13. செஞ்சிக் கோட்டை முற்றுகை ஆரம்பம்
செஞ்சிக் கோட்டை உண்மையில் கருங்கற்களாலான மதில் சுவர் எழுப்பப்பட்ட ராஜ கிரி, கிருஷ்ணகிரி, சந்திராயன் துர்க் ஆகிய மூன்று குன்றுகளைக் கொண்டது. கிட்டத்தட்ட முக்கோண வடிவில் மூன்று மைல் சுற்றளவில் மூன்று குன்றுகளையும் இணைக்கும் வலிமையான வெளி மதில் சுவர் தொடரையும் கொண்டது. இந்த மலைப்பகுதி மிகவும் செங்குத்தானது. பெரிய பெரிய பாறைகள் நிறைந்தது. எனவே இதில் படைகள் ஏறுவது கிட்டத்தட்ட அசாத்தியமானது. மூன்று குன்றுகளுக்கும் அனைத்துப் பக்கங்களிலும் வலுவான கற் சுவர் மதிலாகக் கட்டப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே காவல் பரண்கள், கொத்தளங்கள், பீரங்கித் தாக்குதல், துப்பாக்கித் தாக்குதல் நடத்தத் தோதான கட்டமைப்புகள் என முழு பாதுகாப்பு மற்றும் தாக்குதல் வசதிகள் கொண்டது. மிக மிகக் குறுகலான மற்றும் வலுவான கோட்டை வாசல்களும் உண்டு. ஒவ்வொரு கோட்டையும் கற்கள் பாவிய 60 அடி கனம் கொண்ட கோட்டை இணைப்புப் பாதையையும் அவற்றுக்கு வெளியே 30 அடி அகலம் கொண்ட அகழியையும் கொண்டது. மூன்று குன்றுகளின் உச்சியில் கோட்டைகள் அமைந்திருக்கும்.
மூன்று வாசல்களில் வடக்குவாசல் வேலூர் அல்லது ஆர்க்காடு வாசல் என்று இப்போது அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலை (நோக்கிய) வாசல் என்று 17-ம் நூற்றாண்டில் அழைக்கப்பட்டது. இரண்டாவது கிழக்கு வாசல் இன்று பாண்டிச்சேரி வாசல் எனப்படுகிறது. 17-ம் நூற்றாண்டில் இதுவே பிரதான கோட்டை வாசலாக இருந்தது. மூன்றாவது மேற்கு வாசல் சைத்தான் தாரி (ஃப்ரெஞ்சில் போர்ட் தெ டயபிள்) என்று அழைக்கப்பட்டது.
செப் 1690-ல் ஜுல்ஃபிகர் கான் செஞ்சிக் கோட்டைக்கு வந்துசேர்ந்தார். கோட்டைக்கு முன்பாக முகாம் அமைத்து அங்கேயே உட்கார்ந்துவிட்டார். அவரிடம் இருந்த படைகளைக் கொண்டு இந்த வலிமையான மிகப் பெரிய கோட்டைத் தொடரை வெல்வதென்பது சாத்தியமே இல்லை. கோட்டைச் சுவர்களைத் தகர்க்கும் அளவுக்கு பீரங்கிகளும் வெடிமருந்துகளும் அவரிடம் இல்லை. கோட்டை முழுவதையும் முற்றுகையிட்டு முடக்குவதென்பதும் அவரால் முடியாது. இந்த திடீர் முற்றுகையைக் கண்டு அதிர்ச்சியடைந்த மராட்டியர்கள் மெள்ள மெள்ள சுதாரித்துக் கொண்டு மொகலாயப் படைகளை தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாக்கினர். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ராஜா ராம் செஞ்சிக் கோட்டைக்குத் திரும்பினார்.
ஜுல்ஃபிகர் கானின் படைகளுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் வரும் வழிகளை மராட்டியப் படைகள் தடுத்ததைத் தொடர்ந்து மொகலாயப் படைகளின் ராணுவ மேலாதிக்கம் ஏப்ரலுக்குப் பின்னர் வெகுவாகக் குறைந்துவிட்டது. கூடுதல் படைகளும் உணவும் தேவை என்று பேரரசரிடம் மன்றாடினார். ஜுல்ஃபிகர் கானின் தந்தையும் வாஸிர்தாருமான ஆசாத் கான், வாகின்கேராவில் இருந்த இளவரசர் காம் பக்க்ஷ் ஆகிய இருவரின் தலைமையில் மிகப் பெரிய படையை டிசம்பர் 1691-ல் பேரரசர் அனுப்பிவைத்தார்.
