17. 1693-94 வாக்கில் கர்நாடகாவில் நடந்தவை
மதராஸ் தொடங்கி போர்ட்டோ நோவா வரையிலான கிழக்கு கர்நாடகப் பகுதியில் மூன்று அதிகாரசக்திகள் இருந்தன. முதலாவதாக, பழம் பெரும் விஜய நகர அரசின் பிரதிநிதிகள்; இவர்களை பீஜப்பூர் மற்றும் கோல்கொண்டா சுல்தான்கள் அரைகுறையாகக் கட்டுப்படுத்திவைத்திருந்தனர். அடுத்த்தாக, மிக சமீபத்தில் வீழ்த்தப்பட்ட பீஜப்பூர் மற்றும் கோல்கொண்டா சுல்தானகத்தின் அதிகாரிகள்; இவர்கள் புதிய மொகலாய எஜமானர்களின் மேலாதிக்கத்தை மிகுந்த தயக்கத்துடனே ஏற்றுக்கொண்டிருந்தனர். மூன்றாவதாக சிவாஜி மற்றும் வியன்காஜி வம்சாவளிகளான மராட்டிய ஆட்சியாளர்கள்.
யச்சப்ப நாயக்கரின் முன்னோர்கள் வேலூருக்கு 16 மைல் வடக்கில் இருந்த சாத்கட் கோட்டையை வாராங்கலின் ராஜா ருத்ர பிரதாபின் அமைச்சர்களிடமிருந்து பெற்றிருந்தனர். இவர்கள் ஒரு காலத்தில் கோல்கொண்டாவில் வரி வசூலிக்கும் அதிகாரம் பெற்றிருந்தனர். ராஜாராம் செஞ்சிக் கோட்டைக்கு வந்தபோது யச்சப்ப நாயக்கர் அவருடன் கூட்டு சேர்ந்துகொண்டார். 1693 மார்ச்சில் அவரிடமிருந்து பிரிந்துசென்று சாத்கட் பகுதியை மீட்டுக்கொண்டு கிழக்குப் பக்கமாகத் தன் ராஜ்ஜியத்தை விஸ்தரித்தபடி சென்றார். அந்த ஆண்டு இறுதிவாக்கில் ஜுல்ஃபிகர் கான் அவரை வீழ்த்தினார். இதற்கான பரிசாக ஆறாயிரம் வீரர்களைக் கொண்ட படைக்கு தளபதியாக நியமிகப்பட்டார்.
கோல்கொண்டாவின் முன்னாள் தளபதியான இஸ்லாயில் கான் மெக்காவும் உள்ளூர் ஜமீன்தார் ஒருவரும் மொகலாயப் படையில் முழுமனதுடன் சேர்ந்துகொண்டனர். மார்ச் வாக்கில் சந்தாஜி கோர்படே திருச்சினாபள்ளியை முற்றுகையிட்டார். ராஜாராமும் அங்கு வந்து சேர்ந்தார். பின்னர், தன்ஒன்றுவிட்ட சகோதரரான இரண்டாம் சாஹாஜியை தஞ்சாவூரில் மே 1963 வாக்கில் சென்று சந்தித்தார். ஆனால் மராட்டியர்களுக்கிடையே இப்போது ஒரு மோதல் ஏற்பட்ட்து. சந்தாஜி கோர்படே சினம் கொண்டு மஹராஷ்டிராவுக்குத் திரும்பிச் சென்றுவிட்டார். தன யாதவ் ஜி சேனாபதியாக நியமிக்கப்பட்டார்.
1694 பிப்ரவரியில் தென் ஆற்காடு பகுதியைக் கைப்பற்ற ஜுல்ஃபிகர் கான் படையுடன் புறப்பட்டார். பாண்டிச்சேரிக்கு 18 மைல் வடக்கில் இருந்த பெருமுக்கல் கோட்டையை தல்பத் ராவின் தலைமையிலான புந்தேல்கண்ட் படையினர் கானுக்காகத் தாக்கினர். கிழக்குக் கடற்கரையோரமாக தஞ்சாவூர் நோக்கி பாண்டிச்சேரி மற்றும் ஐரோப்பிய வணிக மையங்கள் வழியாக படையுடன் முன்னேறினர். தென் ஆற்காடில் இருந்த பல கோட்டைகளைக் கைப்பற்றினர். பிப்ரவரி இறுதிவாக்கில் கடலூரைத் தாக்கினர். திருச்சினாப்பள்ளியை ஆண்டுவந்த நாயக்க பிரதிநிதி, மஹாராஜா இரண்டாம் சாஹாஜியைத் தொடர்ந்து எதிர்த்து வந்திருந்தார். அவர் மொகலாயர்களுடன் கைகோர்த்தார். எனவே இரண்டாம் சாஹாஜி, ஜுல்ஃபிகர் கானின் படையை எதிர்க்கமுடியாமல் தோற்றார்.
மராட்டிய மன்னர் ராஜாராமுக்கு எந்தவகையிலும் உதவமாட்டேன்; மொகலாயப் பேரரசருக்கு விசுவாசமாக நடந்துகொள்வேன்; ஆண்டுதோறும் 30 லட்சம் பணம் கப்பமாகக் கட்டுவேன்; பாளையங்கோட்டை, சித்தானூர், துங்கனூர் கோட்டைகள் அவற்றால் பாதுகாக்கப்படும் மாவட்டங்கள் மற்றும் வேறுபல பகுதிகளையும் ஒப்படைத்துவிடுவேன் என்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.
ஆனால் வியன்காஜியிடம் ஒப்படைத்திருந்த பாளையங்கோட்டையை ராஜாராம் திரும்பக் கைப்பற்றிக் கொண்டுவிட்டார். எனவே ஜுல்ஃபிகர் கான் அதைக் கைப்பற்ற முற்றுகையிட்டார். ஆறு நாள் முற்றுகைக்குப் பின் கோட்டை வீழ்ந்தது. அதன்பின் மொகலாயப்படை வந்தவாசிக்குத் திரும்பி செஞ்சி கோட்டை மீது செப்டம்பர் வாக்கில் இன்னொரு தாக்குதலை மேற்கொண்டது.
துரோகக் குற்றசாட்டு சுமத்தி திடீரென்று யச்சப்ப நாயக்கரை அவருடைய தர்பாரில் ஜுல்ஃபிகர் கான் கைது செய்து தலையை வெட்டிக் கொன்றுவிட்டார். யச்சப்ப நாயக்கரின் மனைவிகளும் குழந்தைகளும் தற்கொலை செய்துகொண்டனர்.
நாயக்கர் மொகலாயப் பேரரசருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில் ஜுஃல்பிகர் கான் மராட்டியர்களுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பதாகவும் செஞ்சி கோட்டை முற்றுகையை வேண்டுமென்றே இழுத்தடிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். தன்னுடைய படையுடன் சென்று எட்டே நாட்களில் அந்தக் கோட்டையைக் கைப்பற்றிவிடுவேன் என்றும் ஒளரங்கஜீபுக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தை ஆஸாத் கான் பாதிவழியிலேயே கைப்பற்றிவிட்டார் என்று மனூச்சி குறிப்பிட்டிருக்கிறார்.
18. ஜுல்ஃபிகர் கானுடைய படை நகர்வுகள், 1695.
1694 இறுதி வாக்கில் செஞ்சி கோட்டை மீதான முற்றுகையை ஜுல்ஃபிகர் கான் மீண்டும் தொடங்கினார். ஆனால் பேரரசரை ஏமாற்றும் நோக்கில் வெறும் கண்துடைப்பு முற்றுகையாகவே இருந்தது. மராட்டியர்களுடனான அவருடைய ரகசிய உடன்படிக்கைகள் பொதுவெளியில் பரவலாகப் பலருக்கும் தெரியவந்திருந்தது. செஞ்சி கோட்டை முற்றுகையின்போது ராஜாராமுடன் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார். ஒளரங்கஜீப் விரைவில் இறந்துவிடுவார். அவருடைய மகன்களுக்கு இடையில் வாரிசு உரிமைப் போர் எப்படியும் ஏற்படும் என்ற நம்பிக்கையில் அந்தச் சூழலைத் தனக்கு சாதகமாகிக்கொள்ளும் நோக்கில் முற்றுகையை முடிந்தவரை நீடிக்கவும் தாமதப்படுத்தவும் ஜுல்ஃபிகர் கான் தீர்மானித்திருந்தார்.
1695 வாக்கில் மொகலாயர்களுக்கு எந்தப் பெரிய வெற்றியும் கிடைத்திருக்கவில்லை. அந்த ஆண்டு முழுவதும் தானியத் தட்டுப்பாடு அதிகரித்துக்கொண்டே சென்றதால் நெருக்கடிகள் மேலும் அதிகரிக்கவே செய்தன. அக்டோபர் வாக்கில் வேலூர் கோட்டை முற்றுகையிடப்பட்டது. இந்த முற்றுகை நீண்ட காலம் நீடித்தது. ஒருவழியாக 1702 ஆகஸ்ட் 14 வாக்கில்தான் இந்தக் கோட்டை கைப்பற்றப்பட்டது.
19. ஜுஃல்பிகரின் போர் நடவடிக்கைகள், 1696.
டிசம்பர் இறுதிவாக்கில் தன யாதவ் படையுடன் வேலூர் பகுதிக்கு அருகில் வந்துசேர்ந்தார். தனது முகாமில் இருந்த உடமைகளையும் குடும்பத்தினரையும் ஆற்காடுக்கு அனுப்பிவைத்துவிட்டு ஜுல்ஃபிகர் கான் போருக்குத் தயாரானார். மார்ச் 1696-ல் சந்தா கோர்படே மீண்டும் இங்குவந்தார். பல்வேறு பகுதிகளுக்குப் பரந்து விரிந்துசென்றன மராட்டியப் படைகள். ஏற்கெனவே மிகவும் குறைவாக இருந்த மொகலாயப் படைகளால் அத்தனை பகுதிகளிலும் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. ஜுல்ஃபிகர் கான் தன் படைகளை சமயோஜிதமாக முன்னகர்த்தினார். எனினும் 1696-ல் படைகளுக்குத் தேவையான நிதி அவருக்குக் கிடைக்கவே இல்லை. போதிய படை பலம் இல்லாததால் ஆற்காடு கோட்டைப் பகுதியிலேயே முகாமிட்டு முடங்கிவிட்டார். மராட்டியர்கள் வழக்கம் போல் மொகலாயப் படைகளைச் சுற்றி வளைத்தனர். ஆனால் இரு தரப்புக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் இருந்ததால் பெரிய தாக்குதல்கள் எதுவும் நடக்கவில்லை.
நவம்பர், டிசம்பர் வாக்கில் மத்திய மைசூர் பகுதிக்குள் சந்தா கோர்படே படையுடன் சென்றார். பேரரசரின் உத்தரவின் பேரில் ஜுல்ஃபிகர் கான் அவரைத் துரத்திச் சென்றார். வட மேற்கு பக்கம் வழியாக வந்த இளவரசர் பிதார் பக்ஷுடன் இணைந்துகொண்டு அந்தப் பகுதிக்குச் சென்று மராட்டியர்களை துங்கபத்திரா நதியைத் தாண்டி விரட்டினார் (பெங்களூருக்கு 75 மைல் வடக்கே பேணுகொண்டா பகுதியில் இந்த இரண்டு மொகலாயப் படைகளும் சந்தித்துக் கொண்டன). மராட்டியப் படை இவர்களை எதிர்க்காமல் தப்பிச் சென்றுவிட்டது. பிப் 1697-ல் ஜுல்ஃபிகர் கான் ஆற்காடு திரும்பினார்.
20. செஞ்சி கோட்டை முற்றுகை மீண்டும் ஆரம்பமானது. கோட்டை ஒருவழியாகக் கைப்பற்றப்பட்டது.
தஞ்சாவூர் மற்றும் தென்பகுதியில் இருக்கும் மாவட்டங்களில் இருந்து வரி வசூலிக்க ஆற்காட்டிலிருந்து ஜுல்ஃபிகர் கான் புறப்பட்டார். 1697-ல் மழைக்காலம் ஆரம்பித்ததும் வந்தவாசிக்குத் திரும்பினார். தன யாதவ் மற்றும் சந்தா கோர்படே இருவருக்கும் இடையில் கசப்புணர்வு அதிகரித்ததால் மராட்டியப் படை பலவீனமடைந்தது. அது ஜுஃல்பிகர் கானுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியைத் தந்தது. ராஜாராம் தன், தளபதி தன யாதவுக்கு ஆதரவாக நின்றார். ஆனால் சந்தா கோர்படேயை எதிர்த்து வெல்ல முடியாமல் தன யாதவ் படையுடன் மஹராஷ்டிராவுக்கு விரட்டியடிக்கப்பட்டார் (மே 1696). ஜுல்ஃபிகர் கான் செஞ்சி கோட்டை மீதான முற்றுகையை 1697 நவம்பர் வாக்கில் பெரும் உற்சாகத்துடன் மீண்டும் ஆரம்பித்தார்.
வடக்கு வாசலுக்கு எதிரே அவர் முகாமிட்டார். சைத்தான் தாரி பகுதியில் ராம் சிங் ஹடா முற்றுகையிட்டார். செஞ்சிக்கு தெற்கே அரை மைல் தொலைவில் தெளத் கான் முற்றுகையிட்டார். அவர் ஒரே நாளில் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி அந்தக் கோட்டையைக் கைப்பற்றிவிட்டார். செஞ்சிக்கு படையுடன் வந்து சேர்ந்தவர் தெற்கே எதிரில் இருந்த சந்திராயன் துர்க் கோட்டையை முற்றுகையிட்டார். ஜுல்ஃபிகர் கான் நினைத்திருந்தால் மறு நாளே அந்தக் கோட்டையை கைப்பற்றியிருக்கமுடியும். ஆனால் படைகளுக்குக் கிடைக்கும் தொகையையைக் கொண்டு சந்தோஷமாக வாழ விரும்பியவர் முற்றுகையை மேலும் நீட்டிக்கவே விரும்பினார். புதிய பகுதியைக் கைப்பற்ற வேறு இடத்துக்கு படையெடுத்துச் செல்வதில் இருக்கும் சிரமங்களையும் தவிர்க்க விரும்பினார். தனது தாக்குதல்கள் எல்லாம் மேலோட்டமானவையே என்பதை மராட்டியர்களுக்குப் புரியவைத்தார். இதனால் இந்த முற்றுகை மேலும் இரண்டு மாதங்கள் நீடித்தது.
முறையான போரை முன்னெடுக்கவில்லை என்பது தெரியாமல் இருப்பதற்காக ஜுல்ஃபிகர் கான் அடிக்கடி தாக்குதல்கள் மற்றும் பின்வாங்கல்கள் பற்றிய செய்திகளை பேரரசருக்கு அனுப்பியவண்ணம் இருந்தார். தெளத் கான் ஐரோப்பிய மதுவை அருந்தி போதையில் ஆழ்ந்தவண்ணம் இருந்தார். அல்லா எப்படியும் காஃபிர்களை வீழ்த்திவிடுவார் என்று சொல்லிவந்தார். ஜுஃல்பிகர் கான் பல முறை தாக்குதலை முன்னெடுக்கத்தான் செய்தார். ஆனால் எங்கு எப்போது தாக்குதல் நடக்கும் என்ற தகவல்களை ரகசியமாக மராட்டியர்களுக்கு தந்தும்வந்தார். எனவே தெளத் கானின் படை எப்போதும் விரட்டியடிக்கவே பட்டது.
இனியும் தாமதித்தால் ஒளரங்கஜீபின் கடும் கோபத்துக்கு ஆளாக நேரும் என்ற நிலை வந்தது. ராஜாராமுக்கு சரியான நேரத்தில் எச்சரிக்கைத் தகவல் கிடைத்து அவர் தன் பிரதான அதிகாரிகளுடன் வேலூருக்குத் தப்பிச் சென்றுவிட்டார். ஆனால் அவருடைய குடும்பத்தினரைப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்ல முடிந்திருக்கவில்லை. ஜுல்ஃபிகர் கான் தாக்குதலுக்கு உத்தரவிட்டார். கிருஷ்ண கிரியின் வடக்கு கோட்டை மீது தல்பத் ராவ் ஏறி சென்று கடும் போருக்குப் பின் வெளிப்புறக் கோட்டையைக் கைப்பற்றினார். கோட்டையின் காவல் படை உள் புறத்துக்குப் பின்வாங்கியது. தல்பத் ராவின் படை முன்னேறிச் சென்று அதையும் ஆக்கிரமித்தது. எஞ்சிய மராட்டியப் படையினர் மிக உயரமான ராஜ் கிரி பகுதியில் அடைக்கலம் தேடினர்.
இதனிடையில் தெளத் கான் சந்திராயன் துர்க் கோட்டைப் பகுதிக்குள் நுழைந்து செஞ்சியின் தாழ்வான அடிவாரப் பகுதிவழியாகச் சென்று கிருஷ்ண கிரியை அடைந்தார். அங்கிருந்தவர்கள் அச்சத்தில் உயிரைக் கையில் பிடித்தபடி கோட்டை உச்சிக்கு விரைந்தனர். ஆனால் அங்கும் அவர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்காமல் போகவே சரணடைந்தனர்.
ஏராளமான குதிரைகள், ஒட்டங்கள், உடமைகள் எல்லாம் மொகலாயர் வசம் சிக்கின (8 ஜனவரி, 1698). ராஜாராமின் குடும்பத்தினர் ராஜ் கிரியில் அடைக்கலம் தேடியிருந்தனர். ஆனால் அவர்களுடைய நிலையும் நிராதரவாகிவிட்டிருந்தது. ராஜ் கிரியின் அடிவாரத்தில் இருந்த சுரங்கப் பாதை வழியாக உள்ளே மொகலாயப் படை நுழைந்துவிட்டது. ராஜாராமின் மனைவியர், மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் என மராட்டிய அரச குடும்பத்தினர் சிறைப்பிடிக்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் அடைக்கப்பட்டனர். ஒரு மனைவி இவர்கள் கையில் சிக்காமல் மலை உச்சியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். அந்த அடைக்கலப் பகுதியில் 4000 ஆண்கள், பெண்கள், குழந்தைகள் இருந்தனர். பாதுகாப்பு வீர்ர்கள் குறைவாகவே இருந்தனர்.
ஒருவழியாக செஞ்சிக்கோட்டை கைப்பற்றப்பட்டதும் ஜுல்ஃபிகர் கான் வந்தவாசிக்குத் திரும்பினார். நஸ்ரத் ஜங் என்ற பட்டமும் அவருக்குத் தரப்பட்டது. வேலூரில் இருந்து ராஜாராமை கரம்கொண்டாவரை துரத்திச் சென்றார். ஆனால் வெகு முன்னதாகவே அங்கிருந்து புறப்பட்டிருந்த ராஜாராம் பிப்ரவரி வாக்கில் விசால்கட் பகுதிக்குத் தப்பிச் சென்றிருந்தார். அப்படியாக செஞ்சிக்கோட்டை தொடர்பான மிக மிக நீண்ட முற்றுகை முடு வெற்றி கிடைக்காமல் முடிவடைந்தது. வலைவிரிக்கப்பட்ட பறவை (மராட்டிய மன்னர் ராஜாராம்) தப்பிவிட்டது.
(தொடரும்)
___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின் தமிழாக்கம்.