1. மராட்டிய அரசின் கொள்கை, 1689 – 1699.
மராட்டிய மன்னராக முடி சூட்டப்பட்ட ராஜாராம் சென்னை நோக்கி தப்பிச் சென்றதையடுத்து (ஜூலை, 1689) மராட்டிய ராஜ்ஜிய நிர்வாகம் முழுவதும் அதன் அமைச்சர்கள் வசம் சென்று சேர்ந்தது. மேற்குப் பகுதியின் நிர்வாகியாக ராமச்சந்திர நீலகண்டர் நியமிக்கப்பட்டார். மன்னர் இல்லாத ராஜ்ஜியத்தைத் தனது அறிவினாலும் நிர்வாகத் திறமையாலும் அருமையாக முழுமையாகக் கட்டுக்குள் வைத்திருந்தார். மொகலாயப் படைகளின் முன்னகர்வுகளைத் திறமையாகத் தடுத்து நிறுத்தினார். மொகலாயப் பிராந்தியங்களுக்குள் மிகத் தெளிவாகத் துல்லியமாகத் திட்டமிட்டு தாக்குதல்கள் நடத்தித் திரும்பினார். செஞ்சி கோட்டையில் இருந்த மன்னருக்கு வேண்டிய உதவிகளை முறையாகச் செய்துவந்தார். மராட்டியத் தளபதிகளுக்கு இடையே இருந்த சிக்கலான போட்டி பொறாமைகளை மிகவும் நேர்த்தியாகச் சமாளித்தார்.
கர்நாடகப் பகுதிகளில் சுகபோகங்களில் திளைத்துவந்த ராஜாராம் அடிப்படையில் பலவீனமான சித்தம் கொண்டவர். அவருடைய நிராதரவான நிலைவேறு அவரை மேலும் அதிகாரமற்றவராக்கியிருந்தது. படையோ கருவூலமோ மக்களோ எதுவுமே இல்லாத மன்னராக இருந்தார். ஆயிரம் அல்லது ஐநூறு படை வீரர்களை ஒருங்கிணைக்க முடிந்த எந்தவொரு மராட்டியத் தலைவரும் பெயரளவிலான மன்னர் ராஜாராமை ஏற்றுக்கொள்வதாகச் சொல்லி அதிகாரம் செலுத்தும் நிலையே இருந்தது. எனவே ராஜாராம் பதவிகள், பட்டங்கள் கொடுப்பதில் மிகவும் தாராளமான எண்ணம் கொண்டவராகவே நடந்துகொண்டார். செஞ்சி கோட்டையில் இருக்கும் மன்னரைச் சென்று சந்தித்து எந்தவொரு மராட்டிய சர்தாரும் சன்மானங்கள் கொடுத்தால் அவர் உடனே இவர்களுக்கு பதவியும் அதிகாரமும் பட்டமும் கொடுத்து பல்வேறு பகுதிகளை அவர்களுடைய பொறுப்பில் பிரித்துக் கொடுத்துவந்தார். அவர்கள் அப்படியாக தமக்குக் கிடைத்த பகுதிகளில் வரி வசூல் செய்து தனிக்காட்டு ராஜாவாகத் திகழ்ந்தனர். தன்னுடைய ஆட்சிப் பகுதி முழுவதும் கைவிட்டுப் போகும் நிலையில் இருந்தபோதிலும் ராஜாராம், வந்து கேட்ட தளபதிகளுக்கெல்லாம் பதவிகளையும் அதிகாரங்களையும் வாரி வழங்கியதில் இருந்து அவருடைய அரசியல் செயலற்ற தன்மை நன்கு வெளிப்படுகிறது. பதவிகளையும் அதிகாரங்களையும் கேட்டுவரும் எந்தவொரு சுய நலம் மிகுந்த மராட்டிய தலைவரையும் அவரால் எதிர்க்கவோ மறுக்கவோ முடிந்திருக்கவில்லை.
ராஜா ராம் ஆட்சி செய்த மிகக் குறுகிய காலகட்டமான 11 ஆண்டுகளில் ஐந்து சேனாபதிகளை நியமித்துவிட்டிருந்தார். படைத்தலைவர் என்ற அந்தஸ்தில் ஒரே நேரத்தில் ஐந்து பேர் வெவ்வேறு பெயர்களில் அதிகாரத்தில் இருந்தனர். ஐந்து பேருமே தமக்கென தனி கொடியைப் பிடித்தபடி சேனாதிபதி பதவிக்கான அத்தனை சலுகைகள், உரிமைகளையும் அனுபவித்துவரவும் செய்தனர்.
ஒருவகையில் அப்படி அவர் அதிகாரத்தைப் பகிர்ந்துகொடுத்ததென்பது அன்றைய மராட்டிய ராஜ்ஜியத்தின் சூழ்நிலைக்குப் பொருத்தமானதாகவே இருந்தது. அந்த ஐந்து சேனாபதிகளும் தம் விருப்பத்தின்படி மொகலாய ஆக்கிரமிப்புப் பகுதிகளில் மறைந்து தாக்கும் கெரில்லா போர் முறையை திறம்பட முன்னெடுத்து அவர்களுக்கு மிகப் பெரிய இழப்பை உருவாக்கிவந்தனர். மொகலாயப் படைகளுக்கு எதிரிகளின் எந்த முக்கிய பிராந்தியத்தைத் தாக்கவேண்டும்; எதைத் தற்காத்துக்கொள்ளவேண்டும் என்பது எதுவுமே தெரிந்திருக்கவில்லை.
ஓரிடத்தில் நிற்காமல் எப்போதும் நகர்ந்துகொண்டேயிருக்கும் மராட்டியப் படைகள் மிக நீண்ட தொலைவுக்கு தம் போர்களை முன்னெடுத்துவந்தன. யாரும் எதிர்பார்க்காதவகையில் எதிர்பார்க்காத இடங்களில் இருந்து தாக்கியும்வந்தனர். இப்படி அலைந்து திரிந்தபடித் தாக்கும் குழுக்கள் அங்கு ஏராளம் இருந்தன. இதனால் மொகலாய ஆக்கிரமிப்பில் இருந்த தக்காணப் பகுதியில் எப்போதும் மிகப் பெரிய அமைதியின்மையே நிலவியது. மராட்டியர்கள் இந்தக் காலகட்டத்தில் முறையான போர்க்களத்தில் அணிவகுத்துப் போரிடும் போர்களை முழுவதும் தவித்தனர். மழைக்காலங்களில் இந்தப் படைகள் எங்கு முகாமிட்டிருக்கும் என்பதைக் கண்டுபிடிக்கவோ அங்கு சென்று சேர்வதோ முடியாததாக இருந்தது. ஆண்டு முழுவதும் இந்தப் படைகள் ஒரே இடத்தில் குழுமியும் இருக்காது. அக்டோபர் முதல் ஏப்ரல் வரையான காலகட்டத்தில் ஒன்று சேர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு தத்தமது ஊர்களுக்குப் பிரிந்துசென்றுவிடுவது வழக்கம்.
மஹாராஷ்டிர அமைச்சர்களிடையேயும் செஞ்சியில் இருந்த அவையினரிடையேயும் போட்டியும் பொறாமையும் மிகுதியாகவே இருந்தன. பரசுராம் திரியம்பக் தனக்கென ஒரு குழுவைத் தயார் செய்துகொண்டு அதில் தளபதி சந்தாஜி கோர்படேயை இணைத்துக்கொண்டிருந்தார். இதன் விளைவாக ராமசந்திர நீலகண்டர் பக்கம் தளபதி தன யாதவ் சேர்ந்துகொண்டார். சந்தாஜியின் செயல்பாடுகள் ராமச்சந்திரருக்கு எதிரானதாகவே இருந்தன. மராட்டிய நலன் சார்ந்த எந்தவொரு முயற்சியிலும் அவர் ராமசந்திரருக்குத் துணை நிற்கவில்லை (1693 பனாலா கோட்டை மீட்புப் போர் உட்பட). தனது தலைமையில் நடக்கும் போர்களில் கிடைக்கும் வெற்றியை தானே சொந்தம் கொண்டாடும் மனநிலையிலேயே சந்தாஜி கோர்படே இருந்தார். இதனால் அவரைப் பதவியில் இருந்து நீக்கும்படி மன்னர் ராஜாராமிடம் ராமசந்திரர் கோரிக்கைவிடுத்தார். ஆனால் இன்னொரு அமைச்சரான சங்கர்ஜி மல்ஹர் இப்போது சந்தாஜிக்கு ஆதரவாக வந்து நின்றார். நீமா சிந்தியா என்றொரு தளபதியும் இதுபோலவே கலக குணமும் சுயநலமும் மிகுந்தவராக இருந்தார். இப்படியான நெருக்கடிகளை முடிந்த அளவுக்கு ராமசந்திரர் சமாளித்தார். ஒருவகையில் அவர் இவற்றில் பெருமளவுக்கு வெற்றிபெற்றார் என்றே சொல்லவேண்டும்.
சந்தா கோர்ப்படே, தன யாதவ் ஆகியோருக்கு இடையில் இருந்த போட்டியின் விளைவாக 1696-ல் மராட்டியர்களுக்கிடையிலேயே மூன்று போர்கள் மூண்டன. சந்தாஜி கோர்படே கொல்லப்பட்டதைத் தொடர்ந்து (1697) அவருடைய மகன் ராமுஜிக்கும் சகோதரர் பஹார்ஜி ஹிந்து ராவுக்கும்இடையில் பெரும் சண்டை மூண்டது. அதோடு இவர்களுக்கும் தன யாதவ் குழுவுக்கும் இடையிலான மோதலும் பெருகியது. இந்தக் காயங்கள் ஆறுவதற்குப் பல காலம் ஆனது. இந்த உள் மோதலின் காரணமாக மொகலாயப் படைகளுக்குச் சிறிது ஆசுவாசம் கிடைத்தது.
போர்ச்சுகீசியரின் ஆக்கிரமிப்பில் இருந்த டாமன் பகுதியிலும் தென் கொங்கண் பகுதியிலுமாக மராட்டியப் போர் வீரர்களின் குடும்பங்களுக்கு அடைக்கலம் தருவதில் ராமச்சந்திரர் நேர்த்தியாகச் செயல்பட்டார். மொகலாயப் படைகள் போர்ச்சுகீசிய ஆக்கிரமிப்புப் பகுதிகளிலும் மைசூரின் வட மேற்கு மூலையில் இருக்கும் பேரட் பகுதிக்குள்ளும் இதுவரை தாக்குதல் மேற்கொண்டிருக்கவில்லை.. ஆலம்கீருக்கு இந்தப் பகுதிகள் பக்கம் கவனத்தைத் திருப்ப அவகாசம் கிடைத்திருக்கவில்லை.
2. ராஜ மாதா தாரா பாயின் ஆட்சி. மராட்டிய சாம்ராஜ்ஜியத்தின் உள் முரண்கள்
2, மார்ச், 1700-ல் மன்னர் ராஜாராம் இறந்ததையடுத்து, அவருடைய திருமண உறவு தாண்டிப் பிறந்த மகனான கர்ணன் ஆட்சிக்கு வந்தார். மூன்று வாரத்தில் அவரும் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடவே தாரா பாய் தன் மகனும் முறையான வாரிசான சிவாஜியை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தினார். அப்போது சிவாஜி பச்சிளம் பாலகனாக (10 வயது) இருந்தார். பரசுராம் திரியம்பகின் உதவியுடன் உண்மையில் ராஜா மாதா தாரா பாய்தான் ஆட்சி செய்தார். அப்படியாக மராட்டிய ராஜ்ஜியத்தில் இரண்டாம் பிரதிநிதி மூலமான ஆட்சி ஆரம்பித்தது. இப்போது மராட்டிய சாம்ராஜ்ஜியத்தின் உச்சபட்ட அதிகாரம் எந்த அமைச்சர் வசமும் இல்லை. ராஜ மாதா தாரா பாய் மோஹிதேவிடம் வந்து சேர்ந்தது. ராஜா ராமின் மரணத்தைத் தொடர்ந்து ராஜ்ஜியத்தில் ஏற்படவிருந்த குழப்பத்தையும் கலகத்தையும் ராஜ மாதாவின் சாமர்த்தியமும் நற்பண்புகளும் தடுத்து நிறுத்தின. வாரிசுரிமை தொடர்பான மோதலையும் அது முடிவுக்குக் கொண்டுவந்தது. 1699-1701 வரையிலும் ஒளரங்கஜீப் பெற்றுவந்த தொடர் வெற்றியையும் ராஜா மாதாவின் ஆட்சி முடிவுக்குக் கொண்டுவந்தது. எதிரிகளான முஸ்லிம்களின் வரலாற்றாசிரியரான காஃபி கான் கூட ராஜா மதா தாரா பாய் பற்றிப் புகழ்ந்துரைத்தாகவேண்டிய அளவுக்கு தாரா பாயின் ஆட்சி சிறந்து விளங்கியது:
‘தாரா பாயின் நிர்வாகத்தின் கீழ் மராட்டியர்களின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் பலம்பெற்றன. ஆட்சி நிர்வாகம் முழுவதையும் அவர் தன் கைகளில் எடுத்துக்கொண்டார். தளபதிகளை மாற்றுதல், ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் விவசாய தொழில் வளர்ச்சிக்கு வழிவகை செய்தல், மொகலாயப் பகுதிகளுக்குள் சென்று தாக்குதல் நடத்துதல் என அனைத்தையும் திறம்படச் செய்தார். மொகலாயப் பிடியில் இருந்த தக்காணப்பகுதிகளில் சிரோன் ஜி, மால்வாவில் இருந்த மந்தேஸர் வரையிலும் கூட படைகளை அனுப்பித் தாக்குதலை முன்னெடுத்தார். தனக்குக் கீழே இருந்த அதிகாரிகள், அமைச்சர்கள், தளபதிகள் அனைவரிடமும் நற்பெயரையும் மரியாதையையும் வென்றெடுத்தார். ஒளரங்கஜீபின் கடைசி காலம் வரையிலும் அவர் மராட்டியர்களுக்கு எதிராக எடுத்த அனைத்து நடவடிக்கைகளையும் தாரா பாய் திறம்பட முறியடித்தார்’.
மன்னர் ராஜாராமின் மரணத்தையடுத்து சத்ரா பகுதியில் இருந்த பல அமைச்சர்களின் போட்டி மனப்பான்மையினால் பரசுராம் திரியம்பக், பர்லி கோட்டையில் இருந்து வெளியேறி வந்து மொகலாயர்களுடன் கை கோக்க முடிவெடுத்தார். ஆனால் ராஜ மாதா தாரா பாய், சமயோஜிதமாக அவருக்கு பிராந்திநிதி பதவி கொடுத்து அந்த அனுபவமும் திறமையும் வாய்ந்த அமைச்சரின் நல்லாதரவை வென்றெடுத்தார். ஆனால் தாரா பாய் மிகவும் சிரமப்பட்டே தன்னை நிலைநிறுத்திக்கொள்ளவேண்டியிருந்தது. சில தளபதிகள் அவருக்குக் கட்டுப்பட்டனர். சிலர் கட்டுப்படவில்லை. இரண்டாம் சம்பாஜியின் தாயும் ராஜாராமின் இளம் மனைவியுமான ராஜஸ் பாய் அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பினார். தன் மகன் இரண்டாம் சம்பாஜியை அரியணையில் அமர்த்த அவர் விரும்பினார். எனவே, தாரா பாயின் ஆட்சியை அவர் ஏற்கவில்லை. மராட்டியத் தலைவர்களிடையே மூன்றாவதாக இன்னொரு அதிகார மையமும் இருந்தது. அவர்கள் மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை சாஹுவிடம் ஒப்படைக்கவிரும்பினர். ஏனென்றால் சிவாஜி மஹாராஜின் மூத்த வாரிசு வழி உரிமை அவருக்கே இருந்தது. இந்த வாரிசுரிமைச் சிக்கல்கள் ஒருபக்கம்; மராட்டியத் தளபதிகளுக்கிடையே இருந்த மோதல்கள் ஒருபக்கம்; குறிப்பாக சந்தா கோர்படே மற்றும் தான் யாதவ் குழுக்களுக்கிடையிலான மோதல் என நிலைமை சிக்கலாகவே இருந்தது.
3. சாஹுவின் சிறைவாசம் – 1689 – 1707. மொகலாயத் தரப்புக்கு ஆதரவாக இருந்த மராட்டியக் குழுக்கள்.
ராஜ்கர் பகுதி 1689 அக்டோபரில் மொகலாயரிடம் சரணடைந்தபோது சம்பாஜியின் மூத்த மகனான சாஹுவுக்கு ஏழு வயது. அப்போதே மொகலாயர்கள் வசம் சிறைக்கைதியாகிவிட்டிருந்தார். அன்பாக நடத்தப்பட்டபோதிலும் அவர் மிகுந்த கண்காணிப்பின் கீழ் ஒளரங்கஜீபின் முகாமுக்கு வெகு அருகிலேயே மொகலாய ‘சிவப்புக் கூடார’த்துக்குள்ளேயே காவலுக்குள் வைக்கப்பட்டிருந்தார். அவருடன் தாயார் யசோபாயும் ஒன்றுவிட்ட சகோதரர்களான மதன் சிங், மது சிங் ஆகியோரும் உடன் சிறைவைக்கப்பட்டிருந்தனர்.
1700 வாக்கில் சாஹுவுக்கு மிகப் பெரிய நோய் தாக்கியது. அதன் தாக்கம் அவருடைய மனதிலும் உடம்பிலும் இறுதிவரை இருந்ததுபோலவே தெரிகிறது. அதுபற்றி அரச ஆவணக் காப்பகத்தில் இருக்கும் ஒரு குறிப்பு கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:
26 ஆகஸ்டில் சாஹு மஹாராஜ் அவைக்கு வந்தார். தன் உடம்பைச் சுட்டிக் காட்டியபடி, முழு உடம்பும் மஞ்சள் பாரித்துவிட்டது. எதனால் இப்படி ஆகியிருக்கிறது என்று கேட்டார். ஹஃபீஸ் அம்பர் என்ற அலி, ‘சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும்போது இந்துகள் எதிரிகள் தரும் சமைத்த உணவை உண்ணக்கூடாது; காய், கனிகள், இனிப்பு ஆகியவற்றை மட்டுமே சாப்பிடலாம் என்பதால் மன்னர் அரிசி, கோதுமை, பருப்பு இவற்றைச் சாப்பிடாமல் இருந்துவிட்டீர்கள். அதுதான் காரணம்’ என்று பதில் சொன்னார்.
ஒளரங்கஜீபுக்கு நெருக்கடிகள் முற்றத் தொடங்கின. தக்காணத்தை அவரால் வெல்ல முடியாதென்பது புரிய ஆரம்பித்ததும் மராட்டியத் தளபதிகளுடன் சாஹு மஹாராஜ் மூலம் சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்வந்தார். முதலில் 9, மே, 1703 வாக்கில் ஹமீத் உத் தீனை அனுப்பி சாஹு மஹாராஜை முஸ்லிமாக மாறும்படி வற்புறுத்தினார். ஏற்கெனவே சில இந்து சமஸ்தான வாரிசுகள் ஆட்சி உரிமைக்காக அப்படி ஆசைகாட்டி மதம் மாற்றப்பட்டிருந்தனர். ஆனால் சாஹு மஹாராஜ் மதம் மாற மறுத்துவிட்டார். சாஹுவை விடுதலை செய்வதன் மூலம் மராட்டியத் தரப்பில் பிளவை உருவாக்கலாம் என்று நினைத்து ஒளரங்கஜீப் அதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். இளவரசர் காம் பக்ஷின் மத்யஸ்தத்தில் மராட்டியத் தளபதிகளுடன் ஒரு சமரச உடன்படிக்கை கையெழுத்தாகவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுதலை செய்யத் தயாரானார்.
தஞ்சாவூரில் இருந்த வியன்காஜி போன்ஸ்லேயின் மகன் ராய்பன் மூலம் பேரரசர் இந்த சமரசப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார். அவருக்கு ஆறாயிரம் வீரர்களை கொண்ட படை ஒன்றையும் வழங்கினார். 10 ஜூலை 1703-ல் சாஹுவிடம் இது தொடர்பாகப் பேச அனுப்பிவைத்தார். ஆனால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது. பீம்சென் இதுபற்றி வெளிப்படையாகக் குறிப்பிட்டிருப்பது: மொகலாய இளவரசர் தொடர்ந்து சமரசப் பேச்சுவார்த்தைக்கு ஆட்களை அனுப்பியவண்ணம் இருந்தார். ஆனால், மராட்டியத் தளபதிகள் வெற்றி முகத்திலேயே இருந்தனர். ஒட்டு மொத்த தக்காணமும் நல்லதொரு விருந்தாக அவர்கள் கைகளுக்குக் கிடைத்திருந்தது. எனவே அதை விட்டுக் கொடுத்து சமரசப் பேச்சுவார்த்தைக்கு அவர்கள் வரவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? மொகலாய இளவரசரின் பிரதிநிதிகள் இப்படியாகத் தோற்றுத் திரும்பிக் கொண்டிருந்தனர். சாஹு மஹாராஜ் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்துவந்தார்’.
ஒளரங்கஜீபுக்கு என்ன செய்யவென்றே தெரியவில்லை. அவருடைய அந்திம ஆண்டில் (1707) மராட்டியர்களுடன் இன்னொரு அமைதி முயற்சிக்குத் தயாரானார். தன்னுடைய முகாமிலிருந்து சாஹு மஹாராஜை நஸ்ரத் ஜங்கின் முகாமுக்கு மாற்றினார் (25, ஜன). ராய்பன் அங்கு நஸ்ரத் ஜங்குக்கு உதவியாக நியமிக்கப்பட்டார். மராட்டியத் தளபதிகளை சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கு வரவைக்கும்படி சாஹு மஹாராஜை சம்மதிக்கவைக்கவும் அவரை விடுதலை பெறவைக்கவும் ராய்பன் முயற்சிகள் எடுக்கத் தோதாக ஒளரங்கஜீப் இந்த நடவடிக்கையை எடுத்தார்.
மராட்டிய தளபதிகளுக்கு நஸ்ரத் ஜங் நட்புறவுக் கடிதம் எழுதி, சாஹு மஹாராஜ் பக்கம் வந்து சேரும்படி அவர்களுக்கு அழைப்புவிடுத்தார். இதற்கும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. ராஜ மாதா தாரா பாய்க்கும் ராஜஸ் பாய்க்கும் இடையிலான மோதல் பெரிதாகிவந்தது. ஆனால், அதைப் பயன்படுத்திக்கொள்வதோடு, சாஹு மஹாராஜையும் உள்ளே களமிறக்கி மராட்டிய சக்திகளை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கில் ஒளரங்கஜீப் முன்னெடுத்தவை எந்தப் பயனையும் தரவில்லை. ஒளரங்கஜீப் இறந்த பின்னரே ஆக்ரா நோக்கி முன்னேறிச் சென்ற இளவரசர் ஆஸம், தக்காணத்தில் இருந்து சாஹு மஹாராஜ் தப்ப வழிவகுத்தார்.
ஒளரங்கஜீபுடனான போரில் மராட்டிய முன்னணிக் குடும்பங்கள் அனைத்தும் மராட்டிய சாம்ராஜ்ஜிய நலன் சார்ந்து ஓரணியில் திரண்டு போராடியதாகச் சொல்லமுடியாது. அவர்களில் பலரும் மொகலாய அரசவையில் பல்வேறு காரணங்களுக்காக இணைந்துகொண்டிருந்தனர். மாவீரர் சிவாஜியின் தாயார் பிறந்த சிந்தகேத் பகுதியைச் சேர்ந்த யாதவ் ராவ் மேட்டுக்குடியினர், லாக்ஜி யாதவின் மரணத்தைத் தொடர்ந்து ஷாஜஹானின் ஆட்சி காலத்தில் (1630) மொகலாயர் பக்கம் சேர்ந்துகொண்டிருந்தனர். பல தலைமுறைகள் மொகலாயர் பக்கமே இருக்கவும் செய்தனர். ராஜா ராமின் தாயார் பிறந்த ஷிர்கே குலத்தில் பிறந்த கனோஜி ஷிர்கேயும் அவருடைய மகன்களும் சம்பாஜியால் தாக்கப்பட்டதால் மொகலாய பேரரசரிடம் அடைக்கலம் தேடினர். அவரும் அவர்களுக்கு மிகப் பெரிய பதவிகள் தந்தார். ஷிர்கேகளும் நகோஜி மனேயும் (மாஸ்வாத் பகுதியின் தானாதார், 1694லிருந்து மொகலாயர் பக்கம் இருந்தார்) மொகலாயர்களுக்கு நீண்ட காலம் விசுவாசமாகவும் தொடர்ந்தும் திறம்பட சேவை செய்துவந்தனர். 23, ஜன, 1700-ல் சிறைப்பிடிக்கப்பட்ட அவிஜி ஆதல் (கானாபூரின் தானாதார்), 18, ஆகஸ்ட், 1700-ல் மொகலாயர்களுக்காகப் போரிட்டு மடிந்த ராமச்சந்திரர் (காடெள பகுதியின் தானாதார்), பஹர்ஜி பந்தரே (காசிகாவ் தானாதார்) ஆகிய மூன்று முக்கியமான மராட்டிய வீரர்களும் மொகலாயப் பேரரசுக்கு விசுவாசமாக நடந்துகொண்டிருந்தனர்.
சத்வஜி தஃப்லே என்றொரு மராட்டியத் தலைவரும் மொகலாயர் பக்கம் இருந்தார். இந்தக் குடும்பத்தினர் ஆதில் ஷாஹி அரசர்களுக்கு ஆதரவாக இருந்தனர். அந்த சுல்தான் வம்சம் வீழ்ந்ததையடுத்து வெற்றிபெற்ற மொகலாயர் பக்கம் சேர்ந்துகொண்டனர். சத்ரா கோட்டையைக் கைப்பற்றும் போரில் சத்வஜியின் மகன் பாஜி சாவன் தஃப்லே பெரும் சாகசத்துடன் படையை முன்னெடுத்துச் சென்று வீர மரணம் அடைந்தார் (13, ஏப், 1700). 1695க்கு முன்பாக மொகலாயர் பக்கம் இருந்து பிரிந்து சென்ற சத்வஜி மொகலாயப் பகுதிகளில் பல தாக்குதல்களை மேற்கொண்டார். ஆனால் 1701 வாக்கில் மீண்டும் மொகலாயர் பக்கம் திரும்பிவந்தார். அவருடைய மகனுடைய உயிர்த்தியாகத்துக்காக அவருக்கு ஐந்தாயிரம் வீரர்களைக் கொண்ட படையின் தலைமைப் பதவி தரப்பட்டது. ஜாத் பகுதியின் ஜாஹிர் உரிமையும் பரிசாகத் தரப்பட்டது.
சில ஆயிரக்கணக்கான மால்வேக்களும் (மராட்டிய மலைக்குலங்கள்) ஒளரங்கஜீபின் படையில் பணிபுரிந்திருக்கின்றனர். ஆனால் மொகலாயப் படைகளில் இப்படியான மராட்டியக் குறுங்குலங்களை இடம்பெறச் செய்ததென்பது அவையெல்லாம் பேரரசுக்கு எதிராகக் கலகம் செய்யாமல் தடுக்கும் நோக்கில் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தன. இந்தக் குழுக்களினால் மொகலாயப் படைக்குப் பெரிதாக பலம் எதுவும் அதிகரித்திருக்கவில்லை. ஏனென்றால் இந்த மராட்டியக் குறுங்குழுக்களின் ஆயுதங்கள் எல்லாம் முறையான மொகலாயப் படையினரின் ஆயுதங்களைவிட மிகவும் தரம் குறைவானவையே. அதோடு அவர்கள் மொகலாயப் பேரரசுக்காக முழு மனதுடன் போரிட்டிருக்கவில்லை. இந்தக் குழுக்களின் தலைவர்கள் அடிக்கடி கட்சி மாறியவண்ணமே இருந்தனர்.
4. சத்ரா கோட்டை – ஒளரங்கஜீபின் முற்றுகை
19, அக், 1699 வாக்கில் மராட்டியர்களின் வலிமை மிகுந்த கோட்டைகளைக் கைப்பற்ற இஸ்லாமாபுரியில் இருந்து ஒளரங்கஜீப் புறப்பட்டார். அடுத்த ஆறு ஆண்டுகள் இந்தப் போரிலேயே அவர் முழுமையாக ஈடுபடவும் செய்தார். புகழ் பெற்ற மராட்டியக் கோட்டைகளான சத்ரா, பர்லி, பனாலா, விஷால்கர் (கேல்னா), கோண்டானா (சிங்க கர்), ராஜ்கர், தோர்ணா ஆகியவை ஒவ்வொன்றாக ஒளரங்கஜீபினால் கைப்பற்றப்பட்டன. வேறு ஐந்து, சிறிய கோட்டைகளும் பின்னர் கைப்பற்றப்பட்டன. ஆனால் தோர்னா கோட்டையைத் தவிர பிற அனைத்து கோட்டைகளும் எந்தத் தாக்குதலும் மேற்கொள்ளாமல் கைப்பற்றப்பட்டன என்பதை நினைவில் கொள்ளவேண்டும். சிறிது கால முற்றுகைக்குப் பின் விலை கொடுத்து இவை அனைத்தும் பெற்றுக்கொள்ளப்பட்டன. அந்தக் கோட்டையின் காவல் படையினருக்குத் தமது பரிவாரங்களுடன் உடமைகளுடன் வெளியேறிக்கொள்ள அனுமதி தரப்பட்டது. அந்தக் கோட்டைகளின் தளபதிகளுக்கு தாக்குதலைக் கைவிட்டதற்காக விலை உயர்ந்த பரிசுகள் சன்மானமாக, கையூட்டாகத் தரப்பட்டன.
படையெடுத்துச் செல்லும் முன் இஸ்லாமாபுரியில் ஒளரங்கஜீப் தன் மனைவி உதய்புரியையும் மகன் காம் பக்ஷையும் மகள் ஜீனத் உன் நிஸாவையும் பாதுகாப்பாக விட்டுச் சென்றார். அதிகப்படியான சுமைகள், தேவையற்ற அதிகாரிகள், படைவீரர்களின் குடும்பத்தினர், ஆதரவாக உடன் வருபவர்கள் அனைவரையும் அங்கேயே விட்டுவிட்டுச் சென்றார். வாஸிரான ஆசாத் கான் போதிய படை பலத்துடன் இவர்களுக்குத் தேவையான வசதி வாய்ப்புகளைச் செய்து தர அங்கே இருந்துகொண்டார். இஸ்லாமாபுரியில் இருக்கும் முகாமுக்கு அல்லது முற்றுகையிட்டிருக்கும் மொகலாயப் படைகளுக்கு மராட்டியப் படைகளினால் அச்சுறுத்தல் வந்தால் சண்டையிட்டுக் காப்பாற்ற நகரும் படையுடன் ஜுல்ஃபிகர் நஸ்ரத் ஜங் வசம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
இஸ்லாமாபுரியில் இருந்து புறப்பட்ட ஒளரங்கஜீப் சத்ராவுக்கு 21 மைல் தெற்கேயிருந்த மசூர் பகுதிக்கு 21 நவம்பரில் சென்று சேர்ந்தார். அதற்கு ஆறு மைல் தென்மேற்கில் இருக்கும் வசந்தகர் கோட்டையை அங்கிருந்த படையினர் அச்சத்தினால் காலிசெய்துவிட்டுச் சென்றுவிட்டனர். 25 நவம்பரில் அங்கு நுழைந்த மொகலாயப் படை, கிலித் கி ஃபதா (வெற்றியின் திறவுகோல்) என்று தமது வெற்றிப் பயணத்துக்கான நல்ல சகுனம் என்ற அர்த்தத்தில் பெயரிட்டனர்.
அங்கிருந்து 8 டிசம்பர் வாக்கில் சத்ராவுக்கு மொகலாயப் படை சென்று சேர்ந்தது. கோட்டைச் சுவர்களுக்கு ஒன்றரை மைல் வடக்கே இருந்த கரன்ஜா கிராமத்தில் ஆலம்கீர் முகாமிட்டார். அதைச் சுற்றி ஐந்து மைல் தொலைவில் மொகலாயப் படை, உதவியாளர்கள், போக்குவரத்துக்கு உதவும் விலங்குகள் என பெரிய குழுவாக முகாமிட்டன. மராட்டியப் படையின் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் நோக்கில் இந்த முகாமைச் சுற்றிலும் பாதுகாப்பு அரண் எழுப்பப்பட்டது. 9 டிசம்பரில் முற்றுகைப் பணிகள் ஆரம்பித்தன. பாறைப் பாங்கான நிலத்தில் பதுங்குகுழிகள், பாதுகாப்பு அரண்கள், தாக்குதல் மேடைகள் அமைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. எனவே, பணிகள் மிகவும் மெதுவாகவே நடந்தன. கோட்டைமீதிருந்த படையினர் இடைவிடாது இரவும் பகலும் தொடர்ந்து மொகலாயப் படை மீது அனைத்துவகை ஆயுதங்களையும் பயன்படுத்தித் தாக்குதல் நடத்திவந்தனர். மொகலாயத் தரப்பில் முற்றுகை ஏற்பாடுகளும் தாக்குதலுக்கான முன் தயாரிப்புகளும் முழுமையடைந்திருக்கவும் இல்லை. சத்ரா கோட்டையில் இருந்து மராட்டியப் படைகள் மொகலாயப் படைகளின் விளிம்புவரை வந்து தாக்கிவிட்டுச் சென்றவண்ணம் இருந்தனர்.
மராட்டியப் படைகளின் தாக்குதல் முயற்சிகள் எல்லாம் முடிந்தவரை தடுத்து நிறுத்தப்பட்டன. ஆனால், மொகலாயப் படைகளுக்கான முக்கியமான அச்சுறுத்தல் மராட்டிய தரைப்படைகளின் மூலம் உருவானது. அவை மொகலாய முகாமை கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நகரில் வசிக்க நேர்ந்தவர்கள் போல் நிராதரவான நிலைக்குத் தள்ளியிருந்தது. உணவு, குடிநீர் ஆகியவற்றைத் தேடிச் செல்லும் மொகலாயப் படைகள் எல்லாம் மிக மிகப் பலமான படைப் பாதுகாப்புடனே எங்கும் சென்றுவர முடிந்தது. தன யாதவ், சங்கரா மற்றும் பல மராட்டியத் தளபதிகள் பல்வேறு திசைகளில் சுற்றி வளைத்து மொகலாயப் படையைத் தாக்கிவந்தனர். கிராமங்களுக்குச் செல்லும் பாதைகளைத் தடுத்து நிறுத்தியும் தானியங்களை வாங்கிக் கொண்டுசெல்லும் வழிகளை முடக்கியும் நெருக்கடி தந்துவந்தனர்.
கோட்டைச்சுவருக்கு வெகு அருகில் செல்லும்படியான ஒரு சுரங்கப்பாதையை (24 அடி நீளம்) தர்பியத் கான் கடினமான போராட்டத்துக்குப் பின் உருவாக்கிமுடித்தார். ஆனால் கோட்டையைத் தகர்த்துக் கைப்பற்றுவது சாத்தியமாக இருந்திருக்கவில்லை. 23 ஜனவரி வாக்கில் மொகலாயப் படையில் இருந்த மால்வாக்கள் 2000 பேர் கோட்டைச் சுவர் மேல் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஏறிச் செல்ல முயன்றனர். ஆனால் அந்த முயற்சியும் தோற்றுவிட்டது. 13 ஏப்ரல் வாக்கில் இரண்டு கண்ணிவெடிகள் வெடிக்கப்பட்டன. முதல் வெடி குண்டு வெடித்ததில் கோட்டைக் காவலில் இருந்த பலர் கொல்லப்பட்டனர். கோட்டைத் தளபதி பிராக்ஜி பிரபு இடிந்துவிழுந்த சுவர்கற்களுக்கிடையில் சிக்கிக் கொண்டார். ஆனால் கற்களைத் தோண்டி அவரை உயிருடன் மீட்டுவிட்டனர்.
இரண்டாவது வெடிகுண்டு வெடித்ததில் கோட்டைகோபுரம் தகர்க்கப்பட்டது. ஆனால் கோட்டைக்கு அருகில் பெரும் எண்ணிக்கையில் சுற்றி நின்ற மொகலாயப் படைமீதே அந்தக் கற்கள் வந்துவிழுந்தன. இதில் சுமார் 2000 மொகலாயப் படையினர் கொல்லப்பட்டனர். இந்தக் கண்ணிவெடித் தாக்குதலினால் கோட்டைச் சுவரில் 20 அடி அகலத்துக்குப் பிளவு ஏற்படுத்தப்பட்டது. பாஜி சவன் தஃப்லே போன்ற வீரம் மிகுந்த மொகலாயப் படையினர் கோட்டை மதில் மேல் ஏறி, ‘இங்கே யாரும் இல்லை… சீக்கிரம் மேலே வாருங்கள்’ என்று தம் படையினரை விரைந்து வரும்படி அழைப்புவிடுத்தனர். ஆனால் யாருமே அவர்களுடைய அழைப்பை ஏற்கவில்லை. பதுங்கு குழிகளில் இருந்த மொகலாயப் படையினரும் பிற வீரர்களும் கோட்டை கோபுரக்கற்கள் தம் மீது வந்து விழுந்த அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர். மராட்டியக் கோட்டைக் காவல் படை இதற்குள் சுதாரித்துக்கொண்டுவிடவே கோட்டையில் பிளவு ஏற்பட்டிருந்த பகுதிக்கு விரைந்து வந்து அங்கு மேலே ஏறியிருந்த மொகலாயப் படையினரை வெட்டிச்சாய்த்தனர்.
இதனிடையில் ராஜா ராம் மார்ச் வாக்கில் இறந்திருந்தார். அமைச்சர் பரசுராம் மொகலாயர்களுக்கு அடிபணிய முன்வந்தார். கோட்டை மதிலில் 70 அடியை தர்பியத் கான் தகர்த்திருந்தார். கோட்டை காவல் படையினர் 400 பேர் இறந்திருந்தனர். இவற்றையெல்லாம் பார்த்த சத்ரா கோட்டையின் நிர்வாகி (கிலாதார்) சுபான் ஜி மனம் தளர்ந்துபோய் ஆலம்கீருடன் இளவரசர் முஹம்மது ஆஸம் மூலம் அமைதி உடன்படிக்கைக்கு முன்வந்தார். 21 ஏப்ரலில் சத்ரா கோட்டையின் மேல் அவர் மொகலாயக் கொடியை ஏற்றினார். அடுத்த நாளே அங்கிருந்து புறப்பட்டார். இளவரசர் முஹம்மது ஆஸமுக்கு மரியாதைசெய்யும்முகமாக அந்தக் கோட்டைக்கு ‘ஆஸம்தாரா’ என்று பெயர் சூட்டப்பட்டது.
5. பர்லி கோட்டை கைப்பற்றப்படுதல்
சத்ரா கோட்டையைக் கைப்பற்றியதும் அதற்கு ஆறு மைல் மேற்கில் இருந்த பர்லி கோட்டை முன்பாக முற்றுகையை ஆரம்பித்தனர். சிவாஜியின் குரு ராமதாஸ் ஸ்வாமி இங்குதான் இருந்தார். சத்ரா கோட்டை எதிரிகளால் கைப்பற்றப்படும்போது மராட்டிய ராஜ்ஜியத்தின் நிர்வாகத் தலைநகராக இதுவே இருக்கும். மராட்டிய ராஜ்ஜியத்தின் திவானாக இருந்த பரசுராம் திரியம்பக் மன்னர் ராஜாராமின் மரணத்தினால் மனமுடைந்துபோனார். சத்ராவின் வீழ்ச்சி அவரை மேலும் நிலைகுலையவைத்தது. அவர் பர்லி கோட்டையில் இருந்து தப்பித்து வெளியேறினார். ஆனால் அவருக்குக் கீழ் பணிபுரிந்தவர்கள் தமது எதிர்ப்பைக் கைவிடவில்லை.
பெரு மழை பெய்ததால் மொகலாயப் படை பெரும் நெருக்கடிகளைச் சந்திக்க நேர்ந்தது. உணவுப் பொருட்கள், கால்நடைத் தீவனங்கள் எல்லாம் பெருமளவுக்குப் பற்றாக்குறையாகின. ஆனால் ஒளரங்கஜீப் மனம் தளராமல் முற்றுகையைத் தொடர்ந்தார். இறுதியில் ஒருவழியாக பர்லி கோட்டையின் கிலாதாருடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. கையூட்டு பெற்றுக் கொண்டு அவர் கோட்டையை விட்டு 9 ஜூனில் வெளியேறினார்.
இந்த இரண்டு முற்றுகையினால் மொகலாயப் படைக்கு மிகப் பெருமளவில் படை வீரர்கள், குதிரைகள், போக்குவரத்துக்கான கால்நடைகள் ஆகியவற்றை இழக்க நேர்ந்திருந்தது. கஜானா காலியானது. மூன்று ஆண்டு சம்பள பாக்கியினால் வீரர்கள் பட்டினியிலும் சோகத்திலும் ஆழ்ந்தனர். மே ஆரம்பத்திலேயே ஆரம்பித்த கனமழை ஜூலை இறுதிவரை தொடர்ந்தது. 21 ஜூன் வாக்கில் பூஷன்கர் நோக்கிப் படையைப் பின்வாங்கினார். ஆனால் இதனாலும் வீரர்களின் கஷ்டங்கள் அதிகரிக்கவே செய்தன. முற்றுகையின்போது ஏராளமான கால்நடைகள் இறந்துவிட்டிருந்தன. ஒரு சில காளைகள், யானைகள் மட்டுமே உயிர் பிழைத்திருந்தன. அவையுமே எலும்பும் தோலுமாக ஆகிவிட்டிருந்தன. இந்த பலவீனமான விலங்குகளினாலும் சுமைதூக்கிகளினாலும் ஆலம்கீர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் உடமைகளில் சொற்பமானவற்றை மட்டுமே சுமக்க முடிந்திருந்தது. பெரும்பாலான உடமைகளை கோட்டையிலேயே விட்டுச் செல்லவேண்டியிருந்தது. அல்லது அவற்றை எரித்துவிடவேண்டியிருந்தது. உயர் குடியில் பிறந்த பலருமே சேறும் சகதியுமான சாலை வழியே மைல் கணக்கில் கால்நடையாகவே நடந்து திரும்ப வேண்டியிருந்தது. ஒரு முறை படை புறப்பட்டால் பின் தங்கியவர்கள் வந்து சேர்வதற்காக, இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டனர். ஒரு நாள் பயணத்தில் மூன்று மைல் மட்டுமே செல்லமுடிந்தது.
கிருஷ்ணா நதியில் மறு கரையைப் பார்க்கவே முடியாத அளவுக்கு வெள்ளம் ஓடிக் கொண்டிருந்தது. அப்படியான நதியைக் கடந்து படையை முன்னகர்த்திச் செல்வது மிகவும் சிரமமாக இருந்தது. பாதி உடைந்த நிலையில், ஒட்டுப் போடப்பட்ட ஏழு படகுகள் மட்டுமே இருந்தன. எல்லாரும் அதில் இடம் பிடிக்க முண்டியடித்து சண்டைபோடவேண்டியிருந்தது. ஒருவழியாக பூஷன்கர் பகுதிக்கு 25 ஜூலையன்று சென்று சேர்ந்தனர். 45 மைல் தொலைவைக் கடக்க 35 நாட்கள் ஆனது! ஒரு மாத காலம் இங்கு ஓய்வெடுத்தனர். அதன் பின்னர் 36 மைல் பயணம் செய்து மன் நதிக்கரையில் அமைந்திருக்கும் கவாஸ்பூருக்கு 30, ஆகஸ்ட், 1700 வாக்கில் சென்று சேர்ந்தனர். நதியின் இரு கரையிலும், கரை மணலிலும் கூட முகாமிட்டுத் தங்கினர். ஆனால் அக்டோபர் முதல் நாளன்று மலைப்பகுதியில் பெய்த கனமழையினால் நதியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கூடாரமடித்துத் தூங்கிக் கொண்டிருந்த படையினர் அனைவரையும் இழுத்துச் சென்றுவிட்டது. கரைகளைத் தாண்டி சமவெளிகளுக்கும் வெள்ள நீர் பாய்ந்து அனைத்தையும் மூழ்கடித்தது. ஏராளமான படைவீரர்களும் கால்நடைகளும் இறந்தன. பல மேட்டுக்குடியினர் உட்பட பலரும் வறுமையிலும் உடைகள் இன்றியும் நிர்கதியாக விடப்பட்டனர். அனைத்துக் கூடாரங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
நள்ளிரவுக்குச் சற்று முன்பாக, வெள்ளம் முதலில் முகாமைத் தாக்கியபோது, படை முழுவதும் பெரும் கூக்குரல் எழுந்தது. மராட்டியப் படைதான் தாக்க வந்துவிட்டது என்று நினைத்து ஆலம்கீர் பதறி அடித்து எழுந்தார். அதில் அவர் கீழே விழுந்து வலது கால் முட்டு பெயர்ந்துவிட்டது. மருத்துவர்களால் அதை சரிசெய்யவே முடியவில்லை. எஞ்சிய காலம் முழுவதும் நொண்டியபடியே நடந்தார். உலகை வென்றவரும் ஊனமுற்றவருமான தைமூர் வம்சத்தில் வந்த ஒளரங்கஜீபுக்கு அது வம்சாவளியின் பெருமைக்குரிய அம்சமே என்று ஆறுதல் சொன்னார்கள்.
ராணுவத்தைப் பலப்படுத்த பெரு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வட இந்தியாவில் இருந்த அனைத்து ஆட்சியாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது; உடல் வலு மிகுந்த இளைஞர்கள் அனைவரையும் போருக்கு அனுப்பிவைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அனைத்து பிராந்தியங்களில் இருந்தும் உயர் ஜாதிக் குதிரைகளை தக்காணத்துக்கு அனுப்பிவைக்கும்படி உத்தரவிடப்பட்டது. காபூலில் இருந்து 2000 குதிரைகள் கொண்டுவரப்பட்டன. உள்ளூரில் இருந்து 2000 குதிரைகள் வாங்கப்பட்டன.
மராட்டியர்கள் தங்கள்பங்குக்கு மொகலாயர்களின் நெருக்கடிகளை அதிகரித்தனர். ஹனுமந்த ராவ் காடெள பகுதியைத் தாக்கி அங்கிருந்த மொகலாய நிர்வாகியை 18, ஆகஸ்ட், 1700-ல் கொன்றார். பேரட் பகுதியின் தலைவரான பிடியா நாயக் தன் படையை பிஜப்பூர் முழுவதும் நிறுத்தியிருந்தார். பீஜப்பூர் நகருக்கு வெளியே இருந்த ஷாபூர் குளம் வரையிலும் மராட்டியபடை முன்னேறிச் சென்று தாக்குதல் நடத்தியது (15, நவம்பர்). பீஜப்பூரின் தென் கிழக்கே 30 மைல் தொலைவில் இருக்கும் பகேவாரி பகுதியின் தானாதாரை ரானோஜி ராவ் கோர்படே கொன்றார். அங்கிருந்தும் பீஜப்பூருக்கு வட கிழக்கில் இருந்த இந்தீ பகுதி வரையிலும் படையெடுத்துச் சென்று செல்வத்தைக் கவர்ந்தார்.
(தொடரும்)
___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின் தமிழாக்கம்.