இதனிடையில் செஞ்சிக் கோட்டை மீதான பயனற்ற தன் முற்றுகைத் தாக்குதல்களை நிறுத்திவிட்டு தென் கர்நாடகா, தஞ்சாவூர், திருச்சினாப்பள்ளி போன்ற பகுதிகளில் இருந்த ஜமீந்தார்களிடமிருந்து வரி, கப்பம் வசூலிக்கும் வேலைகளில் ஜுல்ஃபிகர் கான் தீவிரமாக இறங்கினார். அப்படியாக 1691-ல் மொகலாயப் படைகளுக்கு எந்தப் பெரிய வெற்றியும் கிடைக்காமலே போனது.
அடுத்த ஆண்டில் வாஸிர்தாரும் இளவரசரும் பெரும் படையுடன் வந்து சேர்ந்த பின்னரும் எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. ஜுல்ஃபிகரின் படையில் இஸ்மாயில் கான் மக்கா மீண்டும் தன் படையுடன் சேர்க்கப்பட்டார். இப்படிக் கிடைத்த படைபலங்களைக் கொண்டு மீண்டும் 1692-ல் செஞ்சி கோட்டை மீதான முற்றுகையை முன்னெடுத்தனர். முதலில் சந்திராயன் துர்க் கோட்டையைக் கைப்பற்றத் தீர்மானித்து அந்தப் பாதையில் பதுங்குகுழிகள், போர் நடவடிக்கைகள் ஆகியவற்றை அமைக்க ஆரம்பித்தனர். அதன்பின்னர் மலைக்கோட்டையையும் பாண்டிச்சேரி வாசலையும் ஜுல்ஃபிகர் கான் பீரங்கியால் தாக்கத் தொடங்கினார். ஆனால் இவையெல்லாமே வெறும் கண் துடைப்பு நாடகமே என்பது அங்கிருந்த அனைவருக்கும் நன்கு தெரிந்திருந்தது.
1692-ல் மழைக்காலத்தில் மொகலாய முகாம் எப்படி இருந்தது என்பதை நேரில் பார்த்த ஒருவர் விவரித்திருப்பவை: ‘மழை அதி தீவிரமாக, இடைவிடாது பொழிந்தது. உணவு தானியங்கள் பெருமளவுக்கு பற்றாக்குறையாகியிருந்தன. பதுங்கு குழிகளில் இரவு பகலாக இருந்தாக வேண்டியிருந்த மொகலாயப் படையினர் மிகுந்த கஷ்டங்களைச் சந்திக்க நேர்ந்தது. அந்தப் பிராந்தியம் முழுவதுமே பெரியதொரு ஏரிபோல் வெள்ளக்காடாகக் காட்சியளித்தது’.
14. சந்தாஜி கோர்படேயும் தன யாதவும் அலி மர்தன் கான் மற்றும் இஸ்மாயில் கானைச் சிறைப்பிடித்தல் (1692)
குளிர்காலத்தில் மொகலாயரின் நிலை மிகவும் மோசமாகிவிட்டிருந்தது. டிசம்பர் தொடக்கத்தில் இந்தியாவின் மேற்குப் பகுதியில் ராஜாராமின் பிரதான அமைச்சரான ராமச்சந்திரரால் வளர்த்தெடுக்கப்பட்ட 30,000 குதிரைகள் கொண்ட படை புகழ் பெற்ற தன சிங் யாதவ் மற்றும் சந்தாஜி கோர்படேயின் தலைமையில் வந்து சேர்ந்தன. முதலில் காஞ்சீபுரம் பகுதியைத் தாக்கினர். இவர்களைக் கண்டு பயந்து அங்கிருந்தவர்கள் எல்லாம் தப்பி ஓடி மதரஸில் அடைக்கலம் தேடினர். காவிர்ப்பாக்கம் பகுதிக்கு சந்தா கோர்படே படையுடன் வந்தபோது காஞ்சீபுரத்தின் மொகலாயத் தளபதியாக இருந்த அலி மர்தன் கான் மராட்டியப் படையின் எண்ணிக்கை, வலிமை பற்றி எதுவும் தெரியாமல் தாக்கச் சென்றார். ஆனால் சிறிய அளவே இருந்த மொகலாயப் படை எளிதில் மராட்டியப் படையால் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. 1500 குதிரைகளையும் ஆறு யானைகளையும் அவர்கள் கைப்பற்றினர். மொகலாயப் படையின் அனைத்து தானியங்களும் ஆயுதங்களும் பிற உடமைகளும் மராட்டியப் படையால் கைப்பற்றப்பட்டன (டிசம்பர் 13). செஞ்சி கோட்டையில் சிறைவைக்கப்பட்ட அலி மர்தன் கான் ஒரு லட்சம் பணம் பிணைத்தொகையாகக் கொடுத்து விடுதலை பெற்றுச் சென்றார்.
தன யாதவ் தலைமையிலான இன்னொரு மராட்டியப் படை செஞ்சி கோட்டையை முற்றுகையிட்ட்டிருந்த மற்ற மொகலாயப் படைகளைத் தாக்கியது. மராட்டியப் படை மிகப் பெரியது என்பதைத் தெரிந்துகொண்ட ஜுஃல்பிகர் கான் ஆங்காங்கே எல்லைக் காவல் பணியில் இருந்த படைகளையெல்லாம் கோட்டைக்கு முன்பான பிரதான படையுடன் வந்து சேர்ந்துகொள்ளும்படித் தகவல் கொடுத்தார். ஆனால் மேற்குக் கோட்டைப் பக்கம் இருந்த இஸ்மாயில்கான் நீண்ட தொலைவு பயணம் செய்து வரவேண்டியிருந்தது. கோட்டையில் இருந்த மராட்டியப் படைகளின் துணையுடன் தன யாதவின் படையினர் இந்த மொகலாயப் படையை வழியில் தடுத்துத் தாக்கினர். தன் படையைவிடப் பத்து மடங்கு பெரிய படையுடன் மோத வேண்டிய சூழ்நிலையிலும் இஸ்மாயில் கான் வீரத்துடன் போரிட்டார். இறுதியில் காயம் பட்டு சிறைப்பிடிக்கப்பட்டார். 500 குதிரைகளையும் இரண்டு யானைகளையும் இழந்தார். செஞ்சி கோட்டையில் சிறைவைக்கப்பட்டார். இந்த வெற்றிகளின் மூலம் ஹைதராபாதி கர்நாடகா மீதான தமது ஆதிக்கத்தை மராட்டியர்கள் உடனடியாக நிலைநிறுத்த ஆரம்பித்தனர்.
15. மராட்டியர்களுடன் இளவரசர் காம் பக்க்ஷ் முன்னெடுத்த போர் மற்றும் அவர் கைது செய்யப்படுதல்
மராட்டியப் படைகளின் தீவிர நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியதாலும் செஞ்சி கோட்டைச் சுற்றுவட்டாரத்தில் அவர்களுடைய கை ஓங்கியதாலும் மொகலாயப் படைகளுக்கான தானிய வண்டிகள் தடுத்துநிறுத்தப்பட்டுவிட்டன. பேரரசரிடமிருந்து வரும் கடிதங்களையும் வழி மறித்துத் தடுத்துவிட்டனர். உண்மையில் செஞ்சிக் கோட்டை முன்னால் முகாமிட்டிருந்த மொகலாய முகாம்தான் முற்றுகைக்கு உள்ளாகியிருந்தது. அதோடு உள் முரண்களும் மிக மோசமான எல்லையை எட்டத் தொடங்கியிருந்தன. இளவரசர் காம் பக்க்ஷ் முதிரா இளைஞர். முதிய பேரரசரின் செல்லப் பிள்ளை. சுக போகங்களில் திளைத்தார். இளமையும் வனப்பும் மிகுந்த நபர்களின் கைப்பாவையாக இருந்தார். முதியவரும் செல்வாக்கு மிகுந்தவருமான வாஸிர் ஆசாத் கான் சொல்வதைக் கேட்காமல் அவரை அவமானப்படுத்தினார். ‘அறிவும் தெளிந்த சிந்தனையும் இல்லாத’ சிலர் மூலமாக மராட்டிய மன்னர் ராஜாராமுடன் ரகசிய பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார். இளவரசரின் மதியீனத்தைப் புரிந்துகொண்ட மராட்டியர்கள் பல புதிய தவறான ஆலோசனைகள் சொல்லி அவரைத் தூண்டிவிட்டனர்.
ஜுல்ஃபிகர் கானுக்கு இந்த விஷயங்கள் தெரியவந்ததும் பேரரசரிடம் சொல்லி இளவரசரைக் கடுமையான கண்காணிப்புக்குள் கொண்டுவந்தார். சந்தா கோர்படே, தன யாதவ் ஆகியோர் பெரும் படையுடன் டிசம்பர் 1692-ல் வந்ததும் பேரரசருக்கும் செஞ்சி முற்றுகைப் படைகளுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றம் முழுவதுமாக முடங்கிவிட்டது.
அபாயகரமான வதந்திகள் உடனே எழுந்தன. ஒளரங்கஜீப் இறந்துவிட்டார்; ஷா ஆலம் தில்லி அரியணை ஏறிவிட்டார் என்று செய்திகள் பரவின. காம் பக்க்ஷின் நிலைமை மிகவும் சிக்கலானது. ஆசாத் கானும் ஜுல்ஃபிகர் கானும் அவருடைய எதிரிகளாகியிருந்தனர். எனவே தன்னைச் சிறைப்பிடித்து புதிய பேரரசரிடம் கொண்டு சென்று நல்ல பெயர் வாங்க முயற்சி செய்வார்கள் என்று பயந்தார். இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்க ஒரே வழி மராட்டிய ராஜாராமுடன் நட்புக்கரம் நீட்டுவது மட்டுமே என்று அவருடைய உதவியாளர்கள் ஆலோசனை சொன்னார்கள். குடும்பத்துடன் இரவோடு இரவாக இங்கிருந்து தப்பி மராட்டியர்களுடன் சேர்ந்துகொண்டு தில்லி அரியணையை மீட்கவேண்டும் என்று திட்டமிட்டார்கள்.
இந்தத் திட்டமும் ஆசாத் கானுக்கு அவருடைய ஒற்றர்கள் மூலம் தெரியவந்தது. அவரும் அவருடைய மகனும் பேரரசரின் படையில் இருந்த முக்கிய தளபதிகளுடன் கலந்தாலோசித்தனர். இளவரசர் காம் பக்க்ஷை உடனே தடுத்து நிறுத்தியாகவேண்டும் என்று ஒரே குரலில் முடிவெடுத்தனர். எனவே கோட்டைக்கு முன்பாக இருந்த பதுங்குகுழிகளை அப்படியே விட்டுவிட்டு இளவரசர் தப்பிச் செல்ல முடியாதபடி முழு மொகலாயப் படையும் பின்வரிசையில் குவிக்கப்பட்டது.
முற்றுகைக்கு முன் வரிசையில் இருந்த படைகள் இறுதி முயற்சியாகக் கோட்டையைத் தாக்கின. ஜுல்ஃபிகர் கான் பெருமளவு வெடி மருந்துகளைப் பயன்படுத்தி கோட்டைச் சுவர்களைத் தகர்க்கப் பார்த்தார். முடியாமல் போகவே பீரங்கிகளை அங்கேயே விட்டுவிட்டு படைகளைப் பின்வரிசைக்குக் கொண்டுசென்றார். மைய மொகலாய முகாம் அவருக்குப் பின்னால் நான்கு மைல் தொலைவில் இருந்தது.
மராட்டியக் கோட்டைக் காவல் படையினர் தன யாதவின் படையுடன் சேர்ந்துகொண்டு மொகலாயப் படையைச் சுற்றிவளைத்துத் தாக்கினர். 400 காலாட்படையினர், 400 குதிரைகள், எட்டு யானைகள் ஆகியவற்றை மொகலாயப் படை இழக்க நேர்ந்தது. அன்று மாலைவாக்கில் ஆசாத் கான் முகாமிட்டிருந்த இடத்துக்கும் வந்துவிட்டனர்.
தனது முட்டாள் ஆலோசகர்கள் சொன்னதன் பேரில் இளவரசர் இந்த இரண்டு மொகலாயத் தளபதிகளும் அவரைச் சந்திக்க வரும்போது கைது செய்து தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். இந்தத் திட்டமும் பிறவற்றைப் போலவே ஒற்றர்கள் மூலம் வெளியே கசிந்துவிட்டது. பகல் முழுவதும் நீடித்த போரினால் களைத்துப் போயிருந்த ஜுல்ஃபிகர் கான் இரவில் தன் தந்தை இருந்த முகாமுக்குச் சென்று சேர்ந்தபோது இந்த விஷயம் தெரியவந்ததும் இனியும் பொறுத்திருக்கக்கூடாது. இளவரசர் செய்யத் திட்டமிட்டிருக்கும் தீய நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரவேண்டுமென்றால் அவரைக் கைது செய்து அடைத்தாக வேண்டும் என்று இருவரும் முடிவு செய்தனர். உடனே அதற்கான படையுடன் கான் பக்க்ஷ் இருந்த முகாமுக்குச் சென்றனர்.
வாஸிர் ஏற்கெனவே பயங்கர கோபத்தில் இருந்தார். ‘தாசிப் பெண்ணின் மகனே’ என்று இளவரசரைக் கடுமையாக வசைபாடினார். ‘உனக்கு நாடாளும் திறமையோ போரை வழி நடத்தும் திறமையோ ஒன்றுமே கிடையாது. உன்னை என்ன நிலைமையில் வைத்திருக்கிறாய் என்று யோசித்துப் பார். உன்னை நீயே கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறாய்’ என்றெல்லாம் திட்டிவிட்டு ஆசாத் கானின் முகாமில் மொகலாய இளவரசரைச் சிறையில் அடைத்தார். ஆனால் அங்கு அவரை நல்லவிதமாகவே நடத்தினார். இதன் மூலம் மொகலாயப் படையில் ஒருவித ஒழுங்கும் ஒற்றுமையும் கட்டுப்பாடும் நிலைநிறுத்தப்பட்டது.
அலி மர்தன் கானின் படைகளை வென்ற சந்தாஜி கோர்படே அதன் பின்னர் காஞ்சீபுரம் பகுதியைத் தாக்கினார். அங்கிருந்து செஞ்சி கோட்டைக்கு வந்து ஜுல்ஃபிகர் கானை எதிர்த்துத் தன் திறமை முழுவதையும் காட்டிப் போரிட்டார். தினசரி போர் நடந்தது. மராட்டியப் படையில் 20,000 வீரர்கள் இருந்தனர். மொகலாயப் படையில் குறைவானவர்களே இருந்தனர். அதிலும் பாதிபேர் இளவரசரைக் கண்காணிக்கவும் முகாமைப் பாதுகாக்கவும் நிறுத்தப்பட்டிருந்தனர். காம் பக்க்ஷின் படை இந்தப் போரில் இறங்கவே இல்லை. ஜுல்ஃபிகர் கானும் 2000 குதிரை வீரர்களைக் கொண்ட ஒரு சில மான்சப்தார்களும் மட்டுமே மராட்டியப் படையை எதிர்கொள்ளவேண்டியிருந்தது.
16. ஜுல்ஃபிகர் கானின் படை முகாமில் பஞ்சம்; செஞ்சி கோட்டை முற்றுகையை விலக்கிக் கொண்டு வந்தவாசிக்குத் திரும்புதல்
முற்றுகையிட வந்த மொகலாயப்படை, தானே முற்றுகைக்கு ஆளானதுபோன்ற நிலையில் இருந்தபோது உணவுப் பஞ்சமும் சேர்ந்துகொண்டது. ஒரு சில நாட்களிலேயே முகாமின் உணவு முழுவதும் தீர்ந்து முழு பட்டினி நிலைக்கு வந்துவிட்டனர். இதனால் செஞ்சி கோட்டைக்கு வட கிழக்கில் 24 மைல் தொலைவில் இருந்த வந்தவாசிக்குச் சென்று தானியங்களைக் கவர்ந்து வர ஜுஃல்பிகர் கான் படையுடன் புறப்பட்டார். தானியங்களுடன் திரும்புகையில் சந்தா கோர்படே 20,000 வீரர்களுடன் தேசூரில் மொகலாயப் படையைச் சுற்றிவளைத்தார் (5 ஜன, 1693). மொகலாயர்கள் கடுமையாகப் போரிட்ட பின்னர் இரவில் தேசூர் கோட்டைக்கு அருகே வந்து சேர்ந்தனர். மறுநாள் அவர்கள் செஞ்சிக் கோட்டை நோக்கிப் புறப்பட்டபோது மராட்டியர்கள் மிகப் பெரிய படையுடன் வந்து தீவிரமான தாக்குதலில் ஈடுபட்டனர். தல்பத் ராவ் கடுமையாகப் போரிட்டு மராட்டியப் படையை பின்வாங்க வைத்தார். அப்படியாக பந்தேல்கண்டினர் ஜுல்ஃபிகர் கானின் படையினரைக் காப்பாற்றியதோடு செஞ்சியில் முற்றுகையிட்டிருக்கும் படைகளையும் காப்பாற்றினர்.
மிகப் பெரிய இழப்புக்குப் பின்னர் ஜுல்ஃபிகர் கான் கொண்டுவந்து சேர்த்த தானியங்கள் மிகப் பெரிய மொகலாயப்படைக்கும் முகாம்வாசிகளுக்கும் போதுமானதாக இருக்கவில்லை. பேரரசப் படையின் பட்டினி மிக மோசமானவண்ணம் இருந்தது. ‘தினமும் காலை தொடங்கி மாலைவரை மராட்டியப் படைகள் அவர்களைச் சுற்றி வளைத்து போர் முழக்கங்கள் செய்வார்கள். மொகலாயப் படையில் உயர் நிலை, தாழ் நிலை வீரர்கள் என அனைவரும் திகைத்தும் சோர்ந்தும் முடங்கிக் கிடக்கவேண்டியிருந்தது’.
ஆசாத் கான் வேறு வழியின்றி ராஜாராமுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்தார். வந்தவாசிக்குத் தன்னையும் தன் படைகளையும் எந்த பிரச்னையும் இன்றிப் பின்வாங்கிச் செல்ல அனுமதித்தால் பெரும் பணம் தருகிறேன் என்று பேசினார். ராஜா ராமும் அதற்கு சம்மதித்தார். ஆனால் தல்பத் ராவோ இப்படிப் பின்வாங்கிச் சென்றால் பின்னர் பெரும் நெருக்கடியே வரும் என்று எச்சரித்தார். ஜுல்ஃபிகர் கான் என்ன செய்ய என்று யோசித்துக் கொண்டிருந்தபோது பட்டினியால் வாடிய மொகலாயப் படையினர் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு வந்தவாசியை நோக்கிப் புறப்படுவதைப் பார்த்ததும் வேறு வழியின்றி இளவரசருடன் அவரும் புறப்பட்டார்.
பல நாட்கள் எதுவும் சாப்பிடாததால் குதிரைகளும் ஒட்டகங்களும் காளைகளும் இறந்தன. படைவீரர்கள் பலரும் தமது உடமைகள் பலவற்றைச் சுமந்து செல்ல முடியாமல் தீவைத்துக் கொளுத்திவிட்டனர். பேரரசர் மற்றும் தனவான்களின் அரண்மனைகள், சொத்துகள் எல்லாம் கைவிடப்பட்டன. இப்படியாக மொகலாயப் படை பின்வாங்கியபோது அவர்களுக்குப் பின்பக்கத்தில் பாதுகாப்புப் படை போல் வந்த மராட்டியப்படை அவர்களிடம் எஞ்சியிருந்தவற்றையெல்லாம் அபகரித்தது. ஒளரங்கஜீபின் படையினர் 22 அல்லது 23 ஜனவரி, 1693 வாக்கில் வந்தவாசி வந்து சேர்ந்தனர்.
பத்து நாட்கள் கழித்து காஞ்சிபுரத்தின் புதிய தளபதியான க்வாஸிம் கான் பெரிய படையுடனும் மிகப் பெருமளவிலான உணவுப் பொருட்களுடனும் வருவதாகத் தகவல் வந்தது. சந்தாஜி கோர்படே அந்தப் படையைத் தடுத்துத் தாக்கினார். முடிந்தவரை போரிட்ட க்வாஸிம் கான் இறுதியில் வேறு வழியின்றி காஞ்சீபுரத்தின் புகழ் பெற்ற ஆலய வளாகத்துக்குள் அடைக்கலம் தேடி ஒளிய நேர்ந்தது. மறுநாள் ஜுஃல்பிகர் கான் தன்னுடைய படையுடன் உதவிக்கு வந்து மராட்டியப் படைகளை விரட்டி, க்வாசிம் கானை வந்தவாசிக்கு அழைத்துச் சென்றார் (7 பிப்).
மொகலாயப் படைக்குப் போதிய உணவு கிடைத்தது. ஒளரங்கஜீப் உயிருடன், நலமாக இருக்கிறார் என்ற செய்தியும் கிடைத்ததால் புத்துணர்வு பெற்றனர். 1693 பிப் – மே என நான்கு மாதங்கள் வந்தவாசியில் ஜுல்ஃபிகர் கான் முகாமிட்டார். செஞ்சிக் கோட்டை மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டார். காம் பக்க்ஷ் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஒளரங்கஜீபிடமிருந்து உத்தரவு வருவதற்காகக் காத்திருந்தார். 11 ஜூன் வாக்கில் இளவரசரை அவருடைய சகோதரி ஜீனத் உன்னிஸாவின் பரிந்துரையின் பேரில் ஆசாத் கான், கல்கலாவில் முகாமிட்டிருந்த பேரரசர் முன்னால் கொண்டு சென்று நிறுத்தினார்.
(தொடரும்)
___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின் தமிழாக்கம்.