Skip to content
Home » ஔரங்கசீப் #45 – 1700 வரை மராட்டியர்களுடனான மோதல்கள் – 3

ஔரங்கசீப் #45 – 1700 வரை மராட்டியர்களுடனான மோதல்கள் – 3

9. சந்தாஜி கோர்படே, தன யாதவ் ஆகியோருடனான மொகலாயர்களின் மோதல்கள் – 1693-94

1693-ல் மேற்குப் பக்கத்தில் மராட்டியர் பக்கம் பலம் பெருக ஆரம்பித்தது. அமித் ராவ் நிம்பல்கர் பீமா நதியைக் கடந்து சென்று மொகலாயப் பகுதிகளில் தாக்குதல் நடத்தினார். ஹிம்மத் கான் படையுடன் சென்று அவரைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் கைக்கு அகப்படாமல் அந்த மராட்டிய குதிரைப் படையினர் தப்பி ஓடிவிட்டனர். இதே நேரத்தில் தன யாதவ், சங்கராஜி போன்ற பிற மராட்டியத் தலைவர்கள் பனாலா கோட்டைக்கு முன்னால் இருந்த மொஹலாயப் படையைகளைத் தாக்கினர். செஞ்சி பகுதியில் இருந்து திரும்பி வந்திருந்த சந்தா கோர்படே அக் 1693-ல் தன் தாக்குதல் முயற்சிகளை முன்னெடுத்தார். ஹிம்மத் கான் இவர்களைத் துரத்திச் சென்று விக்ரம்சாலி கிராமத்தில் சந்தாஜி மற்றும் பேராத் படைகளை ஒரு முறை வென்றார் (14 நவ).

அதன் பின்னர் மொகலாயத் தளபதிகளிடையே மோதல் ஏற்பட்டது. ஹமித் உத் தீனும் க்வாஜா கானும் தொடர்ந்து துரத்திச் செல்ல மறுத்து குல்பர்காவுக்குத் திரும்பினர். இதனால் ஹிம்மத் கான் தனியாகத் தன் படையுடன் எதிரிப் படையினரைத் துரத்திச் செல்லவேண்டியிருந்தது. சந்தா ஜி இப்போது தன் படையினரை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டு தாக்க வழி பிறந்தது. அமித் ராவ் தலைமையில் நான்காயிரம் வீரகளை பேராருக்குள் தாக்குதல் நடத்த அனுப்பினார். தன்னுடன் 6000 குதிரைப்படையினரை அழைத்துக்கொண்டு மல்கேத் பகுதிக்குள் நுழைந்தார். வென்ற பகுதிகளில் இருந்து 25% கப்பம் வசூலித்தார். பல மாதங்கள் எந்த வெற்றியும் இல்லாமல் துரத்திச் சென்று களைத்துப்போன மொகலாயப் படையால் குறிப்பிட்டுச் சொல்லும்படி எதையும் வென்றெடுக்க முடிந்திருக்கவில்லை.

1694-1695 காலத்தில் மராட்டியப் படைகள் துடிப்புடன் செயல்பட்டன. வட தக்காணப் பகுதியில் பேராத்கள் பெரும் தாக்குதல்களில் ஈடுபட்டனர். எனினும் இந்த இரண்டு தரப்பினரால் பெரிய வெற்றி எதையும் பெற முடிந்திருக்கவில்லை. இறுதியாக 1695 இறுதி வாக்கில் முதல் நிலை மொகலாயத் தளபதிகளான க்வாஸிம் கான், ஹிம்மத் கான் ஆகிய இருவரையும் சந்தா ஜி போரில் கொன்றதன் மூலம் பெரிய வெற்றியை ஈட்டினார்.

இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் 1695 முடிவு வரை இப்படியான மோதல்களில் மொகலாயர்கள் ஈடுபடவேண்டியிருந்தது. இது வெறும் படையெடுப்பு சார்ந்த பிரச்னையாக இருக்கவில்லை. மொகலாயப் பேரரசுக்கும் தக்காணப் பூர்வகுடி மக்களுக்கும் இடையில் யாரால் விடா முயற்சியுடன், தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடிகிறது என்ற போராட்டமாக ஆகிவிட்டிருந்தது.

10. கிழக்கு கர்நாடகா, அதன் பாகங்கள் மற்றும் வரலாறு

கிழக்கு கர்நாடகா அல்லது மதராஸ் கர்நாடகா பகுதி, மேற்கு கர்நாடகா அல்லது பம்பாய் பிரஸிடென்ஸியின் கர்நாடகப் பகுதியில் இருந்து பெரிதும் வேறுபட்டது. தெற்கில் பாயும் காவேரி நதியின் வட அட்ச ரேகையில் 15 டிகிரியில் அமைந்திருக்கிறது. 17-ம் நூற்றாண்டின் பின் பகுதியில் பாலாறு நதியால் அல்லது வேலூரிலிருந்து சத்ராஸ் வரையான கற்பனைக் கோட்டினால் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இந்த இரண்டு பகுதிகளும் ஹைதராபாதி கர்நாடகா, பீஜப்பூர் கர்நாடகா என்று அழைக்கப்பட்டன. அவை மேலும் பாலாகட் (மேட்டுப் பகுதி), பைங்கட் (சமதளப் பகுதி) என இரண்டாக பிரிக்கப்பட்டன. மேடான ஹைதராபாதி கர்நாடகாவில் சித்தவடம், கண்டிகோட்டா, கரம்கொண்டா, கடப்பா ஆகிய பகுதிகள் இருந்தன. பீஜப்பூரி கர்நாடகாவில் மைசூரின் சேரா, பங்களூரு மாவட்டங்கள் மற்றும் அவற்றைச் சார்ந்திருந்த ஜமீந்தாரிபகுதிகள் அனைத்தும் அடங்கும். தாழ் நிலங்களில் ஹைதராபாதி கர்நாடகாவில் குண்டூரில் இருந்து சத்ராஸ் வரையான கடலோரப் பகுதியும் இருந்தது. பீஜப்பூரிய கர்நாடகா சத்ராஸுக்கு தெற்கில் ( 12’30 டிகிரி வட அட்ச ரேகையில்) தஞ்சாவூர் வரை நீண்டு சென்றது.

இந்தப் பகுதிகளை ஆதில் ஷா வென்றாலும் தன்னுடைய ஆட்சியை நிலைநிறுத்தியிருக்கவில்லை. பல பகுதிகளில் தோற்கடிக்கப்படாத பாளையக்காரர்களே ஆதிக்கத்தில் இருந்தனர். ஆதில் ஷாவிடம் சில கோட்டைகளும் அதைச் சுற்றிய பகுதிகளும் மட்டுமே கட்டுப்பாட்டில் இருந்தன.. இந்தப் பகுதிகளில் கூட அவருடைய நிலப்பிரபுக்கள் வசமே ஆட்சி அதிகாரம் இருந்தது. சிவாஜி இந்தப் பகுதிகளை வென்றதைத் தொடர்ந்து நிலைமை மேலும் சிக்கலானது (1677-78). இதன் காரணமாக தென் ஆற்காட்டில் (செஞ்சியை தலைநகராகக் கொண்டு) புதிய மராட்டிய அரசு ஒன்று நிலைநிறுத்தப்பட்டது. ரகுநாத நாராயண் ஹனுமந்தாவை சிவாஜி தன் சார்பில் ஆட்சி செய்ய நியமித்திருந்தார்.

சம்பாஜி ஆட்சிப் பொறுப்பேற்றதும் ரகுநாதரைச் சிறையில் அடைத்தார் (ஜன 1681). தன் சகோதரியின் கணவர் ஹரிஜி மஹாதிக்கை இந்தப் பகுதியை நிர்வகிக்க நியமித்தார். ஆனால் சம்பாஜி அரசு நடவடிக்கைகளில் இருந்து விலகி கேளிக்கைகளில் கவனம் செலுத்தியதாலும் ஒளரங்கஜீப் நேரடியாக மஹாராஷ்டிராவில் படையெடுத்துச் சென்றதாலும் செஞ்சி போன்ற தெற்கில் தொலைதூரத்தில் இருந்த பகுதியில் சம்பாஜியின் ஆதிக்கம் குறைந்தது. அங்கிருந்த மராட்டியப் பிரதிநிதி தானே தன் விருப்பப்படி ஆட்சி செய்ய ஆரம்பித்தார். ஹரிஜி மஹாதிக் தானே மஹாராஜா பட்டம் சூடிக்கொண்டு இந்தப் பகுதியில் கிடைத்த உபரி தொகையை ராய்கட்டுக்கு அனுப்புவதை நிறுத்தினார்.

1, அக், 1686-ல் சம்பாஜி மஹராஜ், கர்நாடகக் கோட்டைப் பகுதிகளை பலப்படுத்த என்று 12000 குதிரைப் படையினரை கேசவ் திரியம்பக் பிங்களே தலைமையில் அனுப்பினார். உண்மையில் ரகசியமாக ஹரிஜி மஹாதிக்கை சிறையில் அடைத்துவிட்டு சம்பாஜியின் ஆட்சியை அங்கு மீட்டெடுக்கும் நோக்கிலேயே அனுப்பியிருந்தார். கேசவ் திரியம்பக் 11, பிப், 1687-ல் செஞ்சி கோட்டைக்கு அருகில் வந்து சேர்ந்தார். ஆனால் அவருடைய திட்டம் நிறைவேறவில்லை. ஹரிஜி மஹாதிக் அந்தக் கோட்டையைத் தன்வசம் எடுத்துக்கொண்டு அங்கிருந்த படை முழுவதையும் தனக்கு விசுவாசமாக ஆக்கிக்கொண்டிருந்தார். சம்பாஜி மற்றும் தன்னுடைய திட்டம் நிறைவேறவில்லை என்பது தெரிந்ததும் கேசவ் திரியம்பக், 18000 படைவீரர்களுடன் மைசூருக்குள் நுழைந்தார். அங்கும் அவரால் எதுவும் பெரிதாகச் செய்யமுடியவில்லை. எனவே மீண்டும் செஞ்சி பகுதிக்கே திரும்பினார்.

11. கிழக்கு கர்நாடகாவில் மொகலாய ஊடுருவல், 1687

கோல்கொண்டாவை வென்ற பின்னர் ஒளரங்கஜீப் புத்திசாலித்தனமாக குதுப் ஷாவின் அமைச்சர்கள், அதிகாரிகளை அந்தந்தப் பதவிகளில் சிறிது காலத்துக்கு நீடிக்கவிட்டார். முஹம்மது இப்ராஹிம் (மஹ்பத் கான் என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது) குதுப் ஷாவை விட்டு விலகி வந்த முதல் கனவான். எனவே அவரை ஹைதராபாதின் சுபேதாராக நியமித்தார். கானின் மெய்க்காவலரான முஹம்மது அலி பெய்க் (புதிய பெயர் அலி அஸ்கர் கான்) குதுப் ஷாஹி கர்நாடகாவின் ஃபெளஜ்தாராக நியமிக்கப்பட்டார். இவருக்குக் கீழே செங்கல்பட்டு, காஞ்சீவரம், பூந்தமல்லி பகுதிகளில் கிலாதார்கள், மாஜிஸ்டிரேட்டுகள் நியமிக்கப்பட்டனர். இந்த அதிகாரிகள் அனைவரும் ஒளரங்கஜீபைத் தமது பேரரசராக ஏற்றுக்கொண்டனர் (அக், 1687). பூந்த மல்லியின் நிர்வாகி, ’என் எஜமானரை (குதுப் ஷாவை) ஆலம்கீர் வென்ற போது அவருக்காக முரசறைந்தேன்… துப்பாக்கிகள் முழங்கினேன்’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

ஆனால், பேரரசர் என்ன காரணத்தினாலோ தன் மனதை மாற்றிக்கொண்டுவிட்டார். மஹபத் கானுக்கு பதிலாக ரஹுல்லா கானை ஹைதராபாதின் சுபேதாராக நியமித்தார். அலி அஸ்கருக்குப் பதிலாக க்வாஸிம் கான் நியமிக்கப்பட்டார். மராட்டியப் படைகளுக்கு எதிராக கர்நாடகப் பகுதியில் புகுந்து போரில் ஈடுபடும்படி பேரரசர் இவருக்கு உத்தரவு பிறப்பித்தார் (ஜன, 1688).

பாலாறுக்கு வடக்குப் பக்கத்தில் இருந்த கோல்கொண்டா ராஜ்ஜியப் பகுதிகள் மொகலாயர் வசம் வீழ்ந்திருந்தன. ஆனால் போதிய மொகலாயப் படைகள் அந்தக் கோட்டைகளுக்குப் பாதுகாப்புக்கு வந்து சேர்ந்திருக்கவில்லை. எனவே ஹரிஜி ஒரு படையை இந்தக் கோட்டைகளைத் தாக்க அனுப்பினார். 2000 குதிரைப்படையினர், 5000 காலாட்படையினர், மேலும் கோட்டை மீது ஏறிச் செல்ல ஏணிகளைத் தூக்கியபடி பலர் எனப் பெரும்படையுடன் சென்றவர்கள் இந்தப் பகுதியில் இருந்த சில கோட்டைகளையும் பல கிராமங்களையும் எளிதில் கைப்பற்றிவிட்டனர். 24 டிசம்பர் வாக்கில் ஆற்காடு மீது தாக்குதல் நடத்திக் கைப்பற்றினர். மராட்டியர்கள் இந்தப் பகுதியில் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். பலரும் உயிரையும் உடமையையும் காப்பாற்றிக்கொள்ள மதராஸில் தஞ்சம் புகுந்தனர் (27, டிச, 1687-10 ஜன 1688).

11 ஜனவரி வாக்கில் மராட்டியர்கள் காஞ்சீவரத்தில் நடத்திய தாக்குதலில் 500க்கு மேற்பட்டவர் கொல்லப்பட்டனர். பல வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. அங்கிருந்தவர்கள் எல்லாம் உயிரைக் கையில் பிடித்தபடி தப்பி ஓடினர். கேசவ் திரியம்பக்கும் தனது படையுடன் இதே போல் தாக்குதலில் ஈடுபட்டார். சேத்துப்பட்டு, காவேரிப்பாக்கம் ஆகிய பகுதிகளைக் கைப்பற்றியபின் காஞ்சீவரத்தில் முகாமிட்டார் (ஜன 1688).

ஆனால் மராட்டிய வெற்றி சிறிது காலம் மட்டுமே நீடித்தது. முன்னாள் கோல்கொண்டா சுல்தானகத்தின் இஸ்மாயில்கான், யச்சப்ப நாயக்கர், ருஸ்தம் கான், முஹம்மது சாதிக் ஆகிய நான்கு தளபதிகளையும் கர்நாடகப் பகுதிக்குள் படையெடுத்துச் சென்று இந்தப் பகுதிகளைக் கைப்பற்ற பேரரசர் உத்தரவிட்டார். இவர்கள் 25, பிப், 1688-ல் காஞ்சீவரம் வந்து சேர்ந்தனர். மராட்டியர்கள் இந்தப் படையைப் பார்த்ததும் வெளியேறிவிட்டனர். இவர்களைத் துரத்திச் சென்று வந்தவாசியைக் கைப்பற்றி மொகலாயர்கள் அங்கு முகாமிட்டனர். மராட்டியப் படை அப்போது தெற்கில் ஒரு நாள் பயணத் தொலைவில் இருந்த சேத்துபட்டில் முகாமிட்டிருந்தது. சுமார் ஒரு வருட காலம் இரண்டு படைகளும் தத்தமது இடங்களிலேயே ஒருவரை ஒருவர் வெறுமனே கண்காணித்தபடி காத்திருந்தனர். இவர்களுக்குள் போரிடவில்லையே தவிர ஊருக்குள் சென்று அவ்வப்போது தாக்கிக் கொள்ளையடித்துவந்தனர். 1686-ல் ஏற்பட்ட பஞ்சத்தில் இருந்து மீண்டிருக்காத இந்தப் பகுதி மக்கள் இரண்டு படைகளின் கொள்ளையடிப்புகளையும் தாங்கிக் கொள்ளவேண்டிவந்தது. இந்த பகுதியின் வணிகம் முற்றாக முடங்கிவிட்டது. தொழில்கள் தேங்கிவிட்டன. தானியங்கள், எண்ணெய்வித்துகள் போன்றவற்றின் பற்றாக்குறை ஏற்பட்டன. கடலோரம் இருந்த ஐரோப்பிய குடியிருப்புகளில் அடைக்கலம் தேடி அனைவரும் சாரை சாரையாகப் புறப்பட்டனர்.

வருடம் 1689-ம் முந்தைய ஆண்டைப் போலவே கர்நாடகப் பகுதிக்குப் பெரும் வேதனை நிறைந்ததாகவே இருந்தது. சாலைகள் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தன. மராட்டிய, மொகலாயப் படைகள் அடிக்கடித் தாக்கிவந்தன. இங்கு நடந்துவந்த தொடர் போர்கள், கொள்ளையடிப்பு இவற்றால் நாட்டுப்பருத்தி துணிகள் மற்றும் பிற பொருட்களை ஏற்றுமதி செய்ய கூனிமேடு பகுதியில் இருந்த ஆங்கிலேயர்களின் வணிகக் கிடங்குகளுக்குக் கொண்டு செல்ல முடிந்திருக்கவில்லை. 19 செப்டம்பரில் ஹரிஜி உயிர் துறந்தார். அவருடைய இரண்டு மகன்கள் சிறு வயதினராக இருந்ததால் குழந்தைகளின் தாயும் விதவை மனைவியுமான அம்பிகாபாய் (சிவாஜியின் மகள்) கோட்டையின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகப் பணிகளைத் தானே முன்னின்று செய்தார்.

12. செஞ்சி கோட்டையில் ராஜா ராம்

1, நவ, 1689-ல் ராஜா ராம் செஞ்சி கோட்டைக்கு வந்த பின்னர் எளிய முறையில் ஆட்சி மாற்றம் நடந்தேறியது. ஹரிஜியின் விதவை மனைவியும் அவர்களுடைய பிராமண அமைச்சர்களும் கடந்த எட்டு ஆண்டுகளாக மறைந்த ஹரிஜிக்கும் அவர்களுக்கும் கிடைத்திருந்த அதிகாரம், செல்வ வளம் இவற்றை விட்டுக் கொடுக்கத் தயங்கினர். ஆனால் அந்த அரசுக்கு உரிமை ராஜாராமுக்குத்தான் என்பதை யாரும் மறுக்கவும் முடியவில்லை. எனவே அவர் கைகளுக்கு செஞ்சி கோட்டை கைமாறியது. ஹரிஜியின் மகனைச் சிறையில் அடைத்தார். அந்தப் பிராந்தியத்தில் இத்தனை ஆண்டு காலம் வரி மற்றும் வருவாயை அனுபவித்துவந்ததால் மைய மராட்டிய அரசுக்குத் தரவேண்டிய தொகை என்று சொல்லி ஹரிஜியின் விதவை மனைவியிடம் இருந்த சொத்துகள் முழுவதும் பறிக்கப்பட்டன. மூன்று லட்சம் பணம் தந்து அமைதி உடன்படிக்கை செய்துகொள்ளவேண்டியிருந்தது.

சந்தாஜி போன்ஸ்லே ஒரு லட்சம் பணம் கப்பம் கட்டவேண்டியிருந்தது. மராட்டிய அரசின் பிரதிநிதி என்று ஒரு பதவி உருவாக்கப்பட்டு பிரஹலாத் நீராஜிக்குத் தரப்பட்டது. பேஷ்வா பொறுப்பில் நீல மோரேஷ்வர் பிங்களேயே தொடர்ந்து நீடித்தார். பிரஹலத் நீராஜி மன்னர் ராஜா ராமுக்கு, கஞ்சா மற்றும் ஓபியம் கொடுத்து கேளிக்கைகளிலேயே மூழ்கிக் கிடக்கும்படிச் செய்தார். அதன்பின் முழு அதிகாரத்தைக் கைப்பற்றியவர் ஹரிஜி காலத்தில் பிராமணர்கள் சேர்த்து வைத்திருந்த அசையும் அசையா சொத்துக்கள் முழுவதையும் கைப்பற்றினார்.

ஆனால் இவற்றையெல்லாம் செய்த பின்னரும் மராட்டிய அரசின் நிதி நெருக்கடிகள் துளியும் குறையவில்லை. கிழக்குக் கடற்கரையோரம் இருந்த ஐரோப்பியக் குடியிருப்புகளில் இருந்து நிதி சேகரிக்க செஞ்சி கோட்டையில் இருந்த அமைச்சர்கள் முடிவெடுத்தனர். ஐரோப்பிய செல்வந்தர்கள் எல்லாம் 5000 அல்லது குறைந்தபட்சம் 1000 பணம் கடனாகத் தரும்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டனர். ராஜா ராம் இங்கு வந்த பின்னர் டச்சு மற்றும் ஃபிரெஞ்சு பிரதிநிதிகள் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் எதிர்த்தபடி மராட்டியர்களிடம் நட்புரிமை பாராட்ட முன்வந்தனர். பாண்டிச்சேரியில் புதிதாக அமைக்கப்பட்ட ஃப்ரெஞ்சு வணிகக் கிடங்கை அப்புறப்படுத்தி உதவும்படி மராட்டிய அமைச்சர்களுக்கு டச்சுக்காரர்கள் பெருமளவிலான பணம் கொடுத்தனர். செஞ்சியில் இருந்த அமைச்சர்கள் ஐரோப்பியர்களிடம் இருந்த இந்தப் பகைமையை நன்கு பயன்படுத்திக்கொள்ள முயன்றனர். யாரிடமிருந்து அதிக பணம் பெற முடியும் என்று யோசித்தனர்.

முந்தைய கோல்கொண்டா ஹைதராபாதி அரசில் இருந்தவர்களும் மிகவும் தாமதமாகவே ஒளரங்கஜீபின் அரசில் பதவிகள் பெற்றவர்களுமான முஹம்மது சாதிக், யச்சப்பா நாயக்கர், இஸ்மாயில் மக்கா ஆகியோர் ஜன 1690-ல் மொகலாயர்களுக்கு எதிராகக் கலகக்குரல் எழுப்பினர். இவர்களுடைய பதவியைப் பறித்து பேரரசர் தன்னுடைய ஆட்களையே மீண்டும் நியமிக்கப்போகிறார்; இவர்களுக்கு எந்தப் பதவியும் தரப்படாது; அல்லது தாழ்நிலைப் பதவியே தரப்படும் என்பது தெரியவந்ததும் பேரரசரை விட்டு விலகினர். ராஜாராமுடன் கூட்டணி சேர்ந்துகொண்டு தனியாக தாமே வரிகளை வசூலித்துக்கொள்ள ஆரம்பித்தனர்.

மதராஸ் தொடங்கி கூனிமேடு வரையிலும் இருந்த மொகலாயப் பிரதிநிதிகள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் இருந்தனர். எனவே எளிதில் தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். அவர்கள் நேராக கடலோரப் பகுதிகளில் இருந்த ஐரோப்பியர்களிடம் அடைக்கலம் தேடிச் சென்றனர் (ஏப்ரல்). மொகலாயத் தளபதி ஜுல்ஃபிகர் கான் ஆகஸ்டில் காஞ்சீவரம் வந்து சேர்ந்தார். செஞ்சி கோட்டைப் பகுதிக்கு செப்டம்பரில் வந்து சேர்ந்தார். அதன் பின்னரே மொகலாயருக்கு எதிரான இந்தக் கலகம் முடிவுக்கு வந்தது.

மொகலாயப் படைகள் மராட்டியப் படைகளை விரட்டியடித்தன. ராஜாராமின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளும் ஆக்கிரமிக்கப்படும் என்ற நிலை உருவானது. இதனால் செஞ்சி கோட்டையில் இருந்து புறப்பட்டு தெற்கே பாதுகாப்பான பகுதியான தஞ்சாவூருக்கு ராஜாராம் இடம்பெயர்ந்தார். செஞ்சி தொடங்கி கடலோரம் வரையிலான நிலப் பகுதி இரு பக்கமிருந்த படைகளாலும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியது. அந்தப் பகுதியில் இருந்த மக்கள் தஞ்சாவூர் பக்கம் அல்லது கடலோர ஐரோப்பியக் குடியிருப்புகள் பக்கம் பாதுகாப்பு தேடித் தப்பி ஓடினர்.

(தொடரும்)

___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *