்திருக்கும் எதிரியாகவும் தக்காணப் பகுதியில் மொகலாயப் பேரரசால் வீழ்த்தப்பட முடியாத ஒரே அரசியல் சக்தியாகவும் எழுந்து நிற்பதைப் புரிந்துகொண்டார்.

ஏதோ ஒரு தலைவர் அல்லது அரசரைக் கொண்டதாக இருந்தால் அந்த ஒரு நபரை வீழ்த்துவதன் மூலம் அந்த சக்தியை வீழ்த்த முடிவதுபோல் இப்போதைய மராட்டிய சக்திகள் இல்லை என்பதைப் புரிந்துகொண்டார். மொகலாயப் பேரரசின் எதிரிகள் அனைவருடனும் நட்பு பாராட்டுபவர்களாகவும் எதிரிகள் அனைவரும் இணையும் ஒற்றை மையமாகவும் ஆகிவிட்டிருந்தனர். தக்காணத்தில் மொகலாய ஆட்சி நிர்வாகத்தை எதிர்ப்பவர்களாகவும் மொகலாயப் பகுதிகளில் அமைதியைக் குலைப்பவர்களாகவும் ஆகிவிட்டிருந்தனர். ஏன் மால்வா, மத்திய இந்தியா மற்றும் புந்தேல்கண்ட் பகுதிகளிலும் அவர்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.

தக்காணத்தில் முழு வெற்றி பெறாமல் ஒளரங்கஜீபுக்கு தில்லிக்குத் திரும்பிச் செல்லவும் விருப்பம் இருந்திருக்கவில்லை. தக்காணத்தில் அவர் வெறுமனே கால் ஊன்ற மட்டுமே முடிந்திருந்தது. வேறெதுவும் செய்ய ஆரம்பித்திருக்கவே இல்லை.

3. இஸ்லாம்புரியில் ஒளரங்கஜீப் (1695-1699)

ஒளரங்கஜீப் மே 1695-ல் உயிருடன் இருந்தவர்களில் மூத்த மகனான ஷா ஆலமை வட மேற்கு பிராந்திய (பஞ்சாப், சிந்து, ஆஃப்கனிஸ்தான்) அரசை நிர்வகிக்கவும் இந்தியாவின் மேற்கு நுழைவாயிலைப் பாதுகாக்கவும் அனுப்பிவைத்தார். அதன்பின் இஸ்லாம்புரியில் நான்கரை ஆண்டுகள் கழித்தார். அந்த முகாமையே தனது பிற படையெடுப்புகளுக்கு மையமாக வைத்துக் கொண்டார். 1695-1699 வரையில் இஸ்லாம்புரியில் இருதபோது மராட்டியப் படைகள் வலிமை பெற்று மிக அருகில் வந்தன. மராட்டிய கர்நாடகப் பகுதிகளில் (பம்பாய் பிரஸிடென்ஸி பகுதிகளில்) மொகலாயப் படை கொஞ்சம் தற்காத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. மராட்டியப் படையினர் கண் மூடிக் கண் திறப்பதற்குள் புயல் வேகத்தில் வந்து தாக்கிவிட்டு தப்பிச் சென்றவண்ணம் இருந்தனர். மொகலாயர்களால் எல்லா பகுதிகளையும் பாதுகாக்க முடியாமல் போனது. தாக்கிவிட்டுச் செல்லும் படைகளைத் துரத்திச் செல்வதால் எந்தப் பலனும் கிடைக்க வாய்ப்பும் இல்லை. தாக்க வந்த படைகளுமே தாக்கிவிட்டுச் செல்வதைத் தவிர வேறு எதையும் செய்யவும் இல்லை.

ஆங்காங்கே இருந்த மொகலாயப் படையினர் அங்கிருக்கும் உள்ளூர் மராட்டியத் தலைவர்களுடன் அதிகாரபூர்வமற்ற முறையில் பேசினர். அங்கு கிடைக்கும் வருவாயில் நான்கில் ஒரு பங்கை மராட்டியர்களுக்குத் தந்துவிடுவதாகவும் தங்களைத் தாக்கவேண்டாம் என்றும் பேசி ஓர் உடன்படிக்கைக்கு வந்தனர். இதைவிடக் கொடுமை என்னவென்றால், பல மொகலாய அதிகாரிகள், தளபதிகள் எல்லாம் மொகலாயக் குடிமக்கள், வணிகர்களை மிரட்டிக் கொள்ளையடிக்க ஆரம்பித்தனர். அந்தப் பகுதியின் வாஸிர் நிர்வாகிகளிடமிருந்து மொகலாய அரசுக்குக் கிடைக்கவேண்டிய எந்தக் கப்பப் பணமும் அவர்களுக்குக் கிடைக்காமல் இருந்தது. உண்மையில் மொகலாய ஆட்சி நிர்வாகம் இந்தப் பகுதிகளில் முழுவதும் குலைந்துபோயிருந்தது. பேரரசரும் அவருடைய படைகளும் இங்கு இருந்ததால் மட்டுமே இவை மொகலாய ஆட்சிப் பகுதி என்றவகையில் இருந்தன. மற்றபடி இந்தப் பகுதியில் இருந்த ஒளரங்கஜீபின் ஆட்சி என்பது ஒரு மாயத் தோற்றம் மட்டுமே.

இஸ்லாம்புரியில் ஒளரங்கஜீப் இருந்தபோது நடந்த முக்கிய சம்பவங்கள் என்று பார்த்தால் சந்தாஜி கோர்படே நவம்பர் 1895-ல் காசிம் கானையும் ஜன 1696-ல் ஹிம்மத் கானையும் வீழ்த்தினார். உள்ளூரில் நடந்த மோதலில் ஜூன் 1697-ல் சந்தாஜி கோர்படே கொல்லப்பட்டார். ஜின்ஜி கோட்டை ஜன 1698-ல் மொகலாயர்களால் கைப்பற்றப்பட்டது. ராஜா ராம் மஹாராஷ்டிராவுக்கு திரும்பினார்.

4. ஒளரங்கஜீபின் இறுதிப் போர்கள் (1699-1705)

இறுதியாக நடந்த சம்பவம் ஒளரங்கஜீபைத் தன் நிலைப்பாட்டைமாற்றிக்கொள்ளவைத்தது. கிழக்குக் கடற்கரைப் பகுதியை எந்த எதிர்ப்பும் இன்றித் தன் கைவசம் வைத்திருந்தவர் இதனால் மேற்குப் பகுதியில் தன் முழுப் படையையும் குவித்தார். அதனால் ஒளரங்கஜீபின் இறுதிக்கட்டம் ஆரம்பித்தது. மராட்டியக் கோட்டைகளின் முற்றுகைகளைப் பேரரசர் தொடர்ந்து தன் நேரடி மேற்பார்வையில் முன்னெடுத்தார். எஞ்சிய காலம் முழுவதும் (1699-1707) ஏற்கெனவே நடந்ததுபோன்ற தோல்விகளே தொடர்ந்தன. மொகலாயப் பேரரசர் மிகப் பெருமளவுக்கான பொருள் செலவுடன் மிக அதிகப் போர்வீரர்களுடன் மிக அதிகக் கால முற்றுகைக்குப் பின் ஒரு கோட்டையைக் கைப்பற்றுவார். அங்கிருந்து வேறொரு கோட்டையைக் கைப்பற்றத் தன் படையுடன் புறப்பட்டுச் செல்வார்; போதிய காவல் இல்லாத முந்தைய கோட்டையை மராட்டியப் படைகள் ஒரு சில மாதங்களிலேயே கைப்பற்றிவிடும். மீண்டும் மொகலாயப் படை அந்தக் கோட்டையைக் கைப்பற்ற ஓரிரு வருடங்களுக்கு நீண்ட முற்றுகையை ஆரம்பிக்கவேண்டிவரும்.

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகள், சேறும் சகதியுமான சாலைகள், சிதிலமடைந்த மலைப்பாதைகள் இவற்றினூடாக மொகலாயப் படையினர் மிக அதிகக் கஷ்டப்பட்டுத்தான் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குச் செல்லவேண்டியிருந்தது. இந்தப் படைகள் அனுபவித்த துயரங்கள் சொல்லி மாளாது. சுமை தூக்கிகள் திடீரென ஓடிப் போய்விடுவார்கள். காளைகள், ஒட்டகங்கள் எல்லாம் பசியாலும் அதிக வேலைப் பளுவாலும் இறந்துபோய்விடும். படை முகாமில் எப்போதும் உணவுப் பற்றாக்குறை இருந்த வண்ணம் இருக்கும். திரும்பத் திரும்ப உருண்டு விழும் பாறையை மேலேற்றிச் செல்லும் சிஸிபஸ் போன்ற இந்த வீண் படையெடுப்புகளினால் மொகலாயத் தளபதிகள், அதிகாரிகள் எல்லாம் மிகவும் சலிப்பும் களைப்பும் அடைந்தனர். வட இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றுவிடுவோம் என்று யாரேனும் சொன்னால் ஒளரங்கஜீப் அவர்கள் மேல் கடும் கோபத்துடன் திட்டுவார். கோழையென்றும் உடல் வணங்காமல் உல்லாசமாக இருக்க விரும்புகிறார் என்றும் கடிந்துகொள்வார்.

பெனின்சுலார் போரில் ஃப்ரெஞ்சு தளபதிகளின் போட்டி பொறாமைகள் நெப்போலியனுக்கு வீழ்ச்சியை உருவாக்கியதுபோல் ஒளரங்கஜீபுக்கும் நடந்தது. இதனால் அத்தனை முற்றுகையையும் போர்களையும் பேரரசரே முன்னின்று நடத்தவேண்டியிருந்தது. இல்லையென்றால் எதுவுமே எதுவுமே நடக்காது என்ற நிலையே இருந்தது. சத்ரா, பர்லி, பனாலா, கேல்னா, கோண்டானா, ராய்கட், தோர்னா, வாகின்கேரா முதலான எட்டு மராட்டியக் கோட்டைகளின் முற்றுகைகள் 1699-1705 வரை ஐந்தரை ஆண்டுகள் நீண்டன.

வாகின்கேரா முற்றுகை (8 பிப், 1704 – 27 , ஏப், 1705) தான் 88 வயதான ஒளரங்கஜீபின் இறுதிப் போர் முற்றுகை. இந்தக் கோட்டையைக் கைப்பற்றிய பின் தேவாபூரில் 1705 மே முதல் அக்டோபர்வரை தங்கினார். அங்கு கடுமையாக நோய்வாய்ப்பட்டார். ஒட்டு மொத்த மொகலாயப் படையும் குழப்பத்திலும் சோர்விலும் ஆழ்ந்தது. இறுதியில் படையினரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, தன் மரணம் விடுத்த எச்சரிக்கையைப் புரிந்துகொண்டு அஹமது நகருக்கு 20, ஜன, 1706-ல் திரும்பினார். ஒரு வருடம் கழித்து உயிர் துறந்தார்.

(தொடரும்)

___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *