5. ஒளரங்கஜீபின் துயரம் நிறைந்த கடைசி ஆண்டுகள்
ஒளரங்கஜீபின் இறுதி ஆண்டுகள் உண்மையிலேயே மிகவும் துயம் நிறைந்ததாகவே இருந்தன. நிர்வாகம் மற்றும் மக்கள் சார்ந்த பார்வையில் ஐம்பதாண்டுகால அவருடைய ஆட்சி மிகப் பெரிய தோல்வி என்ற நிலை உருவாகிவிட்டிருந்தது. தக்காணத்தில் முன்னெடுக்கப்பட்ட முடிவற்ற போர்கள் கஜானாவை முழுவதுமாகத் துடைத்தழித்தன. அரசாங்கம் திவாலாகிவிட்டது. படை வீரர்களுக்கு மூன்று ஆண்டுகளாக முறையான சம்பளம் தரப்படவில்லை. நிலுவைத் தொகை மிக அதிகமாக இருந்தது. அவர்கள் கலகத்தில் ஈடுபட்டனர். கடைசிக்காலத்தில் வங்காளத்தில் இருந்து விசுவாசமான நாணயமான திவான் முர்ஷித் குலி கான் அனுப்பிவந்த தொகை மட்டுமே ஒளரங்கஜீபின் குடும்பத்துக்கும் படைக்கும் ஒரே நிதி ஆதாரமாக இருந்தது. எனவே அந்தத் தொகையை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலை உருவாகிவிட்டிருந்தது.
தக்காணப் பகுதியில் மராட்டியர்கள் எழுச்சிபெற்றுவிட்டிருந்தனர். வட மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் சட்ட ஒழுங்குச் சீர்கேடுகள் பெருகிவந்தன. ஹிந்துஸ்தானின் இந்தப் பகுதிகளின் அதிகாரிகள், அமைச்சர்கள் மீது தெற்கே தொலைவில் இருந்த முதிய பேரரசர் முழு கட்டுப்பாட்டையும் இழந்துவிட்டார். இவர்கள் ஊழலிலும் நிர்வாக முறைகேடுகளிலும் மூழ்கினர். உள்ளூர் தலைவர்களும் ஜமீன்தார்களும் பேரரசின் நிர்வாக அதிகாரிகளுக்குக் கட்டுப்படாமல், தமது அதிகாரத்தை மீட்டெடுத்தனர். எங்கும் ஒரே கலகக் குரல். ஒளரங்கஜீப் இறப்பதற்கு முன்பே மொகலாயப் பேரரசில் பெரும் குழப்பம் ஏற்படத் தொடங்கியிருந்தது.
தக்காணப் பகுதியில் மராட்டியக் குறு நில மன்னர்கள் ஒவ்வொருவரும் மொகலாயப் பகுதிகளுக்குள் தமது கெரில்லா தாக்குதல் மூலம் அடிக்கடித் தாக்குதல் நடத்தி பேரரசுக்கு மிகப் பெரிய இழப்பை உருவாக்கிவந்தனர். காற்றைப் போல் கண் மூடிக் கண் திறப்பதற்குள் வந்து தாக்கிவிட்டு தப்பிச் சென்றுவந்தனர். பேரரசின் தலைமைப் பகுதிகளில் இருந்து, ‘கொள்ளையர்களை விரட்ட’ அனுப்பப்படும் பெரிய படைகள் என்னதான் துரத்திச் சென்றாலும் எதிரிகளைப் பிடித்து அழிக்கவே முடியவில்லை. மொகலாயப் படை திரும்பியதும் சிதறி ஓடியிருந்த மராட்டியப் படையினர் துடுப்பால் விலக்கப்பட்ட நீர் மீண்டும் ஒன்று சேர்வதுபோல் ஒன்று கூடி முன்பு போலவே மொகலாயப் பகுதியில் தாக்குதலை நடத்திவந்தனர். மொகலாயப் படை நகர்ந்து செல்லும்போதும் முகாமிட்டுத் தங்கும்போதும் அதற்கு மூன்று நான்கு மைல் தொலைவில் அபாயகரமான, வெற்றிகரமான மராட்டியப்படை எப்போதும் இடைவிடாது துரத்திவந்தவண்ணம் இருந்தது.
மொகலாயப் பேரரசினால் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் முன்னெடுக்கப்பட்ட தக்காணப் போரினால் பெரும் இழப்பு ஏற்பட்டது. மொகலாயத் தரப்பில் ஆண்டு தோறும் சுமார் ஒரு லட்சம் வீரர்களுக்கு மேல் மரணமடைந்தனர்; மூன்று லட்சத்துக்கு மேல் குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள், எருதுகள் என இழந்தனர். மொகலாயப் படை முகாமில் நோய்த்தொற்று எப்போதும் இருந்துவந்தது. தினமும் அதிலேயே நூற்றுக்கணக்கில் இறந்தும்வந்தனர். தக்காணப் பகுதிகளின் பொருளாதார நிலைமை முற்றாக அழிந்துபோயிருந்தது. விளை நிலங்கள் தரிசாகிவிட்டன. மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுவிட்டன. எங்கு பார்த்தாலும் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் எலும்புக் குவியலே நிறைந்து கிடந்தன. மூன்று நான்கு நாட்கள் பயணம் செய்தால்தான் சிறு நெருப்பையோ புகையையோ பார்க்க முடியும் எனும் அளவுக்கு மக்கள் நடமாட்டமும் வாழ்வாதாரமும் முழுவதுமாக அற்றுப்போயிருந்தது.
6. ராஜா ராம் பதவி ஏற்க உதவிய மராட்டிய அமைச்சர்களும் தளபதிகளும்
சம்பாஜியின் மகன்கள் சிறைப்பிடிக்கப்பட்டு அடுத்த வாரிசான ராஜா ராம் விரட்டியடிக்கப்பட்ட நிலையில் மராட்டியர்களின் சாமர்த்தியமே அவர்களைக் காப்பாற்றி விடுதலை பெற உதவியது. மன்னர் என்று யாரும் இல்லாத அந்தக் காலகட்டத்தில் இந்த சாதனையைச் செய்தவர்கள் பற்றி கொஞ்சம் நாம் பார்க்கவேண்டியது அவசியமே. 1689 இறுதி வாக்கில் மராட்டிய ராஜ்ஜியத்தில் பேஷ்வா நீலகண்ட மோரேஷ்வர் பிங்களே, அமாத்யரான ராமசந்திர நீலகண்ட பவடேக்கர், சசீவ் (தலைமைச் செயலர்) பொறுப்பில் இருந்த சங்கராஜி மல்ஹர், மறைந்த நீதிமான் நீராஜி ராவ்ஜியின் மகன் ப்ரஹலாத் ஆகிய நால்வர் மராட்டிய ராஜ்ஜியத்தை மீட்டெடுக்க உதவினர். கோல்கொண்டாவில் மராட்டிய ராஜ்ஜியத்தின் பிரதிநிதியாக ப்ரஹலாத் இருந்தார். மராட்டிய வரலாற்றில் மன்னர் யாரும் இல்லாத இந்தக் காலகட்டத்தில், அதுவரை இரண்டாம் நிலைப் பதவியில் இருந்துவந்த தன சிங் யாதவ், சந்தாஜி கோர்படே (சேனாபதிகள்), பரசுராம் திரியபக் மூவரும் தமது புத்திகூர்மை மற்றும் திறமைகளின் மூலம் முன்னிலைக்கு வந்தனர். பரசுராம் த்ரியம்பக் 1701-ல் ராஜ்ய பிரதிநிதி அந்தஸ்துக்கு உயர்ந்தார்.
1689-ல் பிப்ரவரியில் மராட்டியத் தலைநகரான ராய்கட்டை ஸுல்ஃபிகர் கான் முற்றுகையிட்டார். (19, அக்டோபரில்) அந்தக் கோட்டை மொகலாயர் வசம் வீழ்வதற்கு முன்பாக ராஜாராம் ஒரு துறவி போல் வேடமணிந்துகொண்டு 5, ஏப்ரலில் பனாலா கோட்டைக்குத் தப்பிச் சென்றுவிட்டார். மொகலாயப் படையினரை இரண்டாகப் பிரித்து வைக்கவேண்டும் என்று ராமச்சந்திரர் ஆலோசனை சொன்னார். ’மராட்டியர்களின் ஒரு படை கிழக்கு கர்நாடகாவில் தாக்குதல் நடத்தி மொகலாயப் படைகளை அந்தப் பக்கம் இழுக்கவேண்டும். பிற அதிகாரிகள் மற்றும் தளபதிகளைக் கொண்டு மேற்குப் பக்கம் அவர் தாக்குதல் நடத்துவார்’ என்று வியூகம் வகுத்தார்.
வருங்காலத்தில் என்ன செய்யவேண்டும் என்று மராட்டியர்கள் தெளிவாகத் திட்டமிட்டுக் கொண்டனர். ஜின்ஜி கோட்டைக்கு ராஜா ராமைப் பத்திரமாகக் கொண்டு சென்று கிழக்குப் பிராந்தியத்தில் ஒரு படையை காவலுக்கு நிறுத்தவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. மைய ராஜ்ஜியத்தின் நிர்வாகப் பொறுப்புகள் ராமச்சந்திர நீலகண்ட பவடேக்கரிடம் ஒப்படைக்கப்பட்டன. அமாத்யரான அவருக்கு ஹகுமத் பனா என்ற சர்வ அதிகாரி பட்டம் தரப்பட்டது. விசால்கட் பகுதியில் அவருடைய அரண்மனை இருந்தது. அதன் பின் பர்லி பகுதிக்கு இடம் பெயர்ந்தார். அவருக்கு உதவியாக சசீவான சங்கரா ஜி மல்ஹர் மற்றும் வேறு சில அதிகாரிகளும் அமைச்சர்களும் இருந்தனர். மைய ராஜ்ஜியத்தில் இருக்கும் எல்லா அதிகாரிகளும் தளபதிகளும் ராமசந்திரரையே மன்னராக மதித்து அவருடைய உத்தரவுகளுக்குக் கீழ்படிந்து நடக்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
ராமச்சந்திரருக்கு பிறவியிலேயே ஆதிக்க குணங்களும் ஒருங்கிணைக்கும் நிர்வாகத் திறமைகளும் இருந்தன. திறமையான தளபதிகளையெல்லாம் தன் பக்கம் கொண்டுவந்தார். பொதுவாக உள்ளுக்குள் போட்டி பொறாமைகளுடன் இருக்கும் மராட்டிய கெரில்லா படைத் தலைவர்களை ஒத்திசைவுடன் ஒற்றுமையாக இயங்கும்படிச் செய்தார்.
ஜின்ஜி கோட்டைக்கு 1, நவ, 1689-ல் வந்தவர் இறந்த ஹரிஜி மஹாதிக்கின் விதவை மனைவி மற்றும் மகனிடமிருந்து ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டார். ராஜ்ஜியம் மிகவும் வறுமை நிலையில் இருந்தபோதிலும் முழு அரசவையுடன் திறமையான ராஜாவைப் போல் ஆட்சி நிர்வாகத்தை ஆரம்பித்தார். பேஷ்வா நீலகண்ட பிங்களேயும் தன் எஜமானருடன் ஜின்ஜி கோட்டைக்கு வந்திருந்தார். ஆனால் அங்கு இரண்டாம் கட்டத் தலைவராகவே இருக்கவேண்டிவந்தது. மன்னரின் பிரதான அமைச்சராகவும் நிர்வாகத்தில் முழு அதிகாரமும் பிரஹலாத் நீரஜியிடம் தரப்பட்டிருந்தது. அவருக்கு ராஜ்ய பிரதிநிதி என்ற பட்டமும் தரப்பட்டது. அஷ்ட பிரதான் (எண்பேராயம்) என்ற அமைச்சரவைக்கு அப்பாற்பட்டவராக அனைவருக்கும் மேலான பதவியில் அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
7. 1689 காலகட்டத்தில் ஒளரங்கஜீபின் வெற்றிகள் மற்றும் கொள்கைகள்
மஹாராஷ்டிராவிலிருந்து ராஜாராம் தப்பி ஓடுவதற்கு முன்பாகவே ஒளரங்கஜீப் பல மராட்டியக் கோட்டைகளை முற்றுகையிட்டுக் கைப்பற்றியிருந்தார். வேறு பலவற்றை பணம் கொடுத்தும் பதவி ஆசை காட்டியும் கைப்பற்றியிருந்தார். வட கோடியில் சால்ஹேர் (21, பிப், 1687), திரியம்பக் (8, ஜன, 1689) வாக்கில் கைப்பற்றப்பட்டன. மத்திய பகுதியில் சிங்ககட் (நவம்பர் 1684), ராய்கட் (மே, 1689) ஆகியவையும் முற்றுகையிடப்பட்டன. ராய்கட், பனாலா கோட்டைகள் எல்லாம் அந்த ஆண்டு இறுதிக்குள் கைப்பற்றப்பட்டன. வட கொங்கணி பகுதியில் அவருடைய முக்கிய தளபதி மத்பர் கான் மேலும் பல பகுதிகளைக் கைப்பற்றினார். மத்திய மற்றும் தென் கொங்கணி உள் பகுதிகளில் மராட்டியரின் ஆதிக்கமே நிலவியது. ஆனால் கடலோரப் பகுதிகளில் மொகலாயர்கள் வெற்றி பெற்றனர். சாவல் துறைமுகத்தை மராட்டியர் இழக்க நேர்ந்தது. அந்தேரியின் தீவுக் கிடங்குப் பகுதியை விட்டு வெளியேற நேர்ந்தது. தமது கடற்படைத் தலைமையகத்தை தெற்கே கேரியா அல்லது விஜய்துர்க் பகுதிக்கு மாற்றிக்கொள்ளவேண்டிவந்தது.
1689 வாக்கில் பல மராட்டியக் கோட்டைகள் ஒளரங்கஜீப் வசம் எளிதில் வீழ்ந்தன. அவருடைய அப்போதைய ஒரே லட்சியம், சமீபத்தில் வெல்லப்பட்டிருந்த ஆதில் ஷா, குதுப்ஷா ஆகியோரின் வளமான எல்லையற்ற பகுதிகளில் மொகலாய ஆட்சியை நிலைநாட்டுவதுதான். எனவே 1689, 1690, 1691 காலகட்டத்தில் தென்னிந்தியாவின் சமவெளிகளிலும் கிழக்குப் பகுதிகளிலும் அது தொடர்பான மிகவும் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துவந்தார். இதனால் மேற்குப் பக்கம் இருந்த வறண்ட மலைக் கோட்டைகள் பக்கம் தன் படைகளையும் கவனத்தையும் குவிக்கவில்லை.
8. மராட்டியர் மறுமலர்ச்சி; 1690-ல் ருஸ்தம் கானைச் சிறைப்பிடித்தல்; பனாலா கோட்டையை முற்றுகையிடுதல்
மராட்டியர்கள் தமது மன்னர் சம்பாஜி மூர்க்கத்தனமாகக் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட பின்னடைவில் இருந்து 1690 வாக்கில் மீண்டெழ ஆரம்பித்திருந்தனர். 25, மே, 1690 வாக்கில் முதல் முக்கியமான வெற்றியை ஈட்டினர். சத்ரா பகுதியில் தன் குடும்பத்தினர், படைகளுடன் ருஸ்தம் கான் முற்றுகையிட்டு அந்தக் கோட்டையை தன் பாதுஷாவுக்குப் பெற்றுத் தரத் திட்டமிட்டுக் கொண்டிருந்தார். ராமச்சந்திரர், சங்கராஜி, சந்தா, தனா யாதவ் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரைத் தாக்கினர். போர்க்களத்தில் படுகாயமடைந்து யானை மேலிருந்து கீழே விழுந்த ருஸ்தம் கானைச் சிறைப்பிடித்தனர். அந்தப் போரில் சுமார் 1500 மொகலாயர்கள் கொல்லப்பட்டனர். சத்ரா கோட்டையில் இருந்த மராட்டியத் தளபதி ருஸ்தம் கானின் குடும்பத்தினரையும் சிறைப்பிடித்து கோட்டைக்குக் கொண்டு சென்றார். மொகலாயப் படையில் இருந்த 4000 குதிரைகள், எட்டு யானைகள், மற்றும் படையினரின் பிற அனைத்துப் பொருட்களையும் கைப்பற்றினர். ருஸ்தம் கான் ஒரு லட்சம் கப்பப் பணம் தர சம்மதித்தார்.
அதன்பின் ராமச்சந்திரரும் சங்கரா ஜியும் ப்ரதாப்கட், ரோஹிரா, ராய்கட், தோர்னா என பல கோட்டைகளை 1690லேயே மீட்டுவிட்டனர். முன்பு ராய்கட் கோட்டையை மொகலாயர்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து பனாலா கோட்டையினர் மனம் தளர்ந்துபோய் அந்தக் கோட்டையை மொகலாயர்களுக்குப் போன டிசம்பரில் விற்றுவிட்டுச் சென்றிருந்தனர். ஆனால் மொகலாயர்கள் இந்தக் கோட்டையின் பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் மெத்தனமாகவே இருந்தனர். மராட்டியத் தளபதி பரசுராம் இந்தக் கோட்டையை எதிர்பாரதவிதமாகத் தாக்கி எளிதில் மீட்டுவிட்டார் (1692 நடுப்பகுதி வாக்கில்).
இளவரசர் முவாஸ் உத்தீன் அக்டோபர் 1692-ல் பனாலா கோட்டையை முற்றுகையிட்டார். 1694 வரை அங்கிருந்தும் அவரால் அந்தக் கோட்டையைக் கைப்பற்ற முடியவில்லை. அக் 1693-ல் தன யாதவ் அங்கு படையுடன் வந்து பனாலா கோட்டைக்கு வெளியே இளவரசர் முவாஸ் உத்தீன் செய்திருந்த போர் அரண்கள், பதுங்குகுழிகள் அனைத்தையும் அழித்தார். கோட்டைக்குத் தேவையான ஆயுதங்கள், உணவுப் பொருட்கள் அனைத்தையும் கொடுத்தார். அதன் பின் அந்த முற்றுகை பெருமளவுக்குக் கைவிடப்பட்ட நிலைக்குப் போனது. பேரரசரை ஏமாற்றும் நோக்கில் இளவரசர் அங்கு வெறுமனே முற்றுகையைப் பெயரளவுக்குத் தொடர்ந்துவந்தார்.
மார்ச், 1694-ல் பனாலா கோட்டைப் பகுதியில் இருந்து வெளியேறிச் செல்ல இளவரசர் தன் தந்தையிடம் இருந்து அனுமதி பெற்றுக்கொண்டபோது லுத்ஃபுல்லா கான் உள்ளிட்ட பல அதிகாரிகளும் அவருடன் திரும்பிச் செல்ல முடிவெடுத்தனர். உண்மையில் அவர்கள் அங்கேயே முற்றுகையைத் தொடரவேண்டும் என்றுதான் பேரரசர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இளவரசர் முவாஸ் உத்தீன் தன் மகன் பதார் பக்த் தலைமையில் கோட்டை முற்றுகைப் பொறுப்பை விட்டுவிட்டு 5 ஏப்ரலில் ஜல்கங்கா பகுதியில் இருந்து புறப்பட்டார்.
1696 ஜனவரி வரை பொய்யான முற்றுகை நீடித்தது. தெற்கில் க்வாசிம் கான், ஹிம்மத் கான் இருவரும் வீழ்த்தப்பட்ட செய்தி கிடைத்ததும் பேரரசர் இளவரசர் முவாஸ் உத்தீனை பசவப்பட்டணத்துக்கு அனுப்பவேண்டிவந்தது. பனாலா கோட்டையை முற்றுகையிட்டுக் கைப்பற்றும் பொறுப்பை ஃபிரோஸ் ஜங்கிடம் ஒப்படைத்தார். அவராலும் எதுவும் செய்யமுடியாமல் போனது. உண்மையில் பனாலா கோட்டையை எந்த மொகலாயக் கிளைப் படையினாலும் கைப்பற்றுவது சாத்தியமற்ற விஷயமே.
ருஸ்தம் கான் சிறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பேரரசர் வட சத்ரா பகுதியை உடனே கைப்பற்றியாக வேண்டும் என்று தீர்மானித்தார். சத்ராவுக்கு 25 மைல் கிழக்கில் இருந்த கடாவு பகுதியின் தானாதாராக இருந்த லுத்ஃபுல்லா கானை அந்தப் பொறுப்பில் இருந்து விடுவித்தார். 6, ஜூலையன்று இரவில் சந்தா கோர்படே சுமார் பத்தாயிரம் குதிரைப் படை மற்றும் ஏராளமான காலாட்படை வீரர்களுடன் திடீர் தாக்குதலில் ஈடுபட்டார். கோட்டைக்குள் இருந்து துப்பாக்கியால் சுட்டு மராட்டியப் படையை விரட்டினர். எனினும் மராட்டியப்படையை முழுவதுமாகத் தோற்கடிக்க முடியவில்லை. கிழக்கு சத்ரா பகுதியில் மேலும் பெரிய படையைத் திரட்டிக் கொண்டு மீண்டும் தாக்கினர். லுத்ஃபுல்லா கான் தாக்கப்பட்டார். எனினும் மராட்டியப்படையைப் பெரும் இழப்புடன் விரட்டியடித்தார்.
1690-ல் அதன் பின் குறிப்பிடும்படி பெரிதாக எதுவும் நடக்கவில்லை. மொகலாயர்களுக்குக் கப்பம் கட்டிவந்த நீமா சிந்தியா, மன்கோஜி பந்தரே, நகோஜி மனே ஆகியோர் தமது படையுடன் ஜின்ஜியில் இருந்த ராஜா ராம் பக்கம் சென்று சேர்ந்தனர்.
1692-ல் மராட்டிய படை மேலும் பலம் பெற்று மொகலாயர்களின் பிடியில் இருந்து பனாலா போன்ற பல கோட்டைகளை மீட்டெடுத்தது. சத்ராவின் வட கிழக்கில் இருந்த மஹாதேவ் மலைப்பகுதியில் சந்தாஜி கோர்படே முகாமிட்டு மறைந்திருந்து கிழக்கே பீஜப்பூர் சமவெளிகள் வரையிலும் படையெடுத்துச்சென்று தாக்கிவிட்டு திரும்பிவருவார். இதே நேரத்தில் மேற்கு கர்நாடகாவில் பேல் காவ், தார்வார் மாவட்டங்களை வேறு மராட்டியப் படைகள் தாக்கின. 8 அக்டோபரில் தன யாதவும் சந்தாஜி கோர்படேவும் 7000 படைவீரர்களுடன் பேல் காவ் பகுதிக்கு அருகில் இருந்த சில கோட்டைகளைக் கைப்பற்றினர். பேல் காவையும் முற்றுகையிட்டனர். தமது குதிரைகளுக்கு அங்கிருந்த நிலங்களில் வளர்ந்திருந்த பயிர்களை உணவாக்க் கொடுத்தனர். பேரரசர் பேல்காவுக்கு ஹிம்மத் கான், தார்வாருக்கு மத்லப் கான் ஆகியோரை அனுப்பி கர்நாடகா பகுதியின் பாதுகாப்பைப் பலப்படுத்தினார். பீஜப்பூர்-கர்நாடகப் பகுதி அல்லது மைசூரின் வட மேற்குப் பகுதியின் ஃபெளஜ்தாரான க்வாஸிம் கானுக்கும் பெரிய படையைத் துணைக்கு அனுப்பி பங்காபூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களைப் பாதுகாக்கும்படி உத்தரவிட்டார். டிசம்பர் வாக்கில் சந்தாஜி கோர்படே தன யாதவ் இருவரும் செஞ்சி கோட்டையை விடுவிக்க மதராஸ் வரை படையெடுத்துச் சென்றனர். இதனால் மஹாராஷ்டிராவில் சிறிது காலம் பெரிய அரசரோ படைகளோ எதுவும் இல்லாமல் இருந்தது. மேற்குப் பக்கம் இருந்த மொகலாயர்கள் பெரிய போர்கள் எதுவும் இன்றி அந்தக் காலங்களில் அமைதி வாழ்க்கை வாழ்ந்துவந்தனர்.
(தொடரும்)
___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின் தமிழாக்கம்.