Skip to content
Home » ஔரங்கசீப் #49 – 1700 வரை மராட்டியர்களுடனான மோதல்கள் – 7

ஔரங்கசீப் #49 – 1700 வரை மராட்டியர்களுடனான மோதல்கள் – 7

25. மன்னர் ராஜாராம் மராட்டிய ராஜ்ஜியத்துக்குத் திரும்புதல், 1698-99

பீமா நதியில் ஒரு பெரு வெள்ளம் ஏற்பட்டு பேட்காவ் மற்றும் இஸ்லாமாபுரி பகுதிகளில் (ஜூலை 19) இருந்த மொகலாய முகாம்கள் அடித்துச் செல்லப்பட்டன. எங்கும் வேதனையும் அழிவும் தலைவிரித்து ஆடின. இவை தவிர 1697-ன் இரண்டாம் பாதியில் குறிப்பிடப்படும்படியாக எதுவும் நடக்கவில்லை. அடுத்த ஆண்டு ஜனவரியில் செஞ்சிக் கோட்டையை மொகலாயர்கள் கைப்பற்றினர். மன்னர் ராஜாராம் அங்கிருந்து தப்பி மஹாராஷ்டிராவில் இருந்த விஷால்கர் பகுதிக்கு பிப்ரவரியில் சென்று சேர்ந்தார். ராஜாராம் சொந்த ஊர் திரும்பியதைத் தொடர்ந்து மராட்டியர்கள் தரப்பில் எந்தவொரு அசாதாரண நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. செஞ்சி கோட்டையை இழந்த சோகத்திலிருந்து தன்னை மீட்டெடுத்துக்கொள்ள அவருக்குச் சிறிது அவகாசம் தேவைப்பட்டதுபோல் இருந்தது. அவருடைய பக்கம் இருந்த சிலர் மனம் சோர்ந்து மொகலாயர் பக்கம் சேர்ந்துவிட்டனர்.

1699 ஆரம்பவாக்கில் கொங்கன் பகுதியை மேற்பார்வையிடுவதற்காக ராஜாராம் புறப்பட்டார். அனைத்து கோட்டைகளையும் பார்வையிட்டுவிட்டு ஜூன் இறுதி வாக்கில் சத்ரா பகுதிக்கு வந்து சேர்ந்தார். கந்தேஷ், பேரார் பகுதிகளில் தொடர் தாக்குதலை மேற்கொள்ள 26 அக்டோபர் வாக்கில் சத்ராவில் இருந்து புறப்பட்டார்.

ஒளரங்கஜீப் இந்தக் கோட்டையைக் கைப்பற்றப் போட்டிருந்த ரகசியத் திட்டம் வெளியில் கசிந்துவிட்டது. இஸ்லாமாபுரியில் இருந்து மொகலாயப் படை புறப்பட்டதுமே (19 அக்) ராஜாராம் தன் குடும்பத்தினரை சத்ராவிலிருந்து கேல்னா கோட்டைக்குப் பத்திரமாகக் கொண்டுசென்றுவிட்டார். ஆலம்கீரின் கைகளில் சிக்கக்கூடாதென்று அக் 26 வாக்கில் ராஜாராமும் அங்கிருந்து புறப்பட்டார். தன யாதவ், ராமச்சந்திரர், தாதா மல்ஹர் , பிற படைத்தளபதிகள் மற்றும் 7000 குதிரைப் படை வீரர்களுடன் சந்தன் வந்தன் பகுதிக்குச் சென்று சேர்ந்தார். அங்கு மூன்று நாட்கள் முகாமிட்டபின்னர் சூரத் நோக்கிப் பயணம் மேற்கொண்டார்.

ஆலம்கீர் உடனே பிதார் பக்துக்கு மராட்டியப் படையைத் துரத்திச் செல்ல உத்தரவு பிறப்பித்தார். பரிந்தா கோட்டைக்கு நான்கு மைல் அப்பால், பிதார் பக்த் மராட்டியப் படையை எதிர்கொண்டார். ரத்தக் களறியான போருக்குப் பின்னர் அஹமது நகருக்கு அவர்கள் துரத்தியடிக்கப்பட்டனர் (13 அல்லது 14 நவம்பர்). 26 டிசம்பர் வாக்கில் ராஜாராம் சத்ரா கோட்டைக்கு 30 மைல் தொலைவில் முகாமிட்டிருந்த மொகலாயப் படைக்குப் பிடிகொடுக்காமல் விஷால்கர் நோக்கிச் சென்றார். மராட்டிய அரசருடைய படைகள் பேராரில் நடத்த முயன்ற தாக்குதல் ஆரம்பத்திலேயே முடக்கப்பட்டுவிட்டது. ஆனால் கிருஷ்ண சேவந்த் தலைமையிலான ஒரு படை தமுனி பகுதிக்கு அருகில் தாக்குதல் நடத்திவிட்டுத் திரும்பியது. நர்மதை நதியை மராட்டியப் படை கடந்து சென்று மேற்கொண்ட முதல் தாக்குதல் இதுவே.

இதனிடையில் பிற மராட்டியக் குழுக்களுடனும் போர்கள் நடந்தவண்ணம் இருந்தன. 9, ஜன, 1700-ல் நஸ்ரத் ஜங் (ஜுல்ஃபிகர்) தன யாதவ், ராணாஜி கோர்படே, ஹனுமந்த ராவ் ஆகியோருடன் மசூர் பகுதிக்கு அப்பால் இருந்த ஒரு போர்க்களத்தில் மோதினார். அவர்கள் அனைவரையும் தோற்கடித்து 500க்கும் மேற்பட்ட மராட்டிய வீரர்களைக் கொன்று குவித்தார். சில நாட்கள் கழித்து கன்னாபூர் எல்லைப் பாதுகாவல் முகாமை தன யாதவ் தாக்கினார். அங்கிருந்த மொகலாயத் தளபதி ஆவ்ஜி அதலைச் சிறைப்பிடித்தார்.

இதனிடையில் சத்ராவை ஒளரங்கஜீப் முற்றுகையிட்ட இடத்தில் மொகலாயர்களுக்கும் மராட்டியப் படைகளுக்கும் இடையில் போர் நடந்துவந்தது.

26. ராஜாராமின் மரணம், தாரா பாயின் கொள்கை

1700, மார்ச் 2 வாக்கில் சிங்க கர் பகுதியில் ராஜாராம் உயிர் துறந்தார். தொடர் போர்கள் மற்றும் மொகலாயர்களின் தொடர்ச்சியான துரத்தல் இவற்றினால் ஏற்பட்ட உடல் நலக் குறைவால் அவருடைய மரணம் சம்பவித்திருக்கக்கூடும். அப்போது அவருடைய குடும்பம் விஷால்கர் பகுதியில் இருந்தது. அவருடைய செல்ல மகனும் திருமண உறவுக்கு அப்பால் பிறந்தவருமான கர்ணாவை தன யாதவின் ஆதரவுடன் அமைச்சர்கள் உடனே மன்னராக்கினர். ஆனால் அவர் அம்மை நோய் தொற்றியதால் மூன்றே வாரங்களில் இறந்துவிட்டார். தாராபாய் மூலம் ராஜாராமுக்குப் பிறந்த உண்மையான வாரிசான மூன்றாம் சிவாஜி, தளபதி ராமச்சந்திரரின் ஆதரவுடன் மேற்கின் பிரதிநிதியாகப் பதவி ஏற்றார். ராஜாராமின் விதவை மனைவிகளான தாரா பாய்க்கும் ராஜா பாய்க்கும் இடையில் பூசல் மூண்டது (முறையே மூன்றாம் சிவாஜி மற்றும் இரண்டாம் சம்பாஜியின் தாயார்கள்). இருவரும் தமது மகனுக்கே அரசாட்சி கிடைக்கவேண்டும் என்று விரும்பினர். அமைச்சர்கள், தளபதிகள் என இரு தரப்பினருக்கும் ஆதரவாகப் பலர் பிரிந்து நின்றனர். ஆனால் மூத்த தாரமான தாரா பாயின் திறமையும் வலிமையும் அரச சபையில் அவருக்கே அதிக மரியாதையையும் அதிகாரத்தையும் பெற்றுத் தந்தது.

தன் கணவர் உயிர் துறந்த செய்தி கிடைத்ததுமே தாரா பாய் ஆலம்கீருக்குத் தன் கீழ்ப்படிதலைத் தெரிவித்து, தக்காணப் பகுதியில் ஏழாயிரம் மன்சாப் மற்றும் தேஷ்முகி உரிமைகளை மன்னர் ராஜாராமின் முறையான வாரிசான மூன்றாம் சிவாஜிக்குத் தரும்படிக் கேட்டுக்கொண்டார். தக்காணத்தில் இருக்கும் மொகலாயத் தளபதிக்கு 5000 வீரர்களைக் கொண்ட படையைத் தந்து உதவுவதாகவும் ஏழுகோட்டைகளை விட்டுத் தருவதாகவும் தெரிவித்தார். ஒளரங்கஜீப் இந்த விண்ணப்பத்தை மறுதலித்தார். மே மாத இறுதிவாக்கில் தளபதி ராமச்சந்திரரின் பிரதிநிதி ராமஜி பண்டிட்டும், பரசுராமரின் பிரதிநிதி அம்பாஜியும் இளவரசர் ஆஸமைச் சென்று சந்தித்து ராஜாராமின் மகன் மூன்றாம் சிவாஜியின் சார்பில் பேரரசரிடம் பரிந்துரைக்கும்படிக் கேட்டுக்கொண்டனர். இதற்கு பிராய்ச்சித்தமாக மராட்டியக் கோட்டைகளை மொகலாயர் வசம் ஒப்படைக்கவும் சம்மதம் தெரிவித்தனர். இந்த மிகையான பணிவும் விண்ணப்பங்களும் எல்லாம் மிகவும் மேலோட்டமானவையாகவே இருந்தன. எதுவுமே நடைமுறையில் கடைப்பிடிக்கப்படவில்லை.

27. கொங்கன் பகுதியில் போர் – 1689 1704.

சூரத்திலிருந்து தென் திசையில் சென்றால் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் அரபிக் கடலுக்கும் இடையிலான நீண்ட கடலோர நிலப்பகுதியில் கீழ்க்காணும் பிரிவுகளைக் காணமுடியும்: முதலில் கோலி பழங்குடியினர் வசிக்கும் கோல்வன் பகுதி இடம்பெறுகிறது. இவையே ஜோவர் மற்றும் தர்மபுர பிராந்தியம். அடுத்ததாக வடக்கு கொங்கணி பகுதி அமைந்திருக்கிறது. இன்றைய தானே, கொலாபா மாவட்டங்கள். மலைத்தொடருக்குக் கிழக்குப் பக்கம் அமைந்திருக்கும் நாசிக், புனே மாவட்டங்களுக்கு இணையான பகுதி இது. இறுதியாகக் தென் கொங்கணி பகுதி அனைந்திருக்கிறது. இன்றைய ரத்னகிரி. மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரினூடான தக்காணப் பீடபூமியில் சத்ரா மற்றும் கோலாபூர் மாவட்டங்களுக்கு இணையாக இது அமைந்திருக்கிறது.

ரத்னகிரியின் தென் கோடியில் வின்குர்லா பகுதியில் கடலோரப்பகுதி பிளவுண்டதாக இருக்கிறது. 17-ம் நூற்றாண்டில் கூடல் தேசத்தினர் என்று அழைக்கப்பட்ட சேவந்த் குலத்தினரின் பிராந்தியம் இடையில் அமைந்திருக்கிறது. இதற்கு தெற்கே போர்ச்சுகீசியர் ஆக்கிரமித்திருந்த கோவா அமைந்திருக்கிறது. இதற்கும் தெற்கே கடலோர கார்வார் மாவட்டத்திலிருந்து கர்நாடகப் பகுதி ஆரம்பிக்கிறது. உள்ளே சுந்தா மற்றும் பேதனூர் அமைந்துள்ளன. கிழக்கே மைசூர் பீடபூமி ஆரம்பிக்கிறது.

நந்தர்பூர் நகருக்கு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பிளவினூடாக, தர்மபூருக்கு சற்று தொலைவில் இருக்கும் வளமான கந்தேஷ் மற்றும் பேரார் பகுதிக்குள் படையெடுத்துவரும் சக்திகள் எளிதில் நுழைந்துவிடமுடியும். வடக்கே இருக்கும் சூரத் அல்லது கிழக்கே இருக்கும் பக்லான பகுதிகள் மீது தாக்குதல் நடத்த இந்த கோல்வன் பகுதி இடமளித்தது. பக்லானா பகுதிக்கு தெற்கே சந்தூர் மலைத் தொடர் நாசிக் பகுதிக்குள் ஊடுருவ உதவியது.

1657-1662 காலகட்டத்தில் கொங்கண் பகுதியும் 1670-1673 காலகட்டத்தில் கோலி பகுதியும் சிவாஜியின் கட்டுப்பாட்டில் இருந்தன. அவருடைய மறைவுக்குப் பின்னர் 1682 மற்றும் 1683 வாக்கில் மொகலாயப் படைகள் வட கொங்கண் பகுதிக்குள் ஊடுருவின. தலைநகர் காலியன் பகுதியைத் தற்காலிகமாக ஆக்கிரமித்தன. அவற்றை ஆட்சி செய்வதைவிட சூறையாடவும் எரிக்கவுமே செய்தனர். 1683 டிசம்பரில் மராட்டியர்கள் கொங்கண் பகுதியை மீட்டெடுத்து அடுத்த ஐந்து ஆண்டுகள் நிர்வகித்தனர். அடிக்கடி சித்திகளிடமிருந்து தாக்குதல்கள் நடந்தவண்ணமும் இருந்தன. 1689 வாக்கில்தான் மொகலாயர்கள் உள்ளூர் தலைவரின் உதவியுடன் இந்தப் பகுதியில் நிலைபெற ஆரம்பித்தனர்.

அராபிய குலமான நவியத்தைச் சேர்ந்த சையது பிரிவினர் இங்கு வெகு காலத்துக்கு முன்பே குடியேறியிருந்தனர். அவர்களில் ஒருவரான மத்பர் கான் சையது, நாசிக் மாவட்டத்தின் தானேதாராக நியமிக்கப்பட்டபோது (1688) தனது திறமை மற்றும் தொலைநோக்குப் பார்வையினால் துடிப்புடன் செயல்பட்டார். உள்ளூர் மலைவாழ் மக்களைத் தனது காலாட்படையில் இணைத்துக்கொண்டார். அக்கம்பக்கத்தில் இருந்த பல ஜமீந்தார்களையும் தன் பக்கம் இணைத்துக்கொண்டார். லஞ்சம் கொடுத்தோ போரிட்டோ பல மராட்டியக் கோட்டைகளைக் கைப்பற்றினார். பட்டா (விக்ரம்கட்), குலாங், திரியம்பக் (8, ஜன, 1689), பிரபாத், கர்னாலா, துகாத், மாணிக்கட் மற்றும் மஹூலி (ஆகஸ்ட் வாக்கில்) கோட்டைகளைக் கைப்பற்றினார். அப்படியாக கோலி பிராந்தியம் தொடங்கி பம்பாய் நோக்கிய தென் திசையிலான வட கொங்கண் முழுவதும் மொகலாயப் பேரரசின் ஆளுகைக்குள் சென்று சேர்ந்தன. 20 ஆண்டுகாலத் தொடர் போர்களினாலும் மராட்டிய ஆதிக்கத்தினாலும் இந்தப் பகுதி பெரும் பாதிப்புகளுக்கு உள்ளானது. கான் சையது இந்தப் பகுதிகள் மீது மொகலாய ஆட்சியை நிலைநிறுத்தி குடியானவக் குடியேற்றங்களை ஊக்குவித்து, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றி இந்தப் பிராந்தியம் வளம்பெற வழிவகுத்தார்.

மத்பர் கானின் இந்த வெற்றிகரமான படையெடுப்புகளுக்குப் பின் அவர் காலியன் பகுதிக்கு திரும்பி (1690) சில ஆண்டுகள் ஒப்பீட்டளவில் அமைதியான வாழ்க்கையை முன்னெடுத்தார். ஓர் அருமையான மாளிகை கட்டிக் கொண்டார். பொது மக்களை சந்திக்கும் அரங்கு, ஒரு மசூதி, துருக்கிய குளியல் அறை, போர்ட்டிகோ முன்மாடம், தோட்டம், குளம், நீரூற்று மற்றும் பல வசதிகளைக் கொண்டதாக அந்த அரண்மனை கட்டப்பட்டது. ஒரு லட்ச ரூபாய் செலவில் தன் மனைவிக்காக அற்புதமான கல்லறையை காலியன் பகுதியில் கட்டினார்.

1693 ஆரம்பகாலத்தில் மராட்டியர்கள் தமது இழந்த செல்வாக்கை மீட்டெடுத்துக்கொண்டுவிட்டனர். மொகலாயர்கள் தமது ஆதிக்கத்தை இழந்து பின்னடைவைச் சந்திக்க நேர்ந்தது. பேரரசப் படைகள் சமீபத்தில் கைப்பற்றிய கோட்டைகள் அனைத்தையும் பெரும் தாக்குதல் நிகழ்த்தி மராட்டியப்படை மீட்டுக்கொண்டது. மராட்டியர்கள் இந்தப் படையெடுப்புகளை முன்னெடுக்க கொங்கண் பகுதி வசதியான களம் அமைத்துக் கொடுத்தது. முன்பக்கம் இருந்த மேற்குத் தொடர்ச்சி மலை நல்ல பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தது. மொகலாய எதிரிகள் கிழக்கு கொங்கண் பகுதி வழியாகத் தாக்க வந்தாலும் மராட்டியத் தலைவர்கள், படைவீரர்கள் தமது குடும்பத்தினரை போர்ச்சுகீய ஆக்கிரமிப்பில் இருந்த மேற்குக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பாக இருக்கவைத்துவிட்டுத் தமது போரை தீவிரமாக முன்னெடுக்க வழிவகுத்தது. போர்ச்சுகீசிய தளபதிக்கு லஞ்சம் கொடுத்து தேவையான அடைக்கலம் தரும்படியும் வட கொங்கண் பகுதியில் இருந்த கிராமங்களுக்கும் கோட்டைகளுக்கும் உணவும் பிற தேவையானவையும் தரும்படியும் செய்திருந்தனர்.

இதனால் மத்பர் கான் போர்ச்சுகீசிய வட பகுதியை (கேஸின் மற்றும் டாமன்) தாக்கி எதிரி தரப்பினரைச் சிறைப்பிடித்தார். அப்படி இறுதியாக கோவாவை கைப்பற்றியவர் மொகலாயப் பேரரசுக்குக் கீழ்படிந்து நடப்பதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செய்து, பரிசுகள் கொடுக்கவைத்து அந்தப் பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டுவந்தார்.

ஆலம்கீர் ஒளரங்கஜீபின் அரசவை ஆவணக்காப்பகத்தில் மத்பர் கான் சையதின் திறமை, நிர்வாக ஒழுங்கு, செய் நேர்த்தி ஆகியவற்றுக்கான சான்றுகள் ஏராளம் இருக்கின்றன. மொகலாய ஆதிக்கத்தை மேலும் தென் திசையில் நிலைநிறுத்த ஜஞ்ஜீரா பகுதியைச் சேர்ந்த சித்தி சையது தலைவருடன் செய்துகொண்ட ராணுவ உடன்படிக்கை பற்றியும் அதில் இருந்து தெரிந்துகொள்ளமுடிகிறது. 1704 வாக்கில் இந்த விசுவாசமும் திறமையும் மிகுந்த தளபதி உயிர் துறந்தார்.

(தொடரும்)

___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *